Year: 2016

  • சுய மரியாதை!

    பவள சங்கரி

    kiran-bedi

    புதுச்சேரி யூனியனின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.. புதுச்சேரி யூனியனை குற்றமில்லா பிரதேசமாக உருவாக்குவோம் என்று உறுதியோடு இருப்பவர். 1972இல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. திகார் சிறையில் கைதிகளின் நலன் கருதி (3C மாடல் அதாவது C-Collective, C-corrective, C-Communicative என்ற பொருளில்) கிரண்பேடி நல்ல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். டென்னிஸ் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அவருடைய கம்பீரமான குரலும், மிடுக்கான தோற்றமும் அவர் 61 வயதைக்கடந்தவர் என்று அறியும்போது ஆச்சரியம் கொள்ளவைக்கும். ஐ.நா.சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியாவின் மேகன் டோன்மேன் என்பவர் இவரைப் பற்றி, “யெஸ், மேடம் சார்” என்ற ஆவணப்படம் உருவாக்கியிருக்கிறார் .

    சமீபத்தில் திருமணமான ஒரு இளம் இணையர் இவரிடம் ஆசிகள் பெறுவதற்காக காலில் விழுந்திருக்கின்றனர். அவர் உடனே அதைத்தடுத்து காலில் ஏன் விழுகிறீர்கள் என்று கூறிவிட்டு தானும் அவர்கள் காலில் விழுந்துள்ளார். இனியொருவர் இதுபோன்று சக மனிதர் காலில் விழவேண்டியதில்லை என்ற சுய மரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தி பலமடங்கு உயர்ந்து நிற்கிறார்!

    Share
  • மார்கழி மணாளன் (8)

    க. பாலசுப்பிரமணியன்

     

    நாச்சியார் கோயில் -(திருநாரையூர் நம்பி திருக்கோயில்) அருள்மிகு ஸ்ரீனிவாசப் பெருமாள்  

    ag

    பெண்ணுயர  முன்னுரிமை மணவறையில் தந்தாய்

    விண்ணுயர வாழ்ந்தாலும் மனமுயர்ந்தே நின்றாய்

    தானுயர்ந்தே  தாளால் திரிபுரமும் அளந்தவனே

    நானுயர அருள்வாயோ நாரையூர் நாராயணனே !

     

    காரிகை மணமுடிக்கக் கையேந்தி நின்றவனே

    பேரிகை முழக்கமின்றி பிடித்தவளை மணந்தவனே

    தூரிகை  வரையாத தூயவனே பேரழகா !

    நாழிகை நகர்வதுவே  நின்னருளால் மட்டுமன்றோ?

     

    சங்கோடு சக்கரமும் அங்கமெல்லாம் அணிகலனும்

    பங்கமில்லாப்  பார்வையுடை செங்கமலச் செல்வா !

    மங்காத ஒளிகொண்ட மங்கையவள் மணந்தவுடன்    

    தங்கிடவே  நெஞ்சத்திலே மஞ்சமதைப் படைத்தாய் !

     

    அன்னமென அன்னையவள் அழகாக முன்செல்ல

    பின்னமின்றி அவள்நினைவைப் பின்னெடுத்து நீசெல்ல

    நின்றபடி ஆழ்வார்கள் நிலைமற்ந்து கவிசொல்ல

    வென்றிடுவார் வாழ்வெல்லாம் கண்டவர்கள் களிந்து.

     

    புள்ளாகப் பிறந்தாலும் புவியாள வேண்டும்

    வில்லாளன் நல்லோனின் சுமைதாங்க வேண்டும்

    கல்லாகப் பிறந்தாலும் கண்ணன் வடிவாகவேண்டும்

    கணநேரம் வாழ்ந்தாலும் கார்மேகன் குழலாகவேண்டும் !

     

    பல்லாண்டு பாடிப் பரவசமான நெஞ்சில்

    நில்லாமல் நினைவெல்லாம் நின்பாதம் நாடும்

    புண்ணான வாழ்க்கைக்குப் புரியாத மருந்தே

    கண்ணாக நானிருக்க ஒளியாக நீவருவாய் !

     

     

     

     

    Share
  • பூவே ! செம்பூவே

     

     

                     ரா.பார்த்தசாரதி

     

                    பூவே, செம்பூவே !  உனக்காக  நான் காத்திருப்பேன் 

                    என் மனதில் கவிதையாய் உன்னைக் காண்கின்றேன் 

                    சோலை வனத்தில், நீ  நடக்கும் அழகே  அழகு 

                    என் உள்ளமறிந்து அருகில்  வந்து  பழகு !

                 

                    பூக்களும், உன் சிரிப்பில்  தோற்கும் 

                   நான் எழுதும் பாடல்களுக்கு  வேர்க்கும் 

                   பூக்களின்  ஆயுளே  ஒரு நாள் தானே !

                    பெண்ணின் தலையில் இருப்பதும் ஒரு நாள் தானே !

                 

                   பூக்கள் சேர்ந்தால்  மாலையாய் உருவாகும் 

                   உன் புன்னகை பூக்கள் மாலைகளுக்கு உயிராகும் 

                   உன்னை காணாத  வேளையில் துடித்தேன் 

                   உன்னை எண்ணாத    வேளையில் மனம் தளர்ந்தேன் !

               

                   தனிமை வாட்டும் போது உன் அழகை கவிதையாக்கினேன் 

                   என் உள்ளம் எனும் கோவிலே  கூடி  புகுந்தேன் 

                   திருவிழா என்றாலே   அம்மன்  ஊர்வலம் 

                   நம்மிருவரும்  இணைய எப்போது திருமண ஊர்வலம் ?

                 

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161222 -Tiruppavai notes -07 -wcol-lores

    ”தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் நடந்தரக்கன்
    சாய்க்கக் கடைந்தவன் சாகஸன் – ஆய்க்குல
    மாதாவைக் கட்டினன் மாயக் கயிற்றினால்
    கோதை அறி(ரி)வாள்(ல்) குறும்பு”….கிரேசி மோகன்….!

    ”கோதைக் காப்பு”
    ———————————

    ”கயிற்றுதரக் கண்ணன்மேல் காதல்கொண்(டு) அன்று
    இயற்றினாய் பாடல் எமக்காய் -பயிற்றுவித்த
    தாதையுடன் சென்றந்த கீதையோன் கைப்பிடித்த
    கோதைக்கை கோகிலமே காப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (223)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.  கிறீஸ்துமஸ் பண்டிகை jesusவாரத்தில் இம்மடலூடாக உங்களோடு உரையாட விழைகிறேன். வருடம் முழுவதும் ஓயாமல் வாழ்க்கை கொடுக்கும் உளைச்சல்களுக்கு ஒரு நிவாரணம் போல மார்கழி மாதம் வரும் இந்தக் கிறீஸ்துமஸ் பண்டிகை இந்நாட்டு மக்களுக்கு ஒரு உற்சாகத்தையளிக்கிறது. இல்லங்கள் தோறும் கிறீஸ்துமஸ் பண்டிக்கையை முன்னிலைப்படுத்தும் வகையில் சிறிய கிறீஸ்துமஸ் மரங்களை வைத்து அவற்றை மிகவும் சிறப்பான முறையில் வண்ண விளக்குகளாலும், பல வண்ணக் காகித மாலைகளாலும் அலங்கரித்து மகிழ்கிறார்கள்.

    இயேசு கிறீஸ்து அவர்களின் பிறந்தநாள் டிசம்பர் 25 என்பதைக் குறிப்பாகக் கொண்டு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழமைக்கு மாறாக இரவு 9 மணி வரை திறந்திருக்கக் காண்கிறோம். இன்றைய காலகட்டங்களிலே இப்பண்டிகைத் தினம் விற்பனைக் களமாக மாறிவிட்டதோர் நிலையைக் காண்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் பரிசளிப்பது வழமை. ஆனால் இந்தச் சம்பிரதாயம் இப்போது மாறி இப்பரிசளிப்பே இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது. அதுவும் இப்பரிசுகள் சாதாரணமாக இல்லாமல் மிகவும் விலையுயர்ந்த பரிசுகளை எதிர்ப்பார்க்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

    இப்பண்டிகையின் அடிப்படை நிலைப்பாடு என்ன ?  “அன்பு” ஒன்றே உலகில் பிரதானம் என்பதையே தனது குறிக்கோளாகக் கொண்ட இயேசுநாதர் அவர்களின் பிறந்தாளின் அடிப்படை ஆதாரம் அன்பு என்பதை அடியோடு மறந்து விட்டோமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. கிறீஸ்துமஸ் மரங்களை அலங்கரித்துக் கொண்டாடும் வழமையின் பின்னணி என்ன? என்று சிறிது அலசினேன். மிக வியத்தகு விடயங்கள் வெளிப்பட்டன. பழங்குடி மக்கள் எப்போதும் வாடாது இருக்கும் பச்சை மரங்களைப் போற்றினார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வட துருவத்தில் , டிசம்பர் 21ஆம் திகதியே மிகவும் குறைந்த நீளமுள்ள நாள் என்று கணிக்கப்படுகிறது, அன்றைய விஞ்ஞான அறிவு குறைந்த காலத்தில் இத்தினமே சூரியன் தனது அதிக சக்தியை இழந்த நாளாகக் கருதினார்களாம். இதன் பின்பு நாளின் நீளம் அதிகரிப்பதால் சூரியன் மெதுவாக நலம் பெறத் தொடங்குவதாகக் கருதினார்களாம். அத்தினத்தை ஒட்டிய தினங்களில் எப்போதும் தனது பசுமையை இழந்து விடாமல் இருக்கும் செடிகளையும், மரங்களையும் கெளரவித்தார்களாம்.

    இன்றைய கிறீஸ்துமஸ் மர அலங்காரங்கள் 16ஆம்
    நூற்றாண்டில் அன்றைய ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். tree1அலங்கரிக்கப்பட்ட பச்சை மரங்களை இல்லங்களுக்குள் வைக்கும் பழக்கம் இவர்களால் ஏற்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்பழக்கம் அதன் பின்னாலேயே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  அன்றைய இராணுவத் தளபதிகளான வில்லியம் ப்ராட்போர்டு, ஒலிவர் குரோம்வெல் என்பவர்கள் இத்தகைய பண்டிகைகளை எதிர்த்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1659ஆம் ஆண்டு “மசேசுட்ஸ்” (Massachusetts ) எனும் நகரில் டிசம்பர் 25ஆம் திகதி தேவாலயத்தில் நடத்தப்படும் பிரார்த்தனைகளைத் தவிர வெளியே நடைபெறும் எத்தகைய பண்டிகைகளும்,விழாக்களும் குற்றமாக அறிவிக்கப்பட்டது.

    1846ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அன்றைய மகாராணியான விக்டோரியா மகாரணியும் அவரது கணவரும் பிள்ளைகளும் அலங்கரிக்கப்பட்ட கிறீஸ்துமஸ் மரத்தினருகே நிற்கும் படம் பத்திரிகைகளில் வெளியானது. மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த மகாராணியாரால் கொண்டாடப்பட்ட இப்பழக்கம் ஏனைய சமுதாயத்தினிடையே வேகமாகப் பரவியது. அதன் பின்னரே இக்கிறீஸ்துமஸ் மர அலங்கரிப்புகள் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பெருமளவில் கலாசாரமாக்கப்பட்டது.

    இன்று இக்கிறீஸ்துமஸ் பண்டிகையானது புலம்பெயர் மக்கள் மத்தியில் அதுவும் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வேற்று மதக் கலாசாரமாக இருந்தாலும், ஊரோடு ஒத்து வாழ் எனும் பழமொழிக்கேற்ப இந்து மதத்தைச் சார்ந்தவர்களும் இவ்விழாக்களில் பங்கேற்கிறார்கள். இதுகூட ஒருவகையில் கலாச்சாரப் புரிந்துணர்வுக்கு வழிவகுக்கிறது என்று சொல்லலாம்.

    எந்த விழாவை எந்தக் காரணத்திற்காகக் கொண்டாடினாலும் அன்பு, சமாதானம், அமைதி என்பவற்றை முதன்மைப்படுத்தி மனிதாபிமானம் ஒன்றே மனிதர்களுக்குத் தேவையான முக்கியப் பண்பு என்பதை ஏற்றுக் கொண்டால் அதுவே சிறந்ததோர் ஒற்றுமையான வாழ்வுக்கு அத்திவாரம் அமைக்கும் என்பதுவே உண்மையாகிறது.

    உங்கள் பாவங்களை எல்லாம்
    நானே சுமக்கிறேன் என்றான்
    மனிதகுலத்தின் மாபெரும்
    பெருந்தகையாளன் தேவமைந்தன்

    முள்ளில் ஓர் கிரிடம்
    முதுகிலோர் சிலுவை அறைந்து
    உண்மையை மெளனிக்க வைக்க
    உன்மத்தர் செய்த சித்திரவதைகள்

    அறியாமல் செய்கின்றார் மூடர்
    ஆண்டவரே அவரை மன்னித்து விடும்
    அன்பின் புதல்வன் அன்போடு வேண்டினான்
    அண்டசராசரத்தின் ஆண்டவனிடத்தே

    தம்மைத் தாமே அறிந்திட வேண்டித்
    தன்னைத் தானே மெழுகாய் உருக்கிய
    தனியொரு தேவ மைந்தன்
    தவப்புதல்வனாய் மண்ணில் உதித்திட்டான்

    நல்லதோ மக்களாய் நாளும் வாழ்ந்து
    நன்மைபல புரிந்திட்டே வையகத்தில்
    வேதநாயகன் இயேசு உரைத்திட்ட
    அருள்மொழிகளை உள்ளத்தே நிறுத்திட்டு

    நத்தார் புனிததினமதில் அனைவரும்
    நலமாய் வாழ்ந்திட அன்பு வாழ்த்துக்கள்
    அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
    புனித நத்தார் வாழ்த்துக்கள் ஆயிரம்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீடு!

    மு.இளங்கோவன்

    தஞ்சாவூர் இராசப்பா நகரில் அமைந்துள்ள ஐசுவர்யம் மகாலில் 18.12.2016 ஞாயிறு மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் வாழும் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு, அவர் மனைவி கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    a2

    நிகழ்ச்சிக்குத் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவ மனையின் மருத்துவர் வி. தனபாலன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் எழுத்தாளர் அப்துல்லா வரவேற்புரை வழங்கினார். வெட்டிக்காடு என்ற நூலினை எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி வெளியிட, முதற்படியினை ஜெயம் சோமு பெற்றுக் கொண்டார். கீதா கஃபே நூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட, பத்மாவதி தனபாலன், முனைவர் பழனி. அரங்கசாமி பெற்றுக் கொண்டனர். கீதா கஃபே நூலினை எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பாக அறிமுகம் செய்தார். முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் திருவாட்டி கீதா இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

         நூலாசிரியர்கள் இரவிச்சந்திரன், கீதா இரவிச்சந்திரன் ஏற்புரை வழங்கினர். சுரேகா சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.     எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், உறவினர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    a1

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெட்டிக்காடு நூலினை அறிமுகம் செய்து மு.இளங்கோவன் பேசியதாவது:

    இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர். இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். கிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள் இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும். மேல்தட்டு வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பேசினார்.

    Share
  • பெருமாள் திருப் புகழ்….!

     
    தனனா தனத்த தனனா தனத்த
    தனனா தனத்த -தனதான
    ————————————————–
    பெருமாள் திருப் புகழ்….!
    ————————————————————

    “சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்து
    சிலைஜா னகிக்கு -மணமாலை
    இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய
    மறைதே சிகர்க்கு -பரிவான,
    அவமா னமுற்று அரியே யெனக்கை
    அணிசே லைவிட்டு-அவள்கூவ
    சரணா கதிக்கு பதிலாய் உடுத்த
    வளர்சே லைகொட்டி -அருள்வோனே
    கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும்
    குறமா தணைக்க -மயலேறி
    கிழவே டமுற்று வருவே லவர்க்கு
    முறைமா மசக்தி -அபிராமி
    சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு
    வெகுநே சமுற்ற -முதியோனே
    அலைபாற் கடற்குள் விடசே டமெத்தை
    வளர்யோ கநித்ரை -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • மார்கழி மணாளன் (7)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருப்பேர்நகர் – அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்

     ab

    திருப்பேர் தனக்கொரு ஆயிரம் கொண்டாலும்

    திருப்பேர் தன்னில்  புதுப்பேர் கொண்டோனே !

    முப்பேறும் தருகின்ற திருப்பேரா ! முகுந்தா !

    எப்பேறும் இல்லாமைக்குத் தப்பேதும் செய்தேனோ ?

     

    உப்பேதும் இல்லாமல் உணவருந்தி மகிழ்ந்தாய்

    ஒப்பில்லா வயதினிலும் உளமறிந்து மணந்தாய்

    தப்பாமல் தருமங்கள் காத்திடப் பிறப்பவனே

    அப்பா!! அமுதா !! அனந்தா! அருளாளா !!

     

    ஒருவாசம் இல்லாத வனவாசி துர்வாசர்

    தருசாபம்  பிணியாகத் தவித்தானே உபமன்யு

    நூறாயிரம் உணவிட்டு நூலான மன்னனிடம்

    மூதான வடிவத்தில் முன்னின்ற முப்புரனே!

     

    உலைகண்ட உணவெல்லாம் ஒருபோதில் உண்டாயே

    இலையென்று சொல்லாத மன்னவனும் மலைத்தானே !

    மடைதன்னில் நெய்யப்பம் ஒருகுடத்தில் படைத்தே

    கொடையாகக் கேட்ட கோவிந்தா! அப்பக்குடத்தானே !

     

    அறிந்தேன் உனையென்று அடியார்கள் ஆயிரமே 

    கனிந்தே பாடிநின்றார் பாசுரங்கள் நாலாயிரமே 

    மருந்தே ! மாமணியே ! மனங்கவர் மாதவனே !

    மறைந்தே நின்றாய் மாதவத்தார் மனத்துள்ளே !

     

    பனிக்குடம் பிரிந்தபின் பண்படாத வாழ்க்கை 

    இருப்பிடம்  தேடி  எங்கெங்கோ  அலைந்ததே !

    உறைவிடம் நீயேயென உள்ளமே அறிந்தபின் 

    நிறைவுடன் நின்பாதங்கள் தேடியே வந்ததே !

     

     

     

     

     

     

     

    Share
  • எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

    பவள சங்கரி

    64p1

    எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வல்லமையின் மகிழ்ச்சியான வாழ்த்துகள்.

    வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

    cropped-e0ae89e0aeafe0aeb0e0aeaae0af8de0aeaae0aeb1e0aea4e0af8de0aea4e0aeb2e0af8d-1வண்ணதாசன்

    p47dதந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறு அடி பாய்வார் போல. எஸ்.கல்யாணசுந்தரம் என்ற தன் இயற்பெயரைத் தானே மறந்துவிடும் அளவிற்கு, தானே சூடிக்கொண்ட புனைப்பெயர்களை நிலைநிறுத்திக்கொண்டவர். கல்யாண்ஜி என்று தனக்குத்தானே மரியாதையாக விளித்துக்கொள்ளும் அவர்தம் தன்னம்பிக்கை என்னை வெகுவாகக் கவர்ந்த விசயம். ஆனாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் அவருடைய அந்தப் பெயருக்கான விளக்கத்தைப் படித்தபோது அவர்மீது இருந்த அபிமானம் மேலும் பன்மடங்கானது. ”கல்யாண்.சி என்ற முன்னெழுத்தைச் சற்று நகாசு வேலை செய்து கல்யாண்ஜி ஆக்கினேன். அக்காலத்தில் கல்யாண்ஜி, ஆனந்த்ஜி போன்ற இந்தி இசையமைப்பாளர்கள் ஆட்சி செலுத்தி வந்ததும், அவர்கள் இசையால் நான் ஈர்க்கப்பட்டதும் ஒரு காரணம். வண்ணதாசன் எனது முன்னோடி எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் பாதிப்பில் பெயர் கொண்டது” என்று சொல்லியிருந்தார்.

    “மனிதன் என்று இருந்தால், அவ்வப்போதாவது மண்ணில் காலோ கையோ பட வேண்டாமா? வீடும் சரி, வேலை பார்க்கிற இடங்களும் சரி, சாலைகளும் சரி… பாதங்களுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவை அடியோடு நிராகரித்துவிட்டன. மண் வாசனை மாதிரி வியர்வை வாசனையையும் ஒழித்துக்கட்டிவிடுவார்கள்போல…” வண்ணதாசன் அவர்கள் மண் மீதும், மனிதம் மீதும் கொண்டுள்ள மாறாக்காதலை வெளிப்படுத்தும் சொற்கள் இவை.

    29630399பரிசு பெற்ற நூல்

    எழுத்துலகில் தனக்கென ஓர் தனிப்பட்ட பாணியை உருவாக்கிக் கொண்டவர் இவர். ஓய்வுபெற்ற ஒரு வங்கி அதிகாரிக்குரிய அத்தனை இலட்சணங்களும் அவர்தம் படைப்புகளில் மிளிர்வதைக்காணலாம். ஆம், வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பவர்களையும், நொந்துபோய் கீழ்மட்ட நிலையில், வறுமையின் பிடியில், வாங்கிய கடனை அடைக்கவும் வழியற்ற ஏழ்மையில் கூனிக்குறுகி வேதனையில் அல்லல்படும் பலதரப்பட்ட மனிதர்களையும் ஒருசேர சந்திக்கும் வாய்ப்பைப்பெற்றவர், அதனை வெறும் வருமானத்திற்கான பணியாக மட்டும் பார்க்காமல் மனிதர்களின் ஆழ்மனங்களை ஊன்றிப் படித்திருக்கிறார் என்பதையும், ஒவ்வொருவரின் இன்ப துன்பங்களையும் உடனிருந்து உணர்ந்தவராக இருந்திருக்கிறார் என்பதை அவருடைய ஒவ்வொரு எழுத்தும் நமக்கு உணர்த்துவதை மறுக்கவியலாது.

    பிரபல இலக்கிய விமர்சகரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான திரு தி.க.சிவசங்கரனின் மகன் இவர். சக மனிதர்களிடம் நிறைவான அன்பும், நெகிழ்ச்சியும் கைவரப்பெற்றவர். இவையனைத்தையும் தம் எழுத்துகளில் தாராளமாக வெளிப்படுத்துபவர். மனிதர்களை இவர் பார்க்கும் பார்வையில் எங்கிருந்து இப்படியொரு தனித்தன்மை வருகிறது என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர். வயதுக்கு மீறிய முதிர்ச்சியை அவர்தம் எழுத்துகளில் காணலாம். தொன்மையான நெல்லை மண்ணின் மணமும், குணமும் தாமே கலந்தைகொள்ளும் அளவில் இவர்தம் படைப்புகள் பல கனவுகளையும், வன்மங்களையும், வரைவிலக்கணங்களையும் மிக யதார்த்தமாக வெளிப்படுத்துவது.

    சிலகாலம் முன்பு திரு வண்ணதாசன் அவர்களின் தந்தையார் உயர்திரு தி.க.சி அவர்களை நம் வல்லமைக்காக நேர்காணல் செய்தபோது, தம்முடைய பெருமைகள் அனைத்தையும் கடந்தவராக, மிகவும் நெகிழ்ச்சியான மனநிலையுடன், தம்மை ‘வண்ணதாசனின் தந்தை நான்’ என்று பூரிப்புடன் அறிமுகம் செய்துகொண்ட தருணத்தில்,

    மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
    என்னோற்றான் கொல்எனும் சொல்

    என்ற குறளை நினைவூட்டுவதாகவே இருந்தது. அந்த எளிய மனிதரின் மகனான இவரும் அந்த எளிமையில் தம் தந்தையாருக்கு சற்றும் சளைத்தவர் அல்லர் என்பதைத் தம் ஒவ்வொரு செயலிலும் உணர்த்துபவர்.

    ’போய்க் கொண்டிருப்பவள்’ என்ற அவருடைய சிறுகதையில் ஒரு புகைப்படக்காரரை அவர் விளக்கும் விதம் பாருங்கள்… அவர் எழுத்தின் வலிமை புரியும்!

    ”விருத்தா புகைப்படக்காரன் என்பதால் என்னைவிடப் பிரகாசிக்க முடிந்தது. அவர்களை வெவ்வேறு தோற்றங்களில் மிகச் சலுகையான நெருக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தான். புகைப்படம் எடுக்கும்போது ஒவ்வொரு தடவையும் அவன் வேறு மனிதனாகி விடுகிறான். நான் ஒருவன் நிற்கிறேன் என்றோ அவள் அன்னம் என்றோ, அவர் இன்னார் என்றோ நினைக்கிறதை ஒழித்து வெவ்வேறு பரிமாணங்களுக்கு அந்த புகைப்படத்தை இட்டுச் செல்கிற முழுக் கவனத்துடன் இயங்குவான். புன்னகைக்க வைக்கிற கோணங்கித் தனங்களைப் பிறர்போல பிரயோகிக்காமல் நெற்றி இறுகி இறுகி புருவமத்தியில் ஒரு பள்ளம் விழுந்து கொண்டே போக, எதிரிலிருப்பவர்களை அவர்களின் பாவனைகளிலிருந்து உதறி எடுத்த ஒரு சட்டென்ற நொடியில் பிடிப்பான். சேலை மடிப்புகளை நீவிவிடுவது, காலணி மேல் மடங்குகிற கால்சட்டைகளை ஒழுங்கு செய்வது போன்ற எதுவுமின்றி ஆடைகள் எல்லாம் இடையூரு அல்ல ஒரு நல்ல புகைப்படத்திற்கு என்ற வகையில் இயல்பின் சுபாவமான அவிழலில் எல்லாம் அதனதன் இடத்திலிருக்க, ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு ஜீவனை வருத்தியிருப்பான்.”

    “நட்சத்திரத்தையெல்லாம் யாரோ உலுக்கிப் பறித்துக்கொண்டுவிட்டதை போல வானம் மொட்டையாக இருந்தது” என்பார் வடிகால் என்ற சிறுகதையில்.

    15578969_10153947670941386_6852705848575819340_n
    நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன் இந்த திருநெல்வேலிக்காரர் என்றால் அது மிகையில்லை. தோட்டத்துக்கு வெளியே சில பூக்கள்,சமவெளி,பெயர் தெரியாமல் ஒரு பறவை,கிருஷ்ணன் வைத்த வீடு, ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரின் பல சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. .தமிழக அரசின் கலைமாமணி விருது, இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் தற்போது ‘சாகித்திய அகாடமி விருது’ பெற்று அவ்விருதிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற அன்பு மனைவியும், சங்கரி என்ற மகளும், .ராஜு என்ற மகனும் உள்ளனர். கல்யாண்ஜி என்ற பெயரில் அற்புதமான கவிதைகளை எழுதிக்குவித்துக் கொண்டிருப்பவர்.

    “இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது” என்று வெற்று அலங்காரத்திற்காகப் பேசுபவர் இவர் இல்லை என்பதை வாசகர்களை உணரச்செய்யும் இவருடைய நேர்த்தியான எழுத்துகளும், அன்பில் தோய்ந்த இனிமையான மொழிகளும்! இன்னும் பல படைப்புகளுடன், பல விருதுகளையும் பெற்று பல்லாண்டுகள், ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் மனைவி, மக்களுடன் நிறைவான வாழ்வை வாழவேண்டும் என்று உளமார பிரார்த்திக்கிறோம்.

    விருது பெற்றோர் பட்டியல்
    விருது பெற்றோர் பட்டியல்
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161221 - Tiruppavai notes 06 -wcolor-lores
    161221 – Tiruppavai notes 06 -wcolor-lores

    பூதனை மானந்த பேய்முலைநஞ் சுண்டவள்
    வேதனை தீர்ந்திட வாயுண்ட -சீதரன்,
    கோமளன், ஸ்யாமளன் கோதை மணவாளர்,
    காமனின் தந்தையே, காப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • மார்கழி மணாளன் (6)

    க. பாலசுப்பிரமணியன்

    திருக்காவலம்பாடி – அருள்மிகு கோபாலகிருஷ்ண பெருமாள்

    ab
    ஊழிக்கூத்தன் ஒருகால்தூக்கி ஆடினான் ஆடினான்
    ஆழிகளாட அண்டங்களாட அவனிகளாட அந்தோ !
    அங்கங்களாட அரவமுமாட அகிலத்தில் அரனின்
    தக்கத்திமிதோம் தாம்திமி தக்கத்திமி தாம்தோம் !

    வெகுண்ட சிவனின் விழிவழி நெருப்பில்
    மருண்ட அமரர் வேதியர் தந்தனர் வந்தனம்
    சிதறுண்ட சிகையோ சீண்டிய நிலத்தில்
    சிவமே சதாசிவமே பதினோரு சிவமே !

    பித்தோடு ஆடியபாதங்கள் அமைதியை நாட
    பற்றோடு அரங்கா ! பாரினைக் காத்தாய்
    பத்தோடு பதினொன்றாய் பிறக்கா வண்ணம்
    பற்றோடு பதினொன்றில் பக்கத்தில் நின்றாய் !

    சத்தியத்தின் உருவமே ! சாந்தனே! சகலனே!
    நித்தியத்தின் தத்துவமே ! நீலனே! நாரணா !
    வித்தைகள் கடந்த வேதத்தின் மூலமே !
    வேண்டினேன் வந்திடு விடியலைக் காட்டிடு!

    சிலையென நினைத்தேன் சிறுமதி சுருங்கிட
    கலையென நினைத்துக் கல்லுள் வடித்தேன்
    மலையென நின்றாய் திருமலைத் தேவா !
    இலையெனச் சொல்லா அருள்மழை அரங்கா!

    கவளமாய்த் தருவேன் காதலால் என்னையே
    பவளமே! பரிமளா ! பாசமாய் அணைத்திடு
    குவலயம் ஈடில்லை கோவிந்தன் அருளுக்கு
    நிலுவையில் வைப்பதோ நின்னருள் எனக்கு?

    Share
  • பெருமாள் திருப் புகழ்….

     

    காப்பு
    —————
    பெருமாள் திருப் புகழ்….

    தந்த தனன தனதான தனன
    தந்த தனன தனதான தனன
    தந்த தனன தனதான தனன-தனதான….!

    “சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்
    மந்த்ர வடிவ உபதேசம ருளிய
    கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
    அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
    பங்கு திரும யிலைவாழுமை இளைய
    தங்கை வருகை சினமாமனி டமுரை -சிறைபால
    முந்தை வினைகள் முளையோடுவி டுபட
    சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
    கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
    எந்தை வருக ரகுநாயக வருக
    என்று அருண கிரியார்புகழ் தமிழின்
    சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • சூழ்ச்சி

    வேதா. இலங்காதிலகம்

     

    ( அந்தராயம் – தீமை, துன்பம், இடையூறு.

    நிந்திதம் – பரிகாசம், ஏளனம், தடை.

    நிந்தனை – இகழ்ச்சி.   சிலவங்கம் – மீன்முள்ளு.

    இலகம் – ஊமத்தை. )

     

    அந்தராயம் நிறை மனதின் கேடயம்

    தந்திரம், வஞ்சகம், சதியாம் இரண்டகம்.

    சுந்தரமல்ல மனிதநேயத்திற்கு ஒரு சுத்தியலாம்.

    நிந்திதம்  நிந்தனை தாழ்ச்சியே பலனாம்.

     

    உலக வட்டத்தின் சாப அத்தியாயம்

    கலகச் சரித்திரம் கருப்பாக்கும் சாயம்.

    இலகம் போன்ற வேண்டாத குணம்.

    சுலபமல்ல மோதும் சூழ்ச்சியின் வேகம்.

     

    சூழ்நிலைக் களத்தில் மீன் பிடிக்கும்

    கீழ் நிலைப் பாதகம் தலைகோதாது.

    ஆழ் கீறலால் மனம் அந்தரிக்கும்

    மூழ்கும் வேகம் இருண்ட காடாகும்.

     

    நிலவின் குளிரல்ல துரதிட்டம், வெப்பம்

    குலவும் நம்பிக்கைத் துரோக வலயம்

    சிலந்தி வலையே சூழ்ச்சி அத்தியாயம்.

    சிலவங்கமே சூழ்ச்சியாளர் உள்ளிருக்கும் ஊழ்வினையாவார்.

     

    தாழ்வுமனப்பான்மை, கவலையால் மீள்வு கொள்ள

    தாழ்ந்த மனதால் புன்னகை மறுத்து

    கீழிழுத்து அன்பு மொட்டுகளைக் கொய்து

    வாழ்வை ஒழிக்கும் பயங்கரம் சூழ்ச்சி.

     

    ஆழ்மனப் பயப் பேரலைகளின்  திமிறுதல்கள்

    கீழ் விழாதெழும் இரண மன

    கீழ் மக்களின் கூர் நக வேலைப்பாடுகள்

    வாழ்தலின் முயல்வுகள் இரண்டகமான சூழ்ச்சியாம்.

    Share
  • தமிழிசையை உயிர்ப்பிப்போம்

    பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    சிலம்புரைக்கும்    அரங்கேற்றுக்    காதை    தன்னில்

    சிறந்திருந்த    தமிழிசையைக்    கொணர்வோம்    மீண்டும்

    புலமையொடு    தமிழிசைக்கு    இலக்க   ணத்தைப்

    புகன்றிட்ட    இசைநுணுக்கம்    பஞ்ச   மரபு

    வலம்வந்த    பெருநாரை    பெருங்குரு   கென்று

    வரிசையாக   இருந்தஇசை   நூல்கள்   சொல்லும்

    நலமான    தமிழிசைதான்    செவிவி    ழுந்தால்

    நாமுணர்ந்து    தலையாட்டி    மகிழ்வோம்    அன்றோ !

     

    கீர்த்தனைகள்   எனப்புரியா    மொழியில்   பாடக்

    கீழ்மேலாய்த்    தலையாட்டும்   மாடாய்   ஆனோம்

    சீர்த்தகுரல்    கைக்கிளையும்    துத்தம்    தாரம்

    விளரியொடு    உழைஇளியும்    ஏழாய்   நின்று

    ஆர்த்தசுரம்    பன்னிரண்டும்   பாலைக்    குள்ளே

    அரும்பண்கள்   நூறோடு    மூன்றில்    தேனைச்

    சேர்த்தளிக்கும்   துளைநரம்பு    கருவி   பெய்யும்

    செம்மையான    தமிழிசையே    மயக்கும்   நெஞ்சை !

     

    புறக்கணிப்பால்    மறைந்துவரும்    தெருவின்    கூத்து

    புறமொதுக்கும்    கரகாட்டம்    மயிலின்     ஆட்டம்

    குறத்தியர்தம்    ஏலேலோ    பொம்ம   லாட்டம்

    குற்றுயிராய்ப்    போனதுபோல்    போயி   டாமல்

    சிறப்பாகத்    தமிழிசையை     இசைக்கச்    செய்தால்

    சீர்பெற்று    மீண்டுமிங்கே    தழைக்கும்   நன்றாய்

    உறவாக    உலகத்தை    இணைக்கும்    நம்மின்

    உயர்வான    தமிழிசையை    உயிர்ப்பிப்    போமே !

     

    Share
  • தீயதை அழிக்கும் திறன் வேண்டும்!

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்த இனம் மண்ணில் தோன்றிய காலந்தொட்டு அவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; தீயவர்களும் இருக்கிறார்கள். நல்லவர்களைவிடத் தீயவர்கள் எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் அவர்களால் விளையும் தீமை மிகப்பெரிது. மொத்த மானுடச் சமுதாயத்தின் மகிழ்ச்சியையும் குலைப்பதற்கு அதுவே போதுமானதாய் இருந்துவிடுகின்றது.

    எண்ணிக்கையில் குறைவாயிருக்கும் தீயவர்களின் கை (நல்லவர்களைக் காட்டிலும்) ஓங்கியிருப்பதற்கு என்ன காரணம்?

    அவர்களின் தன்னம்பிக்கையும் துணிச்சலுமே காரணம் எனலாம்.

    ஆம்! தீயவர்கள் எதையும் துணிச்சலோடு செயற்படுத்தும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். நல்லவர்களோ நாம் இதைச் செய்யலாமா? இதனால் நம் பெயர்கெட்டுப் போக வாய்ப்புள்ளதா? நமக்கு ஏதேனும் சங்கடங்கள் நேர்ந்துவிடுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழித்துவிடுவதால் தம் நல்வாழ்வைத் தொலைப்பதோடு, சமூகத்தில் தீமை நிலைபெறுவதற்கும் காரணமாகிவிடுகின்றனர்.

    உலகம் நல்லோர் வாழ்வதற்கு அஞ்சும் இடமாக – ஆபத்தான இடமாக மாறியிருப்பதற்கு மேனாட்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன் கூறும் காரணம் நாம் சிந்திக்கத்தக்கது

    “இவ்வுலகம், மக்கள் வாழ்வதற்கு ஒவ்வாத இடமாக மாறிப்போனதற்குக் காரணம் தீயவர்கள் இருப்பது அல்ல! அந்தத் தீயவர்களை எதிர்த்து மக்கள் ஏதும் செய்யாமல் இருப்பதே!” என்கிறார் அவர். (The world is a dangerous place to live; not because of the people who are evil, but because of the people who don’t do anything about it.)

    உண்மைதான்! தீயோரைவிட, அந்தத் தீயோர் செய்யும் கொடிய தீமைகளுக்குத் துணைபோவோரே அதிக ஆபத்தை விளைவிக்கின்றார்கள். ஆதலால் தீயோரைப் போலவே அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்றுதான் தோன்றுகின்றது.

    இக்கருத்துக்கு அரண்சேர்க்கும் நிகழ்வொன்று சைவ சமய அடியார்களில் ஒருவரான சண்டேசுர நாயனார் வரலாற்றில் காணப்படுகின்றது.

    பொன்னியாறு பொய்யாது புனல்கொழிக்கும் வளமான சோழநாட்டிலுள்ள திருச்சேய்ஞ்ஞலூரில் எச்சதத்தன் என்பவருக்கு மகனாகத் தோன்றியவர் ’விசாரசருமன்’ எனும் இயற்பெயர் கொண்ட சண்டேசுர நாயனார். அவர் அவ்வூரிலுள்ள மறையவர்களின் பசுக்களை மேய்த்துவரும் பணியைச் செய்துவந்தார். அப்பசுக்கள்மீது மிகுந்த பரிவும் அன்பும்கொண்டு அவைகளுக்குப் புல்லும் நீரும் தம்மால் ஒல்லும்வகையெல்லாம் அவர் அளித்துவந்ததால் அப்பசுக்கள் அவர்மீது கழிபேரன்பைக் காட்டின. அவரை அணைந்துநின்று கறவாமலேயே பாலைப் பொழிந்து தம் பாசத்தைப் புலப்படுத்தின.

    பசுக்கள் தன்பால்கொண்ட அன்பால் பொழிகின்ற அந்த ஆன்பாலை (பசும்பால்) வீணாக்கக்கூடாது என்றெண்ணிய சிவநேசச் செல்வரான சண்டேசர், அங்கேயே (மண்ணியாற்றாங்கரையில்) மண்ணில் சிவனுக்குக் கோயில் எழுப்பிச் சிவலிங்கம் அமைத்து அதற்கு அப்பசும்பாலை அபிடேகம் செய்து வந்தார்.

    இச்செய்தி ஒருநாள் ஊராருக்குத் தெரிந்துவிட, அவர்கள் எச்சதத்தனை அழைத்து அவர் தம்மகனைக் கண்டிக்குமாறு அறிவுறுத்தினர். ஊரார் சொன்னதன் உண்மையை அறியும்பொருட்டு மறுநாள் காலை சண்டேசுரர் மாடுகளை மேய்க்கும் இடத்தருகே இருந்த ஒருமரத்தின் பின்னே மறைந்திருந்து மகனைக் கண்காணித்து வந்தார் தகப்பனார்.

    வழக்கம்போலவே பசுக்கள் பொழிந்த பாலைச் சில பாண்டங்களில் பிடித்துவைத்த சண்டேசுரர், சிவபூசையில் ஆழ்ந்தார். தொலைவிலிருந்து இதனைக் கண்ட எச்சதத்தன், ஊரார் சொல்வதுபோல் தம் மகன் மாடுகளின் பாலை மண்ணில்சொரிந்து வீணடிக்கிறான் என்றே நினைந்தவராய், பிள்ளையின் அருகில் விரைந்து வந்தார்.

    சிவபூசையில் சிந்தை ஒன்றியிருந்த சண்டேசர் தம் தந்தை வந்ததைக் கவனிக்கவில்லை. ஆத்திரம் கொண்ட எச்சதத்தன், தம் கையிலிருந்த கோலால் மகன் முதுகில் ஓங்கி அடித்தார். சித்தத்தைச் சிவன்பாலே வைத்திருந்ததால், சண்டேசர் அதனை உணரவில்லை. எச்சதத்தனின் கோபம் உச்சமடைந்தது. அருகே சிறிய பாண்டங்களில் அபிடேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பாலைத் தம் காலால் எட்டி உடைத்தார். அதனால் பால்முழுவதும் மண்ணில் சிந்தி வீணானது.

    பாண்டங்கள் உடைபடும் ஓசையில் சுயவுணர்வு மீண்ட சண்டேசர், பாலிருந்த பாண்டங்களையெல்லாம் உடைத்துத் தம் தந்தையார் உக்கிரதாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டார். சிவாபிடேகத்திற்காக வைக்கப்படிருந்த பால் வீணானது கண்ட அவர் கடுங்கோபம் கொண்டார்.

    அந்த அபராதத்தைச் செய்த தந்தையைத் தண்டிக்க நினைத்தார். தன் அருகிருந்த ஆனிறைமேய்க்கும் கோலை எடுத்தார்; உடனே அது மழுவாக மாறியது. அதனை வீசித் தம் தந்தையின் காலைத் துண்டித்தார். பாலை உதைத்து வீணடித்த காலை வெட்டியதோடு சண்டேசர் விட்டிருக்கலாம்! ஆனால் அவர் விடவில்லை! தந்தையின் மறுகாலையும் வெட்டினார். இது அதிகப்படியான தண்டனையாக நமக்குத் தோன்றலாம். ஆனால் இதற்கு அருளாளர்கள் தரும் விளக்கம் கருதத்தக்கது.

    “ஒருகால் உதைப்பதற்கு ஊன்றிநின்ற மறுகால்தானே துணைநின்றது? அதனால்தான் சண்டேசர் இருகால்களையும் வெட்டினார் என்பது அவர்கள் தரும் விளக்கம். உணர்ச்சி மிகுந்திருந்த அவ்வேளையில் சண்டேசர் அவ்வளவுதூரம் (சட்டபூர்வாகச்) சிந்தித்துச் செயல்பட்டிருப்பாரா என்பது ஐயத்திற்குரியதே. எனினும், சிவநிந்தனை செய்தவருக்கு, அது தந்தையாகவே இருப்பினும், கடுந்தண்டனை தரவேண்டும் எனும் எண்ணம்  அவர் உள்ளத்தில் ஊடாடியதன் விளைவே இது என்று நாம் ஊகிக்கலாம். நீதிநூல்களின் அறக்கண்கொண்டு கண்டோமானால் இத்தண்டனை பொருத்தமானதாகவே படுகின்றது.

    சமூகத் தீமைகளுக்குத் தம் எதிர்ப்பைக் காட்டாது (மவுனமாயிருந்து) துணைபோகும் பொதுமக்களுக்கும் இதனை நாம் பொருத்திப் பார்க்கலாம் அல்லவா? அவ்வாறு நோக்கினால் தீமைக்குத் துணைநிற்கும் அவர்களும் தண்டைக்குரிய குற்றவாளிகளாகின்றனர்.

    இன்றைய சூழலில், தீயதை இனங்காணும் திண்மையும் அதனை எதிர்த்துச்
    செயலாற்றும் வன்மையும் நல்ல சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான அடிப்படைத் தேவைகளாய் இருக்கின்றன.

    தீயவை… சமூகத்தின் அறவாழ்வையே கருகச்செய்யும் தீ அவை! சிறுபொறியாய் இருக்கும்போதே அவற்றை அழித்துவிடவேண்டும். இல்லையேல் குற்றமற்ற நல்லோரின் வாழ்வும் ’எரிமுன்னர் வைத்தூறு போல’க் கெடுவதைத் தடுக்கமுடியாது.

    Share