க. பாலசுப்பிரமணியன்

 

நாச்சியார் கோயில் -(திருநாரையூர் நம்பி திருக்கோயில்) அருள்மிகு ஸ்ரீனிவாசப் பெருமாள்  

ag

பெண்ணுயர  முன்னுரிமை மணவறையில் தந்தாய்

விண்ணுயர வாழ்ந்தாலும் மனமுயர்ந்தே நின்றாய்

தானுயர்ந்தே  தாளால் திரிபுரமும் அளந்தவனே

நானுயர அருள்வாயோ நாரையூர் நாராயணனே !

 

காரிகை மணமுடிக்கக் கையேந்தி நின்றவனே

பேரிகை முழக்கமின்றி பிடித்தவளை மணந்தவனே

தூரிகை  வரையாத தூயவனே பேரழகா !

நாழிகை நகர்வதுவே  நின்னருளால் மட்டுமன்றோ?

 

சங்கோடு சக்கரமும் அங்கமெல்லாம் அணிகலனும்

பங்கமில்லாப்  பார்வையுடை செங்கமலச் செல்வா !

மங்காத ஒளிகொண்ட மங்கையவள் மணந்தவுடன்    

தங்கிடவே  நெஞ்சத்திலே மஞ்சமதைப் படைத்தாய் !

 

அன்னமென அன்னையவள் அழகாக முன்செல்ல

பின்னமின்றி அவள்நினைவைப் பின்னெடுத்து நீசெல்ல

நின்றபடி ஆழ்வார்கள் நிலைமற்ந்து கவிசொல்ல

வென்றிடுவார் வாழ்வெல்லாம் கண்டவர்கள் களிந்து.

 

புள்ளாகப் பிறந்தாலும் புவியாள வேண்டும்

வில்லாளன் நல்லோனின் சுமைதாங்க வேண்டும்

கல்லாகப் பிறந்தாலும் கண்ணன் வடிவாகவேண்டும்

கணநேரம் வாழ்ந்தாலும் கார்மேகன் குழலாகவேண்டும் !

 

பல்லாண்டு பாடிப் பரவசமான நெஞ்சில்

நில்லாமல் நினைவெல்லாம் நின்பாதம் நாடும்

புண்ணான வாழ்க்கைக்குப் புரியாத மருந்தே

கண்ணாக நானிருக்க ஒளியாக நீவருவாய் !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.