இணையத்தில் தொற்றுநோய் – 2
— தேமொழி.
உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஏன் இணையத்தின் சமூகவலைத்தளங்கள் மூலம் வெகு வேகமாகப் பரவுகிறது? சுலபமாக ஒரு இணையத் தேடல் செய்து உண்மையைக் கண்டுபிடிக்கும் வழியிருக்கும் பொழுதும், மக்கள் எதனால் அதைச் செய்யாமல் பொய்யான வதந்திகளை நம்புகிறார்கள்? எதனால் அவற்றைத் தம்முள் பகிர்ந்து மேலும் மேலும் பரப்புகிறார்கள்? ஏன் பிழைகளைச் சரி செய்ய முயலுவதில்லை? ஏன்? ஏன்? ஏன்? என்று நம்மைக் குழப்பும் இந்த ஏன் கேள்விகளுக்கு உளவியல் அடிப்படையில் விளக்கம் கொடுக்க முற்படுகிறது சமீபத்தில் (ஜனவரி 4, 2016) வெளியான ஆய்வறிக்கை ஒன்று.
ஃபேஸ்புக் பயனர்களிடம் நடத்திய இந்த ஆய்வு கூறும் முடிவு; மக்கள் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் சார்பு நிலை காரணமாக, தங்கள் நம்பிக்கைகளை உறுதி செய்யும் தகவல் கிடைத்தால், உடனே தங்களுக்கு கிடைக்கும் அந்தச் செய்தியையே நம்ப விரும்புகிறார்கள். அதனைப் பற்றி மேலும் ஆராய்ந்து அது உண்மைதானா எனத் தெரிந்து கொள்ளும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவதில்லை. மேலும் அதற்கு மாறான தகவல் கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிடுவார்கள் என்கிறது. இவ்வாறு தனது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில் கொண்டிருக்கும் சார்புநிலையானது ஆங்கிலத்தில் confirmation bias எனக் குறிப்பிடப்படுகிறது.
மக்களிடையே காணப்படும் தனது நம்பிக்கையினைப் பரப்பும் இந்த மனநிலையின் காரணமாக இணையத்தில் தங்கள் எண்ணங்களை எதிரொலிக்கும் குழுக்கள் உருவாகிறது. இக்குழுக்கள் echo chambers என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு குழுக்களாகப் பிரியும் மனப்பான்மை எந்தச் சமூக வலைத்தளமாக இருந்தாலும், டிவிட்டர், கூகிள் குழுமம், யாஹூ குழுமம் என எந்தச் சமூக வலைத்தளத்திலும் “அவர்கள், நாங்கள்” என்ற குழுக்களாக மக்களை அணிபிரியச் செய்யும். இந்த எதிரொலிக்கும் குழுக்கள் உருவாவது குறிப்பிட்ட கருத்துகளுக்குத்தான் என்ற வரையறையும் கிடையாது. தாங்கள் நம்பும் நம்பிக்கைக்கு மாறான கருத்து தோன்றினால், அதனைச் சகிக்க இயலாது மக்கள் குழுக்களாகப் பிரிவர். நம் இந்தியாவைப் பொறுத்தவரை கட்சிகள், மதங்கள், சாதிகள், தனிநாடு கோரிக்கை, கடவுள் நம்பிக்கை, ஆட்சி மொழிகள் என விவாதக் கருத்துகளுக்கும் பஞ்சமில்லை.
‘மிசெல்லா டெல் விகாரியோ’ என்ற இத்தாலிய கணினி சமூக அறிவியலாளர் (Michela Del Vicario of Italy’s Laboratory of Computational Social Science) ஃபேஸ்புக் பயனர்களிடம் 2010 முதல் 2014 வரை நடத்திய ஒரு ஆய்வின் நோக்கம், மக்கள் தாங்கள் விரும்பாத கருத்தை எதிர்கொள்ள முன் வருகிறார்களா? அல்லது தங்களுக்குள் குழுவாகப் பிரிந்து கொள்கிறார்களா? என்று அறிவதாகும்.
ஐந்தாண்டுகளாகத் தரவுகளை சேகரிக்க 32 பொதுவான வலைத்தளங்கள், 35 அறிவியல் செய்திகள் தரும் வலைத்தளங்கள், ஆய்விற்காக வேண்டுமென்றே பொய்யான தகவலைப் பரப்ப உருவாக்கப்பட்ட 2 சோதனை போலி வலைத்தளங்கள் என மொத்தம் 69 வலைத்தளங்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக இருவகைக் குழுக்கள் இருப்பது தெரிய வந்தது. ஒரு பிரிவினர் conspiracy theories என்று கூறப்படும் ‘சதிச்செயல் கோட்பாடு’களை நம்புபவர்கள். இவர்கள் ஒசாமா மீது தாக்குதல் நடத்தி கொன்றதாகக் கூறுவது பொய், வேற்றுக்கிரக மனிதர்கள் இருப்பதை அரசாங்கங்கள் மறைக்கின்றன, செப்டெம்பர் 11 நிகழ்வு அமெரிக்க இராணுவமே நடத்திய தாக்குதல் போன்ற சதிச்செயல் கோட்பாடுகளை நம்பும் வகையினரைப் போன்றவர்கள். மற்ற பிரிவு ஆராய்ந்து, அறிவியல் சான்றுகளை எடுத்துக் கூறி, உண்மை என்னவென்று விளக்க முற்படுபவர்கள் (Debunking campaigns). இந்த இருவகையினரும் ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து பற்பல குழுக்களாக இணையத்தில் இருக்கிறார்கள். இவர்கள் தகவல்களை பரப்புவதிலும் வேறுபாடுகள் இல்லை.
பொதுவாக, இந்த ஆய்வில், பயனர்கள் தாங்கள் ஒப்புக்கொள்ளும் செய்திகளை பரப்புவதும், தங்களால் ஒப்புக் கொள்ள முடியாத செய்திகளைப் புறக்கணிப்பதும் தெரிந்தது. தான் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதி செய்யும் செய்திகளை விரும்பி அதனை மட்டும் பரப்புவதில் முனைகிறார்கள். ஃபேஸ்புக் பயனர்களில் எதிரெதிர் சிந்தனை கொண்டவர்கள், தங்களுக்குள் ஒத்த கருத்துடைய குழுக்களாக (homogeneous, polarized cluster) அமைந்துள்ளதால் தங்களுக்குள் தங்களுக்குப் பிடித்த செய்திகளை விரைவில் பரப்ப முடிகிறது. ஆதாரமற்று இருந்தாலும் வதந்திகள் ஒரு சில மணி நேரங்களுக்குள் இவர்கள் மூலம் அதிவிரைவில் பரவுகின்றன.
குழுக்களின் மனநிலை, ஒருவர் குழுவாக இயங்கத் தொடங்கும் பொழுது தனது நம்பிக்கையில் மிகவும் தீவிரமடைவார். அந்த நம்பிக்கையை வளர்க்கத் தன்னை அர்ப்பணிக்கும் மனப்பான்மையும் அவரிடம் உருவாகும். குழுவில் பிறரும் தனது நம்பிக்கையைப் போலவே நம்பிக்கை கொண்டவர்கள், தனது நம்பிக்கையை ஒப்புக் கொள்கிறார்கள் என்றவுடன் அவருக்குத் தான் கொண்ட கருத்தின் மீது அதிக நம்பிக்கை உருவாகும், அதில் தீவிரமடைவார்கள். இது குழுவாக இயங்கத் தொடங்கும் பொழுது ஒருவர் கொள்ளும் மனநிலை.
நாட்டின் பொருளாதாரக் கொள்கை, அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் தான் கொண்டிருக்கும் தனது கருத்து நையாண்டிக்குள்ளாகுமோ என முதலில் அமைதி காக்கும் ஒருவர், தன்னையொத்த கருத்துடையவர் தனது நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் பேசியவுடன் தனது கருத்து வலிமையடைந்ததாகத் தன்னம்பிக்கை கொண்டு விவாதக் களத்தில் குதித்துவிடுவார். மற்றவரும் அவரை ஆதரித்தால் அவருக்குத் தான் கொண்ட நம்பிக்கையில் சார்புநிலை அதிகமாகும்.
இந்தக் குழு மனநிலை அடிப்படையில்தான், சமூகத்தளங்களில் தாம் விரும்பும் கருத்துகளை இக்குழுக்கள் விரைவாக தங்களுக்குள் பரவவிடுகின்றன. தங்கள் நம்பிக்கைக்கு மாறாக உண்மை வெளிப்பட்டாலும் அதைப் புறக்கணித்து தங்கள் நம்பிக்கைக்கு வலு சேர்க்க முயல்கிறார்கள். இவ்வாறாக உண்மையைப் புறக்கணிக்கும், அதை எதிர்கொள்ளாது தவிர்க்கும் மனநிலையே வதந்திகள் பரவுவதன் அடிப்படை.
தளங்களில் கிடைக்கும் செய்திகளின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் செய்திகளை வகைப்படுத்தி உண்மையும், நம்பகத்தன்மையும் கொண்ட செய்திகளை முன்னிறுத்தச் சமூக வலைத்தளங்களும் தங்களால் இயன்ற வகையில் முயன்றுவருகின்றன. பொய்யான தகவல் என்றால் அதைத் தளங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது வதந்திகளைக் குறைக்கும் என்பது ஒரு அவர்களின் எதிர்பார்ப்பு.
___________________________________________
கட்டுரைக்கு உதவிய ஆய்வறிக்கைகள்:
The spreading of misinformation online
PNAS 2016 : 1517441113v1-201517441.
Del Vicario et al., PNAS January 4, 2016
http://www.pnas.org/content/early/2016/01/02/1517441113
Debunking in a World of Tribes
arXiv:1510.04267v1 [cs.CY]
Fabiana Zollo et al.,Submitted on 14 Oct 2015
http://arxiv.org/pdf/1510.04267v1.pdf
படம் உதவி: விக்கிபீடியா