எஸ் வி வேணுகோபாலன்

children
குழந்தைகள் தினம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதம் விடிகிறது. கணக்கற்ற குழந்தைகளுக்கு விடியாமலே போகவும் செய்கிறது. காலை தேநீர்க் கடையில் உங்களை வரவேற்பது முதல், காய்கறிக் கடையில் தேங்காய் எடுத்துக் கொடுத்தால் படாரென்று அதை அறைந்து உடைத்துக் கொடுப்பது, சலூனில் முடி திருத்தக் காத்திருப்பது, அலுவலக வழியில் கடக்க நேரும் பாதி முடிந்த கட்டிட வேலையில் மூழ்கி இருப்பது, மதிய உணவருந்தும் ஓட்டலில் உணவு கொண்டு வைப்பது அல்லது பிளேட் எடுப்பது………எல்லாமே குழந்தைகள் என்பது மட்டுமல்ல, பல்லாயிரம் மைல் கடந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தை தொழிலாளர்கள். அவர்களது மொழியை நாம் சென்றடையக் காத்திராமல் நமது மொழியில் வேக வேகமாக ஐக்கியமாகி நம் இதயம் நொறுங்கும்படி சிரிக்க சிரிக்க வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகள்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் தூக்கமுடியாத பையைத் தூக்கியபடி உடன் சென்று கொண்டிருக்கும் உள்ளூர் வேலைக்காரக் குழந்தைகள். பிளாட்பாரக் கடையருகே அம்மாவுக்கு உதவியாக எதையோ விற்றபடி பாடப்புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள். எதற்குப் பிச்சை எடுக்கிறோம் என்று தெரியாமலே நெரிசல் மிகுந்த ரயில் பயணத்தினூடே குட்டிக் கரணம் போட்டுக் கொண்டும், கைகள் நுழைக்க முடியாத இரும்பு வளையத்திற்குள் தனது உடலையே நுழைத்து வெளியேறிவிட்டு இறுக்கமான முகங்களிடம் அன்பு எதிர்பார்த்துத் தட்டேந்திச் செல்லும் குழந்தைகள். கொஞ்சம் அதிக சூடான காப்பிக் கோப்பையைக் கூட ஏந்த முடியாத வயதில் கொதிக்கும் கண்ணாடிக் கரைசல்களை வளையல்களாக்கும் தொழிலில் குழந்தைகள். விடியுமுன் தோட்டங்களில் வர்த்தகத்திற்காக மல்லிகைப் பூக்கள் பறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள். குழந்தைகள் தினம் என்ன, குழந்தைமை என்றாலே இன்னதென்று அறியாத குழந்தைகள்.

உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அதிக பாதிப்புகளுக்கு உட்படுபவர்கள் குழந்தைகள். அருகில் இருக்கும் குழந்தையின் மேல் அலட்சியமாக ஊதிவிடப்படும் சிகரெட் புகை வன்முறை மிகுந்தது. வகுப்பறையில் அசந்து தூங்கிவிடும் குழந்தை மீது அடுத்த மாணவரைத் தண்ணீர் எடுத்து ஊற்றுமாறு சொல்வது இன்னுமே இழிவான வன்முறை. ஆர்வமாகக் கேள்வி கேட்கும் சிறுமியை அதட்டி உட்கார வைப்பது தண்ணீர் அல்ல, வெந்நீரை எடுத்துத் தலை மேல் ஊற்றுவதற்குச் சமம். மதிப்பெண்களைத் தரவாரியாக வாசித்துக் காட்டி அழவைப்பது நெருப்பள்ளிப் போடுவதற்குச் சமம். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா(ய்) என்றார் பூதத்தாழ்வார்! (தகளி=அகல் விளக்கு). குழந்தைகள் தினத்தன்று மிட்டாய் கூடக் கொடுக்க வேண்டாம், அன்பு நிரம்பிய பார்வை பார்த்தாலே கொண்டாடிக் கொள்வர் குழந்தைகள்.

ஐந்து அல்லது ஆறு வயதிற்குள் ஒரே நேரத்தில் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு என மரியா மாண்டிசோரி போன்ற கல்வியாளர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். சுவர்களைத் தமது ஓவியக் கூடங்களாக்கிக் கொள்ளவும், கேட்பதையெல்லாம் பேசவும், பார்ப்பதையெல்லாம் கேள்வியால் துளைக்கவுமான வயதில் முடக்கப்படும் குழந்தைகள், பின்னர் மூர்க்கமாக வெளிப்படுகையில் திணறுகிறது சமூகம். தங்கள் கனவுகளை சேமித்து வைக்கும் உண்டியலாக பெற்றோரால் பார்க்கப்படும் குழந்தைகள் ஒருபோதும் அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற விரும்புவதில்லை. உத்தரவுகள், விசாரணைகள், சரிபார்த்தல்கள், சந்தேகக் கேள்விகள் இவற்றின் கறைபடியாத உள்ளார்ந்த உரையாடல்களுக்கு ஏங்குகின்றனர் குழந்தைகள். உறக்கவேளை கதைகள் மீது காதலோடு காத்திருந்து உறங்கிப் போகின்றனர் குழந்தைகள். காசுகளைக் கொட்டிச் சேர்க்கப்படும் பள்ளிக்கூடங்களில் மறுக்கப்படும் விளையாட்டு நேரம், ஒடுக்கப்படும் பரஸ்பர பேச்சு, கண்டிக்கப்படும் நட்பு இவற்றின் வெப்பம் தாளாது வாடிப் போகின்றனர் குழந்தைகள்.

அங்கீகாரமற்றுக் கடந்து போய்க் கொண்டிருக்கும் பருவத்தில் எங்கிருந்தோ வெளிப்படும் கள்ளத் தனமான அன்பில் ஏமாந்து தடுமாறி வீழ்கின்றனர் குழந்தைகள். நவீன தாராளமயம் சீரழித்துவிட்ட உறவுகளின் இழப்பில் தாத்தா பாட்டிகளையும், அவர்களது அன்பு முத்தங்களையும், அனுபவக் கதைகளையும், அரவணைப்பையும் பறிகொடுத்து வாட்டமுற்றுப் போகின்றனர் குழந்தைகள்.

ஆனாலும் நம்பிக்கை தொலைத்துவிடாதவர்கள் குழந்தைகள். போராட்ட உணர்வை இன்னும் பத்திரம் காத்து வைப்பது குழந்தைப் பருவம். தேடலின் ஊற்று குழந்தைமைக் காலம். மிக முக்கியமாக மனமார மன்னிக்கத் தெரிந்தவர்கள் குழந்தைகள். முந்தைய நாளின் சோகத்தை அடியோடு கழற்றிப் போட்டுவிட்ட உற்சாகக் கால்கள் குழந்தையின் பாதங்கள். கடந்த காலத்தை எண்ணி எதிர்காலத்தை சபிக்காமல், நிகழ் காலத்தில் விதைக்கத் தயாராயிருப்பவர்கள், குழந்தைகளைக் கண்டடைந்தாலே போதும். மொழி, மதம், இனம் எந்தத் தடையுமற்ற அன்பின் பெருநிலம் அது. இன்னிசை ஆரவாரமிக்க நறுஞ்சோலை வனம் அது. குழந்தைகள் தினம் இந்த ஓர் ஆற்றுப்படுத்தலுக்காகவும், விழிப்புணர்வுக்காகவும், கொண்டாட்டத்திற்குமாகவே மிகவும் வேண்டி வந்து நம் வாசல் கதவைத் தட்டுகிறது. தவிரவும், எல்லோரையும் மீண்டும் குழந்தைகளாகக் கருதிக் கொள்ள வைக்கும் வரம் அளிக்கவுமதான்!

*******************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *