மார்கழி மணாளன் – 28 திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள்

0

க. பாலசுப்பிரமணியன்

 8a79f235-b849-4a74-9630-8b24b0d4ae02

புல்லருடன் கன்வரும் வளர்த்திட்டார் வேள்வித்தீ

புவியினிலே என்றும் பரந்தாமன் அருள் வேண்டி !

அரசமரமாய் உருவெடுத்து அவன் அருள்தந்தான்

அன்புடனே உருமாறி ஆனான் ஆதி ஜெகந்நாதன் !

 

ஊழ்வினையில் உருண்டுவந்த பாவம் நீக்கி

ஊர்போற்றும் வம்சத்தை வளர்த்திட வேண்டி

தலைநாகர் சிலையொன்று முன் நிறுத்தி

தவமிருக்க தயரதனும் வந்தான் திருப்புல்லாணி !

 

ஊர்போற்றும் பிள்ளைகள் பெற்றான் தயரதனும்

வான்போற்றும் வண்ணம் அருளியதே புல்லாணி !

நாள்தோறும் தேடிவரும் நன் மக்கள் குறைதீர்க்கும்

அற்புதமே ! ஆழ்வார்கள் போற்றிய திருத்தலமே !

 

சூதுகொண்டு பண்பிழந்த சூர்ப்பனகையின் தமையன்

சாதுவாக உருக்கொண்டு சத்தியத்தின் வேரழித்தான் !

குலமகளைக் கடத்திச் சென்று கொக்கரித்த இராவணனின்

குலமழிக்கக் கடலோரம் புடைசூழ வந்தான் காகுந்தனும் !

 

தவத்தோர் விழைகின்ற தயரதனின் மைந்தனும்

தர்பையிலே உடல் கிடத்தித் தவமிருந்தான் !

குரங்கோடு அணிலும் கூடியொரு பாலமமைக்க

குவலயமே வியந்திட்ட கோவில் புல்லாணி !

 

ஆணவம் அழித்தே வருணனை வென்றான்

அரங்கனின் அருளுடன் வில்லும் பெற்றான்

அரக்கனின்  தம்பிக்கு அடைக்கலம் தந்தான்

அன்புடை நெஞ்சுக்கு அருள்தரும் புல்லாணி !

 

கண்மூடும் சொல்லிரண்டில் உனைச் சேர்க்க,

கண்ணிரண்டில் நீ நிற்கச்  சொல் உறங்கும் !

காட்சிக்கும் சொல்லுக்கும் ஏன் கண்ணாமூச்சி?

காதலுற்றேன் ! கருணை செய்வாய்!  கற்பகமே!

 

மண்ணுலகில் உன்னழகு மனம் கவரும்

விண்ணுலகில் உன்னழகு என்ன சொல்லும் ?

மண்ணுலகும் விண்ணுலகும் மயங்கிவிடும்

மாதவனே! மலைத்தேனே ! மனம் நிறைவாய் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *