வள்ளுவரும் கழுகாரும்
புதுவை எழில்
எச்சரிக்கை முன்னுரை:
இதனை வெளியிடுபவர், படிப்பவர், பின்னூட்டம் இடுபவர்…
மீது எல்லாம் பாதுகாப்புச் சட்டமும், வழக்குகளும் பாய்ந்தாலும் பாயக்கூடும்.
‘தில்’ உள்ளவர்கள் மேலே படியுங்கள் !
விகடனாரை நோக்கி வேக வேகமாகப் பறந்துகொண்டிருந்த கழுகு அரசரை வழிமறித்துப் பிடித்தோம், ஒரு கையில் நல்ல காரம் போட்டு நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பும் மறு கையில் புத்தம் புதிதாகச் செய்யப்பட்ட வேர்க் கடலை மிட்டாயுமாக!
மூக்கில் வேர்வையும் கண்களில் கூர்மையுமாக நம் கைகளைக் கவனித்த கழுகார் “என்ன செய்தி? ஏன் வழி மறிக்கிறீர்” என்பது போலத் தலையைச் சாய்த்துப் பார்த்தார்!
“திருவள்ளுவர் நாளுக்காக அவரைப் பேட்டி கண்டதாக அறிந்தோம். அதில் இருந்து கொஞ்சம் அவிழ்த்துவிட்டிங்கன்னா…”
முந்திரியும் கடலை மிட்டாயும் நீட்டியபடியே தலையைச் சொரிந்தோம். மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிய கழுகார்
அலகைத் திறந்தார் – பருப்பையும் கடலை மிட்டாயையும் கொறிப்பதற்காக!
காத்திருந்தோம் பொறுமையாக. அவர் கொட்டியவற்றில் இருந்து…
(திருவள்ளுவரைக் கழுகார் எடுத்த பேட்டி)
கழுகார் : ”அண்மையில் ஏற்பட்ட பேரிடர் பெருவெள்ளம் பற்றி…”
கேட்டு முடிப்பதற்கு முன்னாலேயே வள்ளுவரிடம் இருந்து பதில் வெள்ளம் போல் பாய்ந்து வந்தது :
“கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை”.
கழுகார் :
“உட்கார்ந்த இடத்தில் இருந்தே அதிகாரம் தூள் பறக்க ஆணவம் குடை பிடிக்க அம்மாவின் ஆணையால் எல்லாவற்றையும் சரிசெய்த அம்மாவின் ஆட்சித் திறம், எதிர்காலம் பற்றி…”
வள்ளுவர் :
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரில் லானும் கெடும்”
கழுகார் :
“அம்மாவுக்கு எதிரா நிற்பவர் கலைஞர் தானே! தள்ளாத வயதிலும் பதவி ஆசையைத் தள்ளாத அவரைப் பற்றி உங்க கருத்து என்ன?”
வள்ளுவர் :
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. “
கழுகார் :
“தன்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அப்படி வந்தால் நடுத் தெருவில் நிறுத்திச் செருப்பால் அடியுங்கள் என்று சொன்ன மருத்துவர் ஐயா தன் அன்புமகனை ,நடுவண் அரசில் அமைச்சராக்கி அழகு பார்த்தாரே.
அவரைப் பற்றி என்ன நினைகிறீர்கள்?”
வள்ளுவர் :
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.”
கழுகார் :
“இராமனின் பாதுகை போல அரியணையில் தமிழக முதல் அமைச்சராக இருமுறை அமர்ந்த ஒ.பி.எஸ் பற்றி என்ன சொல்வீர்கள்?”
வள்ளுவர் :
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் (பன்னீர்)
செல்வர்க்கே செல்வம் தகைத்து.”
கழுகார் :
“தங்கள் குறைகள் இன்னும் நீங்கவில்லை என்று மக்கள் கூக்குரல் எழுப்புகின்ற போதும், அம்மாவின் ஆணையால் மக்கள் முழு நிவாரணம் பெற்றுவிட்டார்கள் ; வாழ்க்கை மீண்டும் சரியாகிவிட்டது என்று ஆர்ப்பரிக்கும் செயல்படாமல் ஆன்றவிந்து அடங்கிய அமைச்சர் பெரு மக்கள்?”
வள்ளுவர் :
“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.”
கழுகார் :
“நுணலும் தன் வாயால் கெடும் என்பதை நிரூபித்து வரும் இன்னோவா புகழ் நாஞ்சில் சம்பத் பற்றி உங்கள் கருத்து?
வள்ளுவர் :
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”
கழுகார் :
முடியட்டும் விடியட்டும் என்று நடை பயணம் மேற்கொண்டு ஊர் வலம் வரும் ஸ்டாலின் பற்றி என்ன சொல்வீர்கள்?”
வள்ளுவர் :
“சகோதரி ஒளவையிடம் இருந்து இரு வரி கடன்
வாங்கிச் சொல்லவா? :
குடை நிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து வேறூர் நண்ணினும் நண்ணுவர்!”
கழுகார் :
“நாக்குத் துருத்தியும் தூ தூ என்று துப்பியும் ம் புகழ் சேர்த்துவரும் நடிகர் விசயகாந்து …?
வள்ளுவர் :
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.” எனத் துப்புபவர்.
கழுகார் :
“ஊழல் அரசியல் வியாதிகள், லஞ்ச ஊழலில் திளைக்கும் அதிகாரிகள்… உணரவேண்டிய செய்தி என்ன?”
வள்ளுவர் :
“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.”
கழுகார் :
“எப்போதும் ஏதாவது சிக்கலில் சிக்கி உழலும் சிம்புத் தம்பிக்குக் கூறுவது என்ன?”
வள்ளுவர் :
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.”
கழுகார் :
“பாவம் தமிழக மக்கள்! அவர்களுக்கு ஆறுதலாக ….இரண்டு வரி…”
வள்ளுவர் :
“தமிழக மக்களுக்கு ஆறுதலா!
ஓட்டு , வாக்குச் சீட்டு என்று
“ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.”
எனச் சூடாகச் சொனார் வள்ளுவர்!
கழுகார் :
“சகாயம் IAS சாரைப்பற்றி இரண்டு வரி…?
வள்ளுவர் :
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.”
அடுத்து… என்று நாம் தொடங்குவதற்கு முன்
கழுகாரின் வாட்சப் சிணுங்கியது .
எடுத்துக் கேட்டவர் ,
“அச்சச்சோ , வள்ளுவர் பேட்டி கொடுத்த செய்தி மேலிடத்துக்குத் தெரிந்துபோய்விட்டதாம்!உடனடியாக வள்ளுவரைத் தமிழகத்தில் இருந்து தூக்கிவிட்டார்களாம்!
அவர் மீது பாதுகாப்புச் சட்டம் பாய்கிறதாம் ; பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டு FIR உம் போட்டுவிட்டார்களாம்!
“வள்ளுவரோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது ; அவர் தீக்குறளை எவரும் சென்றோதக் கூடாது” என்று கட்டளை போட்டிருக்கிறார்கள் ; அவர் எழுதிய நூல் ‘திருக்குறள்’ தடை செய்யப்பட்டுவிட்டதாம்….
உடனடியாக வரச் சொல்லி விகடனார் கட்டளை!….
ஆளை விடுமையா…” என்று பதறியபடியே கழுகார் இறக்கை விரித்துப் பறந்து போனார்!
கல்லாய்ச் சமைந்து போய் நின்றிருந்த நம் முன்னே
“விதியே விதியே தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ?”
என்று வேதனை பட்டபடியே பாரதியார் கடந்து போனார்!