Month: January 2016

  • மார்கழி மணாளன் 29 – ஸ்ரீ வைகுண்டம் – கள்ளபிரான்  

     க. பாலசுப்பிரமணியன்

    631591bb-352f-47f8-b69b-757f4f92dc99

    வேதங்களைக் காத்திடவே வேண்டி நின்றான் நான்முகனும்

    வைகுண்டம் விட்டுவந்த மாதவனும் மனமிரங்கிக் காத்தான்

    வானில் மட்டுமின்றி  மண்ணிலோர் வைகுண்டம் படைத்தான்

    வந்தவர்கள் நலம் காத்து வாழ்க்கைக்குப் பொருள் கொடுத்தான் !

     

    கல்லுக்கும்  பால் பொழிந்து கருணைகண்ட பசுவிடம்

    குறை கண்ட மன்னவனும் பசுவைப் பழித்தே தொடர

    குறைவில்லா கோபாலனை மண்ணுக்குள் கண்டான்

    குலம் வாழ நல்லதோர் கோவில் கட்டி மகிழ்ந்தான் !

     

    கள்ளனும்  கொண்டான் கண்ணனிடம் காதல் நெஞ்சம்

    காத்திட வேண்டியே  நின்றான் கோகுலன் முன்னம்

    கண்ணனே கள்வனாய்ச் சென்றான் காவலில் தஞ்சம்

    கருணையின் வடிவே என்றும்  கள்ளபிரான் மஞ்சம் !

     

    கொஞ்சுபவர்க்குக் குழந்தையாய் வரும் கண்ணன்

    கோலாகல வாழ்க்கைக்கு  குழலூதும் அன்பன்

    கோடித்துயர் வந்தாலும் கூட நிற்கும் நண்பன்

    கோசங்கள் அழிந்ததுமே அணைக்கும் வைகுந்தன் !

     

    வேண்டியவர்க்கு வேண்டியதைத் தந்துவிடும் வைகுண்டம்

    வேண்டாதவர்க்கும் உடல் வினை முடிய வீடு தரும் !

    வீதியில் வாழ்ந்தாலும் வீடு பணம் சேர்த்து உயர்ந்தாலும்

    விதி முடிவில் விரும்பிச் செல்லும் வாசல் வைகுண்டம் !

     

    மனம்விரும்பி மாதவனைத் தேடும் நேரம்

    மாதங்கள் பன்னிரண்டில் மார்கழியைச் சேரும் !

    மங்கலங்கள் பொங்கிவர வழிவிடும் மார்கழி

    மாதவன்  அருளோடு வருவாய் மீண்டும் வீடுதேடி !

    Share
  • பொங்கல் பண்டிகை! 

    -ரா.பார்த்தசாரதி 

    உத்தராயணம்  உதித்துவரும் காலம்
    உதய சூரியனை வழிபடும்  காலம்
    உழவர்கள் விளைச்சலைக் கொண்டாடும் காலம்
    தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக்காலம்! pongal

    உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் பண்டிகை
    விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
    திறமும், உறுதியும் கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
    இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!

    உழவன் சேற்றினிலே இறங்கினால்தான் நமக்குச் சோறு!
    நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு!
    விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு  என நினைத்திடுவோமே,
    விவசாயி  நலனில் அக்கறை கொண்டு  உதவி செய்திடுவோமே!

    கரும்பின் கணுவில் கரும்பு  துளிர்த்து  வளர்ந்திடுமே!
    உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே!
    விவசாயிக்கு முக்கியப் பண்டிகை பொங்கல் திருவிழா!
    சூரிய பகவனை நினைந்து கொண்டாடும் திருவிழா!

    பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப்பண்டிகை
    பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கனுப் பொங்கல்
    கால்நடைகளுக்காகக்  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்
    உறவும், நட்பும் பரிமாற்றம் கொள்ளக்  காணும் பொங்கல்!

    எத்துயர் வரினும் துவளுதல் கூடாது!
    உழவன் மனம் என்றும் தளர்ச்சியுறக்கூடாது!
    கரும்பும், பொங்கலும் இறைவனுக்குப் படைப்போமே!
    குடும்பத்துடன் ’பொங்கலோ பொங்கல்’ எனக் கொண்டாடுவோமே!

     

     

    Share
  • நம்வாழ்வு விடிந்திடட்டும்!

      -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

    வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட
    உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும்
    நல்லவைகள் நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று
    நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும்!pongal - jayaramasarma

    இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல்
    முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று
    அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று
    உயர்ச்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம்!

    நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல்
    ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள்
    நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர்
    சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும்!

    மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும்
    மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே
    கோபமொடு கொடுமழையும் குளிர்காற்றும் சேர்ந்ததனால்
    மார்கழியை நினைப்பதற்கே மக்களெலாம் நடுங்குகின்றார்!

    நடுக்கமுறும் மனம்திரும்ப நம்வாசல் பொங்கல்வரும்
    இறுக்கமெலாம் இறங்கிவிட இன்பமாய்ப் பொங்கிடுவோம்
    பொறுப்புடனே பொங்கல்செய்தால் பூரிப்புவரு மென்றெண்ணி
    புத்தரிசி தனைப்பெற்றுப் பொங்கல்பொங்கி மகிழ்ந்திடுவோம்!

    சஞ்சலத்தில் உழன்றாரைச் சாதிமதம் பாராது
    நெஞ்சார உதவிநின்ற நீள்கரங்கள் உடையாரைக்
    கொஞ்சி யவர்கைபற்றிக் கூடவே வைத்தபடி
    அஞ்சாமல் பொங்கல்செய்து அவர்கையிற் கொடுத்திடுவோம்!

    பட்டாசு மத்தாப்பு புத்தாடை அத்தனையும்
    இட்டமுடன் இருந்துவிடின் இனித்துவிடாப் பொங்கலென்பர்
    துட்டகுணம் அட்டகாசம் துயர்ப்படுத்தும் அத்தனையும்
    பட்டென்று அகலுதலே பாங்கான பொங்கலாகும்!

    மக்களது மனங்களிலே மாற்றம்பல வருவதற்கும்
    மக்களெலாம் தோழமையில் மகிழ்ந்தென்றும் இருப்பதற்கும்
    தைத்திங்கள் வருகின்ற தைப்பொங்கல் அமைகவென
    முத்திக்கு வித்தான முழுமுதலை வேண்டிநிற்போம்!

    கோவில்சென்று கும்பிடுவோம் குறைசொல்லல் தவிர்த்திடுவோம்
    பாவநிறை செயலையெல்லாம் பள்ளமதில் புதைத்திடுவோம்
    தூய்மைநிறை பெரியோரைத் தொட்டுநின்று வணங்கிடுவோம்
    வாய்மைகொண்ட மனத்தோடு வாழவெண்ணிப்  பொங்கிடுவோம்!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆண்டாள் -28 ….
    ——————————–

    2624baed-739c-469b-bae1-0244152da1d9

    பறவைகளும் தூங்கும் பனிமார் கழியில்,
    கறவைகள் பின்சென்று கானச் , -சிறையில்,
    பிறவைகள்(otherthings) விட்டொழித்து, புல்லாங் குழலின்
    சரணத்தில் பல்லவியாய் சேர் ….கிரேசி மோகன்….

    Share
  • இணையத்தில் தொற்றுநோய் – 2

    — தேமொழி.

    Echo Chamber Online

    உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஏன் இணையத்தின் சமூகவலைத்தளங்கள் மூலம் வெகு வேகமாகப் பரவுகிறது? சுலபமாக ஒரு இணையத் தேடல் செய்து உண்மையைக் கண்டுபிடிக்கும் வழியிருக்கும் பொழுதும், மக்கள் எதனால் அதைச் செய்யாமல் பொய்யான வதந்திகளை நம்புகிறார்கள்? எதனால் அவற்றைத் தம்முள் பகிர்ந்து மேலும் மேலும் பரப்புகிறார்கள்? ஏன் பிழைகளைச் சரி செய்ய முயலுவதில்லை? ஏன்? ஏன்? ஏன்? என்று நம்மைக் குழப்பும் இந்த ஏன் கேள்விகளுக்கு உளவியல் அடிப்படையில் விளக்கம் கொடுக்க முற்படுகிறது சமீபத்தில் (ஜனவரி 4, 2016) வெளியான ஆய்வறிக்கை ஒன்று.

    ஃபேஸ்புக் பயனர்களிடம் நடத்திய இந்த ஆய்வு கூறும் முடிவு; மக்கள் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் சார்பு நிலை காரணமாக, தங்கள் நம்பிக்கைகளை உறுதி செய்யும் தகவல் கிடைத்தால், உடனே தங்களுக்கு கிடைக்கும் அந்தச் செய்தியையே நம்ப விரும்புகிறார்கள். அதனைப் பற்றி மேலும் ஆராய்ந்து அது உண்மைதானா எனத் தெரிந்து கொள்ளும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவதில்லை. மேலும் அதற்கு மாறான தகவல் கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிடுவார்கள் என்கிறது. இவ்வாறு தனது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில் கொண்டிருக்கும் சார்புநிலையானது ஆங்கிலத்தில் confirmation bias எனக் குறிப்பிடப்படுகிறது.

    மக்களிடையே காணப்படும் தனது நம்பிக்கையினைப் பரப்பும் இந்த மனநிலையின் காரணமாக இணையத்தில் தங்கள் எண்ணங்களை எதிரொலிக்கும் குழுக்கள் உருவாகிறது. இக்குழுக்கள் echo chambers என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு குழுக்களாகப் பிரியும் மனப்பான்மை எந்தச் சமூக வலைத்தளமாக இருந்தாலும், டிவிட்டர், கூகிள் குழுமம், யாஹூ குழுமம் என எந்தச் சமூக வலைத்தளத்திலும் “அவர்கள், நாங்கள்” என்ற குழுக்களாக மக்களை அணிபிரியச் செய்யும். இந்த எதிரொலிக்கும் குழுக்கள் உருவாவது குறிப்பிட்ட கருத்துகளுக்குத்தான் என்ற வரையறையும் கிடையாது. தாங்கள் நம்பும் நம்பிக்கைக்கு மாறான கருத்து தோன்றினால், அதனைச் சகிக்க இயலாது மக்கள் குழுக்களாகப் பிரிவர். நம் இந்தியாவைப் பொறுத்தவரை கட்சிகள், மதங்கள், சாதிகள், தனிநாடு கோரிக்கை, கடவுள் நம்பிக்கை, ஆட்சி மொழிகள் என விவாதக் கருத்துகளுக்கும் பஞ்சமில்லை.

    ‘மிசெல்லா டெல் விகாரியோ’ என்ற இத்தாலிய கணினி சமூக அறிவியலாளர் (Michela Del Vicario of Italy’s Laboratory of Computational Social Science) ஃபேஸ்புக் பயனர்களிடம் 2010 முதல் 2014 வரை நடத்திய ஒரு ஆய்வின் நோக்கம், மக்கள் தாங்கள் விரும்பாத கருத்தை எதிர்கொள்ள முன் வருகிறார்களா? அல்லது தங்களுக்குள் குழுவாகப் பிரிந்து கொள்கிறார்களா? என்று அறிவதாகும்.

    ஐந்தாண்டுகளாகத் தரவுகளை சேகரிக்க 32 பொதுவான வலைத்தளங்கள், 35 அறிவியல் செய்திகள் தரும் வலைத்தளங்கள், ஆய்விற்காக வேண்டுமென்றே பொய்யான தகவலைப் பரப்ப உருவாக்கப்பட்ட 2 சோதனை போலி வலைத்தளங்கள் என மொத்தம் 69 வலைத்தளங்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக இருவகைக் குழுக்கள் இருப்பது தெரிய வந்தது. ஒரு பிரிவினர் conspiracy theories என்று கூறப்படும் ‘சதிச்செயல் கோட்பாடு’களை நம்புபவர்கள். இவர்கள் ஒசாமா மீது தாக்குதல் நடத்தி கொன்றதாகக் கூறுவது பொய், வேற்றுக்கிரக மனிதர்கள் இருப்பதை அரசாங்கங்கள் மறைக்கின்றன, செப்டெம்பர் 11 நிகழ்வு அமெரிக்க இராணுவமே நடத்திய தாக்குதல் போன்ற சதிச்செயல் கோட்பாடுகளை நம்பும் வகையினரைப் போன்றவர்கள். மற்ற பிரிவு ஆராய்ந்து, அறிவியல் சான்றுகளை எடுத்துக் கூறி, உண்மை என்னவென்று விளக்க முற்படுபவர்கள் (Debunking campaigns). இந்த இருவகையினரும் ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து பற்பல குழுக்களாக இணையத்தில் இருக்கிறார்கள். இவர்கள் தகவல்களை பரப்புவதிலும் வேறுபாடுகள் இல்லை.

    பொதுவாக, இந்த ஆய்வில், பயனர்கள் தாங்கள் ஒப்புக்கொள்ளும் செய்திகளை பரப்புவதும், தங்களால் ஒப்புக் கொள்ள முடியாத செய்திகளைப் புறக்கணிப்பதும் தெரிந்தது. தான் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதி செய்யும் செய்திகளை விரும்பி அதனை மட்டும் பரப்புவதில் முனைகிறார்கள். ஃபேஸ்புக் பயனர்களில் எதிரெதிர் சிந்தனை கொண்டவர்கள், தங்களுக்குள் ஒத்த கருத்துடைய குழுக்களாக (homogeneous, polarized cluster) அமைந்துள்ளதால் தங்களுக்குள் தங்களுக்குப் பிடித்த செய்திகளை விரைவில் பரப்ப முடிகிறது. ஆதாரமற்று இருந்தாலும் வதந்திகள் ஒரு சில மணி நேரங்களுக்குள் இவர்கள் மூலம் அதிவிரைவில் பரவுகின்றன.

    குழுக்களின் மனநிலை, ஒருவர் குழுவாக இயங்கத் தொடங்கும் பொழுது தனது நம்பிக்கையில் மிகவும் தீவிரமடைவார். அந்த நம்பிக்கையை வளர்க்கத் தன்னை அர்ப்பணிக்கும் மனப்பான்மையும் அவரிடம் உருவாகும். குழுவில் பிறரும் தனது நம்பிக்கையைப் போலவே நம்பிக்கை கொண்டவர்கள், தனது நம்பிக்கையை ஒப்புக் கொள்கிறார்கள் என்றவுடன் அவருக்குத் தான் கொண்ட கருத்தின் மீது அதிக நம்பிக்கை உருவாகும், அதில் தீவிரமடைவார்கள். இது குழுவாக இயங்கத் தொடங்கும் பொழுது ஒருவர் கொள்ளும் மனநிலை.

    நாட்டின் பொருளாதாரக் கொள்கை, அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் தான் கொண்டிருக்கும் தனது கருத்து நையாண்டிக்குள்ளாகுமோ என முதலில் அமைதி காக்கும் ஒருவர், தன்னையொத்த கருத்துடையவர் தனது நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் பேசியவுடன் தனது கருத்து வலிமையடைந்ததாகத் தன்னம்பிக்கை கொண்டு விவாதக் களத்தில் குதித்துவிடுவார். மற்றவரும் அவரை ஆதரித்தால் அவருக்குத் தான் கொண்ட நம்பிக்கையில் சார்புநிலை அதிகமாகும்.

    இந்தக் குழு மனநிலை அடிப்படையில்தான், சமூகத்தளங்களில் தாம் விரும்பும் கருத்துகளை இக்குழுக்கள் விரைவாக தங்களுக்குள் பரவவிடுகின்றன. தங்கள் நம்பிக்கைக்கு மாறாக உண்மை வெளிப்பட்டாலும் அதைப் புறக்கணித்து தங்கள் நம்பிக்கைக்கு வலு சேர்க்க முயல்கிறார்கள். இவ்வாறாக உண்மையைப் புறக்கணிக்கும், அதை எதிர்கொள்ளாது தவிர்க்கும்  மனநிலையே  வதந்திகள் பரவுவதன்  அடிப்படை.

    தளங்களில் கிடைக்கும் செய்திகளின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் செய்திகளை வகைப்படுத்தி உண்மையும், நம்பகத்தன்மையும் கொண்ட செய்திகளை முன்னிறுத்தச் சமூக வலைத்தளங்களும் தங்களால் இயன்ற வகையில் முயன்றுவருகின்றன. பொய்யான தகவல் என்றால் அதைத் தளங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது வதந்திகளைக் குறைக்கும் என்பது ஒரு அவர்களின் எதிர்பார்ப்பு.

    ___________________________________________
    கட்டுரைக்கு உதவிய ஆய்வறிக்கைகள்:
    The spreading of misinformation online
    PNAS 2016 : 1517441113v1-201517441.
    Del Vicario et al., PNAS January 4, 2016
    http://www.pnas.org/content/early/2016/01/02/1517441113

    Debunking in a World of Tribes
    arXiv:1510.04267v1 [cs.CY]
    Fabiana Zollo et al.,Submitted on 14 Oct 2015
    http://arxiv.org/pdf/1510.04267v1.pdf

    படம் உதவி: விக்கிபீடியா

    Share
  • மார்கழி மணாளன் – 28 திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

     8a79f235-b849-4a74-9630-8b24b0d4ae02

    புல்லருடன் கன்வரும் வளர்த்திட்டார் வேள்வித்தீ

    புவியினிலே என்றும் பரந்தாமன் அருள் வேண்டி !

    அரசமரமாய் உருவெடுத்து அவன் அருள்தந்தான்

    அன்புடனே உருமாறி ஆனான் ஆதி ஜெகந்நாதன் !

     

    ஊழ்வினையில் உருண்டுவந்த பாவம் நீக்கி

    ஊர்போற்றும் வம்சத்தை வளர்த்திட வேண்டி

    தலைநாகர் சிலையொன்று முன் நிறுத்தி

    தவமிருக்க தயரதனும் வந்தான் திருப்புல்லாணி !

     

    ஊர்போற்றும் பிள்ளைகள் பெற்றான் தயரதனும்

    வான்போற்றும் வண்ணம் அருளியதே புல்லாணி !

    நாள்தோறும் தேடிவரும் நன் மக்கள் குறைதீர்க்கும்

    அற்புதமே ! ஆழ்வார்கள் போற்றிய திருத்தலமே !

     

    சூதுகொண்டு பண்பிழந்த சூர்ப்பனகையின் தமையன்

    சாதுவாக உருக்கொண்டு சத்தியத்தின் வேரழித்தான் !

    குலமகளைக் கடத்திச் சென்று கொக்கரித்த இராவணனின்

    குலமழிக்கக் கடலோரம் புடைசூழ வந்தான் காகுந்தனும் !

     

    தவத்தோர் விழைகின்ற தயரதனின் மைந்தனும்

    தர்பையிலே உடல் கிடத்தித் தவமிருந்தான் !

    குரங்கோடு அணிலும் கூடியொரு பாலமமைக்க

    குவலயமே வியந்திட்ட கோவில் புல்லாணி !

     

    ஆணவம் அழித்தே வருணனை வென்றான்

    அரங்கனின் அருளுடன் வில்லும் பெற்றான்

    அரக்கனின்  தம்பிக்கு அடைக்கலம் தந்தான்

    அன்புடை நெஞ்சுக்கு அருள்தரும் புல்லாணி !

     

    கண்மூடும் சொல்லிரண்டில் உனைச் சேர்க்க,

    கண்ணிரண்டில் நீ நிற்கச்  சொல் உறங்கும் !

    காட்சிக்கும் சொல்லுக்கும் ஏன் கண்ணாமூச்சி?

    காதலுற்றேன் ! கருணை செய்வாய்!  கற்பகமே!

     

    மண்ணுலகில் உன்னழகு மனம் கவரும்

    விண்ணுலகில் உன்னழகு என்ன சொல்லும் ?

    மண்ணுலகும் விண்ணுலகும் மயங்கிவிடும்

    மாதவனே! மலைத்தேனே ! மனம் நிறைவாய் !

     

     

     

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

    – எஸ். நித்யலக்ஷ்மி

    குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

    INTERNET SITES FOR KIDS

    1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுன்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம்.

    2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்ட்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்துத் தருகிறது www.alfy.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.

    3. www.surfnetkids.com என்ற தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.

    4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது www.kidsites.org என்ற முகவரியில் உள்ள தளம்.

    5. குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது www.coolmath4kids.com உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் எனக் கணக்கின் அடிப்படையையும் அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன. அவற்றின் முகவரிகள்: www.coolmath.com, www.coolmath4kids.com, www.sciencemonster.com, www.spikesgamezone.com

    6. www.kids.yahoo.com என்ற முகவரியில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்படங்கள், ஜோக்ஸ், விளையாட்டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்தத் தளம் குழந்தைகளுக்காகவே உருவாக்கப் பட்டுள்ளது.

    7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து இண்டர்நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற www.hitentertainment.com என்ற தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்கின்றன.

    8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுக்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும் தருகிறது www.pbskids.org என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக www.nickjr.com , www.uptoten.com, www.kidsgames.org, www.gameskidsplay.net ஆகியவை உள்ளன.

    9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களையும் சேர்த்து விளையாட்டுக்கள் மூலமாகத் தரும் ஓர் இணைய தளம் www.playkidsgames.com இந்தத் தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்யூட்டர், மேத்ஸ், பிரச்சினைகளைத் தீர்த்து வெற்றிகாணும் வழிகள், படித்துச் சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழிமுறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழிகளிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்களையும் தருகிறது இந்தத் தளம்.

    10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் www.funbrain.com என்பது. கேம்ஸ் விளையாடுகையில் குழந்தைகளிடம் தகவல்களைப் பெற்று தொடரும் வகையில் கேம்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்தத் தளம். சொற்களைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்கப்பட்டுத் தரப்படுகின்றன.

    Share
  • ஜென்

    -கவிஜி

    வா…வந்து
    தேநீர் போடு…
    மதிய மழை வரட்டும்…

    ***

    என்றாவது திறக்கப்படும்
    ஜன்னலில் திறக்காமலே
    கிடக்கின்றன கைகள்…

    ***

    ஜென் தத்துவம் ஒன்றுமில்லை
    ரொட்டித் துண்டு
    பெரிதென்கிறது…

    ***

    எறும்புகளைக்
    கொண்டாடுகிறது
    வரிசை…

    ***

    முதலில் இளையராஜாவின்
    பாடலைச் சொல்…
    பின், காதலை சொல்…

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 47

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “அப்படியே அச்சம், அறியாமை, கோழைத்தனம் உள்ள ஏழைக் குடிசைகள் வழியாக அவற்றைப் புறக்கணிக்காமல் பார்க்கப் போய் வருவீர் ! விரைவாய் இயங்கும் விரல்களும் நுட்பக் கருவிகளும் கொண்டு தேசத்தின் சொத்தைப் பற்கள் தோண்டிய குழியை நிரப்பித் தேய்வுகளை மறைத்து வரும் பல் மருத்துவர் வசிக்கும் இல்லத்திற்கும் சென்று வருவீர் !”
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    பூமியின் சீற்றம் !
    ___________________

    புயலடிப்பு ! இடி இடிப்பு !
    தீப்பிடிப்பு ! இவைதான்
    புவி காட்டும் சீற்றங்கள் !
    மனித இதயத்தில்
    மண்டும் வெறுப்பு பொறாமை
    தீவினை –
    இவற்றுக்கு ஒப்பாகும் !
    மக்கள் கூக்குரலும்
    இழப்பு அழுகுரலும் அவற்றால்
    இன்னலும், விபத்தும்,
    இதர எச்சரிக் கைகளும்
    எனது மனத்தில்
    நினைவு கொணரும்
    காட்சிகள் !
    காலத்தின் நாடக அரங்கில்
    காணும் கூத்துகள் !
    ___________________

    நான் காண்கிறேன் இந்த
    மானிடனை !
    பூமித் தளமெங்கும் அவன்
    எழுப்பிடும்
    வரலாற்றுத் தூண்கள்,
    கோபுரம், மாளிகை, நகரம்,
    கோயில்கள் !
    நான் காண்கிறேன் இந்த
    பூமியை !
    அது கடுஞ் சினமுற்று
    அந்தக் கட்டடத்தை எல்லாம்
    பெயர்த் தெடுத்துத்
    தனது நெஞ்சுக் குள்ளே
    புதைத்துக் கொள்ளும்
    சீற்றமுடன் !
    ___________________

    Share
  • ”கூடார வல்லி”….

    006122eb-f178-4318-a3b9-27931434e773

    ”கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
    முன்னாடி சூடி மகிந்ததற்குப் -பின்னாடி
    வில்லிபுதூர் ரங்கனின் வெற்றிக்(கு) அலங்கலிடும்
    கிள்ளைகொள் கோதாய் காப்பு”….கிரேசி மோகன்….

    அலங்கல் -மாலை, கிள்ளை -கிளி….

    Share
  • மார்கழி மணாளன் – 27  திருக்கண்ணபுரம் – சௌரிராஜப் பெருமாள்

     க. பாலசுப்பிரமணியன்

    a0c91dd0-6b87-4e67-b173-c7053220b073

    கண்ணனின் கண்ணசைவில் கனிந்துவரும் பூபாளம்

    குழலூதும் கையசைவில் காற்றிசைக்கும் மோகனமே

    காலிரண்டும் தாளமிட கண்சிமிட்டும் கல்யாணி

    கார்மேகன் கண்ணபுரம் காலமெல்லாம் ஆனந்தபைரவி !

     

    கண்ணனின் கோவிலுக்கு மன்னவனும் மலரனுப்ப

    கள்ளமாய் பட்டரும் அதை காசுக்கு விற்றார் !

    கண்டறிந்த மன்னனுக்கு அளித்த மாலையிலே

    கரியதோர் மயிர் கண்டு கலக்கமுற்றான் வேந்தனுமே !

     

    கள்வனுக்குத் துணைவந்தான் கள்வன் கண்ணனுமே

    கரியதோர் சிகை கண்டு கண்டோரும் வியந்தனரே

    கண்ணனும் பெயர் கொண்டான் சௌரிராஜன்

    கணநேரம் நினைத்தாலும் காத்திடும் கண்ணபுரமே !

     

    மனமுடைந்து நின்றான் பக்தியுடன் முனயோதரன்

    மங்கலமாய் பொங்கலிட காலம் கடந்ததேன்றே !

    மனம்கசிந்து மாதவனும் மணியோசை ஒலித்திடவே

    பொங்கல்மணம்  பொங்கிடவே அருள் செய்தான் !

     

    கண்ணபுரத்தான் கைப்பிடித்தான் மீனவப் பெண்ணை

    காசினியில் சாதி பேதம் நீக்கி சமத்துவம் படைத்திடவே !

    பாருள்ள படைப்பெல்லாம் பரந்தாமன் பார்வையில் ஒன்றே

    பாதைகள் வேறானாலும் போகுமிடம் பரமபதம் ஒன்றே !

     

     

    Share
  • நாசாவின் விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

    – சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.

    கார்ல் சேகன்

    (1934-1996)

    “பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது!   அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும்”

    கார்ல் சேகன்

    அண்ட கோள ஆராய்ச்சியில் பங்கெடுத்த அமெரிக்க விஞ்ஞானி

    1957 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் அணுக்கருப் பெளதிகம் [Nuclear Physics] படித்துக் கொண்டிருந்த ஒரு வானியல் பெளதிக [Astrophysics] மாணவர், அமெரிக்கா 1970 ஆம் ஆண்டுக்குள் சந்திர மண்டலத்தில் இறங்கி விடும் என்று சித்தாந்த ஞானிபோல் முன்னறிவித்தார்! அவ்வாக்கு மொழி மெய்யாக நிகழ்ந்தது! அதைக் கூறிய தீர்க்க தரிசி வேறு யாரு மில்லை! அவர்தான் வானியல் மேதை டாக்டர் கார்ல் சேகன்!

    அமெரிக்காவின் ஐநூறு ஆண்டு வரலாற்றில், விஞ்ஞானத்தைக் கற்றுப் பட்டமேதை ஆகி, அண்டவெளிப் பயணங்களில் பங்கெடுத்து, கோடான கோடி மைல்களுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி நகர்ந்து செல்லும் பிற அண்டங்களில் பூமியைப் போல், வேறு உயிரினங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி செய்யப் புகுந்தவர்

    ​ ​

    களில் முதல் விஞ்ஞானி கார்ல் சேகர்! பொது நபர்கள் எளிதில் புரியும்படி, விஞ்ஞானக் கருத்துக்களைப் புத்தகங்கள் மூலம், கட்டுரைகள் வாயிலாய், சொற்பொழிவுகள் நிகழ்த்தி அமெரிக்காவில் புகழ் பெற்றவர், கார்ல் சேகன்! கசப்பான விஞ்ஞானப் படைப்புகளை, இனிப்பான நிகழ்ச்சிகளாய் இதிகாசக் கதைகள் மூலம் எளிதாக விளக்கிக் கேட்போரைக் கவர்ந்தவர், கார்ல் சேகன்!

    கார்ல் சேகன் வானியல் [Astronomy] விஞ்ஞானத்தின் பல கிளைகளில் பயிற்சி பெற்ற அறிவாளி. பிரபஞ்சவியல் [Cosmology] விஞ்ஞானத்தில் பாண்டித்தியம் உடையவர். சித்தாந்த விஞ்ஞானக் கோட்பாடுகளில் [Philosophy of Science] வேட்கை மிகுந்தவர். எல்லாவற்றையும் விட கார்ல் சேகனுக்குப் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலத்தைப் [Origin of Life on Earth] பற்றி ஆழ்ந்து அறியவும், அதேபோல் பிரபஞ்சத்தின் வேறு அண்டங்களிலும் உயிரினங்கள் [Exobiology] இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உறுதியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினார்! அந்த வேட்கையை நிறைவேற்ற நாசாவின் [NASA, National Aeronautics & Space Administration] அண்டவெளிப் படையெடுப்புத் திட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று ஆய்வுகளில் நேரடியாக ஈடுபட்டார்! 1960-1990 ஆண்டுகளில் அமெரிக்காவின் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking 1, 2], பயனீயர் [Pioneer], வாயேஜர் [Voyager], காலிலியோ [Galileo] ஆகிய மனிதரற்ற விண்வெளிக் கப்பல்களின் [Unmanned Spaceships] பயணங்களில் பங்கெடுத்து வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய அண்ட கோளங்களில் நுண்ணுயிர் ஜந்துக்கள் [Micro-Organisms] உள்ளனவா என்ற சோதனைகளில் கலந்திருக்கிறார்.

    வானியல் வல்லுநர் கார்ல் சேகனின் வாழ்க்கை வரலாறு

    ‘பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடிப்பதின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது! அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும் ‘, என்று ஒரு சொற்பொழிவில் கார்ல் சேகன் கூறி யிருக்கிறார்!

    1934 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள், கார்ல் சேகன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புலம் பெயர்ந்த ஓர் யூத குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் சாமுவெல் சேகன் [Samuel Sagan] மெலிந்த உருவம், சிறப்பு அம்சம் எதுவும் அற்ற உருவம், செந்நிறத் தலைமயிர் மட்டும் பளிச்செனத் தெரியும் தோற்றம்! தாயார் ரேச்சல் குரூபர் சேகன் [Rachel Gruber Sagan] எடுப்பான தோற்றம், மிடுக்கான சொல்லாட்சி கொண்டவள். பூர்வீகத் தாய்வழிப் பாட்டனார், லைப் குரூபர் [Leib Gruber] ஐரோப்பாவில் ஆஸ்டிரிய ஹங்கேரி இனத்தவர்! அவர் பிறந்த இடம் யுக்ரேயினில் உள்ள கலிஸியா [Galicia in Ukraine]. ஹீஃப்ரூ மொழியில் ‘சேகன் ‘ என்றால் ‘தளபதி ‘ என்று அர்த்தம்!

    தந்தையார் சாமுவெல் சேகன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பயின்று மருந்தியல் பட்டம் [Pharmacy Degree] பெற்றவர். மகனைச் சிறு வயதிலிருந்தே சிறந்த முறையில் பெற்றோர்கள் வளர்த்தார்கள். மன்ஹாட்டனில் இயற்கை வரலாறு பொருட் காட்சி மாளிகை [Museum of Natural History], ஹேடன் விண்வெளிக் கோள மாளிகை [Hayden Planetarium] ஆகியவற்றுக்கு மகனை அழைத்துச் செல்வார்கள். காரிருள் வானில் கண்சிமிட்டும் விண்மீன்கள் கார்ல் சேகனுக்குப் புதிராகக் காட்சி அளித்தன! ‘செவ்வாயின் பணிமாது ‘ [Maid of Mars], ‘செவ்வாய்ச் சதுரங்கன் ‘ [Chessman of Mars], ‘செவ்வாய் யுத்தப் பிரபுக்கள் ‘ [The Warlords of Mars], போன்ற விஞ்ஞானப் புதினங்களைச் சிறுவன் சேகன் படித்தான்! 1940 இல் ஆறு வயதுச் சிறுவன் வால்ட் டிஸ்னியின் ஃபென்டாஸியா [Fantasia] திரைப் படத்தில் பூர்வீக விலங்கினங்களைக் [Prehistoric Animals] கண்டு பூரித்துப் போனான்! தனியார் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக கிரேக்க ரோமானிய இதிகாசங்களை எடுத்துப் படித்தான்! பனிரெண்டு வயதில் பறக்கும் தட்டுகளைப் [Flying Saucers] பற்றிக் கேள்விப் பட்டு, அவை பிற அண்டங்களி லிருந்து பூமிக்கு வருகின்றன என்று உறுதியாக நம்பினான்!

    Fig 4 Earth & Mars

    புகழ் பெற்ற எழுத்தாளர், ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] எழுதிய ‘விண்வெளி அண்டங்களுக் கிடையே பயணம் ‘ [Interplanetary Flight] என்னும் நூலைப் படித்த பிறகு கார்ல் சேகனின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது! அதைத் தொடர்ந்து அண்டவெளி விஞ்ஞான மேதைகளான ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamov], பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆர்தர் எட்டிங்டன் [Arthur Eddington], உயிரியல் விஞ்ஞானி ஜூலியன் ஹக்ஸ்லி [Julian Huxley] ஆகியோரின் நூல்களில் ஈடுபாடு கொண்டார்!

    அமெரிக்க வானியல் விஞ்ஞானி சைமன் நியூகோம் [Simon Newcomb] எழுதிய ‘எல்லோருக்கும் வானியல் விஞ்ஞானம் ‘ [Astronomy for Everybody] என்னும் புத்தகத்தில், ‘செவ்வாய் மண்டலத்தில் உயிரினங்கள் வாழ்வதுபோல் தோன்றுகிறது! அச்செய்தி ஒரு காலத்தில் மெய்யானதா என்று கேட்கப் பட்டது! இப்போது பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்டச் செய்தி, அது! ‘ என்று எழுதி யிருந்தது! அவ்வாசகம் கார்ல் சேகன் அண்ட கோளங்களில் உயிரினங்கள் வாழலாம் என்ற கருத்தை மேலும் வலியுறுத்தியது!

    Fig 5 Chandrasekar & Kuiper

    உயர்நிலைப் படிப்பை முடித்த கார்ல் சேகன், மேற்படிப்புக்குச் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அப்போது அங்கு பெளதிகப் பேராசிரியராக இருந்த விஞ்ஞான மேதைகள், நோபெல் பரிசு பெற்ற என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi], சுப்ரமணியன் சந்திரசேகர் [S. Chandrasekhar], மற்றும் எட்வெர்டு டெல்லர் [E. Teller], ஜெரால்டு குயிபர் [Gerald Kuiper]! கார்ல் சேகனின் முதல் பெளதிகக் குரு வானியல் வல்லுநர், சந்திரசேகர்! கணிதத்தில் வலுவற்ற கார்ல் சேகன், கணிதப் புலியான சந்திரசேகரை எதிரே சந்திக்க விரும்பாது, சுற்றி போய்விடுவார் என்று அறியப் படுகிறது! 1955 இல் கார்ல் சேகன் பெளதிகத்தில் B.A. பட்டம் பெற்றார். பிறகு வானியல், விண்வெளிப் பெளதிகம் [Astronomy, Astrophysics] இரண்டையும் பயின்று, ‘அண்ட கோளங்களின் பெளதிக ஆய்வுகள் ‘ [Physical Studies of Planets] என்னும் கோட்பாடை எழுதி 1960 இல் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். அந்தக் கோட்பாட்டில் முதன் முதலாகக் கார்ல் சேகன் ‘சுக்கிரனில் கண்ணாடி இல்ல விளைவு ‘ [Greenhouse Effect on Venus] என்னும் தலைப்பில் அங்கே உள்ள அடர்த்தியான வாயுக்கோளச் சூழ்மண்டலத்தில் சுற்றிச் சுற்றி நிகழும் கொதிப்பு வெப்பத்தைப் பற்றி எழுதிள்ளார்!

    Fig 6 Three Professors

    1960-1962 ஆண்டுகளில் கார்ல் சேகன் பெர்கெலி, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் [University of California, Berkeley] ஆராய்ச்சி நபராகப் [Research Fellow] புகுந்தார். அடுத்து ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் 1962-1968 ஆண்டுகளில் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே, சுமித்ஸோனியன் வானியல் பெளதிக ஆய்வுக் கூடத்தில் [Smithsonian Astrophysical Laboratory] ஆராய்ச்சிகளும் செய்தார். 1968 இல் கார்ல் சேகன் நியூ யார்க் சென்று இதாகாவில் கார்நெல் பல்கலைக் கழகத்தின் [Cornell University, Ithaca], விண்வெளிக் கோள ஆய்வுக் கூடத்தின் ஆணையாளராகப் [Director, Laboratory for Planetary Studies] பதவி ஏற்றார். 1970 இல் விண்வெளி விஞ்ஞானம், வானியல் துறைகளுக்குக் கார்நெல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆகிக் காலமாகும் வரை [1996] அப்பதவியில் அங்கே இருந்தார்.

    கல்லூரியில் அவர் படித்த காலத்தில் கார்ல் சேகனைக் கவர்ந்த விஞ்ஞான மேதைகள், அணுவைப் பற்றி விளக்கிய கிரேக்க ஞானி டெமாகிரிடஸ் [Democritus (460-370 B.C)], சூரிய குடும்பக் கோளங்களின் நகர்ச்சி நியதிகளை ஆக்கிய ஜெர்மன் விஞ்ஞானி, ஜொஹானஸ் கெப்பளர் [Johannes Kepler (1571-1630)], அண்ட கோளங்களின் ஈர்ப்பியல்களைக் கண்டு பிடித்த ஆங்கில விஞ்ஞானி, ஐஸக் நியூட்டன் [Isaac Newton (1642-1727)], பூமியில் உயிரினங்களின் தோற்ற மூல வளர்ச்சியைத் தொகுத்த பிரிட்டிஷ் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் [Charles Darwin (1809-1882)], ஒப்பியல் நியதியைப் படைத்த ஜெர்மன் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein (1879-1955)] ஆகியோர்.

    Fig 7 Jet Propulsion Laboratory

    அண்டங்களில் உயிரினங்கள் தோன்றலாம் என்பதற்கு ஆதரங்கள்

    வானியல் [Astronomy] இதுவரைத் தூய விஞ்ஞானமாகப் பெளதிகம், ரசாயனம் என்னும் இரு பிரிவுகளாய் மட்டுமே வளர்ந்து வந்தது. இத் தூய விஞ்ஞானத்தில் வெறும் யூகிப்புக் கோட்பாடுகளை விளக்கும் மனிதவியல் துறையை [Anthropology] முதன் முதலில் இணைத்தவர், கார்ல் சேகன்! மனிதவியல் துறை பூமியின் மூலத்தோற்றம், உயிரினங்களின் எழுச்சி, அவற்றின் வளர்ச்சிக்காக அமைந்த சூழ்மண்டலம் ஆகியவற்றை ஆராய்கிறது! இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் [Astronomy], உயிரினங்களின் மூல வளர்ச்சியான பரிணாமம் [Evolution], உயிரியல் [Biology], சூழ்நிலை [Environment] ஆகிய முப்பெரும் துறைகளை ஒருங்கிணைத்து, அண்டவெளி ஆய்வுக் கப்பல்களின் பயணத்தில் பங்கேற்றுச் சோதனை செய்தவர் கார்ல் சேகன்!

    அவர் கல்லூரியில் பயிலும் போது, அவரது உயிரியல் மூலச் சிந்தனைக் கிளரி விட்ட விஞ்ஞான மேதைகள், ஹெர்மன் முல்லர் [Hermann Muller], ஹெரால்டு யுரே [Herold Urey], ஜோஸுவா லெடெர்பர்க் [Joshua Lederberg] ஆகியோடுடன் ஆராய்ச்சி செய்து பயிற்சி பெற்றார். மூவரும் நோபெல் பரிசு பெற்றவர்கள்! மூவரும் விண்வெளி அண்டங்களில் உயிரின வாழ்வில் [Extra Terrestrial Life] நம்பிக்கை உள்ளவர்கள். கார்ல் சேகனின் குருவான ஹெர்மன் முல்லர் 1926 இல், ‘கதிர்வீச்சுகள் [Radiations] உயிரின மூலவி களைத் துண்டித்து [Gene Mutation], உயிரினத் தோற்ற பரிணாமத் திற்கு [Evolution] அடிப்படைக் காரணமாகின்றன ‘ என்று முதலில் அறிவித்தார்! அடுத்து பிரிட்டிஷ் உயிர் மூலவி விஞ்ஞானி ஜான் ஹால்டேன் [Genetist, John Haldane], ரஷ்ய உயிரியல் ரசாயன விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஓபரின் [Alexander Oparin] இருவரும், ‘புறவூதா ஒளி [Ultraviolet Light], மின்னல், பூமியின் ஏனைய சக்தி மூலங்கள் [Sources of Energy] எளிய ரசாயன மூலக்கூட்டுகளை [Simple Compounds] சிக்கலான ஆர்கானிக் மூலக்கூட்டுகளாக [Complex Organic Compounds] மாற்றுகின்றன ‘, என்று கண்டு பிடித்தார்கள்!

    Fig 8 Mariner Space Probe

    நாசா அண்டவெளிப் பயணங்களில் பங்கெடுத்த கார்ல் சேகன்.

    1960 ஆம் ஆண்டில் டாக்டர் கார்ல் சேகன் சந்திரனில் இறங்கும் அபொல்லோ [Lunar Landing, Apollo] திட்டத்திற்கும், சுடர் ஒளி வீசும் சுக்கிர கோளை ஆய்வு செய்யும் மாரினர் [Venus Probe, Mariner] திட்டத்திற்கும் பணி செய்ய அழைக்கப் பட்டார். கார்ல் சேகன் கலிஃபோர்னியா பொறியியல் கூடத்தின் [California Institute of Technology] ஜெட் உந்தப்படும் ஆய்வுச்சாலைக்கு [Jet Propulsion Laboratory] அடிக்கடி விஜயம் செய்யும் விஞ்ஞானி. 1961 இல் கார்ல் சேகனும், வில்லியம் கெல்லாக் [William Kellogg] இருவரும் ‘செவ்வாய், வெள்ளி அண்டங்களின் சூழ்வெளி ‘ [The Atmosphere of Mars & Venus] என்னும் வெளியீட்டின் தொகுப்பாளர் ஆகப் பணி செய்கையில், அவர்கள் அந்நூலில் குறிப்பிட்டது: ‘இதுவரைக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு முழுமையாகப் பார்த்தால் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதாக யூகிக்கலாம்! அதற்கு முதற் தேவை ஈரம், நீர் ஆவி [Moisture, Water Vapour] போன்றவை. ஒரு காலத்தில் செவ்வாய்த் தளம்மீது நீர் இருந்திருக்கலாம். நமக்குத் தெரிந்த குன்றிய அளவு சான்றில் நாம் அறிவது, நுண்ணிய ஜந்துகள் [Micro-Organisms] அங்கே இருக்கலாம் என்பதே! பெரும் ஜந்துக்கள், மாபெரும் விலங்கினங்கள் அங்கே உள்ளன என்பதற்கு ஆதரமோ அன்றி எதிர்ப்போ எதுவும் இல்லை! செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற பண்டை காலத்திய கேள்விக்குப் பதில் கிடைப்பது, அடுத்த பத்தாண்டுகளில்தான்! ‘

    Fig 9 Viking Mission to Mars

    அமெரிக்கா மனிதரற்ற அண்டவெளிக் கப்பல்களை சூரிய மண்டலத்தின் உட்கோள்களான வெள்ளி, செவ்வாய், புதன் ஆகியவற்றை முதலில் ஆராய மாரினர் [Mariner], வைக்கிங் [Viking], பயனீயர் [Pioneer] போன்ற விண்வெளி ஆய்வுச் சிமிழ்களை 1970-1980 ஆண்டுகளில் தொடர்ந்து ஏவியது. கார்ல் சேகன் தனது Ph.D. கோட்பாடிலே, வெள்ளி அண்டமானது ஓர் கண்ணாடி இல்லம்போல் [Greenhouse Effect] பரிதியின் வெப்பத்தை உள்ளே சுற்றிச் சுற்றிக் கொப்பரைபோல் [Boiler] கொதிக்கும் நரக கோளமாக [Hellish Planet] மாறி, எந்த வித உயிரினமும் தோன்றாதவாறு ஆகிவிட்டது என்று 1960 ஆம் ஆண்டிலே முடிவு செய்தவர்! ஆனால் செவ்வாய்க் கோளம் கொதிகலமாக இல்லாது, குளிர்ந்து அதன் மத்திய ரேகைப் பகுதிகளில் பகலில் [20 C/70 F] வெப்பமும், இரவில் [-100 C/-150 F] குளிர்ச்சியும் உள்ளதால், உயிரினங்கள் தோன்ற வாய்ப்பு இருக்கிறது, என்று அவரது அந்தராத்மா பல்லாண்டுகள் சொல்லிக் கொண்டிருந்தது!

    1960-1970 ஆண்டுகளின் இறுதிக் காலங்களில் கார்ல் சேகன், செவ்வாய்க் கோளின் பச்சைப் பழுப்புக் கால நிற மாறுதல்கள், உயிரினங்கள் உள்ளதையோ அல்லது தாவர வளர்ச்சி இருப்பதையோ காட்டவில்லை என்றார்! செவ்வாய்க் கோளில் தெரியும் பழுப்புக் கறுப்பு நிறங்கள் அதன் மலைப் பிரதேசங்களைக் காட்டுகின்றன. கடும் புயல் காற்றுகள் அடிப்பதால், செவ்வாய்த் தளத்தின் தூசிகள் இங்கும் அங்கும் பரவிப் பள்ளங்களை நிரப்பி, நிறம் மாறுவது போல் தெரிகிறது என்று விளக்கினார்! மாரினர்-9 செவ்வாய்க் கோளை 1971 இல் சுற்றிய போது, கார்ல் சேகனின் கூற்று மெய்யாக நிரூபிக்கப் பட்டது. 1965 இல் முதலில் சுற்றிய மாரினர்-4, பின்னால் சென்ற மாரினர்-6,7 ஆகியவைச் செவ்வாய்க் கோளின் தள விபரங்களை விளக்கமாகக் காண முடியவில்லை!

    Fig 10 Sagan with Viking Lander Model

    சந்திரனில் தோன்றுவது போல் மாபெரும் தடக் குழிகளைப் [Impact Craters] படம் எடுத்தனுப்பின! செவ்வாய் சூழ்மண்டலத்தில் வெறும் கரிவாயு [Carbon Dioxide] நலிந்த அளவில் நூறில் ஒரு பங்கு பூவாயு அழுத்தத்தில் இருப்பதைக் கண்டு பிடித்தன! 1971 இல் செவ்வாய்க் கோளை ஏறக்குறைய ஓராண்டு காலம் சுற்றிய மாரினர்-9 நிறைய விபரங்களை அனுப்பியது. 400 மைல் அகண்ட, 15 மைல் உயர்ந்த, சூரிய குடும்பத்திலே பெரிய ஓர் எரிமலையைக் கண்டது! அது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எரிந்து, ஆறுகளாய் கக்கிய எரிமலைக் குழம்பு [Lava] நிரம்பிய 950 மைல் அகண்ட தடக் குழியைக் கண்டது! 2800 மைல் நீண்ட பள்ளத்தாக்கைக் [Valley] கண்டது!

    முக்கியமான காட்சி, கண்டு பிடிப்பு இதுதான், செவ்வாயில் வற்றிக் காய்ந்து போன நதிகள் நெளிந்து நாட்டியம் ஆடிய பாதங்களின் தடங்கள்! செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் நீர் ஆறுகள் ஓடிக் காலநிலை வேறுபட்டால் காய்ந்து கருகிப் போனக் கதையைச் சொல்லும் காலச் சுவடுகள்! ஒரு காலத்தில் எரிமலைப் பொழிவு களில் பலவித வாயுக்களும், நீராவியும் எழுந்து, செவ்வாய் மண்டலச் சூழ்நிலை அடர்த்தியாகி, தட்ப வெப்ப நிலைகள், காற்றழுத்தம் சீராக அமைந்து, அளவற்ற நீராறுகள் ஓடிக் கடலாகியதை, யூகித்துக் கொள்ள உதவியது அக் கண்டு பிடிப்பு! ஆனால் அக்கடல் நீரைச் செவ்வாய்ப் பாலை நிலம் உரிஞ்சிக் குடித்திருக்கலாம்! அல்லது செவ்வாயில் அடர்ந்த வாயுச் சூழகம் மெலிந்து, அதன் நலிந்த ஈர்ப்பியல் சக்தியால் கவர்ந்து வைத்துக் கொள்ள இயலாது, பரிதியின் வெப்பாத்தால் ஆவியான நீர், பறந்து அண்ட வெளியில் மறைந்து போயிருக்கலாம்! அதன் பின் கால ஓட்டத்தில், துருவங்களில் சிக்கிய நீரும், கரிவாயும் [CO2] குளிர்ந்து தணிக்கட்டியாக [Dry Ice] [பனிக்கட்டி], உறைந்து பாறையாகி இறுகி விட்டது! ஆனால் உயிரினங்கள் தோன்றி யதற்குச் சான்று எதுவும் கிடைக்க வில்லை! நீர்த் திரவம் ஓடியதற்கு உள்ள சான்றுகளை வைத்து, உயிர் ஜந்துக்கள் செவ்வாயில் இருந்திருக்கலாம் என்று நம்பிக்கை கொண்டாலும், விந்தையான செவ்வாய் மனிதர்களோ, அல்லது செவ்வாய் விலங்குகளோ அங்கே காணப்பட வில்லை! அவற்றைக் கண்டு பிடிக்க செவ்வாய்த் தளத்தில் இறங்கி ஆய்வுகள் செய்ய வைக்கிங்-1, வைக்கிங்-2 இரண்டு ஆய்வுச் சிமிழ்கள் 1975 இல் பின்னால் அனுப்பப் பட்டன!

    Fig 11 Viking Space Probe Details

    இரட்டை வைக்கிங் திட்டம் அரை டிரில்லியன் [Half Trillion] டாலர் செலவில் செவ்வாய்க் கோளில் போய் இறங்க உருவானது. நூற்றுக் கணக்கான விஞ்ஞானப், பொறியியல் துறைஞர்களில் கார்ல் சேகன் ஒருவர்! அவரது விஞ்ஞானக் குரு நோபெல் பரிசு பெற்ற ஹெரால்டு யுரே, ஜோஸுவா லெடெர்பெர்க் இருவரும் அதில் பணி செய்தனர். கார்ல் சேகன் வைக்கிங்-1, வைக்கிங்-2 விண்ணாய்வுச் சிமிழ்கள் [Viking-1, Viking-2 Space Probes], செவ்வாய்த் தளத்தில் போய் இறங்கும் இடங்கள் ஆறைத் தேர்ந்தெடுத்தார். அவை இரண்டும் செவ்வாயில் 1976 இல் இறங்கிக் கண்டவை என்ன ? செவ்வாய்க் கோள் பெரும் குழிகளும், ஆறிப் போன எரிமலைகளும் இடைப்பட்டு பாறைகள் நிறைந்த ஒரு பாலைப் புழுதி நிலம்! அவற்றின் மேல் பழுப்பு நிறத்தில் தூசிகள் மண்டிய வானம்! இரும்பு வாயுவில் உள்ள ஆக்ஸிஜனோடு கலந்து செந்நிற ஆக்ஸைடாகி, அங்கெங்கு எனாதபடி எங்கும் சிவப்பு நிறம்! வைக்கிங் கொண்டு சென்ற உயிரியல் ஆய்வுக்கூடம் [Biology Laboratory], செவ்வாய் மண்ணைத் தோண்டி, அதில் எந்த வித நுண்ணுயிர் ஜந்தும் [Micro organism] தோன்றுமா என்று மூன்று வித முறைகளில் ஆய்ந்தது! விளைவு தோல்வியே! அடுத்த சோதனை, செவ்வாயில் செத்துப் போன ஜந்துக்கள் அல்லது உயிரோடுள்ள ஜந்துக்கள் ஆகியவற்றின் ரசாயனச் சான்றாக, அவ்வுடம்புகளின் மூலக்கூறுகளை [Molecules of Organisms, Alive or Dead] மண்ணில் ஆய்வு செய்தது! அதன் விளைவும் எதிர்மறையே! அந்த ஆராய்ச்சிகளைத் திட்ட மிட்டவர் கார் சேகன்! அம்முயற்சிகளில் தோல்வி யுற்றாலும் முயற்சி செய்தோம் என்று மகிழ்ச்சி அடைந்தார், கார்ல் சேகன்!

    Fig 12 Viking Water Probe on Mars

    செவ்வாய் மண்டலத்தில் வாயு மண்டல அழுத்தம் மிக மெலிந்தது! ஊடுறுவும் பரிதியின் கடும் புறவூதாக் கதிர்வீச்சு [Ultraviolet Radiation] மரணம் விளைவிக்கக் கூடிய அளவு வீரிய முள்ளது! பல விதத் தோற்றத்தில் சந்திரனை ஒத்த செவ்வாய்க் கோளில் கால்வைக்கும் எதிர்கால மனிதர், அடித்தளத்திற்குக் கீழேதான் வாழ வேண்டிய திருக்கும்! கதிர்வீச்சுத் தாக்குதல், விண்கற்களின் வீழ்ச்சி, 200 மைல் வேகத்தில் அடிக்கும் தூசிப் புயல் ஆகியவற்ற லிருந்து மனிதன் தப்பிப் பிழைக்க வேண்டு மென்றால் அதைத் தவிர வேறு வழி யில்லை!

    அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகைமூட்டக்குளிர்ச்சி!

    கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்ப்பவர்! 1980 ஆண்டுகளில் ‘அணுக்கருக் குளிர்காலம் ‘ [Nuclear Winter] என்னும் புதிய ‘அணு ஆயுதப் பொழிவு ‘ எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், கார்ல் சேகன்!

    அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்நிலையைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப் படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று ஆரவாரம் செய்தார்!

    அணு ஆயுதக் குளிர்காலம் வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார்! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்கால கொள்கையை ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்!

    விஞ்ஞான உலகில் கார்ல் சேகன் பெற்ற வெகுமதிகள்

    கார்ல் சேகன் உயிரியல், மனிதவியல், பரிணாமம் ஆகிய விஞ்ஞானத் துறைகளில் முன்னோடி ஆராய்ச்சிகள் செய்தவர். விண்வெளி வரலாற்றை ஆழ்ந்து பயின்று, பூமியின் மூலத் தோற்றம், மனித இனத்தின் ஆரம்ப வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி 600 மேற்பட்ட விஞ்ஞான வெளியீடுகளை பிரசுரம் செய்துள்ளார். விஞ்ஞான நூல்கள் இருபதுக்கும் மேற்பட்டுத் தனியாகவோ, அல்லது கூட்டாளியாகவோ அவற்றை இயற்றி யுள்ளார்! அவர் அமெரிக்க வானியல் குழுவகத்தின் [American Astronomical Society] அதிபராகவும், அமெரிக்க பூபெளதிகக் கூட்டகத்தின் [American Geophysical Union] அண்டவெளித் துறைப் பகுதிக்குத் தலைவராகவும் பணியாற்றினார். அவர் உலகின் விண்வெளி வேட்கையாளர் 100,000 நபர்கள் உறுப்பினராய் இணைந்த, அண்டவெளிக் குழுவகத்தின் [The Planetary Society] அதிபராக இருந்தார்.

    கார்ல் சேகன், நாசாவின் [NASA] அண்ட வெளிப் பயணப் பணிகளில் முதல்வராய் முன்னின்று புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களின் [Inner Planets] ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking] திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றியவர். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய புறக்கோள்கள் ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் வாயேஜர் 1 &2 [Voyager-1 & 2] ஆகிய திட்டங்களின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தா. அவரது ஒப்பற்ற அரிய விஞ்ஞானப் பணிகளுக்கு, மூன்று முறை நாசாவின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அடுத்து அகில நாட்டு விண்வெளித் துறை, காலபெர்ட் பரிசு [International Astronautics Prize, Galabert], ஜான் எஃப் கென்னடியின் அண்டவெளிப் பணிப் பரிசு ஆகியவையும் அவருக்கு அளிக்கப்பட்டன.

    பிரபஞ்சம் [Cosmos] பற்றி கார்ல் சேகன் எழுதிப் பேராதரவு பெற்ற நூலை தொலைக் காட்சித் திரைப் படமாக எடுத்து, 250 மில்லியனுக்கு மேற்பட்ட உலக மக்கள் கண்டு களித்தனர். அதற்கு எம்மியின் பரிசும் [Emmy Award] கிடைத்தது. சிறந்த அந்தப் புத்தகத்திற்காக அவர் புலிட்ஸர் பரிசும் [Pulitzer Prize] பெற்றார். அவரது நூலான ‘டிராகன்ஸ் ஆஃப் ஈடன் ‘ [Dragons of Eden] 200,000 பிரதிகள் விற்பனையாகி அவரது எழுத்துத் திறமை பாராட்டப் பட்டது! மேலும் அமெரிக்கப் பெளதிகக் குழுவகத்தின் [American Physical Society], அணுவியல் விஞ்ஞானி லியோ ஸிலார்டு நினைவுப் பரிசும் [Leo Szilard Award] கார்ல் சேகனுக்கு அளிக்கப் பட்டது. அவர் எழுதிய ‘தொடர்பு ‘ [Contact] என்னும் விஞ்ஞானப் புதினம் திரைப்படமாக 1997 இல் எடுக்கப் பட்டது! 1986 இல் கார்ல் சேகன், அவரது மனைவி ஆன் டுருயன் [Ann Druyan] இருவரும் இணைந்து எழுதிய நூல், ‘வால்மீன் ‘ [Comet], கார்ல் சேகன் தனியாக எழுதிய ‘பிரபஞ்சம் ‘ [Cosmos] இரண்டும் மிகச் சிறந்த விஞ்ஞானப் படைப்புக்கள்.

    கடும் நோயில் விஞ்ஞான மேதை கார்ல் சேகன் மரணம்.

    விண்வெளி மேதை கார்ல் சேகன் தனது 62 ஆவது வயதில், 1996 டிசம்பர் 20 ஆம் தேதி ஸியாட்டல், வாஷிங்டனில் [Seattle, Washington State] ஹட்சின்ஸன் புற்று நோய் ஆய்வு மருத்துவக் கூடத்தில்[Hutchinson Cancer Research Center] கடும் இரத்த நோயில் இரண்டு ஆண்டுகள் போராடிக் காப்பாற்ற முடியாமல் காலமானார். அங்கே அவருக்கு அவரது அருமைத் தங்கை கேரியின் [Cari Sagan Greene] போன் மாரோ 1995 இல் உடல் மாற்றம் [Bone Morrow Transplant] செய்யப் பட்டது! அவரைத் தாக்கிய நோய் பயங்கர மானது! [A form of Anemia, called Pre-leukemia or Myelodysplasia Syndrome, MDS]. அந் நோயை 1994 இல் கண்டு பிடித்தவுடன், கார்ல் சேகன் ஆறு மாதத்திற்குள் காலமாகி விடுவார் என்று டாக்டர்கள் யாவருக்கும் கவலையை உண்டாக்கினர்!

    கார்ல் சேகன் நண்பர்களுக்கு உயிர் நண்பர். அவருடன் வைக்கிங் விண்வெளிப் பணியில் கூட்டுழைத்த பூவியல் நிபுணர் உல்ஃப் விஷ்னியாக் [Geologist, Wolf Vishniac] திட்டப் பணிக்காக தென் துருவ அண்டார்டிக்காவுக்குச் சென்று ஆராய்ச்சியின் போது 500 அடிப் பாதாளத்தில் விழுந்து உயிரிழந்தார்! துக்கம் தாங்காமல், அவரது நினைவாக வைக்கிங் திட்டத்தின் போது, ‘விஷ்னியாக் ‘ பெயரை செவ்வாய்த் தளத்தின் ஒரு பகுதிக்கு நிரந்தரமாக வைத்தார்!

    கார்ல் சேகன் மரணத்தைப் பற்றி கார்நெல் பல்கலைக் கழக வானியல் துறையின் அதிபதி ஏர்வந்த் டெர்ஸியன் [Yervant Terzian] கூறியது:- ‘இருளில் ஏற்றி வைத்த ஓர் எரியும் மெழுகு வர்த்தி, கார்ல் சேகன்! பலரது மனதைத் தொட்டுத் ‘தான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம் ‘ என்று விஞ்ஞான உலகில் பலருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்! பல்துறை வல்லுநரான கார்ல் சேகன், பாரில் பல இனத்தவரைக் கவர்ந்து பலருக்கு நண்பர் ஆனார்! நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப்பு, அதனைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது, பலருக்குப் புகட்டி அவரது கண்களைத் திறப்பது இவைதான் கார்ல் சேகனின் சிறப்புக் குணப் பாடுகள்! அவரது அகால மரணம் கார்நெல் பல்கலைக் கழக நண்பர்களுக்கும், உலக நபர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பெரும் இழப்பாகும்! எல்லாவற்றுக்கும் மேலாக அவர் விட்டுச் சென்ற அவரது அன்பு மனைவி ஆன் டுருயன், அவரது அருமைத் தங்கை கேரி கிரீன், ஐந்து பிள்ளைகள், ஒரு பேரப் பிள்ளை ஆகியோரின் இழப்புக்கு இணையாகச் சொல்லத் தமிழில் எந்தச் சொற்களும் இல்லை! பூமியைச் சுற்றிவரும் பெரும் விண்கல் [Astroid] ஒன்றுக்குச் ‘சேகன் ‘ என்று பெயரிடப் பட்டுள்ளது!

    ஆதாரங்கள்:-

    1. Carl Sagan By: William Poundstone [1999]

    2. Cosmos By: Carl Sagan [1980]

    3. Comets By: Carl Sagan & Ann Druyan Sagan [1985]

    4. Planet Guides ‘Mars ‘ By: Duncan Brewer [1993]

    5. Frontiers of Science By: National Geographic Society [1982]

    6. Book of the Universe By: Ian Ridpath [1991]

    7. Carl Sagan Wikipedia (http://en.wikipedia.org/wiki/Carl_Sagan)  (January 8, 2010)

    ************

    Share
  • ப்ரதிலிபி & அகம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி!

    சங்கரநாராயணன்

    8414f81e-aa21-4950-92b6-c0db95ffb9d1

    வணக்கம்.

    தமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். அதற்கான அறிவிப்பை வல்லமை தளத்தில் வெளியிட்டால் மேலும் பலருக்கு அதுபற்றி தெரிய வரும். வாய்ப்பிருந்தால் வெளியிடவும். நன்றி.

    ப்ரதிலிபி எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும், தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே எங்களின் நோக்கம்.
    மேலதிக விவரங்களுக்கு – www.pratilipi.com

    அகம் மின்னிதழ் , அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த எழுத்தாளர்களில் நல்ல படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப் படுத்தி வருகிறது.

    போட்டி விபரங்கள் :

    அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – பதில் காண முயல்வோம்.

    ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

    ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

    உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

    ஊ) கட்டுரைகளை tamil@pratilipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    எ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.

    போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். பரிசு வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    தொடர்புக்கு: சங்கரநாராயணன் – 09789316700; பாலாஜி – 09940288001.

    நன்றி.

    Share
  • பசு வழிபாடு

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    திருக்கோயில்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

    சைவ சமயத்தவர்களாகிய நாம் பசுக்களை வழிபடுகிறோம். நாளாந்தம் வழிபடுகிறோம். எனினும் தைப்பொங்கலுக்கு அடுத்த நாளான பட்டிப் பொங்கல் நாளே சிறப்பாகப் பசுக்களின் திரு நாள். சைவ சமயத்தவருக்கு மட்டுமான விழா நாள், திரு நாள்.

    திருக்கோயில்களில் ஆண்டுக்கு ஒரு நாளில் அடியார்கள் சார்பில் பசுக்களை வழிபட்டு, போற்றி, வாழ்த்தும் வழமை ஈழத்தில் இல்லை. திருக்கோயில்களில் நமதில்லப் பசுக்களை அழைத்துச் சென்று பூசை செய்வோம். போற்றுவோம், வழிபடுவோம். ஒரே நாளில் அனைத்துத் திருக்கோயில்களிலும் பசுக்களை வழிபடுவோம்,.

    பட்டிப் பொங்கல் நாளான தை, 2 (16.01.2016) சனிக்கிழமை நண்பகல் பசுக்களை நீராட்டுவோம். நீறிடுவோம். சந்தணப் பொட்டிடுவோம். குங்குமம் அணிவிப்போம். பசுக்களின் கழுத்தில் பூமாலை சூட்டித் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்வோம். தூபம், தீபம் காட்டுவோம். மலர் தூவுவோம். தெய்வமாக எண்ணி வழிபடுவோம். திருக்கோயிலில் கஞ்சியும் பழங்களும் கொடுப்போம்.

    மாலை நம் இல்லங்கள்தோறும் வழமைபோல் பசுக் கொட்டிலைத் தூய்மையாக்கிக் கோலமிட்டு, வாழை தோரணம் கட்டி, பட்டிப் பொங்கல் பொங்குவோம், பசுக்களுக்குப் படைப்போம். வழிபடுவோம்.

    பசுக்களை வதைப்போர் சைவ சமயத்தை மதிக்காதவரே. பசுக்களைத் துன்புறுத்துவோர் சைவ நெறியை ஏற்காதவரே. பசுக்கள் மீது கொடுமை இழைப்போர் சைவ சமய நெறிகளை அறியாதவரே.

    பசுக்களை வழிபாட்டுக்குரியதாகக் கருதினார் ஞானப்பிரகாசர். பசுக்களுக்குக் கொடுமை விளைவிப்பதை ஏற்காத அவர் ஒல்லாந்த அரசின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்கத் தமிழகம் சென்றார், சிதம்பரத்திலே தங்கினார்.

    நம் பாரம்பரியம் இதுவே. நம் வழமை இதுவே. நம் மரபு இதுவே. பாரம்பரியத்தைப் பேண, வழமைகளைத் தொடர, மரபுகளைக் கடைப்பிடிக்க, திருக்கோயில்களில் பசுக்களை வழிபடுவோம். ஈழத்திலும் ஈழத்தவர் பரந்து வாழும் உலக நாடுகளிலும் உள்ள அனைத்துத் திருக்கோயில்களிலும் தை 2 (16.01.2016) காலைமுதலாகப் நீராட்டிய பசுக்களைக் கொணர்ந்து, போற்றுவோம் வழிபடுவோம், சிறப்பிப்போம். ஆண்டுதோறும் இந்த வழமையைத் தொடர்வோம். அனைத்துத் திருக்கோயிலாரையும் அன்பாக வேண்டுகிறோம்.

    1. தலைவர், சைவ மகா சபை

    2. தலைவர், சைவ வித்தியா விருத்திச் சங்கம்.

    3. துறைத் தலைவர், இந்து நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

    4. தலைவர், இந்து சமயப் பேரவை

    5. தலைவர், சைவ பரிபாலன சபை

    6. தருமை ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம் தவத்திரு குருமகாசந்நிதானங்கள், திருப்பனந்தாள் காசிமடம் தவத்திரு எசமானன் வாழ்த்துகளுடன்

    Share