Month: January 2016

  • படக்கவிதைப் போட்டி (49)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12576240_949330908454442_569273548_n

    95494202@N04_lதிரு. புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • உன்னையறிந்தால் …. (39)

    நிர்மலா ராகவன்

    படிப்பும் சுதந்திரமும்

    உனையறிந்தால்1
    கேள்வி: பதினைந்து வயதாகியும் என்னை இன்னும் சிறுபையனைப்போலவே நடத்துகிறார்கள் என் அம்மாவும், தாத்தாவும். `படி, படி’ என்று உயிரை வாங்குகிறார்கள். ஏன்தான் பள்ளிக்கூடம் போகவேண்டுமோ என்று இருக்கிறது. எப்போதுதான் நான் சுதந்திரம் பெறுவது?

    விளக்கம்:

    சுதந்திரம் என்றால் மனம்போனபடி நடத்தல் என்பதல்ல.

    பெற்றோர் அனுமதிப்பதும், ஏதாவது ஒன்றைச் செய்யச்சொல்வதும் வயதைப் பொறுத்தது. நடக்க ஆரம்பித்த ஒன்றரை வயதுக் குழந்தைகூட தான் தனியாக நடக்க வேண்டும் என்று விரும்பி, நெரிசலான தெருக்களில் தாயின் கையை விட்டுவிட்டு ஓடப்பார்க்கும். இது சுதந்திரம் வேண்டும் ஒவ்வொரு மனிதனின் இயற்கையான தன்மை. அதற்காக, குழந்தையை அதன் விருப்பப்படி விடமுடியுமா?

    படிக்கும் வயதில், சிறுவர்கள் தமது எல்லாத் தேவைகளுக்கும் பெற்றோர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களாக இருந்தால், தாத்தா பாட்டி சொல்படியும் நடக்க வேண்டும். இரு தலைமுறைகளுக்குமுன் இவர்கள் மட்டுமின்றி, அத்தை, மாமா, பெரியம்மா என்று இன்னும் பலரையும் திருப்திப்படுத்த வேண்டியிருந்தது.

    வயதில் மூத்தவர்கள் அனுபவம் மிகுந்தவர்கள், அவர்களுக்கு மரியாதை கொடுத்து, நல்லவை, தீயவைகளை அவர்களிடமிருந்து கற்க வேண்டும் என்ற நிலை. அனுபவிக்கும்போது சற்றுக் கடினமாக இருந்தாலும், பலதரப்பட்ட மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள இம்முறை வழிவகுத்தது.

    நான் பார்த்தவரை, பதினெட்டு வந்துவரை ஆண்பிள்ளைகளுக்குச் சிறுபிள்ளைத்தனம் மாறுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதையோ, அல்லது கடிகாரம், ரேடியோ போன்ற ஏதாவது சாமானைப் பிரித்துப்போட்டு, பின் அதைப் பொருத்துவதையோதான் பெரும்பான்மையான பையன்கள் விரும்புவர். படிக்கவோ பிடிக்காது. (ஓயாது மனப்பாடம் செய்பவன் சகநண்பர்களின் கேலிக்கு உள்ளாகிறான் என்பதும் காரணமாக இருக்கலாம்).

    விவரம் புரியாத அந்தவயதில், பெற்றோரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. நல்ல பழக்கங்கள்கொண்ட நண்பர்களை நாடவேண்டுவது அவசியம். நம்மைக் காரணமின்றி ஓயாமல் புகழும் நண்பர்களும், அல்லது நம்மைவிடக் கீழான நிலையில் இருப்பவர்களும் நம்மையும் கீழே இறக்கிவிடக்கூடும்.

    நண்பர்களுடன் சேர்ந்து புகைபிடிப்பது அந்தத் தருணத்தில் இன்பகரமாகத் தோன்றலாம். பிரபலமான நடிகர்கள் படங்களில் புகை பிடித்தால், கம்பெனிக்கு வியாபாரம். நடிகர்களுக்கும் கொள்ளைப்பணம். ஆனால், கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்துடன், பணமும், நேரமும் அல்லவா வீணாகிறது!

    எனக்குத் தெரிந்த பல ஆண்கள் (வயது: 14 – 50) `நல்லவேளை, நான் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சையில் நல்லபடியாக பாஸ் பண்ணவில்லை. இல்லாவிட்டால், காலேஜிலே படிச்சுத் தொலைச்சிருக்கணும். `படி, படி’ என்று அம்மா, பாட்டி எல்லாரும் உயிரை வாங்குவார்கள்!’ என்று என்னிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொண்டபோது, எனக்கு அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் ஏற்பட்டது. வாழ்வில் நன்றாக முன்னுக்கு வந்திருக்கக் கூடியவர்கள்! பெரியவர்களின் தொணதொணப்பு பொறுக்க முடியாது, தம் முன்னேற்றத்துக்குத் தாமே முட்டுக்கட்டு போட்டுக்கொண்டவர்கள்!

    இந்தக் கோணத்தில் அணுகினால், பிள்ளைகளுக்குப் படிக்கப் பிடிக்காததற்கு பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணமாகிறார்கள்.

    பிள்ளைகள் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்தில் அமரவேண்டும் என்றெல்லாம் கனவு கண்டால் மட்டும் போதுமா? சிறுவர்களின் மனநிலையை உணரவேண்டாமா! திட்டுவதாலோ, அடிப்பதாலோ சிறுவர்களை மாற்றிவிட முடியாது. சற்று பயந்து, கொஞ்சகாலம் அடங்கியிருந்தாலும், ஊக்குவிப்பு என்பது உள்ளார்ந்ததாக இருந்தால்தான் எடுத்துக்கொண்ட எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்யும் உந்துதல் ஏற்படும்.

    `நான் நன்றாகப் படித்து, வாழ்வில் உயருவேன். எல்லாவற்றிலும் வெற்றி பெற முயற்சி செய்வேன்!’ என்று தீர்மானம் செய்துகொள்ளும் சிறுவர்கள் எந்தவித ஏளனப் பேச்சையும் அலட்சியம் செய்ய முடிகிறது.

    கதை: `எனக்குக் கதைப்புத்தகம் படிக்கவே பிடிப்பதில்லை!’ தயக்கத்துடன் என்னிடம் தெரிவித்தவன் உறவுக்கார, பதின்ம வயதுப் பையன்.

    `கதைதான் என்று என்ன! புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு, கார், ஆகாய விமானம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என்று எதையாவது படியேன்!” என்றுவிட்டு, “ எல்லா விளையாட்டும் விளையாடு! அம்மாவுக்குத் தேங்காய் துருவிக்கொடுப்பதைவிட நண்பர்களுடன் விளையாடுவது முக்கியம்!’ என்று அழுத்தமாகக் கூறினேன். (அவன் தாய் சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள்).

    அவனும் மகிழ்ச்சியுடன் அந்த அறிவுரையைக் கடைப்பிடித்து, I.I.T கல்லூரியிலேயே இரண்டாவது மாணவனாக வந்தான். உயர்ந்த உத்தியோகமும் கிடைத்தது.

    `நாம் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம். நீ பெரியவன் ஆனதும், இதேபோன்ற வாழ்க்கைத்தரம் அமைய வேண்டுமானால், அது உன் கையில்தான் இருக்கிறது. அதற்கு நீ இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்!’ என்று ஒரு தாய் நல்லவிதமாக எடுத்துச் சொன்னால், பதின்ம வயதுப் பையன்கள் புரிந்துகொள்வார்கள்.

    தாத்தா பாட்டியாக இருந்தால், `நீ நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கையில் நல்ல நிலை அடையமுடியும். நாங்கள் புத்தி சொல்வது உன் நன்மைக்காகத்தான்! நாளைக்கு உன் குடும்பம்தானே மகிழ்ச்சியாக இருக்கும்! நாங்களா அனுபவிக்கப்போகிறோம்! என்று கூறினால் பலனிருக்கும். ஆனால், ஓரிரு தடவை மட்டுமே சொன்னால் போதும்!

    அதைவிட்டு, ஓயாது தொணதொணத்தால், அவர்களை மீறத்தான் தோன்றும் எவ்வயதினருக்கும். அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றி, படிப்பு, படிப்பு என்று உயிரை விட்டுக்கொண்டால், அலுப்புடன், அச்சமும் விளையாதா! அதைச் சீராக்க, விளையாட்டும், மற்ற பொழுதுபோக்கும் அவசியம். அவைகளை விடக்கூடாது.

    சமீபத்தில் நான் படித்த தகவல்: தற்கால சீனாவில் பல்கலைக்கழகத்தில் நுழைவது மிகக் கடினம். கல்லூரிப்படிப்பு மட்டுமே பெரிய உத்தியோகத்துக்கு வழிவகுக்கும். இல்லாவிட்டால், அவர்களுடைய பெற்றோர்கள்போல், கட்டட வேலைக்கோ, தோட்டத் தொழிலாளியாகவோதான் போக முடியும்.

    பல்கலைக்கழகத்தில் நுழைய மிகக் கடினமான பரீட்சை நடத்தப்படுகிறது. இப்பாடங்களைப் பயில சீனாவின் கிழக்குப்பகுதியில் ஒரு விசேடமான (ரகசியப்) பள்ளி இருக்கிறது. இங்கு 20,000 பேர் பயில்கிறார்கள். இல்லை, இல்லை, உருப்போடுகிறார்கள். காலை 6.20 – இரவு 10.50 வரை பாடங்கள். (ஐயோ!)

    தங்கும் விடுதியில் எல்லா மாணவர்களும் நுழைந்து விட்டார்களோ என்று உறுதி செய்துகொள்ளும் வகையில், அவர்கள் கைரேகையைப் பதித்தால்தான் அறைக்குள் புகமுடியும். பள்ளியிலும், ஊரிலும் மாணவ மாணவிகளின் எல்லாவித நடத்தையும் கேமராமூலம் கண்காணிக்கப்படுகின்றன. அவர்கள் கவனத்தைக் கலைத்துவிடக்கூடிய கணினி, தொலைபேசி, வீடியோ `ஆர்கேட்’ போன்ற எதுவும் அந்த ஊரிலேயே கிடையாது. ஆணும், பெண்ணும் கூடிப்பேசுதல், காதல் — மூச்!

    தாம் பெற்ற ஒரே செல்வங்களும் தம்மைப்போன்றே வறுமையில் வாடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், பெற்றோர் இரவு பகலாக இரண்டு வேலை பார்த்து, (குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவனுக்காக நிறையச் சம்பளம் கட்டி), இதில் சேர்க்கிறார்கள்.

    விடுதியில் அம்மாவோ, தாத்தாவோ மாணவனுடன் தங்கலாம். ஆனால், அவர்களுடைய பதட்டமும் மாணவர்களப் பற்றிக்கொள்ள, சிலர் தற்கொலை செய்துகொண்டதில் ஆச்சரியமென்ன!

    நல்லவேளை, நமக்கு இந்தக் கெடுபிடிகள் எல்லாம் கிடையாதே என்று நாம் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    பொதுவாக, பரீட்சைக்கு முதல் நாள் இரவு கண்விழித்துப் படிக்காது, வார இறுதிகளில் அந்தந்த வாரப் பாடத்தை படித்து வருவது நன்று. ஒரு முறை வகுப்பில் கேட்டது அல்லது படித்தது இருபத்து நான்கு மணி நேரம்தான் நம் நினைவில் இருக்குமாம்.

    திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் படித்தால், அதற்காக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் குறுகிவிடும். பரீட்சைக்கு முன்னால் ஒரு பார்வை பார்த்துக்கொண்டாலே போதும்.

    பரீட்சைகளைத் திருப்திகரமாக எழுதி முடித்ததும், விடுதலை உணர்வுடன் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கப்போகலாமே!

    Share
  • வேட்டை

    பெஸீ ஹெட் (தென்னாபிரிக்க நாட்டுச் சிறுகதை)

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

                ஜூலை மாதம் வேட்டைக்குரிய மாதம். பல காரணங்களுக்காக அக் காலநிலை வேட்டைக்கேற்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. ஜூன் மாத அறுவடைக் காலமானது அத் தறுவாயில் முடிந்திருக்கும் என்பதால் எல்லோரிடமுமே சோளம் இருக்கும். அச் சோளத்தோடு கலந்து சுவையான உணவாகக் கொள்ள ஏதேனும் தேவைப்படும். சாதாரணமாக இக் காலத்தில், அவ் வருடத்திற்கான மழை வீழ்ச்சி பெய்யுமெனில் கொடிய மிருகங்களைக் காணக் கிடைக்கும்.

    பன்னிரண்டு மாதங்களிலும் மிக அதிகளவில் குளிரான மாதம் ஜூலை மாதம் என்பதனால் இறைச்சியைக் காய வைக்கையில் ஏனைய மாதங்களில் போல கெட்டுப் போகவோ புளுத்துப் போகவோ மாட்டாது. எனவே ஜூலை மாதத்தில் அனேக ஆண்கள் ஊரை விட்டுக் கிளம்பி விடுவார்கள். சிலர் வாரக் கணக்கிலும், சிலர் ஒரு மாதம் தாண்டியும் கூட ஊரைத் தாண்டி வெளியே இருப்பர். அவர்கள் அடர்ந்த வனாந்தரத்துக்குச் சென்று மிகக் கடினமாக வாழ்க்கையைக் கழிப்பர். மரங்களிலிருந்து கிளைகளை வெட்டியெடுத்து முக்கோண வடிவத்தில் நட்டு அதன் மேல் புற்களை கூரையாகப் பரப்பி கூடாரங்களையோ குடிசைகளையோ உருவாக்கிக் கொள்வர். இரவு நேரங்களில் ஓய்வெடுக்கவும் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதற்குள் புகுந்துகொள்வர். சிங்கங்கள் நடமாடும் பகுதியொன்றுக்கு அவர்கள் வேட்டைக்காக வந்திருப்பின் சிங்கங்களை அச்சுருத்துவதற்காக தமது குடிசைக்கருகில் தீ மூட்டி விசாலமானதாக எரிய விட்டிருப்பர்.

    அவர்களிடம் தமக்குச் சொந்தமான ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதனைக் கொண்டு அவர்கள் ஆபிரிக்காவில் வசிக்கும் மான், மரை போன்ற விலங்குகளை வேட்டையாடி தமது குடும்பத்துக்கு மூன்று, நான்கு மாத காலங்களுக்குத் தேவையான இறைச்சியை சேகரித்துக் கொள்வர். பொதுவாக வேட்டைக் குழுவொன்று நான்கைந்து பேரைக் கொண்டதாக இருக்கும். இயன்றவரையில் சிறிய குழுக்களாக இருக்கவே அவர்கள் முயற்சிப்பர். மிருகங்கள் மனித வாடையை உணர்ந்தால் அவை தப்பிச் சென்று விடுமென அவர்கள் கதைத்துக் கொண்டனர்.

                ராபுலா, டெபோகோ, லெசீட் மற்றும் கெலீபோன் ஆகிய நால்வரும் தோலோ என்பவனின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். டிரக்டர் வண்டியொன்றும் அதனுடன் பொருத்தக் கூடிய ட்ரேலர் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கும் ஒருவன் அக் கிராமத்தில் தோலோ மட்டுமே. எனவே அவனுடன் வேட்டைக்குச் செல்ல எல்லோருமே ஆர்வம் காட்டினர். தோலோவின் டிரக்டர் வண்டியில் சென்றால் தேவையான அளவு இறைச்சியோடு இரண்டே நாட்களில் வீடு திரும்ப முடியும். அவற்றைத் தமது வீட்டு முற்றத்திலேயே காய வைக்கும் நடவடிக்கைகளில் ஓய்வு நேரங்களில் ஈடுபடலாம். அவர்களது மனைவிமார் அந்த இறைச்சியை சமைத்தெடுப்பர் என்பதனால் எதுவுமே வீணாகப் போய்விடாது.

                இறுதியில் ராபுலாவாலும் டெபோகாவாலும் பொறுத்திருக்க முடியாமல் போயிற்று. அவர்கள் தோலோவின் முற்றத்துக்கு வந்தனர். தோலோ தனது டிரக்டரைத் திருத்தி, சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். சோள அறுவடையை அந்த டிரக்டரில் ஏற்றிக் கொண்டு அப்பொழுதுதான் வந்திருந்தான்.

                “நாங்க எப்ப போகலாம் தோலோ?” ராபுலா கேட்டான்.

                தோலோ தனது வேலையைத் தொடர்ந்தவாறே அமைதியாக தலையை உயர்த்திப் பார்த்தான். அவன் அவர்களுடன் தனது விழிகளால் மட்டுமே புன்னகைத்தான். அவன் உயர்ந்து மெலிந்த உடலுடையவன்.

                “இந்தத் தடவை என்னோட வருவியா?”

                அவர்கள் நட்பாகப் புன்னகைத்து சாதாரணமாகக் கேட்டார்கள்.

                “லெஸீட்டும் கெலீபோனும் கூட நம்மோட வருவாங்க.” ராபுலா கூறினான்.

                தோலோ பூரண சம்மதத்துடன் தலையை அசைத்தான். ஒவ்வொரு முறையும் தன்னுடன் வரப் போவது யாரென்பது குறித்து தோலோ மிகவும் கவனமாக இருந்தான். டிரக்டரில் சென்று விலங்குகளை வேட்டையாடும் அதிர்ஷ்டம் தனது கிராமவாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

                “நாளை விடிகாலையிலேயே எழும்பி காட்டுக்குப் போவோம்.” எனச் சொன்ன தோலோ தான் செய்து கொண்டிருந்த வேலையின் பக்கம் திரும்பினான். அது அவனது இயல்பு. வீண் அரட்டையடிப்பதோ ஊர் வம்பு கதைப்பதோ இல்லை.

                இருவர் இருவராக திரும்பிச் செல்லத் திரும்பினர். தோலோவுக்குக் கேட்காத தொலைவுக்குச் சென்ற பிற்பாடும் குள்ளமாகவும் மிரட்டும்விதமாகவும் இருந்த ராபுலா தனக்குள் எழுந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டிருந்தான்.

                “என்னால தோலோவை புரிஞ்சுக்கவே முடியல.” என அவன் சொன்னான்.

                “இவன் ஒரு பொம்பளையான்னு எனக்குத் தெரியல.” என கெலீபோன், தோலோவின் நற்குணத்தையும் நட்பாகப் பழகுவதையும் கிண்டலடித்தான். அவன் தலைவனைப் போன்ற ஒருவன். எனினும் நாம் கழிப்பதைப் போன்ற ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ்கிறான்.

                “தோலோ பற்றி கெலீபோன் சொன்னது நிஜம்தான்.” டெபோகோ கூறினான்.

                “இந்த மாதிரியான மனுஷன்கிட்டத்தான் உண்மையான சக்தியொண்ணு இருக்கும்..இப்படியொரு நல்ல மனுஷன் நம்ம கூட இருக்குறது எங்க அதிர்ஷ்டம்னு முன்னாடி ஒரு நாள் அவன் சொல்லியிருக்கான்.”

                தோலோ குறித்து எல்லோருமே அவன் ஒரு நல்ல மனிதனென்றே அறிந்திருந்தனர். அவனிடம் ஏதேனும் உதவி கேட்டுச் செல்லும்போது அவன் ஒருபோதும் அந்த வேண்டுகோளை நிராகரித்ததில்லை. அவனிடமிருக்கும் அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூட அவன் விருப்பத்துடனிருந்தான். எனினும் வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலிருந்தும் தப்பித்துச் செல்லும் பழக்கமொன்றும் அவனுக்குள்ளே இருப்பது தெரிந்தது. மனித வாழ்க்கையில் ஒழுங்குமுறையும் நன்மை மாத்திரமும் இருக்காது. எனினும் சுய கட்டுப்பாட்டுடன் வாழும் ஒழுங்குமுறையானது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டும். அவன் தனது மனைவி மற்றும் தனது வேலைகள் குறித்து ஆழமாகச் சிந்தித்தே செயலாற்றினான்.

                அவன் தனது மனைவியான தாட்டோவை மிகவும் கவனமாகவே தேர்ந்தெடுத்திருந்தான். நாகரிகத் தோற்றத்துடன் அவள் அமைதியானவளாகவும் குழப்பமடையாதவளாகவும் இருந்தாள். இந்தக் கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருந்த அன்னியோன்யத்தை எல்லாப் பெண்களுமே அறிந்திருந்தனர். தேவைக்கென கேட்டு வந்திருக்கும் எவர்க்கும் தன்னிடமிருக்கும் அனைத்தையுமே வழங்குவது தாட்டோவின் பழக்கம்.

    தோலோ அவளை மணமுடித்துக் கூட்டி வருகையில், அவளைக் கைவிட்டுச் சென்ற அவளது முந்தைய கணவனுக்குப் பிறந்த மகளொருத்தியும் இருந்தாள். இக் காலத்தில் இது ஒரு சாதாரணமான விடயம். திருமணத்துக்கு முன்பே எவருடனாவது உறவைக் கொண்டு செல்வது அவசியம் என்றே இன்று அனேகர் எண்ணுகின்றனர். இதனால் இலவசமாகவே இந்த உறவைக் கொண்டு செல்ல முடிகிறது. அவர்களுக்கு பெண்கள் மேல் எவ்விதமான விஷேட ஈர்ப்பும் இல்லாததோடு உண்மையிலேயே பெண்களை மதிக்கவும் மாட்டார்கள். தம்மால் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளால் அப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெண் என்றால் பண்பற்ற, கசப்பான, எந்தப் பெறுமதியும் அற்றவள். அவளுக்கும் அன்பு செலுத்த வேண்டும் என அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

                தோலோவுடன் தொடர்பொன்று ஏற்பட்ட முதல் சந்தர்ப்பத்தில் அவனது அனுபவங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள தாட்டோ முயற்சித்தாள். குழந்தையொன்றைப் பெற்றுக் கொள்வதில் அவளுக்கு ஆட்சேபணை இல்லை. எவரும் குழந்தைகளை மறுக்க மாட்டார்கள். எனினும் ஆண்களின் நேர்மையற்ற தன்மையும் ஏமாற்றும் திறனும் அவளுக்குப் பிடிக்காதவை.

                ‘முட்டாள் பொம்பளைங்க’ அவள் கோபத்துடன் சொன்னாள். ‘ஆம்பளைங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்றதுக்காகப் பொம்பளைங்க இருக்காங்க. ஆனா படிச்ச பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் ஆம்பளைங்களுக்குத் தேவையா இருக்கு. ஆனா அவங்களையும் ரொம்ப மோசமாத்தான் கவனிக்கிறாங்க. பொம்பளைங்க அவங்களுக்காகவே வேலை செய்றாங்க. அவங்களுக்கு உபகாரம் பண்றாங்க. ஆனா கல்யாணத்தினால பொம்பளைங்களுக்கு எந்தவொரு சந்தோஷமும் கிடைக்குறதில்ல.”

                சிறியதொரு இடைவெளி விட்டு ஏதொவொரு நிச்சயமற்ற தன்மையோடு அவள் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டே போனாள்.

                “நான் ரொம்ப நாளா கல்யாணத்துக்காகக் காத்திருந்தேன். அதுக்கப்புறம்தான் குழந்தையொண்ணப் பெத்துக்கத் தீர்மானிச்சேன். எனக்கு வயசாகும்போது பிள்ளையில்லாத அம்மாவா இருக்குற நிலைமைக்கு என்னை ஆளாக்க வேணாம்.”

                அவள் அடுப்பில் நெருப்பை மூட்டி களி கிண்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு வந்த மனிதனால் அவளது மனதில் உதித்த எண்ணங்கள் அனைத்தையும் அழித்து விட முடிந்தது.

    தொடக்கத்தில் அவர்களது தொடர்பு ஆரம்பித்தது இவ்வாறுதான். முதலில் அவள் தனது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணங்களை அழித்து விட வேண்டும். ஆண் மகனொருவனைக் காதலிப்பதற்கு பெண்ணானவள் அதிக தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

                தோலோவின் டிரக்டர் வண்டியைப் பாவித்து தமது காணி நிலத்தைப் பண்படுத்திக் கொள்ள தாட்டோவின் தாய் நடவடிக்கைகளை மேற்கொண்டாள். டிரக்டர் வண்டியொன்று அவர்களது இடத்துக்கு வந்தது அதுதான் முதல் தடவை. வருடக் கணக்கில் அவர்களது நிலத்தை அவர்கள் எருமைகளைப் பயன்படுத்தியே செப்பனிட்டு வந்தார்கள். (அவர்களது காணியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். தாட்டோவின் தந்தை அவளது சிறு வயதிலேயே இறந்துவிட்டிருந்தார். அவள் தனது தாயோடும் சிறிய தங்கைகள் இருவரோடும் வசித்து வந்தாள்.)

    டிரக்டர் வண்டியின் மூலம் நிலத்தைப் பண்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பதே புதிய அனுபவம். மழை பெய்திருந்ததால் புதிதாக ஈரலித்துப் போயிருந்த நிலத்தை, விவசாயக் கல்லூரியில் பெற்ற தொழில் அனுபவத்தைக் கொண்டு அவன் தோண்டிக் கொண்டிருந்தான். அவர் மிகச் சரியான முறையில் தனது வேலையைச் செய்துகொண்டிருந்தான். அன்று அந்தி சாயும் நேரமாகுகையில் அவர்களது நிலத்தைப் பண்படுத்துவதைப் பூர்த்தி செய்த அவன் வண்டியை வேறொரு வேலைக்காகக் கொண்டு சென்றான்.

    இரவில் அவளது கனவு உலகத்தில் அசையாத உருவமொன்று நடமாடத் தொடங்கியது. அவள் அவனைத் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். அவளது கஷ்டமான வாழ்க்கையை விடவும் அவன் தொலைதூரத்திலிருந்தான். அவளைப் போல இன்னும் பெண்கள் பலர் இருக்கக் கூடும். அவர்களுக்கும் அவளைப் போலவே எல்லா வேலைகளையும் செய்யக் கூடிய திறமைகளும் இருக்கக் கூடும். எனினும் அவர்களுக்கு வாழ்க்கையில் விஷேடமான மகிழ்ச்சி எதுவும் ஏற்பட்டிருக்காது.

                அவர்கள் தொடர்ந்தும் புதியவர்களாக இருக்கவில்லை. அறுவடைக் காலம் முடிந்து விற்பனைச் சந்தைக்குச் சென்ற சந்தர்ப்பமொன்றில் அவள் அவனை மீண்டும் சந்தித்தாள். ‘காதல் என்பது விபத்துக்களை நோக்கிக் கையசைக்கும் பயங்கரமான ஒன்று’.

    பெண்கள் இவ்வாறு சொல்லப் பழகியிருந்தார்கள். “எல்லா ஆம்பளைங்களுமே ஒண்ணு மாதிரித்தான். அவங்க ஒண்ணு ரெண்டு மாசம் ஒண்ணா சுத்திட்டு அப்புறம் நிரந்தரமாக் காணாமப் போயிடுவாங்க.”

                எனினும் ‘ஏனையவர்களின் கதைகளை நான் கண்டுகொள்வதில்லை. அவன் இன்னும் பல பெண்களை அறிந்திருக்கக் கூடும். எனினும் எனக்கு அது ஒரு தடையல்ல.’ எனத் தீர்மானித்த தாட்டோ, தோலோவின் எதிர்காலம் குறித்து எந்தவொரு உறுதிப்பாடும் கிடைத்திராத நிலையிலேயே அவனுடனான தொடர்பினை வளர்த்துக் கொள்ளச் சம்மதித்தாள். இரு மாதங்கள் கழிந்த நிலையில் ஏதொவொரு தவறு நிகழ்ந்திருப்பதாகத் தென்பட்டது. அவன் காதல் குறித்து எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை. அவள் மிகவும் கவலைக்குள்ளானாள். அவள் எந்தளவு வெறுப்புக்குள்ளானாளெனில், அவன் வருகை தரும் போது அவனை வரவேற்பதைக் கூட அவள் செய்யவில்லை.

                “என்ன ஆகியிருக்கு உனக்கு?” என அவன் அமைதியாகக் கேட்டான். அவள் ஒரு கணம் எரியும் சுடர் போன்ற கூர்மையோடு அவனை நோக்கினாள். ஒரேயடியாக அவள் உடனடித் தீர்மானமொன்றை எடுத்தாள். அது அவனிடம் சொல்லியே ஆக வேண்டிய ஒரு பிரச்சினை. ‘ஆமாம். நான் குழந்தையை எதிர்பார்ப்பதாக அவனிடம் சொல்லி விடப் போகிறேன். எவ்வாறாயினும் நான் ஆண்களை வெறுக்கிறேன்’ எனத் தீர்மானித்த அவள் இறுதியில் உறுதியோடும் கோபத்தோடும் அவனிடம் அதனைச் சொல்லி விட்டாள். எனினும் அவன் அமைதியாகவே இருந்தான். அவள் கரிக் கட்டையொன்றை எடுத்து நிலத்தில் கோடு வரைந்தாள். அவளது நொந்து போயிருந்த மனதுக்குள் நேரடியாக ஊடுருவியபடி

                “நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்’ என அவன் அன்பாகக் கூறினான். “என்னால எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடலாம்.”

                எதிர்பாராத வகையில் அவனது அலங்காரமிக்க வாழ்க்கையுடன் தனது வாழ்க்கை இணையப் போவதை அவள் உணர்ந்தாள். பின்பு அமைதியாக லேசாய்ப் புன்னகைத்தாள். பண்டைய காலத்தைப் போல நிகழ்காலத்தில் திருமணத்தைத் திட்டமிடுவது பெற்றோர்களல்ல. ஆணும் பெண்ணும் தமது வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு கணவனும் மனைவியுமாக வாழ்க்கையை ஆரம்பித்து விடுகின்றனர்.

                “என்னிடம் தர்றதுக்கு எதுவுமே இல்ல தோலோ’ அவள் மிகவும் கையாலாகாத நிலையில் சொன்னாள். “நாங்க ரொம்ப ஏழைங்கங்குறது உனக்குத் தெரிஞ்சிருக்கும். என்னால ரொம்ப நல்லா விவசாய வேலைகளைச் செய்ய முடியும்.”

                அவன் அவளது முகத்தை வியப்போடு பார்த்தான். விழிகளால் புன்னகைத்தான். அச் சிரிப்பை உணர்ந்து கொள்ள அவளுக்குக் கொஞ்ச நேரம் பிடித்தது. அதன் அர்த்தம் அவன் இன்னுமொருவரது வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதைப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் போன்றது. ஆரம்பத்தில் அவள் அனைத்து விடயங்கள் குறித்தும் கவனமாக இருந்தாள். நிறைய நேரத்துக்குப் பிறகு அவர்களது உரையாடல் அறுவடை, விலங்கு வேளாண்மை, ஏனைய மனிதர்கள் போன்ற விடயங்களுக்குத் திரும்பியது. எனினும் அம் மாலை நேரத்தில் அவனுக்கு, அவளிடம் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்ல இயலாமல் போயிற்று. எதிர்பாராத அச் சுதந்திரத்தை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

                அவனைப் போன்ற விவசாயிகளுக்கும் விலங்குப் பண்ணையாளர்களுக்கும் முக்கியமான இடமொன்று கிடைத்தது. அவனுக்கு அரச விவசாய தொழில் பயிற்சி நிலையத்தில் விஷேட இடமொன்று கிடைத்ததோடு, அவளது முந்தைய கணவனுடன் இணைந்து அவனது நிலத்தில் வேலை செய்யவும், விலங்குகளைப் பார்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுடன் இணைந்து அவ்வாறு திருமண வாழ்க்கையைக் கொண்டு செல்லக் கூடிய பெண்ணே அவனது தேவையாகவிருந்தது. இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்பிருந்த மக்களுக்கு இவ்வாறானதோர் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை.

                அவன் அவளைத் தனது குடும்பத்திடம் அறிமுகப்படுத்திய வேளையில் அவர்கள் தமது மறுப்பைத் தெரிவித்தனர். அவனது அத்தையொருத்தி எல்லாவற்றையும் சுருக்கமாக இவ்வாறு சொன்னாள். ‘அவள் வாழ்க்கைல நிறைய அனுபவங்களைப் பார்த்தவளொருத்தி. வயசானவள்.”

                தாட்டோவின் முகத்தைப் பார்க்கையில், அவள் நன்கு யோசிக்கக் கூடியவளென அவர்களுக்குத் தென்பட்டது. ஆண் மகனொருவன் திறந்த மனதுடன் உள்ள, தன்னை விடவும் வயதில் பத்து வருடங்களாவது குறைந்த ஒருத்தியையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்களது திருமணம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்காவது நிலைத்திருக்கும்.

                எவ்வாறாயினும் அவர்கள் மூன்று வருடங்களாக திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கின்றனர். வேலைகள் மற்றும் ஏனையவர்களின் தேவைகளுக்காகக் கலந்துகொள்ளச் செல்வதனால் அவர்களது திருமண பந்தத்திலிருந்த மகிழ்ச்சி மெதுவாக நீங்கிச் சென்றது. ராபுலாவும் டெபோகோவும் தமது முற்றத்திலிருந்து சென்ற உடனேயே தண்ணீர்க் குடமொன்றைத் தலையிலேந்தியபடி தாட்டோ வந்தாள். தனக்கு ஏதோவோர் தேவையிருப்பதை உணர்த்தும் விதத்தில் தோலோ அவளைப் பார்த்தான். அவள் அவனருகே சென்று டிரக்டர் வண்டியின் அருகே தண்ணீர்க் குடத்தை நிலத்தில் வைத்தாள்.

                “ஏதாச்சும் கொண்டு போக ஏற்பாடு பண்றியா? நான் நாளைக்கு ராபுலாவோடும், டெபோகோ லேஸீட்டோடும், கெலீபோனோடும் வேட்டைக்குப் போக நினைச்சிருக்கேன்.”

                அவள் டிரக்டர் வண்டியின் மீது தனது ஒரு கையை வைத்தாள். “இந்த வருஷத்துல மிருகங்கன்னா நல்லா வளர்ந்திருக்கு. ஆனா நம்ம தோட்டத்து வட்டக்கா, பூசணி, தர்ப்பூசணி எல்லாம் நோய் வந்தது மாதிரி சின்னதாப் போயிருக்கு.”

                தீர்மானித்திருந்த படி அடுத்த நாள் விடிகாலையில் ஆண்கள் ஐந்து பேரும் தமது வேட்டைக்கான பயணத்தை ஆரம்பித்தனர். பெரிய மழைக்குப் பிற்பாடு மெல்லிய தென்றல் வீசுவதே வழமை. ஜூலை மாதமாகுகையில் எந்நாளும் வானம் நீல நிறத்தில் இருப்பதோடு குளிர்ந்த சூரியக் கீற்றுகளோடு மொத்த சூழலும் உறங்கச் செல்லத் தயாராவதைப் போன்றதொரு நிலையைக் காட்டும். தேனின் நிறத்தைக் கொண்ட புற்கள் குளிர்ந்த தென்றல் அலைகளில் சிக்கி அசைவது, ஆயிரக்கணக்கான சிறுமியர் தமது ஆடைகளை அசைத்து ஆடுவதைப் போன்றிருக்கும்.

    இந்த அமைதியான சூழலுக்கே இந்த ஐவரும் வேட்டைக்காகச் சென்றிருந்தனர். அந் நாளின் மத்தியான வேளையாகும் போது அவர்களுக்கு, தமக்குத் தேவையான அளவு விலங்குகளை வேட்டையாட முடிந்ததோடு மாலையில் அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். அன்றைய மாலைவேளை அனைத்து வீடுகளிலும் ஒரே களேபரம். பிள்ளைகள் சுட்ட இறைச்சியை தமது வயிறு வெடிக்குமளவுக்குச் சாப்பிட்டனர். அவர்கள் நீங்கிச் சென்ற பிற்பாடு பெரியவர்கள் முற்றங்களில் வெட்டவெளியில் நெருப்பை மூட்டி பெரிய இரும்புப் பாத்திரங்களில் இறைச்சியைச் சமைக்க ஆரம்பித்தனர். அடுத்த நாள் காலைவேளையில் அவர்களது வீட்டில் சமைக்கப்பட்ட இறைச்சியை  உண்டு செல்ல விருந்தாளிகள் வருகை தரவிருக்கின்றனர்.

                தோலோவுக்கு இந்த நாள் மிகவும் பிடிக்கும். இக் காட்சியை அவன் அநேகத் தடவைகள் கண்டிருக்கிறான். அவன் சிறியதொரு கதிரையில் அமர்ந்திருந்ததோடு அவனது மனைவி ஒரு காலை மடித்து நிலத்தில் அமர்ந்து நெருப்புச் சுடரைப் பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

                “என்ன சங்கதி?” ஒரு சந்தர்ப்பத்தில் அவன் கேட்டான்.

                அவளால் எந்தவொரு கலவர நிலைக்கும் முகம் கொடுக்க முடியும். ஆனால் அவனால் முடியாது. ஏனைய பெண்களைப் போலவே அவளும் ஊர் விடயங்கள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் ஈடுபாடு கொண்டிருந்தாள். எனவே அவளுக்கு ஊர் விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்கும். எனினும் அதனை வெளிப்படுத்தும் போது தேர்ந்தெடுத்துச் சொல்வதில் அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

                அன்றைய மாலை நேரத்தில் அவனது ‘என்ன சங்கதி?’ எனும் கேள்விக்கு பதிலளிக்க அவள் தயாரானாள்.

    ‘மாட்டுக் கொட்டகையில ஒரு எருமை இன்னொரு வயதான எருமையோடு மோதிக் கொண்டதில பலத்த காயப்பட்டிருக்கு’

    அவள் சிறியதொரு இடைவெளி விட்டுவிட்டு விழிகளைச் சுழற்றியபடி சொன்னாள்.

    “ஊர்ல இன்னுமொரு பிரச்சினை. பிலீஷியாவுக்கும் அவளோட புருஷனுக்குமிடையில திரும்பவும் சண்டை. அவங்க சமீபத்துலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா பிலீஷியா கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடியிருந்தே சாதாரணமாக நடந்து கொள்ளல. அதேபோல கல்யாணத்துக்கு அப்புறமும் எந்நாளும் புருஷனோட சண்டை போடத் தொடங்கினா. வெளி மனுஷங்களுக்கு அவங்களோட முற்றத்துல அவங்க சண்டை போடுற சத்தத்தத் தவிர வேறெதுவும் கேட்டிருக்காது.அவள் இந்த நாட்கள்ல விவசாய வேலைகள்ல ஈடுபட மாட்டேங்குறா. அவளோட புருஷன் ஏதோ நல்ல வேலையொண்ணுல இருக்குறதால அவ கொஞ்சம் ஓய்வெடுத்தா என்னன்னு கேட்குறாளாம். இப்ப புருஷனோட நிலைமையும் மாறியிருக்கு. அவன் இன்னிக்கு வேலையை விட்டு நின்னுட்டானாம். அவனும் கொஞ்சம் ஓய்வெடுக்கணும்னு சொல்றானாம். ஓய்வெடுக்குறதும், சும்மா காலங்கடத்துறதும் அவங்களுக்கு நல்ல பழக்கமான ஒண்ணுதான். இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்குறதுன்னு யாருக்குமே தெரியல. அவங்க பசியிலிருக்கையில பிற மனுஷங்கதான் உதவி செய்ய வேண்டியிருக்கும்.”

                ஒவ்வொரு நாளும் மனிதர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவள் விபரிக்கத் தொடங்கினாள். சில காலத்துக்கு முன்பு ராபுலா கள்ளச்சாராயம் காய்ச்சும் இடமொன்றுக்குச் சென்று குடித்து விட்டு வந்து மனைவிக்கு அடித்த விடயத்தை அவன் தாட்டோவிடமிருந்து அறிந்து கொண்டான். அவள் அவனைத் திட்டுவதையும் கூட அறிந்து கொண்டான். இதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்? உலகில் எதையும் தேர்ந்தெடுத்துச் செய்ய இயலாது. அது எப்போதுமே வேதனையும் சிக்கலும் பின்னிப் பிணைந்தது. அவன், ராபுலா அங்கு வந்ததும் கருணையோடும் நட்போடும் புன்னகைத்தது அதனால்தான்.

    – பெஸீ ஹெட்

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    எழுத்தாளர் பற்றி :

     

    பெஸீ ஹெட் Bessie Head

     

    f3a7bdea-ce49-4cd1-a9c6-1435089920be           தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

    1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், ‘ட்ரம்’ எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக 1964 ஆம் ஆண்டு பொஸ்த்வானாவிற்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலமான பெஸீ ஹெட்டின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான ‘The Collector of Treasures’ எனும் தொகுப்பிலுள்ள ‘Hunting’ எனும் சிறுகதை இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

     

    -மொ.பெ.

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (13)                                  

     க. பாலசுபிரமணியன்

    ஒரு குழந்தையின் நடைப்பயணம்

    education11

     தவழுகின்ற குழந்தை ஓரிரு மாதங்களிலேயே உட்காரவும், பின்பு சுவர்களையோ அல்லது மற்ற பொருள்களையோ பிடித்துக் கொண்டு நிற்கவோ ஆரம்பிக்கிறது. இந்தச் செயல்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.. உடல் உறுப்புக்களின் அசைவிற்கும் (Motor Movements) அவற்றின் ஒருங்கிணைப்பிற்க்கும் இவை ஆதாரமாக அமைகின்றன. இப்படிப்பட்ட அசைவுகளின் தாக்கங்களைப் பற்றிய  கருத்துக்களை Kinesology என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

    ஏதாவது ஒன்றைப்பிடித்துக்கொண்டு நிற்க முயற்சிக்கும் பொழுது அந்தக் குழந்தை மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் முயற்சிக்கு ஒரு முன்னுதாரணமாகத் தெரிகின்றது. உள்ளத்தில் ஏற்படும் உந்துதல் அந்தச் செயலுக்குத் தேவையான சக்தியையும் தன்னுணர்வையும் அள்ளித் தருகின்றது. ஆகவே குழந்தைகள் இந்த முயற்சியில் ஈடுபடும் பொழுது பெற்றோர்கள் அருகில் இருந்து இந்த முயற்சிகளைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் வேண்டும், அது குழந்தையின் தன்னம்பிக்கையையும் துணிச்சலான போக்கையும் வளர்க்கும்.

    பொதுவாக குழந்தைகள் நிற்கும்பொழுதோ அல்லது நடக்கும் பொழுதோ பெற்றோர்கள் தங்கள் பயத்தையோ அல்லது அச்சத்தையோ வெளிப்படுத்தக் கூடாது. அது குழந்தையின் முயற்சிகளுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும். மாறாக அருகில் இருந்து அவர்களுடைய   செயல்களுக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

    மனிதர்களைத் தவிர மற்ற இனங்களில் ஒரு கன்று பிறந்தவுடன் சில நிமிடங்களிலேயே தங்கள் கால்களில் நிற்கவும் நடக்கவும் ஆரம்பித்து விடுகின்றது. மனித இனத்தில் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு[ பின் தான் நடைபயணம் தொடங்குகின்றது. மேலும் ஒரு குழந்தையை நாம் கைகளால் பிடித்தோ அல்லது கூட நடத்தி வந்தோ  நடப்பதற்க்கான பயிற்சியை அளிக்கின்றோம்.

    ஆகவே பயிற்சி(Training) என்பது மனித இனத்தின் வளர்ச்சியிலும் கற்றலிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. கற்றலில் பயிற்சியினால் சில நன்மைகளும் உண்டு சில கெடுதல்களும் உண்டு. இவற்றை நாம் பின் கண்டு அறியலாம்.

    அமெரிக்காவிலுள்ள குழந்தை மனநல ஆராய்ச்சியாளர்கள் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் நடை வண்டிகளை பற்றி மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவை குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குத் தடையாக இருக்கும் என்றும், பிற்காலங்களில் தங்களுடைய எல்லா விதமான முயற்சிகளுக்கும் ஒரு உதவியையும் எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஆகவே, ஒரு குழந்தை நடைப்பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது பெற்றோர்கள் அந்தக் கற்றலை தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் பயமின்மையும் வளர்க்கின்ற  செயலாகக் கருதி துணை புரிதல் அவசியம்.

    நடைப் பயிற்சி ஆராம்பிக்கும் தருவாயில் குழந்தையின் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால் இரத்த ஓட்டம், தசைகளின் வளர்ச்சி மற்றும் அறிதல், புரிதல் வேட்டைகளுக்கான உந்துதல் ஆகியவை  அதிகரிக்கின்றன. குழந்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் சென்று பொருள்களைத்  தேடவும் அதனால் ஏற்படும் மகிழ்வையும் துயரத்தையும் வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றது. மூளையின் ஒரு பகுதியில் இருக்கின்ற மகிழ்வு நிலையமும்( Pleasure Center) மற்றும் துயர நிலையமும் ( Pain Center)தங்களுடைய உணர்வுகளை சற்றே துரிதமாக வெளிப்படுத்தத் துவங்குகின்றன. இந்த நிலையில் பெற்றோர்கள் குழநதைகளின் நகர்வுகள், நடைப் பயிற்சியின் தாக்கங்கள், மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து பேணுதல் அவசியமாகிறது.

    குழந்தைகள் நடைப்பயணத்தை ஆரம்பிக்கும் நேரங்களில் அவர்களை வெறும் கால்களில் நடக்கச் செய்தல் அவசியம். குழந்தைகளுக்கு காலணிகளை (shoes) அணிவித்தலை நிபுணர்கள் எதிர்க்கின்றனர். அவர்களுடைய கால்கள் தரையில் படும் பொழுது ஏற்படுகின்ற அழுத்தங்களால் இரத்த ஓட்டம் சிறப்பாக இருப்பதற்கும் மற்றும் இரண்டு கால்களுக்கும் இடையில் நகர்வின் சமன்பாடுகள் ஏற்படுவதற்கும், இரு கால்களில் நின்று சமநிலையான தன்மையைப் பெறுவதற்கும் அது தேவைப்படுகின்றது. சில நேரங்களில் காலணிகளை அழுத்தமாக அணிவிக்கும் பொழுது கால் வளர்ச்சிக்கு மட்டுமின்றி அதன் தாக்கம் மூளையின் வளர்ச்சிக்கும் ஏற்படுவதாகக் கருதுகின்றனர்.

    நடக்க ஆரம்பித்து விட்ட குழந்தை இனி பள்ளிக்குப் போகவேண்டாமா?

    அடுத்த இதழில் பள்ளிக்கு குழந்தையை வரவேற்போம் !

    தொடரும் ..

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 194

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை  

    பின்னையின் அணி நிறத்தையும் மாயவன் வடிவழகையும் பாடுதல்

    யமுனைத் துறையில்
    கண்ணனுடன் விளையாடும் பின்னையின்
    அழகையும் நிறத்தையும்
    இனி நாம் பாடுவோம். 

    மிகவும் மென்மையான இடை                     krishna radha
    ஒடிந்து போகுமோ எனக்
    காண்பவர் எண்ணும் வண்ணம்
    இடை அசைய நடந்து வருபவளின்
    ஆடையை ஒளித்து வைத்த
    கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா!  

    அல்லது… 

    அவள் ஆடையை ஒளித்துவைத்து
    ஆடையின்றி இருக்கும் அவளைக்
    கண்டு மயங்கும் கண்ணனைக் கண்டு
    தானும் மயங்கி நிற்கும் அவள் அழகிய
    மென்சாயல் முகத்தைக் கொண்ட
    பின்னையின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

    ஆற்றில் விளையாடும்போது
    வஞ்சித்துப் பின்னையின் ஆடை கவர்ந்த
    கண்ணன் அவன் உள்ளம் கவர்ந்த
    பின்னையின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

    அல்லது… 

    அங்ஙனம் தன் உள்ளம் கவர்ந்தவளின்
    அழகையும் வளையல்களையும்
    ஒன்றாகக் கவர்ந்து நின்ற
    கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

    ஆடையையும் வளையலையும் இழந்து
    நாணம் மிகுந்து தன் கையால்
    முகத்தை மறைத்துக் கொண்ட
    அவள் முகத்தின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

    அல்லது… 

    அவள் கைகளால் முகத்தை மறைத்து நின்ற
    அழகில் மயங்கிக் காதலுற்று உழன்ற
    கண்ணனின் அழகே அழகு எனப் புகழ்வோமா! 

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(105)

    செண்பக ஜெகதீசன் 

    ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணங் கொளல். (திருக்குறள்-714: அவையறிதல்) 

    புதுக் கவிதையில்… 

    அவைதனில்
    அறிவுடையோர் முன்னிலையில்
    அறிவுடையவராய் ஒளிரவேண்டும்…
    அறிவற்றவர்முன்
    வெண்ணிறச் சுண்ணாம்புச் சாந்துபோல்
    வெளிப்படையாய்
    அறிவிலார்போல இருக்கவேண்டும்! 

    குறும்பாவில்… 

    அறிந்தோர் அவையில் அவர்போலும்,
    அறியார்முன் அவர்போல சுண்ணச்சாந்தாய்

    வெளிப்படையாயும் இருத்தல்வேண்டும்! 

    மரபுக் கவிதையில்… 

    கற்றோர் நிறைந்த அவைதனிலே
        கற்றோர் போல அவையறிந்து
    சற்றும் குறைகள் வாராமல்
        சகலரின் முன்னே நடந்திடுவாய்,
    குற்றம் நிறைந்த அறிவற்றோர்

        கூடி யிருக்கும் இடத்தினிலே
    பற்றும் சுண்ணச் சாந்தினைப்போல்
        பளிச்சென அவர்போல் இருப்பாயே! 

    லிமரைக்கூ… 

    அறிவுடையோர் அவையில் அவர்போலவே இரு,
    அறிவற்றோர்முன் அப்படியே அறிவற்றோராய்

    சுண்ணச்சாந்தாய் ஒளிவின்றி வைத்திடுன் உரு! 

    கிராமிய பாணியில்… 

    நடந்துக்கணும் நடந்துக்கணும்
    நல்லபடி நடந்துக்கணும்,
    சமயம்போல நடந்துக்கணும்

    சபதெரிஞ்சி நடந்துக்கணும்… 

    அறிவுள்ளவன் சபயிலத்தான்
    அவுரப்போல நடந்துக்கணும்,
    அறிவயெல்லாங் காட்டிக்கணும்… 

    அறிவில்லாதவங் கூட்டத்தில
    அவுரப்போலக் காட்டிக்கணும்,
    வெள்ளச்சுண்ணாம்புச் சாந்தப்போல

    வெளிப்படயாக் காட்டிக்கணும்… 

    இப்புடித்தான்,
    நடந்துக்கணும் நடந்துக்கணும்

    நல்லபடி நடந்துக்கணும்,
    சமயம்போல நடந்துக்கணும்

    சபதெரிஞ்சி நடந்துக்கணும்!

     

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 52

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.”
    கலில் கிப்ரான். (Mister Gabber)
    ___________________
    காரணம்
    (Reasoning)
    ___________________

    உன்னை நீயே
    கண்காணித்துக் கொள்வாய்
    ஓர் எதிரியாய்
    உன்னைப் பாவித்து !
    பிறரை நீ ஆள முடியாது !
    உன் உணர்ச்சிகளை
    முதலில்
    நீ கட்டுப் படுத்த
    முடியாது போனால் !
    உனது மனச் சாட்சிக்கு நீ
    அடிபணிவாய் !
    ___________________

    உன்னத முனிவர் ஒருவரின்
    பொன்மொழி இது :
    “எந்தத் தீங்குக்கும்
    இருக்குது மருந் தொன்று !
    நாடும் மருந் தில்லை
    மூடத் தனத் துக்கு !
    பிடிவாத
    மூடரை இகழ்ந்து
    அவர்க்கு அறிவுரை புகட்டல்
    நீர் மேல் எழுத்துக்கு
    நேராகும் !
    குருடனை,
    முடக்கு வாதத்தை
    குட்ட ரோகி யைக்,
    குணப் படுத்தினார்
    ஏசு நாதர் ! ஆயினும்
    மூடனைக் குணமாக்க அவரால்
    முடிய வில்லை !”
    ___________________

    பிரச்சனை என்ன வென்று
    அறிந்திட, விளைவை
    நாற் புறமும் கூர்ந்து நோக்கு !
    எங்குள்ளது தவறென்று
    புரிந்து கொள்வாய் !
    வீட்டு வாசல்
    விரிந்துள்ள போது
    திறக்கும் கதவு
    சிறுத்தி ருக்க லாமா ?
    வாய்ப்பு வாசல் கதவை
    வந்து தட்டினால்
    பாய்ந்து பிடித்துக் கொள் !
    தேடி வரும் போது நீ
    ஓடி வரவேற்பாய் !
    ___________________

    தீங்கை நுழைப்பது மனிதன் !
    இறைவன் இல்லை !
    அறிவையும்
    அடிப்படைக் காரணத் தையும்
    அளிப்பது நமக்கு
    அதிபன்
    தவறையும் அழிவையும்
    தடுப்ப தற்கு !
    கடவுளின் ஆசிகள் உண்டு
    காரணம் என்னும்
    மானிடக் கொடைக்கு !
    ___________________

    Share
  • படக்கவிதைப் போட்டி 48-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமதி. ராமலக்ஷ்மி ராஜனின் புகைப்படத்தை இவ்வாரத்திற்கான போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்மணிகள் இவ்விருவருக்கும் நன்றி நவில்கின்றது வல்லமை இதழ்.

     

     elephant

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    விலங்குகளில் கம்பீர அழகுகொண்டது யானை; தன் நெடிதுயர்ந்த தோற்றத்தால் காண்போரை வியக்கவும் நயக்கவும் வைப்பது!

    காடுகளில் புலியினையும், களங்களில் வீரரையும் பொருது கொல்லும் ஆற்றல்மிகு களிற்றியானை, தெருக்களில் வலம்வருகையில், அதன் இயல்புக்கு மாறான வகையில், ஒருவித மிரட்சியோடும், மருட்சியோடும்  நம்மை நோக்குவது வேதனை தருவதாயுள்ளது.

    இனி கவிஞர்களின் கவிதைகள் நம் கவனத்திற்கு…

    ***

    ”யாரோ கொடுத்த அன்பளிப்பாய்க் காட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தேன். இங்கே எனக்கு அன்பை அளிக்க எவருமில்லை! பாகனுக்கு உழைப்பதே என் பிழைப்பு; யாரும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு!” என உள்ளம்குமுறும் களிற்றைக் காண்கின்றேன் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையில்.

    யாரோ கோவிலுக்கு
    கொடுத்த அன்பளிப்பாம் நான்
    காட்டைவிட்டு( பிறந்தவீடுவிட்டு)
    நாட்டுக்குள் ( புகுந்தவீடுவந்ததும்) பாகனின்
    கட்டுப்பாட்டுக்குள் வந்தாயிற்று
    என் பழக்க வழக்கங்கள் யாவும்
    கரும்பையும் மூங்கிலும்தின்றவனுக்கு
    கடலையும் பொங்கலும் புளியோதரையும்
    சர்க்கரை வியாதியை உண்டாக்க
    மருத்துவரின் பரிந்துரைப்படி காலை
    ஒரு மைல்தூரம் நடைபயிற்சி பாகனுடன்
    போகும் வழியெல்லாம் மக்கள் அணுக
    சாமிக்கு சாமரம் வீசிய கையால்(தும்பிக்கையால்)
    யாசகம் கேட்க வைத்தான் பாகன்
    மக்கள் கொடுக்கும் இலவசம்
    உணவென்றால் எனக்கு
    பணமென்றால் பாகனுக்கு என
    புரிந்துணர்வு ஒப்பந்தம் இருவருக்குள்

    […]

    வேட்டையாடிய யானையாகி பாகன் கையில்
    வித்தை காட்டும் பொருளாகி வாழ்கிறேன்
    என்னை விட மனிதனுக்கு சக்தி அதிகம்தான்
    தன்னைப்போலவே என்னை மாற்றியுள்ளானே?
    வருடம் ஒரு முறைபிறந்த வீடு அனுப்புவார்கள
    ஆட்சியாளரின் அறிவுறைப்படி அதிகாரிகள்
    அது ஒன்றே எனக்கு ஆறுதல்தரும் விஷயம்
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான்
    எல்லா சவுக்கியமும்…….என்பதே நியதி

    ***

    ”கடவுளாய் முன்னோர் வணங்கிய என்னை, மக்கள்முன் கையேந்தவைத்த மனிதனின் மடமையை, பேராசையை என்னென்பது?” என்றெண்ணி வருந்துகின்றது இரந்துண்ணும் இந்த யானை என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உருவில் பெரிய யானையதை
    ஊர்வலம் பவனி நாயகரை,
    தெருவில் இரந்திட விட்டுவிட்டார்
    தேவை தமக்குப் பெருக்கிவிட்டார்,
    பெருகிடும் மாந்தர் ஆசைக்கே
    பெருந்துணை யாக்கிக் களித்திட்டார்,
    கருணை உருவாய்க் கண்டமுன்னோர்
    கடவுளாய்ப் படைத்ததை மறந்தாரோ…!

    ***

    கோயில்வாசலில் நிற்கும்போது யானைக்குப் பிடிக்காத மதம், கோயிலுள் மனிதரின் குலமும் கோத்திரமும் விசாரிக்கப்படும்போது ஆத்திரத்தில் பிடித்துவிடுகின்றது; காரணம்…அதற்குப் பிடிப்பதில்லை மனிதரின் ’மதம்’ என்பது திரு. மெய்யன் நடராஜின் வாதம்!

    கோயிலின் வாசலில் நிற்கின்றபோது
    கும்பிட்டு வணங்கிப் போவோர் கண்டும்
    பிடிக்காத மதம், யானைக்கு
    கோயிலின் தெய்வத்தை
    கும்பிட வருவோரிடத்தே
    குலம் கோத்திரம் கேட்டுக்
    குடைவதைப் பார்த்ததும்
    கோபத்தில் பிடித்துவிடுகிறதோ?

    *** 

    ”மதம் ‘பிடித்த’ மனிதரெலாம் மதம்பிடித்தே ஆடிடுவார்; மாற்றுமதங் கொண்டவரை மிதிப்பார்; தவறாய் மதங்கொண்ட யானையென விதிப்பார்” என்று மனிதமனத்தைப் படம்பிடித்துக்காட்டும் யானையைத் தன் கவிதையில் தீட்டியுள்ளார் திரு. இளவல் ஹரிஹரன். 

    பேருருவ யிரொன்று
    பிச்சைகேட்க வைத்துவிட்ட
    பீடிழந்தஂநிலைதந்த மனிதன்….தன்
    பேராசைக் கிரையாக்கும் கொடியன்.

    காடிழந்த கவலையோடு
    வாழ்விடத்தைத் தேடவைத்து
    ஊரூராய் ஓடவிட்ட மனிதன்….தன்
    ஒருநலமே நோக்கமெனும் கொடியன்.

    […]

    மனமகிழும் சர்கஸிலே
    மந்திரமாய் எனையாட்டி
    மக்களினைக் கவருகின்றான் மனிதன்….என்
    மனக்கவலை புரிந்துகொள்ளாக் கொடியன்.

    மதம்பிடித்த மனிதரெலாம்
    மதம்பிடித்தே ஆடிடுவார்
    மாற்றுமதங் கொண்டவரை மிதிப்பார்தவறாய்
    மதஙகொண்ட யானையென விதிப்பார்.

    ஓரானை பேரானை
    ஒன்றானை வணங்குதலால்
    ஊரானைக் காப்பதெந்தன் பண்பாம்….நல்ல
    பேரானைக் காப்பதுங்கள் அன்பாம்.

    சிறியதொரு சங்கிலியில்
    சிற்றானை கட்டுண்டு
    பெரியதொரு தும்பிக்கை ஆட்டும்அது
    பேரன்பில் பிணைந்திருக்கக் காட்டும்.

    கைநீட்டிப் பிச்சைகேட்கும்
    கவலையான நிலையெனக்குக்
    கணப்போதும் தந்திடவும் வேண்டாம்மனிதா
    கணநாதன் துணைமறக்க வேண்டாம். 

    ***

    கட்டுப்பாடற்றுக் காட்டில் சுதந்திரமாய்த் திரிந்துவந்த யானையைத் தன் உணவுத் தட்டுப்பாடு தீர்க்கப் பிச்சையெடுக்கவைத்த பாகனின் வன்செயலையும், அதனால் யானைபடும் பாட்டையும் சொல்லோவியங்களாய்த் தீட்டியுள்ளீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

    இயற்கையின்படைப்பில் மனிதனை விஞ்சிய தன்னலஉயிர்கள் ஏதுமில்லை. தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்; தான் வளமாய் வாழ்வதற்கு மன்னுயிர்களுக்கெல்லாம் இன்னல் தருவான். இதோ…கம்பீரநடைபயின்று காட்டில் களித்திருந்த களிற்றியானையை இரவலன் ஆக்கினான் இரக்கமற்ற மனிதன். இயற்கையோடு போட்டியிட்டுத் தோல்வியே தழுவிடினும் மாறவில்லை அவன் குணம்; நினைக்கையில் குமுறிடுதே மனம்! என்று யானையின்மீது கழிவிரக்கம்கொண்டு கவிவடித்திருக்கின்றார் ஒரு கவிஞர்!

    எங்களை அறியவில்லை!

    ஆண்டவன் பணிக்கு வந்த உன்னை
    அங்காடித் தெருக்கள்தோறும்
    கையேந்த வைத்த
    கருணையற்றவர்கள் நாங்கள்

    அன்பிற்கு நீ தந்த இசைவினை
    அடிமைச் சாசனமென்று எண்ணி
    உன்னை அடக்கி விட்டதாய்ப்
    போலிப் பெருமிதத்தில் புன்னகைக்கிறோம்

    உன் பலம் உனக்குத் தெரியாதென
    நிச்சயமாய் நம்பும் நாங்கள்
    எங்கள் பலவீனங்களை
    என்றுமுணர்ந்ததில்லை
    அதனால்தான்
    இயற்கையை வென்றுவிட்டோமென்ற
    எங்கள் இறுமாப்பு,
    கொட்டிய மழையில்
    முற்றிலுமாய்க் கரைந்தது

    பண்பற்ற எங்கள் செய்கைகளால்
    நீ பதற்றமடையும் பொழுதெல்லாம்
    மதம் பிடித்துவிட்டதாய் அறிவித்து
    மயக்க ஊசிப் போடுகிறோம்
    ஆனால் நாங்களோ
    மத வெறியுடனேத் திரிகிறோம்
    மயக்க ஊசிப்போட மட்டும்
    மருத்துவர் எவருமில்லை!

    அவ்வப்போது மதமும், வெறியும் கொள்ளும் யானையினும், எப்போதும் மதவெறிகொண்டலையும் மனிதனே அதிக அழிவினை அவனிக்குத் தருகின்றான் எனும் பொருத்தமான கருத்தைச் சொல்லும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிக்கின்றேன். 

    ***  

    கல்லினுள் இருக்கும் தேரைக்கும் படியளப்பவன் அந்த ஈசன் என்பர் ஆன்றோர். ஆனால் இங்கோ பாகனுக்காக வீதியில் அலைந்துவிட்டுத் தன் விதியை நொந்தபடி வாயிலில் நிற்கும் இந்த வாயில்லா சீவனின் துயர் கண்டும் அவன் கல்லாய் இருப்பதேனோ? என்று அறச்சீற்றம் கொள்ளும் கவிதையொன்று!

    பிச்சை எடுக்க வைத்த
    மனிதனின் துரோகத்தில்
    தவம் கலைந்தது
    ஒற்றை யானை

    யாகச காட்சிக்கு
    மறுத்து விட்ட பசி
    வெறும் கோயிலின்
    சாட்சியானது

    யோசிக்க யோசிக்க
    எறும்பானது யானை,
    பெரும் சோகம்
    கண்களானது..

    புகைப்படத்தில்
    பதிந்திட்ட
    காடுகளின் பெருந்துயர்
    அங்குச பொய்மையில்
    ஆத்திரம் அடக்கியது

    எட்டிப் பார்த்து விட்டு
    தலை கவிழ்ந்து கொண்ட
    கடவுள் எப்போதும் போல..
    அதே கல்லுக்குள் 

    கடவுளைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிடும் ஒரு களிற்றினைக் கண்ணுறச்செய்த திரு. கவிஜியின் கவிதையைப் பாராட்டுக்குரியது என்று சுட்டவிரும்புகிறேன்.

    பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி!

     

     

    Share
  • வள்ளுவரும் கழுகாரும்

    புதுவை எழில்

    எச்சரிக்கை முன்னுரை:

    இதனை வெளியிடுபவர், படிப்பவர், பின்னூட்டம் இடுபவர்…
    மீது எல்லாம் பாதுகாப்புச் சட்டமும், வழக்குகளும் பாய்ந்தாலும் பாயக்கூடும்.
    ‘தில்’ உள்ளவர்கள் மேலே படியுங்கள் !

    விகடனாரை நோக்கி வேக வேகமாகப் பறந்துகொண்டிருந்த கழுகு அரசரை வழிமறித்துப் பிடித்தோம், ஒரு கையில் நல்ல காரம் போட்டு நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பும் மறு கையில் புத்தம் புதிதாகச் செய்யப்பட்ட வேர்க் கடலை மிட்டாயுமாக!

    மூக்கில் வேர்வையும் கண்களில் கூர்மையுமாக நம் கைகளைக் கவனித்த கழுகார் “என்ன செய்தி? ஏன் வழி மறிக்கிறீர்” என்பது போலத் தலையைச் சாய்த்துப் பார்த்தார்!

    “திருவள்ளுவர் நாளுக்காக அவரைப் பேட்டி கண்டதாக அறிந்தோம். அதில் இருந்து கொஞ்சம் அவிழ்த்துவிட்டிங்கன்னா…”

    முந்திரியும் கடலை மிட்டாயும் நீட்டியபடியே தலையைச் சொரிந்தோம். மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிய கழுகார்
    அலகைத் திறந்தார் – பருப்பையும் கடலை மிட்டாயையும் கொறிப்பதற்காக!
    காத்திருந்தோம் பொறுமையாக. அவர் கொட்டியவற்றில் இருந்து…

    (திருவள்ளுவரைக் கழுகார் எடுத்த பேட்டி)

    கழுகார் : ”அண்மையில் ஏற்பட்ட பேரிடர் பெருவெள்ளம் பற்றி…”
    கேட்டு முடிப்பதற்கு முன்னாலேயே வள்ளுவரிடம் இருந்து பதில் வெள்ளம் போல் பாய்ந்து வந்தது :

    “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை”.

    கழுகார் :
    “உட்கார்ந்த இடத்தில் இருந்தே அதிகாரம் தூள் பறக்க ஆணவம் குடை பிடிக்க அம்மாவின் ஆணையால் எல்லாவற்றையும் சரிசெய்த அம்மாவின் ஆட்சித் திறம், எதிர்காலம் பற்றி…”

    வள்ளுவர் :
    “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பாரில் லானும் கெடும்”

    கழுகார் :
    “அம்மாவுக்கு எதிரா நிற்பவர் கலைஞர் தானே! தள்ளாத வயதிலும் பதவி ஆசையைத் தள்ளாத அவரைப் பற்றி உங்க கருத்து என்ன?”

    வள்ளுவர் :
    “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது. “

    கழுகார் :
    “தன்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அப்படி வந்தால் நடுத் தெருவில் நிறுத்திச் செருப்பால் அடியுங்கள் என்று சொன்ன மருத்துவர் ஐயா தன் அன்புமகனை ,நடுவண் அரசில் அமைச்சராக்கி அழகு பார்த்தாரே.
    அவரைப் பற்றி என்ன நினைகிறீர்கள்?”

    வள்ளுவர் :
    “கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு.”

    கழுகார் :
    “இராமனின் பாதுகை போல அரியணையில் தமிழக முதல் அமைச்சராக இருமுறை அமர்ந்த ஒ.பி.எஸ் பற்றி என்ன சொல்வீர்கள்?”

    வள்ளுவர் :
    “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் (பன்னீர்)
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.”

    கழுகார் :
    “தங்கள் குறைகள் இன்னும் நீங்கவில்லை என்று மக்கள் கூக்குரல் எழுப்புகின்ற போதும், அம்மாவின் ஆணையால் மக்கள் முழு நிவாரணம் பெற்றுவிட்டார்கள் ; வாழ்க்கை மீண்டும் சரியாகிவிட்டது என்று ஆர்ப்பரிக்கும் செயல்படாமல் ஆன்றவிந்து அடங்கிய அமைச்சர் பெரு மக்கள்?”

    வள்ளுவர் :
    “உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.”

    கழுகார் :
    “நுணலும் தன் வாயால் கெடும் என்பதை நிரூபித்து வரும் இன்னோவா புகழ் நாஞ்சில் சம்பத் பற்றி உங்கள் கருத்து?

    வள்ளுவர் :
    “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”

    கழுகார் :
    முடியட்டும் விடியட்டும் என்று நடை பயணம் மேற்கொண்டு ஊர் வலம் வரும் ஸ்டாலின் பற்றி என்ன சொல்வீர்கள்?”

    வள்ளுவர் :
    “சகோதரி ஒளவையிடம் இருந்து இரு வரி கடன்
    வாங்கிச் சொல்லவா? :
    குடை நிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
    நடை மெலிந்து வேறூர் நண்ணினும் நண்ணுவர்!”

    கழுகார் :
    “நாக்குத் துருத்தியும் தூ தூ என்று துப்பியும் ம் புகழ் சேர்த்துவரும் நடிகர் விசயகாந்து …?

    வள்ளுவர் :
    “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.” எனத் துப்புபவர்.

    கழுகார் :
    “ஊழல் அரசியல் வியாதிகள், லஞ்ச ஊழலில் திளைக்கும் அதிகாரிகள்… உணரவேண்டிய செய்தி என்ன?”

    வள்ளுவர் :
    “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு.”

    கழுகார் :
    “எப்போதும் ஏதாவது சிக்கலில் சிக்கி உழலும் சிம்புத் தம்பிக்குக் கூறுவது என்ன?”

    வள்ளுவர் :
    “பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்.”

    கழுகார் :
    “பாவம் தமிழக மக்கள்! அவர்களுக்கு ஆறுதலாக ….இரண்டு வரி…”

    வள்ளுவர் :
    “தமிழக மக்களுக்கு ஆறுதலா!
    ஓட்டு , வாக்குச் சீட்டு என்று
    “ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.”
    எனச் சூடாகச் சொனார் வள்ளுவர்!

    கழுகார் :
    “சகாயம் IAS சாரைப்பற்றி இரண்டு வரி…?

    வள்ளுவர் :
    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.”

    அடுத்து… என்று நாம் தொடங்குவதற்கு முன்
    கழுகாரின் வாட்சப் சிணுங்கியது .
    எடுத்துக் கேட்டவர் ,

    “அச்சச்சோ , வள்ளுவர் பேட்டி கொடுத்த செய்தி மேலிடத்துக்குத் தெரிந்துபோய்விட்டதாம்!உடனடியாக வள்ளுவரைத் தமிழகத்தில் இருந்து தூக்கிவிட்டார்களாம்!

    அவர் மீது பாதுகாப்புச் சட்டம் பாய்கிறதாம் ; பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டு FIR உம் போட்டுவிட்டார்களாம்!

    “வள்ளுவரோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது ; அவர் தீக்குறளை எவரும் சென்றோதக் கூடாது” என்று கட்டளை போட்டிருக்கிறார்கள் ; அவர் எழுதிய நூல் ‘திருக்குறள்’ தடை செய்யப்பட்டுவிட்டதாம்….
    உடனடியாக வரச் சொல்லி விகடனார் கட்டளை!….

    ஆளை விடுமையா…” என்று பதறியபடியே கழுகார் இறக்கை விரித்துப் பறந்து போனார்!

    கல்லாய்ச் சமைந்து போய் நின்றிருந்த நம் முன்னே

    “விதியே விதியே தமிழச் சாதியை
    என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ?”
    என்று வேதனை பட்டபடியே பாரதியார் கடந்து போனார்!

    Share
  • பூதக்கோள் ஒன்று நீட்சி நீள்வட்டத்தில் சூரியனைப் புறக்கோளாய்ச் சுற்றி வருவதற்குச் சான்றறிவிப்பு

     

    Ninth Planet

    புறக்கோளாய் சூரியனுக்கோர் புதிய பூதக்கோள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    https://youtu.be/6poHQ2h00ZA

    https://youtu.be/fAIV_6lcbIQ

    http://video.pbs.org/video/1790621534/

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A

    *********************

    Earth's Planet -9

    சூரிய குடும்பப் புறக்கோளாய்ச்
    சுற்றும் புதிய கோள் ஒன்று
    இருப்ப தற்குச் சான்று
    தெரிந்துள்ளது !
    பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை
    பரிதியைச் சுற்றி வரும்
    நீள்வட்ட பாதை.
    குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும்.
    நெப்டியூன் நிறை.
    புவிக் கோள் போன்று
    பத்து மடங்கு பளு வடிவம்.
    புறக்கோள்கள் போல் வாயுக்கோள்.
    பரிதி இடுப்பைச் சுற்றப்
    பத்தாயிரம் ஆண்டு ஆகலாம்.
    உருவத்தை இதுவரை
    எவரும் கண்டிலர்.
    சூரிய மண்டலத்தின் புறக்கோள்கள்
    யாவும் வாயுக் கோளாக,
    உட்கோள்கள் பாறைக் கோளாக,
    இட்ட விதி யென்ன ?

    ++++++++++++++

    புறக்கோளாய்ச் சூரியனைச் சுற்றுவதாகச் சான்று கண்டு, கோள் -9 என்று பெயரிடப்படும் புதிய பூதக்கோள் பூமியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது.  அது ஒரு வினோத நீள்வட்ட நீட்சிப் பாதையில், பரிதி மண்டலத்தை வெகு, வெகு தூரத்தில் சுற்றி வருகிறது. இப்புதிய கோள் சூரியனை ஒருமுறை சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுக்கலாம்.   அந்த அனுமானப் புதுக் கோள் புளுடோவைப் போல் 5000 மடங்கு நிறையுள்ளது.

    கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் [Caltech Researchers] 

    New planet Nine

    சூரிய மண்டலத்துப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒன்றிருக்கலாம்

    சூரிய மண்டலத்தின் புறக்கோளாய் இருந்த புளுடோ குள்ளக் கோள் என்று புறக்கணிப்பாகிய பிறகு, எட்டுக் கோள்கள் கொண்ட மண்டலம் மீண்டும் ஒன்பது கோள்கள் சுற்றும் பரிதி மண்டலம் ஆனது.  ஆனால் கோள் -9 இதுவரை புலப்படாது நீட்சியான நீள்வட்டப் பாதையில் எங்கோ சுற்றிக் கொண்டு வருகிறது.  அது ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுத்துக் கொள்ளலாம்.  அதை நேரடியாகக் காணாமல், அதன் இருப்பைப் போலிக் கணினி மாடல் மூலம், போட்டுக் காட்டியவர் இருவர்:  காலிஃபோர்னியா பொறிநுணுக்க ஆய்வகத்தில் [California Institute of Technology – (Caltech)] பணிபுரியும் அவரது பெயர்கள் : கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன். [Konstantin Batygin & Michael Brown]

    Batygin & Brown

    சூரிய மண்டலத்தின் தற்போதைய இறுதிப் புறக்கோள் நெப்டியூன் இதுபோல் போலிக் கணினி மாடல் மூலம் முதலில் அனுமானிக்கப் பட்டுப் பிறகு தொலைநோக்கிப் பார்வைகளில் கண்டுபிடிக்கப் பட்டது. நெப்டியூன் போல் வடிவமும், வாயுவும் கொண்டது புதிய பூதக்கோள் என்று கருதப் படுகிறது.  நெப்டியூன் சூரியனை 2.8 பில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.  புதுக்கோள் கோள் -9 அதைவிடச் சராசரி 20 மடங்கு தூரத்தில்  [5.6 பில்லியன் மைல்] சுற்றி வரலாம் என்று கணிக்கப் படுகிறது.

    இந்தப் புதிய அனுமானக் கோள் -9 இருப்பு அறிவிப்பு நேரடியாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இல்லை.  2014 ஆம் ஆண்டில் மைக்கேல் பிரௌனுக்கு முந்தைய ஆய்வாளர் ஸாட் டுருஜில்லோ [Chad Trujillo] & ஸ்காட் செப்பேர்டு [Scott Sheppard]  இருவரும் வெளியிட்ட ஆய்விதழில் தாம் குறிப்பிட்ட 13 புறக்கோள்களைப் பற்றி விளக்கம் இருந்தது.  அவை வெகு வெகு தூரத்தில் சுற்றிய புளுடோவைத் தாண்டியுள்ள கியூப்பர் வளைய [Kuiper Belt] விண்வெளியில்  உலவுவதாய் அறிவித்திருந்தார். அவற்றில் இம்மாதிரி நூதன நீள்வட்டப் பாதையில் சுற்றும் அபூர்வக் கோள் ஒன்றைப் பற்றி விபரம் இருந்தது.

    Hypergiant Star with disks of dust.

    மைக்கேல் பிரௌன் புளுடோவிற்கு அருகில் சுற்றும் குள்ள புறக்கோள்களின் நீள் வட்ட வீதிகளை ஆராய்ந்ததில் ஓர் அரிய ஒற்றுமையைக் கண்டார்.  அனைத்து நீள்வட்ட வீதிகளும் சூரியனுக்கு ஒரே திக்கில் 30 டிகிரி கீழ் கோணத்தில் சாய்ந்திருப் பதைக் கண்டார்.  அதாவது ஏதோ ஓர் அண்டம் அருகில் இருந்து அவற்றை ஒருபுறம் வீசி எறிவதை அறிய முடிந்தது.  இந்த அனுமானக் கோளை வைத்து பிரௌன் ஒரு போலிக் கணினி மாடல் தயாரித்து, அதன் சுற்றுப் பாதையைக் கணித்தார்.  அப்போதுதான் கோள் -9 நிறையின் இருப்பு பூமிபோல் 10 மடங்கு இருக்க வேண்டும் என்றும், சுற்றுப் பாதையில் ஒருமுறைப் பரிதியை வலம்வர 10,000 – 20,000 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கணித்தார்.  2003 ஆண்டில் பிரௌந்தான் குள்ளக் கோள் செடேனாவைக் [Dwarf Planet Sedena] புளுடோ அருகில் கண்டு பிடித்தவர்.  இதுவரை கோள் -9 யார் கண்ணிலும் படவில்லை. இப்போது உலகத்தின் பெரிய தொலை நோக்கிகள் புதுக்கோள் கோள் -9 தேடிப் பிடிக்க தீர்மானித்து விட்டன.

    Oigins of Solar System

    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

    ajay

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    Violant beginning

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றி யுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் ! அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியி லிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    ++++++++++++++++++++++

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html [சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

    21.  http://mashable.com/2016/01/20/new-solar-system-planet-nine/#PKq33NOdLPqT [January 20, 2016]

    22. http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22/pdf

    23.  http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22;jsessionid=9DAB98EED9CB30448604A2F4CA0F8752.c5.iopscience.cld.iop.org#aj522495s6

    24.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/caltech-evidence-found-for-a-ninth-planet-in-the-outer-solar-system.html?  [January 20, 2016]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.comJanuary 24, 2016

    Attachments area
    Preview YouTube video Evidence of a Ninth Planet

    Evidence of a Ninth Planet

    Preview YouTube video Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016

    Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016

    Preview YouTube video Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been

    The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
    Share
  • ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாய யதார்த்தத்தின் வலிமை

    சத்யானந்தன்

    (சிறுகதை குறித்த திறனாய்வுக் கட்டுரை)

    ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ சிறுகதைக்கான இணைப்பு இது

    http://mrishansharif.blogspot.qa/2011/10/blog-post.html

    வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால்  சிறுகதை என்னும் உருவம் உள்ளடக்கத்தை ஒட்டியே தேர்ந்தெடுக்கப் படுகிறது. நவீனத்துவத்தில் சிறுகதையின் வீச்சு மேம்பட்டு ஆகச் சிறந்த வடிவம் இதுதானோ என்று அதிசயிக்க வைக்கிறது. ஆனால் சிறுகதை வடிவத்துக்கு வரம்புகள் உண்டா? என்ன வரம்புகள்? படைப்பாளிக்கு மட்டும் சில இடத்தில் முட்டி நின்று விட நேர்வதா? ஏன் அப்படி ஆக வேண்டும்? அடுத்ததாக வாசகனுக்கு சில தடைகள் உண்டா? சொற்களின் ஆற்றலுக்கும் வாசகனுக்கும் கூட தாண்டிச்செல்ல முடியாத இடங்கள் உண்டா?

    உண்டு. நம்மால் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாத உணர்வுக் கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகள் உண்டு. நுட்பமான தருணங்கள் ஆழ்மன பிரக்ஞை அல்லது வெளிமனப் பிரக்ஞை எனப் பகுத்தறிய முடியாத தளத்தில் சலனப்பட்டு மறைபவை. அவற்றை நாம் புழங்கும் சொற்களால் நம் மனம் பழக்கப்படுத்தப்பட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குவது நம் உள்ளார்ந்த தடைகளால் இயலாத ஒன்று.

    இந்த இடத்தில் தான் மாய யதார்த்தத்தின் வீச்சு படைப்பாளி வாசகன் இருவருக்கும் இவற்றைத் தாண்டிச் செல்ல உதவுகிறது. காட்சி என்னும் ஊடகம் வாசிப்பு ஊடகத்தை ஒப்பிட நுட்பங்களைப் புரிய வைப்பதில் கையாலாகாதது. மாய யதார்த்தம், வார்த்தை என்னும் வடிவம் செயலிழக்கும் இடத்தை எளிதாகக் கடந்து செல்லுகிறது. நவீன கவிதையின் பலம் நாம் பழக்கப்பட்ட காட்சி அல்லது உரையாடலைக் காட்டி நாம் தடுமாறும் புள்ளியைத் தாண்டி ஒரு ஆழ் தரிசனத்துக்கு இட்டுச் செல்வது. மாய யதார்த்தம் காட்சி வழி நவீன கவிதை நம்மை உடன் அழைத்துச் செல்லும் மாயத்தை புனைகதைக்குள் கொண்டு வருவது.

                ரிஷானின் தலைப்பே அந்தக் கதையின் சுருக்கம் என்று கூறி விடலாம். சரி காக்கைகள் ஏன் அவன் தலையைக் கொத்த வேண்டும்? கதையின் இந்தப் பகுதியில் நமக்கு ஒரு முனை கிடைக்கும்:

    …. விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.

    ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும் ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும். கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒரு மாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண் தூசு அப்பியதைப் போன்ற வெளிறிப் போன நிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒருபோதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை….

                கதை நெடுக நாம் காக்கைகள் அவனைக் கண்ணில் படும் போதெல்லாம் துரத்தித் தலையில் கொத்தின என்பதையும், அவன் முதலாளி அவனுக்கு மந்திரித்த கயிறு தாயத்து எல்லாம் வாங்கித் தந்தார் எனவும் படிக்கிறோம். கதையில் மேற்கண்ட பத்தியின் வழியாகவே நாம் கதையின் உள்ளே போகிறோம். நமக்கு நன்றாகவே தெரியும் விளிம்பு நிலையில் உள்ளவர் தோற்றத்திலும் குறையுள்ளவராக இருந்தால் நாம் எப்படி அவரை நடத்துவோம் என்பது..

    ஆனால் நமக்குத் தெரியாதது அக்கறையில்லாதது ஒன்று அவரிடம் இருக்கிறது. அது தான் நிராகரிப்பாலும், இழிவு படுத்தப்படுவதாலும் நிகழும் வலி. அந்த வலி எப்படிப்பட்டது என்பது அனுபவித்தவருக்கு மட்டும் தான் புரியும். நாம் எந்தக் விதத்திலும் கண்டுகொள்ளாத அந்த வலி மிகவும் ஆழ்ந்தது. அல்லும் பகலும் மனதை கத்தியால் கீறும் மாறா ரணம்.

    இந்த ரணத்தை, வலியை, அவஸ்தையை நாம் உணரும் துவங்கு புள்ளியில் இல்லை என்பது எளிய உண்மை அது நமக்கு என்றுமே அக்கறையில்லாத விஷயம். நமக்கு அன்னியமானதும் நம் மரத்துப் போன மனித நேயத்தால் உணர முடியாததுமான அதை இந்த மாயயதார்த்தத்தின் மூலம் காண்கிறோம். பிறர் கண்ணால் இழிவாகப் பார்க்கப் படுவதும் வார்த்தைகளால் காயப்படுத்தப்படுவதும் எத்தனை துன்பம் தருவது என்பதையே பகலில் துரத்திக் கொத்தும் காகங்கள் வடிவில் காண்கிறோம். அதே காகங்கள் வழி வேறு ஒன்றும் நமக்கு உணர்த்தப் படுகிறது. இறுதியில் வரும் இந்தப் பத்தியைப் பார்ப்போம்:

    …. குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்க, குருதி காயச் செத்துக்கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருத மரத்தில், அயல்மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை. எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப்போலக் கூட்டமாக இருந்து அவனைப்பார்த்துக் கரைந்தன. இரை தேடி அலைதல் மறுத்து அப் பிணம் அகற்றப்படும் வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப்பெட்டியை அழுத்தி, ஒலிக்கவைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.

                காக்கைகள் தமது இனத்தில் ஒரு காக்கைக்கு அடிபட்டாலோ அல்லது இறந்து போனாலோ மட்டுமே அவ்வாறு  கூடி  வருந்தும் எனவே அவனுக்காக இன்று கூடும் காக்கைகள் அவனை இத்தனை நாளாகவே தமது இனம் என்றே கருதி வந்தன. அவைகளைத் தவிர அவனைத் தன் இனம் என எண்ணுவோர் யாரும் இல்லை. இதை இந்த மாய யதார்த்தம் வாயிலாக அவர் எடுத்துரைக்கிறார்.

    மிகவும் நுட்பமாகவும் விரிவாகவும் அவர் இந்த மாயயதார்த்தத்தை கதைக்குள் சேர்த்திருக்கிறார். அப்படி சேர்த்திருப்பது பிழையென்று சொல்ல முடியாது. அதே சமயம் அது மாய யதார்த்தம் சுட்டும் புரிதலை  சற்றே நீர்க்க அடித்து விடுகின்றது.

    கதையின் இறுதி பத்தி அந்த நீர்க்கடித்தலைத் தாண்டி நம்மை ஆழ்ந்த புரிதலுக்கு இட்டுச் செல்வதால் நாம் ரிஷான் தமது முயற்சியில் வெற்றி கண்டார் என்றே கூறலாம். மூத்த எழுத்தாளர்கள் பலரும் மாய எதார்த்தம் தேவைப்படாத சூழலில் அதைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ரிஷான் பொருத்தமான கதையில் அதை சரியாகப் பயன் படுத்தி இருக்கிறார்.

    திண்ணையில் வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்தாலும், இதை நான் வாசிப்பதற்குக் காரணம் மாய யதார்த்தம் பற்றி சக எழுத்தாளரிடம் விவாதித்த போது அவர் இதற்கான இணைப்பை எனக்குத் தந்ததே. ஓர் அசலான படைப்புக்குக் கிடைக்கும் அங்கீகரிப்புக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

    • சத்யானந்தன் (பதிவுகள்)

    sathyanandhan.mail@gmail.com

    Share
  • உணவும் உணர்வும்!

    -மேகலா இராமமூர்த்தி

    மனித சமுதாயத்தின் அடிப்படைத்தேவைகள் மூன்று. அவை உணவு உடை மற்றும் உறையுள். இந்த மூன்றிலும் முதலிடம் பெறுவது உணவே. உணவில்லையேல் புவியில் உயிர்வாழ்வே இல்லை. அதனாலன்றோ புறநானூறும், மணிமேகலையும்,

    ”உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என்று உணவு தருவோரைப் போற்றுகின்றன.

    பாவேந்தர் பாரதிதாசனும் இதேகருத்தை வழிமொழியும் விதமாய்,

    உணவினை ஆக்கல் மக்கட்(கு)
       உயிர் ஆக்கல் அன்றோ? வாழ்வு
    பணத்தினால் அன்று வில்வாட்
       படையினால் காண்பதன்று
    தணலினை அடுப்பில் இட்டுத் 
       தாழியில் சுவையை இட்டே
    அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
       அன்பிட்ட உணவால் வாழ்வோம் என்று மொழியக் காண்கின்றோம்.

    மனித வாழ்வுக்கு ஆதாரமாய்த் திகழும் இந்த உணவு குறித்து ஆராய்ந்தால், வையத்து மாந்தர் அனைவரும் ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தைக் கொண்டவரல்லர் என்பது புலப்படும்.

    பரவலாய், மக்களிடையே வழக்கத்திலிருக்கும் உணவுமுறைகள் சில நம் பார்வைக்கு…

    மரக்கறி, புலால் எனும் இரண்டுவகை உணவையும் அனுமதிக்கும் அசைவ உணவுமுறை (உலகமக்களில் பெரும்பான்மை இனத்தோர் இவ்வகையினரே);  பால்படு பொருள்களையும், மரக்கறியையும் மட்டுமே அனுமதிக்கும் சைவ உணவுமுறை (சமணரும், இந்து சமயத்தின் சில பிரிவினரும் இம்முறையைப் பின்பற்றுகின்றனர்); புலாலுணவை ஆதரித்தாலும் உயிர்களை நேரடியாகக் கொலைசெய்தல் பாவம் என வலியுறுத்தும் பௌத்தரின் உணவுமுறை; இறைச்சியைப் புசிக்கலாம்; எனினும் பன்றியிறைச்சி கூடாது எனத்தடை விதிக்கும் இசுலாமியரின் உணவுமுறை போன்றவை மக்களிடையே அதிகம் காணப்படும் உணவுமுறைகளாகும்.

    இவையேயன்றி, புலால், பால்படுபொருள்கள், முட்டை, தேன் முதலியவற்றைத் தவிர்த்த மரக்கறியுணவைமட்டும் வலியுறுத்தும் வீகன் (Vegan) உணவுமுறை; தானியங்கள் தவிர்த்துப் புலால், பெர்ரிகள் (berries), விதைகள் (nuts) ஆகியவற்றைப் பெருமளவில் உண்ணச்சொல்லும் (கற்காலமனிதனின் உணவுமுறையான) பேலியோலிதிக் (Paleolithic) உணவுமுறை போன்றவையும் நடைமுறையில் உள்ளன.

    இவ்வுணவுமுறைகளைக் கூர்ந்துநோக்குங்கால், பல்வேறு இனக்குழுக்களின் மரபையும், பாரம்பரியத்தையும், அவரவர் வாழ்விடங்களில் அதிகம் கிடைத்த உணவினையும் அடிப்படையாகக்கொண்டே இவை அமைந்திருப்பது தெளிவாகின்றது.

    உயிரிரக்கத்தையும் அகிம்சையையும் முக்கியக் கொள்கைகளாய்க் கொண்டு கட்டமைக்கப்பட்ட சமணம், அதனடிப்படையில், உயிர்களைக்கொன்று அவற்றின் ஊனால் தயாரிக்கப்பட்ட ஊணை உண்பதைப் பாவமெனக் கருதி அதனைக் கடிந்து ஒதுக்கியது. இந்தக் கோட்பாட்டை, இந்துமதத்தின் சில பிரிவினரும் ’உயர்ந்தது’ என்று ஏற்றுப் பின்பற்றலாயினர். எனினும், உலகின் பெரும்பான்மையான சமயங்கள் மரக்கறி உணவைத்தான் மக்கள் உட்கொள்ளவேண்டும் எனும் கொள்கை எதனையும் வகுக்காததால், மரக்கறியுண்டு மன்னுயிர் ஓம்பும் மக்களைவிட, மாமிசம் உண்டு தன்னுயிர் ஓம்பும் மக்களின் தொகையே உலகில் மிகுதியாய் இருக்கக் காண்கின்றோம்.

    உயிரிரக்கக் கோட்பாட்டை உயிரென ஓம்பும் மாந்தர் இதுகண்டு உளம்நொந்து, ”உயிர்களைக் கொன்றுதின்பது பாவமில்லையா?” என்று வினவினால், அதனை ஏற்க மறுக்கும் புலாலுணவினர், ”உயிர்க்கொலையில்லாத உணவுமுறையே உலகில் இல்லை; மரக்கறி உணவிலும் உயிர்க்கொலை உண்டு; மரம், செடி, கொடிகளின் இலைகளைப் பறிப்பதுண்பதும், காய்கனிகளைப் பிடுங்கித் தின்பதும்கூடக் கொலைக்குச் சமமானதுதானே? அத் தாவரங்களுக்கு ஊறுசெய்வதுதானே? என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர்.

    நம்மைச் சற்றே நிலைதடுமாறச் செய்யும் இக்கேள்விக்கு, சுதந்திரப்போராட்ட வீரரும், சிறந்த சிந்தனையாளருமான அமரர் சுப்பிரமணிய சிவா அவர்கள் பின்வருமாறு பதிலுரைக்கின்றார்:

    “நாம் நம் நகங்களையும் உரோமங்களையும் குறைப்பதால் அவை அழிந்துபோவதில்லை; மீண்டும் வளரவே செய்கின்றன. அதுபோல் மரம் செடிகளில் இலைகளையும் காய்கனிகளையும் பறித்துண்பதால் அவை அழிவதில்லை. மீண்டும் இலைகள் துளிர்க்கின்றன; காய்கனிகள் தோன்றுகின்றன. விலங்குகளைப் புசிப்பது அப்படியல்லவே? அவற்றைக் கொன்றன்றோ மக்கள் புசிக்கின்றனர்; மக்களின் உடல்கொழுக்க, அவ்வுயிர்கள் தம் உடலையும், உயிரையும் சேர்த்தேயன்றோ தியாகம் செய்கின்றன. அவற்றை மீண்டும் உயிரோடு மீட்டுவர இவர்களால் இயலுமா?” எனக் கேட்கின்றார்.

    சிவாவின் பதிலில் சமாதானம் அடையாத மாமிசப்பிரியர்கள், ”சிறந்த ஆன்மிகவாதியும், இந்துமதக் காவலருமான சுவாமி விவேகானந்தரே புலாலுணவை ஆதரித்திருக்கும்போது நாங்கள் உண்பதில் தவறென்ன?” என்று மீண்டும் அவரிடம் கேள்விக்கணை தொடுத்திருக்கின்றனர்.

    அதற்கும் அசரவில்லை சுப்ரமணிய சிவா. ”சில சந்தர்ப்பங்களை முன்னிட்டு விவேகானந்தர் அவ்வாறு சொன்னது உண்மைதான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் மாமிசஉணவை வெறுத்தார் என்பதிலும், அதனை இகழ்ந்தே கூறியுள்ளார் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் மாமிச உணவின்மீது மட்டற்ற காதல் கொண்டிருக்கும் மக்களோ, அப்பழக்கத்தைக் கைவிடவிரும்பாமல், ஏதோ ஒரு விசேஷ சந்தர்ப்பத்தில் சுவாமிஜி சொன்ன அந்தக் கருத்தை அப்படியேபிடித்துக்கொண்டு தங்கள் உணவுக்கொள்கையை நியாயப்படுத்த முனைகின்றனர்; இஃது அவர்கள் சுயநலத்தின் வெளிப்பாடேயன்றி வேறில்லை” என்று சூடாகப் பதிலுரைத்திருக்கின்றார்.

    உண்மைதான்! மக்கள் எப்போதுமே பிறர் சொல்லும் கருத்துக்களில் அவர்களுக்குப் பிடித்தமான பகுதியை மட்டும் பிரித்தெடுத்துக்கொண்டு எஞ்சியதை விட்டுவிடும் குணமுடையோராகவே இருக்கின்றனர்!

    இல்லையென்றால், “தன்னை அடக்கியாளப்பழகியவன் ஒருபோதும் புறஉலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான்; அத்தகையவனே வையத்தில் வாழத் தகுதிபடைத்தவன் ஆகின்றான்” எனவும், ஈதொத்த இன்னும்பல பொன்மொழிகளையும்  வீரத்துறவி விவேகானந்தர் வையத்துக்கு வழங்கிச்சென்றிருக்க, அவையனைத்தையும் காற்றில் பறக்கவிட்ட மக்கள், புலாலை ஆதரித்து அவர் பேசியதை மட்டும் மறவாமல் பற்றிக்கொண்டு போற்றுவானேன்?

    உணவுமுறைகளுக்கும், மனிதரிடம் காணப்படும் (சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் எனும்) முக்குணங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதாய் அருளாளர்கள் கருதுகின்றனர். அவ்வகையில், தாவர உணவுகள் எளிதில் சீரணமாவதுடன், சத்துவ குணத்தையும் மிகுவிக்கும் ஆற்றல் பெற்றவை என்பதை ஆன்மிகம் ஒப்புக்கொள்வதுபோலவே மருத்துவ அறிவியலும் ஒப்புக்கொள்கின்றது. இதற்கு ஆதாரமாய்ப் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் மருத்துவ ஆய்வேடுகளில் காணக்கிடைக்கின்றன.

    ”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பறவைகளையும் அரவணைத்தவன் மகாகவி பாரதி. பாடித்திரியும் பறவைகளையும், ஓடித்திரியும் விலங்களையும் கொன்றுதின்பது மனிதநேயச் செயலன்று என்று பகரும் பரிதிமாற்கலைஞர் எனும் தண்டமிழறிஞர், தன்னுடைய ’புள்’ எனும் கவிதையில் புள்ளினைக் கணைகொண்டு வீழ்த்தி, நெய்பெய்து சமைத்துண்ணும் மானுடரின் செயலை வன்மையாய்க் கண்டிக்கின்றார்.

    புள்ளே மென்சிறைப் புள்ளே பல்வகை
    வண்ணமும் மேவிய வனப்புடைப் பறவாய்
    […]

    ஐயகோ நின்னை அருமையிற் பேணார்
    வெய்ய கணைகொடு வீழ்ப்பர் அதான்று     
    நெய்பெய் தட்டுநிற் குய்ம்மணம் கமழ
    எயிற்றிடை மென்று வயிற்றின்
    இட்டு நாள்தொறும் கெட்டுலை வாரே!

    ’தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்சோதி’ என்று முழங்கிய வள்ளலாரும், ”புலால் உண்ணற்க; எவ்வுயிரையும் கொலை செய்யற்க!” என்றே திருவாய்மலர்ந்தருளியுள்ளார். மண்ணுலகில் வாழ்வதற்குத் தமக்கிருக்கும் உரிமை பிற உயிர்களுக்குமுண்டு என்பதை மாந்தர் உணரவேண்டும். அவ்வெண்ணம் முகிழ்த்தால், பிறவுயிர்களின் ஊனை உவக்காது, உயர்வழியில் – உயர்ந்தோர் வழியில் தம் உணவுக்கொள்கையை அவர்கள் மாற்றிக்கொள்வர்.

    கொலையும் புலையும் கடிந்தொதுக்கிய மனிதனை மன்னுயிரனைத்தும் கைகூப்பித் தெய்வமெனத் தொழும் என்பது குறளாசானின் துணிபு.

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும்.
    (குறள்: 260)

    பிறவிகளில் அரிதான மானுடப் பிறவியை மகத்தான பிறவியாக்கும் அருள்நெறிக்கண் மாந்தர் அனைவரும் நின்றொழுகினால் மனித வாழ்க்கை பொருளுடைத்தாகும் என்பதில் ஐயமில்லை.

    ***

     கட்டுரைக்கு உதவியவை

    1. சுப்ரமணிய சிவா கட்டுரைகள் – ஞானபாநு

    2http://ourworld.unu.edu/en/new-research-says-plant-based-diet-best-for-planet-and-people

    3. http://nutritionfacts.org/topics/plant-based-diets/

    4. http://pssmovement.org/tamil/concepts/8-articles/58-neeya-nee-unum-unavu

    5. http://tamil.vallalyaar.com/?p=3002#Q1

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    911566b6-a620-4061-95ee-b292a33c9131

     

    ”நின்றாய், நடந்தனை, நீளக் கிடந்தனை,
    சென்றாயர் பாடியில் சேர்ந்தனை, -கன்றுக்காய்,
    கண்ணென கோகுலக் கன்றிமை காத்திடும்,
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

    Share
  • மாநில அளவிலான கணிதத்திறன் போட்டியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

    திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான கணிதத்திறன் போட்டிகள் நடந்தது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேவகோட்டை:

    சொக்கலிங்கம்

    திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான கணிதத்திறன் போட்டிகள் நடந்தது. இப் போட்டிகளில் பங்கேற்றுத் தேர்வு எழுதியதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளில் பரிசுகள் வழங்குகின்றனர். இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்றதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி தான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 5மணிக்கெல்லாம் தேவகோட்டையில் கிளம்பி மாணவர்களைப் பேருந்து மூலம் திருச்சிக்கு ஆசிரியர் அழைத்துச் சென்றார். இது அரசு உதவி பெறும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இப் பள்ளித்தலைமையாசிரியர் சொக்கலிங்கம் கணிதத்திறன் போட்டிக்கான தேர்விற்கு மாணவ மாணவியரைத் தயார் படுத்தினார். கண்ணதாசன், ஆகாஷ்குமார், ஜீவா, யோகேஸ்வரன், தனலெட்சுமி, பார்கவி, லலிதா, தனம், கார்த்திகா ஆகிய மாணவ, மாணவிகள் ஆசிரியர் உதவியுடன் அவர்களது பெற்றோர்களுடன் திருச்சி அண்ணா கோளரங்கத்திற்கு அழைத்துச்சென்று தேர்வில் பங்குபெறச் செய்து அழைத்து வந்தனர். மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் தேர்வு எழுதியதாகத் தெரிவித்தனர்.

    பட விளக்கம் : தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பில் மாணவர்களுக்கான கணித் திறன் போட்டியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் பங்கேற்பு.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • ஆன்மாவைத் தீண்டும் அமைதியான அழகோவியம்!

    பவள சங்கரி

    DSC_0390[2]

    இதமான வெம்மை, இனிமையான தென்றல், ஆக பதமான பருவ நிலையென கேரள மாநில எல்லையை நெருங்கும்போதே இனம் புரியாத ஒரு பரவச நிலை உணரச் செய்வது உண்மை. சமயம் வாய்க்கும்போதெல்லாம் கேரளப் பயணம் செல்ல விரும்பும் எனக்கு எப்பொழுதும் நேரும் அனுபவம்தான் இது. திரும்பிய புறமெல்லாம் கண்ணிற்கு குளிர்ச்சியான இயற்கை வளங்கள். பெரும்பாலான பகுதிகள் எந்த செயற்கைப் பூச்சும் இல்லாமல் அப்படியே கிடப்பதுதான் இந்த அழகிற்கான மூல காரணம் என்று தோன்றுகிறது. ஒரு சில நேரங்களில் அப்படியே இந்த இயற்கை இனிமையினூடே கரைந்து மறைந்து போனால்தான் என்ன என்றுகூடத் தோன்றும்… அது சரி… நமக்கு ஆசைதான், அந்த இன்னமுதில் இணைந்துருகிப்போக.. இயற்கை அன்னை அதற்கு ஒப்புதல் அளித்து நம்மை ஏற்பதற்கு இரக்கம் காட்டவேண்டுமே.. !

    DSC_0395[1]

    கேரள மாநிலத்தில் பெரும்பாலும் பல இடங்களுக்கு கால்நடையாக மட்டுமே செல்ல வேண்டியிருக்கும். குறிப்பாக வயநாட்டில் வலம் வர நினைப்பவர்கள் மலைப்பாதைகளில் பல மைல் தொலைவுகள் நடக்கத் தயங்காதவராக இருக்கவேண்டியது அவசியம்! பசுமையான காடுகளும், வளமான நீர் நிலைகளும், வண்ண மலர்களும் கூடிக் குலவியிருக்கும் குளிர் பிரதேசமான இதற்கு, வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே ‘வயநாடு’ என்ற பெயர் அமைந்துள்ளது. மலையேற்றப் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனலாம். விண்ணை முட்டும் நெடிதுயர்ந்த மரங்களும், கண்ணைக் கவரும் வண்ண வண்ணக் காட்சிகளும் அணிவகுத்து அழகு காட்டும் அற்புதமான இயற்கை வடிவினூடே வலம் வருவது வரமல்லவா? ஒரு சில நாட்கள் தங்கியிருந்து ஒவ்வொரு பகுதியாக அனுபவிக்க வேண்டிய இடம். கிட்டத்தட்ட மூன்று நாட்களில் ஒரு நாள் பயணத்தில் கழிந்ததில் 2 நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததில் எங்கள் பயணம் முழுமையடைந்த திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் இன்னொரு முறை பயணப்பட வேண்டும் என்ற ஆவலே மேலோங்கியுள்ளது. ஆன்மாவைத் தீண்டும் அமைதியான அழகோவியம்!

    DSCN1938

    இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, ஆதி காலத்தில் வேடர் ராசாக்களால் ஆளப்பட்ட வயநாடு, பிற்காலங்களில் கோட்டயம் அரச வம்சத்தினரின் வழிவந்த பழசி ராசாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. வயநாடு மாவட்டத்தின் நவீன வரலாறு என்பது மைசூர் படையெடுப்பு மற்றும் இரண்டு நூற்றாண்டுகளாக கட்டிவைத்திருந்த பிரித்தானிய ஆட்சியும் உள்ளடங்கியதாகும். ஆங்கிலேயர்களுக்கும், பழசி ராசாவிற்கும் இடையே கடும் போர் நிலவியிருந்தது. 1956 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் உருவானபோது, வயநாடு கண்ணனூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1957 ஆம் ஆண்டில் தென்வயநாடு கோழிக்கோடு மாவட்டத்துடனும், மற்றும் வடக்கு வயநாடு கண்ணனூர் மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் 1980 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி கேரளாவின் 12 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

    DSCN1924

    முன்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 700 தொடக்கம் 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. 2,131 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வயநாடு , 816,558 (2011) மக்கள் தொகை கொண்டது. மானந்தவாடி, சுல்தான்பத்தேரி மற்றும் வைத்திரி தாலுக்கா போன்றவை இதில் அடங்கும். இங்கு அதிகமான ஆதிவாசி மக்கள், அதாவது மாநிலத்தின் மொத்தத் தொகையில் 36 % பேர் வயநாட்டில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 885.92 சதுர கி.மீ. பரப்பளவு காடுகளால் அமைந்துள்ளது. முழுமையாக பழங்குடியின கலாச்சாரத்தில் உள்ள இடம் இது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடம். பணப்பயிர்களான, மிளகு, ஏலம், காப்பி, தேயிலை, மசாலாப் பொருட்கள், ரப்பர், தேங்காய், இஞ்சி போன்றவைகள் விளையக்கூடிய வளமான பூமி இது. 22,772 ஹெக்டேர் நிலங்களில் நெற்பயிரும் விளைவிக்கப்படுகிறது.

    DSCN1795

    DSCN1937

    இத்தனை வளங்கள் இங்கு கொட்டிக் கிடந்தும், கேரள மாநில மக்கள் தங்கள் முக்கியத் தேவைகளுக்கும்கூட அண்டை மாநிலங்களை நம்பியிருக்கும் நிலைதான் எனக்கு எப்பொழுதும் ஆச்சரியமேற்படுத்தும் ஒன்று. ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’ என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது. மக்கள் மன நிலையில் பெரும் மாற்றங்கள் தேவை. நம் கொள்கைகள் நம்மை முன்னேற்றுவதாக இருக்க வேண்டுமேயொழிய நம் எண்ணங்களே நம் முன்னேற்றத்திற்கு ஒருக்காலும் முட்டுக்கட்டை போட்டுவிடக்கூடாது.

    DSCN1912

    DSCN1952

    சமீபத்தில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் பணி மாற்றம் காரணமாக கேரள மாநிலத்தில் ஒரு இடத்திற்குக் குடும்பத்துடன் குடிபெயர வேண்டியிருந்தது. சாமான்கள் நிறைந்த சரக்கு உந்து அவைகளை இறக்கும் தொழிலாளர்களுக்காக ஒரு நாள் முழுவதும் காத்துக்கிடந்த பின்பு மாலை 4.45 மணிக்கு வந்தவர்கள் கட்டணங்களையெல்லாம் கறாராகப் பேசிவிட்டு மாலை 5 மணியுடன் பணி நேரம் முடிவடைந்துவிட்டதால் அடுத்த நாள் காலைதான் இறக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மற்றும் பல விலையுயர்ந்தப் பொருட்களை வண்டியில் வெளியில் கிடக்க விடமுடியாதே என்று பலமுறை மன்றாடிக்கேட்டும் பயனில்லாமல் போக, அவர்கள் தங்கள் குடும்பத்தினரே சேர்ந்து இறக்கி வைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதற்கும் பலர் சேர்ந்து வந்து தகராறு செய்துள்ளனர். இறுதியில் பெரும் வாதத்திற்குப் பிறகு தாங்களே விடிய விடிய அத்துனை சாமான்களையும் இறக்கி வைத்துள்ளனர் அக்குடும்பத்தினர். இன்னொரு நண்பர் இயற்கை வளமும், அழகு நலமும் கண்டு அதன் ஆசையால் ஒரு தொழிலகம் அமைத்துவிட்டு, இன்று தொழிலாளர் பிரச்சனையால் சரிவர நடத்த முடியாமல் தவிப்பதை பகிர்ந்துகொண்டார். இங்கு குறிப்பிடும் அளவிற்கு தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லாததன் காரணமும் புரிந்ததுபோல் இருந்தது.

    Share