சுரேஜமீ

வணக்கம். இங்கே கொடுக்கப் பட்டுள்ள ‘விநாயகர் கவசத்தை’ கந்த சஷ்டி மெட்டில் புனைந்துள்ளேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த அஷய த்ரிதியை நாளில், அனைவரும் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.

av

விநாயகர் கவசம்
சதுர்த்தியில் மலர்ந்த
சண்முக சோதரா
சதுர்மறை போற்றும்
சிவனுமை பாலா
தினம்உனைப் பாடி
துதிசெய்து நாளும்
உனதருள் வேண்டி
நிதமுனைப் பணிவோம்.

முன்வினை களைவாய்
மூஷிக வாகனா
என்மனம் இருப்பாய்
ஈசன் புதல்வா
சிந்தையில் கலப்பாய்
சித்தி விநாயகா
உன்பதம் சரணம்
உமையவள் மைந்தா.

ஒன்றுமே அறியேன்
உலகினில் பிறந்தேன்
உன்னடி சேர்ந்தேன்
ஒரு வரம் தருவாய்
நன்று மற்றன்று
நவிலா வண்ணம்
நந்தன விநாயகா
நலமது அருள்வாய்.

இருசெவி என்றும்
இன்பமே உய்க்கும்
நற்செய்தி நாளும்
நயம்படக் கேட்க
இருவிழி காணும்
ஒரு முகக்காட்சி
மங்கல மூர்த்தி
நினதருள் சாட்சி.

நாமகள் நாவினில்
அமர்ந்து அடியேன்
சொல்பொருள் யாவும்
நலமென விளைய
நுகரும் மணமே
நறுமணமாகி,என்
மெய்யது காப்பாய்
கஜமுக கணபதி.

ஐம்புலன் தன்னை
ஐங்கரன் காப்பான்
தினம் ஒருதடவை
மனமது ஒன்றிப்
பாடும் பக்தர்கள்
பாரினில் நற்கதி
பெறுவார் சத்தியம்
பால கணபதியருளால்.

அல்லல்கள் ஓடும்
நல்லவை நாடும்
நவகோள் அருளை
வாரி வழங்கும்
ஒருமுறை உன்னைத்
தொழும்அன்பர் யாவர்க்கும்
ஹேரம்ப கணபதி
அருள்நமைக் காக்கும்!

-சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.