செய்திகள்

பசு வழிபாடு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருக்கோயில்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

சைவ சமயத்தவர்களாகிய நாம் பசுக்களை வழிபடுகிறோம். நாளாந்தம் வழிபடுகிறோம். எனினும் தைப்பொங்கலுக்கு அடுத்த நாளான பட்டிப் பொங்கல் நாளே சிறப்பாகப் பசுக்களின் திரு நாள். சைவ சமயத்தவருக்கு மட்டுமான விழா நாள், திரு நாள்.

திருக்கோயில்களில் ஆண்டுக்கு ஒரு நாளில் அடியார்கள் சார்பில் பசுக்களை வழிபட்டு, போற்றி, வாழ்த்தும் வழமை ஈழத்தில் இல்லை. திருக்கோயில்களில் நமதில்லப் பசுக்களை அழைத்துச் சென்று பூசை செய்வோம். போற்றுவோம், வழிபடுவோம். ஒரே நாளில் அனைத்துத் திருக்கோயில்களிலும் பசுக்களை வழிபடுவோம்,.

பட்டிப் பொங்கல் நாளான தை, 2 (16.01.2016) சனிக்கிழமை நண்பகல் பசுக்களை நீராட்டுவோம். நீறிடுவோம். சந்தணப் பொட்டிடுவோம். குங்குமம் அணிவிப்போம். பசுக்களின் கழுத்தில் பூமாலை சூட்டித் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்வோம். தூபம், தீபம் காட்டுவோம். மலர் தூவுவோம். தெய்வமாக எண்ணி வழிபடுவோம். திருக்கோயிலில் கஞ்சியும் பழங்களும் கொடுப்போம்.

மாலை நம் இல்லங்கள்தோறும் வழமைபோல் பசுக் கொட்டிலைத் தூய்மையாக்கிக் கோலமிட்டு, வாழை தோரணம் கட்டி, பட்டிப் பொங்கல் பொங்குவோம், பசுக்களுக்குப் படைப்போம். வழிபடுவோம்.

பசுக்களை வதைப்போர் சைவ சமயத்தை மதிக்காதவரே. பசுக்களைத் துன்புறுத்துவோர் சைவ நெறியை ஏற்காதவரே. பசுக்கள் மீது கொடுமை இழைப்போர் சைவ சமய நெறிகளை அறியாதவரே.

பசுக்களை வழிபாட்டுக்குரியதாகக் கருதினார் ஞானப்பிரகாசர். பசுக்களுக்குக் கொடுமை விளைவிப்பதை ஏற்காத அவர் ஒல்லாந்த அரசின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்கத் தமிழகம் சென்றார், சிதம்பரத்திலே தங்கினார்.

நம் பாரம்பரியம் இதுவே. நம் வழமை இதுவே. நம் மரபு இதுவே. பாரம்பரியத்தைப் பேண, வழமைகளைத் தொடர, மரபுகளைக் கடைப்பிடிக்க, திருக்கோயில்களில் பசுக்களை வழிபடுவோம். ஈழத்திலும் ஈழத்தவர் பரந்து வாழும் உலக நாடுகளிலும் உள்ள அனைத்துத் திருக்கோயில்களிலும் தை 2 (16.01.2016) காலைமுதலாகப் நீராட்டிய பசுக்களைக் கொணர்ந்து, போற்றுவோம் வழிபடுவோம், சிறப்பிப்போம். ஆண்டுதோறும் இந்த வழமையைத் தொடர்வோம். அனைத்துத் திருக்கோயிலாரையும் அன்பாக வேண்டுகிறோம்.

1. தலைவர், சைவ மகா சபை

2. தலைவர், சைவ வித்தியா விருத்திச் சங்கம்.

3. துறைத் தலைவர், இந்து நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

4. தலைவர், இந்து சமயப் பேரவை

5. தலைவர், சைவ பரிபாலன சபை

6. தருமை ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம் தவத்திரு குருமகாசந்நிதானங்கள், திருப்பனந்தாள் காசிமடம் தவத்திரு எசமானன் வாழ்த்துகளுடன்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க