– புலவர் இரா. இராமமூர்த்தி.

அணங்கோ, ஆய்மயிலோ, வானிலிருந்து வையகம் வந்த மின்னலோ? என்று வியந்து திகைக்க வைக்கும் பேரழகியை ஓர் ஆடவன் காண்கிறான்! நிலம் புளகிக்க, மலர்ப் பாதங்களால் மண்ணின் அழகை மறைத்து மறைத்து அடி எடுத்து வைக்கும் மங்கை நல்லாளின் நடை, உடை, இடை ஆகியவற்றில் மனத்தைப் பறிகொடுத்த அவன் பார்வை அவளது அழகிய முகத்தில் அசையாமல் நின்று விடுகிறது!

ஆளை அப்படியே அளந்து, மன ஆழத்தில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் இதயத் துடிப்போடு எடுத்து விழுங்குகிறது, அவளது நீண்ட நயனம்! கொடிமலர்கள் தலை குனிய, அடி மலர்களால் பூமியின் ஆதங்க வெப்பத்தை ஆற்றி நடக்கும் அவள் விழி மலர்களைக் கண்டு, குளத்தில் பூத்த குவளை மலர்கள் தலை குனிகின்றன! நீரில் பிறந்த நாம் அவள்தன் நீலநயனங்களுக்கு உவமையானோமே, நிஜமாகவே அவள் கண்களின் கவர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும், சுழற்சிக்கும் நாம் இணையாக வில்லையே? என்று நெடுமூச்செறிகின்றன!

அவன் கண்கள் சந்திக்கும்போது அவள் கண்கள் சரேலென விலகி நிலம் நோக்குகின்றன. மின்னலின் தாக்குதலை நேருக்கு நேர் காணும் கண்கள் தாங்குமா? பார்வை விலகினாலும் மறுபடியும் பார்க்கத் துடிப்பதுதானே காதல் மனத்தின் விளையாட்டு! அவன் நோக்கும் போது நிலம் நோக்கி, நோக்காதபோது தானே அவனை நோக்கித் தன மலர்ச்சியை இதழில் தேக்கி மெல்லச் சிரிப்பதுதானே விலகி விலகி மீண்டும் நெருங்கி விளையாடும் விந்தை விளையாட்டு?

அண்ணல் நோக்க, அவளும் நோக்கக் கண்கள் ஒன்றை ஒன்று கவ்வியபோது, பெற்றோர், உற்றார், உறவினர், பிறந்த குலம், வாழும் இனம், செய்யும் தொழில், சீர் வரிசைகள் அனைத்தையும் அல்லவா அவை கவ்வி விழுங்கித் தெரியாமல் மறைத்து விடுகின்றன! பேச்சு ஒரு துணை கருவியாகக் கூட இல்லை, தூரத்தில் எறிந்துவிடும் குப்பையாக அல்லவா பொருளற்றுப் போகிறது? இப்போது நாம் இந்த இடத்திற்குத் தேவையான திருக்குறளைக் காண்போம்;

“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல!”

என்பதே அப்பாடல்! இப்பாடலின் முதலடியில் உள்ள எழுத்துக்களை விட மிக மிகக் குறைந்த எழுத்துக்களே அடுத்த அடியில் இருப்பதைக் கவனியுங்கள் ! கண்கள் நீண்டநேரம் பார்க்கின்ற உணர்வைத் தருகின்றன. ஆனால் பேச்சோ மிக மிகச் சுருங்கிப் போகிறது! இவ்வாறு இருவர் பார்வையில், ஒரு குறுங்காவியத்தையே திருவள்ளுவர் படைத்து விடுகிறார்! இந்தக் குறட்பாவுக்கு உரை எழுதிய முன்னோர்கள் அனைவருமே, ‘வாய்ச்சொற்கள்’ என்ற தொடருக்கு, “காதலர்களுக்கிடையே அவர்கள் கண்கள் பேசுவதை விட வாயால் பேசும் பேச்சுக்களுக்குப் பொருள் இல்லாமல் போய் விடுகின்றன! ” என்றே எழுதியுள்ளனர். இருவர் உள்ளமும் கண்கள் வழியே மாறிப்புக்கு இணைந்து விட்டபின் வெறும் வாய்ச் சொற்களுக்குப் பயனேதும் இல்லை யல்லவா? இப்போது இத்தொடரின் புதிய பொருளைப் பாருங்கள்!

இதயம் கண்களின் வழியே இணைந்து, வாழ்க்கை நோக்கமும் ஒத்துப் போனபின், உண்மைக் காதலின் அண்மையில் மிகவும் நெருங்கி உயிர்கலந்து ஒன்றாகிவிட்ட அவர்களைப் பற்றி, ஊரார் பேசும் வீணான வாய்ச்சொற்களைத்தான் அந்தத் தொடர் குறிக்கிறது. இதயங்கள் கண்களின் வழியே இணைந்து ஒன்றாகி, வாழ்க்கையின் நோக்கமும் ஒத்துப் போன பிறகு ‘இவன் குலம் என்ன? இவள் குலம் என்ன?’ என்று குலம் கோத்திரம், அந்தஸ்து பற்றி விசாரிக்கும் ஊராரின் “வாய்ச் சொற்கள்” பயனற்ற வெறும் சொற்களாகிப் பொருளற்றுப் போய் விடுகின்றன. ஆகவே வாய்ச்சொற்கள் என்ற தொடர் இக்காலத்துக்கும் பொருந்தும்வகையில் புதிய அர்த்தத்தைப் புலப்படுத்துகின்றன! கம்பனும், இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்திய இராமனையும் சீதையையும் பற்றிக்

“கருங்கடற் பள்ளியின் கலவி நீங்கிப்போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?”

என்று பாடியது, இந்தப் புதிய பொருளையே நுட்பமாக உணர்த்துகின்றது. இவ்வாறு எல்லாக் காலத்துக்கும் இசைந்த வகையில் புதிய புதிய பொருளை உணர்த்திக் காலத்தைக் கடந்தும் நின்று நிலைப்பதுதான் திருக்குறளின் பெருமைக்குக் காரணமாகும்! மீண்டும் இந்தத் திருக்குறளைப் படிப்போம்;

“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல!”(1100).

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திருக்குறளுக்குப் புது விளக்கம் – 23

  1. கவியரசர் கண்ணதாசன் யார் நீ திரைப்படத்திற்காக , 1966 வருடம் எழுதிய பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. புலவர் இரா. இராமமூர்த்தி.கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல!”(1100)., திருக்குறளக்கு புது விளக்கம் அளித்தமைக்கு நன்றி வணக்கம்

  2. “வாழ்க்கையின் நோக்கமும் ஒத்துப் போன பிறகு ‘இவன் குலம் என்ன? இவள் குலம் என்ன?’ என்று குலம் கோத்திரம், அந்தஸ்து பற்றி விசாரிக்கும் ஊராரின் “வாய்ச் சொற்கள்” பயனற்ற வெறும் சொற்களாகிப் பொருளற்றுப் போய் விடுகின்றன.”
    புதிய பொருள் சொன்ன புலவருக்கு நன்றி.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published.