கற்றல் -ஒரு ஆற்றல் (13)                                  

0

 க. பாலசுபிரமணியன்

ஒரு குழந்தையின் நடைப்பயணம்

education11

 தவழுகின்ற குழந்தை ஓரிரு மாதங்களிலேயே உட்காரவும், பின்பு சுவர்களையோ அல்லது மற்ற பொருள்களையோ பிடித்துக் கொண்டு நிற்கவோ ஆரம்பிக்கிறது. இந்தச் செயல்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.. உடல் உறுப்புக்களின் அசைவிற்கும் (Motor Movements) அவற்றின் ஒருங்கிணைப்பிற்க்கும் இவை ஆதாரமாக அமைகின்றன. இப்படிப்பட்ட அசைவுகளின் தாக்கங்களைப் பற்றிய  கருத்துக்களை Kinesology என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ஏதாவது ஒன்றைப்பிடித்துக்கொண்டு நிற்க முயற்சிக்கும் பொழுது அந்தக் குழந்தை மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் முயற்சிக்கு ஒரு முன்னுதாரணமாகத் தெரிகின்றது. உள்ளத்தில் ஏற்படும் உந்துதல் அந்தச் செயலுக்குத் தேவையான சக்தியையும் தன்னுணர்வையும் அள்ளித் தருகின்றது. ஆகவே குழந்தைகள் இந்த முயற்சியில் ஈடுபடும் பொழுது பெற்றோர்கள் அருகில் இருந்து இந்த முயற்சிகளைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் வேண்டும், அது குழந்தையின் தன்னம்பிக்கையையும் துணிச்சலான போக்கையும் வளர்க்கும்.

பொதுவாக குழந்தைகள் நிற்கும்பொழுதோ அல்லது நடக்கும் பொழுதோ பெற்றோர்கள் தங்கள் பயத்தையோ அல்லது அச்சத்தையோ வெளிப்படுத்தக் கூடாது. அது குழந்தையின் முயற்சிகளுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும். மாறாக அருகில் இருந்து அவர்களுடைய   செயல்களுக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

மனிதர்களைத் தவிர மற்ற இனங்களில் ஒரு கன்று பிறந்தவுடன் சில நிமிடங்களிலேயே தங்கள் கால்களில் நிற்கவும் நடக்கவும் ஆரம்பித்து விடுகின்றது. மனித இனத்தில் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு[ பின் தான் நடைபயணம் தொடங்குகின்றது. மேலும் ஒரு குழந்தையை நாம் கைகளால் பிடித்தோ அல்லது கூட நடத்தி வந்தோ  நடப்பதற்க்கான பயிற்சியை அளிக்கின்றோம்.

ஆகவே பயிற்சி(Training) என்பது மனித இனத்தின் வளர்ச்சியிலும் கற்றலிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. கற்றலில் பயிற்சியினால் சில நன்மைகளும் உண்டு சில கெடுதல்களும் உண்டு. இவற்றை நாம் பின் கண்டு அறியலாம்.

அமெரிக்காவிலுள்ள குழந்தை மனநல ஆராய்ச்சியாளர்கள் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் நடை வண்டிகளை பற்றி மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவை குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குத் தடையாக இருக்கும் என்றும், பிற்காலங்களில் தங்களுடைய எல்லா விதமான முயற்சிகளுக்கும் ஒரு உதவியையும் எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஆகவே, ஒரு குழந்தை நடைப்பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது பெற்றோர்கள் அந்தக் கற்றலை தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் பயமின்மையும் வளர்க்கின்ற  செயலாகக் கருதி துணை புரிதல் அவசியம்.

நடைப் பயிற்சி ஆராம்பிக்கும் தருவாயில் குழந்தையின் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால் இரத்த ஓட்டம், தசைகளின் வளர்ச்சி மற்றும் அறிதல், புரிதல் வேட்டைகளுக்கான உந்துதல் ஆகியவை  அதிகரிக்கின்றன. குழந்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் சென்று பொருள்களைத்  தேடவும் அதனால் ஏற்படும் மகிழ்வையும் துயரத்தையும் வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றது. மூளையின் ஒரு பகுதியில் இருக்கின்ற மகிழ்வு நிலையமும்( Pleasure Center) மற்றும் துயர நிலையமும் ( Pain Center)தங்களுடைய உணர்வுகளை சற்றே துரிதமாக வெளிப்படுத்தத் துவங்குகின்றன. இந்த நிலையில் பெற்றோர்கள் குழநதைகளின் நகர்வுகள், நடைப் பயிற்சியின் தாக்கங்கள், மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து பேணுதல் அவசியமாகிறது.

குழந்தைகள் நடைப்பயணத்தை ஆரம்பிக்கும் நேரங்களில் அவர்களை வெறும் கால்களில் நடக்கச் செய்தல் அவசியம். குழந்தைகளுக்கு காலணிகளை (shoes) அணிவித்தலை நிபுணர்கள் எதிர்க்கின்றனர். அவர்களுடைய கால்கள் தரையில் படும் பொழுது ஏற்படுகின்ற அழுத்தங்களால் இரத்த ஓட்டம் சிறப்பாக இருப்பதற்கும் மற்றும் இரண்டு கால்களுக்கும் இடையில் நகர்வின் சமன்பாடுகள் ஏற்படுவதற்கும், இரு கால்களில் நின்று சமநிலையான தன்மையைப் பெறுவதற்கும் அது தேவைப்படுகின்றது. சில நேரங்களில் காலணிகளை அழுத்தமாக அணிவிக்கும் பொழுது கால் வளர்ச்சிக்கு மட்டுமின்றி அதன் தாக்கம் மூளையின் வளர்ச்சிக்கும் ஏற்படுவதாகக் கருதுகின்றனர்.

நடக்க ஆரம்பித்து விட்ட குழந்தை இனி பள்ளிக்குப் போகவேண்டாமா?

அடுத்த இதழில் பள்ளிக்கு குழந்தையை வரவேற்போம் !

தொடரும் ..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *