Month: April 2015

  • திருக்குறள் வெப்பவளிக்கூடு – ஓர் உலக சாதனை முயற்சி

    மகேந்திரன் அர்சுனராஜா

    நண்பர்கள் சிலர் கூடி ஒரு உலகசாதனை முயற்சியில் இறங்கியுள்ளோம். அதாவது உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் ( Hot Air Balloon) தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ளோம். வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்கு கிட்டும். அந்த பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது எங்கள் கருத்து.

    atk

    இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்கள் இதோ

    1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது.
    2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது.
    3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது.

    இந்த முயற்சிக்கான திட்டமிடல் பல வருடங்களாக நடந்துகொண்டிருகிறது. தற்பொழுது தான் இதை அதிகாரபூர்வமாக சித்திரை முதல் நாளில் அறிவித்துள்ளோம். வெப்பவளிக்கூடில் மிகவும் அனுபவம் வாய்ந்த Global Media Box என்னும் நிறுவனம் மூலம் இந்தக்கனவுத் திட்டம் நனவாக உள்ளது. அமெரிக்காவில் அச்சேறி , வரும் ஆண்டின் திருவள்ளுவர் நாளில் , பொள்ளாச்சியில் இந்த வெப்பவளிக்கூட்டை பறக்கவிட உள்ளோம். பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு செல்ல உள்ளோம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பது எங்கள் நம்பிக்கை .

    தற்பொழுது இந்த முயற்சிக்கு ஆதரவு திரட்டுகிறோம் . ஒத்த சிந்தனை உள்ள அனைவரையும் இந்த முயற்சியில் பங்கேற்க அழைக்கிறோம்.

    1. முதலில் திருக்குறளை உயிர்மூச்சாக எண்ணி ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு இந்த செய்தியை ஒருவரையும் விட்டுவிடாமல் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும். அறிஞர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் வேண்டும்.

    2. உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ் சங்கங்களுக்கு இந்த செய்தி சென்றடைய வேண்டும். அங்கு யாரை தொடர்பு கொள்வது என்ற விபரம் வேண்டும்.

    3. இந்த முயற்சியை மேலும் சிறப்படையச் செய்ய தங்களின் அறிவுரைகள் வேண்டும்.

    4. இது ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி , இதற்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியும் வேண்டும்.

    இந்த முயற்சியை பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட முகவரிகளில் காண்க.

    அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்து
    https://www.youtube.com/watch?v=zK9XydZUhY4&feature=youtu.be

    www.facebook.com/kuralballoon

    www.kuralballoon.com

    மே 1 முதல் பொருளாதார உதவி இணையம் மூலமாக செய்ய இயலும்.

    உங்களால் இரண்டு வழிகளில் பொருளாதார உதவி செய்ய முடியும்:

    1. இந்த நிகழ்வுக்கு உங்களின் பங்களிப்பு : ரூபாய் 3,000/- அளிப்பவர்களின் பெயர்கள், திருக்குறள் வெப்பவளிக்கூடு வெப்சைட் இல் இடம்பெறும் .மேலும் அவர்களுக்கு திருக்குறள் வெப்பவளிக்கூடு பிரத்யோக பேனா ,கீ செயின்,டிஜிட்டல் சான்றிதல் மற்றும் திருக்குறளை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவ் வழங்கப்படும் .

    2. வெப்பவளிக்கூடு உங்கள் புகைப்படம் : ரூபாய் 10,000/- அளிப்பவர்களின் புகைப்படம் அவர்களின் பெயருடன் திருக்குறள் வெப்பவளிக்கூடில் அச்சிடப்படும் .மேலும் அவர்களுக்கு, திருக்குறள் வெப்பவளிக்கூடு பிரத்யோக ஆடை , பேனா ,கீ செயின்,டிஜிட்டல் சான்றிதல் மற்றும் திருக்குறளை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவ் வழங்கப்படும் . ( இந்த முறையில் 1330 நபர்கள் மட்டுமே பங்கு பெற முடியும் ).

    இவ்வாறு பெரும் தொகை மற்றும் செலவு கணங்குகள் வெளிப்படையாக பராமரிக்கப்படும்.

    வெப்பவளிக்கூடின் கட்டமைப்பு கீழ்க்கண்ட படத்தில் காண்க.

    பொருளாதார உதவி எல்லோராலும் இயலாத ஒன்று. அதனால் வேறு சில பங்களிப்பு முறைகளுக்கும் வழி செய்து கொண்டிருக்கிறோம் ( நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு , மாணவர்களுக்கான போட்டிகள் , புகைப்பட கண்காட்சி ) ஆக இப்போதைக்கு இந்த செய்தியினை எல்லோர்க்கும் கொண்டு செல்வதே பெரிய உதவியாக இருக்கும்.

    விபரங்கள் – www.kuralballoon.com

    – மகேந்திரன் அர்சுனராஜா

    Share
  • விநாயகர் கவசம்

    சுரேஜமீ

    வணக்கம். இங்கே கொடுக்கப் பட்டுள்ள ‘விநாயகர் கவசத்தை’ கந்த சஷ்டி மெட்டில் புனைந்துள்ளேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த அஷய த்ரிதியை நாளில், அனைவரும் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.

    av

    விநாயகர் கவசம்
    சதுர்த்தியில் மலர்ந்த
    சண்முக சோதரா
    சதுர்மறை போற்றும்
    சிவனுமை பாலா
    தினம்உனைப் பாடி
    துதிசெய்து நாளும்
    உனதருள் வேண்டி
    நிதமுனைப் பணிவோம்.

    முன்வினை களைவாய்
    மூஷிக வாகனா
    என்மனம் இருப்பாய்
    ஈசன் புதல்வா
    சிந்தையில் கலப்பாய்
    சித்தி விநாயகா
    உன்பதம் சரணம்
    உமையவள் மைந்தா.

    ஒன்றுமே அறியேன்
    உலகினில் பிறந்தேன்
    உன்னடி சேர்ந்தேன்
    ஒரு வரம் தருவாய்
    நன்று மற்றன்று
    நவிலா வண்ணம்
    நந்தன விநாயகா
    நலமது அருள்வாய்.

    இருசெவி என்றும்
    இன்பமே உய்க்கும்
    நற்செய்தி நாளும்
    நயம்படக் கேட்க
    இருவிழி காணும்
    ஒரு முகக்காட்சி
    மங்கல மூர்த்தி
    நினதருள் சாட்சி.

    நாமகள் நாவினில்
    அமர்ந்து அடியேன்
    சொல்பொருள் யாவும்
    நலமென விளைய
    நுகரும் மணமே
    நறுமணமாகி,என்
    மெய்யது காப்பாய்
    கஜமுக கணபதி.

    ஐம்புலன் தன்னை
    ஐங்கரன் காப்பான்
    தினம் ஒருதடவை
    மனமது ஒன்றிப்
    பாடும் பக்தர்கள்
    பாரினில் நற்கதி
    பெறுவார் சத்தியம்
    பால கணபதியருளால்.

    அல்லல்கள் ஓடும்
    நல்லவை நாடும்
    நவகோள் அருளை
    வாரி வழங்கும்
    ஒருமுறை உன்னைத்
    தொழும்அன்பர் யாவர்க்கும்
    ஹேரம்ப கணபதி
    அருள்நமைக் காக்கும்!

    -சுரேஜமீ

    Share
  • ICCP-2015 updates

    Dear ICCP -2015 program Committee members

    I am happy to share the updates of ICCP
    As you aware that the conference hosted by Don Bosco College, Yelagiri Hills, India
    Integrated Intelligent Research , Chennai, India
    the following organizations are supporting as a Co-Organizers
    Research Institutions
    · Korean Convergence Society, Korea
    · Society of Convergence and Integrated Research (SCIR), Korea
    · Indian Society for Education and Environment (ISEE), India
    · Top Engineers, India
    · Karka Kasadara Academy, India
    Academic Institutions
    · Loyola-ICAM College of Engineering and Technology, Chennai
    · Dept of Mathematics, Loyola College , Chennai – 34
    · Dept of Computer Science, St. Anthony’s College, Shillong, India
    Industry
    Bosco Soft Technologies Pvt Ltd

    The program Committee strengthen with 113 members

    Dr.J.SatheeshKumar, Bharathiar University agreed to act as a publication Chair for the Conference. He facilitated the SCOPUS journals for the publication.
    Dr.V.Jeyabalaraja, Professor,Department of Computer Science & Engineering, Velammal Engineering College, Anna University, Chennai. agreed to act as chair for Conference technical review Committee.[Note: The committee members are in process. It will be available on web site soon]
    Dr. Chhavi Saxena, Associate professor, Maharana Pratap College of Technology as an, Gwalior, Dr. Arun Sharma alumni of IIT Roorkee, India and Thapar University, Punjab (India) and Dr.J.SatheeshKumar, Bharathiar University are agreed to provide a special session during the conference.

    The first round of call for paper send for 75,000 email addresses. We are start receiving the papers and inquires about the conference .

    I kindly request you to share the conference information to your institution, faculty members and your social media such as face book, linkedin , orkut etc.

    If the members have any innovative idea, willing to collaborate with other similar interest group please send the mail to clementkingiir@gmail.com or clementking@yahoo.com

    seeking your support for the success of the conference

    I kindly request the members to login https://easychair.org/conferences/?conf=iccp2015
    for more information please visit http://iccpconferences.org/index.html

    Dr.A.Clementking ,
    Associate Professor,
    Dept of Computer Science,
    College of Computer Science ,
    King Khalid University , Abha , KSA
    +966-562056556

    Share
  • திருச்சானூர் அலமேலுமங்காத் தாயார்

    கீழ் திருப்பதி திருச்சானூர் அலமேலுமங்காத் தாயார் சன்னிதியில் எழுதியது….

    04-padmavathi-devibrahmotsavam
    ”கல்விக் கடனால்* குசேலனுக்கு செல்வமன்று,
    செல்வத்தைக்(லஷ்மியை) கட்டியின்று சேர்க்கின்றாய்: -அல்லுபகல்,
    உண்டியலில் காசு உனதடியார் போட்டுஜர
    கண்டியில் தீர்த்தார் கடன்’’….கிரேசி மோகன்….

    *கல்விக் கடன் -குசேலனுடன் கண்ணன் பால்யத்தில் சேர்ந்து கல்வி பயின்று…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    IMPULSIVE ஆக இழுத்தணைத்து மாட்டுக்கு,
    C0MPULSIVE வாத்சல்யம் கூட்டுகிறான், -TEMPLE,
    இதுதான் நமக்கு, அதிகாலை கேசவ்
    புதிதான பொற்கோயில் பார்’’….கிரேசி மோகன்….

    Share
  • ஓ காதல் கண்மணி – திரை விமர்சனம்

    சுரேஜமீ

    kadal

    ஓ காதல் கண்மனி – முரணில் ஒரு முத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் அவர்கள்!

    ஒரு காலக்கட்டம் வரை, நமது தமிழ்த்திரைப் படங்கள், வாழ்வியலோடு ஒன்றி இருந்தது; ஆனால், மேற்கத்திய தாக்கம், சாதனை எண்ணம், திறன் நிரூபித்தல், புதிய பரிணாமம் எனப் பல்வேறு காரணங்களால்,

    திரைப்படங்கள் ஒரு நேரம் கழிப்பானாகவும், பிரமிப்பைக் கண்ணெதிரே கொண்டுவரும் ஒரு ஊடகப் பெட்டகமாகவும் பயணிக்க,

    மிகச் சில படங்கள் இன்னமும், பழைய பாதையைத் தொட்டு வருவதாகவும் இருக்க,

    ஓ காதல் கண்மனி நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு இனிய பயணம் என்று சொன்னால் மிகையாகாது!

    அருமையான களம். சிறந்த கருத்தோவியம். சில ஒவ்வாமைகளைத் தவிர,

    காதல் ஒரு அன்பின் வெளிப்பாடு. அது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கிடையே வரும்போது , அதை நம் சமூகம் இன்றளவும், ஒரு அந்தரங்கமாகப் பார்த்துப் பழக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், அன்பு அளவற்று இருந்தும், அதை வெளிப்படுத்தும் தன்மை, நம்மவர்களுக்குத் தெரியாது. அதற்குக் காரணம், நம் சமூகக் கட்டமைப்பே என்று சொன்னால், ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    கணவன்-மனைவி உறவில் மட்டுமே, அன்பை வெளிப்படையாகத் தெரிவிப்பதைக் காமம் சார்ந்த விஷயமாக, நான்கு சுவர்களுக்குள் மட்டுமே நடக்க வேண்டிய ஒரு கடமையாகப் பார்க்கிறது நம் சமூகம். ஆனால், இம்முறையில், மிகச் சமீப காலத்தில், பல மாற்றங்கள் வந்தாலும்,

    மாற்றங்கள் தவறான புரிதலின் காரணமாக வேறு கோணங்களில் இட்டுச் செல்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

    சமூக மாற்றங்களை உன்னிப்பாகக் கவனத்தில் கொள்வதும், அதனை நேர்த்தியாக, ஒரு சமூகத்திற்கு படைப்பதும் ஒரு படைப்பாளியின் கடமை என்பதை மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார் மணி – ஓ காதல் கண்மணியில்!

    மேற்கத்தியத் தாக்கமான ‘சேர்ந்து வாழும் முறையை’ (Living together), அறிமுகப்படுத்தி, ஒரு ஆண்-பெண் புரிதலை, ஒருவரை ஒருவர் வரம்பு மீறாமல், அதே நேரம், உண்மையான அன்பைப் பரிமாறும் ஒரு காவியமாகப் பயணிக்க வைத்து, அதற்கு ஒப்பாக ஒரு இந்தியப் பாரம்பரிய கணவன் – மனைவி கதாபாத்திரத்தையும் படைத்து, அந்த உறவின் வலிமையை, தூய்மையான அன்பின் பாதுகாப்பை, ஒரு பாடமாக சேர்ந்து வாழும் கலையைப் பின்பற்றும் ‘ஒரு ஆண் – பெண்’ உறவுக்கு வைத்து, கடைசியில், அவர்களை, நம் கலாச்சார நெறிகளைத் தழுவும் திருமண பந்தத்துக்குள் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது!

    கதை, களம் தாண்டி ஒரு கருத்து விதையைப் புதிய சமுதாயத்திற்குக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் மணி!

    நீண்ட நாட்களுக்குப் பின் தன் கதையையும், கருத்தையும் மட்டுமே நம்பி, ஒரு நல்ல படத்தின் மூலம் தன்னை உயிர்பித்திருக்கிறார் மணிரத்னம் என்று சொன்னால்,

    திரைப்படத்தைப் பார்த்தவர்கள் மறுக்க மாட்டார்கள்!

    அவசியம் பார்க்கவும்!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • படக்கவிதைப் போட்டி (9)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11180014_822542801133254_1503319428_n

    11165882_822562841131250_1322121287_nதிரு வெங்கட் சிவா (நிழற்படம்) எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 20, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கவிஞர்  றியாஸ்முஹமட் அவர்கள்

    றியாஸ் முஹமட்

     

    இலங்கையின் கல்குடா பகுதியில் பிறந்து வளர்ந்து, இன்று வளைகுடாப் பகுதியில், மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிவரும் “கவியருவி றியாஸ் முஹமட்” அவர்களை இவ்வார வல்லமையாளராகப்  பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற திங்களன்று வல்லமை இதழில் “சீதனம்”  என்ற தலைப்பில் சீதனம் தரமுடியாதக் கொடுமையால் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னிகளின் வருந்தத் தக்க நிலையினை, இந்த நூற்றாண்டிலும் நிகழும் இந்த சமுதாய அவலத்தை விவரிக்கும் கவிதையை எழுதியதற்காக வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார் கவியருவி றியாஸ் முஹமட்.   அக்கவிதையின் சில வரிகள் கீழே…

    சீதனம்

    கன்னிக்கு ஏன் வேதனை…?
    கருமச் சீதனத்தின் சோதனை!

    கன்னிக்கோ
    கலியாணம்
    கடந்த வயது…

    கலியாணச் சந்தையில்
    கனவுகளோடு
    காலூன்றி நிற்கும்
    கற்புக் கன்னி!

    கல்யாணராமர்களோ
    கன பேர்,
    கருமச் சீதனக்
    கனவுகளோடு…

    கல்யாணராமனுக்குக்
    காணிக்கையில்லை,
    காணிக்கை கேட்பவன்
    கடவுளுமில்லை!

    கரும்பு தின்னக் கூலியோ… ?
    கணவனாகக் காசோலையோ…?

    […]

    பள்ளிநாட்களில் எழுதுவதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, “மாவடிச்சேனை முஸம்மில்” “றியாஸ் முஹமட்” என்ற பெயர்களுடன் தொடங்கியது கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப்பயணம்.    கதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் றியாஸ் முஹமட்டின் படைப்புகள் இந்நாள் வரை மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளன. மண் வாசனையுடன் எழுதுவதே தனக்கு மிகவும் விருப்பம் என்று கூறும் றியாஸ் முஹமட் தனது பிறந்தமண்ணை நினைவிற்குக் கொண்டு வரும் விதமாக சமீபத்தில் “கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் மத்திய கிழக்கின் “தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதி வருவதுடன், முன்னணி சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகிறார். இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு கவிதை நூல் வெளியிடவேண்டும் என்பது றியாஸ் முஹமட்டின் அடுத்த குறிக்கோள்.

    இருமாதங்களுக்கு முன், சென்ற பிப்ரவரி 2015 இல், “தடாகம் கலை இலக்கிய வட்டம்” நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் றியாஸ் முஹமட் முதற்பரிசு பெற்றதுடன் “கவியருவி” சான்றிதழும் பெற்றார்.   வல்லமையிலும் தனது கவிதைகளை தொடர்ந்து எழுதிவரும் றியாஸ்முஹமட்  “கலைமகள் அழைக்கிறாள்!”  என்ற கவிதையில், “கலைமகள் கவி பாட என்னை அழைக்கின்றாள்! நசிங்கிப் போன என் சமூகத்தின் நாளைய விடியலுக்காக, எனது எழுது கோலில் தீ மூட்டித் தீக்குச்சியாய் எரியப் போகிறேன்…” என்று தனது எழுத்துப் பணியின் குறிக்கோளை தெளிவாக முழங்குகிறார்.

    றியாஸ் முஹமட்1

    வல்லமை இதழில் வெளியான  பாரதி கண்ட புதுமைப்பெண்,  பனமரக் காடு  போன்ற இவரது கவிதைகள், சென்றவாரத்தின் “சீதனம்” கவிதையினை ஒட்டி பெண்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கவிதைகளாக இருப்பினும்,

    இவரது பெரும்பாலான கவிதைகளின் தொகுப்பு தெளிவாக விளக்குவது …
    செல்வம் திரட்டப்  பணி நிமித்தமாக அயல்நாட்டிற்கு சென்ற இளைஞர்கள், குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் பிரிந்து தனிமையில் வாடுவதையும்,
    தாய்நாட்டை நினைத்து ஏங்கியவண்ணம், சில சமயம் குடும்பத்தாரின் மறைவிற்கும் செல்ல இயலாது அந்தத் துயரை தனிமையில் கழிப்பதையும்,
    பணம் என்ற ஒரே காரணத்திற்காக உழைத்து உழைத்து பொருளீட்டும் காலத்தில், இளமைக்காலம் இவர்கள் கண்முன்னே வெறுமையாகக் கடந்து முதிர்ச்சி அடைவதையும்,
    திருமணம் செய்து கொண்டாலோ தனது துணையுடன் வாழமுடியாது போகும் நிலையை, ஒரு இளைஞனின் மனக்குமுறல்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

    கவியருவி றியாஸ் முஹமட் அவர்களின் கவிதைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன….
    [குறிப்பு: கவிதைகளில் சில முழுமையாக வழங்கப் பெறாமல் கருத்தைக் கவர்ந்த, மனதைத்  தொட்ட கவிதையின் பகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன, முழுக்க்கவிதைகளையும் படிக்க விரும்புவோர் சுட்டிகளைத் தொடர்ந்து சென்று படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்… ]

    எங்க ஊரு! இந்த ஊரு!!

    இலங்கையின் முத்துடா..!!
    கிழக்கிலொரு சிப்பிடா..!!
    செம்மண் புழுதிடா..!!
    சங்ககால வாசமடா..!!
    என் அன்னை மடிய‌டா..!!
    என் அண்ணாமார் வாழும் ஊருடா..!!

    ஊர் மெச்சி பாடும்
    இவன் கல்குடாவின்
    எழுத்தடா..!!

    ***
    ஓட்டமாவடி பாலம்

    உன்னை
    நினைக்கையில்
    மண் வாசனை
    வருகிறது,
    தாய் வீடு
    தெரிகிறது.

    காலில் ரெக்கைகள்
    முளைக்கிறது,
    இதயச் சிறகுகள்
    பறக்கிறது………..

    ***
    அம்மா

    தாயே,
    உன் தோளுக்கு மேல்
    நான் வளர்ந்தாலும்…
    தொலை தூரத்தில்
    நான் இருந்தாலும்…
    வீசுதம்மா
    உன் சேலை
    வாசம்…
    ஏங்குதம்மா,
    இந்தப் பிள்ளைப்
    பாசம்…

    இனி,
    வேண்டாமம்மா
    இந்த வெளிநாட்டு
    நேசம்.
    போதுமம்மா
    இந்தப் போலி,
    வேஷம்.
    இனி,
    உன் காலடியில்தான்
    என் சொர்க்கம்.
    உன்,
    மடியில்தான்
    என் மரணம்…

    ***

    தந்தைக்கு ஒரு கவிதை

    எழுத நினைக்கிறேன்
    ஒரு கவிதை,
    அடக்க முடியவில்லையே
    என் அழுகை!

    எழுது எழுது என்று
    நினைக்கிறது மனது
    அழுது அழுது
    என் பேனாவும் பழுது!

    என்ன வாப்பா அவசரம்?
    போகும் போதும் சொன்னீர்களாமே
    என்னைப் பத்திரம்!

    பேனாவை எடுத்தால்
    பேச்சு வரவில்லை வாப்பா
    ஏட்டை விரித்தால்
    எழுத்து வரவில்லை வாப்பா!

    காகிதமும் என் கண்ணீரால்
    கரைந்து போனதே வாப்பா
    தளை தட்டுது வாப்பா
    மூச்சு முட்டுது வாப்பா!

    எதுகை மோனை கூட
    அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
    நான் எழுதிய கவிதைகளும்
    கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!

    கூடவே இருப்பீர்கள் என்றுதானே
    கொடி போலப் படர்ந்தேன்
    பாதியில விட்டுப் போகவா
    பனமரம்போல வளர்ந்தேன்?

    […]

    போங்கள் போங்கள்!
    என் வாப்பா மண் மறைந்தார்
    என்று சொல்பவர்கள்
    என் கண் மறைந்து போங்கள்!

    ***
    பணம்

    போனதும் விமானம்
    வந்ததும் விமானம்
    மறக்க முடியவில்லை
    ஏழையாகப் பிறந்ததால்
    நான்பட்ட அவமானம்…!

    வண்ண வண்ணக் காகிதம்
    வதங்கியது என் வாலிபம்
    எல்லாமே செய்தது
    இந்தப் பணம்
    இல்லாமல் ஆனேன்
    நடைபிணம்…!

    ***

    போச்சு எல்லாமே போச்சு!

    படித்த படிப்பும்
    வீணாகப் போச்சு
    வேலைக்காக அரசியல்வாதி
    கால் பிடித்து
    மானம் போச்சு!

    கையில காசி காணாது
    மாமா மச்சினன் உறவுகள்
    அறுந்து போச்சு
    இதுதானடா உறவுகள்
    என்று வெறுத்துப் போச்சு!

    வாழ்ந்தும் வாழாமலும்
    முடியும் நரைத்துப் போச்சு
    காதல் என் காதல்
    அது கண்ணீரில் கரைந்து போச்சு!

    […]

    கல்குடா வாழ்க்கை
    வளைகுடா வாழ்க்கையாக
    மாறிப் போச்சு
    தனியாகவே வாழ்ந்து
    வெறுத்துப் போச்சு!

    […]

    ஊர் நிலமைகளை நினைத்து
    என் தூக்கமும் போச்சு
    ஊர் படையெல்லாம்
    பெரும் படையாகவும் ஆச்சு!

    பணம் இருந்தால் மாத்திரமே
    அரச உத்தியோகம் என்பது
    சரியாகப் போச்சு
    நாடு ரொம்ப கெட்டு போச்சு!

    பட்டம் படித்தவன்
    பாலைவனம் மேய்வது
    பழகிப் போச்சு
    சமூகமும் தம் நிலைமறந்து
    போச்சு!

    படித்தவர்களுக்கு
    வேலை என்பது
    குழந்தைப் பேச்சு
    இதைக் கேட்டுக் கேட்டு
    காதும் புளித்துப் போச்சு!

    ***

    முதிர் குமரன்!

    வயதுக்கு வந்து பல வருடமாச்சு
    மீசையோடு வெள்ளை முடியும்
    எட்டிப் பார்த்தாச்சு !

    வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
    தெரிந்து போச்சு நானும் ஒரு
    முதுமைக் குமரன்
    என்று…!

    கூடப் படித்தவர்கள்
    எல்லாம்
    குடித்தனம் போயாச்சு!

    குழந்தை, குட்டிகளோடு
    கூடி வருகையில்,
    மனசு துடிக்கிறது,
    எரி மலையாக வெடிக்கிறது…!

    என் பள்ளிப் பருவத்திலேயே
    தாய்க்கு வந்தது வாதம்,
    கை, கால்களை
    முடக்கி வாழ்க்கையைச்
    சிதைத்து விட்டது!

    மூத்த தங்கை வயதுக்கு வந்து,
    இருபது வருடங்களாச்சு !

    கல்யாணச் சந்தையில்
    காலூன்ற நிற்கும்,
    இளைய தங்கை வேறு…!

    தங்கைகளை நினைத்து,
    உறங்கும் அம்மாவின்
    அழுகையும் அதிகமாச்சு !

    அவளின் மூச்சும்
    வரவரக் குறைந்து போயாச்சு !

    எங்கள் ஏழ்மை வாழ்வு
    கண்டு குடும்பத்தாரும்,
    அயலவரும்
    எட்டிப் போயாச்சு !

    எங்க வீட்டு எச்சி தின்னு
    வளர்ந்த செல்லப்
    பூனையும் வீட்டுச்சுவர்
    ஏறிப் போயாச்சு !

    குடும்பச் சுமையைக் குறைக்க
    முதுகுச் சுமை ஏற்றியாச்சு !

    வாழ்ந்தும் வாழாமலேயே,
    உடம்பு தளர்ந்து,
    இளமையும் போயாச்சு !

    இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?

    என் தங்கைகளைக்
    கரை சேர்க்கும் வரை….
    கனவுகளைக் கண்களில்
    சுமந்து கொண்டு
    வாழும்
    நானும் ஒரு
    முதிர் குமரன்தான்!

    ***

    மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்…!

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்!

    நடுச் சாமம் நாய்க் குரைக்க
    நடு நெஞ்சில் நெருப்பு வைக்க
    நீயில்லா வீடு பார்த்து,
    தெரு நாய்களும் குரைக்குது மச்சான்
    என்னைக் குறுகுறுவென பார்க்குது மச்சான்!

    ஆராரோ ஆரிரரோ..,
    பக்கத்து வீட்டுத் தாலாட்டு
    காது கேட்டு, வாட்டுது மச்சான்
    என்னை வாட்டுது மச்சான்!

    எண்ணைக் கிணத்துல நீங்க
    உங்க எண்ணத்தில நாங்க
    ராப்பகலா தூங்காம நானிங்கு ஏங்க
    என்னத்த வாழ்ந்தோம் மச்சான்
    எண்ணங்களுடன்தானே வாழ்கிறோம் மச்சான்!

    மாரியில குளிராகி
    கோடையில வெயிலாகி
    உருமாறித் தடுமாறி
    பனியாகிக் காற்றாகி
    சருகானேன் மச்சான்!
    ஒரு நேந்துவிட்ட கோழிபோல
    ஆனேனே மச்சான்….

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்கு போகாத மச்சான்!

    நீங்க கழற்றிப் போன சட்டை பார்த்து கண் கலங்குது மச்சான்
    நீங்க வைச்ச மரமும் வளர்ந்து நிற்குது மச்சான்
    நம்ம குழந்தையும் இப்ப எழுந்து நிற்குது மச்சான்
    உங்களைக் கேட்டுத்தானே அடம்பிடித்து அழுகுது மச்சான்!

    ஏழு கண்டம் உன்னைத் தாண்டவைத்தான்
    ஏக்கத்தோடு என்னை வாழவைத்தான்
    பால் நிலவு போல என்னைத் தேயவைத்தான்
    பாலைவனப் புழுதியா உன்னைப் பறக்க வைத்தான்!

    நம் காதலைச் சேர்த்து வைத்த அந்த இறைவன்
    வாழ்தலை ஏன் பிரித்து வைச்சான்..?

    இருந்தும் இல்லையென்பது துன்பம் மச்சான்
    உன்னோடு வாழ்வதே இன்பம் மச்சான்
    பித்துப் பித்து பிடிக்கிறதே மச்சான்
    பிச்செறிந்து வாயேன் மச்சான்!

    ஏரோப்பிளேன் வாழ்க்கை
    வேணாம் மச்சான்
    ஏறி வாங்க வாழ்வோம் மச்சான்!

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்க விட்டு வாயேன் மச்சான்!

    சிறந்த கவிதைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப் பணியைப் பாராட்டி, விருதுகள் பல பெற்று, அவர் தமது எதிர்காலக் கனவுகளை அடைவதிலும், குறிக்கோள்களை அடைவதில் வெற்றி பெற வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    தகவல் பெற்ற தளம்:  கல்குடா நேசன் (kalkudahnation.com): இளங்கவிஞர் அறிமுகம்-றியாஸ் முஹமட் , ‘தடாகம் கலை இலக்கிய வட்ட’ சர்வதேச கவிதைப் போட்டி 

    Facebook 

    Share
  • உன்னையறிந்தால் …..! புதிய தொடர்

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இன்றிலிருந்து (ஏப்ரல் 20, 2015) பிரதி ஒவ்வொரு திங்களன்றும், ‘உன்னையறிந்தால்…..’ என்ற வாழ்வியல் anதொடர் கட்டுரையை நம் நிர்மலா ராகவன் வழங்கப் போகிறார்கள். தன்னையறியும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தரணியில் போற்றப்படும் என்பது நாம் அன்றாடம் காணும் உண்மை. பல மகான்களும் அதற்கு நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். அறிவியலும், ஊடகங்களும் அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ள இக்கால கட்டங்களில், குழந்தை வளர்ப்பு பெரும் சவாலாக உள்ளது. அவர்களின் அறிவு வளர்ச்சியும் அபரிமிதமாகவே உள்ளது. ஆக, இன்றைய குழந்தைகளை அதன் இயல்பு நிலை மாறாமல், அதே சமயம் தீய வழிகளை நாடாமல், ஒழுக்கம் கெடாமல் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு, அல்லதை பாரபட்சம் இல்லாமல் தள்ளும் நிலையை பழக்க வேண்டுமானால் பெற்றோரும் சற்று தெளிவடைய வேண்டியுள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதும் இத்தொடர் அதற்கான ஒரு முயற்சியாக இருக்கும் என்று நம்புவோம்.
    நிர்மலா ராகவன் மதராஸில் பிறந்து, பெங்களூரில் படித்துப் பட்டம் பெற்று, திருமணமானபின் மலேசியா வந்தவர். 1966-லிருந்து கோலாலம்பூரில் வசித்து வருகிறார். மூத்த பௌதிக ஆசிரியையாக மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் பணிபுரிந்தவர். (அதனால், மலாய், சீன இனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு). நேரடி சமூகச்சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

    தமிழ், ஆங்கில இருமொழி எழுத்தாளர். ஆங்கிலத்தில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் சுவீடன் மற்றும் மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    ஆங்கிலத்தில், கல்வி, சமூக இயல், மனோதத்துவம், இந்திய பாரம்பரியக் கலை விமரிசனம், மருத்துவம் முதலான பொருட்களில் தினசரிகளில் 13 வெவ்வேறு பகுதிகளில் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் ஒலிபரப்பாகி உள்ளன.

    தமிழில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, வானொலி நாடகம், கலை விமரிசனம் ஆகியவைகளை 1967-லிருந்து எழுதிவருகிறார். பல சிறுகதை, நாடகம், நாவல் போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கிறார்.

    “சிறுகதைச் செம்மல்” விருது (1991); 1993-ன் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது (சூரியன் மாதப் பத்திரிகை வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது); சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006)
    சிறுகதை, நாடகத்திற்கான பட்டறை நடத்தியுள்ளார். நீதிபதியாகவும் இருந்திருக்கிறார்.

    பல மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் பேசியுள்ளார். அண்மையில் சாகித்ய அகாடமி, இந்திய தூதரகம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலியவை இணைந்து, கோலாலம்பூரில் நடத்திய இலக்கியக் கருத்தரங்கில், `என் படைப்புலகம்’ என்ற பொருளில் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தார்.

    இவரது “ஏணி” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில், இளநிலை பட்டப் படிப்புக்கு பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.

    தனது இரு கதைகளை ஆங்கிலத்தில் இவர் மொழிபெயர்க்க, அவை அகில உலக இசுலாமிய பல்கலைக்கழக சஞ்சிகையில் வெளியாகி உள்ளன.

    கர்னாடக இசை, பரதநாட்டியம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவர். பரதநாட்டியத்திற்கு ஏற்புடையதாக தொண்ணூறுக்கு மேற்பட்ட தமிழ்ப் பாடல்களை எழுதி, கர்னாடக இசை முறைப்படி மெட்டமைத்து, சிலவற்றைப் பாடிப் பதிவு செய்திருக்கிறார்.

    தான் கற்றவை இப்பகுதிவழி பிறருக்கும் பயன்படப்போவது நிறைவளிக்கிறது என்கிறார்.

    அன்புடன்
    பவள சங்கரி

    உனையறிந்தால்

    உன்னையறிந்தால் … (1)

    தந்தை மகனுக்காற்றும் கடமை

    அப்பா கேட்கிறார்: நான் அலுவலகம் போய் அலைந்துவிட்டு, வீடு திரும்பும்போது உடல் ஓய்ந்துவிடுகிறது. இந்த லட்சணத்தில், நான் குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறை காட்டவில்லை, எல்லா வேலையையும் அவளிடமே விட்டுவிடுகிறேன் என்று என் மனைவி குறைப்படுவது நியாயமா?

    பதில்:

    `குழந்தை வளர்ப்பு’ என்பது எதிர்காலத்தில் குழந்தை வெளி உலகத்தை அதிக பயமில்லாமல் எதிர்கொண்டு, எந்த வயதிலும் எல்லா விஷயங்களலும் நம்பிக்கையுடன் செயல்பட வழிவகுப்பதாகும். வெளி உலகை ஓரளவு புரிந்து வைத்திருக்கும் தந்தையின் பங்கு இந்த ரீதியில் இன்றியமையாதது.

    ஆரம்பத்தில் தன் வாரிசுக்கு குரோமோசோம் வழி உயிரையும், அதனுடன் ஆண், பெண் பாகுபாட்டையும் அளித்து, பின்னர் அதற்குத் தேவையான உணவு, உடை, கல்வி முதலியவைகளுக்கான செலவுகளையும் ஏற்பது மட்டுமே ஒரு தந்தையின் கடமை ஆகிவிடாது.

    சமூக இயல் நிபுணரான ஆர்லீ ஹோஷ்சைல்ட் என்பவர் கூறுகிறார்: குழந்தை வளர்ப்பில் மிகுந்த அக்கறை கொண்டு, அதில் ஈடுபாடு கொண்டிருக்கும் தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டு வளர்கிறார்கள். பிறருடன் பழகும்போது மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை.
    மாறாக, பொறுப்பற்ற தந்தை வாய்த்தால், மேற்குறிப்பிட்ட நற்பண்புகள் இருப்பதில்லை.

    ஆணோ, பெண்ணோ, ஒரு குழந்தை தந்தையுடன் நெருக்கம் கொள்வது அவருடன் சேர்ந்து காரியங்கள் செய்யும்போது. (தாய் தன் குழந்தையுடன் பேசுவதன்மூலம் உறவை வளர்க்கிறாள்). பரம்பரைத் தொழிலில் தந்தையுடன் ஈடுபடும் மகனுக்குப் பெரியவர்கள்மேல் மரியாதை, தன் திறமையில் நம்பிக்கை இரண்டும் எழும்.

    மலேசியாவில் ஆங்கில தினசரி ஒன்றில், தந்தையர் தினத்தை ஒட்டி, பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்கள் தந்தையரைப்பற்றி எழுதும்படி கேட்டிருந்தார்கள். சொல்லிவைத்தாற்போல் அனைவரும், `அப்பா ஷாப்பிங் அழைத்துப்போவார். எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பபார்,’ என்று மட்டுமே எழுதினார்கள்.

    பணங்கொடுக்க மட்டும்தானா அப்பா?

    ஆணோ, பெண்ணோ, மூன்றரை வயதுவரை இவர்களுக்குள் அதிக வித்தியாசம் பாராட்டாது, ஒரே மாதிரிதான் நடத்த வேண்டும். ஆண்குழந்தை அழுவது இயல்பானதே. வேறு எப்படி தன் மனம் நொந்திருப்பதையோ, தேவைகள் பூர்த்தியாகாமல் இருப்பதையோ வெளிக்காட்டிக்கொள்ள முடியும்?

    சிறு வயதிலேயே, அளவுக்கு மீறிய சுய கட்டுப்பாடுடன் ஓர் ஆண் குழந்தை இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நேர் எதிரான குணத்துக்கு அடிகோலுகிறது. பிறர் அவன் நினைப்பதுபோல் நடக்காவிட்டால், அளவுக்கு மீறிய கோபமும், ஆத்திரமும் கொண்டு வளர்கிறான்.

    யாருக்கும் அடங்காமல், படிப்பிலும் நாட்டமில்லாமல் இருந்த என் பதினான்கு வயது (மலாய்) மாணவனிடம், அவனுடைய மனக்குறை என்னவென்று கேட்டேன். (ஒரு மணி நேர வகுப்பில் ஐந்து நிமிடங்களை இப்படிச் செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மகிழ்ச்சியுடன் என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள்).

    `வாரத்தில் ஆறு நாள் நான் ஒரு மகன் இருப்பதே எங்கப்பாவுக்குத் தெரியாது. ஞாயிறு மட்டும், பிரம்புடன் என்னைத் துரத்துவார். நான் வீடு பூராவும் ஓடிவிட்டு, இறுதியில் கழிப்பறையில் தஞ்சம் புகுவேன். அரை மணி கழித்து, நான் வெளியே வரும்போது, அவர் மறந்திருப்பார்!’ என்று சிரித்தான்.

    ஒழுக்கம் என்பது ஓயாத வசவுகளாலும், அடி, உதையாலும் வராது. சாதுவான மாணவனை ஆசிரியர் அடித்தால், பயத்தில் அவனுக்கு படித்ததும் மறந்துபோகாதா!

    அடிக்கடி, பிள்ளைகளிடம் பள்ளிக்கூடத்தில் நடந்ததைப்பற்றி, அவர்கள் நண்பர்களைப்பற்றி கலந்து பேச வேண்டும்.
    பெற்றோர் கல்விமான்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. அக்கறையே போதும். படிப்பறிவு அறவை அற்ற சில பெற்றோர், பிள்ளைகளின் மதிப்பெண்களுக்குக்கீழ் சிவப்புக்கோடு இருந்தால், அது உகந்ததல்ல என்றவரை புரிந்துகொண்டு, அவர்களுடன் கலந்து பேசி, சிறக்கச் செய்கிறார்கள் இங்கு.

    சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்தால், `அப்பா நம்மைச் சந்தேகிக்கிறார்,’ என்ற கலக்கம் அவர்களுக்கு வராது. தாமே வந்து, தம்மைப் பாதித்ததை (உதாரணமாக, ஏழு வயதுப் பையனை, `உனக்கு girl friends இருக்கிறார்கள்’ என்று நண்பர்கள் கேலி செய்தல்) எல்லாம் அழுகைக் குரலில் பகிர்ந்துகொண்டு, ஆலோசனையும் கேட்பார்கள்.

    பிள்ளைகளுக்கு நிறைய வசதி அளிக்க வேண்டும் என்று சில தந்தையர் ஒன்றுக்கும் மேற்பட்ட உத்தியோகம் பார்ப்பார்கள். ஆனால், அப்பா தம்மேல் அக்கறை இல்லாமல்தான் வீட்டுக்கே வருவதில்லை என்ற முடிவுக்குப் பிள்ளைகள் வருவதை இவர்கள் அறியமாட்டார்கள்..

    `நல்லவனாக இருந்தால் யாரும் கவனிப்பதில்லை. நான் தப்பு செய்தாலாவது, என்னைத் திட்டுகிறார்களே!’ என்று ஒரு மாணவன் ஒத்துக்கொண்டபோது அதிர்ந்துபோனேன்.

    தம்மைப்போலவே மனம் புழுங்கி, எப்படி நிலைமையை மாற்றுவது என்று புரியாதவர்களின் நட்பு இத்தகையவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. ஒரு கும்பலில் செயல்படும்போது கிடைக்கும் தைரியத்தில், வன்முறையைக் கையாண்டு, சமூகக் கோட்பாடுகளைத் தகர்த்த முயலுகிறார்கள் பலர். இந்த அவலத்தைத் தவிர்ப்பது தந்தையின் கையில்தான் இருக்கிறது.
    முரட்டுத்தனம் மட்டும் ஆணின் தன்மை அல்ல. பரிவும், மென்மையும்கூடத்தான்.

    தொடருவோம்

    Share
  • நிலைமாறாத் தண்ணீர்!

    -துஷ்யந்தி, இலங்கை

    இரு மூலக்கூறுகள் ஐதரசனும்
    ஒரு மூலக்கூறு ஒட்சிசனும்
    இணைந்த ஒரு திரவமாய்
    உலகைக் குளிர்மையாக்கும்
    திரவ ஊடகமே தண்ணீர்…!

    உயிர்களின் தோற்றத்தில்                     water
    முக்கியப் பங்கெடுத்து
    உடலிலே ஓடும் குருதியாகிக்
    கருவைச் சூழ்ந்த பன்னீர்க் குடமாகிக்
    கடலிலே உடல் சாம்பல்
    கரையும் வரைத் தொடர்ந்திடும்
    வாழ்வில் தண்ணீர்.!

    கற்பாறைகளுக்கிடையே
    தோற்றமாகி மலையன்னையின்
    மடியிலே தவழ்ந்து கடலன்னையின்
    பாதங்களை அடையும்வரை
    பல்வேறு பெயர்களுடன்
    உலகை வலம் வரும் தண்ணீர்!

    அன்றாடம் மனிதனின்
    அத்தியாவசியத் தேவையாகி
    காலநிலைக் கோலங்களின்
    முக்கியப் பங்காளியாகி
    மழைத்தாயின் தாய்ப்பாலாகி
    மண்ணில் விழும் தண்ணீர்!

    நீ வற்றிப் போனால்
    எத்தியோப்பியா…
    நீ வளமானதால்
    செழிப்பான மண்ணீர்…
    நீ இன்றி இறப்பு
    உன்னாலே பிறப்பு…
    அளவாய்ப் பாவித்தால் சிறப்பு…
    அதனால் இன்னொருவருக்குத்
    தண்ணீர் கிடைப்பு…!!!

    Share
  • படக்கவிதைப் போட்டி 8-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான ஒளி ஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. எச். பிலால் அவர்களுக்கும், இப்படத்தைத் தெரிவுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் நன்றி.

     

    11129746_819039241483610_1321350885_n

    அரத்தநிறச் சேலை, கழுத்திலே உருத்திராக்கத்தை ஒத்த பல்நிற மணிகள், தலையிலே அப்பிய மஞ்சள்வண்ணப் பொடி என்று மங்கலக் கூட்டணியோடு காட்சிதரும் இப்பெண்களின் கையிலிருக்கும் வீச்சரிவாள்தான் சற்றே நமக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது.

    யார் இவர்கள்? தமக்குப் பிறரிழைத்த அநீதி கண்டு பொங்கிச் சினந்து, நீதிகேட்டு ஆயுதமேந்திப் புறப்பட்டிருக்கும் கண்ணகியின் வழித்தோன்றல்களா? இல்லை வண்ணமும் சுண்ணமும் தண்ணருஞ் சாந்தமும், கோடும் குழலும் பீடுகெழு மணியும் கையேந்தி வீச்சரிவாளால் விலங்கை வீழ்த்திக் கொற்றவைக்குப் பலியிடவந்த தொல்குடிப் பெண்களா?

    ஆண்களே அச்சத்தோடு இப்பெண்களைப் பின்னால் நின்றுபார்ப்பது இவர்கள் கொண்ட கொள்கையின் உறுதியைக் காட்டுகின்றது.

    நம் புலவர் தோழர்களின் உள்ளங்களில் இப்படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அவர்தம் ஆக்கங்கள் வழியாய் இனிக் காண்போம் வாருங்கள்!

    கவிதைகள் வெள்ளமெனப் பொங்கிப் பாய்ந்திருக்கின்றன இம்முறையும்! என் உள்ளம் தொட்ட வரிகள் அவற்றினின்று…

    ###########################################

    சிவப்புச் சக்திகளை அடையாளம் காட்டும் திருமிகு. ரேவதி நரசிம்மனின் வரிகள்…

    மனதில்,கண்களில்,கைகளில் 
    உறுதி காட்டும் சிவப்பு சக்திகள். 
    ஆக்கவும்  தெரியும் 
    தாக்கப் பட்டால் அழிக்கவும் தெரியும் 
    என்கிறார்களோ !

    ###########################################

    ’உரிமை தேடி!’ எனும் தலைப்பில் திரு. சி. ஜெயபாரதன் எழுதிய வரிகள்…

    காட்டு ஜாதி ஆயினும், நியாயம்
    கேட்க வருகிறோம் !
    கத்தி காட்டி மிரட்டியும்
    சத்தியம் காக்கத் திரள்கிறோம் !
    பூர்வ குடியினர் யாமெல்லாம்
    பூரண உரிமை கேட்கிறோம் !
    வாழ எமக்கு ஊழியம்
    வயிற்றை நிரப்ப ஊதியம்.
    பிள்ளை குட்டி படித்திட
    பள்ளிக்கூடம் கட்டுவீர் !

     ############################################

    உடலில் பூசிய வண்ணங்களை மிஞ்சும் வகையில் சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் வர்ணங்களைச் (சாதிகளை) சாடும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    குருதியில்
    பச்சை உண்டோ?
    கருப்பு உண்டோ?
    நீலம் உண்டோ?
    ஆனால், உனக்கு மட்டும்
    ஏதடா
    வண்ணத்தை மிஞ்சும்
    வர்ணங்கள்?

    எவனோ அன்று
    பிரித்தாளச் செய்த
    சூழ்ச்சியை;
    இன்றும் நீ
    பிடித்துக் கொண்டு
    இருக்கிறாயே
    மூடனே!

     ###########################################

    மாரியாத்தாளை மங்கையர் போற்றுவதைக் காட்டும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

    அம்மனுக்கு வேண்டியே தான்விரதம் இருப்போம்
    ஆடிமாதம் வந்திடக் கொண்டாட்டம்
    கும்மியடிப் போம்குல வைச்சத்தம் இடுவோம்
    கையிலேதான் தூக்குவோம் ஓர்அறிவாள்
    செம்மையுடை மஞ்சளை யும்தடவிக் கிட்டு
    சுத்திவந்தா நல்லதே எங்களுக்கு
    மும்மாரி பெய்யவே செய்திடுவா அருள்மிக்(க)
    மாரியாத்தா எங்களைக் காத்திடுவா

    #############################################

    ஆயுதம் ஏந்தியும் அமைதியையே நாடும் அரிவையரைப் போற்றும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    ஆயுதம் சுமந்து நின்றாலும்
    அமைதியையே இறைவனிடம்
    இறைஞ்சி
    நிற்கின்றோம் !
    சக்தி
    வடிவம் நாங்கள்
    எந்நாளும்
    ஆக்க சக்தியாய்-
    ஊக்க
    சக்தியாய் திகழ்வோம் !
    நானிலம்
    நலமுடன் விளங்க
    நல்லெண்ணங்களை
    மனங்களில்
    வித்தாக்கிடுவோம் !

    ############################################

    வாளேந்திய வஞ்சியரை வாழ்த்தும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    செஞ்சாந்து பொட்டிட்டு செவ்வாடை மேலுடுத்தி 
    மஞ்சளிலே நீராடி மங்களமாய் – அஞ்சாமல் 
    வஞ்சியரும் வில்லுடன் வாளேந்தி ஆடிவர 
    தஞ்சமுற கெஞ்சும் சனம் .

    ############################################

    கண்ணப்பன்போல் கடவுள்பால் முரட்டுக்காதல் கொண்ட பெண்களைப் பாராட்டும் திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

    கண்ணப்பன் பக்தியைநாம்
    எண்ணியே பார்த்துவிடின்
    கையில்கத்தி வைத்துள்ளார்
    பக்திகொள்ளல் தவறாமா?

    சிறுத்தொண்டர் வெட்டியதால்
    சிவனருளைப் பெற்றாரே
    அவர்வழியில் இவரெல்லாம்
    ஆயுதத்தை ஏந்துகிறார் !

    #############################################

    பெண்மையின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    அன்பின் திருஉருவாய் ஆளும் பெண்மை
    இன்னல் படுவோர்க்கு இரங்கும் பெண்மை
    தீமை கண்டு கொதித்தெழும் பெண்மை
    ஊமை மடந்தையாய் காதல் செய் பெண்மை
    இன்னும் பற்பல சக்தியாய் உலகினில் பெண்மை

    ############################################

    தலைமுறை காக்கவும், கயவரைக் கருவறுக்கவும் பெண்கள் வாளேந்தியிருப்பதை விளம்பும் திரு. கொ.வை. அரங்கநாதனின் வரிகள்…

    பெண்ணைப் பெருந்தெய்வம் என்று சொன்ன நாட்டிலின்று
    கண்ணைச் சுடும் காட்சிகள்தான் எத்தனை எத்தனை
    அன்னை என்றார் ஆண்டவனில் பாதியென்றார் இன்று
    அரக்கராய் மாறிவிட்டதே அவர்தம் கொடுஞ்செய்கை –அதனால்தான்
    வளயல் அணியும் கைகளில் இன்று வாளேந்தினோம்
    களையெடுக்க அல்ல கயமையின் கருவறுக்க!
    கலை யுரைத்த கைகளில்  இன்று கருவிகள் கொண்டோம்
    தலைகள் எடுக்க அல்ல எங்கள் தலை முறையை காக்க!

    ############################################

    புத்தரின் அகிம்சைவழியை ’வாளே’(!) வஞ்சியர்க்கு வலியுறுத்துவதாய் அமைந்த டாக்டர். லட்சுமியின்  வரிகள்…  

    மண்ணுலகில் படைத்திட்ட
    அனைத்தையும் அன்பே வழிநடத்தும்
    அகிம்சையால் அகிலத்தை ஆள
    தூக்கிய என்னைத் தூர எறிந்து
    தூரத்துமரத்தின் ஆணியில்
    தொங்கவிடப்பட்ட புத்தரின் வழி நடப்போம்.

    ############################################

    மேற்கண்டவை நான் மெச்சுகின்ற கவிதை வரிகள்.

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார்? எனும் கேள்வி உங்களிடம் தொக்கி நிற்பதை உணர்கின்றேன். இதோ அவரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

    சமீபத்தில் ஆந்திராவிற்குச் செம்மரங்களை வெட்டச்சென்ற நம் தமிழகத் தொழிலாளர்களை அரக்கமனம் படைத்த ஆந்திரக் காவல்துறை இரக்கமின்றிச் சுட்டுக்கொன்றதையறிந்து நம் குருதி கொதித்ததல்லவா! இப்பின்னணியைப் பாடுபொருளாக வைத்து அப்படுகொலை நிகழ்த்திய பாதகர்களைக் பலிகொள்ள இச்செவ்வாடைப் பெண்கள் சிலிர்த்தெழுந்து புறப்படுவதாய்ப் புனையப்பட்ட கவிதையொன்று என் உள்ளம் தொட்டது; உணர்வைச் சுட்டது. அக்கவிதையின் படைப்பாளர் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    #############################################

    ”எதிரிகளை உதிரிகளாக்கத் தமிழர்களே அணிதிரளுங்கள்!” என்று அறைகூவல் விடுக்கும் அக்கவிதை…

    மரம்வெட்ட போன மறத்தமிழன் மேனி
    மரமாகிச் சாயத் துடித்தோம் – சரமாரி
    எனவே பொழிந்த எதிராளித் தோட்டா
    சினம் கண் டெழுந்தோம் சிவந்து. 

    உயிரெடுக்குந் தெய்வ உருவெடுத்து விட்டோம்
    கயிறாய் திரித்திடுவோம் தமிழன் உயிரை
    பயிராய் அறுக்கும் பகைவன் திமிரை
    தயிராய்க் கடைவோம் துணிந்து.

    காட்டு மகமாயி காளி வழிகாட்ட
    நாட்டில் நலிந்த தமிழரினி – கூட்டுக்
    குயில்போல் குமுறும் நிலைமாற்றிக் காட்ட
    எயிலாய் இருப்போம் இணைந்து.
    (
    எயில் –அரண்) 

    ##############################################

    அடுத்து, தெய்வங்களிலும்கூடப் பணமற்றோர் வணங்கும் பாமரத் தெய்வங்கள், பணம்படைத்தோர் போற்றும் பகட்டான தெய்வங்கள் எனும் வேறுபாடிருப்பதைக் கண்டு உளங்கொதித்துச் ’சாமிக்குள்ளயும் சாதியிருக்கா?’ எனும் பகுத்தறிவுக் கேள்வியை வீச்சரிவாளாய் வீசியிருக்கும் திரு. நல்லை. சரவணாவின் கவிதையை இவ்வாரத்திற்கான பாராட்டத்தக்க கவிதையாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    அக்கவிதை…

    ஆடம்பரக் கோவிலில்ல – காவி 
    அடிச்சிவிடக் காசுமில்ல…!
    …
    ஆலமரத்தடிக் கீத்துக் கூடு 
    அதச்சுத்தியொரு காரச் செவரு..
    மஞ்ச வேட்டி இடுப்புத் துண்டு 
    மச மசன்னு கம்பங் கூழு…
    பஞ்சாமிர்தம் ஊட்டலையே…
    சந்தனக் கூழும் ஊத்தலையே…
    …
    இத்தனக் கொறயிருந்தும்
    இரும்புத் தூணா காத்து நிக்கெ…
    தலமொறையத் தவறாம
    தழைக்க வச்சிப் பாத்து நிக்கெ…!
    எஞ்சாமி… எஞ்சாமி..
    எங்காதுக்குள்ள சொல்லிப்புடு..
    மறுவீடு மாமியா வீடுன்னு
    எங்கிட்டும் போகாம
    இங்கனயே நிக்கிறியே…. !

    சாமிக்குள்ளயும் சாதியிருக்கா?

    ############################################

    படக்கவிதைப் போட்டியில் தொடர்ந்து நாட்டத்துடன் பங்கெடுத்து நல்ல கவிதைகளை நல்கிவரும் கவிஞர் பெருமக்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

     

    Share
  • யாரோ பெற்றது

    நிர்மலா ராகவன்

    images (2)“அம்மா! என்னை இப்பவும் பாட்டி வீட்டிலேயே விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்ககூட கூட்டிட்டுப் போகமாட்டீங்க?” குரல் ஏக்கத்துடன் வெளிப்பட்டது.

    அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “இங்கதான் நல்லா இருக்கே, மஞ்சு! பூனை இருக்கு. சீக்கிரமே ரெண்டு, மூணு குட்டி போடப்போகுது. அதோட விளையாடலாம். சிங்கப்பூரில ரொம்ப சின்ன வீடு. இங்க இருக்கிறமாதிரி தோட்டம் கிடையாது. அதோட, தாத்தாவோட பீச்சுக்குப் போய் குளிக்கலாம்,” என்று சமாதானப்படுத்துவதில் இறங்கினாள்.

    பெற்றோர் கோலாலம்பூருக்கு தெற்கே அறுபது கிலோமீட்டர் தொலைவிலிருந்த போர்ட் டிக்சன் என்ற கடற்கரைப் பகுதியிலிருக்க, உத்தியோக நிமித்தம் அருணா சிங்கப்பூரில் இருந்தாள். மூன்றரை மணிப் பயணம்.

    மகளைப் பிரிந்து அவ்வளவு தூரம் போக முதலில் தயக்கம் ஏற்பட்டாலும், மோகனைச் சந்திக்க கடவுளே இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார் என்ற புளகாங்கிதம்தான் எழுந்தது.

    ஆறு வருடங்களாக ஆண்துணை இல்லாமல் தனித்து வாழ்ந்திருந்தாள். இப்போதுதான் சற்று வெளிச்சம் வாழ்வில்.

    `இந்தக் காலத்திலே யார் இப்படி, பொட்டில்லாம இருக்காங்க! கல்யாணத்துக்கு முந்தியே, குட்டிப் பொண்ணா இருக்கிறப்போவே பொட்டும், பூவும் வெச்சுக்கலே? சும்மா அழகா டிரெஸ் பண்ணிக்குங்க,’ என்று ஊக்கின சக கூழியன் அவளுக்குக் கடவுளாகவே தெரிந்தான். அவள் முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட சோகம் மறைந்தது. மீண்டும் கலகலப்பானாள்.

    தான் பிறப்பதற்கு முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்ட தந்தையை மஞ்சு பார்த்திராததும் நல்லதாகப் போயிற்று. இப்போது, `இவர்தான் ஒன்னோட அப்பா!’ என்று மோகனைக் காட்டிவிடலாம். ஒரு முழுமையான குடும்பமாக வாழலாம். வயதான அப்பாவும், அம்மாவும் சாசுவதமா?

    ஒரு முறை, `ஒனக்கு இன்னும் இருபத்து அஞ்சு வயசுகூட ஆகலியா? நம்ப ரெண்டு பேருக்கும் அஞ்சு வயசுதான் வித்தியாசம்!’ என்று கையைத் தட்டினான் உற்சாகமாக.

    “ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?” என்றவன், தொடர்ந்து, அவள் சற்றும் எதிர்பாராத நிபந்தனை ஒன்றையும் விதித்தான்: “ஒன் மக எப்பவும்போல, தாத்தா பாட்டிகூடவே இருக்கட்டும்!’

    எப்போது விடுமுறை வரும், மகளைப் பார்க்கலாம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் தன்னால், இனியும் அப்படி, மாதம் தவறாமல், போக முடியுமா? அருணாக்கு வாயடைத்துப் போயிற்று.

    `யோசிச்சுப் பாரு, அருணா. ஒனக்கு ஒரு குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் நான் ஒன்னைக் கல்யாணம் செய்துக்கத் தயாரா இருக்கேன். ஆனா, ஒன் மகளைப் பாக்கறபோதெல்லாம், `என் மனைவி இன்னொருத்தனோட இருந்தவ’ அப்படின்னு உறுத்திக்கிட்டே இருக்குமே!’

    அருணாவால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. வழக்கம்போல் தாய்வீடு திரும்பியபோது, பெற்றோருடன் கலந்து ஆலோசித்தாள்.

    “ஒங்க மோகன் சொல்றது சரிதாம்மா. `மஞ்சுவை என் மகளா ஏத்துக்கறேன்’னு மொதல்லே வசனம் பேசிட்டு, அப்புறம் செத்துப்போன மனுஷனோட ஏதோ போட்டி, ஆத்திரம்னு வந்து, குழந்தையை அடிச்சா என்ன செய்யறது?” அப்பாவுக்கு இன்னொரு ஆணின் மனவக்கிரங்கள் புரிந்தன.

    “அவளைப் பாத்துக்கறதிலே எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லே,” என்று அம்மாவும் ஒத்துப் பாடினாள், தான் பெற்ற மகள் எப்படியோ சந்தோஷமாக இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன்.

    ஒவ்வொரு தடவை அவள் வரும்போதும், `அம்மா! நானும் ஒங்ககூடவே வர்றேனே!’ என்று கெஞ்சும் மகளை இனி எப்படிச் சமாதானப்படுத்துவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் அருணா. எத்தனையோ முறை, `அடுத்த தடவை. ஓ.கே?’ என்று கொஞ்சி, சமாதானம் செய்தாயிற்று.

    விளையாட்டுச் சாமான்களால் சமாதானம் அடைந்துவிடும் பருவம் இப்போது. நாளைக்கே, விவரம் புரிந்தால், `உனக்கு என்னைவிட அந்த மோகன்தானே பெரிசாப் போயிட்டாரு?’ என்று சண்டை பிடிப்பாளோ? ஒரு வேளை, அம்மாவுக்கே வேண்டாதவளாகப் போய்விட்டோமே என்று உள்ளுக்குள்ளேயே அழுது, எதிலும் பற்றின்றி ஆகிவிடுவாளோ?

    மஞ்சு! மோகன்! யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரை விட்டு விலகுவது?

    அருணாக்குத் தற்காலிகமாக சிந்தனைகளிலிருந்து விடுதலை கிடைத்தது, பூனையால்.

    “மஞ்சு! பெரிய பூனைகிட்ட போகாதே. குட்டியைத்தான் தூக்க வரேன்னு நினைச்சுக்கிட்டு, ஒன்னைப் பிராண்டிடும்,” என்று மகளை ஓயாது கவனிக்க வேண்டியிருந்தது.

    “அம்மா! மூணில ஒரு குட்டிதாம்மா இருக்கு! இன்னும் ரெண்டு எங்கேம்மா?”

    பூனை, பூனை! அருணாவுக்கு அலுப்பாக இருந்தது. “அதான் ஒண்ணு இருக்கில்ல? போதும். நீ அதுக்கு சாப்பிடக் குடு. தாத்தா அந்த டப்பாவிலே வெச்சிருக்காரு, பாரு”.

    `தெருவிலே போற பூனையா இருந்தா என்ன! அதுக்கு மட்டும் பசிக்காதா? அதுவும் இந்த சமயத்திலே!’ என்று சொல்லிவிட்டு, பூனைக்கும், மிகுந்திருந்த ஒரு குட்டிக்கும் கடையிலிருந்து சிக்கன் கலந்து, சிறு சிறு கட்டிகளாக இருந்த உணவை அப்பா வாங்கி வந்திருந்தார்.

    “அம்மா! பாருங்களேன்! அம்மாபூனை ரொம்ப நாட்டி! குட்டியோட மங்கிலே இருக்கிறதைச் சாப்பிடுது. குட்டி, பாவம்! ஒதுங்கி நிக்குது!”

    `குழந்தைகளுக்கு எல்லாமே வேடிக்கைதான். பெரியவர்களானபின்தான் வேதனை எல்லாம்!’ என்று எண்ணமிட்டாள் அருணா. தனக்குப் பால் சுரக்க வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று தாய்ப்பூனைக்கு இயற்கையாகவே தெரிந்திருக்கிறது. இதை மஞ்சுவிடம் சொன்னால் புரியுமா?

    அன்று சாயங்காலம் பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தை ஓடி வந்தாள், “அம்மா! தாத்தா!” என்று அலறியபடி.

    பதறிப்போனார்கள் இருவரும். “என்னம்மா? என்ன ஆச்சு?”
    “குட்டியைக் காணும்!”
    “அவ்வளவுதானே! எங்கேயாவது காருக்கடியில, செடிக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும். போய்த் தேடு”.
    “நான் நல்லாப் பாத்துட்டேம்மா. காணும்!” மஞ்சுவுக்கு அழுகை வந்தது.

    “எங்கேயாவது ஓடிப் போயிருக்குமா?” தன்னைத்தானே கேட்டுக்கொள்வதுபோல் கேட்டாள் அருணா.

    “பூனைக்குட்டி தானே ஓடாது,” என்றார் அப்பா, அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
    இரண்டு நாட்கள் கழிந்தும், பூனைக்குட்டி போன இடம் தெரியவில்லை.

    அருணா தோட்டத்துக்கு வரும்போதெல்லாம், தாய்ப்பூனை ஏக்கமாக ஓலமிட்டபடி அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது அவளுக்குள் எதையோ அசைத்தது..

    “ஒன் பேபி காணுமாடா? வந்துடும்,” என்று அதனுடன் பேசி, ஆறுதல் அளிக்க முயன்றாள். மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். ஆதரவுடன் அதன் உடலின் மேற்பகுதியைத் தடவிக்கொடுத்தாள்.

    அவளுடைய அன்பான வார்த்தைகள் அதற்குப் புரியவில்லையோ, அல்லது தன் வேதனை இன்னொரு தாய்க்குப் புரிகிறதே என்றோ, அதே நடத்தை தொடர்ந்தது. தானே அவள் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டது. பூனையின் ரோமம் ஒவ்வாமை உண்டாக்க, உடனே கையிலும், காலிலும் சருமம் தடித்துவிட்டது..

    “இப்போ எதுக்கு அந்த கர்மத்தைத் தூக்கி மடியில் வெச்சுக்கிட்டுக் கொஞ்சறே?” என்று அம்மா ஆட்சேபித்தாள். கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போகப் போகிற மகளுடைய உடல் நலம் பாதிக்கப்படுகிறதே என்ற ஆதங்கத்தில் வார்த்தைகள் சற்றுக் கடுமையாகவே வந்தன.

    அப்பா எதுவும் சொல்லாது, மரவள்ளிக்கிழங்கு மாவை நீரில் குழைத்து, “போட்டுக்க. அலர்ஜி சரியாகிடும்,” என்று அவளிடம் நீட்டினார்.

    ஆனால், குட்டியை விட்டுவிட்டு, தான் மட்டும் சாப்பிடுவதா என்று நினைத்தது போல், பூனை ஆகாரத்தைத் தொடவில்லை.
    `ஒரு வேளை, சாப்பிட்டால் பால் சுரக்கும்; இனி யாருக்குக் கொடுக்கப்போகிறேன் என்ற விரக்தியோ அதற்கு?’ என்ற சந்தேகம் எழுந்தது அருணாவுக்கு.

    மஞ்சுவும் ரொம்பவே ஏங்கிப்போனாள். உற்சாகம் குன்றி, சாப்பிடப் பிடிக்காமல்..!

    “சீக்கிரமே இன்னும் நிறைய குட்டி போடப்போகுது பெரிசு!” என்று அவளுக்கு நம்பிக்கை அளிக்கப் பார்த்தார் அப்பா.

    “அதோட வயத்தைப் பாத்தியா? எவ்வளவு பெரிசு! அதுக்குள்ளேதான் குட்டி எல்லாம் இருக்கு!” என்றாள் அம்மா, தன் பங்குக்கு.
    அப்படியும் சமாதானமாகாமல், மஞ்சு அழுதபடியே தூங்கப்போனதும், “பூனைக்குட்டி அப்படி எங்கதாம்பா போயிருக்கும்?” என்று தந்தையைக் கேட்டாள் அருணா. இருவரும் வாசலிலிருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர்.

    “இப்போ பெரிசு கர்ப்பமா இருக்கில்லே? அதுக்குக் காரணமாயிருந்த ஆண்பூனை இந்தக் குட்டியைக் கொன்னிருக்கும், இது தன் குட்டி இல்லேன்னு!” என்றோ படித்ததை சற்றும் உணர்ச்சி இல்லாத குரலில் அப்பா விவரித்தார்.

    அருணா அடைந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பூனை உலகத்திலே இது சகஜம்தான்! என்றார், கையை ஒருமுறை அலட்சியமாக வீசியபடி.

    சட்டென, அருணாவின் நினைவில் எழுந்தான் மோகன்.
    அவனுக்கும், அந்த ஆண் பூனைக்கும் என்ன வித்தியாசம்?

    பூனைக்கு சிந்திக்கும் திறனில்லை. அதனால், உடனுக்குடனே கொன்று விடுகிறது. போட்டி மனப்பான்மை என்னவோ ஒன்றுதான்.
    “மோகன்கிட்ட ஒன் சம்மதத்தைச் சொல்லிடு,” அப்பா ஊக்கினார். “மஞ்சு இல்லாட்டி எங்களுக்கும் வெறிச்சுனு இருக்கும்!”

    தன் சுகத்துக்காக மோகனை மணந்து, சுமந்து பெற்றதை இழந்து, அந்த வேதனையைப் பொறுக்க முடியாது, தான் எதையோ, யாரையோ சுற்றிச் சுற்றி வருவதுபோல பிரமை எழுந்தது அருணாவுக்குள்.

    “எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம்பா! மஞ்சுதான் வேணும்!” என்றாள் அருணா. குரல் தெளிவாக இருந்தது.

    படத்திற்கு நன்றி

    Share
  • இருந்தாலும், மறைந்தாலும்… பேர் சொல்ல… இவர் போல யாரென்று ஊர் சொல்ல…

    ச.சசிகுமார்

    வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி…

    10409312_1580085308928274_4264682109182792801_n
    AVM R.R. ஒலிப்பதிவுக் கூடம். வருடம் 1968. அந்த கல்லூரி இளைஞனின் மனசுக்குள் அடுக்கடுக்காய் கேள்விகள்.தொலைவில் கண்ணாடி அறைக்குள், பெரிய பாடகர்களின் அடுத்த பாடல் பதிவிற்கான ஒத்திகை நடந்துகொண்டிருந்தது.அந்த இளைஞன் சமயம் கிடைத்தால் கேட்க நினைத்த கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டான்… அவர் தனியாக கிடைத்தால் கேட்டு விடலாம்… தூரத்தில் தொழில் நுட்பக் கலைஞர் கூட்டத்தின் நடுவே அவர் முழுச் சந்திரனாக புன்னகைத்து பேசிக்கொண்டு… போன வாரம் வரை உலுக்கி எடுத்து விட்ட “Typhoid” காய்ச்சலின் மிச்சம் இன்றைய பாடல் பதிவின் சந்தோஷத்தில் கரைந்து போயிருந்தது.

    இளைஞனுக்கு வியர்த்துக் கொட்டியது… நான்கைந்து மணி நேர பாடல் பதிவு முடிந்த திருப்தியும், அசதியும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.அறைக்குத் திரும்பலாம்.அடித்துப் போட்ட மாதிரி தூங்கலாம் அதற்குள் அவரைப் பார்த்து பேசிவிட வேண்டும். நிலா மெல்ல கூட்ட மேகத்திலிருந்து வெளிவந்தது…மெல்ல…அவரது வலது கை கைகுட்டையை எடுத்து நெற்றியை ஒற்றிக் கொண்டது… கூட்டத்தை விட்டு விலகி தனியாக…நடந்து… ஒலிப்பதிவு அரங்கை நோக்கி… அவர் நெருங்கி வர, இளைஞனுக்கு தொண்டை வறண்டு போனது. புன்னைகைக்கிறார்,” தம்பி இன்னும் கிளம்பலியா? சாப்பிட்டீங்களா? வாங்க சாப்பிடலாம்…” இளைஞனுக்கு வார்த்தை வற்றிப் போனது. “Sir… உங்க கிட்ட பேசணும்னு தான்…” மறுபடியும் புன்னகை.” நல்ல குரல் தம்பி… நல்லா பாடினீங்க… என பேசணும் சொல்லுங்க…”

    “Sir…தயவு செஞ்சு தப்பா நெனைக்காதீங்க…” ஆரம்பித்து இளைஞன் கேட்கக் கேட்க… அவருக்கு வாய் கொள்ளாத புன்னகை. நெருங்கி வந்து அந்த இருபத்து இரண்டு வயது இளைஞனின் தோளில் கைப்போட்டு நடந்தார். கேட்டு முடித்த இளைஞனின் கண்கள் கலங்கி இருந்தன…

    “தம்பி… இந்தப் பாட்டை கிட்டத் தட்ட மூணு மாசமா ஒத்திகை பார்த்து பாடிக்கிட்டு இருக்கீங்க… கூட பாடுறது பெரிய பாடகி சுசீலா… KV மஹாதேவன் இசை… எவ்வளவு கனவு இருந்திருக்கும்? காலேஜ்ல எத்தனை பேர்கிட்ட பெருமையா சொல்லி இருப்பீங்க? உங்களுக்கு Typhoid காய்ச்சல் வந்ததனால அந்த வாய்ப்பு தட்டி போக என் மனசு கேக்கல தம்பி…ஒரு வேளை இந்த பாட்டை வேற யாரையாவது வச்சு முடிச்சிருந்தா, மத்தவங்க என்ன நெனைப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தேன்…உங்க மனசு எவ்வளவு கஷ்டப் படும்னு யோசிச்சுப் பாத்தேன்…ஜெய்ப்பூர் ஷூட்டிங் தள்ளிப் போனாலும் உங்களுக்காககாத்திருப்பது தான் நியாயம்னு முடிவு பண்ணேன் தம்பி… உண்மையிலேயே, நீங்க அந்த காத்திருப்புக்கு நியாயம் செஞ்சிட்டீங்க… நல்ல உயரத்துக்கு வருவீங்க… தம்பி…” அவர் பேசப் பேச…இளைஞனுக்கு கண்ணீர் கண்களை நிறைத்து கன்னங்களில் உருண்டன. அவர் கைகளைப் பற்றிக்கொண்டான்.

    10268658_1379209069029158_3744620627015589432_n

    “மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்…
    அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுவதும்
    விதி வழி வந்ததில்லை… ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம்
    இறைவனும் தந்ததில்லை”

    —-அன்று மீசை துளிர்விட, ஒடிசலாக கண்ணீர் கலங்க RR ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர் போன திசை நோக்கி வணங்கி நின்ற 20 வயது இளைஞன் இன்று எழுபது வயது சாதனையாளர். தமிழ்த் திரை இசையின்40 ஆண்டுகால அடையாளக்குரல்…S P பாலசுப்ரமணியம். “ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா” — அடிமைப் பெண் பாடல் ஒலிப்பதிவு அனுபவம் சொல்லி முடிப்பதற்குள் கண்களும், குரலும் உணர்வில் ஆழ்கின்றன…

    M.G.R. மருதூர் கோபால ராமச்சந்திரன்…

    · கடந்த நூற்றாண்டின் அதிசயம்.
    · எழுபதாண்டு கால வாழ்க்கை.வெறும் இருபத்தைந்தாயிரத்து ஐநூறு நாட்கள் வாழ்ந்த, குறைந்த மனித வாழ்நாளின் அதிக பட்ச, உச்ச சாதனைகளை புன்னைகை மாறாமல் நிகழ்த்தி, புன்னகை மாறாமல் மறைந்து விட்ட அதிசயம்.
    · கை வைத்த இடத்தையெல்லாம் பொன்னாகவும், கால் வைத்த இடத்தையெல்லாம் இமயமாகவும் மாற்றிக் காட்டிய ஆச்சர்யம்.
    · சிறுவயதில் வாசித்த படக் கதைகளில் வரும் சாகாசக் கார கதாநாயகர்களின் பிம்பம் கலையாமல் தமிழ் மக்கள் மனத்தை வசியம் செய்த பேராளுமை…
    · வாழ்நாள் முழுதும் அள்ளிக் கொடுப்பதையே முழுநேரமாய் செய்திருந்தால் கூட இத்தனை கதைகள் இவரைப் பற்றி சாத்தியமா என்பது விடையற்றதொரு வினா…
    · சரித்திர கால தமிழ் இளவரசனாக திரையில் தோன்றி நாம் கண்களுக்குள் நிறைந்த வீரம்…
    · சமகால மன்னனாக தமிழ் மனங்களை நிறைத்த கம்பீரம்…
    · சேரனுக்கு உறவெனினும், செந்தமிழர் நிலவு என என்றென்றும் தமிழ் வானில் உலவும் பவுர்ணமி…

    1980 களின் தொடக்கம். கடலூர் கமலம் திரை அரங்கம். ஒரு மாலை வேளை. பஞ்சாமிர்தம் குச்சி ஐஸ் விரல் இடுக்குகளில் பிசு பிசுத்து, முழங்கை வரை வடிகிற பதினோரு வயது சிறுவனாக பெருங்கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நிற்கிறேன்.அப்பா எப்படியும் படம் பார்க்க டிக்கட் வாங்கி விடுவாரா?? மனம் பதைக் கிறது… வரும் போது அப்பா எதிர் காற்றில் சைக்கிள் மிதித்தவாறே ” படம் வந்து பதினெட்டு வருசமாகுது… நாலாவது தடவையா இங்க போட்டிருக்காங்க…” அப்பா.. வாத்தியாரின் மிகப் பெரிய ரசிகர்.தலைக்கு மேல் பதாகையில் நெற்றியில் புரளும் சுருள் முடி துலங்க மக்கள் திலகம் புன்னகை செய்கிறார். மாலை நேரக் கடற்காற்றில் பதாகை மெல்ல அலையென அசைய புரட்சித் தலைவரின் புன்னகை தீர்க்கமாக மனத்தில் வந்தமர்கிறது.
    “சசி… வா போகலாம்” அப்பா முகத்தில் ஏமாற்றம்.

    “அப்பா…டிக்கட்…????”
    “…ம்ம்… நாளைக்கு வரலாம் டிக்கட் கெடைக்கல..”

    தொண்டை அடைக்க…”அப்பா…ட்ரை பண்ணிப் பாருங்கப்பா…” பதாகையில் நாகேஷின் முகம் அஷ்ட கோணல் காட்டி அலைக் கழிக்க அப்பா…”வாடா படம் பாக்க போகலாம்…” சட்டைப் பையிலிருந்து கைகளில் டிக்கெட் எடுத்து சிரிக்கிறார்.”தியேட்டர் மேனேஜர் தெரிஞ்சவர் தான்…டிக்கட் வாங்கிட்டேன்”
    சந்தோஷம் பொங்க அண்ணாந்து பார்க்கிறேன்…

    “ஆயிரத்தில் ஒருவன்”

    பதாகையில் மக்கள் திலகம் கண்சிமிட்டி சிரிக்கிறார்… எனக்கு மட்டும் பிரத்தியேகமாக… அப்பா கையைபிடித்து அவசரப் படுத்துவதையும் தாண்டி நின்று பார்க்கிறேன்… அண்ணாந்து பார்க்கிறேன்…

    பார்க்கிறேன்… அன்று தொடங்கி கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அலுக்காமல், ஆச்சர்யம் கலையாமல், ஆர்வம் குலையாமல் குழந்தையாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன். வாழ்வின் கால வெளியில் எத்தனையோ பழையன கழிந்தும், புதியன புகுந்தும், நினைவுகள் உதிர்ந்தும், உறவுகள் மலர்ந்தும் இருந்தாலும், MGR என்ற தனி மனிதனின் நினைவுகளும்,அவர் பற்றிய வியப்பும், அவர் அளித்த நம்பிக்கைகளும் என்னைத் தொடந்து கொண்டிருப்பது அவர் மீது கொண்ட ஈர்ப்பைத் தாண்டிய நேசம்.

    வாசித்த இலக்கியமும், புதினங்களும், பின் நவீனத்துவமும், மாய யதார்த்த புனைவுகளும், புதுமைப் பித்தன், லா.ஸா.ரா, தி.ஜா, கு.பா.ரா, நா.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்….இரா.முருகன்… இன்னபிற இலக்கிய ஆளுமைகளின் தாக்கமும், MGR ஐ என்னிலிருந்து விலக்கவேயில்லை. எழுத்தாளர் கலாப்ரியா ஒருமுறை சுபமங்களா நேர்காணலில் தன்னை நெல்லை MGR ரசிகர் மன்றத்தில் செயல்பட்ட ஒரு அடிப்படை ரசிகனாகவே முன்னிறுத்தியிருந்ததைப் போல, MGR என்ற ஒற்றை மந்திரச் சொல் மட்டும் என்னை என்றும் குழந்தையாகவே உணரச் செய்கிறது. கடந்த பதினைந்து வருட காலத்தில் உலக சினிமா மெல்ல அறிமுகமாகி, எனக்கு திரைப்படத்தின் வெவ்வேறு ரசனைச் சாளரங்களைத் திறந்து விட்டபோதிலும்,

    “நேத்துப் பூத்தாளே ரோஜாமொட்டு… பறிக்கக்கூடாதோ லேசாத் தொட்டு…”

    என அறுபது வயது MGR, பஞ்சகஜம், சிலுக்கு ஜிப்பாவில் லதாவைச் சுற்றி உரிமைக்குரல் கொடுப்பது தொலைக்காட்சியில் ஒலிப்பதை நின்று ரசித்து, மகிழாமல் இன்றுவரை என்னால், தாண்டிப் போக முடிந்ததே இல்லை.

    “தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாகக் கொடுத்தே பழக்கப் பட்டவன் இந்த மணிமாறன்”
    –என்ற குரல் கேட்கும் போதெல்லாம் போகிற போக்கில், லட்சம் நம்பிக்கைகளை மனத்தில் விதைத்துச் செல்கிறது.

    “புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ?
    மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ?”

    –என்ற அறைகூவல் ஒலிக்கும் போதும், தூண்களுக்கு இடையில் தாவி அவர் எதிரிகளை தாக்கும் போதும் மனசு குழந்தையென இன்று வரை குதூகலித்து மகிழ்கிறது.

    வருடங்களைத் தாண்டி என்றும் தொடர்கிற இந்த நம்பிக்கை, இந்த மகிழ்ச்சி, இந்த குதூகலம்… இது என்ன வகை ஈர்ப்பு? என்ன வகை ரசனை? என்ன வகை உளவியல்? என்னைப் போன்ற கோடிக் கணக்கான தமிழ் மனங்களை வென்றெடுத்து சிறைப் படுத்தி வைத்திருப்பது எது?

    உலகப் பெரு நடிகர்களின் வரிசையில் தவிர்க்க இயாலாத இடம் பெற்ற சிவாஜிகணேசனை, இலகுவாக இவருக்குப் பின் வரிசையில் வைக்க, மக்களை இயக்கியது எது?

    இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதராக நிலைத்த, பேச்சாற்றலும், சொலல் வல்லனுமாகிய கலைஞரை சோர்வுறச் செய்து எளிதாய் இகல் வெல்ல வைத்த — இவரின் ஆற்றல் எது?

    நாடகத் தன்மைக் குறைந்த இயல்பான நடிப்பா?

    பட்டுக்கோட்டை, கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகளும், TMS -ன் குரலும், அதற்கேற்ற இவரின் அசைவுகளும் காட்சியமைப்புமா?

    திட்டமிட்டு, அளந்து அடியெடுத்து வைத்து, அரசியலில் முன்னேறிய நேர்த்தியா?
    தான் ஈடுபட்ட திரைத்துறையில் சகலமும் கற்றுத் தெளிந்த ஈடுபாடா?
    தான் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் கொண்டிருந்த கண்டிப்பான ஆளுமையா?
    எல்லா இடங்களிலும் வெற்றி பெற விழைந்து செயல்படுத்திய மதிநுட்ப ராஜ வியூகமா?
    தனது குறைகளை மறைத்து, நிறைகளை மட்டுமே வெளிப் படுத்திய லாவகமான தலைமைக்குண தந்திரமா?
    இவை அனைத்தும் தான் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது.
    இவற்றைத் தாண்டிய ஒரு தகுதி…
    இவற்றுக்கும் மேலான ஒரு உணர்வுபூர்வமான, உளப்பூர்வமான தகுதி…
    எது?
    அன்பு…
    தன்னிலை மறந்த பேரன்பு…
    …சக மனிதரிடம் அவர் கொண்டிருந்த எல்லையில்லா பேரன்பு…

    நான்கைந்து வருடங்களுக்கு முன்… MGR -ன் பிறந்த தினம். ஒரு தொலைக்காட்சியில் அவரின் பழைய படப் பதிவுகளின் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது… ஏதோ அவசர வேலையில் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தவன், இந்தப் காட்சிகளைக் கண்டு நின்றுவிடுகிறேன்… தொப்பியும், கருப்புக் கண்ணாடியுமாக, தமிழக முதல்வராக… மேடையில் நின்று ஆதரவற்ற எளிய பெண்களுக்கு புடவையும், அரிசியும்,உதவித் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்… மக்கள் கூட்டம் பேரன்பில் கூச்சலிடுகிறது… ஒவ்வொருவராக வரிசையில் நின்று மெல்ல அருகில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, புன்னகைத்து அன்பாகக் கொடுத்தனுப்புகிறார். அப்போது, அப்போது, மேடையின் கீழே, இழுத்துப் போர்த்திய கிழிசல் புடவையோடு ஏறத்தாழ ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி வரிசைக்குள் வர காவலர் அந்தப்பெண்மணியை விலக்குகிறார். அதை கவனித்த MGR, அந்தப் பெண்மணியை தன்னிடம் வரவிடுமாறு சைகையில் சொல்ல, அந்த பெண்மணி வற்றி வதங்கிய உடலோடும், கிழிசல் மறைத்த உடையோடும், தயங்கித் துவண்ட நடையோடும், மெல்ல…மெல்ல..நெருங்கி MGR அருகே வருகிறார். கைகூப்பி வணங்குகிறார். வணக்கம் சொல்லிய முதல்வர் ஏதோ கேட்டவாறே,புடவை,அரிசி,உதவித்தொகை இருக்கும் பையை கொடுக்க, அந்தப் பெண்மணி அதீத சங்கோஜம் கொண்டு, அவரிடமிருந்து விலகி தனது கிழிந்த புடவைத் தலைப்பை விரித்து அதில் வாங்கிக் கொள்ள முனைகிறார். MGR அருகே வரச் சொல்லி சைகை காட்டியும், அந்தப் பெண்மணியின் பஞ்சடைந்த கண்கள் மெல்லத் தாழ்கின்றன… கூச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையும் MGR -ன் முகத்தை நேரிட்டுக் காண மருகித் தயங்குகின்றன… அருகே இருந்த உதவியாளரிடம் கையிலிருப்பதைக் கொடுத்து விட்டு, பொன்மனச்செம்மலின் கரங்கள் அந்த பெண்மணியின் இரு கரங்களையும் பற்றுகின்றன… மெல்ல அந்த கரங்களை பற்றி, தனது இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்கிறார். சில நொடிகள் கடக்கின்றன… சிறுவயதில் தான் கண்ட தனது தாயின் ஏழ்மையை இவர் நினத்தாரோ? அல்லது, திரையரங்கில் மட்டுமே பார்த்து வியந்த, கனவு நாயகனின் கைகள் தனது கைகளைப் பற்றிய நெகிழ்வை அந்தப் பெண்மணி உணர்ந்தாரோ? இருவருமே கலங்கி நிற்கின்றனர்… கண்ணாடியை உயர்த்தி கண்ணீரைத் துடைத்து, அந்தப் பெண்மணியின் விழிநீரை கைக்குட்டையால் துடைத்து உதவிப் பொருட்களை அதிகமாகவே வழங்கி, வணங்கி வழியனுப்புகிற MGR…

    உடல் முழுக்க சிலிர்க்கிறது… அந்தப் பெண்மணி மனம் எத்தனை நெகிழ்ந்திருக்கும்? எத்தனை இயல்பாக அந்தப் பெண்ணின் தாழ்வு மனத்தை தகர்த்தெறிந்தார்?
    என்ன விதமான அன்பு? எத்தனை அழகான வெளிப்பாடு?
    மரபு தாண்டிய பேரன்பு… தமிழ் மண்ணின் பெரும்பான்மையான ஏழை, எளியோர் தமது சொந்தமாகவே எண்ணி அனைத்துக் கொண்ட நேசம்…
    தமிழ் மண்ணையும், தமிழரையும் தமது வாழ்வெல்லாம் மனத்தில் சுமந்த ஈரம்…. ஈழம் மலர உதவிக் கரம் நீட்டிய மாண்பில் தழைத்திருந்த மனித நேயம்…

    மனித நேயமும், அன்பும் தான் அவர் வாழ்ந்த நாட்களின் கடைசி நாள் வரை தமிழ் மக்களின் மன்னாதி மன்னனாக வலம் வரச் செய்தது. மறைந்தாலும் மக்கள் மனங்களில்… பேரரசனாக இன்றும் தொடர காரணம் மனிதர்களிடத்தில் அவர் கொண்ட பேரன்பைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்?

    “பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
    வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்”

    –என்ற பாடல் வரிகள் ஒலிக்க படத் தொகுப்பு நிறைவுற்று நெடுநேரமாகியும்… எழுந்து சென்று பணிகளைத் தொடர இயலாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
    மனசுக்குள் நினைவுகள் கலவைகளாக புரண்டன…

    “அதோ பாரு… செக்கச் செவேல்னு… பக்கத்து வீட்டு விஜயா அக்கா விரல் காட்டிய திசையில் பார்க்கிறேன்… ஜனத் திரள்… மக்கள் வெள்ளம்… கடலூர் கெடிலம், அண்ணா பாலம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.”அதோ பாரு சசி… வேன்ல நின்னு கும்பிட்டுகினே.. போறாரு…” உயரம் போதவில்லை… பதினோரு வயது சிறுவனான எனக்கு எக்கி நின்று, நின்று… கால்கள் வலிக்கின்றன… எப்படியாவது பார்த்து விட முயன்று தோற்று போகிறேன். அழுகை வருகிறது… “போயிட்டாரு…தூரமா போயிட்டாரு…”விஜயா அக்கா சொல்ல ஏமாற்றம்… .”விடு சசி …தலைவரு அடுத்த தடவை வரும் போது இட்டுகினு வந்து கிட்டக்க காட்றேன்… சுமதி… தலைவரு இன்னா கலரு பாத்தியா? வெயிலுக்கும் அதுக்கும் சும்மா தங்கம் மாதிரி தக தகன்னு ஜொலிக்கிறாரு…”போக மனசே இல்லாமல் கலைந்து, அக்கா விரல்களைப் பற்றி கூட்டத்துடன் கரைந்து போகிறேன் . அதன்பின்னர் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் உடல் நலம் குன்றி அமெரிக்க ப்ரூக்லின் மருத்துவமனை …சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… மொத்த தமிழகமும் ஒரு உயிருக்காக த்த்தமது கடவுளிடம் கையேந்திய வரலாற்று நிகழ்வு… மற்றுமோர் முறை வெற்றி பெற்று தமிழக முதல்வராக அமெரிக்காவிலிருந்து திரும்பிய தருணம்….தொடர்ந்த உடல் நலக்குறைவால் அவர் சோர்வுற்று இருந்த நாட்களென… அவகாசமின்றி, ஆண்டுகள் கடந்து போயின.

    24.12.87 மார்கழி மாதக் காலை வேளை 5 மணி இரவுப் பணி முடித்து அப்பா வீடு திரும்பி சைக்கிள் நிறுத்தும் ஓலி கேட்டு எழுகிறேன்…குளிர் பனியைத் தவிர்க்க மாப்ளர் சுற்றியாவாறு அப்பா வாசல் திண்ணையில் அமர்ந்து கொள்கிறார்… நானும் மெதுவாக அவரருகே… இரும்பு கேட்டின் கம்பிகள் குளிர்ந்து கிடக்கின்றன… அடுத்தத் தெருவின் பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கியில் சீர்காழி ஆச்சரியமான தணிந்த குரல் , “மயிலாக நான் மாற வேண்டும்… வள்ளி மணவாளன்…என் தோளில் இளைப்பாற வேண்டும்…” அம்மா வாசலில் கோலம் போடத் தொடங்க… அப்பவும் நானும் துணையாக திண்ணையில் அமர்ந்து கொண்டிருக்கிறோம்.

    பால்காரர் அடிக்கும் மணி சற்று நெருங்கி வர , பால் குவளையைக் கொண்டு வாசலுக்கு வருகிறேன்.
    பால்காரர் வருமுன்…”தினத்தந்தி” பெயர்ப் பலகை வைத்த சைக்கிள் வீடு வாசலில் தட தடக்க வந்து நிற்கிறது… சைக்கிளில் இருந்து இறங்கிய காக்கி உடை அணிந்த அலுவலக உதவியாளர் மெல்ல தயக்கத்துடன் அப்பாவிடம் சென்று ஏதோ சொல்லுகிறார்… அப்பா திடுக்கென எழுந்து நிற்கிறார். அலுவலக உதவியாளர் ஏதோ கேட்க அவர் பதில் சொல்கிறார். அப்பா விரைவாக வீட்டினுள் செல்ல,உதவியாளர் சைக்கிள் திரும்ப விரைகிறது… பால்காரர் ஊற்றிய பாலின் இளம் வெதுவெதுப்பு கைகளில் உணர்ந்த வேளை… அப்பா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து, சைக்கிள் ஸ்டாண்டை தட்டிவிட்டு “கிட்டு…அவசரமா ஆஃபீஸ் போகணும்…” அம்மாவும் நானும் சற்றே கலவரமாகி…அம்மா,”ஏன்??என்னாச்சு? அப்பாவிடம் பதில் இல்லை

    ” சொல்லுங்க… என்ன அவசரமா? காப்பியாவது சாப்டுட்டு போங்க…”

    “வேண்டாம்… ரொம்ப அவசரம்… பத்திரிக்கை ஸ்பெஷல் எடிஷன் போடணும்… போயிட்டு வரேன்…”

    வாசலுக்கு சைக்கிளை இறக்கி அமர்ந்த கடலூர் தினத்தந்தி பதிப்பின் உதவி-செய்தியாசிரியரான எனது அப்பா.. அம்மாவிடம் திரும்பி ” MGR… தவறிட்டாராம்…” அப்பாவின் கண்கள் கலங்கி இருந்தன.
    பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கியில் சீர்காழி,”காலை இளங்கதிரில்… உந்தன் காட்சி தெரியுது கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…”” என்று பாடியபடி இருக்க, அப்பா சைக்கிள் கடந்து விரைந்து கொண்டிருக்க… இன்னும் வெளியே யாரும் உணராத இழப்பை முன்கூட்டியே உணர்ந்த பதினோராம் வகுப்பு சிறுவனாக நான் வீட்டுத் திண்ணையில் பால் குவளையோடு உட்கார்ந்து கொண்டிருக்க… மார்கழி மாத காலைக் குளிர் காற்றில் செடியிலிருந்த டிசம்பர் பூக்கள் அசைந்துகொண்டு இருக்க, MGR இல்லாத அந்த டிசம்பர் விடியற்காலைப் பொழுது புலர்ந்துகொண்டிருந்தது.
    =========================================================================================================

    கட்டுரையை தட்டச்சு செய்து முடித்து, கணினித் திரையிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்க்கிறேன். நள்ளிரவு ஒரு மணி… எதிரே கண்ணாடியிட்ட அலமாரியில் மக்கள் திலகம் புகைப்படத்தில் மாறாப் புன்னகையுடன்…

    ஏனோ… ஒரு மென்சோகத்தின் மெல்லிய தடம் இன்னும் தொடர்கிறது……

    “விடு சசி …தலைவரு அடுத்த தடவை வரும் போது இட்டுகினு வந்து, கிட்டக்க காட்றேன்… “– விஜயா அக்காவின் குரல், மனசுக்குள் இன்று 2015- லும், கால் நூற்றாண்டின் கால வெளியைத் தாண்டியும்…எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது…

    ச.சசிகுமார்
    துபாய்,அமீரகம்
    0503245204

    Share
  • செம்மஞ்சள் பொழுதின் வானம்!

    – எம். ரிஷான் ஷெரீப்

    பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும்
    நடந்தே செல்லத் தலைப்பட்டோம்
    அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென
    வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா?

    எத்தனையெத்தனையோ தலைமுறைகளுக்கு ஊணிட்ட
    வேலிகளற்ற தரிசு வயலது
    பரந்து விரிந்த எம் பண்டைய பூமி
    வண்டி கட்டிச் சென்று மூத்தோர் விவசாயம் பார்த்த
    சருகுக் கோரைப் புற்கள் விரவிக் கிடக்கும் பயிர்நிலம்!

    என் ஞாபகத்திலொரு பூநெல்லிச் செடியிருக்கிறது
    நிலா இரவுகளில் முற்றத்தில் பாய்விரித்து
    தலைகோதிக் கதை சொன்ன அம்மா நட்ட செடி
    பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க
    மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி
    நானதை வளர்த்து வந்தேன்
    அந்நிய நகரத்தில் நீயும் நானும்
    அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி
    அது நன்கு தழைத்திருந்தது
    தேசம் விட்டகன்ற நாளில்!

    அக் காலத்தில் நிழலுக்கென்று வளர்த்திருக்கக் கூடிய
    கொன்றையும் வேம்பும் இன்ன பிற மரங்களும்
    குளிர்ச்சியைத் தந்திருக்கும்
    கூடவே களைப்பறியாதிருக்க வாய்ப்பாடலும்
    கூட்டுக் கதைகளும் வெற்றிலையும்
    சிறு காயங்களுக்குச் சேற்று மண்ணுமென
    உழுதபின் வாடிக் களைத்த மூத்தவர்கள்
    அங்கமர்ந்து ஓய்வெடுத்திருப்பர்

    இன்று
    சட்டை கழற்றிச் சென்றிருந்ததொரு சர்ப்பம்
    தூர்ந்துபோய் வான் பார்த்திருக்கும் பெருங்கிணறும்
    பல பிரேதங்களைச் சுமந்திருக்கக் கூடும்!
    எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை
    பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு
    அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன… இப்போது
    வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி
    அதன் உடலிலின்னும்
    சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது
    கோடை காலத் தூரிகை!

    அத்தி மரத்தில் சாய்ந்து நின்றபடி
    அந்திப் பேய் வெயில்
    மஞ்சளாய் ஊடாடிய தரிசு வெளி பார்த்துச் சட்டென
    ”வான்கோ’வின் ஓவியமும் குரூர ஆயுதங்களும்
    ஒருங்கே கலந்த நிலம்” என்றாய்
    தங்க பூமியின் ஆகாயத்தில்
    செஞ்சாயம் கலந்தது வேறெப்படியாம்?

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 162

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    தமக்கு அழகு செய்யும்
    மேகலையை அணிந்த
    ஆயிரம் கணிகையர் ஒன்றுகூடி,
    அக்குழந்தையை ”மணிமேகலை” என்ற
    பெயரிட்டு அழைத்தனர்.
    அந்த நாளில்
    அழகான மங்கல மடந்தை                                    elephant
    மாதவியோடு சேர்ந்து
    செம்பொன்னை நீ நினது
    சிவந்த கைகளால்
    மழைபோல் வழங்கினாய்.
    சிறந்த ஞான நெறிக்கே எல்லையானவன் எனும்
    பெருமை மிக்க மறையவன் ஒருவன் முதியவன்
    தானம் பெறும் எண்ணத்துடன்
    ஊன்றுகோல் ஊன்றித் தளர்ந்த நடையுடன்
    மூப்பால் வளைந்த முதுகுடன்
    மெதுவாக வந்தான் அங்கே.

    அப்போது தன் பாகனுக்கு அடங்காமல்
    பறை போன்ற முழக்கத்துடன் ஓடி வந்த
    மதம் பிடித்த யானை
    சினத்துடன் அந்த மறையவனைத்
    துதிக்கையால் பற்றிக் கொண்டது.

    அந்த நேரத்தில் விரைந்து சென்று
    அம்மறையோனை
    யானையின் கைகளில் இருந்து விடுவித்து
    அதன் கையில் நீயே புகுந்து,
    அது உன்னை வளைத்து இறுக்கியபோது
    அதன் துளைபொருந்திய கையை விலக்கி
    அதன் தந்தங்களைப் பிடித்து
    அதன் மீது ஏறி அமர்ந்து
    பெரிய கரிய குன்றின் மீது இருக்கும்
    வித்தியாதரனைப் போலவே
    அதன் பிடரிப்பகுதியில் நீ அமர்ந்து
    அந்த யானையை அடக்கினாய்;
    அத்தகைய கருணைமிக்க வீரன் நீ.

    *கீரியைக் கொன்ற பார்ப்பனியின் துயர் தீர்த்தமை*

    தம் பிள்ளை நலம் காக்க
    கீரியைக் கொன்றாள் பார்ப்பனப் பெண் ஒருத்தி.
    அதனால் ஏற்பட்ட தீங்கு நீங்குதற்பொருட்டு
    அவள் கணவன் பரிகாரம் தேடி வடக்கே சென்றான்
    கங்கையில் நீராடிவர...
    துயருற்ற அவன் மனைவியும்
    அவன் பின்னே சென்றாள்.

    ‘உன் கையால் இனியும்
    உணவு உண்டு வாழ்வது முறைமையன்று.
    இந்த வடமொழி ஏட்டினைக் கொடுத்து,
    பிறருக்காக என்று வாழும் வாழ்க்கை கொண்ட
    மனிதன் ஒருவனைச் சந்தித்து இதைக் கொடுப்பயாக’
    எனக் கூறிச் சென்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 36 – 59
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share