“ஆறு படை அழகன்” — (3)
க. பாலசுப்பிரமணியன்
வரமொன்று கேட்பேன், வரமொன்று கேட்பேன்,
இரு கரம் கூப்பி வரமொன்று கேட்பேன்
பன்னிரு கை கொண்டு படியளக்கும் அழகா….. !
உன்னிரு பாதம் பிடித்து வரமொன்று கேட்பேன் !
இமைப்பொழுதும் உனை மறவாத நெஞ்சொன்று வேண்டும்
இங்கென்றும் அங்கென்றும் அலையாத மனமொன்று வேண்டும்
வானென்றும் நிலமென்றும், நீரென்றும் நெருப்பென்றும்
நானென்றும் நீயென்றும் பிரிக்காத நினைவொன்று வேண்டும் !!
நலமான உறவென்றும் வேண்டும்
நலியாத உடலென்றும் வேண்டும்
விதியென்று வீழ்ந்தார்தம் மதி காக்க வேண்டும்
உனையே கதியென்று வந்தார்தம் விதி மாற்ற வேண்டும் !!
குறையாத அறிவென்றும் வேண்டும்
நிறைவான மனமென்றும் வேண்டும்.
அறுசுவையும் ஒருசுவையாக வேண்டும்
அதுவனைத்தும் உன் அருட்சுவையாக வேண்டும்!!
பிறக்கின்ற சேயெல்லாம் உன் பரிசாக வேண்டும்,
புவிதன்னில் அமைதிக்கு வித்தாக வேண்டும்
குன்றாக வேண்டும் ;மனம் குணக்குன்றாக வேண்டும்
அதில் நீ குடியேற வேண்டும் !!
வரமொன்று கேட்பேன் வரமொன்று கேட்பேன்,
இரு கரம் கூப்பி வரமொன்று கேட்பேன்
பன்னிரு கை கொண்டு படியளக்கும் அழகா….. !
உன்னிரு பாதம் பிடித்து வரமொன்று கேட்பேன் !!