படக்கவிதைப் போட்டி (47)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
திசை வேண்டாத
பறவையாய்
ஒரு மாய பயணத்தில்
புன்னகை மாறாமல்
அமர்ந்திருக்கிறான் அவன்….
அவனின்
இருத்தலில்
அன்பென்ற பூக்கள்
ஆகாயம் வரை
வளர்ந்து கொண்டேயிருக்கிறது…..
கேட்டதற்கு
புத்தனை தேடி
பயணம் என்றான்
தொடர்ந்தபடி…..
நன்றாக தெரியும்
போதியில் போதனை
சொன்ன புத்தன்
இவன் தானென்று….
இருந்தும் தன்னை
வெளியில் தேடுவதும்
தொடர்வதும்
எதற்கான தொடக்கம்
என்று
யோசித்தேன்….
சட்டென புரிந்ததில்
காலம் உதறி
கர்வம் உதறி
பின் தொடர்ந்தேன்,
ஒரு புத்தனாக…..
கவிஜி
மீளாத் தூக்கம் !
துக்கமுற்று, துயருற்று
புத்தர் மகான்
துஞ்சுகிறார் நிரந்தரமாய்,
ஏக்கமுற்று மனது
வீக்கமுற்று !
இந்தியாவில் பிறப்பு !
ஈழத்தில் மரிப்பு !
நீதி, நெறி வற்றிப் போன
இலங்கா புரியிலே
ஈவு, இரக்க மின்றி
பல்லாயிரம் தமிழ் மக்கள்
மானம் இழந்தார் !
ஊனம் உற்றார் !
உயிரிழந்தார் !
உடல் உறுப்பிழந்தார் !
உடைகள்
உறிஞ்சப் பட்டார் !
கற்பிழக்கப் பட்டார் !
கால், கைகள்
வெட்டப் பட்டார் !
முலை அறுக்கப் பட்டார் !
தலைகள்
துண்டிக்கப் பட்டார் !
விடுதலை
வேண்டிப் போராடி யதற்கு !
ஆண்டாண்டு
தோறும்
சரித்திர நாயகி
கண்ணீர் கொட்டி நமக்கு
கதை சொல்வாள் !
ஈழத் தீவில்
மீளாத் தூக்கத்தில்
விடை பெறுகிறார்
போதி மரப்
புத்தர் !
++++++++++++
சி. ஜெயபாரதன்
மாற்றம்…
அடடா,
அகிலத்து மாந்தரெல்லாம்
ஆசை துறந்திட்டார்,
அன்பைத் துணைகொண்டார்..
மாறிவிட்டனர் மனிதர்கள்,
வேறுபாடுகள் இல்லை
வெட்டுகுத்துகளும் இல்லை,
எங்கும் எதிலும் சமாதானம்..
மனிதனிடம் நோய்நொடி இல்லை
மரணமும் இல்லை அவனுக்கு,
நிரந்தரமாகிவிட்டான் மண்ணில்..
இருந்துகொண்டே கனவுகாண்கிறார்
புத்தர்,
இதழில் புன்னகை மிளிர…!
-செண்பக ஜெகதீசன்…
ஆசைகளைத் துறக்கவேண்டும் என்று
ஆசைதானே பட்டிருக்கிறேன் நான்
ஆழ்ந்து சிந்திக்கும் எனக்கே
என் அறியாமையைப் பற்றி
சிரிப்பாக இருக்கிறது.
பட வரி 47
மோன நிலை.
சித்தார்தரா அவரைப் பின்தொடரும்
பக்த பிக்குணியா பால
தேரோவா! பல கேள்விகள்
தேரோடின காட்சியால் என்னுள்.
எதுவும் கடக்குமெனும் சாந்தம்
பொதுப் போதனை வதனம்
மதுமிகு மோகனப் புன்னகை
அது இறவாப் புன்னகை.
அத்யந்த சயனம் கொண்ட
அரசமரத்தடிப் புத்தர் எப்போது
அமர்ந்த நிலையில் மறுபடி
அழகு சயனம் கொண்டார்!
தீராத நாட்டுப் பிரச்சனையால்
பாராத முகமாய் அவர்
இவர்கள் திருந்தார்கள் என்று
நிகர்வில்லா ஆழ்ந்த உறக்கமா!
மோனப் புத்தன் தூக்கம்,
தானம் வாங்கும் தேரோக்கள்
வானம் வெளிக்குமா! தமிழ்
கானம் இலங்கையெங்கும் கேட்க!
புத்தன் போதனை நாட்டில்
சத்தின்றிப் போனது ஏன்!
உத்தம புத்தம் ஏனோ
மொத்தமாய்ப் பின்பற்றப் படவில்லை!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-10-2016
இளைப்பாறுதல்
போதி தேவனுக்கும் தேவை….
கால்கள் நோவ
கால தேசங் கடந்து
போதனைகள் பரவிய அளவு
புனிதம் பெருகவில்லை
என்ற ஆயாசம்….
பல்லையும் முடியையும்
அங்கியையும் அடியினையும்
புனிதப்படுத்திய அளவு
மனிதத்தை மறந்து
புனிதத்தை இழந்தனரே
என்ற ஆயாசம்….
புத்தமும் சங்கமும்
தர்மமும் போயினவோ
பழங்கதையாய்…….
யுத்தமும் பிரிவினையும்
அதர்மமும் பெருகினவோ
புதுக்கதையாய்……
பட்டுப்போன போதிமரம்
பால்சுரக்காதோ எனும்
பரிவின் ஏக்கப் பெருமூச்சில்
இன்னும் கொஞ்சம்….
இன்னும் கொஞ்சம்….
ஆயாசம் நீண்டு
நீள்துயில் கொள்ள வைத்ததோ
புத்த பகவானே.
இளவல் ஹரிஹரன், மதுரை.