நிர்மலா ராகவன்

படிப்பும் சுதந்திரமும்

உனையறிந்தால்1
கேள்வி: பதினைந்து வயதாகியும் என்னை இன்னும் சிறுபையனைப்போலவே நடத்துகிறார்கள் என் அம்மாவும், தாத்தாவும். `படி, படி’ என்று உயிரை வாங்குகிறார்கள். ஏன்தான் பள்ளிக்கூடம் போகவேண்டுமோ என்று இருக்கிறது. எப்போதுதான் நான் சுதந்திரம் பெறுவது?

விளக்கம்:

சுதந்திரம் என்றால் மனம்போனபடி நடத்தல் என்பதல்ல.

பெற்றோர் அனுமதிப்பதும், ஏதாவது ஒன்றைச் செய்யச்சொல்வதும் வயதைப் பொறுத்தது. நடக்க ஆரம்பித்த ஒன்றரை வயதுக் குழந்தைகூட தான் தனியாக நடக்க வேண்டும் என்று விரும்பி, நெரிசலான தெருக்களில் தாயின் கையை விட்டுவிட்டு ஓடப்பார்க்கும். இது சுதந்திரம் வேண்டும் ஒவ்வொரு மனிதனின் இயற்கையான தன்மை. அதற்காக, குழந்தையை அதன் விருப்பப்படி விடமுடியுமா?

படிக்கும் வயதில், சிறுவர்கள் தமது எல்லாத் தேவைகளுக்கும் பெற்றோர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களாக இருந்தால், தாத்தா பாட்டி சொல்படியும் நடக்க வேண்டும். இரு தலைமுறைகளுக்குமுன் இவர்கள் மட்டுமின்றி, அத்தை, மாமா, பெரியம்மா என்று இன்னும் பலரையும் திருப்திப்படுத்த வேண்டியிருந்தது.

வயதில் மூத்தவர்கள் அனுபவம் மிகுந்தவர்கள், அவர்களுக்கு மரியாதை கொடுத்து, நல்லவை, தீயவைகளை அவர்களிடமிருந்து கற்க வேண்டும் என்ற நிலை. அனுபவிக்கும்போது சற்றுக் கடினமாக இருந்தாலும், பலதரப்பட்ட மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள இம்முறை வழிவகுத்தது.

நான் பார்த்தவரை, பதினெட்டு வந்துவரை ஆண்பிள்ளைகளுக்குச் சிறுபிள்ளைத்தனம் மாறுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதையோ, அல்லது கடிகாரம், ரேடியோ போன்ற ஏதாவது சாமானைப் பிரித்துப்போட்டு, பின் அதைப் பொருத்துவதையோதான் பெரும்பான்மையான பையன்கள் விரும்புவர். படிக்கவோ பிடிக்காது. (ஓயாது மனப்பாடம் செய்பவன் சகநண்பர்களின் கேலிக்கு உள்ளாகிறான் என்பதும் காரணமாக இருக்கலாம்).

விவரம் புரியாத அந்தவயதில், பெற்றோரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. நல்ல பழக்கங்கள்கொண்ட நண்பர்களை நாடவேண்டுவது அவசியம். நம்மைக் காரணமின்றி ஓயாமல் புகழும் நண்பர்களும், அல்லது நம்மைவிடக் கீழான நிலையில் இருப்பவர்களும் நம்மையும் கீழே இறக்கிவிடக்கூடும்.

நண்பர்களுடன் சேர்ந்து புகைபிடிப்பது அந்தத் தருணத்தில் இன்பகரமாகத் தோன்றலாம். பிரபலமான நடிகர்கள் படங்களில் புகை பிடித்தால், கம்பெனிக்கு வியாபாரம். நடிகர்களுக்கும் கொள்ளைப்பணம். ஆனால், கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்துடன், பணமும், நேரமும் அல்லவா வீணாகிறது!

எனக்குத் தெரிந்த பல ஆண்கள் (வயது: 14 – 50) `நல்லவேளை, நான் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சையில் நல்லபடியாக பாஸ் பண்ணவில்லை. இல்லாவிட்டால், காலேஜிலே படிச்சுத் தொலைச்சிருக்கணும். `படி, படி’ என்று அம்மா, பாட்டி எல்லாரும் உயிரை வாங்குவார்கள்!’ என்று என்னிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொண்டபோது, எனக்கு அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் ஏற்பட்டது. வாழ்வில் நன்றாக முன்னுக்கு வந்திருக்கக் கூடியவர்கள்! பெரியவர்களின் தொணதொணப்பு பொறுக்க முடியாது, தம் முன்னேற்றத்துக்குத் தாமே முட்டுக்கட்டு போட்டுக்கொண்டவர்கள்!

இந்தக் கோணத்தில் அணுகினால், பிள்ளைகளுக்குப் படிக்கப் பிடிக்காததற்கு பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணமாகிறார்கள்.

பிள்ளைகள் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்தில் அமரவேண்டும் என்றெல்லாம் கனவு கண்டால் மட்டும் போதுமா? சிறுவர்களின் மனநிலையை உணரவேண்டாமா! திட்டுவதாலோ, அடிப்பதாலோ சிறுவர்களை மாற்றிவிட முடியாது. சற்று பயந்து, கொஞ்சகாலம் அடங்கியிருந்தாலும், ஊக்குவிப்பு என்பது உள்ளார்ந்ததாக இருந்தால்தான் எடுத்துக்கொண்ட எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்யும் உந்துதல் ஏற்படும்.

`நான் நன்றாகப் படித்து, வாழ்வில் உயருவேன். எல்லாவற்றிலும் வெற்றி பெற முயற்சி செய்வேன்!’ என்று தீர்மானம் செய்துகொள்ளும் சிறுவர்கள் எந்தவித ஏளனப் பேச்சையும் அலட்சியம் செய்ய முடிகிறது.

கதை: `எனக்குக் கதைப்புத்தகம் படிக்கவே பிடிப்பதில்லை!’ தயக்கத்துடன் என்னிடம் தெரிவித்தவன் உறவுக்கார, பதின்ம வயதுப் பையன்.

`கதைதான் என்று என்ன! புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு, கார், ஆகாய விமானம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என்று எதையாவது படியேன்!” என்றுவிட்டு, “ எல்லா விளையாட்டும் விளையாடு! அம்மாவுக்குத் தேங்காய் துருவிக்கொடுப்பதைவிட நண்பர்களுடன் விளையாடுவது முக்கியம்!’ என்று அழுத்தமாகக் கூறினேன். (அவன் தாய் சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள்).

அவனும் மகிழ்ச்சியுடன் அந்த அறிவுரையைக் கடைப்பிடித்து, I.I.T கல்லூரியிலேயே இரண்டாவது மாணவனாக வந்தான். உயர்ந்த உத்தியோகமும் கிடைத்தது.

`நாம் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம். நீ பெரியவன் ஆனதும், இதேபோன்ற வாழ்க்கைத்தரம் அமைய வேண்டுமானால், அது உன் கையில்தான் இருக்கிறது. அதற்கு நீ இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்!’ என்று ஒரு தாய் நல்லவிதமாக எடுத்துச் சொன்னால், பதின்ம வயதுப் பையன்கள் புரிந்துகொள்வார்கள்.

தாத்தா பாட்டியாக இருந்தால், `நீ நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கையில் நல்ல நிலை அடையமுடியும். நாங்கள் புத்தி சொல்வது உன் நன்மைக்காகத்தான்! நாளைக்கு உன் குடும்பம்தானே மகிழ்ச்சியாக இருக்கும்! நாங்களா அனுபவிக்கப்போகிறோம்! என்று கூறினால் பலனிருக்கும். ஆனால், ஓரிரு தடவை மட்டுமே சொன்னால் போதும்!

அதைவிட்டு, ஓயாது தொணதொணத்தால், அவர்களை மீறத்தான் தோன்றும் எவ்வயதினருக்கும். அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றி, படிப்பு, படிப்பு என்று உயிரை விட்டுக்கொண்டால், அலுப்புடன், அச்சமும் விளையாதா! அதைச் சீராக்க, விளையாட்டும், மற்ற பொழுதுபோக்கும் அவசியம். அவைகளை விடக்கூடாது.

சமீபத்தில் நான் படித்த தகவல்: தற்கால சீனாவில் பல்கலைக்கழகத்தில் நுழைவது மிகக் கடினம். கல்லூரிப்படிப்பு மட்டுமே பெரிய உத்தியோகத்துக்கு வழிவகுக்கும். இல்லாவிட்டால், அவர்களுடைய பெற்றோர்கள்போல், கட்டட வேலைக்கோ, தோட்டத் தொழிலாளியாகவோதான் போக முடியும்.

பல்கலைக்கழகத்தில் நுழைய மிகக் கடினமான பரீட்சை நடத்தப்படுகிறது. இப்பாடங்களைப் பயில சீனாவின் கிழக்குப்பகுதியில் ஒரு விசேடமான (ரகசியப்) பள்ளி இருக்கிறது. இங்கு 20,000 பேர் பயில்கிறார்கள். இல்லை, இல்லை, உருப்போடுகிறார்கள். காலை 6.20 – இரவு 10.50 வரை பாடங்கள். (ஐயோ!)

தங்கும் விடுதியில் எல்லா மாணவர்களும் நுழைந்து விட்டார்களோ என்று உறுதி செய்துகொள்ளும் வகையில், அவர்கள் கைரேகையைப் பதித்தால்தான் அறைக்குள் புகமுடியும். பள்ளியிலும், ஊரிலும் மாணவ மாணவிகளின் எல்லாவித நடத்தையும் கேமராமூலம் கண்காணிக்கப்படுகின்றன. அவர்கள் கவனத்தைக் கலைத்துவிடக்கூடிய கணினி, தொலைபேசி, வீடியோ `ஆர்கேட்’ போன்ற எதுவும் அந்த ஊரிலேயே கிடையாது. ஆணும், பெண்ணும் கூடிப்பேசுதல், காதல் — மூச்!

தாம் பெற்ற ஒரே செல்வங்களும் தம்மைப்போன்றே வறுமையில் வாடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், பெற்றோர் இரவு பகலாக இரண்டு வேலை பார்த்து, (குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவனுக்காக நிறையச் சம்பளம் கட்டி), இதில் சேர்க்கிறார்கள்.

விடுதியில் அம்மாவோ, தாத்தாவோ மாணவனுடன் தங்கலாம். ஆனால், அவர்களுடைய பதட்டமும் மாணவர்களப் பற்றிக்கொள்ள, சிலர் தற்கொலை செய்துகொண்டதில் ஆச்சரியமென்ன!

நல்லவேளை, நமக்கு இந்தக் கெடுபிடிகள் எல்லாம் கிடையாதே என்று நாம் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

பொதுவாக, பரீட்சைக்கு முதல் நாள் இரவு கண்விழித்துப் படிக்காது, வார இறுதிகளில் அந்தந்த வாரப் பாடத்தை படித்து வருவது நன்று. ஒரு முறை வகுப்பில் கேட்டது அல்லது படித்தது இருபத்து நான்கு மணி நேரம்தான் நம் நினைவில் இருக்குமாம்.

திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் படித்தால், அதற்காக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் குறுகிவிடும். பரீட்சைக்கு முன்னால் ஒரு பார்வை பார்த்துக்கொண்டாலே போதும்.

பரீட்சைகளைத் திருப்திகரமாக எழுதி முடித்ததும், விடுதலை உணர்வுடன் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கப்போகலாமே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *