உன்னையறிந்தால் …… (27)
நிர்மலா ராகவன்
வயதுக்கேற்ற வளர்ச்சி
`குழந்தை’ என்று கூறும்போது நம் நினைவுக்கு வருவது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்தாம். சுமார் பதினெட்டு வயதில் அவர்களது உடல் வளர்ச்சி பரிபூரணம் அடைவதுவரை அவர்களுடைய மனப்போக்கும் சிறிது சிறிதாக விசாலமடைகிறது. இதில் ஏதாவது தடை ஏற்பட்டால், மனவளர்ச்சி அந்த நிலையிலேயே நின்றுவிடுகிறது.
குழந்தை பிறந்து இரண்டு வயதுவரை தன்னைச் சுற்றி உள்ள உலகை ஐம்புலன்களின் உதவிகொண்டு அறிய முனைகிறது. ஒளியோ, ஒலியோ இருக்கும் திசையை நோக்கித் தலையைத் திருப்பும் முதலில். பிறகு, கைக்கெட்டுவதை எல்லாம் எடுக்க முனையும். எந்த ஒரு பொருளும் தின்னத் தகுந்ததா இல்லையா என்று அறிவதில்தான் இந்த வயதினருக்கு ஆர்வம். மற்றபடி, தானும் தாயின் ஒரு பகுதிதான் என்பதுபோல்தான் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நடந்துகொள்ளும்.
இரண்டு வயதுவரை யார் உணவூட்டினாலும் உட்கொள்ளும் குழந்தைகள் அதன்பின், தாமும் ஒரு தனிப்பிறவி என்று உணர்கிறார்கள். பிறர் சொல்வது சரியாக விளங்காது. தமது செய்கையால் பிறருக்கு ஏற்படும் விளைவுகளும் இவர்கள் அறிவுக்கு எட்டாத சமாசாரம். இருந்தாலும், உலகமே இவர்களைச் சுற்றித்தான் இயங்குகிறது என்று எண்ணம் கொண்டிருப்பார்கள்.
வீட்டிற்கு யார் வந்தாலும், தம்முடன் விளையாடத்தான் வருகிறார்கள் என்றெண்ணி மகிழ்வார்கள். தனக்குக் கிடைத்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம் இந்த வயதில் கிடையாது. இந்த அறிவை நாம்தான் புகட்ட வேண்டும்..
ஒரு டப்பாவில் பிஸ்கோத்தோ, சாக்லேட்டோ போட்டு, `எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நீயும் சாப்பிடு!’ என்று இரண்டு வயதுக் குழந்தையின் கையில் கொடுங்கள். பெரியவர்கள் பேச்சை மறுப்பின்றி ஏற்கும் குழந்தை அதை அப்படியே கடைப்பிடிக்கும். தின்பண்டத்தை வாங்கிக்கொண்ட ஒவ்வொருவரும் நன்றி தெரிவித்து, குழந்தையின் `தாராள’ மனப்பான்மையைப் பாராட்டினால், நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடும்.
(`சாக்லேட்டா? ஐயோ, வேண்டாம்! குண்டாகிடும். ஏற்கெனவே, சர்க்கரை வியாதி!’ என்றெல்லாம் பிகு பண்ணாது, வாங்கிக்கொள்ளுங்கள். தின்ன வேண்டிய அவசியமில்லை. பிறகு டப்பாவிலேயே போட்டுவிடலாம். தான் கொடுக்கும்பொது வாங்கிக்கொள்ள மறுப்பது குழந்தையின் மனதை நோகடிக்கும். நிலவரம் புரியாது, அழுகையில் உதடு பிதுங்கும்).
பிறர் வீட்டுக்கு அழைத்துப் போகும்போது உங்கள் குழந்தை அவர்கள் வீட்டுச் சாமான்களை எடுத்து ஆராய்ச்சி செய்கிறானா? கண்ணாடிச் சாமானாக இருந்தால், கைதவறி கீழே விழுந்துவிட உடைந்தும் போகலாம். `வளர்க்கத் தெரியாமல் வளர்த்திருக்கிறீர்களே!’ என்பதுபோல் முறைப்பவர்களை அலட்சியம் செய்யுங்கள்.
ஏன் தெரியுமா?
காரண காரியம் புரியாத வயது ஏழுவரை. அதாவது, பிறர் பொருளை எடுப்பது தவறு என்று புரியாது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். வெளியே அழைத்துப்போவதற்கு முன்பே, `இன்னொருவர் வீட்டுச் சாமான்களில் கை வைக்கக்கூடாது!’ என்று எச்சரித்து விடுங்கள்.
அதேபோல், மற்ற குழந்தைகளின் விளையாட்டுச் சாமான் ஒன்றை எடுத்துக்கொண்டு, தன்னுடையதுதான் என்று அடம் பிடிக்கிறானா? `மானம் போகிறதே!’ என்று குழந்தையை அடித்தோ, திட்டியோ செய்வதைவிட, `உனக்கும் இதேமாதிரி வாங்கித் தருகிறேன்!’ என்று நல்லவிதமாகச் சொல்லலாம்.
அப்படியும் மசியாவிட்டால், பேச்சை மாற்றுங்கள். குழந்தைகள் கவனம் அதிக நேரம் ஒன்றில் நிலைத்திருக்காது. `ஜூவில அன்னிக்கு சிங்கம் பாத்தோமே!’ என்று சம்பந்தம் இல்லாது எதையாவது ஆரம்பியுங்கள். அவ்வளவுதான்! அழுகை மாறி, உற்சாகம் பீறிடும் குழந்தையிடம்.
கடைவீதியில் பார்ப்பதை எல்லாம் கேட்கிறானா? `உனக்குத்தான் வீட்டில் நிறைய இருக்கிறதே!’ என்று சொன்னால் சமாதானமாகிவிடுவான்.
ஒரு கடைக்காரர் என் நான்கு வயது மகனிடம், `இது வேணும்னு அம்மாகிட்ட கேளு!’ என்று ஏதோ விளையாட்டுச் சாமானைக் காட்டி, தூண்டிவிட்டார். குழந்தை கேட்டால், தாய் மறுப்பது கடினம் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.. அவனோ, `ஆத்தில நெறை..யா இருக்கு!’ என்று பதிலளிக்க, அவர் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார். எனக்கு ஒரே பெருமை. `சமத்து!’ என்று அவனை வாயாரப் பாராட்டினேன் — அவர் தலைமறைந்ததும்!
ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைகளும் உயிரும், உணர்ச்சியும் கொண்டவை. அதனால்தான் தம் கரடிப் பொம்மையையும், விளையாட்டுக் காரையும் சரிசமமாகப் பாவித்துப் பேசி விளையாடுவார்கள். இதில் அசட்டுத்தனம் எதுவுமில்லை. இந்தக் குணத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கதை:
என் பேரனுக்கு மூன்று வயதானபோது, டவுனுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். திடீரென்று பெரிதாக அழுதான். நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரில் காலைக் கிழித்துக் கொண்டதில், ஆழமான காயம்.
நடந்தது தன் தவறா, இல்லையா என்று புரியாது, குற்ற உணர்ச்சியோ (`அடி கிடைக்குமோ?’) அல்லது அவமானமோ எளிதில் அடையும் பருவம் இது. அதனால், பழியைத் திசைதிருப்பி விடுதல் நன்று.
நான் பின்னோக்கி நடந்தேன். `இந்த ஸ்கூட்டரா ஒன் காலில ரத்தம் வர வைச்சது? எதுக்கு குழந்தை போற வழியில நின்னே?’ என்று வீராவேசமாகக் கேட்டபடி, அதை நான்கு போடு போட்டேன். அவன் அழுகை மறைந்தது. வலியை மறந்தான்.
என் போக்கைப் பார்த்து, சில இளைஞர்கள் தம் கண்களையே நம்ப முடியாது வெறித்தனர்! `பார்த்தா நார்மலா இருக்கா! வாகனத்தோட சண்டை போடறாளே! ஒரு வேளை, லூசோ?’ என்று அவர்கள் நினைத்தது எனக்குப் புரிந்தது.
அவர்களுக்காக ஸ்கூட்டருக்கு இன்னும் இரண்டு அறை விட்டு, `ஒன்னோட வலி சரியாப் போச்சு!’ என்று குழந்தையிடம் கூவினேன். என் வார்த்தைகளை நம்பி, நொண்டியபடி நடந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவசரமாக, பிளாஸ்திரி வாங்கி ஒட்டினேன்.
சில குழந்தைகள் குளிக்கப் படுத்துவார்கள். `ஒன்னோட வாத்து குளிக்கணுமாம்!’ என்று குளியலறைக்குப் போனால், குழந்தையும் ஆர்வத்துடன் பின்னால் வருவான்.
ஏழிலிருந்து பதினோரு வயதுவரை வேறு மாற்றங்கள். தாழ்வு மனப்பான்மைக்கும், சுறுசுறுப்புக்கும் இடையிலான போட்டி. இந்தப் பருவத்திலும் பெற்றோர் தொடர்ந்து, `நீ புத்திசாலி. நல்ல பையன்!’ என்று (அளவோடு) பாராட்டினால், தன்னம்பிக்கை வளரும். பிறருடைய மன ஓட்டம் புரியத் தொடங்கும். `இப்படிச் செய்தால் இன்னது நடக்கும்,’ என்ற தெளிவு பிறக்கும். தான் அடித்தால் பிறருக்கு வலிக்கும், இன்னொருவர் பொருளை அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்றெல்லாம் புரியும்.
பதினோரு வயதுக்குமேல் தனக்குரிய வேலை, தனது நிலை, தான் ஆற்றவேண்டிய பங்கு முதலியவை தெரிய வேண்டும். அப்போதுதான் பொறுப்பும், அதை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமும் ஏற்படும். ஆனால், நான்கில் ஒருவர்தான் அறிவிலும், எண்ணங்களிலும் முதிர்ச்சிகொண்ட இந்த நிலையை அடைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
`எனக்கு வேலை செய்யப் பிடிக்காது அதனால், என் குழந்தைகள் வேலை செய்தாலும் எனக்கு மனசாகாது,’ என்று கூறும் தாய், தன்னையுமறியாது குழந்தைக்குத் தீங்கு இழைக்கிறாள். தலைமைப் பொறுப்பு இவர்களுக்கு எளிதில் கைவராது.
ஒரு குழந்தை வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளும்போது, அதைப் பெரிதுபடுத்தி, ஏளனம் செய்தால் குழப்பம்தான் விளையும். உதாரணமாக, பொது இடங்களில், இரண்டு வயதுக் குழந்தை கைகால்களை உதைத்துக்கொண்டு அழலாம், `ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடு,’ என்று. வயதுக்குரிய நடத்தைதான் அது. அதற்காக நாம் அவமானப்படத் தேவையில்லை. பசி, தூக்க வேளையில் வெளியில் அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். அதுபோல், இடியோசை கேட்டு குழந்தைகள் பயப்பட்டால், `சும்மா இடி! மழை வரப்போறது,’ என்று வானிலை அறிக்கை விட்டால், புரிகிறதோ, இல்லையோ, சமாதானமாகிவிடுவார்கள்.
ஆனால், பத்து வயதுச் சிறுவன் அப்படி நடந்துகொண்டால், எங்கோ தவறு விளைந்திருக்கிறது என்று அர்த்தம். தாய் தந்தையரின் ஓயாத சண்டை, குழந்தையை அவர்கள் நடத்தும் முறை, வீட்டுக்கு வெளியே குழந்தை அடையும் அனுபவங்கள் — இப்படி எத்தனை காரணங்கள் இல்லை, குழந்தையின் மனவளர்ச்சியைத் தடை செய்ய!
சிறுபிள்ளைத்தனம் கொண்ட பெரியவர்கள் அந்தந்த வயதுக்கேற்ப வளர்ச்சி அடையாது இருந்திருப்பார்கள். பழையதை அலசி, தடைகள் ஏற்படக் காரணமாக இருந்தவைகளை ஏற்றாலே தெளிவும், மனப்பக்குவமும் அடையலாம். ஆனால், கடந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. நிகழ்காலத்திலேயே கவனம் கொண்டிருப்பவன்தான் முன்னேறுகிறான்.
தொடருவோம்