Month: November 2015

  • “ஆறு படை அழகன்”  — (4)

    க. பாலசுப்பிரமணியன்

    Six-Abodes-of-Murugan1

    குக்குக்கூ…….குக்குக்கூவெனக்  குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும்!.. முருகா..  குக்குக்கூ…….குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் !!

     

    குன்றத்திலே .. பரங்குன்றத்திலே ..

    திருப்பரங்குன்றத்திலே உனைக் கண்டால்….. முருகா

    குக்குக்கூ…….குக்குக்கூ…. குயில் போலக்கூவும்,

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் !!

     

    செந்தூரக்கடலோரம் உனைக்கண்டோ ..முருகா

    கடலலை போலப் பாயும் .. என் நெஞ்சம்

    கந்தா, உன் காலிரண்டை நாடும்-கந்தன்

    கருணையிலே காலமெல்லாம் வாழும் !!

     

    தணிகையிலே .. திருத்தணிகையிலே

    உனைக்கண்டோ முருகா..!

    தென்றலாய் மாறும் என் நெஞ்சம் !! ..

    திருவருள் வேண்டி உன்னை நாடும்

     

    சோலையிலே .. பழமுதிர்சோலையிலே .

    உனைக்கண்டோ ..முருகா .. என் நெஞ்சம்

    ஆறும்… இளைப்பாறும் .. உன் விழிவாசலிலே.

    துயர் நீக்கிக் களைப்பாறும் !!

     

    பதியினிலே,  பழநிப்பதியினிலே

    உனைக்கண்டோ ..முருகா,,,  என் நெஞ்சம்

    பாடும், தமிழ் பாட்டொன்று பாடும் ..

    முத்தைத்தரு பத்திதிருநகையென ஓதும் !!

     

    மலையினிலே .. சுவாமிமலையினிலே…

    உனைக்கண்டோ …முருகா  ..

    நாடும் அருள் நாடும் — அப்பனைப்போல்..

    கைகட்டி வாய்பொத்தி அருள்மொழி கேட்கும் !!

     

    அறுபடை வீடினிலே உனைக்கண்டால்  முருகா

    .என் நெஞ்சம் ஆடும் ….அது பாடும்

    கொஞ்சம் தாவும்.. …உந்தன் அருள் நாடும்

    கூவும்… குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்!!!

     

    குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் .. முருகா..

    குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும் .

    அது மயில் போல ஆடும் !!

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • எந்தத் தடையுமற்ற அன்பின் பெருவெளி

    எஸ் வி வேணுகோபாலன்

    children
    குழந்தைகள் தினம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதம் விடிகிறது. கணக்கற்ற குழந்தைகளுக்கு விடியாமலே போகவும் செய்கிறது. காலை தேநீர்க் கடையில் உங்களை வரவேற்பது முதல், காய்கறிக் கடையில் தேங்காய் எடுத்துக் கொடுத்தால் படாரென்று அதை அறைந்து உடைத்துக் கொடுப்பது, சலூனில் முடி திருத்தக் காத்திருப்பது, அலுவலக வழியில் கடக்க நேரும் பாதி முடிந்த கட்டிட வேலையில் மூழ்கி இருப்பது, மதிய உணவருந்தும் ஓட்டலில் உணவு கொண்டு வைப்பது அல்லது பிளேட் எடுப்பது………எல்லாமே குழந்தைகள் என்பது மட்டுமல்ல, பல்லாயிரம் மைல் கடந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தை தொழிலாளர்கள். அவர்களது மொழியை நாம் சென்றடையக் காத்திராமல் நமது மொழியில் வேக வேகமாக ஐக்கியமாகி நம் இதயம் நொறுங்கும்படி சிரிக்க சிரிக்க வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகள்.

    பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் தூக்கமுடியாத பையைத் தூக்கியபடி உடன் சென்று கொண்டிருக்கும் உள்ளூர் வேலைக்காரக் குழந்தைகள். பிளாட்பாரக் கடையருகே அம்மாவுக்கு உதவியாக எதையோ விற்றபடி பாடப்புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள். எதற்குப் பிச்சை எடுக்கிறோம் என்று தெரியாமலே நெரிசல் மிகுந்த ரயில் பயணத்தினூடே குட்டிக் கரணம் போட்டுக் கொண்டும், கைகள் நுழைக்க முடியாத இரும்பு வளையத்திற்குள் தனது உடலையே நுழைத்து வெளியேறிவிட்டு இறுக்கமான முகங்களிடம் அன்பு எதிர்பார்த்துத் தட்டேந்திச் செல்லும் குழந்தைகள். கொஞ்சம் அதிக சூடான காப்பிக் கோப்பையைக் கூட ஏந்த முடியாத வயதில் கொதிக்கும் கண்ணாடிக் கரைசல்களை வளையல்களாக்கும் தொழிலில் குழந்தைகள். விடியுமுன் தோட்டங்களில் வர்த்தகத்திற்காக மல்லிகைப் பூக்கள் பறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள். குழந்தைகள் தினம் என்ன, குழந்தைமை என்றாலே இன்னதென்று அறியாத குழந்தைகள்.

    உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அதிக பாதிப்புகளுக்கு உட்படுபவர்கள் குழந்தைகள். அருகில் இருக்கும் குழந்தையின் மேல் அலட்சியமாக ஊதிவிடப்படும் சிகரெட் புகை வன்முறை மிகுந்தது. வகுப்பறையில் அசந்து தூங்கிவிடும் குழந்தை மீது அடுத்த மாணவரைத் தண்ணீர் எடுத்து ஊற்றுமாறு சொல்வது இன்னுமே இழிவான வன்முறை. ஆர்வமாகக் கேள்வி கேட்கும் சிறுமியை அதட்டி உட்கார வைப்பது தண்ணீர் அல்ல, வெந்நீரை எடுத்துத் தலை மேல் ஊற்றுவதற்குச் சமம். மதிப்பெண்களைத் தரவாரியாக வாசித்துக் காட்டி அழவைப்பது நெருப்பள்ளிப் போடுவதற்குச் சமம். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா(ய்) என்றார் பூதத்தாழ்வார்! (தகளி=அகல் விளக்கு). குழந்தைகள் தினத்தன்று மிட்டாய் கூடக் கொடுக்க வேண்டாம், அன்பு நிரம்பிய பார்வை பார்த்தாலே கொண்டாடிக் கொள்வர் குழந்தைகள்.

    ஐந்து அல்லது ஆறு வயதிற்குள் ஒரே நேரத்தில் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு என மரியா மாண்டிசோரி போன்ற கல்வியாளர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். சுவர்களைத் தமது ஓவியக் கூடங்களாக்கிக் கொள்ளவும், கேட்பதையெல்லாம் பேசவும், பார்ப்பதையெல்லாம் கேள்வியால் துளைக்கவுமான வயதில் முடக்கப்படும் குழந்தைகள், பின்னர் மூர்க்கமாக வெளிப்படுகையில் திணறுகிறது சமூகம். தங்கள் கனவுகளை சேமித்து வைக்கும் உண்டியலாக பெற்றோரால் பார்க்கப்படும் குழந்தைகள் ஒருபோதும் அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற விரும்புவதில்லை. உத்தரவுகள், விசாரணைகள், சரிபார்த்தல்கள், சந்தேகக் கேள்விகள் இவற்றின் கறைபடியாத உள்ளார்ந்த உரையாடல்களுக்கு ஏங்குகின்றனர் குழந்தைகள். உறக்கவேளை கதைகள் மீது காதலோடு காத்திருந்து உறங்கிப் போகின்றனர் குழந்தைகள். காசுகளைக் கொட்டிச் சேர்க்கப்படும் பள்ளிக்கூடங்களில் மறுக்கப்படும் விளையாட்டு நேரம், ஒடுக்கப்படும் பரஸ்பர பேச்சு, கண்டிக்கப்படும் நட்பு இவற்றின் வெப்பம் தாளாது வாடிப் போகின்றனர் குழந்தைகள்.

    அங்கீகாரமற்றுக் கடந்து போய்க் கொண்டிருக்கும் பருவத்தில் எங்கிருந்தோ வெளிப்படும் கள்ளத் தனமான அன்பில் ஏமாந்து தடுமாறி வீழ்கின்றனர் குழந்தைகள். நவீன தாராளமயம் சீரழித்துவிட்ட உறவுகளின் இழப்பில் தாத்தா பாட்டிகளையும், அவர்களது அன்பு முத்தங்களையும், அனுபவக் கதைகளையும், அரவணைப்பையும் பறிகொடுத்து வாட்டமுற்றுப் போகின்றனர் குழந்தைகள்.

    ஆனாலும் நம்பிக்கை தொலைத்துவிடாதவர்கள் குழந்தைகள். போராட்ட உணர்வை இன்னும் பத்திரம் காத்து வைப்பது குழந்தைப் பருவம். தேடலின் ஊற்று குழந்தைமைக் காலம். மிக முக்கியமாக மனமார மன்னிக்கத் தெரிந்தவர்கள் குழந்தைகள். முந்தைய நாளின் சோகத்தை அடியோடு கழற்றிப் போட்டுவிட்ட உற்சாகக் கால்கள் குழந்தையின் பாதங்கள். கடந்த காலத்தை எண்ணி எதிர்காலத்தை சபிக்காமல், நிகழ் காலத்தில் விதைக்கத் தயாராயிருப்பவர்கள், குழந்தைகளைக் கண்டடைந்தாலே போதும். மொழி, மதம், இனம் எந்தத் தடையுமற்ற அன்பின் பெருநிலம் அது. இன்னிசை ஆரவாரமிக்க நறுஞ்சோலை வனம் அது. குழந்தைகள் தினம் இந்த ஓர் ஆற்றுப்படுத்தலுக்காகவும், விழிப்புணர்வுக்காகவும், கொண்டாட்டத்திற்குமாகவே மிகவும் வேண்டி வந்து நம் வாசல் கதவைத் தட்டுகிறது. தவிரவும், எல்லோரையும் மீண்டும் குழந்தைகளாகக் கருதிக் கொள்ள வைக்கும் வரம் அளிக்கவுமதான்!

    *******************

    Share
  • அரும்புகள் 

    – சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்  

    இறை அவன் கிருபையால்
    சிறு மழலையாய் ஜனித்துக்
    குலம்தான் தழைக்கவே                            mom and child
    இல்லத்தின் தெய்வமாகித்
    தாய் தந்தை தாம் மகிழவே
    பிள்ளைக்கலி தான் தீர்த்து
    உற்றாரும் உளம் குளிரவே
    நிலா என நித்தம் உலா வந்து
    சின்னஞ்சிறு அரும்புகளாய்க்
    குறும்புகள் பலவும் செய்து
    சிரித்து உடன் விளையாடி
    கனிமழலைக் கவிகள் பேசி
    அகவை பல கடந்துவந்து
    ஆற்றலால் சிறந்துநின்று
    மெச்சி ஊரார் தானும் புகழப்
    பெற்றோர் தம் மேனி சிலிர்க்க
    ஏற்படும் ஆனந்தம் என்னே
    நாமும் மழலை அவர் முன்னே!

     

    Share
  • பச்சையின் முதுமை

     

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

     

    vetha

     

     

     

     

     

     

     

     

     

    பச்சை வண்ணம் கண்களிற்கு உச்சமாய் அகம் குளிர்வித்துப்
    பருவம் தந்த இலைகளிற்குப் பக்குவமான பங்கீடு முதுமை
    பருவத்தோடு அசைந்து ஆடிப்  புருவமாய் மலர் அருகிலது
    பருவ காலம் மாறிடக் கருகுதலான காம்பு கழன்றது. 

    நிழல் குடையான இலையென்று நிலப் பாவாடையான நிலையின்று
    சருகு சரசரக்கவில்லை பழுத்து  முருகு நிலம் போர்த்தியது
    ஆல் வேலிங்கு  இல்லை வீல் என்று அலறவில்லை
    கால்கள் புதையும் அளவு கீழ் விழுந்தது முடிவு. 

    இலையுதிர் காலம் விரித்தது  இறகு; நீளாது பனி
    இறகுகளை மூடிடும்;  எருவாகி  இசைவாகிப் பூமியோடு மண்ணாகும்
    நான்கு விதப் பருவங்களை  நாம் ரசித்து வாழ்கிறோம்
    நன்கொடையாம் இயற்கையின் அற்புத
    நயப்பாடான பரிசை அனுபவிப்போம்.

     

    Share
  • அறுபடையோன் புகழ்….

    கிரேசி மோகன்

    amu

    ——————————————
    திருவேரகம்(சுவாமி மலை)….
    ————————————-
    குந்திக்கால் மண்டியிட்டுக் கூப்பியக் கைகொண்ட
    தந்தைக்குச் சொன்ன தனயனை -சிந்தைக்குள்
    வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
    ஏரகச் செல்வனை ஏத்து ….(1)

    பழமுதிர்சோலை
    ——————–
    கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
    தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
    கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
    பழமுதிர் சோலைக்குள் புகு ….(2)

    திருத்தணி
    ————–
    விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
    திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
    வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
    பொய்தீசல் சேராது போக்கு….(3)
    திருச்செந்தூர்
    ——————-

    மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
    கூறுபட வைத்த குருநாதன்: -சீறுகடல்
    செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
    சிந்தூர வண்ணனைச் சேர்….(4)

    பழனி
    ——–
    மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
    தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
    குன்றினில் கண்டு களித்திடக் காட்சிதரும்
    நின்றிடும் ஆண்டி நமக்கு….(5)

    திருப்பரங்குன்றம்
    ———————–
    குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
    தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
    தெய்வானைக் கைப்பிடித்த தேவ சகாயனை
    கைவாய்மெய் கொண்டு கருது….(6)….கிரேசி மோகன்….

    Share
  • சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்

    Mar's River Flow in Summer

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Mar's MAVEN Mission

    செவ்வாய்த் தளத்திலே
    செம்மண் தூசிக் கடியிலே
    கண்ணுக்குத் தெரியும் வைரங்கள்
    வெண்ணிறப் பனிக்கட்டிகள் !
    “புனித பசுத்தளம்” என்னும்
    பனித்தளம் மீது
    முக்காலி  ஃபீனிக்ஸ் தளவுளவி
    உட்கார்ந்து உளவுகிறது !
    கோடான கோடி ஆண்டுக்கு முன்
    ஓடிய ஆற்று வெள்ளத்தின்
    நாடி நரம்புகள், தடங்கள் தெரியுது !
    வேனிற் காலத்தில் உப்பு
    நீரோட்டம் உள்ளதை
    மலைச் சரிவுகளில் கண்டது
    செவ்வாய்த் தேடல் விண்ணுளவி !
    செந்நிறக் கோளில் உயிரினச்
    செல்களின் சந்ததி
    ஈரடிப்பு நீரோடைகளில்
    தூங்குதா என்னும்
    கேள்வி அடுத்தெழும்
    விண்ணுளவுப் பயணத்தில் !

    +++++++++++++++++++

    ajay

    பல்லாண்டுகளாக பல்வேறு விண்ணுளவிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி இந்தப் புதிரை விடுவித்துள்ளோம். இப்போது இந்தக் குளிர்மயப் பாலை நிலத்தில் திரவ நீர் ஓடுவதை, உறுதியாக நாங்கள் அறிந்து கொண்டோம்.  செவ்வாய்க் கோளைப் பற்றி மென்மேலும் ஆய்ந்து அறிவது, ஆங்கே உயிரின வாழ்வுத் தகுதி ஆதரவுக்கு வழி உள்ளதைக் கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத் தேடலில் எங்கே உயிரின வாழ்வுத் தகுதி வசதிகள் உள்ளன என்றும் தெரிந்து கொள்கிறோம்.

    மைக்கேல் மேயர் [நாசா தலைமை விஞ்ஞானி, செவ்வாய்க் கோள் தேடல் திட்டம்]

    செவ்வாய்க் கோள் நீரைப் பற்றிப் பெரும்பாலோர் சொல்லும் போது, அங்கே உறைந்திருக்கும் நீர் அல்லது பூர்வீகப் பனித்தள நீரைத்தான் குறிப்பிடுகிறார்.  இப்போது மேம்பட்ட வரலாறு உள்ளது தெரிகிறது. நாங்கள் மீளும் சரிவுப் போக்கு நீரோட்டங்கள் மூலமாக முதன்முதல் ஒளிப்பட்டைக் காட்சியாய் [Spectral Detection] திரவ நீரை ஐயப்பாடின்றி கண்டோம்.

    லுஜேந்திரா ஓஜா [Lujendra Ojha, Georgia Institute of Technology, Atlanta, USA]

    Mars brine water flow

    எமது செவ்வாய்க் கோள் வேட்கைக் குறிப்பணி, பிரபஞ்சத்தில் உயிரின மூலவிகள்  இருப்பதை உளவு செய்ய நீரைத் தேடிச் செல்வதே.  இப்போது நாங்கள் நீடிய காலம் ஐயுற்ற நீரிருப்பை உறுதியாக விஞ்ஞானச் சான்றுடன் அறிந்து கொண்டோம்.  செவ்வாய்ச் சரிவில் இன்று ஓடும் உப்பு நீரோட்டமாக இருந்த போதினும் இதுதான் இப்போது குறிப்பிடத் தக்க சிறப்பு கண்டுபிடிப்பாகக் கருதப் படுகிறது.

    ஜான் கிருன்ஸ்ஃபெல்டு  [நாசா விஞ்ஞானத் திட்ட ஆளுநர்]

    நாங்கள் பருவகால நிகழ்ச்சியாகப் பரவிய ஈரடிப்பு உப்பு [Hydrated Salts] நீரோட்டங்களை மலைச் சரிவுகளில் மீளும் நேர்போக்கில் செல்லக் [Recurring Slope Lineae] கண்டோம்.  இந்தக் கருநிற நெளிவுச் சிற்றாறுகள் ஈரடிப்புக் காரணமாக [Dark Streaks are sources of Hydration]  இருக்கக் கூடும்.

    லுஜேந்திரா ஓஜா [Lujendra Ojha, Georgia Institute of Technology, Atlanta, USA]

    Martian glacier

    சூனியச் செவ்வாய்க் கோளில் வேனிற் கால உப்பு நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு

    2015 செப்டம்பர் 28 ஆம் தேதியில் நாசாவின் மேவன் விண்ணுளவி [MAVEN Spacecraft] முதன்முதல் உறுதியாகச் செவ்வாய்க் கோளின் மலைச் சரிவுகளில் மீளும் வேனிற் காலத்து உப்பு நீரோட்டச் சிற்றோடைகளைப் [Recurring Slope Lineae]  படமெடுத்துக் காட்டியுள்ளது. பல்லாண்டுகளாக பல்வேறு விண்ணுளவிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி இந்தப் புதிரை விடுவித்துள்ளார்.  இப்போது அந்தக் குளிர்மயப் பாலை நிலத்தில் திரவ நீர் ஓடுவதை, உறுதியாக அறிந்து கொண்டுள்ளார்.  செவ்வாய்க் கோளைப் பற்றி மென்மேலும் ஆய்ந்து அறிவது, ஆங்கே உயிரின வாழ்வுத் தகுதி ஆதரவுக்கு வழி உள்ளதைக் கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத் தேடலில் எங்கே உயிரின வாழ்வுத் தகுதி வசதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ளவும் வழி வகுக்குகிறது.

    Ancient Water Flows hint life in Mars

    குறுகிய பல திரவ நீரோட்டங்கள் கருமை நிறத்தில் சுமார் 100 மீடர் [300 அடி] நீளத்தில் செவ்வாய்க் கோள் சரிவை நோக்கிப் பாயும் சிற்றோடை களாய்க் காணப்பட்டன.  நீரோட்டமே செதுக்கிய நீரோடைகள் அவை. சமீபத்தில் அண்டக்கோள் விஞ்ஞானிகள் [Planetary Scientists] ஹேல் பெருங்குழிச் சரிவுகளில் [Hale Crater Slopes] ஈரடிப்பு உப்புகள் [Hydrated Salts] இருப்பதைக் கண்டனர்.  அவையே சிற்றோடைகள் திரவ நீரோட்டத்தால் செதுக்கப் பட்டவை என்பதை எடுத்துக் காட்டின. ஒளிப்பட்டை நீல நிறமாகத் தெரிவதின் காரணம், பைராக்சின் தாதுக்கலவை [Pyroxene Mineral].  அவை ஒருவிதப் பெர்கோலேட் தாதுக்கள் [Magnesium Percholate or A Mixture of Magnesium & Sodium Percholates]. கோடைக் காலத்தில் திரவ நீரோட்டம் பொங்கித் தணிவதும் தெரிந்தது. குளிர் காலத்தில் நீரோட்டம் அடங்கிச் சிற்றோடைகள் வெறுமையாயின. அவ்விதம் நீரோடும் சிற்றோடைகள் செவ்வாய்க் கோளின் பல இடங்களில் மைனஸ் 10 F [- 23 C] டிகிரிக்கு மேலாக உள்ள போது தெரிந்து, குளிர் காலத்தில் மறைந்து போயின.  தற்போது [அக்டோபர் 2015] செவ்வாய்க் கோளில் பல டஜன் தளங்களில் கோடைக் காலத்தில் இம்மாதிரித் திரவ நீரோட்டச் சிற்றோடைகள் காணப் பட்டுள்ளன.  அடுத்து செவ்வாய்த் தள ஆய்வுகள் இதுபோன்ற ஈரடிப்பு ஓடைகளில் உயிரின இம்மிகள் உள்ளனவா என்பதாக இருக்கும்.

    +++++++++++++++++++++

    Mars Exploration

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w

    http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001

    http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001

    http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/

    Mars dust cover ice

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

    செவ்வாய்க் கோளின் பனித்திரட்சி [Mars Glacier] அளவைக் கணித்ததில் அதன் கொள்ளளவு 150 பில்லியன் கியூபிக். செ.மீ. என அறிந்தோம். அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்பினால் 1.1 மீடர் [3 அடி] தடிப்பு பனித்தள வடிவம் பெறும்.  இந்த பனிக்கடி ஏரிகள் யாவும் செவ்வாய்க் கோளின் வடதென் பகுதிகளின் நடுப்புறத்தில் அமைந்துள்ளன.

    நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர்]

    MARS GLACIERS

    செவ்வாய்க் கோள் தளத்தில் ரேடார் கருவி மூலம் சேகரித்த பத்தாண்டுக் கால பனிக்களத் தடிப்பையும், அதன் நடப்பையும் ஆழ்ந்து ஆராய்ந்தோம். பனித்திரட்சி [Glacier] என்பது ஒரு பெரும் பனிக்குன்று. அதற்கென தனித்த பனித்தள ஓட்டத் தடமும், தோற்ற வரி வடிவமும் உண்டாகி, எமக்கு அதன் மென்மைத் தன்மையைக் காட்டுகிறது.   இவ்வரிப் படங்களை பூமியின் பனித்திரட்சி [Earth’s Glaciers] வரை படங்களோடு ஒப்பிட்டு, நாங்கள் பனித்தள ஓட்ட கணினி மாடல்களை அமைக்கிறோம்.

    நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர், நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்.

    Mars Ice cover

    செவ்வாய்க் கோள் தளத்தில் செய்த புதிய ஆய்வு அறிவிப்பு 

    2015 ஏப்ரல் 9 ஆம் தேதி  “இயற்கை” [Nature] விஞ்ஞான இதழ் அறிவிப்பு மூலம் டென்மார்க் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகக் காலநிலை அறிவியல் பனித்திரட்சி நிபுணர் [Climatologist & Glacier Expert ] நன்னா கார்ல்ஸன் தெரிவிப்பது : செவ்வாய்க் கோளில் புதைந்துள்ள பனிதிரட்சிக் குன்றுகள் [Mars Buried Glaciers] பேரளவு பனிக்கட்டியைக் கொண்டுள்ளன.   அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்ப முடிந்தால், பனி மூன்றடி [1.1 மீடர்] உயரம் தடிப்பாகும் !   மேலும் மூடிய தூசிக்குக் கீழிருக்கும் பனித்திரட்சி வளையங்களில் [Glacier Belts] உள்ளது உறைந்த நீரே [Frozen Water] தவிர  அது உறைந்த கார்பன் டையாக்சைடு இல்லை [Not Frozen CO2] என்பது தெளிவானது.  செவ்வாய்க் கோளின் செந்நிறத் தூசி, பனித்திரட்சியை மூடி, உறைந்த பனிநீர் பரிதி வெப்பத்தில் ஆவியாக மறைய விடாது தடுத்து வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.

    “நீர் இருப்பு உயிரின வளர்ச்சிக்கு மிக முக்கிய மென்று நாமறிவோம்.  செவ்வாய்க் கோளில் நாங்கள் இப்போது கண்டிருப்பது வெறும் நீர் மட்டுமில்லை; அதற்கும் மேற்பட்ட பொருட்கள்:  நமது உடலில் காணும் உயிர் வளர்ச்சிச் சத்துக்களான ஸோடியம், பொட்டாஸியம், மெக்னீஸியம், ஃபுளுரைடுகள் !  ஆயினும் உயிரின விருத்திக்கு ஆதாரமான ஆர்கானிக் மூலக்கூறுகள் இன்னும் செவ்வாயில் காணப்பட வில்லை !  இனிமேல் திட்டமிடும் நாசாவின் அடுத்த பயணம் செவ்வாயில் உயிரினம் வாழ்ந்து வந்திருக்கிறதா என்று கண்டறியச் செல்லும்.”

    “மேலும் இந்த தளப்பகுதி செவ்வாயில் எதிர்காலப் பயணிகள் குடியிருக்கத் தகுதி உள்ளதா என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியும்.  அது நாசாவின் எதிர்காலப் பயணத் திட்டத்தில் ஒன்றாக இருக்கும்.”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    MAVEN Spacecraft

    “இறுதியில் நாங்கள் செவ்வாய்த் தள மண்ணை ஆராய முடிந்து அதில் ஒட்டி இருப்பது உறைந்த நீரென்று உறுதிப் படுத்தினோம்.  மேலும் நீரான அதைத் தொடவும், சுவைக்கவும் முடிந்தது !  இதற்கு முன்பு சாதிக்காத ஒரு சோதனை அது !  அதன் சுவை மிக்க இனிமையானது !  இதைக் கண்டதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம்.

    வில்லியம் பாய்டன், ஃபீனிக்ஸ் விஞ்ஞானி, அரிஸோனா பல்கலைக் கழகம். [ஜூன் 2, 2008]

    “ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது.  தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது.  ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது.”

    டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

    “செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம்.  எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன் படுத்தவும் முடியுமென நினைக்கிறேன்.  அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன்.  செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை!  முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

    மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]

    Water Flow on Mars

    21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் மகத்தான விண்வெளிக் கண்டுபிடிப்பு

    ஆகஸ்டு முதல் தேதி செவ்வாய்க் கோள் தளத்தில் உள்ள பனித் திரட்டுகளை உருக்கி நீரென்று நிரூபித்து நாசாவின் ஃபீனிக்ஸ் விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் ஒரு மகத்தான பொன் மைல் கல்லை நிலைநாட்டினார் !  இதுவரை அது நீர்ப்பனிக் கட்டியா அல்லது உறைந்த கார்பன் டையாக்ஸைடு வாயுக் கட்டியா என்னும் குழப்பத்தில் இருந்தது.  இப்போது அந்து ஐயமின்றி 100% நீர் என்பது உறுதியானது ! ஃபீனிக்ஸ் தளக்கருவி பனிக்கட்டியை உருக்கி நீரென்று சுவைத்துப் பார்த்து விட்டது என்று விஞ்ஞானிகள் பீடும், பெருமிதமும் கொள்கிறார் !  இந்த மகத்தான வெற்றி நாசாவுக்கு ஃபீனிக்ஸின் ஆய்வுக் காலத்தை இன்னும் ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டாலர் செலவில் நீடிக்க (செப்டம்பர் 30 தேதி வரை) அனுமதி கிடைத்துள்ளது !  செந்நிறக் கோள் செவ்வாயில் நீர் இருப்பது மெய்ப்பிக்கப் பட்டாலும் ஆங்கே உயிரினம் விருத்தி அடைந்ததற்குரிய சான்றுகள் இன்னும் கிடைக்க வில்லை !

    Clipboard02

    ஓராண்டு முன்பு ஏவப்பட்ட ஃபீனிக்ஸ் தளவுளவி விண்கப்பல் செவ்வாய்க் கோளில் நீர்  இருக்கிறதா என்று அறியவும், உயிரின மூலவிகளை வளர்க்கும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் (Complex Organic Molecules) உள்ளனவா என்று தெரிந்து கொள்ளவும் அனுப்பப் பட்டது.  அதற்கும் முன்னால் சென்று செவ்வாய்க் கோளைச் சுற்றிய ஆடிஸ்ஸி விண்கப்பல் (Odyssey Spacecraft) ஃபீனிக்ஸ் தளவுளவி இறங்கப் போகும் களத்தில் பனிக்கட்டிகள் உருகுவதைப் படமெடுத்து அனுப்பியது.  இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாய் இறங்கிய ஃபீனிக்ஸ் தளவுளவி செவ்வாய்த் தள மண்ணை அள்ளி இரசாயன ஆய்வுக் கருவியில் இடும் அகப்பையைக் கொண்டது.

    ஃபீனிக்ஸ் தளவுளவி நச்சு மூலக்கூறு (Toxic Molecule) கண்டது

    நாசா விண்தேடல் விஞ்ஞானிகள் செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவியின் மெக்கா கருவி [Microscopy, Electrochemistry, Coductivity, Analyzer (Meca)] ஒரு நச்சுப் பொருளைக் கண்டுள்ளதாகக் கூறினார்.  ஆகஸ்டு 5 ஆம் தேதி தளவுளவியின் அகப்பை எடுத்த மாதிரி மண்ணில் இரசாயனத் தீவிர இயக்கமுடைய பெர்குளோரேட் (Perchlorate) உப்பு கலந்திருப்பதாகக் கண்டது.  மேலும் அந்த இரசாயனப் பொருள் மற்ற இடத்திலும் பரவி உள்ளதா என்று அறியப்படும்.  பூமியில் மிக்க வரட்சியான பாலைவனப் பகுதிகளில் பெரும்பாலும் அந்த பெர்குளோரேட் இரசாயனம் காணப்படுகிறது.  செவ்வாய்த் தளத்தை ஒத்த தென் அமெரிக்கா சில்லியின் அடகாமா பாலைவனத்தில் (Atacama Desert, Chille) அது இருப்பதாக அறியப்படுகிறது.

    Martian water

    பெர்குளோரேட் உப்பு உயிரினத்தை விருத்தியும் செய்யாது, சிதைக்கவும் செய்யாது.  அது ஓர் ஆக்ஸிடைசிங் அயான் (Oxydising Ion). அதில் ஒரு குளோரின் அணுவை, நான்கு ஆக்ஸிஜென் அணுக்கள் சுற்றி உள்ளன.  அது இரசாயன இயக்கத்தில் ஆக்ஸிஜன் வாயுவை வெளியாக்குகிறது.  ஆனால் அதிலிருந்து குளோரின் வாயு வரவில்லை.  சில உயிரினச் செல்கள் பெர்குளோரேட்டைத் தீனியாய் எரிக்கின்றன. சில பயிரினங்கள் அதனைத் தம்முள்ளே சேமித்து வைக்கின்றன.  முக்கியமாக பூமியில் ராக்கெட் உந்திச் செல்ல பெர்குளோரேட் இரசாயனம் எரிசக்தியில் (Used in Rocket Fuel) பயன்படுகிறது.

    பூமியில் வாயுத் தூசிகள் சூரிய ஒளியில் பட்டு பெர்குளோரேட் மூலக்கூறு உருவாக்கப் படுகிறது.  பிறகு அது வரண்ட தளத்தின் மீது தங்கி விடுகிறது.  ஈரமான அரங்குகளில் அது மண்ணுக்குள் இறங்கிக் கொள்கிறது.  பூமியில் சில வித பாக்டீரியாக்கள் தமது உயிர்ச்சத்து மாறுபாடுக்கு (Metabolism) பெர்குளோரேட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன ! “பெர்குளோரெட்டுகள் செவ்வாய்க் கோளின் தளங்களில் நீரிருந்த வரலாற்றைச் சொல்லும்,” என்ற் ஃபீனிக்ஸ் ஆய்வாளர் ரிச்சர்டு குயின் (Richard Quinn) கூறினார்.

    Clues for water in Mars

    செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவி கண்ட முதல் பனித்திரட்டு !

    2008 மே மாதம் 30 ஆம் தேதி சமீபத்திலே 420 மில்லியன் டாலர் திட்டமான செவ்வாய்க் கோளில் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி புதியதோர் விந்தைத் தகவலைப் பூமிக்கு அனுப்பியிள்ளது ! “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி ! மெய்யாக ·பீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப் பட்டது.  அதாவது விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி ·பீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது !  மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்ட முள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  அடுத்து ·பீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது.  அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி !  அதனுடைய வடிவத்தைக் கண்டு, அது காணப்பட்ட காலநேர உஷ்ண நிலையை [-300 C (-220 F)] ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மாதிரிப் பனிக்கட்டி நீராக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

    Flood waters on Mars -1

    ஃபீனிக்ஸ் எதிர்த்தள்ளி உந்துகள் இயங்கிக் கீழே மெதுவாக இறங்கிய போது மேலாகக் கிடந்த செம்மண்ணை வெளியேற்றித் தோண்டிய 6 செ.மீ. (~2.5 அங்குலம்) ஆழப் பள்ளத்தில் பனிக்கட்டி மாதிரி எடுக்கப்பட்டது.  அவ்விதம் தளவுளவியின் கரத்தில் எடுக்கப்பட்டு முதன்முதலில் கண்களில் தெரிந்த பனிக்கட்டி விஞ்ஞானிகளிடையே உற்சாகக் கொந்தளிப்பைத் தந்திருக்கிறது.  புதிய உலகில் குளிர்ந்த சுத்தமான நீர்க் கண்டுபிடிப்பு மனிதப் பயணத்துக்கும், குடியேற்றத்துக்கும் மிகவும் உதவிடும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அதிசயச் செய்தியாகும்.  திட்டமிட்டபடித் தளவுளவி பனித்தளத்தில் தடம் வைக்காது வேறு வேண்டாத பாறைத் தளத்தில் பாதம் பதித்து விட்டதோ என்றோர் ஐயப்பாடு முதலில் எழுந்தது !  அடுத்து அறிந்த தகவலில் தளத்தின் எதிரொளிப்புத் தன்மைகள் உளவப் பட்டு வெண்ணிறப் பனித்தளம் பளிச்செனத் தலைகாட்டி விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தது.  அந்தப் பனித்திரட்டு பனிநீர்க்கட்டியாக இருக்கக் கூடும் என்று தீர்மானிக்கப் பட்டது !  “இன்று என்ன சேதி” என்று கேட்டால் எந்த நாசா விஞ்ஞானியும் “செவ்வாயில் நீர்ப்பனிக் கட்டியைக் கண்டோம்” என்றுதான் சொல்கிறார்.  இந்த பனித்தள இடத்தைதான் நாசா விஞ்ஞானிகள் உன்னதப் படமெடுப்புக் காமிரா மூலம் [High Resolution Imaging Science Experiment (HiRISE Imager of Mars Orbiter)] முன்னால் விண்ணுளவிக் கப்பல் மூலம் தேர்ந்தெடுத்தனர்.

    Fig 1A South Polar Ice Depth

    செவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன.  துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும்.  நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது.  ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப்படுகிறது.  துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.

    பனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம்.  செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது.  அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே !

    Fig 7 North Polar Ice Cap

    செவ்வாய்க் கோளின் துருவப் பனிப் பாறைகள்

    செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது!  துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது.  வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது!  மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது.  கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வறட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.

    அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன.  கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வறட்சிப்பனி [Dry Ice or Frozen Carbon dioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    Picture Credits:  NASA, JPL, ESA & Wikipedia

    1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
    2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
    3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
    4  Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    6  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
    [Author’s Article on Mars Missions]
    7  Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    8  NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    9  Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
    10 http://www.Space.com/missions/ Phoenix Mars Lader (Several Articles)  [Aug 31, 2005]
    11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
    12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
    13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
    14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007]
    15 Phoenix Mission Control Team Poised for Epic Landing on Mars Planet – The Dailey Galaxy (www.dailygalaxy.com/) [May 23, 2008]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html(Phoenix Launch Aug 7, 2007)
    17 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html(Mars Express Radar Finds Water Source in Mars South Pole)
    18. BBC News – Mars Lander is in Good Health [May 27, 2008]
    19 The New York Times – Mars Lander Transmits Photos of Arctic Terrain [May 27, 2008]
    20 RedOrbit News – Phoenix Lander Spotted from Mars Orbiter (www.redorbit.com) [May 28, 2008]
    21 Future Mission to Mars – Follow on Mars Missions / Mars Sample Return [May 28, 2008] (www.vectorsite.net/tampl_08.html)
    22 CNN News : Pictures Boost Hopes for Mars Ice Discovery [May 31, 2008]
    23 NASA’s Phoenix Lander Robotic Arm Camera Sees Possible Ice [May 30, 2008]
    24 Twittering from Mars – The Phoenix (Mars Lander Probe) on Ice [June 3, 2008]
    25 Phoenix Lander’s Robotic Arm Grabs a Scoop of Mars (Soil) [June 2, 2008]
    26 VOA News : Phoenix Spacecraft Confirms Water on Mars By : Art Chimes Washington DC [Aug 1, 2008]
    27 VOA News : NASA’s Phoenix Lander Finds Toxic Chemical on Mars [Aug 5, 2008]
    28 Phoenix Mars Team Opens Window on Scientific Process [Aug 5, 2008]
    29 BBC News : Open Science Promised for Phoenix [Aug 6, 2008]
    30 The New York Times : Alkaline Soil Sample from Mars Reveals Presence of Nutrients for Plants to Grow [June 27, 2008]
    31 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40806051&format=html (திண்ணைக் கட்டுரை-1)
    32 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805291&format=html (திண்ணைக் கட்டுரை-2)
    33 ABC News : Phoenix Lander Finds Water on Mars [Aug 1, 2008]

    34  Water on Mars Discovered by Phoenix Mission [Aug 5, 2008]

    35  Sky & Telescope Magazine – Phoenix Digs in By : Kelly Beatty  [September 2008]

    36.  http://www.sciencedaily.com/releases/2014/09/140929154248.htm [September 29, 2014]

    37.  http://www.marsdaily.com/reports/Mars_dust-covered_glacial_belts_may_contain_tons_of_water_999.html  [April 9, 2015]

    38. http://www.onenewspage.com/n/Science/754zwhlg5/Dust-covered-ice-glaciers-found-on-Mars.htm  [April 8, 2015]

    39.  http://www.sciencedaily.com/releases/2015/04/150408102701.htm  [April 8, 2015]

    40.  http://phys.org/news/2015-04-mars-belts-glaciers-frozen.html  [April 7, 2019]

    41. http://www.marsdaily.com/reports/Mars_rover_data_boosts_hope_for_liquid_water_on_Mars_999.html  [April 13, 2015]

    42.  http://www.marsdaily.com/reports/Mars_might_have_liquid_water_999.html [April 17, 2015]

    43.http://www.marsdaily.com/reports/Strongest_evidence_yet_of_liquid_water_on_Mars_NASA_999.html  [September 28, 2015]

    44.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/10/nasa-mars-ancient-ocean-larger-than-earths-arctic-ocean.html?  [October 6, 2015]

    45.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/-once-an-ancient-blue-world-nasa-tv-to-live-stream-new-findings-on-fate-of-mars-atmosphere.html  [November 2, 2015]

    46. http://www.mhttp://Marsdaily.com/reports/NASA_mission_reveals_speed_of_solar_wind_stripping_Martian_atmosphere_999.html  [November 5, 2015]

    47. http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/news-flash-nasa-tv-to-live-stream-new-findings-on-fate-of-mars-atmosphere-today.html?  [November 5, 2015]

    48.  https://en.wikipedia.org/wiki/Mars_Reconnaissance_Orbiter   [November 5, 2015]

    49.   http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/nasa-news-update-solar-winds-stripping-mars-atmosphere-over-billions-of-years.html?  [November 5, 2015]

    50.  http://mars.jpl.nasa.gov/mro/mission/overview/

    51.  https://en.wikipedia.org/wiki/MAVEN  [November 6, 2015]

    52  http://www.poandpo.com/in-the-meantime/what-have-we-learned-from-the-discovery-of-liquid-water-on-mars-7-11-2015/  [November 7, 2015]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  November 13, 2015

    Attachments area
    Preview YouTube video Mars Reconnaissance Orbiter: Water Flowing on Mars

    Mars Reconnaissance Orbiter: Water Flowing on Mars

    Preview YouTube video Animation of Site of Seasonal Flows in Hale Crater, Mars

    Animation of Site of Seasonal Flows in Hale Crater, Mars

    Preview YouTube video NASA Announces Discovery Of Flowing Water On Mars, Sept 28, 2015

    NASA Announces Discovery Of Flowing Water On Mars, Sept 28, 2015

    Preview YouTube video Buried Glaciers found on Mars

    Buried Glaciers found on Mars

    Preview YouTube video Glaciers of Frozen Water Found on Mars

    Glaciers of Frozen Water Found on Mars
    Share
  • அவன்,அது,ஆத்மா (38)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 38

    சென்னையில் அவனுக்குக் கிடைத்த முதல் வேலை

    அவனுக்கு மாமா வீட்டில் பெரியம்மா, தாத்தா, பாட்டி என்று அருமையான உறவுகள் இருந்தனர். அவன் மீது அன்பு பொழிந்தனர். இருப்பதை வைத்துக் கொண்டு எப்படி வாழ வேண்டும் என்பதை அங்கும் அவன் கற்றுக்கொண்டான். விருந்தோ, பத்திய உணவோ எதிலும் அன்பு நிறைந்திருக்கக் கண்டான். அவன் வேலைதேடி சில பத்திரிக்கை அலுவலகங்களுக்குச் சென்று வந்தான். ஆனால் அவனுக்கு மாமாவுக்கு அதில் விருப்பம் இல்லை. அவனுக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்து வந்தார். அவனை மாம்பலம் ரயில் நிலையம் சாலையில் இருந்த “மாம்பலம் டெக்நிக்கல் இன்ஸ்டிடூடில்” சேரச் செய்து தட்டச்சும், சுருக்கெழுத்தும் மேலும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்த்தார். அவன் அதையும் நன்கு கற்றான். ஆனாலும் அவனுக்குள் இருந்த கவிஞன் அவனை மத்திய நூல் நிலையம் சென்று நிறைய இலக்கிய நூல்களைப் படிக்கத் தூண்டிக் கொண்டே இருந்ததால் மாலை வேளைகளில் அவன் நூலகத்தில் சிறந்த நூல்களைத் தேடித் படித்துக் கொண்டிருந்தான்.

    ஒருநாள் அவனுக்கு அம்மா வழிப் பாட்டி, அவனை அழைத்துக் கொண்டு இராயபேட்டையில் அப்பாக்கண்ணு முதலித்தெருவில் 13ம் எண் இல்லத்தில் வசித்து வந்த பாட்டியின் சகோதரியின் பெண் இராஜம்மாள் வீட்டிற்கு அவனை அழைத்துக் கொண்டு சென்றாள். இராஜம்மாள் அவனுக்கு ஒன்று விட்ட பெரியம்மா. அவனுக்குப் பாட்டியும், இராஜம்மாப் பெரியாம்மாவின் தாயாரும் கேரளாவில் திருச்சூரில் வெள்ளிநெழி என்ற இடத்தில் வசித்து வந்தனர். இராஜம்மாப் பெரியம்மாவின் கணவர் எஸ். ராமகிருஷ்ணன். அவருக்கு அவனது பாட்டியின் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு. அவர் சென்னையில் ஓபராய் ஹோட்டெல்ஸ், ஈஸ்ட் இந்தியா ஹோட்டெல்ஸ் நிறுவனங்களுக்கு ஜாயின்ட் செகரட்ரி (Joint Secretary) என்ற உயர்ந்த பதவியில் இருந்தார். அந்த நிறுவனம் மவுண்ட் ரோடில் (இப்பொழுது அண்ணா சாலை) ஆனந்த் தியேட்டருக்கு எதிரில் உள்ள ஹமிட் பில்டிங்”ல் இருந்தது.

    அவனது பாட்டியும், அவனும் இராஜம்மாப் பெரியம்மாவின் வீட்டிற்குள் நுழையும் வேளையில் எஸ்.ராமகிருஷ்ணன் தனது அம்பாசிடர் காரில் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவனது பாட்டியைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி , ” சித்தி…வாங்கோ…எப்படி இருக்கேள்” என்று விசாரித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் சென்ற உடனேயே மிகுந்த உரிமையுடன் ,” இராமகிருஷ்ணா… இவன் பாப்பாவின் (அவனுக்கு அம்மாவை அப்படித்தான் அவர்கள் அழைப்பார்கள்) புள்ளை..விஸ்வநாதன். டைப், ஷார்ட்ஹென்டு படிச்சிருக்கான். இவனுக்கு ஒன்னோடு கம்பெனில ஒரு வேலை போட்டுக் கொடு…அப்பறம் அவனே முன்னுக்கு வந்துடுவான்..இப்போதே அவனையும் ஒன்னோட கூட்டிண்டு போ .” என்று அவனைக் காட்டி வேலைக்கு சீபாரிசு செய்தாள். ஒரு ரோஸ் நிறத்தில் சட்டையும், சட்டைப் பையில் ஒரு பேனாவும், நாலுமுழ வேட்டியுமாக பாட்டியின் அருகில் நின்று கொண்டிருந்த அவனை ராமகிருஷ்ணன் பார்த்து, ” விஸ்வநாதா…வா என்னோட… என்று காரின் பின்பக்கம் தன்பக்கத்தில் அவனை அமர்த்திக் கொண்டு,” சித்தி…இங்கே இருங்கோ…நான் ஆபீஸ்ல இருந்து வந்தப்பரமா போய்க்கலாம்” என்று சொல்ல அந்த அம்பாசிடர் கார் புறப்பட்டது.

    அலுவலகம் சென்றதும் இராமகிருஷ்ணன் தனது உதவியாளர் P.A. கிருஷ்ணன் என்பவரை அழைத்து,” கிருஷ்ணன் …இந்தப் பையன் பேரு விஸ்வநாதன்…இவன் டைப், ஷார்ட்ஹென்டு படிச்சிருக்கான். இவனுக்கு நம்ம ஆபீஸ்ல டெலிவரி செக்ஷன் தொடங்கி எல்லா வேலைகளையும் கற்றுக் கொடு…ஆபீஸ்ல மத்தபேர்களோட அறிமுகப் படுத்திவை…வேலைய நல்ல கத்துக்கொடு…” என்று சொன்னார்.

    P.A. கிருஷ்ணன் அவனை அழைத்துக் கொண்டு வெளியில் உள்ள வேறு ஒரு அறையில் அவனை அமரச் செய்து, விபரங்கள் அறிந்து கொண்டார். டைப் செய்து காட்டச் சொன்னார். “நன்னா வேகமாத்தான் அடிக்கறே”.. என்று பாராட்டினார். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராமச்சந்திரன், சுப்பிரமணியன், சிதம்பரம், மணிவண்ணன், கே.தண்டபாணி, கணேசன், ஆறுமுகம் அனைவருக்கும் அவனை அறிமுகம் செய்து வைத்தார். அந்த அலுவலகச் சூழ்நிலை அவனுக்குப் பிடித்திருந்தது. P.A. கிருஷ்ணன் அவனிடம் அவனது கல்விச் சான்றிதழ்களை மறுநாள் கொண்டுவரும்படிச் சொன்னார். மேலும் அவனுக்கு மாதம் Rs. 144/- சம்பளம் என்றும் வேலை நாட்களில் தினமும் ஐம்பது பைசாக்கள் “டீ அலவன்ஸ்” எல்லாம் சேர்த்து Rs. 157/- மாதச் சம்பளம் என்றும் மூன்று மாதங்கள் கழித்து வேலையை நிரந்தரம் செய்வார்கள் என்றும் சொன்னார். அவனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது. அந்த அலுவலகத்தில் “டெஸ்பேச்” (dispatch) கிளார்க்காகப் பணிசெய்து வந்த மணிவண்ணன் அவனிடம்,” விஸ்வநாதன் …இங்க வாங்க.. இன்னிக்கு இதச் சொல்லித்தரேன்…நாளைக்கு ராமச்சந்திரன் அக்கௌண்ஸ் சொல்லித்தருவார். “செக்” டைப் செய்றத நாயர் சொல்லித் தருவார் என்று அன்போடு சொல்லி அவனது வேலைக்கு பிள்ளையார்ச் சுழி போட்டார். உனக்கு வேறு எதிலும் ஈடுபாடு உண்டா என்று மணிவண்ணன் கேட்டார். “கவிதைகள் எழுதுவேன்” என்றான். “அப்படியா. எனக்கு சினிமாவில் விருப்பம். என்னுடைய மாமாதான் ஆர்.கே.சண்முகம்” என்றார். “யாரு?” என்று அவன் கேட்க,” ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வசனம் எழுதினாரே அந்த ஆர்.கே.சண்முகம்” என்று மணிவண்ணன் சொன்னார். அப்படியாக அந்த முதல்நாள் வேலையும், நண்பர்களின் அறிமுகமும் அவனுக்குக் கிடைத்தது. மாலையில் ஐந்தரை மணிக்கு இராமகிருஷ்ணன் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அவனுக்குப் பாட்டியிடம்,” சித்தி.. விஸ்வநாதன் வேலைக்குச் சேந்தாச்சு…அவனுக்கு மாசம் எல்லாமாச் சேர்த்து “Rs . 157 ” கிடைக்கும் என்றார். “ரொம்ப சந்தோஷம்” என்றாள் பாட்டி. அவனும், பாட்டியும் இராயப்பேட்டையில் இருந்து பஸில் புறப்பட்டு வீட்டிற்கு வந்தனர்.

    மறுநாள் முதல் அவன் தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து “11”ம் நம்பர் பேருந்தில் அலுவலகம் செல்லத் துவங்கினான்.

    13.11.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • “ஆறு படை அழகன்”  — (3)

     க. பாலசுப்பிரமணியன்

    am

    வரமொன்று கேட்பேன், வரமொன்று கேட்பேன்,

    இரு கரம் கூப்பி வரமொன்று கேட்பேன்

    பன்னிரு கை கொண்டு படியளக்கும் அழகா…..  !

    உன்னிரு பாதம் பிடித்து வரமொன்று கேட்பேன் !

     

    இமைப்பொழுதும் உனை மறவாத நெஞ்சொன்று வேண்டும்

    இங்கென்றும்  அங்கென்றும் அலையாத  மனமொன்று வேண்டும்

    வானென்றும் நிலமென்றும், நீரென்றும் நெருப்பென்றும்

    நானென்றும் நீயென்றும் பிரிக்காத நினைவொன்று வேண்டும் !!

     

    நலமான உறவென்றும்  வேண்டும்

    நலியாத உடலென்றும் வேண்டும்

    விதியென்று வீழ்ந்தார்தம் மதி காக்க வேண்டும்

    உனையே கதியென்று வந்தார்தம் விதி மாற்ற வேண்டும் !!

     

    குறையாத அறிவென்றும் வேண்டும்

    நிறைவான மனமென்றும் வேண்டும்.

    அறுசுவையும் ஒருசுவையாக வேண்டும்

    அதுவனைத்தும் உன் அருட்சுவையாக வேண்டும்!!

     

    பிறக்கின்ற சேயெல்லாம் உன் பரிசாக வேண்டும்,

    புவிதன்னில் அமைதிக்கு வித்தாக வேண்டும்

    குன்றாக வேண்டும் ;மனம் குணக்குன்றாக வேண்டும்

    அதில் நீ குடியேற வேண்டும் !!

     

    வரமொன்று கேட்பேன் வரமொன்று கேட்பேன்,

    இரு கரம் கூப்பி வரமொன்று கேட்பேன்

    பன்னிரு கை கொண்டு படியளக்கும் அழகா…..  !

    உன்னிரு பாதம் பிடித்து வரமொன்று கேட்பேன்  !!

    Share
  • பெருமாள் திருப்புகழ்….

    ஒரு முருக பக்தர் ‘’இறுமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி-விடமேநீ’’ என்ற ‘’திருப்புகழ் மந்திரத்தை’’ வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தார்….அருணகியார் வாக்கில் சொக்கினேன்….முன்பு எழுதிய பெருமாள் திருப்புகழ் நினைவுக்கு வந்தது….அதைப் பகிர்கிறேன் தங்கள் வாசிப்புக்கு….அன்புடன் கிரேசி மோகன்….

    பெருமாள் திருப் புகழ்….

    images (1)

    தனதான தத்தன தனதான தத்தன
    தனதான தத்தன -தனதான

    பொது
    ——–

    “கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும்,
    தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
    குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
    படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை

    சபைநாற வைத்திடும் சனிவாயில் சொத்தையும்,
    உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
    செரிமானம் அற்றிட பிரிவாய்(வு)அ சுத்தமும்,
    சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக

    அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
    அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
    அணுகாது சத்துவ மனமேனி உற்றிட
    அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா

    மதுகேசி, சக்கிரன், முலைபூதம், சர்ப்பமும்,
    சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
    தரைசாய இத்தரை அவதார முற்றனை,
    அருளாய்யெ னக்கரி -பெருமாளே”….கிரேசி மோகன்….
    ——————————————————————————————-

    Share
  • தனிமையிலே …

    – தேமொழி

    தனிமையிலே …

    கவிதை மூலம் – எட்கர் ஆலன் போ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    நினைவு தெரிந்த நாள்முதலாக
    நான் வாழவில்லை பிறரைப் போல
    எனக்கு வாழ்க்கையுமில்லை பலரைப் போல
    என் ஆசைகளின் நீரோட்டம்
    தோன்றிய நீரோடையும் வேறுபட்டது
    என்னை வருத்தும் துயரங்களின்
    தோற்றமும் முற்றிலும் வேறுபட்டது
    எனது இதயத்தை மீட்டிடும் இன்ப
    இசையின் ராகமும் வேறுபட்டது
    அனைத்தையுமே நான் நேசித்தேன்
    நேசித்தேன் நான் தன்னந்தனியாகவே!
    என் சிறுவயதிலிருந்தே, புயல்வீசும்
    என் வாழ்வின் அந்த விடியல் முதலே
    என் வாழ்வின் ஏற்றத்திலும் தாழ்விலும்
    என்னைக் குழப்புமிந்தப் புரியாத புதிர்
    காட்டாற்று வெள்ளமானாலும்
    கவின் மிகு நீரூற்றானாலும்
    செந்நிற மலைமுகட்டிலும்
    பொன்னிற ஒளிவீசும்
    கூதிர்காலக் கதிரவனிலும்
    என்னைக் கடந்து செல்லும் புயலிலும்
    அதன் மின்னலிலும் இடியோசையிலும்
    தெளிந்த நீலவானில் திரண்டிடும்
    உருமாறிடும் மழைமேகத்திலும்
    நான் காண்பதென்னவோ
    அச்சமூட்டும் பேயுரு மட்டுமே!

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    Edgar Allan Poe

    Alone

    – Edgar Allan Poe

     

    From childhood’s hour I have not been
    As others were; I have not seen
    As others saw; I could not bring
    My passions from a common spring.
    From the same source I have not taken
    My sorrow; I could not awaken
    My heart to joy at the same tone;
    And all I loved, I loved alone.
    Then- in my childhood, in the dawn
    Of a most stormy life- was drawn
    From every depth of good and ill
    The mystery which binds me still:
    From the torrent, or the fountain,
    From the red cliff of the mountain,
    From the sun that round me rolled
    In its autumn tint of gold,
    From the lightning in the sky
    As it passed me flying by,
    From the thunder and the storm,
    And the cloud that took the form
    (When the rest of Heaven was blue)
    Of a demon in my view.

     

     

    Share
  • அறிந்துகொள்வோம் -24 (காப்பியக் கவிஞர் ஹோமர்)

    -மேகலா இராமமூர்த்தி

    காலத்தை வென்ற கவின்மிகு காவியங்கள்!

    மேற்குலகில் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு, தத்துவம் போன்ற துறைகளின் தாயகமாய்த் திகழ்ந்தவை கிரேக்கமும் உரோமாபுரியும். புராணங்கள் எனப்படும் தொன்மங்களுக்கு இவ்விருநாட்டுக் கதைகளிலும் பெரும்பங்குண்டு. இப்புராணக் கதைகளையே ’இதிகாசங்கள்’ எனும் பெயரால் நாம் இந்தியாவில் அழைக்கின்றோம். நம்மண்ணின் இதிகாசங்களாய்க் கருதப்படும் இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றிற்கு இணையானவை கிரேக்கத்தின் ஆதிகாவியங்களான இலியடும், ஒடிசியும் (Iliad & Odyssey). இந்த அமர காவியங்களைத் தீட்டிய பெருமைக்குரியவர், ’காவியங்களின் தந்தை’ என்று புகழப்படும் ஹோமர். இவருடைய காலம், கிறித்துவிற்குக் கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் முற்பட்டது என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    homerஹோமர் என்றொருவர் இருந்தாரா? (Homeric Question) அல்லது அவருடைய காவியங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் பின்னாளைய கிரேக்கப் புலவர்களின் கவிதைத் தொகுப்புக்களா? எனும் முடிவற்ற விவாதங்கள் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருந்தாலும், ஹோமர் என்றோர் பெரும்புலவர் இருந்தார்; விழியற்றவரான அவர், இணையற்ற காப்பியப் புலமையும், அசாதாரண நினைவுத்திறனும் பெற்றவராய்த் திகழ்ந்தார். அந்நினைவுத்திறனின் துணைகொண்டு, தம்காலத்திற்கு முன்பு மக்களிடையே வழங்கிவந்த புராணச் செய்திகளையும், கதைப்பாடல்களையும் இணைத்து, காலத்தைவென்ற கவிதைக் காவியங்களைப் (Epic poems) படைத்தார் என்று நம்பும் மாந்தரின் எண்ணிக்கையே மிகுதி.

    உண்மை எதுவாயினும், செம்மொழியாம் கிரேக்கமொழியில் முதன்முதலில் கிடைக்கும் பெருங்காவியங்கள் இலியடும் ஒடிசியுமே. பொதுவாக, காவியங்களுக்குப் பாடுபொருளாயிருப்பவை காதலும் வீரமும். ஹோமரின் காவியங்களும் இவற்றிற்கு விலக்கானவை அல்ல. (காதலை அகமென்றும், வீரத்தைப் புறமென்றும் பகுத்துப் பாக்கள் புனைந்தனர் நம் பைந்தமிழ்ப் புலவர்கள் என்பது நாமறிந்ததே.)

    இனி, இலியட் மற்றும் ஒடிசியைச் சற்றே சுவைத்துவிட்டு வருவோம்!

    இலியடை எடுத்துக்கொண்டால், கிரேக்கத்தின் ஒருபகுதியான ஸ்பார்டாவை ஆண்ட ’மேனலாஸ்’ (Menelaus, King of Sparta) எனும் மன்னனைச் சந்தித்துச் சமாதானம் பேசவரும் ட்ராய் நகர (Troy was a famous city in Turkey) இளவரசன் ’பாரிஸ்’ (Paris), அங்கே மன்னனின் மனைவியும், பேரழகியுமான ’ஹெலனை’க் (Helen) கண்டான்; கண்டதும் காதல் கொண்டான். தான் வந்தவேலையை மறந்தான்; ஹெலனை மேனலாஸுக்குத் தெரியாமல் தன்னோடு அழைத்துக்கொண்டு ட்ராய் நகருக்குப் பறந்தான்.

    மனைவியைத் தொலைத்த மேனலாஸ், தன் அண்ணனும், கிரேக்கத்தின் மற்றொரு பகுதியான மைசீனேயின் (Mycenae) மன்னனுமான மாவீரன் ’அகமெம்னானிடம் (Agamemnon) நடந்ததைக்கூறி வருந்தினான். ட்ராயைக் கைப்பற்றிக் கிரேக்கத்தின் எல்லையை விரிவாக்கவேண்டும் என்று ஏற்கனவே துடித்துக்கொண்டிருந்த அகமெம்னானுக்கு இச்சம்பவம் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்ததுபோல் அமைந்து ’ட்ரோஜன்கள்’ (ட்ராய் நகரக் குடிமக்கள்) மீதான பகையை அதிகரிக்கச் செய்துவிட, கிரேக்கத்திற்கும் ட்ராயிக்கும் போர் மூள்கின்றது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை நீடித்ததாகக் கூறப்படும் இந்த ட்ரோஜன் போரின் இறுதி ஐம்பதுநாள் போரை மட்டுமே தன் காவியத்தில் விரிவாய்ப் பதிவுசெய்துள்ளார் ஹோமர். இதனை மகாபாரதத்தின் யுத்தபர்வத்தோடு நாம் ஒப்பிடலாம்.

    கதையமைப்பு, கடவுளரின் பிள்ளைகள் காவியப் பாத்திரங்களாய் மிளிர்கின்ற தன்மை, போர்க்கள நிகழ்வுகள் போன்ற பலவற்றில் இந்திய இதிகாசங்களுக்கும் கிரேக்கக் காவியங்களுக்குமிடையே அதிசயிக்கத்தக்க ஒற்றுமைக்கூறுகள் இருப்பதை இக்காவியங்களைப் பயில்வோர் தெள்ளிதின் உணர்வர்.

    பெண்ணை (ஹெலன்) மீட்பதற்காக நடந்த பெரும்போரே இலியட் காவியமாய் விரியக் காண்கின்றோம். அவ்வகையில், தன் மனைவி சீதையைத் தூக்கிச்சென்ற இராவணனை எதிர்த்து இராமன் புரிந்தபோரை ட்ரோஜன் போரோடு ஒப்பிடலாம். ஆனால், இராமாயணச் சீதையைப்போல் கற்பின் கொழுந்தாகவும், பொற்பின் செல்வியாகவும் திகழ்ந்தவளில்லை இலியட் நாயகி ஹெலன். தனக்குத் துணைவராகும் பேற்றைப் பல ஆடவருக்கு விரும்பியளித்த தயாளகுணத்தினள் அவள்!

    ஹெலனின் இத்தகைய ஒழுக்கக்கேடான நடத்தையை அறிந்த ஷேக்ஸ்பியர், தன்னுடைய As you like it நாடகத்தில், அதன் நாயகி ’ரோசலிண்டை’ (Rosalind) வருணிக்கும்போது, ”பேரழகி ஹெலனின் கன்னங்களையொத்த அழகான கன்னங்களைக் கொண்டவள் ரோசலிண்ட்; ஆனால் அவளைப்போல் சலன சித்தம் கொண்டவள் அல்லள்” (Helen’s cheek, but not her heart…) என்பார் எச்சரிக்கையாக.

    இலியட் காவியத்தின் தன்னேரிலாத் தலைவனாய்த் திகழ்பவன் ’அக்கில்லஸ்’ (Achilles) எனும் மாவீரன். இவன் கடல்தெய்வமான ’தீட்டிஸ்’ (The goddess Thetis) என்பவளுக்கும், மானுட மன்னனான ’பீலியஸூக்கும்’ (Peleus – king of Aegina, located in Greece) பிறந்தவன். தாய், தெய்வப்பிறவியாய் இருந்தபோதினும், தந்தை மானுடன் ஆனபடியால் அக்கில்லஸும் மரணத்திற்கு உட்பட்டவனே! இதனை உணர்ந்த தீட்டீஸ் தன் மகனை மரணமற்றவனாக மாற்ற என்னவழி என யோசித்தாள். உடனே, பாதாளலோகத்தில் உள்ளதும், தன்னில் மூழ்கி எழுந்தவருக்குச் சாகாவரம் நல்குவதுமான ’ஸ்டிக்ஸ்’ (Styx) எனும் புனித நதியின் நினைவு அவளுக்கு வந்தது; ஓடினாள் குழந்தை அக்கில்லஸைத் தூக்கிக்கொண்டு அந்நதி நோக்கி! ஸ்டிக்ஸ் நதியில் அவனைத் தலைகீழாய்ப் பிடித்து முக்கியெடுத்தாள்.

    இந்தப் புனிதநதியானது, சிலப்பதிகாரத்தில் வருகின்ற தெய்வத்தன்மை வாய்ந்ததும், நினைத்ததை அளிக்கவல்லதும், பழம்பிறப்புணர்த்துவதுமான புண்ணியசரவணம், இட்டசித்தி, பவகாரணி எனும் மூன்று பொய்கைகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.  

    புனிதநதியில் நீராட்டப்பட்ட அக்கில்லஸ் உடலின் அனைத்துப் பாகங்களும் மரணத்தை வென்றனவாயின. ஆயினும், மகனைத் தலைகீழாய் நீரிலழுத்தும்போது அவனுடைய குதிகால்கள் நனையாமல் போனதைத் தீட்டீஸ் கருத்தில்கொள்ளத் தவறிவிட்டாள். ஆதலால், அவனுடைய குதிகால்கள் மட்டும் (மரணத்திற்குரிய) பலவீனமானவையாய் அமைந்துவிட்டன. இன்றும்கூட, தனிமனிதர் ஒருவரின் பலவீனத்தைக் குறிக்க ’அக்கில்லஸின் குதிகால்’ (Achille’s heel) சுட்டப்படுவதை நாமறிவோம். (Ex: He is very brave, but fear of snakes is his Achilles’ heel.)

    இவ்வாறு, தன் தெய்வத் தாயால் அதிபலம் பொருந்தியவனாய் மாற்றப்பட்ட அக்கில்லஸ், கிரேக்க நாட்டின் மிகச்சிறந்த போர்வீரனாய்த் திகழ்ந்தான். இம்மாவீரனின் சீற்றப் பெருக்கையும், ஆண்மைச் செருக்கையும் மையக் கருவாய்க்கொண்டு, ட்ராய் நகரின் ’இலியம்’ எனும் கோட்டையில் நடந்த போர்நிகழ்வுகளையே பார்போற்றும் இலியட் காவியமாய்க் கவினுற வடித்துள்ளார் ஹோமர்.

    கிரேக்கர்களின் படைத்தலைவனாய் ட்ரோஜன் போரில் பங்கேற்ற அக்கில்லஸ், கிரேக்க அரசனான அகமெம்னானோடு ஏற்பட்ட மனவேறுபாட்டால் போரிலிருந்து பாதியிலேயே விலகுகின்றான். தனக்கு மாற்றாய்த் தன்னுயிர் நண்பன் ’பாட்ரோக்லோஸை’ப் (Patroklos) போருக்கு அனுப்புகின்றான். நண்பனின் பாதுகாப்புக்காகத் தான் தரித்திருந்த தெய்வத்தன்மை பொருந்திய கவசத்தை அவனுக்கு அளிக்கின்றான். அக்கில்லஸின் கவசத்தை நாம் கர்ணனின் உடலைத் தாங்கிப்பிடித்து அவனை ஆபத்துக்களிலிருந்து காத்த சூரியக் கவசத்தோடு ஒப்பிடலாம். கர்ணன் காய்கதிர்ச்செல்வனின் புதல்வன்; அக்கில்லஸோ கடலன்னையின் மைந்தன்!

    அக்கில்லஸின் கவசத்தை அணிந்து திறம்படப் போரிட்டுக்கொண்டிருந்த பாட்ரோக்லோஸ், துரதிர்ஷ்டவசமாய் ட்ராய் நகரின் படைத்தலைவனும் ஹெலனைக் கடத்திக்சென்ற பாரிஸின் சகோதரனுமான ’ஹெக்டரிடம்’ (Hektor) போர்க்களத்தில் வசமாய்ச் சிக்கிவிட, பாட்ரோக்லோஸின் கவசங்களைப் பிடுங்கி, அவனைக் கடுமையாய்த் தாக்கிக் கொன்றுவிடுகின்றான் ஹெக்டர். அதுகேட்டுச் சினந்தெழுந்தது அக்கில்லஸ் எனும் செங்கட்சீயம். போரில் கலந்துகொள்வதில்லை எனும் தன்னுடைய எண்ணத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் போரில் குதித்தது மீண்டும். அக்கில்லஸைக் களத்தில்கண்ட கிரேக்கப்படை ஆனந்தக் கூத்தாடியது. வெற்றி உறுதி என்று வீரமுழக்கமிட்டது.

    அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. ஹெக்டரைப் போர்க்களத்தில் பந்தாடிய அக்கில்லஸ், அவனை வென்றுவீழ்த்திக் கொன்றான் கோரமாய். அத்தோடு அவன் வெஞ்சினம் அடங்கவில்லை. தன்னுடைய தேர்க்காலில் ஹெக்டரின் பிணத்தைக் கட்டி இழுத்துச்சென்று அவமதித்தான். இவ்வாறு பத்துநாட்கள் ஹெக்டரின் சடலத்தைப் புழுதியில் புரளவிட்டான் அக்கில்லஸ் என்கிறார் ஹோமர். அக்கில்லஸின் இந்த அராஜகச் செயல்கண்ட ஹெக்டரின் தந்தையும் ட்ராயின் அரசருமான ’ப்ரியம்’ (Priyam) கண்ணீர்பெருக்கினார்; ட்ராய் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.

    அதைத்தொடர்ந்து, ட்ராய் அரசரான ப்ரியம் செய்த செயல்கள் இலியடின் கவித்துவத்தைத் தனித்துவம் மிக்கதாய் மாற்றுகின்றன. ஆம்! தன் மகனின் சடலத்தை அக்கில்லஸிடமிருந்து பெறவேண்டும் என்று விரும்பிய அந்த முதிய தந்தை என்ன செய்தார் தெரியுமா?

    போர்முடிந்து ஓய்வாக அக்கில்லஸ் இருந்த ஓர் இரவுவேளையில், நிறையப் பரிசுப்பொருள்களுடன் அவன் தங்கியிருந்த குடிலுக்குச் சென்றார். உணவு மேசைக்கருகே அமர்ந்து எதையோ பருகிக்கொண்டிருந்த அக்கில்லஸின் கைகளை எடுத்து மென்மையாய் முத்தமிட்டார். அவரை அருகில் கண்ட அக்கில்லஸ் குற்றவுணர்வோடு மருண்டு நோக்கினான். தன் தந்தையின் வயதொத்த அவரைச் சந்தித்தவேளையில், தன் தந்தையின் நினைவு வரப் பெற்றவனான். ப்ரியம் பேசலானார், “அக்கில்லஸ்! என் மகன் ஹெக்டரை எந்தக் கையால் கொன்றாயோ, அந்தக் கையை நான் அன்போடு முத்தமிட்டிருக்கின்றேன்; தயவுசெய்து என்மகனின் சடலத்தை என்னிடம் கொடுத்துவிடு!” என்றுகூறித் தான் கொணர்ந்த பரிசுப்பொருள்களை அவன்முன் வைத்து மண்டியிட்டார்.

    ஏற்கனவே அவரின் பரிதாப நிலைகண்டு மனமிளகியிருந்த அக்கில்லஸ், மேலும் அவரைச் சோதிக்க விரும்பாமல், ”ஐய! பரிசுப்பொருள்கள் வேண்டாம்! உங்கள் மகனின் சடலத்தை நீங்கள் தாராளமாக எடுத்துச் செல்லலாம்; அதற்குமுன் இங்கே உணவுண்டு சற்றே இளைப்பாறுங்கள்!” என்றுகூறி அவருக்கு நல்ல உணவும், மதுவும் அளிக்கின்றான். அதனைப் பருகி அங்கேயே ஓய்வெடுத்துவிட்டுத் தன்மகனின் சடலத்தையும் பெற்றுச் செல்கின்றார் அந்த முதியவர்.

    மகனைக் கொன்றவனோடு மகனை இழந்தவன் ஒன்றாக அமர்ந்து உண்பதும் உறங்குவதும் கற்பனைக்கெட்டாத அதிசய நிகழ்வுகள் அல்லவா? இதனைத் தன் காப்பியத்தில் சாத்தியமாக்கியிருக்கும் ஹோமரின் கற்பனைத்திறன் நம்மை பிரமிக்கவைக்கின்றது. ஹெக்டர் அடக்கம் செய்யப்படுவதுடன் இலியட் காப்பியம் நிறைவடைகின்றது.

    காப்பிய நாயகன் அக்கில்லஸ் என்னவானான் என்பதைப்பற்றி அது பேசவில்லை. ஆனாலும், அந்த மாவீரனைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் நமக்குள் குறுகுறுக்கத்தானே செய்கின்றது. இதற்கான விடையைக் கண்டறிய வேண்டுமானால் நாம் ஹோமரின் மற்றொரு காப்பியமான ஒடிசியைப் படிக்கவேண்டும்.

    ட்ரோஜன் போரில் பங்கேற்பதற்காக வந்த ஒடிசியஸ் (Odysseus) எனும் அரசன் (Odysseus – king of Ithaca, it’s a Greek island) போர்முடிந்து தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச்செல்லும்வழியில் தான் சந்திக்கும் இடையூறுகளை எவ்வாறு எதிர்கொண்டு அவற்றை வென்று தாயகம் திரும்புகின்றான் என்பதைச் சொல்லோவியமாக்கியுள்ளது ஒடிசி. இக்கதையின் இடையில்தான் இலியட் நாயகன் அக்கில்லஸைப் பற்றிய செய்திகள் இடைப்பிறவரலாகச் சொல்லப்படுகின்றன.

    அதனை நாமும் அறிந்துகொள்வோம்!

    ஹெக்டரின் மறைவுக்குப் பின்னரும் தொடர்கின்றது ட்ரோஜன் போர். ஒருகட்டத்தில், கிரேக்கக் கடவுளான அப்போல்லோ (Apollo – God of light, prophecy, inspiration, poetry, etc.), ஹெக்டரின் சகோதரனான பாரிஸிடம், அக்கில்லஸை (அவனுடைய பலவீனமான பகுதியான) குதிகாலில் அம்பெய்து கொல்லுமாறு இரகசிய வழிகாட்ட, அவ்வாறே செய்து அக்கில்லஸின் வீரமரணத்திற்கு வழிவகுக்கின்றான் பாரிஸ்.

    அக்கில்லஸின் மரணம், நமக்குத் திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் கிருஷ்ணரின் மரணத்தை நினைவுறுத்துகின்றது. தன் அவதார முடிவில் கிருஷ்ணர் தனியராய் யோகத்தில் அமர்ந்திருந்த வேளையில், அவர் உள்ளங்காலின் தோற்றத்தை ஏதோ விலங்கென்று தவறாக எண்ணிய வேடனொருவன் எய்த அம்பினால் அவர் உயிர்நீத்தார் என்று கிருஷ்ணாவதாரக் கதைகள் கூறுகின்றன. அக்கில்லஸும் அவ்வாறே தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளது ஈண்டுக் கருதத்தக்கது.

    அதெல்லாம் இருக்கட்டும்…ஹெலன் என்ன ஆனாள்? என்றுதானே கேட்கவருகின்றீர்கள்; அதையும் சொல்லிவிடுகின்றேன்!

    ட்ராய் போரில் அவளுடைய காதலன் பாரிஸ் வீழ்ந்துபட, அவள் பாரிஸின் தம்பியான டெய்ஃபோபஸுக்குத் (Deiphobus) துணைவியாகிறாள். பின்பு டெய்ஃபோபஸைக் கிரேக்கர்களிடம் சிக்கவைத்துவிட்டுத் தான் தப்பியோடிவிடுகின்றாள். அவள் மேனாள் கணவனான மேனலாஸ் அவளைத் தன் கையாலேயே கொன்றுவிடுவது என்ற வெறியோடு தேடியலைகின்றான். ஒருநாள் அவன் கையில் சிக்குகின்றாள் ஹெலன். ஆனால் அந்த அழகியைக் கண்டதும் கோபவெறி மாறி மீண்டும் காதல் பிறந்துவிடுகின்றது அவனுக்கு. ஆகவே மீண்டும் தன் பழைய கணவனோடு அவள் ஸ்பார்டாவின் ராணியாய்த் திகழ்ந்தாள் என்கிறது ஒடிசி. ட்ரோஜன் போருக்கு முக்கியக் காரணமாயிருந்த நஞ்சனைய அந்த வஞ்சமகள் யாதொரு தண்டனையும் பெறாதது வியப்பே!

    இலியடுக்கும், ஒடிசிக்கும் கதைப்போக்கிலும் தொடர்பிருப்பதால் (Odyssey is, in part, a sequel to Iliad) இவற்றையும்கூட நாம் ’இரட்டைக் காப்பியங்கள்’ என்று அழைக்கலாம். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியின் சுவையில் ஈடுபட்ட மேனாட்டு அறிஞரான ஜி.யு. போப் அவர்கள் அதனைக் கிரேக்கக் காப்பியங்களான இலியடுக்கும் ஒடிசிக்கும் இணையானது என்று போற்றியிருப்பதை இத்தருணத்தில் நாம் நினைவுகூர்ந்து இன்புறலாம்.

    படிக்கத் தெவிட்டாத தீஞ்சுவைக் காப்பியங்களை யாத்து, ஐரோப்பாவின் இலக்கியப் படைப்புக்களுக்கு முன்னோடியாய், மூலவராய்த் திகழ்கின்றார் ஹோமர். பார்வையற்றவராய் அறியப்படும் இந்தப் பெரும்புலவர், காலத்தை வென்ற காப்பியங்களால் உலகின் பார்வையையே தன் பக்கம் திருப்பியிருப்பது பெருஞ்சாதனை அன்றோ?

    Share
  • நெமிலி பாலா திரிபுர சுந்தரி (பாலா பத்துப் பாட்டு)

    images

    சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
    பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
    வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை
    பெண்பாலா பாடிப் பற ….(1)

    மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
    பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
    ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
    தாயே திரிபுரை தா ….(2)

    அற்பனே ஆனாலும் ஆசான் திரிபுரையின்,
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது ….(4)

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு பாலாஸ்ரீ
    ஓசை சதங்கையொலி ஓம் ….(5)

    பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
    பார்ப்பாள் பராசக்தி பாலாஸ்ரீ -வாக்கில்
    வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
    தனயனென ஏற்பாள்அத் தாய்….(6)

     
    ’’காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்,
    வாசி அடக்கும் விளையாட்டில், -பூசிடும்
    மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
    ஆ!சிரி அப்பா அவள்’’….(7)….கிரேசி மோகன்….

    “குமிழ்விழும் கன்னம் குருநகைச் சின்னம்,
    அமிழ்தொழுகும் எண்ணம், அரியாய் -உமிழ்ந்தனள்,
    உண்டேழ் உலகத்தை, பண்டைநாள் ஊழியில்,
    கொண்டாள் நெமிலிக் கரை”….கிரேசி மோகன்…. (8)….

     
    “நாளாக நாளாக நான்செல்ல வேண்டுமே !,
    வாளாய் இருப்பதேன் வாலையே ! -காளிநீ,
    தேளாய்க் குடையுமெந்தன் தேகாபி மானத்தை,
    வாளாய் இருந்து வகிர்”….கிரேசி மோகன்….(9)….

     

    “சாகா வரம்பெற்று சாதிப்ப(து) என்னவோ !,
    ஆகா நெமிலி அமர்ந்தபடி , -தேகாபி,
    மானத்தை விட்டு மதியீனன் போல்பாலா,
    பானத்தை நாளும் பருகு”….கிரேசி மோகன்….(10)….

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 23

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    அணங்கோ, ஆய்மயிலோ, வானிலிருந்து வையகம் வந்த மின்னலோ? என்று வியந்து திகைக்க வைக்கும் பேரழகியை ஓர் ஆடவன் காண்கிறான்! நிலம் புளகிக்க, மலர்ப் பாதங்களால் மண்ணின் அழகை மறைத்து மறைத்து அடி எடுத்து வைக்கும் மங்கை நல்லாளின் நடை, உடை, இடை ஆகியவற்றில் மனத்தைப் பறிகொடுத்த அவன் பார்வை அவளது அழகிய முகத்தில் அசையாமல் நின்று விடுகிறது!

    ஆளை அப்படியே அளந்து, மன ஆழத்தில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் இதயத் துடிப்போடு எடுத்து விழுங்குகிறது, அவளது நீண்ட நயனம்! கொடிமலர்கள் தலை குனிய, அடி மலர்களால் பூமியின் ஆதங்க வெப்பத்தை ஆற்றி நடக்கும் அவள் விழி மலர்களைக் கண்டு, குளத்தில் பூத்த குவளை மலர்கள் தலை குனிகின்றன! நீரில் பிறந்த நாம் அவள்தன் நீலநயனங்களுக்கு உவமையானோமே, நிஜமாகவே அவள் கண்களின் கவர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும், சுழற்சிக்கும் நாம் இணையாக வில்லையே? என்று நெடுமூச்செறிகின்றன!

    அவன் கண்கள் சந்திக்கும்போது அவள் கண்கள் சரேலென விலகி நிலம் நோக்குகின்றன. மின்னலின் தாக்குதலை நேருக்கு நேர் காணும் கண்கள் தாங்குமா? பார்வை விலகினாலும் மறுபடியும் பார்க்கத் துடிப்பதுதானே காதல் மனத்தின் விளையாட்டு! அவன் நோக்கும் போது நிலம் நோக்கி, நோக்காதபோது தானே அவனை நோக்கித் தன மலர்ச்சியை இதழில் தேக்கி மெல்லச் சிரிப்பதுதானே விலகி விலகி மீண்டும் நெருங்கி விளையாடும் விந்தை விளையாட்டு?

    அண்ணல் நோக்க, அவளும் நோக்கக் கண்கள் ஒன்றை ஒன்று கவ்வியபோது, பெற்றோர், உற்றார், உறவினர், பிறந்த குலம், வாழும் இனம், செய்யும் தொழில், சீர் வரிசைகள் அனைத்தையும் அல்லவா அவை கவ்வி விழுங்கித் தெரியாமல் மறைத்து விடுகின்றன! பேச்சு ஒரு துணை கருவியாகக் கூட இல்லை, தூரத்தில் எறிந்துவிடும் குப்பையாக அல்லவா பொருளற்றுப் போகிறது? இப்போது நாம் இந்த இடத்திற்குத் தேவையான திருக்குறளைக் காண்போம்;

    “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல!”

    என்பதே அப்பாடல்! இப்பாடலின் முதலடியில் உள்ள எழுத்துக்களை விட மிக மிகக் குறைந்த எழுத்துக்களே அடுத்த அடியில் இருப்பதைக் கவனியுங்கள் ! கண்கள் நீண்டநேரம் பார்க்கின்ற உணர்வைத் தருகின்றன. ஆனால் பேச்சோ மிக மிகச் சுருங்கிப் போகிறது! இவ்வாறு இருவர் பார்வையில், ஒரு குறுங்காவியத்தையே திருவள்ளுவர் படைத்து விடுகிறார்! இந்தக் குறட்பாவுக்கு உரை எழுதிய முன்னோர்கள் அனைவருமே, ‘வாய்ச்சொற்கள்’ என்ற தொடருக்கு, “காதலர்களுக்கிடையே அவர்கள் கண்கள் பேசுவதை விட வாயால் பேசும் பேச்சுக்களுக்குப் பொருள் இல்லாமல் போய் விடுகின்றன! ” என்றே எழுதியுள்ளனர். இருவர் உள்ளமும் கண்கள் வழியே மாறிப்புக்கு இணைந்து விட்டபின் வெறும் வாய்ச் சொற்களுக்குப் பயனேதும் இல்லை யல்லவா? இப்போது இத்தொடரின் புதிய பொருளைப் பாருங்கள்!

    இதயம் கண்களின் வழியே இணைந்து, வாழ்க்கை நோக்கமும் ஒத்துப் போனபின், உண்மைக் காதலின் அண்மையில் மிகவும் நெருங்கி உயிர்கலந்து ஒன்றாகிவிட்ட அவர்களைப் பற்றி, ஊரார் பேசும் வீணான வாய்ச்சொற்களைத்தான் அந்தத் தொடர் குறிக்கிறது. இதயங்கள் கண்களின் வழியே இணைந்து ஒன்றாகி, வாழ்க்கையின் நோக்கமும் ஒத்துப் போன பிறகு ‘இவன் குலம் என்ன? இவள் குலம் என்ன?’ என்று குலம் கோத்திரம், அந்தஸ்து பற்றி விசாரிக்கும் ஊராரின் “வாய்ச் சொற்கள்” பயனற்ற வெறும் சொற்களாகிப் பொருளற்றுப் போய் விடுகின்றன. ஆகவே வாய்ச்சொற்கள் என்ற தொடர் இக்காலத்துக்கும் பொருந்தும்வகையில் புதிய அர்த்தத்தைப் புலப்படுத்துகின்றன! கம்பனும், இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்திய இராமனையும் சீதையையும் பற்றிக்

    “கருங்கடற் பள்ளியின் கலவி நீங்கிப்போய்ப்
    பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?”

    என்று பாடியது, இந்தப் புதிய பொருளையே நுட்பமாக உணர்த்துகின்றது. இவ்வாறு எல்லாக் காலத்துக்கும் இசைந்த வகையில் புதிய புதிய பொருளை உணர்த்திக் காலத்தைக் கடந்தும் நின்று நிலைப்பதுதான் திருக்குறளின் பெருமைக்குக் காரணமாகும்! மீண்டும் இந்தத் திருக்குறளைப் படிப்போம்;

    “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல!”(1100).

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 30

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னை மயக்கியவள்
    ___________________

    “நேற்று நாம் வேந்தருக்கு மண்டியிட்டு வந்தனம் செய்தோம் ! சுல்தான்களுக்குத் தலை குனிந்து வணக்கம் தெரிவித்தோம் ! இப்போது நாம் நற்பணியாளர் தவிர வேறு எவருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. மனித நேயத்துக்கும், அழகுத்துவம் தவிர வேறு எதனையும் நாம் வணங்குவதில்லை.”
    கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    ___________________

    ஓடிப் போன என் காதலி
    ___________________

    வாழ்க்கை என்பதோர் கவர்ச்சி மாது !
    வீழ்த்தி விடுவாள் தன் எழிலைக் காட்டி !
    விளையாட்டுத் தனத்தைத் தெரிந்தவன்
    விலகிச் செல்வான் கவர்ச்சியை உதறி !
    ___________________

    என்னிதயம் நேசித்த
    அந்த மாது
    ஓடிப் போய் விட்டாள் !
    ஏதோ ஓரிடத்துக்கு
    குளிர்ப் பிரதேசம் அது !
    எவரும் வசிக்க முடியாத
    இடம் அது !
    வெகு தூரத்தில் உள்ளது !
    ___________________

    என்னிதயம் காதலித்த
    அந்த மாது
    “இல்வாழ்க்கை” எனப்படுவது !
    எழிலானவள் அவள்
    எவரையும்
    கவர்ந்து தன்வசம் இழுப்பவள் !
    நமது உயிரைப்
    பகடை ஆடுபவள் அவள் !
    வாக்குறுதி களைப்
    காக்காமல்
    நழுவிச் செல்பவள் அவள் !
    ___________________

    “இல்வாழ்க்கை” என்பது
    காதலர் சொட்டும்
    கண்ணீரில் குளிக்கும்
    ஒரு வனிதை !
    அவளது மாயத் துக்குப்
    பலியாவோர்
    சிந்தும் குருதியில்
    ஞானக் குளிப்பு செய்பவள் !
    இரவெனும் கரை பூண்ட
    வெண்ணிறப் பகல் ஆடை
    உடுத்தியள் அவள் !
    மனித இதயத்தைக்
    காதலனுக்குப்
    பணிய வைப்பவள் அவள் !
    ஆனால்
    தனக்கு மட்டும்
    திருமணம் முடிய
    மறுப்பளிப் பவள் அவள் !
    ___________________

    Share
  • வளைவுகளின் தியானம்

    -கவிஜி

    உள்ளூர
    ஊரத் தொடங்கும்
    எறும்புகளின்
    பயணத்தில்
    நான் சாலையாகிறேன்…

    சுவாசிக்க மறந்த
    இருபுறங்களின்
    சுளீரில்
    நான்
    கவனமற்றுப்
    பின்தொடர்கிறேன்…

    நானும் யாவும்
    தீர்வல்ல என்பதாகத்
    தீர்க்கவல்ல தரிசனம்
    நொடியில்
    கடக்கிறது…

    நான்
    அற்புதங்களின் தேசம்
    உருவாக்க
    ஒன்றும் இல்லாமல்
    போன திசைகளின்
    வீழ்ச்சியாய்ப்
    பூகோளம் வரைகிறேன்…

    வளைவுகளில்
    கடவுள் வந்து போகலாம்…
    முதலில் வளைவுகள்
    சொல்லித்தர
    வேண்டி, யோசிக்கையில்
    எறும்புகள்
    ஓய்வெடுக்கின்றன…

    வளைவுகளின் பொருள்
    தெரியாத
    தியானத்தோடு…!

     

    Share