குறளின் கதிர்களாய்…(105)
–செண்பக ஜெகதீசன்
ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல். (திருக்குறள்-714: அவையறிதல்)
புதுக் கவிதையில்…
அவைதனில்
அறிவுடையோர் முன்னிலையில்
அறிவுடையவராய் ஒளிரவேண்டும்…
அறிவற்றவர்முன்
வெண்ணிறச் சுண்ணாம்புச் சாந்துபோல்
வெளிப்படையாய்
அறிவிலார்போல இருக்கவேண்டும்!
குறும்பாவில்…
அறிந்தோர் அவையில் அவர்போலும்,
அறியார்முன் அவர்போல சுண்ணச்சாந்தாய்
வெளிப்படையாயும் இருத்தல்வேண்டும்!
மரபுக் கவிதையில்…
கற்றோர் நிறைந்த அவைதனிலே
கற்றோர் போல அவையறிந்து
சற்றும் குறைகள் வாராமல்
சகலரின் முன்னே நடந்திடுவாய்,
குற்றம் நிறைந்த அறிவற்றோர்
கூடி யிருக்கும் இடத்தினிலே
பற்றும் சுண்ணச் சாந்தினைப்போல்
பளிச்சென அவர்போல் இருப்பாயே!
லிமரைக்கூ…
அறிவுடையோர் அவையில் அவர்போலவே இரு,
அறிவற்றோர்முன் அப்படியே அறிவற்றோராய்
சுண்ணச்சாந்தாய் ஒளிவின்றி வைத்திடுன் உரு!
கிராமிய பாணியில்…
நடந்துக்கணும் நடந்துக்கணும்
நல்லபடி நடந்துக்கணும்,
சமயம்போல நடந்துக்கணும்
சபதெரிஞ்சி நடந்துக்கணும்…
அறிவுள்ளவன் சபயிலத்தான்
அவுரப்போல நடந்துக்கணும்,
அறிவயெல்லாங் காட்டிக்கணும்…
அறிவில்லாதவங் கூட்டத்தில
அவுரப்போலக் காட்டிக்கணும்,
வெள்ளச்சுண்ணாம்புச் சாந்தப்போல
வெளிப்படயாக் காட்டிக்கணும்…
இப்புடித்தான்,
நடந்துக்கணும் நடந்துக்கணும்
நல்லபடி நடந்துக்கணும்,
சமயம்போல நடந்துக்கணும்
சபதெரிஞ்சி நடந்துக்கணும்!