படக்கவிதைப் போட்டி (49)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திரு. புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
நம்பிக்கை…
என்னை நம்பி
என்தலையில் பணத்தைக் கட்டி
ஏமாந்துபோகும் மனிதனே,
உன்னை நம்பு
உன் உழைப்பை நம்பு..
உன்னை நம்பி
உழைத்து ஓடாய்த் தேய்ந்து
உன்னை உயர்த்திய
அன்னை தந்தையின்
நம்பிக்கை சிதறிடாமல்
கைகொடு..
என்னையும் கைவிட்டுவிடாதே,
கைப்பிடியாவது புல்கொடு…!
-செண்பக ஜெகதீசன்…
நாலு சுவருக்குள்
என்னை அடைத்துவிட்டு
நீ மட்டும் சுதந்திரமாக
இருக்க வேண்டும் என் நினைக்கிறாயோ?
மிருக வதைச் சட்டத்திலிருந்து
என்னை காப்பாற்ற யாராவது வருவார்களா
என்று எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ!
பட வரி 49
கண்களில் கனிவோ!
நான்காயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்னர்
நாளும் பழக்கிப் பாவித்த குதிரையில்
நாகரிகமாக இன்று ஏறிச் சவாரிக்கும்
நாரீமணியின் வரவுக்காகக் காத்திருக்கிறானோ பயிற்றுவிப்போன்!
அன்றி,…பொறுத்திரு மனிதா விரைவில்
உன் மாணவி வருவாளென்று இதமாய்
அன்பு மொழி விழியாலே மொழிகிறதோ
தனக்குத் தானே வாழும் குதிரை!
தன் நிழல் கண்டு பின் நகரும்
வன்முறையில் நாட்டம் இல்லாக் குதிரை
பண்களில் பேசுமுயர் நட்புடை பரியிது
கண்களில் காட்டுவது பெரும் கனிவோ!
திண்ணெனும் கொம்பின்றி வலிமையானதும், மனிதக்
கண்களிலுமிரு மடங்கு பெரிய கண்களால்
மண்ணிலேதும் எதிர்பார்க்காத வாழ்வு எனது
எண்ணிடு நீயும் என் மாதிரியென்கிறதோ!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-1-2016
பந்தயக் குதிரை
அரேபியாவின் இறக்குமதியே
அப்பாவி அழகு குதிரையே நீ
குதித்து ஓடியதால் குதிரையானோயோ
பரிந்து ஓடியதால் பரி ஆனாயோ ?
உன்னை மனிதன் அடிமை ஆக்கி
தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைத்தான்
ஏருழவும் வண்டி இழுக்கவும் பயன் பட்ட நீ
இன்று அலங்காரத்திற்கும்பந்தயத்திற்குமாய்
உன்னை நம்பியே இருக்கிறான் ஜாக்கி
உன் வேகத்தை காட்டி வெற்றியை அடையகுதிரை
ஊக்கமருந்து ஊசி போடாதே என்று இரைஞ்சுகிறதா ?
போட்டால்தான் வெற்றியென பாகன் நினைக்கிறானா?
அரசியல் வாதிகளும் குதிரை சக்தியில்
ஆரம்பித்து விட்டார்கள் ஓட்டத்தை
தேர்தல் நேரம் வந்து விட்டதால்
இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கேதாவ
குதிரை பயன் பாடு குறைந்தாலும்
குதிரை சக்தி என்ற சொல் மட்டும் இன்றும்
மோட்டார்களிலும் எலக்ட்ரிக் என்ஜின்களிலுமாய்
அந்நிய அடிமை
செஸ் விளையாட்டில்தான்
உனக்கும் எனக்குமான
முதல் அறிமுகம்
அந்தக்கால ஆண்மைமிக்கத்
திரை கதாநாயகர்கள்
உன் மீதேறி கம்பீரமாய்
இசைத்த பாடல்கள்மீது
எனக்கு அளவற்ற காதல்
கிண்டி மைதானத்தில்
நீ நொண்டி அடித்து பலரை
ஓட்டாண்டியாய் ஆக்கியதால்
ஜெமினி பாலம் ஓரமாய்
நீயும் சிலை வடிவானாய்
ஆனாலும் எனக்கொன்று
புரியவில்லை
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்
ஓடி விளையாடும்
எங்கள் ஜல்லிகட்டு காளைகள்மீது
எங்களவர் காட்டும் அக்கரை
இராணுவத்திலும் காவல்துறையிலும்
வீரர்களை வேதனையோடு சுமப்பதோடு
விருந்தினர் முன்னே நடனமும் ஆடும்
உன் மீது ஏன் பிறப்பதில்லை
ஓ நீ
அந்நிய தேசத்திலிருந்து வந்த
அடிமை என்பதாலா