Month: October 2015

  • நவராத்திரி நாயகியர் (7) சங்கரன் கோயில் – கோமதி அம்மன்

    க. பாலசுப்பிரமணியன் 

     

    ஆலகாலமுண்ட ஆதிசிவன் அன்பு நாடியேGod-1

    ஆடித்தவமிருந்து அருள் செய்யும் அம்பிகையே!

    ஊசி முனையில் ஒரு காலில் நீ நின்றாலும்

    பாசமுடன் பாரெல்லாம் வாழ வைத்தாயே !!

     

    புன்னைவனத்துப் புன்சிரிப்பே !

    புவியீர்த்த விண்வெளியே!

    அனைத்துயிர்க்கும் நீ ஆவுடையாள் !

    அறமென்னும் அமுதூட்டும் தேன்மொழியாள் !

     

    சங்கடங்கள் தீர்த்திடிடுமே சங்கரன்கோயில்

    சர்ப்பங்கள் காத்திருக்கும்  புற்றுவாயில் !

    ஊழ்வினையாய் ஓடிவந்த விடமெல்லாம்

    ஓங்காரி கண்பட்டா லே நல்லமுதாகும் !

     

    போகமுடை வாழ்வழித்துக்  காலமெல்லாம்gomathi

    நாகத்துடன் வாழ்ந்திருந்த யோகினியே!

    பற்றுடனே வேண்டியவர்  ரோகமெல்லாம்

    புற்றுமண்ணால் போக்கிவிடும் கோமதியே !

     

    சங்கரனும் நாரணனும் ஒன்றிடவே

    சமத்துவத்தைக்  கற்பித்த  சாம்பவியே!

    பதுமனுக்கும் சங்கனுக்கும் வழிகாட்டி

    பாம்பாட்டி சித்தருக்கு அருள் தந்தாயே !

      

    பாம்புடனே தேளையும் பரிசாக அளித்தாலும்

    பாங்குடனே அவர் குறைகள் தீர்த்திடுவாய் !

    மனம்கலங்கி வந்தோர் மாவிளக்கு ஏற்றிடவே

    மாதேவி! ஒளிவிளக்காய் நின்றிடுவாய் !

     

    கண்களிலே நீயிருந்தால் கவலைகள் நீங்கிவிடும்

    எண்ணத்திலே நீயிருந்தால் ஏற்றங்கள் வந்துவிடும் !

    ஒருராத்திரி போற்றிடவே  ஓலங்கள் அடங்கிவிடும்!

    நவராத்திரி போற்றிகிறேன்! நாயகியே வந்துவிடு!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 183

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    பொற்கொல்லன் தீய எண்ணத்துடன் செல்லுதல்

    ‘நான் வஞ்சகம் செய்து கவர்ந்த சிலம்பு
    என்னிடம்தான் உள்ளது என்று
    பிறர் அனைவரும் அறியும் முன்னே
    வேறு ஊரிலிருந்து இங்கு வந்த
    இவன் மூலம் என் கள்ளத்தனத்தை          silambu new
    நான் மறைப்பேன்’ என்று எண்ணி,
    சிறிதும் கவலைப்படாது
    பொற்கொல்லன்  சென்றான்.

    கோப்பெருந்தேவியின் கோவிலை நோக்கி மன்னவன் செல்லுதல்

     கூடல் மகளிர் ஆடும்போது
    தோன்றும் தோற்றமும்,
    அந்த ஆட்டத்துக்கேற்ற பாட்டு இசைக்கும்போது
    எழும் வேறுபாடும்,
    யாழிசையின் பயன்களும்,
    அரசனின் உள்ளத்தைக் கவர்ந்தது என்று எண்ணி,
    தன் ஊடலை உள்ளே வைத்துக் கொண்டு
    தலைநோயாகிய வருத்தத்தைத் தன் மீது படரவிட்டு,
    உயர்குடிப்பிறப்பையுடைய பெருந்தேவி
    தன்னுடன் மேவாது
    அந்தப்புரம் சென்றுவிட்டதால்…
    காமம் மிகுந்த அரசன்
    மந்திரிகளின் கூட்டத்தை விட்டு நீங்கி,
    அரி சிதறிய நீண்ட கண்களையுடைய பணிப்பெண்களுடன்
    கோப்பெருந்தேவியின் கோவிலை நோக்கிச் சென்றான்.
    காவலையுடைய வாயிலின்கண் செல்லும் முன்னே
    அவனைப் பலவாகப் புகழ்ந்து ஏத்தி
    அவன் கால்களில் விழுந்தான் பொற்கொல்லன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 127 – 141

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(92)

    செண்பக ஜெகதீசன்

    வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சின் மிசைவான் புலம். (திருக்குறள்-85: விருந்தோம்பல்)

    புதுக் கவிதையில்…

    விருந்தினரை உபசரித்து
    வயிறார உணவளித்து,
    எஞ்சிய உணவை உண்ணும்
    ஏற்றமிக்கோர்
    விளைநிலத்தில்
    விதை விதைக்கவேண்டியதில்லை,
    விளையும் தானாய்…!

    குறும்பாவில்… 

    மனதுடன் விருந்தினர்க்கு ஊட்டி,
    மிச்சத்தை உண்ணுவோர் நிலம்,
    மிகுதியாய் விளையும் விதைக்காமலே…!

    மரபுக் கவிதையில்… 

    வந்த விருந்தை வரவேற்று
         -வயிறு குளிர உணவளித்து,
    வந்திடும் மீதி உணவினையே
         -உண்டு மகிழ்ந்திடும் உயர்ந்தோர்தம்
    சொந்த நிலத்தில் பயிரிடவே
         -சென்று விதையை ஊன்றவேண்டாம்,
    தந்திடும் மகசூல் தானாகவே,
         -தெரிந்திடு உயர்ந்தது விருந்தோம்பலே…!

    லிமரைக்கூ…

    விருந்தை உபசரித்தே உண்டிடுவான் மீதி,
    விருந்தோம்பும் அவனது நிலத்தில்
    விதைக்காமலே விளைந்திடும் என்பது நீதி…!

    கிராமிய பாணியில்…

    விருந்துகுடு விருந்துகுடு
    விருந்தாளிக்கு விருந்துகுடு,
    வீடுவந்த விருந்தாளிக்கு
    வயறுநெறய விருந்துகுடு… 

    விருந்தாளிக்குக் குடுத்துப்புட்டு
    மிஞ்சினதத் திங்கிறவன்
    நஞ்சயில வெதைக்கவேண்டாம்,
    நல்லாவெளயும் தன்னாலத்தான்… 

    விருந்துகுடு விருந்துகுடு
    விருந்தாளிக்கு விருந்துகுடு…! 

     

    Share
  • ருசி

    -கவிஜி 

    உன்னை அறிய
    உன்னை அரி!

    ஞான ஒளி
    போகட்டும்
    பின் உன் விழி
    போகட்டும்

    திண்ணைப் பேச்சு கவனி
    தின்னும் சூட்சுமம் பவனி

    காதலைக் கட
    காமத்தை விட
    உற்றாரா நண்பரா
    இடம் பொருள்
    ஏற்று நடத்து

    பெற்றோரா பேரின்பமா?
    முன்னது முன்
    பின்னது பின்

    படி படித்ததை
    எழுதாதே
    எழுது எழுதியதை
    எழுதாதே

    சாமி சமயம்
    உள்ளாடை
    வெளியே காட்டினால்
    ஓட்டை என்பேன்

    ஒன்பது ஓட்டை
    ஒவ்வொன்றும் அற்புதம்
    சுத்தம் செய்

    ரசி புசி ருசி
    பசி கசி வசி
    எண்ணாதே வரும் மரணம்…!

     

    Share
  • உன்னையறிந்தால் …… (27)

    நிர்மலா ராகவன்

    வயதுக்கேற்ற வளர்ச்சி

    உனையறிந்தால்31

    `குழந்தை’ என்று கூறும்போது நம் நினைவுக்கு வருவது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்தாம். சுமார் பதினெட்டு வயதில் அவர்களது உடல் வளர்ச்சி பரிபூரணம் அடைவதுவரை அவர்களுடைய மனப்போக்கும் சிறிது சிறிதாக விசாலமடைகிறது. இதில் ஏதாவது தடை ஏற்பட்டால், மனவளர்ச்சி அந்த நிலையிலேயே நின்றுவிடுகிறது.

    குழந்தை பிறந்து இரண்டு வயதுவரை தன்னைச் சுற்றி உள்ள உலகை ஐம்புலன்களின் உதவிகொண்டு அறிய முனைகிறது. ஒளியோ, ஒலியோ இருக்கும் திசையை நோக்கித் தலையைத் திருப்பும் முதலில். பிறகு, கைக்கெட்டுவதை எல்லாம் எடுக்க முனையும். எந்த ஒரு பொருளும் தின்னத் தகுந்ததா இல்லையா என்று அறிவதில்தான் இந்த வயதினருக்கு ஆர்வம். மற்றபடி, தானும் தாயின் ஒரு பகுதிதான் என்பதுபோல்தான் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நடந்துகொள்ளும்.

    இரண்டு வயதுவரை யார் உணவூட்டினாலும் உட்கொள்ளும் குழந்தைகள் அதன்பின், தாமும் ஒரு தனிப்பிறவி என்று உணர்கிறார்கள். பிறர் சொல்வது சரியாக விளங்காது. தமது செய்கையால் பிறருக்கு ஏற்படும் விளைவுகளும் இவர்கள் அறிவுக்கு எட்டாத சமாசாரம். இருந்தாலும், உலகமே இவர்களைச் சுற்றித்தான் இயங்குகிறது என்று எண்ணம் கொண்டிருப்பார்கள்.

    வீட்டிற்கு யார் வந்தாலும், தம்முடன் விளையாடத்தான் வருகிறார்கள் என்றெண்ணி மகிழ்வார்கள். தனக்குக் கிடைத்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம் இந்த வயதில் கிடையாது. இந்த அறிவை நாம்தான் புகட்ட வேண்டும்..

    ஒரு டப்பாவில் பிஸ்கோத்தோ, சாக்லேட்டோ போட்டு, `எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நீயும் சாப்பிடு!’ என்று இரண்டு வயதுக் குழந்தையின் கையில் கொடுங்கள். பெரியவர்கள் பேச்சை மறுப்பின்றி ஏற்கும் குழந்தை அதை அப்படியே கடைப்பிடிக்கும். தின்பண்டத்தை வாங்கிக்கொண்ட ஒவ்வொருவரும் நன்றி தெரிவித்து, குழந்தையின் `தாராள’ மனப்பான்மையைப் பாராட்டினால், நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடும்.

    (`சாக்லேட்டா? ஐயோ, வேண்டாம்! குண்டாகிடும். ஏற்கெனவே, சர்க்கரை வியாதி!’ என்றெல்லாம் பிகு பண்ணாது, வாங்கிக்கொள்ளுங்கள். தின்ன வேண்டிய அவசியமில்லை. பிறகு டப்பாவிலேயே போட்டுவிடலாம். தான் கொடுக்கும்பொது வாங்கிக்கொள்ள மறுப்பது குழந்தையின் மனதை நோகடிக்கும். நிலவரம் புரியாது, அழுகையில் உதடு பிதுங்கும்).

    பிறர் வீட்டுக்கு அழைத்துப் போகும்போது உங்கள் குழந்தை அவர்கள் வீட்டுச் சாமான்களை எடுத்து ஆராய்ச்சி செய்கிறானா? கண்ணாடிச் சாமானாக இருந்தால், கைதவறி கீழே விழுந்துவிட உடைந்தும் போகலாம். `வளர்க்கத் தெரியாமல் வளர்த்திருக்கிறீர்களே!’ என்பதுபோல் முறைப்பவர்களை அலட்சியம் செய்யுங்கள்.
    ஏன் தெரியுமா?

    காரண காரியம் புரியாத வயது ஏழுவரை. அதாவது, பிறர் பொருளை எடுப்பது தவறு என்று புரியாது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். வெளியே அழைத்துப்போவதற்கு முன்பே, `இன்னொருவர் வீட்டுச் சாமான்களில் கை வைக்கக்கூடாது!’ என்று எச்சரித்து விடுங்கள்.

    அதேபோல், மற்ற குழந்தைகளின் விளையாட்டுச் சாமான் ஒன்றை எடுத்துக்கொண்டு, தன்னுடையதுதான் என்று அடம் பிடிக்கிறானா? `மானம் போகிறதே!’ என்று குழந்தையை அடித்தோ, திட்டியோ செய்வதைவிட, `உனக்கும் இதேமாதிரி வாங்கித் தருகிறேன்!’ என்று நல்லவிதமாகச் சொல்லலாம்.

    அப்படியும் மசியாவிட்டால், பேச்சை மாற்றுங்கள். குழந்தைகள் கவனம் அதிக நேரம் ஒன்றில் நிலைத்திருக்காது. `ஜூவில அன்னிக்கு சிங்கம் பாத்தோமே!’ என்று சம்பந்தம் இல்லாது எதையாவது ஆரம்பியுங்கள். அவ்வளவுதான்! அழுகை மாறி, உற்சாகம் பீறிடும் குழந்தையிடம்.

    கடைவீதியில் பார்ப்பதை எல்லாம் கேட்கிறானா? `உனக்குத்தான் வீட்டில் நிறைய இருக்கிறதே!’ என்று சொன்னால் சமாதானமாகிவிடுவான்.

    ஒரு கடைக்காரர் என் நான்கு வயது மகனிடம், `இது வேணும்னு அம்மாகிட்ட கேளு!’ என்று ஏதோ விளையாட்டுச் சாமானைக் காட்டி, தூண்டிவிட்டார். குழந்தை கேட்டால், தாய் மறுப்பது கடினம் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.. அவனோ, `ஆத்தில நெறை..யா இருக்கு!’ என்று பதிலளிக்க, அவர் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார். எனக்கு ஒரே பெருமை. `சமத்து!’ என்று அவனை வாயாரப் பாராட்டினேன் — அவர் தலைமறைந்ததும்!

    ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைகளும் உயிரும், உணர்ச்சியும் கொண்டவை. அதனால்தான் தம் கரடிப் பொம்மையையும், விளையாட்டுக் காரையும் சரிசமமாகப் பாவித்துப் பேசி விளையாடுவார்கள். இதில் அசட்டுத்தனம் எதுவுமில்லை. இந்தக் குணத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    கதை:

    என் பேரனுக்கு மூன்று வயதானபோது, டவுனுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். திடீரென்று பெரிதாக அழுதான். நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரில் காலைக் கிழித்துக் கொண்டதில், ஆழமான காயம்.

    நடந்தது தன் தவறா, இல்லையா என்று புரியாது, குற்ற உணர்ச்சியோ (`அடி கிடைக்குமோ?’) அல்லது அவமானமோ எளிதில் அடையும் பருவம் இது. அதனால், பழியைத் திசைதிருப்பி விடுதல் நன்று.

    நான் பின்னோக்கி நடந்தேன். `இந்த ஸ்கூட்டரா ஒன் காலில ரத்தம் வர வைச்சது? எதுக்கு குழந்தை போற வழியில நின்னே?’ என்று வீராவேசமாகக் கேட்டபடி, அதை நான்கு போடு போட்டேன். அவன் அழுகை மறைந்தது. வலியை மறந்தான்.

    என் போக்கைப் பார்த்து, சில இளைஞர்கள் தம் கண்களையே நம்ப முடியாது வெறித்தனர்! `பார்த்தா நார்மலா இருக்கா! வாகனத்தோட சண்டை போடறாளே! ஒரு வேளை, லூசோ?’ என்று அவர்கள் நினைத்தது எனக்குப் புரிந்தது.

    அவர்களுக்காக ஸ்கூட்டருக்கு இன்னும் இரண்டு அறை விட்டு, `ஒன்னோட வலி சரியாப் போச்சு!’ என்று குழந்தையிடம் கூவினேன். என் வார்த்தைகளை நம்பி, நொண்டியபடி நடந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவசரமாக, பிளாஸ்திரி வாங்கி ஒட்டினேன்.

    சில குழந்தைகள் குளிக்கப் படுத்துவார்கள். `ஒன்னோட வாத்து குளிக்கணுமாம்!’ என்று குளியலறைக்குப் போனால், குழந்தையும் ஆர்வத்துடன் பின்னால் வருவான்.

    ஏழிலிருந்து பதினோரு வயதுவரை வேறு மாற்றங்கள். தாழ்வு மனப்பான்மைக்கும், சுறுசுறுப்புக்கும் இடையிலான போட்டி. இந்தப் பருவத்திலும் பெற்றோர் தொடர்ந்து, `நீ புத்திசாலி. நல்ல பையன்!’ என்று (அளவோடு) பாராட்டினால், தன்னம்பிக்கை வளரும். பிறருடைய மன ஓட்டம் புரியத் தொடங்கும். `இப்படிச் செய்தால் இன்னது நடக்கும்,’ என்ற தெளிவு பிறக்கும். தான் அடித்தால் பிறருக்கு வலிக்கும், இன்னொருவர் பொருளை அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்றெல்லாம் புரியும்.

    பதினோரு வயதுக்குமேல் தனக்குரிய வேலை, தனது நிலை, தான் ஆற்றவேண்டிய பங்கு முதலியவை தெரிய வேண்டும். அப்போதுதான் பொறுப்பும், அதை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமும் ஏற்படும். ஆனால், நான்கில் ஒருவர்தான் அறிவிலும், எண்ணங்களிலும் முதிர்ச்சிகொண்ட இந்த நிலையை அடைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    `எனக்கு வேலை செய்யப் பிடிக்காது அதனால், என் குழந்தைகள் வேலை செய்தாலும் எனக்கு மனசாகாது,’ என்று கூறும் தாய், தன்னையுமறியாது குழந்தைக்குத் தீங்கு இழைக்கிறாள். தலைமைப் பொறுப்பு இவர்களுக்கு எளிதில் கைவராது.
    ஒரு குழந்தை வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளும்போது, அதைப் பெரிதுபடுத்தி, ஏளனம் செய்தால் குழப்பம்தான் விளையும். உதாரணமாக, பொது இடங்களில், இரண்டு வயதுக் குழந்தை கைகால்களை உதைத்துக்கொண்டு அழலாம், `ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடு,’ என்று. வயதுக்குரிய நடத்தைதான் அது. அதற்காக நாம் அவமானப்படத் தேவையில்லை. பசி, தூக்க வேளையில் வெளியில் அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். அதுபோல், இடியோசை கேட்டு குழந்தைகள் பயப்பட்டால், `சும்மா இடி! மழை வரப்போறது,’ என்று வானிலை அறிக்கை விட்டால், புரிகிறதோ, இல்லையோ, சமாதானமாகிவிடுவார்கள்.

    ஆனால், பத்து வயதுச் சிறுவன் அப்படி நடந்துகொண்டால், எங்கோ தவறு விளைந்திருக்கிறது என்று அர்த்தம். தாய் தந்தையரின் ஓயாத சண்டை, குழந்தையை அவர்கள் நடத்தும் முறை, வீட்டுக்கு வெளியே குழந்தை அடையும் அனுபவங்கள் — இப்படி எத்தனை காரணங்கள் இல்லை, குழந்தையின் மனவளர்ச்சியைத் தடை செய்ய!

    சிறுபிள்ளைத்தனம் கொண்ட பெரியவர்கள் அந்தந்த வயதுக்கேற்ப வளர்ச்சி அடையாது இருந்திருப்பார்கள். பழையதை அலசி, தடைகள் ஏற்படக் காரணமாக இருந்தவைகளை ஏற்றாலே தெளிவும், மனப்பக்குவமும் அடையலாம். ஆனால், கடந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. நிகழ்காலத்திலேயே கவனம் கொண்டிருப்பவன்தான் முன்னேறுகிறான்.

    தொடருவோம்

    Share
  • தமிழா தமிழா…தமிழ் பேசு!

    -தமிழ்நேசன் த.நாகராஜ்

    தமிழா தமிழா…தமிழ் பேசு!
    அழகாய்க் கனிவாய்த் தமிழ் பேசு
    அரும்பெரும் ஊற்றாய்த் தமிழ் பேசு
    அழிவில்லாத் தமிழில் நீ பேசு
    அறிவொளியாக மிளிரத் தமிழ் பேசு    tamila tamila

    உணர்வாய் உயிராய் தமிழ் பேசு
    உண்மைத் தன்மையில் தமிழ் பேசு
    ஊழிவெல்லத் தமிழில் நீ பேசு
    உன் திறமைகள் வளர்த்திடும் தமிழ் பேசு

    பாரதி எழுச்சியுடன் தமிழ் பேசு
    பாவலர் எழுதியளித்த தமிழ் பேசு
    பழியில்லாத் தமிழில் நீ பேசு
    பலசிறப்பு உனக்களிக்கும் தமிழ் பேசு

    வள்ளுவன் குறளாய்த் தமிழ் பேசு
    வற்றாத நேசிப்புடன் தமிழ் பேசு
    வழி தந்த தமிழில் நீ பேசு
    வண்ணமாய் ஒளிரவே தமிழ் பேசு

    தீண்டாமையை ஒழித்த தமிழ் பேசு
    தீவாய் நீவாய்த் தமிழ் பேசு
    தீக்கதிராய்த் தமிழில் நீ பேசு
    தீங்கனியின் இனிமையாய்த் தமிழ் பேசு

    தமிழா தமிழா…தமிழ் பேசு!!

     

    Share
  • ’மழை’ புத்தகம்!

    -கவிஜி 

    திறக்காத ஜன்னலுக்குள்ளும்
    கசிந்துருகும் துளிகளின்
    வட்டங்களில் வளைதல்
    திரும்புதலென
    மழையின் மாயங்கள்…!

    கவ்விய போர்வைக்குள்
    பட்டுத் தெறிக்கும்
    புது வாசமென
    அப்பிக் கொண்ட கருமேகப்
    பிழிதலாக மழையின் வேகங்கள்…!

    விரட்டி வரும்
    தாகங்களின் நூலிடை வெளிகளாகத்
    தொட்டுத் தொட்டுப் பட்டுப் படரும்
    பூமியின்
    சாயமென மழை சாட்சிகள்…!

    இதுவரைக் கேட்காத
    சத்தத்தில் இன்றைய
    மதிய மழைச்
    சாரலே அல்லாத
    நெடுந்தொடர் எனச்
    சில்லிட்ட நினைவுகளை
    உணர்ந்த போது
    வாசித்து முடித்திருந்தேன்
    “மழை’ புத்தகத்தை…!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 34-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு.யெஸ்ஸெம்கே-வுக்கும், இதனைப் போட்டிக்கு ஏற்றது எனத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி.

    helmet person

    வாகனம் ஓட்டும்போது அணியவேண்டிய தலைக்கவசத்தைப் பாதசாரியாய்ச் செல்லும்போதும் அணியவேண்டிய அவசியம் வந்துவிட்டதா? ’தனிமனிதப் பாதுகாப்பு’ அவ்வளவு தூரம் கேள்விக்குறியாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோமா? என்றெல்லாம்  நம்மை யோசிக்க வைக்கின்றது இப்புகைப்படம்.

    சரி…இந்தக் காட்சியை நம் கவிஞர்கள் எப்படி அணுகியிருக்கின்றார்கள் என்று அறிந்துவருவோம்! 

    ***

    தற்காப்புக்காகத் தலைக்கவசமும், ஆணுடையும் அணிந்து செல்லும் அணங்கொருத்திக்கு அருமையான அறிவுரைகளை அள்ளி வழங்கியுள்ளார் திருமிகு. லட்சுமி. 

    …நடந்து போனாலும்
    இலஞ்ச மேம்பால இடிகற்கள்
    தலைமேல் தாக்குமம்மா!
    தலைக் கவசம்தான்
    தங்கத்தமிழ் நாட்டிற்குத்தான்
    இன்று முதல் தேவையம்மா!
    […]
    பகட்டு ஆடை உலகமில்லை
    ஆணைப் போல வேடம் தரிக்க
    ஜீன்ஸ் மட்டும் போதாது!
    பொருத்தமில்லா உடையனைத்தும்

     தமிழ்நாட்டு இயற்கைக்கு
     பொருத்தமில்லை!
    உடலாலே நோய் பலவும்
    பொருத்தமில்லா உடையாலே 
    ஏன் வருந்தி அழைக்கின்றாய்?
    பாலியல் தொல்லை அகல
    பாங்காய் நீயும் உடை உடுத்து!
    மது போதை  பேய்களினால்
    உண்டாகும் தொல்லை  
    அனைத்தும் களைந்திட
    தற்காப்புக் கலை பழகிடுவாய்!
    புவனமதைக் காத்திடுவாய்!
    ஆசைப்படுத்தும் பொருள் 
    மோகமில்லை
    […]
    பெண்ணென்ற பெருமையெல்லாம்
    சலங்கை அணிந்த பாதம்
    மட்டும் இல்லையம்மா!
    பிறர் மெச்ச வாழும்
    வாழ்க்கை உண்மை உலகை
    காட்டிடுமே!
    ஆண் சமுதாய அடித்தளமே
    ஆணித்தர அன்பில்தான்!
    ஆணி வேரின் பிடியை
    உந்தன் உள்ளங்கையில்
    இறுக்கிப் பிடித்தால்
    புவி முழுவதும்
    சொந்தமாகுமே!
    உன்னால் முடியும் என்றே
    உலகை நீ நடத்த
    துயரங்களைத் துடைத்துவிடு!…

    ***

    விலையற்ற மனிதஉயிர்களைக் கண்போலக் காத்துநிற்கும் தலைக்கவசத்தை மடியின்றி அணிந்திடுவீர் மாந்தர்களே! என்று நல்லுரை நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உயிரதைக் காக்கும் கவசமதை
    உடலில் அணியச் சோம்பலினால்
    உயிரை யிழக்கும் மனிதர்முன்
    உறுதுணை யாக்கிடு அதையணிந்தே,
    பயிரது சிறிதாய் இருக்கையிலே
    பாது காக்கக் கற்றுவிடு,
    உயிர்தான் உயர்ந்தது வாழ்வினிலே
    உணர்ந்ததைக் கொண்டிடு கருத்தினிலே…!

    ***

    தலைக்கு வரும் துன்பம் தீர்ப்பது தலைக்கவசம்; மலைபோல் வாழ்வில் வரும் துன்பம் தீர்ப்பதோ மனக்கவசம் என்று சொல்லும் திரு. இளவல் ஹரிஹரன், உலகத்தோடு ஒட்ட ஒழுகு பெரியோர் சொன்னபடி! உன் வாழ்வில் எல்லாம் நடக்கும் நல்லபடி! என்கிறார்.

     

    நடைபோடு நடைபோடு
    நன்மைதீமை பகுத்துணர்ந்து
    நடைபோடும் பாதையெலாம்
    நல்லவர்க்கெனும் வகையோடு.

    மேடுபள்ளம் இடறவைக்கும்,
    மிகக்கவனம் நீகொள்ளு!
    காடுவழி மலையெனவும்
    கண்களுக்குத் திரைபோடும்,

    வாழ்க்கையிங்கு வாழ்வதற்கு,
    வழிதவறிப் போகவல்ல!
    […]

    தலைகாக்கும் கவசந்தான்
    தனக்கான ஒருவழி,
    நிலைகாத்துக் கொள்ளவோ
    நிறையவழி இங்குண்டு.

    மலைபோல இடர்வரலாம்
    மாறாத மனக்கவசம்
    கலையாத கவசமெனக்
    காலமெலாம் காத்துநிற்கும்.

    உலகத்தில் உனக்கென்றே
    ஒருவழி,அது நிச்சயமாய்
    உலகத்தோடொ ழுகுகின்ற
    உன்னதந்தரும் வழியாகும்.

    பலபெரியோர் அனுபவத்தால்
    பார்த்துவந்த வழியாகும்
    வலம்வந்தே நடைபோட்டால்
    வாழ்க்கையெலாம் சொர்க்கமன்றோ!

    *** 

    உயிருக்கு உலை வைக்கும் ஆபத்துக்களிலிருந்து தலையைக் காக்கத் தலைக்கவசம் அணிவது மானுடனின் தலையாயக் கடன் என்கிறார் திருமிகு. பா வானதி வேதா. இலங்காதிலகம்.

    உலை வைக்க உயிருக்கு
    அலைவது போல திரிகிறார்.
    தலை திருப்பிப் பார்த்திட
    தலைக்கவசமணிந்தாலும் மறக்காதே நீ
    மூன்று வயதிலேயே தொடங்குகிறாரிங்கு
    மூச்சை தலையைக் காப்பாற்ற.
    மூக்கணாங்கயிறு போன்றது தலைக்கவசம்.
    மூக்குக் கண்ணாடியாய் அணிந்திடலாம்.

    நேராக நிமிர்ந்த பார்வையோடு
    தேரென்று நினைப்பிலவசரமாய் ஓட்டுவார்.
    கூர்மையாய் நினைத்துப் பின் பற்று
    பார்! நமது காப்பிது.
    அலட்சியம், அலுப்பு அடைவது
    இலட்சிய வாழ்வைத் தறித்திடும்.
    பாதையில் நம்மைக் காத்தல்
    பாதசாரி பயணியின் கடன்.

    *** 

    தேன்தமிழ்ச் சொல்லாலே அழகிய பாச்சரம் தொடுத்துள்ள கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

    உலகில் வாழும் பலதரப்பட்ட மாந்த இனங்களுக்கிடையே, சொந்த மண்ணிலேயே பாதுகாப்பற்ற இனமாய் மாறிவருகின்றது நம் தமிழினம். ஆம்! இனவெறியும், மதவெறியும் தமிழர்களைக் கூறுபடுத்தியும் வேறுபடுத்தியும் நாதியற்றோராய் மாற்றிவரும் நிலையை என் சொல்வது!

    இந்த அவலத்தைக் கவலையோடு தன் பாவில் பதிவுசெய்திருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    நட்ட நடுச் சாலையில்
    உச்சி வெயில் வேளையில்
    வாகனம் ஏதுமின்றித்
    தலைக் கவசத்துடன் செல்லும் நீ
    நிச்சயமாய்த்
    தமிழ்ச் சிறுவனாய்த்தான் 
    இருக்க வேண்டும்

    முகத்தை மூடிக் கொண்டு
    உலவ வேண்டிய 
    துர்பாக்கிய நிலை
    நமக்கு மட்டுமே
    நிகழ்கிறது

    இலங்கையின்
    குடிமகனாய் இருந்தாலும்
    அரபு நாட்டிற்குப்
    பணியாளாய்ச் சென்றாலும்
    காவேரிக் கரையோரம்
    நடந்து சென்றாலும்
    முல்லைப் பெரியாற்றில்
    குளித்தெழுந்தாலும்
    ஆழ்கடல் நடுவே
    மீன் பிடிக்க நினைத்தாலும்
    வாழ்ந்து தொலைக்க
    மரக் கூலியாய் சென்றாலும்
    நம்மை நோக்கியே
    இரக்கமற்றவர்களால்
    ஏவுகணைகள் எய்யப்படுகிறது

    தங்கள் வணிகத் தேவைக்கேற்ப
    உலக நாடுகள் 
    நமக்காக அனுதாபப்படுகின்றன
    இல்லையேல் 
    அலட்சியப்படுத்துகின்றன
    இந்தியத் தாய் நாடும்
    விதிவிலக்கல்ல என்பதே
    வேதனையின் உச்சம்!

    தமிழர்
    உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு
    நாதியற்றுப் போன இனமென
    நாளைய விக்கிபீடியா
    நம்மை வர்ணிக்குமோ?

    ***

    நாம் நிதானத்தோடு சென்றாலும் எதிராளியும் அவ்வாறுதான் வருவான் என்பது என்ன நிச்சயம்? ஆகவே, ”எனதருமை மக்களே! அணிந்திடுவீர் (தலைக்) கவசம்; இல்லையேல் நடந்துவிடும் உமக்குத் திவசம்!” என வேடிக்கையாய் வாழ்க்கை நடைமுறையைப் படம்பிடித்துக் காட்டியுள்ள திரு. மெய்யன் நடராஜின் பின்வரும் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவுசெய்துள்ளேன்.

    நாம் நிதானத்தோடு நடந்தாலும் 
    நம்மில் நிதானமாய் நடக்காதவர் முன் 
    நடக்க நடமாடும் நமக்குத் தேவை 
    தலைக்கவசம்.
    தவறின் நடக்க நேரிடும் திவசம்.

    ***

    கவிதைப் போட்டியில் கருத்தோடு பங்கேற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்! தொடர்ந்து உங்கள் பங்களிப்பை ஆர்வத்தோடு  தந்துவாருங்கள்!

     

    Share
  • நேற்று…

    — மாதவன் ஸ்ரீரங்கம்.

    புவன் எம்ஜியாருடன் கனவில் காப்பி குடித்தபடி பேசிக்கொண்டிருக்க, பட்டென்று கிறிஸ்டோபர் நோலன் அவனை துப்பாக்கியால் சுட்டபோது, அதிலிருந்து டுமீல் ஓசைக்கு பதிலாக அவன் மொபைலின் ரிங்டோன் ஒலித்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது. பாண்டித்துரைதான் அழைத்திருந்தான். எடுப்பதற்குள் நின்றுவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது நிறைய வியர்த்திருந்தது.

    ஒரு பேச்சிலர் அறைக்குண்டான அனைத்து அம்சங்களுடன் அலங்கோலமாய் கிடந்தது அறை. நாளை ஞாயிறு. நாளைக்காவது சுத்தம் செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டான். பாத்ரூம் இதாயாதிகளை முடித்துக்கொண்டு, தானே தயாரித்த தேநீருடன் மொட்டைமாடிக்கு வர, காலை ஒன்பதுமணி வெயில் இதமாகத்தான் இருந்தது.

    கீழே நகரம் பெரிய சந்தடிகளின்றி இருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய டிஷ் ஆண்டனாக்களும் கேபிள் வயர்களும், பாதியில் துருத்திநிற்கும் பில்லர்களுமாக, ஒரு டிஜிட்டல் உலகின் சகல சாத்தியங்களுடன் விளங்கியது. நகரத்தில் நிறைய அலைக்கழிந்து, நெருக்கடிகளை எல்லாம் கடந்துதான் இந்த அறையை அடையமுடிந்தது. பில்டிங்கின் முதலாளி ஒரு அப்புராணி. இத்தனைகாலமாக இத்தனை சொத்துக்களுடன் இந்த நகரத்தில் அவர் குப்பைகொட்டுவது குறித்து அவனுக்கு ஆச்சரியம்தான். மிகக்குறைந்த வாடகைக்கு இந்த அறையைக்கொடுத்திருக்கிறார். என்ன, அவ்வப்போது கரண்ட்பில்லோ வீட்டுவரியோ ஆன்லைன் ஷாப்பிங்கோ செய்வதற்கு இவன் உதவியை எதிர்பார்ப்பார். அவ்வளவுதான்.

    முன்பு தட்டுமுட்டுச்சாமான்கள் அடைத்துவைத்திருந்த இடம் அது. இன்னும் அதன் பழைய வாசனைகள் எஞ்சியிருக்கின்றன. ஆனால் இந்த அறையும் மொட்டைமாடியும் சொர்க்கம். வெக்கைப்போதில் காற்றாட வெளியில் படுத்துக்கொள்ளலாம். துவைத்த துணிகளை சவுகரியமாக காயப்போடலாம். மிக முக்கியமாக வார இறுதியில் நண்பர்களுடன் பீர் அருந்தலாம். சத்தமாக சிரித்துக் கும்மாளம் போடலாம். டைரி எழுதலாம். டைரி நினைவு வந்ததும் இன்றைய நாளின் வேலைகள் பற்றி யோசனை வந்தது. எழுந்து கோப்பையை கழுவிக் கவிழ்த்துவிட்டு டைரியை எடுத்துப்புரட்டினான்.

    நேற்று சந்தித்த கிளையண்டுகள் பற்றிய குறிப்புகளிருந்தன. இன்று சனிக்கிழமை. இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்று தேடினான். எல்லாமே மனதில் பாடமாக இருப்பதுதான். என்றாலும் ஒருமுறை தவறுதலாக பிக்ஷாட் ஒருவரின் அப்பாய்ன்மெண்ட்டை இழந்துவிட்டான். மிகப்பெரிய அமவுண்டிற்கு பாலிஸி கிடைத்திருக்கவேண்டியது சிறு பிழையால் தவறிவிட்டது. அன்றிலிருந்துதான் புவனுக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டாயிற்று. ஒவ்வொரு நாளிலும் என்னென்ன நிகழ்ந்தன, யாரையெல்லாம் சந்தித்தோம், மறுபடி அவர்களை சந்திக்கவேண்டிய நாள் கிழமை நேரம் எல்லாம் அதில் குறித்துவைக்கத் துவங்கினான்.

    இன்று மங்களம் ஜுவல்லர்ஸ் சித்ரஞ்சனை பார்க்கவேண்டும். மதியம் 3 மணிக்குத்தான் சொல்லியிருக்கிறார். அவன் பணிபுரியும் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வெளியில் நல்ல பெயரும் விளம்பரமும் இருந்தன. அதை சரியாக மார்க்கெட் செய்யும் வித்தையும் அதற்கான பயிற்சியும் இவனுக்கு இருந்தது. இருந்தும் சற்று கடினமாகவே ஓடுகிறது பிழைப்பு. இந்த வாழ்வு ஒரு பகாசுரன். எத்தனை சம்பாதித்தாலும் லபக் லபக்கென்று விழுங்கிவிட்டு, இன்னும் கொண்டா என்று கேட்கிறது.

    என்னவோ இன்று வேலை பார்க்கவே தோன்றவில்லை. ஒரு விடுமுறைக்கொண்டாட்ட மனநிலைதான் இருந்தது. அவன் தயாராகி தன் டிஸ்கவர் பைக்கில் வெளிவந்தபோது சாலை நெறிசலின்றி வெறிச்சென்று கிடந்தது. சிக்னல்களிலும் அதிகம் கும்பலில்லை. கடைகள் ஷோரூம்கள் எல்லாம் ஷட்டர் இறங்கி இருந்ததையும், பள்ளிச்சீருடையில் ஒரு குழந்தைகளைக்கூட காணவில்லையே என்றும் வியந்துகொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி எடுத்துப்பார்க்க பாண்டித்துரைதான்.

    “சொல்லு மச்சி எங்க இருக்க”

    “ஏண்டா கூ…. நேத்துபூராம் நீ எங்கபோய்த்தொலஞ்ச”?

    ” என்னடா லூசுமாதிரி பேசுற ? நேத்து நைட்டு நம்ம பார்ல நாம ஒன்னாத்தான இருந்தோம்”?

    “மூதேவி அது முந்தாநேத்துடா. நேத்து எங்கபோன ? த்தா எத்தனவாட்டி போன் பண்ணேன் ? அப்புடியென்ன பிஸி மசிறு ஒனக்கு”?

    புவனுக்கு குழப்பமாக இருந்தது. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருக்க, பாண்டித்துரையே மறுபடிப் பேசினான்.

    “சரி விடு இப்ப நீ எங்கயிருக்க”!

    “இப்பத்தாண்டா ரூம்லருந்து கெளம்புனேன். மெஸ்ல சாப்டுட்டு அப்டியே ஒரு கிளையண்ட்ட பார்க்கனும். நீ எங்கருக்க”?

    “நா நம்ம சேட்டன் கடைலதான் இருக்கேன் வா”

    சரியென்று அழைப்பைத்துண்டித்து மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு பைக்கை நகர்த்தினான். நிரம்ப யோசனையாக இருந்தது. என்னாயிற்று பாண்டிக்கு ? நேற்று இரவு இருவரும் ஒன்றாகத்தான் பீர் சாப்பிட்டோம். பிறகு ஏன் குழப்புகிறான் ? நேற்றைய பீர் இன்னும் தெளியவில்லைபோல என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். பயங்கரமாக பசித்தது. மெஸ்ஸில் நிறுத்தி எதையேனும் அள்ளித்தின்றுவிட்டுப் போகலாமா என நினைத்தபடி மெஸ் வாசலில் நிறுத்த கேட் பூட்டியிருந்தது. முதலியாருக்கு உடம்பு சரியில்லை போல. சமீபமாக இப்படித்தான் அடிக்கடி மூடிவிட்டுச் சென்றுவிடுகிறார் பாவம். சரி இன்று வடையும் டீயும்தான் விதி என்று வழக்கமான சேட்டன் கடைக்குச்சென்று நிறுத்த வாசலிலேயே சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான் பாண்டித்துரை. அவன் முகம் கடுப்புடனிருந்தது.

    மாஸ்டரிடம் ஒரு லைட் டீ சொல்லிவிட்டு வடையொன்றை எடுத்துக்கொறித்தான்.

    “ஏண்டா நேத்து போன்பண்ணப்ப எடுக்கல”? என்றான் மறுபடி.

    நிஜமாகவே புவனுக்கு இம்முறை கோபம் வந்துவிட்டது. கூடவே சிரிப்பும். சட்டென்று தன் மொபைலை எடுத்து கால் ஹிஸ்டரியை பார்த்துவிட்டு பாண்டியிடம் கொடுத்தான்.

    ” த்தா போன் பண்ணிருந்தா மிஸ்டு கால் லிஸ்ட்ல இருக்கும்ல ? எங்கன்னு காட்டு”?

    பாண்டி மொபைலை வாங்காமலேயே,

    “ஆமா பெரிய விஞ்ஞானி. லிஸ்டை டெலிட் பண்றதெல்லாம் மேட்டராடா ? சரி அப்டி எங்கதான் போன. எதாச்சும்…..”?

    புவனும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டான்.

    ” ரெண்டு பீர்தாண்டா அடிச்ச. இன்னுமா தெளியல? சரி விடு. நா ஒரு கிளையண்ட்டை பார்க்கனும். முடிச்சிட்டு சாயந்திரமா கால் பண்றேன்” என்று ஹெல்மட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிய புவனை ஆச்சரியமாகப்பார்த்தான் பாண்டி.

    “ஏண்டா ஞாயித்துக்கெழமைல கூட எவனையும் வீட்ல நிம்மதியா இருக்கவுடமாட்டியாடா ? எப்பப்பாரு பாலிஸி பாலிஸின்னு”

    “டே லூஸு. இன்னிக்கி சனிக்கிழமைடா. இந்த சண்டேதான் திருணாமலை போலாம்னு பிளான் பண்ணிருந்தமே”

    “யப்பா சாமி. இப்பவாச்சும் நெனப்பு வந்துச்சே. த்தா பிளானைப்பூராம் சொதப்பிட்டு மொக்கத்தனமா சமாளிக்காத”

    அப்போதுதான் புவன் கடையிலிருந்த தேதியைப்பார்த்தான். ஞாயிறு என்றிருந்தது. அவனுக்கு என்னவோ தோன்ற செய்தித்தாள்களை எடுத்துப்பார்க்க அதுவும் ஞாயிற்றுக்கிழமை பதிப்புத்தான் வந்திருந்தது. அவசர அவசரமாக தனது மொபைலை எடுத்து பரிசோதிக்க, கடைசியாக வெள்ளிக்கிழமை பேசிய தவறிய அழைப்புகள் மட்டுமே இருந்தன. இன்று காலை தவறிய பேசிய பாண்டியின் அழைபுகள் இருந்தன. சனிக்கிழமை தேதியில் ஒன்றுகூட பதிவாகவில்லை. புவனுக்கு சற்று பீதியுண்டானது.

    பாண்டியை கடைக்குள் இழுத்துச்சென்று பெஞ்சில் அமர்ந்து பதட்டத்துடன் விஷயத்தைக்கூறினான்.

    “மச்சி என் நேத்தை காணம்டா”

    பாண்டி பகபகபகவென சிரித்தான்.

    “என்னடா ஜட்டியக்கானோங்குற மாதிரி சொல்ற”?

    புவன் வெளிறிப்போய் கிடந்தான்.

    ” மச்சி சீரியஸாடா. நேத்து முழுக்க என்ன நடந்துச்சி என்ன எதுமே மைண்ட்ல இல்லடா. கடைசியா வெள்ளிக்கிழமை நாம ஒன்னா சரக்கடிச்சது ஞாபகத்துல இருக்கு. அப்பறம் இன்னிக்கி நீ போன் பண்ணப்ப எழுந்ததுதான். நடுவுல நேத்து முழுக்க”…..

    புவன் குரலிலிருந்த சீரியஸ்தனம் பாண்டிக்கு உறைத்திருக்க வேண்டும். ஆறுதலாய்க் கூறினான்.

    “விட்ரா மச்சி. நேத்து நைட்டு என்னை விட்டு தனியா போய் புல்லா சரக்கடிச்சிருப்ப. நாள் முழுக்க மட்டையாயிருப்ப. விடு இதெல்லாம் மேட்டரா”

    “போடா கூ…. . எவ்ளோ மட்டயானாலும் ரெண்டு ராத்திரி ஒரு பகலாடா தூங்குவாங்க? இல்ல உன்னவிட்டி என்னிக்காச்சும் தனியா சரக்கடிச்சிருக்கனா”?

    புவன் கேட்டதில் லாஜிக் இருந்தது. அவன் தனியாக என்றுமே குடித்ததில்லை.

    “இப்ப என்னடா செய்யறது? மங்களம் ஜுவல்லர்ஸ் அப்பாய்ன்மெண்டும் கோவிந்தா. அதான் ரோட்ல டிராபிக் ப்ரீயா, கடைகன்னியெல்லாம் மூடிக்கெடந்துருக்குபோல”

    இப்போது குழப்பம் இருவருக்குமாய் ஆகிப்போனது.

    “ஆபீசுக்கு போன் அடிச்சிப்பாரேன் மச்சி” என்றான் பாண்டி.

    “அட போடா. ரெண்டுமாசமா டார்கட் அச்சீவ் ஆகலைன்னு மேனேஜர் கடுப்புல கெடக்கான். எதுனா பாலிஸியோட வந்தா ஆபீஸ் பக்கம் தலையக்காட்டுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான்”

    சட்டென்று யோசனை வந்து, பேகில் இருந்த டைரியை புரட்டினான். அதிலும் வெள்ளிக்கிழமைதான் கடைசியாக பதிவாகியிருந்தது.

    “சரி அதை விடு. எப்டியும் இன்னிக்கி லீவுன்னு கன்பர்ம் ஆயிருச்சில்ல. வா ஆளுக்கொரு பீர வாங்கிட்டு உன் ரூமுக்கு போயிருவோம்”

    பாண்டி கூறியதுதான் சரியென்று தோன்றியது. இருவரும் சற்றுநேரத்திற்கெல்லாம் புவன் அறையை அடைந்தார்கள். படியேறுகையில் மூடிக்கிடந்த பில்டிங்கின் கடைகளை பாவமாக பார்த்தான். அறைக்குள் நுழைந்ததும் முதல் காரியமாக தினசரி காலண்டரை கவனித்தான். அது ஞாயிற்றுக்கிழமையை காட்டியது. எப்போதும் முதல்நாள் இரவே தேதித்தாளை கிழிக்கும் வழக்கம் வைத்திருந்தான் புவன். கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு கிழித்திருந்தால் சனிக்கிழமைதானே இருக்கவேண்டும்?

    “டே என்னடா. எதுக்கு குப்பையக் கெளறிட்ருக்க”?

    பதில்கூறாமல் குப்பை டப்பாவைக் கவிழ்த்து தேதித்தாள்களை மட்டும் சேகரித்து சோதித்துப்பார்க்க, அதில் மற்ற அனைத்து நாட்களும் இருந்தன. நேற்றைய சனிக்கிழமையை மட்டும் காணவில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தான். ஊரிலிருக்கும் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களும் நேற்றுமுழுக்க இவன் அழைப்பை ஏற்கவில்லையென்று புகார் வைத்தார்கள்.

    ” மச்சி எனக்குப் பயமாயிருக்குடா. இந்த செலக்டீவ் அம்னீஷியா அல்ஜைமர்லாம் சொல்றாய்ங்களே.. அப்டி ஏதும்”

    “ச்சேச்சே.. அப்டிலாம் ஒன்னுமிருக்காது மச்சி. நீ கவலைப்படாத. நாளைக்கி நம்ம டாக்டர் பய ஹரீஷ பார்த்துருவோம். அப்டிலாம் இருக்காதுரா”?

    பாண்டி ஆறுதல் கூறினாலும் கூட, அவனுக்குமே உள்ளுக்குள் சற்று அச்சமாகத்தான் இருந்தது. ஒரு புத்தகத்தின் பக்கமொன்று தொலைந்ததைப்போல தொலைந்துவிட்டிருக்கிறது ஒரு நாள் ! அது வந்து சென்றதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாமல். யார் கண்டது, அது வாராமலேகூட இருந்திருக்கலாம்.

    இரண்டாவது பியரில் சற்றே மிதக்கத்துவங்கிய புவன் மறுபடிப் புலம்ப ஆரம்பிக்க, பாண்டி அவனிடம் சொன்னான்.

    “இப்ப நம்மகையில இருக்கு பாரு இன்னிக்கி. இதான் நம்முது. இத்தை தொலையாம பாத்துக்கிட்டா போதும் மச்சி”

    “அடப்போடா” என்று அவன் சலித்துக்கொண்டான். “சரி நா கேக்குறதுக்கு பதிக் சொல்லு மச்சி”

    மிக்சரை ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டபடி புவன், “கேளு”

    “சாதாரணமா ஒரு நாள்ல நீ என்னல்லாம் செய்வ”?

    ” ஏன் கேக்குற”?

    “சும்மா சொல்லு மச்சி”

    ” என்னா, எந்திரிப்பேன். குளிப்பேன், சாப்புடுவேன், வேலைக்கிப்போவேன். வீட்டுக்கு வருவேன். தூங்குவேன்”

    “சூப்பரு. நேத்து தொலையாம இருந்திருந்தாலும் நீ அதைத்தான செஞ்சிருப்ப”?

    சற்று ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னான்.

    ” ஆங்… ஆமாம். அதத்தான் செஞ்சிருப்பேன். ஏன் கேக்குற”?

    “இல்ல, ஒருவேளை உன் நேத்து தொலையாம இருந்திருந்தா, சி எம்மாவோ பி எம்மாவோ ஆயிருப்பியா? இல்ல ஐநாவுக்கு அதிபராயிருப்பியா”?

    ” டாய்”….

    ” அப்பறம் என்ன ? சும்மா பொலம்பாத மச்சி. நீ பெரிசா எதையும் இழந்திடல “

    “த்தா ஒனக்கென்ன வந்திச்சு ? போனது என்னோட நேத்துடா”

    “அதுஞ்சரிதான். ஒன்னு பண்ணேன். வேன்னா என் நேத்து சும்மாத்தான் கெடக்கும் மச்சி. அதை எடுத்துக்கயேன்” என்று கண்ணடித்துச் சிரித்தான் பாண்டி.

    புவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

    “ஆமா அப்புடித்தான் செய்யணும். ஆனா அப்டி நாளைக்கி உன் நேத்தை நா எடுத்துக்கிட்டா, என்னோட நாளையை என்னடா செய்யிறது”?

    ” ம்… நியாயமான கேள்விதான். . ஆங்… உன் நாளைய நா வச்சிக்கிறேன். ஆனா, அப்ப என் நாளை என்னாவும் மச்சி ? பேசாம அதை யாருக்குனா பிச்சை போட்ரலாமா”? என்று பாண்டி கேட்க,

    இருவரும் பயங்கரமாக வெடித்துச் சிரித்தார்கள். இறுதியாக பாண்டி, புவனிடம் சொன்னான்.

    “மச்சீ… இந்த உத்திரவாதமில்லாத வாழ்க்கையில நேத்துக்கும் இன்னிக்கும் நாளைக்கும் பெரிய அர்த்தமோ வித்தியாசமோ இருக்குதா என்ன” ?

    *

    Share
  • நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் உங்களின் முன்னே !
    1981ம் ஆண்டு என் வாழ்வினிலே மறக்க முடியாத ஆண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? என்னோடு பாதியாக என் வாழ்வின் சுகங்களை விடத் துக்கங்களை அதிகமாகப் பகிர்ந்து கொண்ட என் அன்பு மனைவி, இனிய தோழியை நான் மணந்து கொண்ட வருடமது. ஆனால் அதே வருடம் தன்னோடு மற்றுமொரு மிகப்பெரிய நிகழ்வைத் தாங்கிக் கொண்டது. ஆம் செப்டெம்பர் மாதம் 14ம் திகதி எனது மனம் கவர்ந்தவளை என் மனைவியாக்கிய பின்பு காலதேவன் சரி உனக்கொரு இன்பத்தை அளித்தேனே ஏன் நான் ஒரு துன்பத்தையும் அளிக்கக் கூடாது என்று எண்ணியோ என்னவோ எனது மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனை அதே வருடம் அக்டோபர் மாதம் 17ம் திகதி தன்னோடு விண்ணுலகிற்கு எடுத்துச் சென்று விட்டார். எனது திருமண வாழ்வின் 34 வருடங்களை கொண்டாடும் அதே வருடத்தில் என் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனின் 34 வது நினைவுதினத்தையும் கொண்டாட வேண்டும் என்பது அனைத்துக்கும் அப்பாற்பட்டவனின் நியதி போலும். வழமை போல கவியரசரின் பிறந்தநாளையும், நினைவுநாளையும் கவிதை பாடி உங்களோடு பகிர்ந்து கொள்வது போல இவ்வருடமும் மாபெரும் கவியரசனுக்கு இப்பாமரனின் சிறிய கவிதைமாலையைச் சமர்ப்பித்து வணங்குகிறேன்.
    அன்புடன்
    சக்தி

    கண்ணதாசன்

    தமிழன்னை
    மடியினிலே தவழ்ந்த
    அரும் பெரும் மைந்தர்களில்
    அளவிட முடியா
    ஆற்றலைப் பெற்றவனே !
    மலையரசித் தாயின் மைந்தா !
    எந்தன் மனதினிய வாசா !
    மாண்புமிகு கவிஞனே ! கண்ணதாசா !

    நேற்றொரு பொழுதினில்
    நெஞ்சினில் சுரந்திட்ட
    நேசமிகு கவிதையின்
    வாசமாய் கமழ்ந்தவன் நீ
    இன்றொரு கணத்தினில்
    இனித்திடும் நினைவுகளில்
    இயம்பிடும் கவிதைகளில்
    இனிப்பாய் தித்திப்பவன் நீ !

    நாளை இவ்வுலகினில்
    நான் வாழ்ந்திடும் நாள்வரை
    நீந்திடும் நினைவுகளில்
    நீக்கமற நிறைந்திடும் தமிழில்
    யாத்திடும் கவிதைகளுக்கெல்லாம்
    யாப்பிலக்கணமாய் வாழ்பவன் நீ !

    இலக்கணம் படித்தவனில்லை ஐயா !
    இலக்கியம் பயின்றவனும் இல்லை ஐயா !
    இயற்றிடும் பாக்கள் எல்லாம்
    கவியரசன் எனும் பள்ளியில்
    கண்ணதாசனின் நேசனிவன்
    கற்றுக் கொண்டதே கவியரசா !

    அன்றொருநாள் தமிழன்னை
    மனம் கனிந்து உதிர்த்திட்டாள்
    தன்கையிருந்த முத்துக்களில் ஒன்றை
    விழுந்தது அது சிறுகூடல் பட்டியெனும் ஆழியில்
    விசாலாட்சி எனும் சிப்பியின் வயிற்றில்
    முகிழ்த்த முத்தையா எனும் முத்தாய் !

    அப்படி என்ன அந்த
    அக்டோபர் 17ம் திகதிக்கு ஆசை ?
    அன்பன் உன்னைத் தான்
    அமரானாக்கிட கொண்டிட்ட ஆசை . .
    நிலவுக்குக் கூட ஒருநாள் அமாவாசை
    உனக்கு மட்டும், எப்போதும் பௌர்ணமி
    கற்பனைச் சிறகதனை விரிக்கும் போது
    வானுக்குக் கொண்டு செல்வது
    கண்ணதாசன் எனும் காற்றே !

    காதலென்னும் படகேறி
    கற்பனையில் பயணித்து
    சோகமெனும் அலை தாக்க
    தத்துவம் எனும் கரை சேர்க்கும்
    கலையுந்தன் கலையன்றோ
    ஞாலமிருக்கும் காலம் வரை
    ஞாபகம் விட்டகலா பாடல்கள்
    வடித்துத் தந்த கவியரசே !
    மறப்பதுண்டோ உனை நாமே !

    இறையடி இணைந்து நீயும்
    இற்றோடு மூன்று பத்தோடு
    நான்கு அகவைகள் கடந்ததய்யா !
    காற்றுப் புகும் இடமெலாம் உன்
    கானம் நிறைந்திடும் காலமிது
    புலம்பெயர்ந்து புவியெங்கும்
    நிலை கொண்ட எம் தமிழுறவுகள்
    காக்கின்றார் உந்தன் படைப்புகளை

    வளையும் எந்தன் விரல்களில்
    வழிந்திடும் அன்னைத் தமிழின்
    அலங்காரத்தின் அடிப்படை தந்தவனே !
    அர்த்தமுள்ள பல அனுபவங்களை
    அழகழாய் அன்னைத் தமிழில்
    ஆக்கியெமக்கு அளித்த கண்ணனின் தாசனே!

    மனசெல்லாம் நிறைந்திட்ட எந்தன்
    மானசீகக்குருவாம் கவியரசர் கண்ணதாசனே !
    வாழ்ந்திருக்கும் நாள்வரை மனதில் இருந்து
    வரம்தருவாய் கவிபாட கவிதைநேசனே !

    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கடவுள் தந்த இரு மலர்கள் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    கடவுள் தந்த இருமலர்கள் …

    கடவுள் தந்த இருமலர்கள்2கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் பிறந்த பாட்டு! கதையின் கருவை உள்வாங்கி கவிதையாக மொழிவதில் கைதேர்ந்த கவிஞர்கள் சிலரே! இதோ இருமலர்கள் … ஒன்று பாவை கூந்தலிலே… ஒன்று பாதை ஓரத்திலே… நாயகனின் கைப்பிடித்த நாயகியையும் கைவிடப்பட்ட நாயகியையும் குறிக்கும் சொற்களாக! பத்மினி, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன் மூவரின் இடையே முகிழ்த்த பாடலை,

    கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே

    என்று பாத்திரம் பேசுகிறது. கவிஞரின் பா திறமும் பேசுகிறது. மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் வார்த்தைக் கோலம்! பி. சுசீலாவுடன் இணைந்து குரல் தருகிறார் எல்.ஆர். ஈஸ்வரி.

    இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
    இதயம் என்றும் அமைதி பெறும்

    கடவுள் தந்த இருமலர்கள்கடவுள் தந்த இருமலர்கள்1இத்தகு காட்சியை வசனங்களால் வரைந்து காட்ட முடியுமென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டியிருக்கும். பக்குவமாய்,அற்புதமாய், ரத்தினச் சுருக்கமாக உவமைகளிட்டு உள்ளம் தொடுகிற கவிஞர் வாலி அவர்களை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?

    நல்லதோர் இனிய பாடல் என்றும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கும், காலங்களை வென்ற பாடலிது!

    மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் உயிரோட்டம் அது கதையை அப்பட்டமாய்ச் சொல்கிறது! பண்பட்ட நடிப்பால் பத்மினியும் புன்னகை அரசி கே.ஆர். விஜயாவும் இணைந்து மிளிரும் இனிய பாடலை இன்னொருமுறை கேட்கலாமே!

    கடவுள் தந்த இரு மலர்கள்
    கண்மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே
    [ கடவுள் தந்த இரு மலர்கள்]

    காற்றில் உதிர்ந்த வண்ணமலர்
    கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
    ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
    அலைகள் கொண்டு போனதம்மா
    பாவைக் கூந்தல் சேர்ந்த மலர்
    பருவம் கண்டு பூத்த மலர்
    பாசம் கொண்டு வந்ததம்மா
    பரிசாய்த் தன்னைத் தந்ததம்மா
    [ கடவுள் தந்த இரு மலர்கள்]

    அலையில் மிதந்த மலர் கண்டு
    அதன்மேல் கருணை மனம் கொண்டு
    தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
    தானே அதனைச் சேர்த்துக்கொண்டான்
    குழலில் சூடிய ஒரு மலரும்
    கோயில் சேர்ந்த ஒரு மலரும்
    இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
    இதயம் எங்கும் அமைதி பெரும்
    [ கடவுள் தந்த இரு மலர்கள்]

    காணொளி: https://www.youtube.com/watch?v=CH1eAJBQiwA

    https://www.youtube.com/watch?v=CH1eAJBQiwA

    Share
  • இலக்குமி

    கிரேசி மோகன்

    Laksmi

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
     நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
     சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
     தாரங் களின்தயவால் தான்”….

    ”உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
     பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
     சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
     காணலாம் பொன்மகளின் கால்”….

    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
     பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
     மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
     பாலின் நிறத்தில் பொலிவு”….

    “மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
     வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
     தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய
     வேலியைக் காக்கும்செல் வி”….

    “பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
     பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
     வீடு வரையுறவு வீதி வரைமனைவி
     காடு வரைநெற்றிக் காசு”….

    “அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில்
      நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம்
      தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை
      தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….

    ”வித்தைக்கு  வேண்டும்  வினயம்,  அதிதீர
     சித்தத்தில்  வேண்டும்  சரிசமம் -சுத்தத்தை
     வேண்டுவாள்  செந்திரு,  வாசல்  தெளிப்போர்க்கு
     யாண்டும்  வறுமை  இல”….கிரேசி மோகன்….

    Share
  • நெமிலி பாலா திரிபுரை!

    balaambika tripurasundari devi

    ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
    மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
    யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
    சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….கிரேசி மோகன்….

     

    இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க
    நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
    வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
    பாலை திரிபுரையின் போக்கு ….

    ஞமலி -நாய்

    ”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்…

    Share
  • நவராத்திரி நாயகியர் (6) சிருங்கேரி சாரதாம்பிகை  

    க. பாலசுப்பிரமணியன்

    Sri-Sharadamba-Sringeri 

     

    பாம்புகூடத் தவளைக்குக் குடை பிடிக்கும் !

    பாரினிலே அன்புக்குக் குரல் கொடுக்கும் !

    பாரதியின் ஆட்சியிலே அமைதி கிடைக்கும்

    பார்த்தவுடன் மனம் வியந்து நிற்க்கும் !!

     

    கங்கையிலே பொங்கிவரும் வெள்ளமென

    துங்கையிலே பொங்குகின்ற அருளமுதே !

    துவண்டுவிடும் மானிடருக்கென்றும்

    தோள்கொடுக்கும் தெய்வத்திருவே !

     

    அங்கமெல்லாம் தங்கமென ஒளிரும்

    அறியாமை அகமிருந்து விலகும் !

    அன்னையுன் பார்வை அருமருந்தே!

    ஆனந்தம் தந்துவிடும் அடிக்கரும்பே!!

     

    வேதத்தின் பொருளாக வந்தவளே

    பேதமின்றி அருளுகின்ற சாரதையே !

    ஆணவத்தை அழிக்கின்ற பார்வை

    ஆன்மிகத்தை அருளுமவள் பாதை !!

     

    ஆய கலைகள் அறுபத்தி நான்கும்

    அசைகின்ற விழிதன்னில் உருவாகும்  !

    அறிவும், கல்வியும் அவளாட்சி

    ஆனந்த பைரவியாய் அவள் காட்சி!

     

    யாழிசையும் இன்னிசையும் இணைசேர

    யாகத்துடன் வேதஒலி மேலோங்க

    பாரனைத்தும் இசைத்திடுவாள்  பாரதியே !

    பாதங்கள் போற்றிடவே  நாளெல்லாம் நற்கதியே  !!

     

    கதிரவனின் திசைமாற வரும் ராத்திரி

    கண்கள் சோர்வடைந்தால் பகலும் ராத்திரி !

    கண்ணோடு கண்ணோக்கி அவளைக் கண்டால்

    காலங்கள் மாறாமல் கண்களுக்கு நவராத்திரி !

    Share
  • அணு ஆயுதக் குறைப்புக்கு முற்பட்ட அமெரிக்க விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே

    ajay

    (1906 – 2005)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://youtu.be/QFd9dNf83Zo

    https://youtu.be/apgB_NR59ss

    https://youtu.be/1tQ2nqzR3Qs

    http://www.bing.com/videos/search?q=hans+bethe&qpvt=Hans+Bethe&FORM=VDRE

    ​+++++++++++++​


    ‘உலக விஞ்ஞானிகளே! மேற்கொண்டு அணு ஆயுத உற்பத்தியைத் தொடராது நிறுத்த உதவுங்கள்! புதிதாக அணு ஆயுதங்கள் ஆக்குவதையும், பெருக்குவதையும், விருத்தி செய்வதையும் தடுக்க முற்படுங்கள்! பேரளவு மக்களை அழிக்கக் கூடிய மற்ற எந்த இரசாயன, உயிரியல் சிதைவு ஆயுதங்களையும் உருவாக்கவோ,  கைப்பெறவோ வேண்டாமென உலக நாடுகளை எச்சரிக்கிறேன்! ‘

    ஹான்ஸ் பெத்தே, நோபெல் பரிசு விஞ்ஞானி

    “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ  முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச்  செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச்  சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும்  பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்  கொள்கிறோம்”.

    பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)

    “ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும்.”

    ரோமானியப் பொன்மொழி

    “சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி நிலவும்.”

    எட்வர்டு டெல்லர்


    “ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது  என்று அர்த்தம் !”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    விஞ்ஞானம் அணுசக்தி மூலம் பயனடைய நமக்குக் கல்வி புகட்டியுள்ளது.  மனிதத் தீங்குகளுக்குப் பதிலாக  மானிட நலத்துக்கு அணுசக்தியைப் பயன்படுத்த முயல்வது மனிதக் கடமை நெறியில் பின்னியுள்ளது.   இப்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சனை பௌதிக விஞ்ஞானம் அல்ல; மனித ஒழுக்க நெறி !

    பெர்னார்டு மான்னஸ் பரூச் (Bernard Mannes Baruch)

    விஞ்ஞானிகள் உலகத் தேச நலனை முன்வைத்து அதிர்ச்சியான இந்தக் கோரப் பிரச்சனையில் (அணு ஆயுத  வெடிப்பு) தெளிந்த சிந்தனையோடு நடந்து கொண்டனரா என்று ஒருவர் கேட்க வரலாம் !  உண்மை யாக அப்படி  ஒரு விருப்பத் தேர்வுக்கு (Choice) இடமில்லை !  அடிப்படை ஆய்வறிவு கிடைத்ததும் அது கனியாகப்  பழுப்பதை நிறுத்த எந்த ஓர் எதிர்ப்புத் தடையும் வந்தால் பரிதியைச் சுற்றிவரும் பூமியை நிறுத்த முனைவது  போல் முறிந்து போகும் !

    சிகாகோவில் முதல் அணுப்பிளவு தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிகோ ஃபெர்மி

    முன்னுரை: அமெரிக்காவின் ‘மன்ஹாட்டன் ‘ இரகசியத் திட்டத்தில் கூடி உழைத்து முதன்முதல் கோர அணு  ஆயுதங்களைப் படைத்து, மக்கள் பேரழிவுக்கும், மானிடத் தலை வேதனைக்கும் காரணமான  முக்கிய  விஞ்ஞானிகள் இருவர்: ஹான்ஸ் பெத்தே, அடுத்து அவரது  ஆப்த நண்பர் எட்வெர்டு டெல்லர் ! ஜெர்மெனியில் பிறந்து அமெரிக்க ரான பெளதிக விஞ்ஞானி  ஹான்ஸ் பெத்தே வயது 99 வரை வாழ்ந்தார்.  இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லருக்கு அஞ்சி  அமெரிக்காவில் சரண்புகுந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்ற அநேக ஜெர்மென் விஞ்ஞானிகளில் ஒருவர்  பெத்தே! அணு ஆயுதப் பிதா ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஆணையின் கீழ், நியூமெக்ஸிகோ லாஸ் அலமாஸ் அணு  ஆய்வுக் கூடத்தில், கோட்பாடு ஆணையாளராகத் தலைமைப் பதவியில் பணியாற்றி ஜப்பானில் வீசப்பட்ட  யுரேனிய, புளுடோனிய அணுப்பிளவு ஆயுதங்களைத் தயாரிக்க முழுமையாக உதவியவர்!

    ஹான்ஸ் பெத்தே எட்வெர்டு டெல்லர், ஜார்ஜ் காமாவ் [1904-1968] ஆகியோருடன் வேலை செய்து,  அணுப்பிணைவு இயக்கங்களில் ஆய்வுகள் புரிந்து, வெப்ப அணுக்கரு ஆயுதமான ஹைடிரஜன் குண்டு  தயாரிக்கவும் ஆலோசகராகப் பங்கேற்றவர்! பரிதியிலும், விண்மீனிலும் எவ்விதம் அணுக்கரு இயக்கங் கள்  நிகழ்ந்து, பேரளவு சக்தி உண்டாகிறது என்று விளக்கியதற்கு 1967 இல் நோபெல் பரிசைப் பெற்றவர்! 1960-1970  ஆண்டுகளில் பெத்தே ஆக்க வினைகளுக்கு உதவும் அணுசக்தியைப் [Peacful Uses of Atomic Energy] பற்றிப்  பறைசாற்றி வந்தவர். நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக உலக வல்லரசுகளை நோக்கி அணு ஆயுதக் குறைப்புக்கு  வழிமுறைகள் வகுத்து அறிவுரை கூறி வருபவர்! ஹான்ஸ் பெத்தே தனது வாழ்க்கையின் பெரும் பகுதியில்  அணு ஆயுதப் படைப்பிலும், அணு ஆயுத எதிர்ப்பிலும் முன்னுக்குப் பின் முரணாக சம பங்கேற்றுள்ளது உலக  சிந்தனையாளருக்குப் பெரு வியப்பை அளிக்கிறது!

    ஹான்ஸ் பெத்தே சாதித்த விஞ்ஞானச் சாதனைகள்

    1930 ஆண்டுகளில் பெத்தே விண்மீன்களில் எவ்விதம் சக்தி உற்பத்தி யாகிறது என்று முதலில் கண்டு பிடிக்கச்  செய்த மகத்தான அணுக்கரு இயக்கச் சாதனைகளே அவர் பின்பு 1967 இல் நோபெல் பரிசு பெற வழியிட்டது.  அவரது முக்கிய பெளதிகப் படைப்பு ‘அணுவின் உட்கரு நியதி ‘ [Theory of Atomic Nuclei]. 1934 இல் பெத்தே,  பெளதிக விஞ்ஞானி ரூடால்ஃப் பையெரிஸ் [Rudolf Peieris] இருவரும் சேர்ந்து ‘டியூடிரான் கோட்பாடைப்’ [Deuteron Theory] படைத்து விருத்தி செய்தார்கள். டியூடிரான் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம் [Deuteron is an  Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரே ஒரு புரோட்டான் உள்ள போது, அதன் ஏகமூலமான  டியூடிரான் அணுக்கருவில் ஒரு புரோட்டானும், கூடவே ஒரு நியூடிரானும் உள்ளன. ஏகமூலங்கள் [Isotopes]  என்றால் இரண்டு மூலகங்கள் தமது அணுக்கருவில் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு  நியூட்ரான் எண்ணிக்கை கொண்டவை. அதாவது ஒரே அணு எண் கொண்டு, வெவ்வேறு நிறை எண்  கொண்டவை [Isotopes have same Atomic Number, but different Mass Numbers] என்று விளக்கப்படும்.

    1935-1938 ஆண்டுகளில் பல மூலகங்களின் அணுக்கரு இயக்கங்களை ஆய்ந்து அவற்றின் ‘அணுக்கரு நிகழ்ச்சிப்  பரப்புகளை ‘ [Nuclear Cross Sections] அனுமானம் செய்தார். நியூட்ரான் கணைகள் யுரேனியம் போன்ற கன  மூலகங்களைத் தாக்கும் போது, கணைகள் விழுங்கப் படலாம் [Absorption Cross Section]! சிதறித் தெறிக்கலாம்  [Scattering Cross Section]! அல்லது அணுப்பிளவு ஏற்படலாம் [Fission Cross Section]! அணுக்கரு இயக்கங்களில் நியூட்ரான் வேகத்திற்கு ஏற்ப நிகழ்ச்சிப் பரப்புகள் வேறுபடும். அதாவது நிகழ்ச்சிப் பரப்பளவு என்பது ஒருவித  அணுக்கரு விளைவு எதிர்ப்பார்த்தலைக் குறிக்கிறது.

    டென்மார்க் விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr (1885-1962)], ஹான்ஸ் பெத்தே, என்ரிகோ ஃபெர்மி  [Enrico Fermi (1901-1954)] ஆகிய மூவரும் அணுப்பிளவு இயக்கங்களின் பண்புகளைப் புரிந்து அணு ஆயுதத்  தயாரிப்புக்கு அடிகோலிய முக்கிய விஞ்ஞானிகள் ஆவர். 1935 இல் அமெரிக்காவின் கார்நெல் பலகலைக்  கழகத்தில் அப்போதிருந்த ஹான்ஸ் பெத்தே ‘ஹைடிரஜன் அணுக்கருவுடன் மோதிய நியூட்ரான்கள் தம்  வேகத்தை இழந்து மெதுவாகும் போது, அவற்றை யுரேனிய அணுக்கரு பிடித்துக் கொள்கிறது ‘ என்று  கண்டுபிடித்து வெளியிட்ட ஓர் அறிக்கை, நீல்ஸ் போஹ்ர் கவனத்தைக் கவர்ந்தது! ‘இப்போது அணுப்பிளவு  (Fission) எனக்குப் புரிகிறது’ என்று கூறினார் போஹ்ர். 1936 இல் பெத்தேயின் கோட்பாடைப் பயன்படுத்திப் போஹ்ர் தனது புகழ்பெற்ற ‘அணுக்கருப் பிளவு நீர்த்துளி மாடலை ‘ [Liquid Drop Model of Nuclear Fission]  வெளிப்படுத்தினார்! பெத்தே எழுதிய ‘நவீனப் பெளதிகத்தின் மீளாய்வு’ [Review of Modern Physics] என்னும் நூல்  நீல்ஸ் போஹ்ர் பிளவு நியதியை விளக்க உதவியது. அந்நூலே ‘பெத்தே யின் பைபிள் ‘ [Bethe ‘s Bible] என்று  அழைக்கப்பட்டுப் பல ஆண்டுகள், ஓர் அணுக்கருப் பெளதிகப் பாட நூலாகப் [Nuclear Physics Textbook] பலரால் படிக்கப்பட்டு வந்தது.

    ‘நியூட்ரான், புரோட்டான் ஆகிய பரமாணுக்கள் [The Nucleons] அணுக்கருவினுள் நீர்த்துளி மூலக்கூறு [Water  Molecules] போல் நடந்து கொள்கின்றன. அணுக்கரு இயக்கத்தில் மீண்டும் ஒரு நியூட்ரானை அணுக்கரு  விழுங்கும் போது, அதன் கூட்டுச்சக்தி மிஞ்சி, கோளமான அணுக்கரு திரிபு பெற்று, ஏறக் குறைய சமமான  நிறையுள்ள இரண்டு சிறு துளிகளாகப் பிரிகிறது. இவ்வித நீர்த்துளிப் பிரிவு போன்ற நிகழ்ச்சி அணுக்கருவின்  தனித்துவமான பண்பாடு ‘ என்று நீல்ஸ் போஹ்ர் தனது அணுப்பிளவு இயக்க மாடலை அறிவித்தார். அதுவே  போஹ்ரின் புகழ் பெற்ற அணுப்பிளவு நியதியாக நிலவி வருகிறது.

    1934 இல் பெத்தே, ஜெர்மென் விஞ்ஞானி வால்டர் ஹையட்லருடன் [Walter Heitler] இணைந்து ஒப்பியல்  எலக்டிரான்களுக்குக் குவாண்டம் யந்திரவியல் நியதியை விருத்தி செய்தார். அகிலக் கதிர்களில் [Cosmic Rays]  உண்டாகும் எலெக்டிரான், புரோட்டான் பொழிவுகளைப் பற்றி ஒரு கோட்பாடை அமைத்தார். பின்னர் பல  சகாக்களுடன் பணியாற்றி பெத்தே ‘திடவ நிலையியல் கோட்பாடு ‘ [Solid State Theory] துறையில் தனது  பெளதிகப் பங்கை அளித்துள்ளார். அவரது படைப்பு ஓரணு படிகத்துள் புகுந்திடும் போது [Atom in a Crystal], படிகத்தின் அணுசக்தி நிலை மட்டம் பிரிபடுவதைக் காட்டியது. அத்துடன் அப்படைப்பு உலோகக்  கோட்பாடையும் [Metal Theory] ஆய்வு செய்து, உலோகக் கலவைச் சீரமைப்பு, மாறமைப்பு [Order & Disorder of Alloy]  ஆகியவற்றையும் விருத்தி செய்தது.

    பெத்தேயின் முக்கியப் பணி வானியல் பெளதிகத்தில் [Astrophysics] அவர் கண்டுபிடித்தது. விண்மீன்களின் சக்தி மூலத்தைக் கண்டுபிடித்தவர் ஹான்ஸ் பெத்தே! பெத்தேயின் (1935-1938) காலத்திய அணுக்கரு இயக்கப்  படைப்புகளே, அவர் விண்மீன்களின் சக்தியைப் பற்றி கண்டுபிடிக்க ஏதுவாயிற்று. 1938 இல் பெத்தே முழுக்க  முழுக்க சூரியன் போன்ற ஒரு விண்மீனின் சக்தி யாவும், நேரடியாக ஹைடிரஜன் அணுக்கள் பிணைந்து  ஹீலியமாக மாறும் போது எழும், அணுக்கருப் பிணைவு சக்தியே [Nuclear Fusion Energy] என்று அழுத்தமாகக்  கூறினார்! சூரியன் ஒவ்வொரு வினாடியும் 600 மில்லியன் டன் ஹைடிரஜன் வாயுவை ஹீலியமாக  மாற்றுகிறது! அந்த வீதத்தில் ஹைடிரஜன் வாயு தீர்ந்தாலும், பரிதி இன்னும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு ஒளியையும், உஷ்ணத்தையும் நமக்கு அளிக்கும்!

    விண்மீன்களில் நிகழும் இரண்டு வித அணுக்கரு இயக்கங்களை அவர் யூகித்தார். ஒன்று: பெருநிறையும் 27  மில்லியன் டிகிரிச் சூடும் கொண்ட பேருருவ விண்மீன்களில் நேர்ந்திடும் ‘கரி-நைடிரஜன்-ஆக்ஸிஜென் சுற்றியக்கம்  ‘ [Carbon-Nitrogen-Oxygen or CNO Cycle]. அடுத்தது பரிதி போன்ற மந்தமான விண்மீன்களில் நிகழும்  ‘புரோட்டான்-புரோட்டான் பிணைவியக்கம் ‘ [Proton-Proton Fusion Reaction]. 1967 இல் நோபெல் பரிசும் அவரது  வானியல் பெளதிகப் படைப்புக்கே அளிக்கப்பட்டது.

    பெளதிக விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தேயின் வாழ்க்கை வரலாறு

    1906 ஜூலை 2 ஆம் தேதி ஹான்ஸ் பெத்தே ஜெர்மெனியில் உள்ள ஸ்டிராஸ்பர்க் அல்ஸாஸ்-லொரேன்  என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பல்கலைக் கழக உளவியல்வாதி [University Psychologist]. 1924 இல்  கல்லூரிக்குச் சென்று ஃபிராங்க்ஃபெர்ட், மியூனிச் பல்கலைக் கழகங்களில் படித்து 1928 கோட்பாடுப் பெளதிகத்தில்  டாக்டர் [Ph.D in Theoretical Physics] பட்டம் பெற்றார். அவரது குரு புகழ்பெற்ற பேராசிரியர் ஆர்னால்டு  சோமர்ஃபெல்டு [Arnold Sommerfeld]. பிறகு பெத்தே நாலாண்டுகள் (1929-1933) மியூனிச் பல்கலைக் கழகத்தில்  புகட்டாளராகப் பணியாற்றினார். 1930 இல் உலகப் பயிற்சிப் பயண உபகார நிதி [Travel Fellowship of International  Education] பெற்று பிரிட்டனுக்குச் சென்று ஓராண்டு கேம்பிரிட்ஜிலும், ஈராண்டு ரோமிலும் விஞ்ஞானக் கல்வி  புகட்டினார்.

    மியூனிச்சில் மூன்றாண்டுகள் இருந்த போது, அணுவின் குவாண்டம் நியதி [Quantum Theory of Atom] பற்றி பல ஆய்வுத்தாள்கள் எழுதினார். அவற்றில் ஒன்று அவரும் இத்தாலிய விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மியும்  இணைந்து வெளியிட்ட, மின்னேற்றப் பரமாணுக்கள் [Study of Charged Particles] சம்பந்தப்பட்ட ‘குவாண்டம்  மின்கொந்தளிப்பு’ [Quantum Electrodynamics] பற்றிய ஆய்விதழ். அப்போதுதான் அவரது மகத்தான நவீனப் பெளதிக  நியதிகள் படைக்கப் பட்டன. பெத்தே தெளிவாக எழுதிய அணுவின் குவாண்டம் யந்திரவியல் கோட்பாடு முதன்முதலில் விளக்கமான அவரது ‘பெளதிக கைநோக்கு நூலில்’ [Handbook of Physics] இடம் பெற்றது.

    அடுத்து ஓர் ஆய்வுத்தாள் உலோகங்களின் எலெக்டிரான் கோட்பாடு [Electron Theory of Metals] பற்றி, பெத்தே  அவரது குரு சோமர்ஃபெல்டுடன் எழுதியது. அந்த வெளியீடு ஃபெர்மி-டிராக் [Fermi-Dirac] இருவரும் படைத்த  உலோகவியல் ஆய்வுப் புள்ளி விபரத்தின் பயன்களுக்குச் சீராக விளக்கம் அளித்தது. ஹான்ஸ் பெத்தேயின்  முக்கிய பெளதிக்கக் கண்டுபிடிப்பு, அணுவின் பண்பை விளக்கும் ‘குவாண்டம் யந்திரவியல் நியதி ‘ அதன்  உட்கருவான அணுக்கருவின் [Nucleus] பண்பை விவரிக்கவும் பயன்படுகிறது, என்பதுதான். அப்படைப்புகள்  யாவும் ஹான்ஸ் பெத்தேயை ஓர் சிறந்த பெளதிக நிபுணராகக் காட்டின.

    1933 ஆண்டு ஜெர்மெனியில் ஹிட்லரின் ஆதிக்கம் வலுக்க ஆரம்பித்தும், பல்கலைக் கழகங்களில் பணி செய்த  யூதப் பேராசிரியர்களும், கல்வி புகட்டாளர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்! தந்தையார் யூதராக  இல்லாது, தாய் மட்டும் யூதராக இருந்ததாலும், பெத்தே வேலை இழந்தார்! வேலையிலிருந்து நீக்கப் பட்டதைத் தனது மாணவர் மூலமாக அறிந்த ஹான்ஸ் பெத்தே உடனே பிறந்த பூமியை விட்டுப் பிரிட்டனுக்குப்  புலம் பெயர வேண்டியதாயிற்று! அங்கு ஓராண்டு மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் புகட்டாளராகப் பணியாற்றினார்.

    1934 ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தின் இதாகா கார்நெல் பல்கலைக் கழகத்தி லிருந்து துணைப் பேராசிரியர்  பதவி கிடைத்து, பெத்தே அமெரிக்காவுக்கு விரைந்தார். 1937 ஆண்டில் பெத்தே பேராசிரி யராகப் பதவி  மேன்மை பெற்றார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் MIT கதிர்வீச்சு ஆய்வ கத்தில் நுண்ணலை ரேடார்  விருத்தியில் [Microwave Radar Development] வேலை செய்தார்.

    அதன்பின் நியூமெக்ஸிகோவின் லாஸ் அலமாஸ் ஆயுதக் கூடத்தில் கோட்பாடுத் துறையின் [Theoretical Division]  தலைமைப் பதவியை ஏற்று ஹான்ஸ் பெத்தே [1943-1946] நான்கு ஆண்டுகள் அணுப்பிளவு குண்டு திட்டத்தில்  வேலை செய்தார். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், எட்வெர்டு டெல்லருடன் சேர்ந்து பூதப் போராயுதத்  திட்டத்தில் [Super Bomb Project] முதல் ஹைடிரஜன் குண்டு ஆக்கத்தில் உதவினார்.

    ஹான்ஸ் பெத்தே பெயர் பெற்ற எக்ஸ்ரே பெளதிகவாதி பி.பி. ஈவால்டுவின் [P.P. Ewald, X-Ray Physicist] புதல்வி  ரோஸை மணந்து, ஹென்ரி, மோனிகா என்னும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானவர்.

    அணு ஆயுதப் படைப்புத் திட்டங்களில் பூரணப் பங்களிப்பு

    1942 ஆம் ஆண்டு வேனிற் காலத்தில், இரண்டாம் உலகப் போர் சமயத்தில், மன்ஹாட்டன் அணு ஆயுதத்  திட்டத்திற்குச் திறமைமிக்க பெளதிக விஞ்ஞானிகளைச் சேமித்துக் கொண்டிடுந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர்,  ஹான்ஸ் பெத்தேயைக் காலிஃபோர்னியா பெர்க்கிலியில் பணிபுரிய அழைத்தார். அணு ஆயுதத் தயாரிப்பு பற்றி  அறிந்த போது, அது சாத்தியமற்ற ஒரு திட்டமாகவும், அப்பணியில் இறங்கிப் பங்கெடுக்கத் தனக்கு விருப்பம்  இல்லை என்றும் முதலில் ஹான்ஸ் பெத்தே மறுத்தார்! பிரான்ஸ் ஹிட்லர் கைவசம் ஆனதும், பெத்தே  ஆத்திரம் மிகுந்து நாஸி ஜெர்மெனிக்கு எதிராகப் போருக்கு உதவிட முன்வந்து, அணு ஆயுதத் தயாரிப்புக்  குழுவில் பணி புரிய ஒப்புக் கொண்டார்!

    கார்நெல் பல்கலைக் கழகத்திலிருந்து தன் மனைவி ரோஸுடன் [Rose] பெக்கே கிளம்பி, வரும் வழியில்  சிகாகோவில் ஆப்த நண்பர் எட்வெர்டு டெல்லர், அவரது மனைவி மிஸ்ஸியையும் [Mici] காரில் ஏற்றிக்  கொண்டு பெர்க்கிலிக்குப் புறப்பட்டார். சிகாகோ பல்கலைக் கழகத்தில் என்ரிகோ ஃபெர்மி அமைத்த, முதல்  ஆய்வு அணு உலை அடுக்கைக் [Experimental Atomic Pile] கண்டதும், பெத்தே அணு ஆயுதத் தயாரிப்பு  நிறைவேறும் என்று இறுதியில் நம்பினார்!

    அதன்பின் நியூமெக்ஸிகோவின் லாஸ் அலமாஸ் ஆயுதக் கூடத்திற்கு மாற்றலாகி கோட்பாடுத் துறையின் [Theoretical Division] தலைமை பதவி அளிக்கப்பட்டு ஹான்ஸ் பெத்தே [1943-1946] நான்கு ஆண்டுகள் அணுப்பிளவுக்  குண்டுத் திட்டத்தில் வேலை செய்தார். அந்த நிகழ்ச்சி நண்பர் எட்வெர்டு டெல்லருக்குப் பெரும் அதிர்ச்சியைக்  கொடுத்தது! யாவருக்கும் மூத்தவராய்த் தன்னை எண்ணிய எட்வெர்டு டெல்லர் தான் பெற வேண்டிய  தலைமைப் பதவியைப் பெத்தே பெற்றதும் மிக ஏமாற்ற மடைந்தார்! வயதான பழைய விஞ்ஞான  நண்பர்களுக்கு இடையே வெறுப்பும், மன வேற்றுமையும் எழுந்தது! அணுப்பிளவு ஆயுதத்தில் உள்வெடிப்புக்  கணக்கீடுகளைச் [Implosion Calculations] செய்வதற்குப் பதிலாக, டெல்லர் பின்னால் ஒத்தி வைக்கப்பட்ட  அணுப்பிணைவு ஆயுதமான ஹைடிரஜன் குண்டு திட்ட வேலையில் தனியாக மூழ்கினார்!

    இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தனியாக பெத்தே ‘இரும்புக் கவசத்தில் ஏவு கணைகள் ஊடுருவுக்  கோட்பாடை’ [Theory of Penetration of Armour by Projectiles] அமைத்தார். ஹான்ஸ் பெத்தே, நண்பர் எட்வெர்டு டெல்லருடன் இணைந்து ‘அதிர்ச்சி அலைகளைப் ‘ [Shock Waves] பற்றி ஓர் அறிவுத்தாளை எழுதி வெளிட்டார்.

    அணுப்பிளவு சக்தி, அணுப்பிணைவு சக்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? இரண்டு அணுக்கரு  இயக்கங்களிலும் விளைவுக்குப் பின்பு நேரும் ‘நிறை இழப்பே’ [Mass Defect] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பளு-சக்திச்  சமன்பாடு [Mass Energy Equation] நியதியின்படி சக்தியாக மாறுகிறது! யுரேனியம்-233, யுரேனியம்-235, புளுடோனியம்-239 ஆகிய குறிப்பிட்ட நிறைஎண் [Mass Number] கொண்ட கன மூலகங்களே [Heavy Elements]  நியூரான் கணைகளால் உடைக்கப் பட்டு, சிறு மூலகங்கள் உண்டாகும் போது தோன்றும் நிறை இழப்பு பிளவு  சக்தியாக [Fission Energy] உண்டாகிறது! அதன் நிறை இழப்பு சக்தியாக மாறும் போது, உதாரணமாக ஒரு  பவுண்டு யுரேனியம்-235, 1300 டன் நிலக்கரி எரிந்து தரும் எரிசக்திக்குச் சமம்!

    அணுப்பிணைவு சக்தி ஹைடிஜன், லிதியம் போன்ற எளிய மூலகங்கள் [Light Elements] மிகையான அழுத்தத்தில்  பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் இணைந்து பெரு மூலகம் உண்டாகும் போது எழும் நிறை இழப்பு பிணைவு சக்தியாக [Fusion Energy] மாறுகிறது! அம்முறையில் ஒரு பவுண்டு ஹைடிரஜன் வாயுவை மிகையான  அழுத்தமும், பேரளவு உஷ்ணமும் பிணைக்கும் போது ஒரு பவுண்டுக்கும் குன்றிய நிறையான ஹீலியம்  உண்டாகி, எஞ்சிய நிறை இழப்பு சக்தி 10,000 டன் நிலக்கரி ஈன்றும் எரிசக்திக்குச் சமமாக எழுகிறது!

    ஆதி முதற்கொண்டே ஹைடிரஜன் குண்டு ஆக்கத்திற்கு எதிர்ப்புகள் கூறி வந்தவர் பெத்தே! 1946 இல் கார்நெல்  பலகலைக் கழகத்திற்கு மீண்டு, பணி புரிந்து வந்த பெத்தேயை, சோவியத் யூனியன் தனது முதல்  அணுகுண்டை 1949 ஆகஸ்டில் வெடித்ததும், பூத அணு ஆயுதத்தைப் படைக்க டெல்லர் வற்புறுத்தி லாஸ்  அலமாஸ் வருவதற்குப் பெரு முயற்சி செய்தார்! இறுதியாக பெத்தே ஆலோசராகப் பணி செய்ய  ஒப்புக்கொண்டு அடிக்கடி லாஸ் அலமாஸ் அணு ஆயுதக் கூடத்திற்கு வருகை தந்தார்!

    யுத்ததிற்குப் பிறகு பெத்தே அணுக்கருப் பிண்டம், மேஸான் நியதி [Nuclear Matter & Meson Theory] ஆகிய ஆராய்ச்சியில்  பணியாற்றினார். அத்துடன் சூபர்நோவா, நியூட்ரான் விண்மீன்கள், கருந்துளைகள் [Supernova, Neutron Stars, Black  Holes] போன்ற விண்வெளித் தலைப்புகளிலும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.


    வல்லரசுகள் அணு ஆயுதக் குறைப்புக்குப் பெத்தே செய்த முயற்சிகள்

    அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1949 இல் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க அனுமதி அளித்த போது, ஹான்ஸ்  பெத்தே கூறியது. ‘எதிர்கால யுத்தத்தில் ஹைடிரஜன் குண்டுகளை வீசி நாம் போரிட்டு வெற்றி பெற்றாலும்,  நாம் காத்திடப் போகும் உலகே நமக்கில்லாது அழிந்துவிடும்! எந்த பூமிக்காக நாம் போரிடு கிறோமோ, அந்த  பூமியையே நாமிழக்க நேரிடும் ‘ என்று எச்சரிக்கை செய்தார்! 1956-1964 ஆண்டுகளில் ஹான்ஸ் பெத்தே  அமெரிக்க ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவில் [President ‘s Science Advisory Committee] ஓர்  உறுப்பினராய்ப் பணியாற்றினார்.

    1958 இல் உலகப் பெரு வல்லரசுகளான அமெரிக்க-ரஷ்யா அணு ஆயுதத் தகர்ப்பு [Nuclear Disarmament] பற்றி ஓர்  ஆய்வறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்தார். 1963 இல் அணு ஆயுதச் சோதனை நிறுத்த  ஒப்பந்தம் பேசச் சோவியத் யூனியனிடம் சென்று, முழு வெற்றி பெறாமல் ‘பகுதி நிறுத்த ஒப்பந்தம் ‘ [Partial  Disarmament Treaty] அடைந்த தூதர் குழுவில் பெத்தேயும் ஒருவராக இருந்தார்! ஆயினும் அணு ஆயுதப்  பந்தயத்தில் அணு ஆயுதப் பெருக்கத்தை எதிர்த்தும், அணு ஆயுதக் குறைப்பை ஆதரித்தும், அமெரிக்கா ரஷ்யா  ஆகியோர் இடையே பதுங்கியுள்ள அணு ஆயுதத் தகர்ப்புக்கும் முயன்று தொடர்ந்து வாக்குவாதம் புரிந்து  வந்தார்!

    1980 இல் ஜனாதிபதி ரேகன் முயற்சி செய்து கொண்டுவந்த விண்வெளியில் பாய்ந்து செல்லும் ‘அகில தேசக்  கட்டளை உந்துகணை எதிர்ப்படை ஏற்பாடு ‘ [Intercontinental Ballistic Missile Defense System (ICBM)] திட்டத்தை எதிர்த்து, அந்த ஏற்பாடு மேலும் அமெரிக்க-ரஷ்ய ஊமைப் போரை [Cold War] இன்னும் மிகைப்படுத்திப்  படைத்திறச் சமன்பாட்டிற்குச் சீர்கேடு விளைவிக்கும் என்று ஆலோசனை கூறினார்.

    1997 பிப்ரவரியில் 90 வயதான ஹான்ஸ் பெத்தே அமெரிக்க செனட் குழுவினர் ‘அணு ஆயுதச் சோதனை நிறுத்தும் ஒப்பந்தத்தை’ [Comprehensive Test Ban Treaty (CTBT)] அங்கீகரிக்க விவாதனை நடத்த முயலும் போது,  ஜனாதிபதி கிளின்டனுக்கு அனைத்து அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்துப்படியும், இனிமேலும் புதிய முறை  அணு ஆயுதங்கள் தயாரிக்க வேண்டாம் என்றும் வற்புறுத்திக் கடிதம் எழுதினார்! அக்டோபர் 13 ஆம் தேதி அமெரிக்க செனட் குழு CTBT ஒப்பந்தத்துக்கு உடன்படாமல் நிராகரித்த போது, ஹான்ஸ் பெத்தே பெரிதும் வருந்தினார்!


    அமெரிக்கா, ரஷ்யா ஆகிய வல்லரசுக்கிடையே அணு ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதச் சோதனை நிறுத்தம், அணு ஆய்தத் தகர்ப்பு ஒப்பந்தங்களில் மூத்த விஞ்ஞான ஆலோசகராக ஜனாதிபதிகள் ஐஸன்ஹோவர் முதல் கென்னெடி, ஜான்ஸன் ஆகிய மூவருக்கும் பணியாற்றியவர், ஹான்ஸ் பெத்தே! ரஷ்யாவும், அமெரிக்காவும்  அணு ஆயுதத் தகர்ப்பை முழுமையாக நிறைவேற்றாவிட்டாலும், அணு ஆயுத ஆக்கம் குறைந்து, 1990  இடைத்துவ ஆண்டுகளில் அணு ஆய்தச் சோதனைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டன என்பது இங்கே  குறிப்பிடத் தக்கது!

    1994 ஆம் ஆண்டு நீல்ஸ் போஹ்ர் நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்திய போது ஹான்ஸ் பெத்தே கூறியது  ‘இரண்டாம் உலகப் போர் முடிந்து ஐம்பது ஆண்டுகள் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால், ஜப்பானில்  வீசிய அணு ஆயுதங்களுக்குப் பிறகு யாரும் அவற்றை எவர் மீதும் பயன்படுத்த வில்லை! ஆனால் லாஸ்  அலமாஸில் நாங்கள் தயாரித்ததை விட 100 மடங்கு பேராற்றல் கொண்ட கோர அணு ஆயுதங்கள் பல்லாயிரக்  கணக்கில் இப்போது படைக்கப் பட்டுள்ளன! தற்போது நமது காலம் ‘அணு ஆயுதத் தகர்ப்பு ‘, ‘அணு ஆயுத அவிழ்ப்பு ‘ [Disarmament & Dismantlement] என்னும் நற்போக்குத் திசையில் போய்க் கொண்டுள்ளது! ஆனால் சில  நாடுகளில் இன்னும் அணு ஆயுத உற்பத்தி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது! அந்த நாடுகள் எப்போது அணு  ஆயுதத் தயாரிப்பை நிறுத்த உடன்படும் என்பது நிச்சயமில்லை! ஆனால் அந்த நாட்டு விஞ்ஞானிகள்  அனைவரும் அத்துறைக்கு ஒத்துழைக்க ஒருங்கே மறுத்து, நமது போராட் டத்திற்கு ஆதரவு அளிக்கலாம்! ‘


    உலகில் அணு ஆயுதங்கள் குறைக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும், அணு ஆயுதச் சோதனைகளை அறவே நிறுத்த வேண்டும் என்றும், அமைதிப் பணிக்கு அணுசக்தி பயன்படுத்த வேண்டும் என்றும், ஐக்கிய  நாட்டுப் பேரவை அணுசக்தி ஆக்கத்தைக் கட்டுப்படுத்திக் கண்காணித்து வர வேண்டும் என்றும் பறைசாற்றி  அயராது உழைத்தவர் ஹான்ஸ் பெத்தே! 1955 இல் ஹான்ஸ் பெத்தே ஜெர்மெனியின் உன்னத பிளாங்க்  பதக்கத்தைப் [Plank Medal of Germany] பெற்றார். அணுசக்தி துறை விருத்திக்கு ஆக்கிய அவரது அணுக் கருப்  பெளதிகப் பணியைப் பாராட்டி, அமெரிக்காவின் 50,000 டாலர் நாணய வெகுமதி யுள்ள என்ரிகோ ஃபெர்மி  பதக்கம் பெத்தேயிக்கு அளிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் பெத்தேயிக்கு புரூஸ் பதக்கம் [Bruce Medal] அளிக்கப்பட்டது.

    ஹான்ஸ் பெத்தே 2005 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி காலமானார்.

    ++++++++++++++++++++

    தகவல்கள்:

    1. Hans Bethe Biography http://www.nobel.se/physics/laureates/1967/bethe-bio.html

    2. Bethe Hans (1906) from Eric Weisstein’s World of Scientific Biography

    3. Explore the History Science & Consequense of the Atomic Bomb

    4. Hans Bethe on the Senates Deadly Decision to Reject the Comprehensive Nuclear Test Ban Treaty [Nov 8, 1999]

    5. The American Experience – Race for the Super Bomb -Hans Bethe  Statement [Feb 14, 1950]

    6. My Life in Physics By: Hans Bethe [1993-1994]

    7. Hans Bethe & the Stellar-Energy Problem [1936-1941]

    8. Was H-Bomb Necessary ? Nuclear Age Peace Foundation [2002]

    9. The Atomic Scientists -A Biographical History By: Henry Boorse, Lloyd Motz & Jefferson Weaver [1989]

    10 The Atomic Scientists -The Sense of Wonder & the Bomb By: Mark Fiege (July 2007)

    11. The Road From Los Alamos By: Hans Bethe (1991)

    12.  http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1967/bethe-bio.html  [1967]

    13.  https://en.wikipedia.org/wiki/Hans_Bethe  [October 1, 2015]

    14.  http://bethe.cornell.edu/about.html  [2013]

    15.  http://www.britannica.com/biography/Hans-Bethe

    16.  http://www.atomicarchive.com/Bios/Bethe.shtml

    17.  http://scienceworld.wolfram.com/biography/BetheHans.html

    **************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) October 17, 2015

    Attachments area
    Preview YouTube video Atomic Bomb Tests Declassifide Footage HD

    Atomic Bomb Tests Declassifide Footage HD

    Preview YouTube video Hans Bethe, who calls himself the “H-bomb’s midwife”, reflects on Hiroshima

    Hans Bethe, who calls himself the “H-bomb’s midwife”, reflects on Hiroshima

    Preview YouTube video Hans Bethe

    Hans Bethe
    Share