Month: February 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    வெண்பாகவதம்……(பாகவத்தை வெண்பா வடிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
    மூலம் -நாராயண பட்டத்திரியின் ஸ்ரீமத் நாராயணீயம்….)
    ———————————–
    பாத்திரங்கள் சம்பவங்கள் அனைத்தும்
    கண்ணனின் கற்பனையே….!
    —————————————————-

    பாக வதப்பழமது ஏகருசி ஆனது
    தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
    மேனியன் லீலையை முன்னமே உண்டதனை
    ஞானி அவர்ரசித்த நூல்….
    ———————————————————-
    சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
    இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
    துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
    ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….

    புதைபா கவத விதைநா ரணனாம்
    அதன்வேர் பிரமன் அடிநா -ரதனாம்
    முனிவியாசன் அம்மரம் மூண்ட கிளைகள்
    கனிவாசு தேவன் கதை…

    d1363546-a941-4176-8b18-5cbbd0d76f84
    மச்சாவதாரம்
    ——————

    கோன்சத் தியவிரதன் கையபி ஷேகநீரில்
    மீன்சுத் திவந்து மிகப்பெரிதாய் -வான்பொத்தல்
    ஆகத் திமிங்கலமாய் ஆக அரசனும்
    தாகமென்ன கேட்டான் திகைத்து….

    ஞானியர்கள், ஜீவர்கள், தானியங்கள் ஜோடியாய்
    தோணியிட்டு வாசுகித் தாம்பினால் -ஆணியிடு
    உச்சியுள்ள கொம்பென்(று) உரைத்தது பாகவத
    மச்சா வதாரத்து மீன்….

    மனவா சுகியால் மனித கலத்தை
    வினையூழி நாளில் வலிக்க -உனைமீன்
    உருவில் இழுத்து உயர்நலம் சேர்க்கும்
    குருவின் மகிமை கருத்து….

     
    வருவித்த வெள்ளம் வடியும் வரையில்
    பிறவித் தலைவர் பிரமன் -தருவித்த
    தூக்கமவர் கண்மூட சாக்கென்று தானவன்
    தூக்கிச்சென் றான்வேதத் தை….

    தானவன் குதிரைத் தலையைத் துணித்தபின்
    மீனவன் மீட்டான் மறைநான்கை -மானவகேள்,
    தூங்குமயன் தாமசம், தீயரக்கன் ராஜசம்,
    தாங்குமீன் சத்வம் துணை….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    திவ்யப் பிரபந்தம் மாதிரி இது கேசவாழ்வாரின் திவ்ய BRUSH பந்தம்….அட்டகாசம்….கிரேசி மோகன் ….கேசவ் தொடரட்டும் உம் தூரிகைத் தவம்…ஒருநாள் கண்ணன் உம்வீட்டு காலிங் -பெல் அடிக்கப் போவது நிச்சயம் ….

    a3a9b8c8-0f82-4d5c-98f6-1e52fb4f748f

    ”வில்TOP விஜயனுக்கு வீரம் விளைவித்து
    FULL-STOP நூறுக்குப் போட்டவன், -அல்டாப்பாய்
    கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான்
    மன்னார் குடிமைனர் மால்’’….

    “விண்ணார்வம் வேண்டேன் வியனுலகும் வேண்டேனே
    கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
    குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
    குடிபோன கோகுலனே காப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 22, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  ரூபாதேவி அவர்கள்

     

    ரூபாதேவி0

     

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சென்றவாரம் (பிப்ரவரி 5 முதல் 16 வரை) மேகாலயா மாநிலத்தில் கௌஹாத்தி/ஷில்லாங்கில் நடைபெற்ற “தெற்காசிய போட்டி”களில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA – Federation Internationale de Football Association) கால்பந்தாட்ட நடுவராகச் செயல்பட்ட, தமிழகத்தின் “முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவரான” திருமிகு ரூபாதேவி அவர்கள். அவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவின் நன்றிகள் உரித்தாகிறது.

    ரூபாதேவி1

    திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயதான ரூபாதேவி பள்ளி நாட்களிலேயே கால்பந்தாட்ட விளையாட்டினால் ஈர்க்கப்பட்டவர். இவரது ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் இவருக்கு அளித்த ஊக்கத்தினாலும் பயிற்சியாலும் பள்ளிநாட்களில் திண்டுக்கல் அணியின் சார்பாக மாவட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். பல்கலைக்கழக நாட்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக்கழக அணிக்காகவும், பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளில் பங்கேற்றும் விளையாடி வந்துள்ளார்.

    இளைஞர்களுக்கு நடுவர் பயிற்சி அளிக்கும் நோக்கில், 25 வயதுக்குட்பட்டோருக்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் உருவாக்கிய ‘புராஜெக்ட் ஃப்யூச்சர்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேறிய இரு பெண்களில் ரூபாதேவியும் ஒருவர். இலங்கை, கத்தார், பஹ்ரைன், மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடுவராகப் பணியாற்றி இருப்பதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளுக்கும், ஆசிய அளவிலான போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

    ரூபாதேவி

    ரூபாதேவியின் ஈடுபாட்டைக் கவனித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் நடுவராகப் பணியாற்ற இவரைப் பரிந்துரைத்தது. அதற்கான எழுத்து, உடல் திறன் தேர்வுகளில் வெற்றிபெற்ற இரு பெண்களில் ஒருவரான ரூபாதேவிக்கு சர்வதேச நடுவராகப் பணியாற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாய்ப்பளித்துள்ளது. இவரது முயற்சிகளுக்குக் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரத்தினால், தென் இந்தியாவின் முதல் சர்வதேச பெண் நடுவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை ரூபாதேவிக்குக் கிடைத்துள்ளது.

    ரூபாதேவி2

    இந்திய “தேசிய அளவில்” இதுவரை ஆறு பெண்கள் மட்டுமே கால்பந்தாட்ட நடுவராகத் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் ரூபாதேவியும், இவருக்குப் பிறகு எஸ். வசந்தியும் தேசிய அளவு நடுவராகத் தகுதி பெற்றார்கள். சர்வதேச அளவில் பெண்கள் கால்பந்தாட்ட நடுவராகப் பங்கேற்கும் நிலை இதுவரை மகளிருக்கு இருந்ததில்லை.

    ஆண்களின் களமாக இருந்துவரும் கால்பந்தாட்ட நடுவர் பணியில் அதிரடியாக இறங்கி அனைவரையும் தனது முயற்சியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ரூபாதேவியின் எதிர்காலக் குறிக்கோள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலகக் கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே. ரூபாதேவி அந்த உயரங்களை அடைய வல்லமை குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________
    படங்களும் தகவல்களும் பெற்ற இடங்கள்:
    இணையத்திலிருந்தும் கீழ்காணும் தளங்களில் இருந்தும் …
    South Asian Games – 2016
    http://southasiangames2016.com/
     
    தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா!
    http://www.vikatan.com/news/sports/57134-indian-woman-referee-selected-by-fifa.art
     
    ஃபிஃபா ரெஃப்ரி ரூபாதேவி!
    http://www.vikatan.com/article.php?aid=115146
     
    கால்பந்து தமிழச்சி!
    http://siragu.com/?p=19756

    _______________________________________________________

    Share
  • நினைவுகளுடன் ஒருத்தி – 3

     சீதாம்மா

     

      “Kindly be brave and fight the battle of daily life.

     Be strong in mind.  Be joyful and calm at all times. 

     Have faith in the Lord  at anycost.

    He gives you some more experiances to give more strength and will to face the life more bravely.

    Be sure of His Divine Living presence at all times with you.

    He will guide you “

    சுவாமி சிவானந்தா எனக்கு எழுதிய கடைசி கடிதத்தில் சில வரிகள்

    ஆம், நான்கு ஆண்டுகளுக்கும்  மேலாக எங்களுக்குள் கடிதங்கள் பரிமாற்றம் இருந்தது. என்னை உருவாக்கியவர்களில்  ஒருவர்.   இந்தத் தொடரில் பின்னர் விளக்கமாக எழுதுகின்றேன். ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். கல்லூரி மாணவியாக இருக்கும் பொழுது எனக்கு கிடைத்த வழிகாட்டிகளில் ஒருவர்.

    இவரால்தான் திசைமாறிப் போகாமல் காப்பாற்றப்பட்டேன். சுவாமிஜி எழுதியதுபோல் என் வாழ்வில் இன்றளவும் போராட்டம் தொடர்கின்றது.. படிப்பினைகளும் பெற்று வருகின்றேன். . என்னுடன் என் இறைவனும் தொடர்ந்து வருவது உணர்கின்றேன். தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய அனுபவங்களை நான் சந்தித்தாக வேண்டுமென்பது அன்றே நிர்ணயப்படுத்தப்பட்டுவிட்ட ஒன்றாகும்.

    கட்டுரையாளரின் ஆதங்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.

    கடவுளின் தவிப்பு.        

    கடவுளானாலும் அவருக்கும் அமைதி வேண்டுமே!

    அவர் படைப்புகளில் மனிதன் அவரை அமைதியாக இருக்க விடவில்லை.

    எப்பொழுதும் துரத்திக் கொண்டே இருக்கின்றான். அவன் ஆசைகள் நிறைவேற வேண்டும்.   வேண்டியன  உடனே கிடைக்க வேண்டும்.   ஆசை வளர்ந்து பேராசை, அதன் குட்டிகளான பொறாமை, வன்மம், , பகைமை, ஒன்றா இரண்டா, ஒவ்வொரு துர்க்குணமாக வளர்ந்து அத்தனைக்கும் ஆண்டவன் உதவ வியாபாரமே பேச ஆரம்பித்துவிடுகின்றான். ஒரு கோயில் , பிறகு இன்னொருகோயில் இப்படி அவரை எங்கும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. இப்படி ஒரு கூட்டம் !

    இன்னொன்றைப் பார்த்தால் நினைத்தது கிடைக்கவில்லையென்றால், திட்டித் தீர்க்க விரட்டல்.

    இன்னொரு கூட்டமும் உண்டு. ஆற்றாமையில் அலறல்.” எப்பொழுதும் கெட்டவனுக்கு நினைப்பது நடக்கின்றது, நல்லவன் தான் கஷ்டப்படுகின்றான் “

    ( இப்படி  பல மனித குணங்களைக் கட்டுரையாளர் எழுதியுள்ளார் )

    கடவுளின் நிலை பரிதாபமாகி விடுகின்றது. யாரும் அன்புடன், அவரை அவருக்காக அணுகவில்லை. எங்குதான் ஓடி ஒளிய முடியும். ?! மனிதன் எட்டிப் பார்க்காத ஓர் இடத்தில் ஒதுங்க நினைக்கின்றார்.

    மனம்

    மனிதன் எட்டிப்பார்க்காத இடமாம் !

    மனத்தில் கடவுளை அமர்த்திவிட்டு நின்று விடுகின்றார் கட்டுரையாளர்.

    என் மனமோ இறைக்கைகள் விரித்துப் பறக்க ஆரம்பித்தது.

    :நான் யார் ? “என்று எத்தனை பேர்கள் நினைத்துப் பார்க்கின்றனர். !

    தன்னிடம் இருக்கும் குறைகளை சிறிதளவேணும் புரிந்து கொண்டால் அவனுடைய பல பிரச்சனைகளுக்கு அவனே வழி கண்டுபிடிக்க இயலுமே!

    அதிகம் பேசுவோம்  — பக்கம் பக்கமாக எழுதுவோம்

    நம்மை நாம் அறிவோமா?

    எனக்கும் பல முகங்கள் உண்டு. பல குறைகளும் உண்டு. அனுபவங்கள் பல படிப்பினைகள் கற்றுக் கொடுத்தும் நான் பூரணமாக திருந்த முடியவில்லை.

    கட்டுரையாளர் என்னை சுவாமி சிவானந்தரின் கடைசி மடலை எடுத்துப் பார்க்க வைத்துவிட்டார்    ஆமாம் ஓர் புதுப் படிப்பினை பெற்றேன் . அதைப்பற்றி எழுதும்  முன்னர் ஒன்றைக் குறிக்க விரும்புகின்றேன்.

    மனம்  என்பதற்குப் பதிலாக ஆழ்மனம் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

    மனித மனம் குரங்கைவிட மோசமானது. குரங்கு ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும்பொழுது சில விநாடிகள்தான் இரண்டையும் பிடித்து தொங்கும்.  உறுதி தெரிந்தவுடன் ஒன்றை மட்டும் பற்றிக் கொள்ளும். மனிதனோ இரண்டையும் பிடித்துக் கொண்டு தொங்குவான்.

    தரமற்ற எண்ணங்களால் மனத்தைக் குப்பைத் தொட்டியாக வைத்திருக்கின்றோம்.

    ஆழ் மனத்தில் தான் பிரபஞ்ச சக்தி அமைத்திருக்கின்றது.

    அதனை உணர்வது அவ்வளவு எளிதல்ல.

     உன் வீட்டில் தங்கக் கட்டிகள் நிறைந்த ஒரு பெட்டி இருக்கின்றது என்று   யாராவது கூறினால் எப்படி தேடுவோம் ? களைப்பு என்று உட்கார்ந்து விடுவோமா?

    முயன்றால் முடியாதது இல்லை.

    நினைவொன்று மனத்தில் நிழலாடியது .அதிலும் சிந்தனைக் குளத்தில் தள்ளிய ஓர் சம்பவம்.

    download

    எழுத்தாளர் ஜெயகாந்தன் இறந்த செய்தி கேள்விப்படவும் துன்பத்தில் துடித்துவிட்டேன். என்வரையில் அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. . பிரச்சனைகளால் துரத்தப்படும் பொழுதெல்லாம் என் மனக் குமுறல்களைத் தாங்கும் ஓர் சுமைதாங்கி.   ஓர் நல்ல நண்பர்.. அவர் உடல் நிலை மோசமாகி வருவது தெரியும். விரைவில் அவர் மரணிப்பார் என்பதும் உணர்வேன். ஆனால் உண்மை தெரிந்தவுடன். மனத்தில் விழுந்த அடி மிகவும் வலித்தது.. அவர்கள் குடும்பத்தாருடன் பேச நினைத்தேன். ஆனால் வீட்டு தொலைபேசி எண் இல்லை.. விசாரித்து அவர்களுடன் பேச ஒரு வாரம் ஆயிற்று.

    முதலில் எடுத்தது கவுசல்யாதான். . அவர் குரல் கேட்டவுடன் தேம்பித் தேம்பி அழுதேன். அவர்கள் என்னை  சமாதானம் செய்தார்கள். . . பின்னர் அவருடைய முதல் மனைவியிடம் பேசினேன்.. அவர்களும் என்னைச் சமாதானம் செய்தார்கள்

    சமாதானம் சொல்ல வேண்டியவள் நான். ஆனால் அங்கே என்னைச் சமாதானம் செய்தனர். அவர்கள் கொடுத்த விளக்கங்கள் எனக்குக் கிடைத்த படிப்பினை. அனைவரும் அறிந்து கொள்வது மட்டுமல்ல சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் நிகழ்வு.

    நாமும் அலசிப் பார்ப்போமே!

    (என் உடல் நிலை காரணமாகத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. —   பொறுத்தருள்க.)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 197

    – மலர்சபா.

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    உள்வரி வாழ்த்து
    பூவை நிலை

    moovendar

     

    கோர்க்கப்படாத பொதிய மலையின்
    ஆரமான சந்தனமும்,
    கோர்க்கப்பட்ட கொற்கைக் கடலின்
    ஆரமான முத்தும்,
    தேவர் தலைவனாகிய
    இந்திரனின் பூண் ஆரமும்,
    இம்மூன்றும்
    பாண்டியனின் மார்பில் திகழ்கின்றன.

    இங்ஙனம்
    இந்திரனின் ஆரம் அணிந்த பாண்டியன்
    வளம் மிக்க துவாரகையில்
    ஆநிரை மேய்த்துக் குருத்த மரத்தை முறித்த
    கண்ணனே ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

    பொன் போன்ற இமய மலையின் உச்சியில்
    வெற்றிக்கு அறிகுறியாய்த்
    தன் புலிக்கொடியை நாட்டி
    இப்பகுதியில் உள்ள நிலங்களை எல்லாம்
    ஆட்சி புரிந்தவன்,
    மதிலையுடைய புகார் நகரத்தில் வாழும்
    சோழ மன்னன் ஆவான்.

    அம்மன்னனை,
    போர் செய்யும் அழகிய
    சக்கரப் படையை உடையத் திருமால் ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

    கடலின் உள்ளே புகுந்து சென்று
    அங்கே,
    மூத்தல் என்றும் அடையாத் தன்மை கொண்ட
    கடம்ப மரத்தினை வெட்டிச் சாய்த்தவன்,
    வளம் மிக்க வஞ்சி மாநகரில் வாழும்
    சேர மன்னன் ஆவான்.

    அவன் மலையை ஒத்த தோளை உடைய
    திருமால் ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

     

     

     

     

     

     

    (கண்ணனே சேரனாக, சோழனாக, பாண்டியனாகக் கோலம் வரித்து
    தமிழகத்தை ஆண்டான் எனும் உள்வரி வாழ்த்து இது.)

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்  (17)

    க. பாலசுப்பிரமணியன்

    விளையாட்டு முறையில் கல்வி

    education1

    விளையாட்டு முறையில் கல்வி கற்கும் பொழுது அது மனதிற்கு இனியதாகவும் ஏற்புடையதாகவும் மன அழுத்தங்களிலிருந்தும் வேறு எதிர்பார்ப்புகளிலிருந்தும் விடுபட்டதாகவும் அமைகின்றது .உலகில் உள்ள பல நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்த உண்மையை உறுதி செய்கின்றன.

    ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பின் பற்றிய பொழுது வீட்டில் உள்ள முதியவர்கள் – தாத்தா பாட்டி, அத்தை, மாமா போன்றவர்களும் தாய் தந்தையரும் குழந்தைகளுக்கு  விளையாட்டாக பல உண்மைகளை விளக்கி வந்தனர். சிறிய கதைகள் பாடல்கள் விடுகதைகள் மூலம் அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை, உறவு பேணுதல், நல்லொழுக்கம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இவைகள் நித்தம் விளையாட்டான எளிதான முறையில் வந்ததால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்க்கை கலைகளோடு இணைந்து நின்றன.

    தாய் உணவு ஊட்டும் குழந்தைக்கு ” நிலா, நிலா ஓடி வா ” என்ற பாடலை பாடிக் காட்டும் பொழுது அந்த நிலவைப் பார்க்கின்ற குழந்தைக்கு கவனம், வியப்பு, ஆர்வம் மற்றும் அன்றாட இயற்கையை புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது “Twinkle Twinkle Little Star ” என்று நட்சத்திரங்களை காட்டிப் பாடிய பொழுது நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மறைமுகமாக அறிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பாடலில் உள்ள “Wonder” என்ற வார்த்தை வியப்பை ஊக்குவிப்பதாக இருந்தது. “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,’ என்ற கவிஞரின் பாடல் மனிதனின் வியப்பின் உண்மையை விளக்குகிறது . பேரறிஞர் அரிஸ்டாடில் மனிதனின் வளர்ச்சிக்கும் அவனுடைய படைப்புத் திறனுக்கும் இந்த வியப்பை அடிப்படையாகக்  கருதுகின்றார். ( Sense of wonder of  wander ).

    “நட்சத்திரங்களைப்  பார்க்கின்ற குழந்தை அதனுடைய மின்னும் செயலைக் கண்ட பின்  இங்கே ஒன்று, அங்கே ஒன்று மற்றும் அங்கே ஒன்று என்று தொடர்ந்து கண்களை அலைய விட்டு தேடலில் ஈடுபடுகின்றது. மூளையின் வளர்ச்சிக்கு வியப்பும் தேடலும் மிகவும் ஊட்டத்தை அளிப்பதாகவும் வளர்ச்சிக்கு படிகளாகவும் அமைகின்றன.

    “தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு ” என்று ஆரம்பித்து பாடிய பொழுது எண்ணிக்கை, கணிதத்தின் அடிப்படை கருத்துக்கள், உறவு பாராட்டல், பகிர்ந்து கொள்ளும் உணர்வு ( caring and sharing ) போன்ற பல வித கருத்துகள் விளக்கப்பட்டு உணர்வுகளோடு ஒன்றி வளர்ந்தன. தற்போதைய நிலையில் இந்த பல அருமையான உணர்வு சார்ந்த கருத்துகள் குடும்பங்களிலிருந்து குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. மற்றும் தாய் மொழி அற்ற மற்ற மொழிகளில் கற்றுக்கொள்ளும் பொழுது அவைகள் அதிகமான அளவில் உணர்வுகளோடு ஒன்றுவதில்லை.

    கற்றல் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான செயல் அதற்கு மனம், மூளை மற்றும் உடல் அனைத்தும் சேர்ந்து ஈடுபடுதல் அவசியம்

    கற்கப்படும் கருத்துக்களோடு கற்பவர்களின் ஈடுபாடும் ஈர்ப்பும் ( Effective engagement  of the learner) கற்றலின் அளவையும் திறனையும் அதிகரிக்கின்றன.

    விடுகதைகள் சிந்தனையைத் தூண்டும் சிறு கேள்விகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது மற்றுமின்றி அவர்களுக்கு வெவ்வேறு விதமான சிந்தனைத் திறன்களைத் தூண்டுகின்றன. பொதுவாக பெரியவர்கள் குழந்தைகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தையும் சில கேள்விகள் அவர்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றும் கருதுகின்றனர். ஆனால் மூளை வளர்ச்சியை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்களோ மூளை எப்பொழுதும் புதிய சாதனைகளுக்காகவும் சந்தர்பங்களுக்காகவும் காத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

    ஒரு பள்ளியில் ஆரம்ப வகுப்பிற்குச் சென்ற ஒரு பேராசிரியர்  ஒரு மாணவனிடம் உனக்குத் தெரிந்த கதை ஒன்று சொல் என்று வினவ அந்தச் சிறுவன் ‘காக்கையின் தாகம் என்ற கதையைச் சொல்லி எவ்வாறு அந்தக் காகம் அருகிலிருந்த சிறிய கற்களை உபயோகித்து தண்ணீரை மேலே கொணர்ந்து தாகத்தை தணித்துக் கொண்டது என்று விளக்கினான். அந்தப் பேராசிரியரோ அந்த இடத்தில் கற்கள் இல்லாமலிருந்தால் அந்தக் காகம் என்ன செய்யும் என்று கேட்க ஒரு மாணவன் ” அந்தக் காகம் சற்றே பறந்து தன இறக்கைகளால் அந்தப் பானையைத் தள்ளிவிட்டு வழிந்து வரும் நீரைக் குடிக்கும் என பதில் சொன்னான். மற்றொருவனோ அந்தக் காக்கை தன அலகுகளால் அந்தப் பாண்டத்தை குத்தி ஓட்டை ஒன்றை உண்டாக்கி அதிலிருந்து வரும் நீரை குடிக்கும் என்று சொன்னான்  இன்னொரு மாணவனோ காகம் அருகிலிருந்த குப்பைத்தொட்டியிலிருந்து ஒரு குழலை (Straw)வைக் கொண்டுவந்து தண்ணீர் கடிக்கும் என்று சொன்னான். கேள்வி  ஒன்றுதான்……சிந்தனைகள் பலவிதம். விளையாட்டு முறையிலும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் பள்ளிகள் பாடங்களை நடத்தினால் கற்றல் தற்காலிக நினைவிலிருந்து நிரந்தர நினைவாக மாற வாய்ப்புண்டு

    Share
  • உன்னையறிந்தால் ……… (43)

    நிர்மலா ராகவன்

    தாம்பத்தியத்தில் தலைவலி

    உனையறிந்தால்
    கேள்வி: எங்களுக்குக் கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. என் கணவர் என்னுடன் ஒத்துப்போகவே மாட்டேன் என்கிறார். தினமுமே எங்களுக்குள் சண்டை வருகிறது. இதை எப்படித் தடுப்பது?

    விளக்கம்: என்னதான் வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், நம் விருப்பத்திற்கேற்ப ஒருவரை மாற்ற முடியாது. நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்வதுதான் முடிந்த காரியம். பெரிய மனதிருந்தால், மற்றவரது குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். (நம்மை ஒத்தவர்களிடம் பேசிச் சிரிக்கலாம்).

    கணவன்-மனைவியருக்குள் ஏன் சண்டை பூசல் வருகிறது?

    1 ஒருவர் பேசும்போது, மற்றொருவர் தன்பாட்டில் ஏதாவது செய்துகொண்டிருப்பது. உதாரணமாக, கணவரோ அல்லது மனைவியோ தொலைகாட்சியில் கவனத்தைப் பதித்தபடி, மற்றவர் பேசும்போது அசுவாரசியமாக `உம்’ கொட்டியபடி இருத்தல். பத்திரிகையைப் படிப்பதில் ஆழ்ந்திருத்தல், கைத்தொலைபேசியில் வேறு யாருடனோ உரையாடுவது இதெல்லாம்கூட தொடர்பைத் தகர்க்கும். `தன்னைக் கவனிக்கிறாரா (கவனிக்கிறாளா), பார்!’ என்ற ஆத்திரத்தை விளைவிக்கும். இப்படி எதிலாவது ஈடுபட்டிருந்தாலும், அதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டுக் கவனிப்பது நம்முடன் பேசுபவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

    ஒருவர் முக்கியமான விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது, இடைமறித்து ஏதாவது பேசுவது, `நீ எப்பவுமே இப்படித்தான்!’ என்ற வகையில் அலட்சியப்படுத்துவது — இதெல்லாமே சண்டைக்குக் காரணமாக அமையும். தலையை லேசாக அசைத்து, ஒருவர் கூறுவதை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமா என்று அவர் கூறியதில் சந்தேகம் கேட்பது உசிதம்.

    நாம் கவனிக்கிறோம் என்பதை உடல் மொழியால் காட்டுவது: தலையைச் சற்றே குனிந்து, காதை ஒருவர் பக்கம் திருப்பிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானால், அவருக்கு நம்மிடம் மேலும் பேச உற்சாகமாக இருக்கும்.

    2.  நம் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, பிற வேலைகளைச் செய்வதே தலையாய கடமையாக எண்ணிச் செய்வதுதான் நல்ல பெண்ணுக்கு அழகு என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (அல்லது, வளர்க்கப்பட்டிருக்கிறோம்). அப்படி நடந்தால், நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அந்த ஆத்திரம் வேறு பக்கம் திரும்பும்.

    கதை: நான் வீட்டிலும், வெளியிலும் வேலை பார்த்த காலத்தில், சனிக்கிழமையானால் காரணமின்றி குழந்தைகளிடம் எரிந்து விழுவேன். அவர்கள் சிரித்தபடி, `நாங்கள் இன்று சமைக்கிறோம். நீ எழுதும்மா!’ என்பார்கள். அவர்களுக்குச் சமைக்கத் தெரியாது என்பது வேறு விஷயம். அதன்பின், ஒவ்வொரு சனியும் எங்கள் வீட்டில் நூடுல்ஸ்தான்! மேக்கியையும், மசாலாவையும் சேர்த்துப்போட்டு, நீரில் கொதிக்கவைத்தால், ஆயிற்று சமையல்! நானும் உற்சாகமாக விடுமுறை நாட்களை எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.

    நீதி: உங்களுக்கு எழுதவோ, படிக்கவோ பிடிக்குமானால், அதை அடியோடு விடத் தேவையில்லை. வாரம் சில தினங்களாவது சற்று நேரத்தை ஏதாவது ஒரு பொழுதுபோக்கிற்காக ஒதுக்கலாமே! பெரிய தியாகிபோல் உங்களை எண்ணிக்கொள்ளாது, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசினால் புரிந்துகொள்ள மாட்டார்களா, என்ன!

    3. பரஸ்பர நம்பிக்கை

    `நான் ஏதாவது நடிகையின் அழகைப் புகழ்ந்தால்கூட என் மனைவிக்குக் கோபம் வருகிறது!’ என்றார் என்னுடன் வேலை பார்த்த நண்பர். என்னிடம் கேட்டார், `அவளுக்குக் கண் அழகா இருக்கும். ரொம்ப குறைச்சலா டிரெஸ் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவாளே! அவ பேர் என்ன?’

    நான் சிரித்தபடி பதில் சொன்னேன். (நீங்களும் ஊகித்திருப்பீர்கள்).

    இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது! எங்கோ இருக்கும் அந்த நடிகை இவரை ஒரு கூட்டத்தில் இனம் கண்டுகொள்ளப்போகிறாளா, என்ன!

    கதை: `நமக்குத் திருமணமாவதற்குமுன் நான் பல பெண்களுடன் பழகியிருக்கிறேன்!’ என்று ஒருவர் தான் காதலித்து மணந்த மனைவியிடம் வெள்ளைமனத்துடன் கூறினாராம் — காதலிக்கும் இருவருக்குள் எவ்வித ரகசியமும் இருக்கக்கூடாது என்று நினைத்ததால். அதுதான் அவர் செயுத தவறு. அவள் அவரை அதன்பின் நம்பவே மறுத்துவிட்டாள். அனுதினமும் மனைவி ஏவிய சொல்லம்புகளைப் பொறுக்காது, விவாகரத்து பெற்றுவிட்டதாக என்னிடம் வலிய வந்து கூறினார். `நான் அவளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், என் மணவாழ்க்கை ஏன் பொய்த்தது?’ என்றவரிடம் அனுதாபம்தான் காட்டமுடிந்தது என்னால்.

    தனது, அல்லது வாழ்க்கைத்துணையின், கடந்த காலத்தையே ஒருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அதேபோல், வருங்காலக் கனவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதும் நிகழ்காலத்தைப் பாதிப்பதுதான்.

    4. நம்மையே நாம் ஏற்காதபோது, நம் உணர்ச்சிகளை மதிக்காதபோது, மகிழ்ச்சி இராது.

    `எப்போதும் என்ன யோசிப்பீர்கள்?’ என்று நான் சிலரைக் கேட்டேன்.

    ஒரு பெண்மணியின் பதில்: `தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துச் சிரிக்காவிட்டால், மனமுடைந்து போய்விடுவேன்! நாம் என்ன தப்பு செய்துவிட்டோம்?’ என்ற கேள்வி நாளெல்லாம் மண்டையைக் குடையும்.

    தன்னைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ என்ற கவலையிலேயே காலத்தைக் கழிப்பவர்களுக்கு என்றுமே நிம்மதி கிடையாது. ஏனெனில், எல்லாருமே அவர்களைப்பற்றி ஒரேவிதமான எண்ணத்தைக் கொண்டிருக்க மாட்டார்களே!

    தீர்வு: `நான் இப்படி நடப்பதுதான் எனக்கு ஏற்றதாக, நிம்மதியை அளிப்பதாக இருக்கிறது. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும்,’ என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    வேறு சிலர் துக்கம், இழப்பு, தனிமை முதலியவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அதனால் தாம் பாதிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வது இழுக்கு என்று நினைப்பார்கள்.

    கதை: ஒரு கூட்டுக்குடும்பத்தில் பத்து வயதான சிறுவன் இறந்து ஒரு மாதத்திற்குள் தீபாவளி கொண்டாட்டம் தடபுடல் பட்டது. `அவன் விதி அவ்வளவுதான்!’ என்று விட்டேற்றியாகப் பேசினார்கள். அக்குடும்பத்தில், பெற்ற தாய் உள்பட, யாருக்குமே சிறிதளவுகூட துக்கம் இருந்திருக்காதா? ஏன் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்?

    எங்கள் உறவினர் ஒருவருக்கு நான்கைந்து குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்குள் இறந்தனவாம். ஆனால், தாயார் எந்த உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாது, தன் கடமைகளைச் செய்துவந்தாள். வீட்டிற்கு மூத்த மருமகள் என்ற முறையில், அதுதான் அவளிடம் எதிர்பார்க்கப்பட்டது.

    இம்மாதிரி தமது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, உள்ளுக்குள்ளேயே மறுகுபவர்கள் ஆத்திரம், குற்ற உணர்வு, அவமானம் என்று தமக்கே புரியாத பல்விதமானவைகளுக்கு ஆளாகிறார்கள். பிறரிடம் ஓயாது குற்றம் காண்பது, பழிகூறுவது, காரணமில்லாது கோபப்படுவது, அல்லது உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிவிடுவது — இதெல்லாம் வேண்டாத விளைவுகள். இம்மாதிரி தருணங்களில், துணைவர் (துணைவி) தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவர் கடமை என்று எண்ணுவார்கள். நடக்கிற காரியமா!

    அப்படி ஒருவர் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தால், கூட இருப்பவருக்கும் நிம்மதி போய்விடும். பித்துப் பிடித்துவிடுவது போலிருக்கும். `இது அவர் வந்த வழி!’ என்று தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

    4. மணமானவர்கள் மனத்தாங்கல் இல்லாது நட்புடன் பழக, வீட்டு வேலைகளையும், செலவுகளையும் பகிர்வது நல்லதொரு வழி. இருவருமே உத்தியோகம் பார்க்கும் நிலையில் மட்டுமல்ல; நாள்பூராவும் வீட்டிலேயே அலுத்துச் சலித்து வேலை பார்க்கும் மனைவிக்கு சிறிது உதவி செய்தால் அவளுடைய நன்றியையும் அன்பையும் பெறலாம்.

    5 `கல்யாணம்தான் ஆகிவிட்டதே! இனி என்ன!’ என்று தம்பதிகள் அலட்சியமாக இருந்தால் உறவு எப்படி பலப்படும்? வாரத்தில் ஒரு நாளை ஒதுக்குங்கள் — இருவரும் எங்காவது தனியாக ஊர்சுற்ற. முதல் நாளும், மறுநாளும் சண்டை போடலாம்!

    தாம்பத்திய உறவுகளில் இருக்கும் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முடியாது. அப்படி ஒரு நிலை இருந்தால், அவைகளைப்பற்றி எந்நேரமும் நினைத்தோ, பிறரிடம் பேசிப் பேசியோ ஆறுதல் தேட நினைக்காது, வேறு ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவதுதான் நிம்மதிக்கான வழி.

    Share
  • குறளின் கதிர்களாய்…(109)

     

     செண்பக ஜெகதீசன்

     

     

    பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்

    தீராமை யார்க்குங் கயிறு.

         -திருக்குறள் -482(காலமறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    காலமறிந்து

    கடமையைச் செய்..

     

    உரிய காலத்தில்

    ஒன்றி முயல்வது,

    செல்வம் நம்மை

    விட்டுச் செல்லாதிருக்கக்

    கட்டிவைக்கும் கயிறாமே…!

     

    குறும்பாவில்…

     

    காலமறிந்து கடமை செய்வது,

    செல்வம் விட்டுச்சென்றிடாமல்

    கட்டிடும் கயிறு போன்றதே…!

     

     மரபுக் கவிதையில்…

     

    செல்வம் என்றும் நில்லாமலே

         சென்று கொண்டே யிருப்பதினால்

    நில்லெனத் தடுத்துக் கட்டியேதான்

         நிறுத்திடும் கயிறது வேறில்லை,

    நல்ல செயலது தொடங்குமுன்னே

         நாளும் நன்மை பெற்றுத்தரும்

    வல்லமை மிக்க காலத்தினை

         வகையாய் அறிந்து செயல்படலே…!

     

    லிமரைக்கூ…

     

    காலமறிந்து செய்திடு கடமை,

    அதுதான் கயிறாய் கட்டியே

    செல்வமதை ஆக்கிடுமுன் உடமை…!

     

    கிராமிய பாணியில்…

     

    கடமயச்செய்யி கடமயச்செய்யி

    காலமறிஞ்சி கடமயச்செய்யி,

    காலத்த நல்லதாத் தெரிஞ்சிக்கிட்டே

    கடமயநீயும் தொடங்குனாலே

    கட்டாயம்வெற்றி வந்துசேரும்..

     

    அது,

    பாடுபட்டு சேத்தசெல்வம்

    பறிபோவாம கெட்டிப்போடும்

    பெலமாவுள்ள கயறேதான்

    பொருத்தமான தொணயேதான்..

     

    அதால,

    கடமயச்செய்யி கடமயச்செய்யி

    காலமறிஞ்சி கடமயச்செய்யி…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    125a8845-3482-4669-ac9f-366b5e6ff04a

     

    34f8983c-4480-41f8-84b0-4dba696703fa

    ”முட்டையில் தீட்டினாய் மாலன் சமேதப்பொன்
    முட்டையிடும் பெட்டை மகாலஷ்மி: -தட்டை,(ஸ்ரீஜெயந்தி தட்டை)
    முறுக்கில் வரைந்தாலும், மா(ல்)பிள்ளை கேசவ்
    முறுக்கது கையின் மிடுக்கு’’….கிரேசி மோகன்….

    Share
  • ஏ.வி.சி. கல்லூரியில் வைரவிழா பாட்டுமன்றம்

    1f7ae4c7-d36e-4c1e-a8d9-d64c478fb42d

              அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக்கல்லூரியின் வைரவிழா நிகழ்வுகளில் ஒன்றாக, தமிழாய்வுத்துறையின் சார்பில் கல்லூரி வேலாயுதம் அரங்கில் மாபெரும் பாட்டுமன்றம் 19.02.2016 பிற்பகல் 2.00 மணிக்குத்தொடங்கியது.

           நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் சு.அசோகன் தலைமை வகித்தார். இன்றைய இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதில் பெரிதும் பயன்படுவது ‘பழைய திரைப்பாடலே` `புதிய திரைப்பாடலே`, `நாட்டுப்புறப்பாடலே` என்னும் பொருளில் பாட்டு மன்றம் நடைபெற்றது. இதற்கு , கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி `நகைச்சுவை நாவலர்` முனைவர் இரா.நவஜோதி நடுவராக இருந்து நிகழ்த்தினார். விஜய் தொலைக்காட்சி `கலக்கப்போவது யாரு` புகழ் சிவகாசி சசிகலா `பழைய பாடலே` என்னும் அணியிலும், கலைஞர் தொலைக்காட்சி புகழ் கவிஞர் தணிகை வேலன் `புதிய பாடலே` என்னும் அணியிலும், வசந்த் தொலைக்காட்சி புகழ் கவிதா `நாட்டுப்புறப்பாடலே` என்னும் அணியிலும் பாடல்கள் வாயிலாக தங்களுடைய வாதத்தை எடுத்துரைத்தனர். நிறைவாக நடுவர் இன்றைய இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதில் பெரிதும் துணையாக இருப்பது நாட்டுப்புறப்பாடலே என்று தீர்ப்பளித்தார்.

           முன்னதாக வருகை தந்திருந்த அனைவரையும் தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவையின் மாநிலத்தலைவரும் கல்லூரித்தமிழாய்வுத்துறையின் தலைவருமான முனைவர் துரை.குணசேகரன் வரவேற்றார்.

           தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் செல்வ.கனிமொழி நன்றி கூறினார். நிகழ்ச்சியை முனைவர் து.சந்தானலெட்சுமி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முனைவர் எஸ்.இராமசாமி, பேரா.ஆறுமுகம், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் செந்தில் நாயகம், பொறியியல் கல்லூரி முதல்வர், தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர், இயக்குநர், பேராசிரியர்கள், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நகரப்பிரமுகர்கள், மாணவச்செல்வங்கள் என்று திரளாகக்கலந்து கொண்டனர்.

           நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு உள்ளிட்ட இருபத்தெட்டு பேராசிரியர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

                                                                                                                                                    (முனைவர் துரை.குணசேகரன்)

                                                                   தமிழாய்வுத்துறைத்தலைவர்

                                                                             நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும்

    ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும்
    தோற்றத்தா மெள்ளி நலியற்க – போற்றான்
    கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
    உடையானைக் கௌவி விடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘ஆற்றார் இவர்’ என்று, அடைந்த தமரையும்,
    தோற்ற தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
    கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
    உடையானைக் கௌவி விடும்.

    பொருள் விளக்கம்:
    எதிர்ப்புக் குரல் எழுப்பும் ஆற்றலற்றவர் இவர் என்ற எண்ணத்தில், தன்னிடம் தஞ்சமடைந்த உறவினரை, பிறர் அறியும்வண்ணம் இகழ்ச்சியாகப் பேசி வருந்துமாறு செய்தல் வேண்டாம். தன்னைப் பேணிக் காக்காமல் வாசல் கதவை அடைத்துப் பூட்டிய அறையினுள் நையப் புடைத்தால், (வெறுப்படைந்த) நாயும் தன்னை வளர்ப்பவரையே கவ்விக் கடித்துக் குதறி விடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: நலிவடைந்த தனது உறவுகளைப் பேணிக்காக்காது பலரறிய அவரை இகழ்ந்து பேசுவது கேடு விளைவிக்கும், பொறுத்தது போதும் என அவர் பொங்கி எழுந்துவிடுவார். உடைமையாளரிடம் நன்றி பாராட்டும் நாயும் அவர் தன்னைத் துன்புறுத்தினால் எதிர்த்துத் தாக்கத் தயங்காது. தன்னிடம் உதவி நாடி வந்தவரை இகழாது இருந்தால் அவர் மகிழ்வார் என்பதை,

    இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து. (குறள்: 1057)

    இகழ்ந்து எள்ளி நகையாடாமல் தனக்கு உதவுபவரைக் கண்டு உதவிநாடி வந்தவர் மகிழ்வார் என்றும்,

    நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு. (குறள்: 995)

    வேடிக்கை என நினைத்து ஒருவரை இகழ்ந்து பேசுவதும், விளையாட்டு வினையாக முடிவது போல கேட்டை விளைவிக்கும். பகைவரிடத்திலும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுள்ளோர் அறிந்திருப்பார் என்று குறள்கள் விளக்கம் தருகின்றன.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    வாமனாவதாரம்….அலையஸ் திரிவிக்ரமாவதாரம்….
    ——————————————————————————————————–

    a82271bf-b9e6-4009-ab6b-75ca3b8a4852

    ’’யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
    ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
    சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
    சக்கிர வர்த்தி சிறப்பு’’….

    ’’பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு’’….

    ’’அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
    புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
    மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
    தாவலில் நெஞ்சம் திளைத்து’’….

    ’’தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
    வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
    உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
    எச்சரித்தும் மாபலி ஏற்பு’’….

    ’’அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
    தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
    வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
    மண்டல வாயை மறைப்பு’’….

    ’’உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு’’….

    ’’ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட
    சேதாரம் இன்றியவன் சேர்பு’’….

    ’’தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
    வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
    பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
    மீனாமை சிம்ம மறுப்பு’’….

    ’’ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு’’….கிரேசி மோகன்….

    —————————————————————-

    Share
  • அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்

    சி. ஜெயபாரதன்.

     

    cover-image-handling1

     

    [Safe Storage of Nuclear Radioactive Wastes]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    முன்னுரை:

    இந்தியரில் சிலர் அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் இயக்கத்தை அறவே வெறுத்து வருகிறார். சிலர் அவற்றிலிருந்து வெளிவரும் பேரளவு வெப்பசக்தியில் மின்சாரம் உற்பத்தி செய்வதை வரவேற்கிறார். 1974 முதல் அணு ஆயுதங்களைத் தயாரித்து இந்தியா அண்டைப் பகை நாடுகளைப் பயங்காட்ட அணு ஆயுதங்களைத் தேசியப் பாதுகாப்புக்குப் பதுக்கி வைத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாய்ச் சுமார் 25 அணு உலைகள் (20 அணுமின் உலைகள் + 5 அணு ஆய்வு உலைகள்) இயக்கத்தாலும், அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான அணுப்பிளவுக் கழிவுச் சுத்தீகரிப்புச் சாலைகள் இயக்குவதாலும் விளையும் கதிரியக்கக் கழிவுகள் போதிய கவசங்களோடு பாதுகாப்பாய் சுமார் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் நீர்த் தடாகங்களில் சேமிப்பாகிக் கண்காணிக்கப் பட வேண்டும்.

    வெப்ப வீச்சு தணிந்த பிறகு அவை யாவும் காங்கிரீட் தொட்டிகளில் அடைக்கப்பட வேண்டும். இறுதியாக அந்தத் தொட்டிகள் சுரங்கக் குகைகளில் அமைக்கப் பட்ட நிரந்தரப் புதைப்பு இடத்துக்கு அனுப்பப் பட வேண்டும். அணு உலைகளை எதிர்ப்பவரும், ஆதரிப்பவரும், அணு ஆயுத வெறுப்பாளரும், ஏற்பாளரும் இந்தியாவில் இதுவரைச் சேமிப்பானதும், இனிமேல் சேமிப்பாகப் போகும் அணுக்கதிர் கழிவுகளையும் இந்திய அரசாங்கம் நிரந்தரக் குகையில் புதைப்பதை மனக் கசப்போடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து வரிப்பணம் செலுத்தும் இந்தியர் எவரும் தப்பி நழுவ முடியாது. இந்த இடர் வினைகளைத் தடுக்கவும் கூடாது; தவிர்க்கவும் இயலாது.

    நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில் முதல் அணுகுண்டுகளைத் தயாரிக்க 1942 ஆண்டு முதல் அணுவியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும், 1982 ஆம் ஆண்டில்தான் அமெரிக்க அரசு தனது, ‘கதிரியக்கக் கழிவுப் புதைப்பு விதியை ‘ [Nuclear Waste Storage Policy] முதன் முதலில் தயாரித்து வெளி யிட்டது. அதன் கூற்றுப்படி 1998 ஆண்டு வரை மதிப்பீடு செய்யப்பட்ட அமெரிக்க அணு உலைகளின் 77,000 டன் ‘தீய்ந்த எருக்கள் ‘ [Spent Fuels], 22,000 டன் திடக்கட்டி ஆக்கப்பட்ட மேல்நிலைக் கழிவுகளை [Solidified High Level Waste] நிரந்தரமாய்ப் புதைக்கும் ‘பூதளக் கிடங்குகள் ‘ [Geological Repositories] இயங்கி வரும். அந்தக் கீழ்த்தளச் சுரங்கங்களில் கதிர்வீசும் கழிவுகள் 10,000 ஆண்டுக்கு மேல் பாதுகாப்பாக வைக்கப்படும்!

    இந்தியாவில் 20 அணுமின் உலைகளும், ஒரு சில ஆய்வு அணு உலைகளும் [5 அல்லது 6], ஓர் ஆய்வு வேகப் பெருக்கி அணு உலையும் இயங்கி ஏராளமான தீய்ந்த எருக்கள் சேர்ந்துள்ளன! அத்துடன் மூன்று எரிக்கோல் மீள் சுத்திகரிப்புத் தொழிற் கூடங்களும் [Spent Fuel Reprocessing Plants] மிகையான அணுவியல் கழிவுகளைச் சேமித்துக் கொண்டு வருகின்றன. ஆனால் அவற்றின் மொத்தக் கொள்ளளவு அல்லது எடையளவு எவ்வளவு என்றோ, எப்படி அவை பாதுகாப்பாக புதைபடும் என்றோ பாரதம் இதுவரை வெளியிட்டதாகப் அறியப் படவில்லை!

    அணுவியல் கழிவுகளைப் பாதுகாப்பாய்ப் புதைக்க, ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள ‘அகில நாட்டு அணுத்துறைப் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] இயற்றிய நெறிகள், விதி முறைகளைக் கையாண்டு உலக நாடுகள் நிறைவேற்றும் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது!

    கதிரியக்கக் கழிவுகள் எப்படிச் சேர்கின்றன ?

    1945 ஆம் ஆண்டு முதல் அணுகுண்டுகள் ஜப்பானில் வீசப்பட்ட பின்பு, அமெரிக்க இராணுவத் துறையினர் தொடர்ந்து தமது அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வந்தனர்! அவற்றுக்காக யுரேனியம்-235, புளுடோனியம்-239 உலோகம் தயாரித்த அணு உலைகள், அணுவியல் தொழிற்கூடங்கள் நிரம்பக் கதிர்வீச்சுக் கழிவுகளை வெளிப்படுத்தின! 1945-1985 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்கா 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளை [Nuclear Warheads] உற்பத்தி செய்ததாக அறியப்படுகிறது! ஒரு கிலோ கிராம் புளுடோனியம் தயாரிக்க ஓராயிரம் டன் யுரேனியத் தாது [Uranium Ore] தேவைப் படுகிறது என்றால் எத்தனை டன் குப்பைகள் சேரும் என்று அனுமானித்துக் கொள்ளலாம்!

    சட்டப்படி, அமெரிக்கக் கூட்டரசுக்கு மட்டுமே கதிரியக்கக் கழிவுகளை நிரந்தரமாய்ப் புதைக்கத் திட்டங்கள் வகுக்கவோ, அவற்றை அமுலாக்கவோ முழு உரிமை உள்ளது! மிக்க அபாயகரமான மேல்நிலை கதிரியக்கக் குப்பை அணு உலைகளின் தீய்ந்த எருக்களிலும் [Spent Fuels], அணு ஆயுதங்களுக்காக புளுடோனியம்-239 தயாரிப்பில் உண்டாகும் திரவ, திடவக் கழிவுகளிலும் [Liquid & Solid Wastes] ஏற்படுகிறது! அமெரிக்காவில் தற்போது [2002 ஆண்டுவரை 114] 104 அணுமின் உலைகளும், 10 அணு ஆய்வு, புளுடோனிய உற்பத்தி உலைகளும் இயங்கி, 2002 ஆண்டுவரை ஏறக்குறைய 52,000 டன் தீய்ந்த எருக்கள் சேரும் என்று துல்லியமாக மதிப்பீடு செய்யப் பட்டது! புளுடோனிய திரவக் கழிவு மட்டும் 91 மில்லியன் காலன்!

    கீழ்நிலைக் கழிவுகளின் அனுமானிக்கப் பட்ட கொள்ளளவு 472 மில்லியன் கன அடி [Cu.ft] என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது! கதிர்வீச்சு மூலகங்கள், ஏகமூலங்கள் [Radioactive Elements, Isotopes] உபயோகிக்கும் மருத்துவச் சாலைகள், தொழிற் கூடங்கள், ஆய்வுத் துறையகங்கள், மூடி முடக்கப்பட்ட அணு உலைகள் [Shut & Decommissioned Reactors] ஆகியவை வெளியாக்கும் கழிவுகள், கதிர்த் தீண்டிய கருவிகள் [Contaminated Tools], வாயு வடிக்கலன்கள் [Air Filters], பாதுகாப்பணிகள் ஆகியவை இந்தக் கீழ் ரகத்தைச் சேர்ந்தவை!

    யுரேனியச் சார்புக் கழிவுகள் [Transuranic Wastes] எனப்படும் புளுடோனியம், நெப்ட்யூனியம் [Neptunium], மற்ற செயற்கை மூலகங்கள் தீண்டிய பாதுகாப்பணிகள், கருவிகள் போன்ற கழிவுக் கொள்ளளவு 11.3 மில்லியன் கன அடி! அவை யாவும் தற்போது அமெரிக்க அரசாங்கக் கிடங்குகளிலும், நியூ மெக்ஸிகோ உப்புக் குகைகளிலும் [Salt Caverns] புதைக்கப் பட்டுள்ளன!

    யுரேனியப் பிரிப்புத் துணுக்குகள் [Uranium Extraction Mill Tailings] மட்டும் 265 மில்லியன் டன் கொள்ளளவு! எல்லா விதக் கழிவுகளிலும் மிகையாவை இந்தக் கீழ்நிலைக் கழிவு ஒன்றுதான்! அவற்றின் கதிர்வீச்சுத் திறமும் மிக மிகக் குறைந்ததே!

    எத்தனை விதமான கதிர்வீச்சுக் கழிவுகள் விளைகின்றன ?

    அணுவியல் குப்பைகள் மேல்நிலைக் கழிவு [High Level Waste], கீழ்நிலைக் கழிவு [Low Level Waste] என்று இரு விதமாகப் பிரிக்கப் படுகின்றன. மொத்த அளவில் கீழ்நிலைக் கழிவுகள் மிகுந்ததாகவும், மேல்நிலைக் கழிவுகள் குன்றியதாகவும் சேருகின்றன! 60% கீழ்நிலைக் கழிவுகள் அணுமின் நிலையங்களிலும், 40% கீழ்நிலைக் கழிவுகள் லைஸென்ஸ் பெற்ற 20,000 மருத்துவ, ஆய்வு, மற்ற தொழிற்துறைக் கூடங்களிலும் உண்டாகின்றன!

    கீழ்நிலைக் கழிவுகள் வகுப்பு எ, வகுப்பு பி, வகுப்பு சி [Class A, Class B, Class C] என்று மூன்று பிரிவாக மேலும் பிரிக்கப் படுகின்றன. கதிர்வீச்சுக் கழிவுகளின் அரை ஆயுள் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து, அவற்றின் அளவைக் கீழிருந்து மேலாகக் குறித்து எ, பி, சி என்னும் வகுப்புகளில் பிரிவாகும். அதிக கதிர்வீச்சற்ற 97% அணுவியல் குப்பைகள் ‘எ ‘ வகுப்பைச் சார்ந்தவை. சற்று அடுத்த தரமான 2% கொள்ளளவு கழிவின் கதிர் வீச்சு நாளடைவில் குன்றிப் பூதள அளவை [Earth ‘s Background Level] ஒத்துவர சுமார் 300 ஆண்டுகள், புதைக் கிடங்குகளில் மூடப்பட வேண்டும்! கதிர்வீச்சு மிகையான நீள் ஆயுளில் வாழும் [Long-lived Radioactive Wastes] 1% அணுவியல் கழிவுகள், சுரங்கக் குகைகளில் கதிர்வீச்சுக் குறைய சுமார் 500 ஆண்டுகள் வரை ஒதுக்கப்பட வேண்டும்!

    அமெரிக்கா தற்போது கீழ்நிலைக் கழிவுகளைப் புதைக்க மூன்று ‘இயங்கு தளங்களைக் ‘ [Active Sites] கையாண்டு வருகிறது. அவை 1. வட கரோலினா 2. வாஷிங்டன் (மாநிலம்) 3. நெவாடா. அத்துடன் அமெரிக்கா 100,000 தொழிற்துறைக் கழிவுக் கிடங்குகள் [Industrial Waste Dumps], 18,500 நகராட்சி திடவக் கழிவுகள் [Municipal Solid Wastes], 23,000 கழிப்புநீர் கிடங்குகள் [Sewage-Sludge Sites] ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவற்றில் கதிர்வீச்சு இல்லாத இரசாயனக் கழிவுகள் உள்ளன. ஆனால் அவற்றில் தீவிர நச்சுக்களான ஆர்ஸெனிக், பேரியம், காட்மியம், குரோமியம், ஈயம், மெர்குரி, செலினியம் போன்ற நிரந்தரக் கழிவுகள் உள்ளன!

    கதிரியக்கப் புளுடோனியம் கடும் நச்சு உலோகம்!

    40 ஆண்டுகளாக அமெரிக்கா அணு ஆயுதங்கள் ஆக்க புளுடோனியம்-239 உலோகத்தையும், புளுடோனியம்-240 போன்ற கதிர் ஏகமூலங்களையும் [Radio Isotopes] உண்டாக்க தனிப்பட்ட பல சிறப்பு அணு உலைகளை இயக்கி வந்துள்ளது! இதுவரை அமெரிக்காவில் யாரும் புளுடோனிய நஞ்சை உட்கொண்டு மரணம் அடைந்ததாகத் தெரியவில்லை! பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இந்தியா போன்ற நடுகள் தீய்ந்த யுரேனிய எருக்களை [Spent Uranium Fuels] மீள் சுத்திகரிப்பு [Reprocessing] செய்து வருவது போல், அமெரிக்கா தற்போது முனையாமல், அவற்றை எல்லாம் நேரே புதைக் கிடங்குகளுக்கு அனுப்பி வருகிறது! 2000 ஆண்டு வரை அமெரிக்கா அணு ஆயுதங்களுக்குத் தயாரித்த புளுடோனியம்-239 அளவில் 10% பங்குதான் வாணிப அணுமின் உலைகளில் கிடைக்கும். ஆனால் அணு உலைகளில் கிடைக்கும் அச்சிறிய அளவு புளுடோனியத்தில், மிகையாக புளுடோனியம்-240 சேர்ந்திருப்பதால், அணு ஆயுதம் செய்ய அந்தப் புளுடோனியம் தகுதி யற்றது! விண்வெளிக் கப்பலுக்கு நீண்ட கால மின்சக்தி ஊட்ட புளுடோனியம்-240 பயன்படுகிறது!

    புளுடோனியம் கதிர்வீசும் நச்சு உலோகம்! ஆனால் மருத்துவத் துறையில் பயன்படும் கடும் நச்சு உலோகமான ரேடியம், அண்டவெளிக் கப்பலில் மின்னாற்றல் அளிக்கும் நச்சுப் பொருளான ஸ்டிரான்சியம் [Strontium] ஆகியவற்றை விடப் புளுடோனியத்தின் வீரியம் குறைந்தது! கதிரியக்க மற்ற ஆர்ஸெனிக் [Arsenic], சயனைடு [cyanide] போன்றவற்றை விடவும், புளுடோனியத்தின் வீரியம் குன்றியது!

    புளுடோனியம் இயற்கையாகப் பூமியில் கிடைப்பதில்லை! பூமியில் கிடைக்கும் யுரேனியம்-238 அணு உலைகளில் நியூட்ரான்களால் தாக்கப்படும் போது, உண்டாகும் புளுடோனியம் அணுப்பிளவுக் கழிவில் இரண்டறக் கலந்துள்ளது. புளுடோனியப் பிரித்தெடுப்புத் தொழிற்சாலைகளில் கழிவுகள் நீக்கப் பட்டு, புளுடோனியம் மட்டும் தனித்தெடுக்கப் படுகிறது! ஆர்ஸெனிக், சயனைடு இரசாயனங்களைப் போலின்றி நவீன முறைகளில் புளுடோனியம் பாதுகாப்பாகக் கையாளப் படுகின்றது!

    கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபட வாகனத்தில் போக்கு வரத்து

    1945 முதல் அமெரிக்கா அடுத்து 40 ஆண்டுகளாக 32,000 அணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதாக அறியப் படுகிறது! அமெரிக்க அணு உலைகளில் பயன்படும் அணுக்கரு எருக்கோல் கட்டு ஒன்று 14 அடி நீளத்துக்கும் அதிகமானது. அதன் எடை ஒரு டன் கொண்டது. வன்முறை மூர்க்கர் குழு அணுமின் நிலையத்தில் நுழைந்து எருக்கோல் கட்டொன்றைத் தூக்கித் திருடிச் செல்வது முடியாத செயல்! தீய்ந்த யுரேனியக் கழிவுகளைப் பாதுகாப்புக் காவலருடன், வாகனத்தில் 65 டன் கவசக் கலன்களில் தூக்கிச் செல்லும் போது, மூர்க்கர் குழு அவற்றை மடக்கிக் கைப்பற்றுவது அத்தனை எளிய காரியம் அன்று! அமெரிக்க அணுவியல் கட்டுப்பாடு பேரவை [(NRC) Nuclear Regulatory Commission] பெரு வீதிகளில் போக்கு வரத்தின் போது, கதிர்வீச்சுக் கழிவு கலன்கள் களவு போகா வண்ணம் போதிய காவல் துறையினர் உடன் பயணம் செய்ய வேண்டுமெனக் கடும் விதி முறைகளை ஏற்படுத்தி யுள்ளது.

    கழிவுகளைக் கொண்டு செல்லும் இரும்புக் கவசக்கலன் [Shielding Canisters or Casks] பலவிதச் சோதனைகளில் வெற்றி பெற்ற பிறகுதான் தேர்ந்தெடுக்கப் படுகிறது! தீ விபத்து, வீதி மோதல் விபத்து, வெடி விபத்து போன்ற பலவித விபத்துச் சோதனைகளில் எல்லாம் தப்பிய கவசம்தான், அணுவியல் கழிவுகளைச் சுமந்து செல்ல அனுமதி பெறுகிறது!

    கதிரியக்கக் கழிவுகளின் நீண்ட காலப் புதைக் கிடங்குகள்

    அமெரிக்க அரசாங்கம் 25 ஆண்டுகளாய் விஞ்ஞானப் பொறியியல் ஆய்வுகள் நடத்தியும், கூடங்களில் இரசாயன உளவுகள் பண்ணியும், திடல்களைப் பரிசோதித்தும் நிரந்தரப் புதைக் கிடங்குகள் அமைத்திட முற்பட்டு வந்தது! அப்பணியை 2000 ஆண்டு வரை நிறைவேற்ற 25 பில்லியன் டாலர் நிதித் தொகையை அமெரிக்கா தனியாக ஒதுக்கி வைத்தது! சேமிப்புக் கிடங்குகள் 24 மணி நேரமும் கதிர்மானிகளால் கவனிக்கப் பட்டு, காவலரால் கண்காணிக்கப் பட்டு வரும்! கிடங்குளைப் பாதுகாப்பு இயக்குநர் அடிக்கடி அணுகி மேற்பார்வை செய்ய, அவை வசதியாக அமைக்கப் பட்டுள்ளன. பிற்காலத்தில் அணு உலைகளுக்குப் புளுடோனியம் தேவைப் பட்டால், கிடங்குகளில் சேமிக்கப் பட்டுள்ள அணுப்பிளவுக் கழிவுகளை மீண்டும் மேலே கொண்டு வந்து, சுத்திகரிப்புச் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தற்போது அமெரிக்காவில் மூன்று தளங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. 1. வாஷிங்டன் மாநிலத்தில் ஹான்ஃபோர்டு [Hanford, Washington] 2. டெக்ஸஸ் மாநிலத்தில் டெஃப் ஸ்மித் மாவட்டம் [Deaf Smith County, Texas] 3. நெவாடா மாநிலத்தில் யூக்கா குன்று [Yucca Mountain, Nevada]. இந்த மூன்று முக்கிய தளங்களும் நில நடுக்க மில்லாத, நிலையான பூதள அமைப்பைப் பெற்றவை! அடித்தள நீரோட்டம் குன்றியவை! செழுமையான நீரோட்ட நில வளங்களுக்கு வெகு தூரத்தில் இருப்பவை! இயற்கையாக அமைந்த தடுப்புகளும், மனிதன் படைத்த தடைகளும் ஒன்றாய் இணைக்கப் பட்டு இரட்டைப் பாதுகாப்பு அரண்கள் கொண்டவை!

    பூமிக்குக் கீழே 2000 முதல் 4000 அடி வரை உள்ள ஓர் ஆழச் சுரங்கத்தில் கற்பாறையைக் குடைந்து, செதுக்கப் பட்டுள்ள ஒரு பெரிய குகையில்தான் அணுப்பிளவுக் கழிவுகளைப் புதைப்பதாய் திட்டம் உருவானது! 1998 வரை மதிப்பீடான 66,000 டன் மேல்நிலைக் கழிவுகளைச் சேமிக்கும் கிடங்குகளுக்கு 10 கால் பந்தாட்டத் திடல் நீளமும், 16 அடி ஆழமும் கொண்ட கொள்ளளவு தேவைப்படுகிறது. இரண்டு சதுர மைல் அல்லது 2500 ஏக்கர் நிலம் பரப்புள்ள கிடங்கு தீய்ந்த யுரேனிய எருக்களைப் புதைக்கப் போதுமானது.

    இந்திய அணு உலைக் கழிவுகளின் நீண்ட காலப் புதைப்புத் திட்டங்கள்!

    இந்தியாவில் 20 அணுமின் உலைகளும், ஒரு சில ஆய்வு அணு உலைகளும் [5 அல்லது 6], ஒரு வேகப் பெருக்கி அணு உலையும் இயங்கி ஏராளமான கொள்ளளவுத் தீய்ந்த எருக்கள் இதுவரை சேர்ந்துள்ளன! அத்துடன் மூன்று மீள் சுத்திகரிப்புத் தொழிற் கூடங்களும் மிகையான அணுவியல் கழிவுகளைச் சேமித்துக் கொண்டு வருகின்றன. ஆனால் பெருகிக் கொண்டு போகும் அணுப்பிளவுக் கழிவுகளின் மொத்த எடையளவு அல்லது, கொள்ளளவு எவ்வளவு என்று பாரதம் இதுவரை மக்கள் தெரிந்து கொள்ள வெளியிட்டதாக அறியப் படவில்லை! மேலும் அணுவியல் கழிவுகள் எங்கே, எப்படி நீண்ட காலப் புதைப்புக் கிடங்குகளில் அடக்கமாகப் போகின்றன என்றும் மாந்தருக்கு விளக்கம் செய்திருப்பதாகத் தெரிய வில்லை!

    உலகில் தற்போது [2000 ஆண்டு வரை] 438 அணுமின் உலைகள் இயங்கி வருகின்றன! அமெரிக்காவில் இயங்கும் 114 அணு உலைகளில் மட்டும் இதுவரை உண்டான மேல்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகளின் எடை 52,000 டன் என்று மதிப்பீடானால், உலகெங்கும் சேர்ந்துள்ள அபாய நச்சுக் கழிவுகளின் எடை 200,000 டன்னுக்கும் மேற்பட்டதாகவே இருக்கும் என்று எளிய முறையில் பெருக்கிக் கணக்கிட்டு விடலாம்! அமெரிக்கா, கனடா போன்ற மேலை நாடுகளைப் பின்பற்றி, பாரதமும் மற்ற உலக நாடுகளும் அணுவியல் கழிவுகளைப் பாதுகாப்பாகப் புதைக்க ஏற்பாடுகள் செய்யலாம்! அல்லது ஆஸ்டிரியா, வியன்னாவில் உள்ள ‘அகில நாட்டு அணுத்துறைப் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] இயற்றிய நெறிகள், விதி முறைகளைக் கையாண்டு தமது நாடுகளில் அப்பணியை நிறைவேற்றலாம்!

    இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணையகம் இதுவரை வெளிடாத விபரம்!

    இந்தியாவில் தமிழ்நாடு கூடங்குளத்தில் உருவாகி இயங்கப் போகும் ரஷ்யாவின் இரட்டை [1100 MWe ஆற்றல் கொண்ட] அணுமின் உலைகளில் ஒன்று ஓராண்டுக்கு முழு ஆற்றலில் இயங்கினால் சுமார் 100 கன அடிக் [cu.ft] மேல்நிலைக் கழிவு விளையும்! உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவான [High Level Radioactive Waste] அந்தக் கொள்ளளவில் 20 மில்லியன் கியூரி [curie] நீள் ஆயுள் கதிரியக்கம் [long Half Life Radioactivity] எழுகிறது! அவை 67,000 வாட்ஸ் [watts] வெப்பத்தை வெளியேற்றி நாளடைவில் வெப்பம் குறைந்து கொண்டே வரும். இரட்டை அணு உலைகள் (2200 மெகா வாட்) 10 ஆண்டு இயங்கினால், 2000 கன அடி அணுவியல் கழிவுகள் சேரும்!

    இதுவரை (2012 ஜனவரி) 20 அணுமின் உலைகளும், சில ஆராய்ச்சி அணு உலைகளும் 30 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை இயங்கி இடையிடையே பாராமரிப்புக்கு நிறுத்தமாகி மீண்டும் இயங்கி வந்துள்ளன! அத்துடன் மூன்று தீய்ந்த எரு சுத்திகரிப்புக் கூடங்கள் [Spent Fuel Reprocessing Plants], எருக்கோல் வடிப்புச் சாலைகள் [Fuel Bundle Fabrication Plants], யுரேனியச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்கள் [Uranium Separation Plants] ஆகியவை தினமும் கதிர்வீச்சுக் கழிவுகளை விளைவித்து வருகின்றன!

    2001 ஆண்டு முடிவு அறிக்கையில் [2001 Annual Report] கூட உயர்நிலை, இடைநிலை, கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் எத்தனைக் கன அடி, திரவக் கழிவுகள் எத்தனை காலன், திடக்கட்டி ஆக்கப்பட்ட கழிவுகள் எத்தனை டன் என்னும் விபரங்களைத் தவிர இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணையகம் [Atomic Energy Regulatory Board] மற்ற நிகழ்ச்சிகளை வெளியிட்டிருக்கிறது! முக்கியமாக உயர்நிலைக் கழிவுகள் எங்கே, எப்படி நிரந்தரமாக அடக்கம் செய்யப் படுகின்றன என்னும் முக்கிய விபரங்கள் இந்திய அணுத்துறை வலை முகப்புகளில் தேசீய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எதனிலும் காணப்படுவதில்லை!

    USA Hydrogen Bomb Testing Wastes Burial

    அணுக்கதிர் கழிவுகள் பாதுகாப்புப் புதைப்பில் வரிப்பண இந்தியர் பொறுப்பு

    இந்தியரில் சிலர் அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் இயக்கத்தை அறவே வெறுத்து வருகிறார். சிலர் அவற்றிலிருந்து வெளிவரும் பேரளவு வெப்பசக்தியில் மின்சாரம் உற்பத்தி செய்வதை வரவேற்கிறார். 1974 முதல் அணு ஆயுதங்களைத் தயாரித்து இந்தியா அண்டைப் பகை நாடுகளைப் பயங்காட்ட அணு ஆயுதங்களைத் தேசியப் பாதுகாப்புக்குப் பதுக்கி வைத்துள்ளது. கடந்த 50 ஆண்டு களாய்ச் சுமார் 25 அணு உலைகள் (20 அணுமின் உலைகள் + 5 அணு ஆய்வு உலைகள்) இயக்கத்தாலும், அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான அணுப்பிளவுக் கழிவுச் சுத்தீகரிப்புச் சாலைகள் இயக்குவதாலும் விளையும் கதிரியக்கக் கழிவுகள் போதிய கவசங்களோடு பாதுகாப்பாய் சுமார் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் நீர்த் தடாகங்களில் சேமிப்பாகிக் கண்காணிக்கப் பட வேண்டும். வெப்ப வீச்சு தணிந்த பிறகு அவை யாவும் காங்கிரீட் தொட்டிகளில் அடைக்கப்பட வேண்டும். இறுதியாக அந்தத் தொட்டிகள் சுரங்கக் குகைகளில் அமைக்கப் பட்ட நிரந்தரப் புதைப்பு இடத்துக்கு அனுப்பப் பட வேண்டும். அணு உலைகளை எதிர்ப்பவரும், ஆதரிப்பவரும், அணு ஆயுத வெறுப்பாளரும், ஏற்பாளரும் இந்தியாவில் இதுவரைச் சேமிப்பானதும், இனிமேல் சேமிப்பாகப் போகும் அணுக்கதிர் கழிவுகளையும் இந்திய அரசாங்கம் நிரந்தரக் குகையில் புதைப்பதை மனக் கசப்போடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து வரிப்பணம் செலுத்தும் இந்தியர் எவரும் தப்பி நழுவ முடியாது. இந்த இடர் வினைகளைத் தடுக்கவும் கூடாது; தவிர்க்கவும் இயலாது.

    +++++++++++++++++++

    தகவல்:

    1. The Lethal Legacy of America ‘s Nuclear Wastes, National Geographic [July 2002]

    2. Nuclear Power – A Rational Approach By: Robert W. Deutsch [1987]

    3. Radioactive Waste Disposal – Global Experience & Challenges

    4. U.S. Regulatory Commission – Radioactive Wastes [June 23, 2003]

    5. Transportation of Spent Nuclear Fuel

    6. An Introduction to the Atomic Energy Control Board, Canada.

    7. Nuclear Energy in Canada By: J.A.L. Robertson [July 1984]

    8 http://cqresearcherblog.blogspot.com/2011/01/is-transporting-radioactive-waste.html Is transporting radioactive waste dangerous? (January 28, 2011)

    9 http://www.nrc.gov/waste/spent-fuel-storage/faqs.html Spent Fuel Storage in Pools and Dry Casks Key Points and Questions & Answers (April 29, 2011) US NRC

    10 http://en.wikipedia.org/wiki/Dry_cask_storage (November 20, 2011)

    11. http://en.wikipedia.org/wiki/Yucca_Mountain_nuclear_waste_repository (Yucca Mountain nuclear waste repository) February 22, 2012)

    12. http://en.wikipedia.org/wiki/Spent_fuel_pool Spent Fuel Storage Pool (February 20, 2012)

    13 http://www.nrc.gov/waste/spent-fuel-storage.html (NRC Storage of Spent Nuclear Fuel)

    ***************************

    Share
  • தசாவதாரம்

    –கவிஜி.

    கவிஜிசாய்பாபா காலனி, சிவனாந்தா காலனி, சிங்காநல்லூர், உக்கடம், கணபதி, சரவணம் பட்டி, ஒன்டிபுதூர், மலுமிச்சம்பட்டி, கணுவாய், பீளமேடு…இந்த பத்து இடத்திலயும் இருப்பேன், தசாவதாரம் மாதிரி…. நீ தான் புத்திசாலியான போலிஸ் ஆச்சே…. கண்டு பிடிடா பாக்கலாம்… இப்போ சொல்றேன்டா.. இந்த முறையும் நீ என்னை பிடிக்க முடியாது…….. ஏன்னா….. எப்பவும்… நான் உன்ன விட ஒரு படி மேலடா.. என் நண்பனே…….. தில் இருந்தா நீ மட்டும் வா…. வந்து என்னை கண்டு பிடி…ஏன்னா… இந்தப் பத்து இடத்திலயும் விநாயகர் கோயில் இருக்குடா…. சாமி முக்கியம் நண்பரே…. நாளைக்கு காலைல 10 மணிக்கு…..ரெடியா…….. ஜூட்….. சொல்லிட்டு அடிக்கறது தான் என் ஸ்டைல்டா.. போலிஸ் நண்பனே….

    ஜிந்தா….

    கடிதம் படித்த மித்ரனால் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை……. ஜிந்தா, மித்ரனின் வாழ்நாளில்… மறக்கவே கூடாத, முடியாத அவனின் பால்ய நண்பன்.. ஒரே பள்ளிக் கூடம்….அருகருகே வீடு.. படிப்பு, விளையாட்டு, வினை.. எல்லாவற்றிலும் ஆள் மாறி ஆள் என்று நம்பர் ஒன்னுக்கான போட்டி அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருக்கும்…… காலத்தின் வசத்தில் மித்ரன் போலிஸ்.. ஜிந்தா கொள்ளைக்காரன்….போன முறை ஜிந்தா ஜெயித்தான்… இந்த முறை மித்ரன் ஜெயித்தே ஆக வேண்டும்…

    மித்ரனின் மனம் ஆள் அற்ற தண்டவாளமாய் தடதடத்தது….

    “சார்… பத்து இடம்தான….. பத்து இடத்திலயும் இருக்கற விநாயகர் கோயிலுக்கு போலிஸ் ப்ரோடேக்சன் குடுக்கலாம்… மாட்டிக்குவான் சார்….”

    “இல்ல ரத்னம்… போலிஸ் இருக்கறது தெரிஞ்சா அவன் வரவே மாட்டான்… அதுதான் ஸ்பெசிபிக்கா என்னை மட்டும் கூப்டறான்..அவனுக்கு என்னை ஜெயிக்கணும்… சோ நான் தனியா போகற மாதிரி இருந்தா கண்டிப்பா வருவான்….அவன எனக்கு நல்ல தெரியும்… ஜெய்க்கறதுக்காக என்ன வேணாலும் செய்வான்…..”

    ……………………………………………………………………….

    “நானே போகணும் ரத்னம்… போய் அவன புடிச்சு, அடிச்சு ரோட் ரோடா… நாய இழுத்துட்டு வர்ற மாதிரி இழுத்துட்டு வந்தாதான் போலிசா இருக்கற என்னை எதுக்கற அந்த திமிருக்கு தீனி போட்ட மாதிரி இருக்கும்…”என்ற மித்ரனின் கண்கள் சிவந்து கிடந்தன…

    “அப்டினா.. எப்டி சார்… பத்து இடம்… பத்துல, ஒரு இடத்துல இருக்கற விநாயகர் கோயிலுக்குக்கு கண்டிப்பா வருவான்… ஆனா, நீங்க எப்டி அந்த ஒரு இடத்தை கண்டு பிடிக்க முடியும்… நம்ம டீம் மப்டில ஒளிஞ்சிருந்து, அவன் எங்க வந்துருக்கான்னு கண்டு பிடிச்சு உங்களுக்கு சொன்னாலும், நீங்க அப்போ வேற இடத்துல இருந்தீங்கன்னா….அங்க இருந்து இந்த குறிப்பிட்ட இடத்துக்கு வரதுக்குள்ள அவன் போய்டுவான்… சோ ஹௌ சார்…?….எப்படி சாத்தியம்….?…..”

    ரத்னம் பேச பேச மித்திரன் யோசித்துக் கொண்டே கண்களை மூடினான்…

    அடுத்த நாள் காலை 10 மணி….

    சொன்னது போலவே ஒண்டிபுதூர் விநாயகர் கோயிலுக்குள் இருந்து பிடித்து வெளியே இழுத்து வரப்பட்ட ஜிந்தாவை அடித்து துவைத்து இழுத்து வந்தான் மித்ரன்…

    எப்படி எப்படி.. எப்படி….?

    அந்த எப்படி ஜிந்தாவுக்கும் இருந்தது…கேட்டும் விட்டான்…. எப்டிடா கண்டு பிடிச்ச ………………………….?………வாயிலேயே மிதித்தான் மித்திரன்…

    “கெட்ட வார்த்தை பேசின….”………….என்று சொல்லிக் கொண்டே பூட்ஸ் காலால் முகத்தை நசுக்கினான்….

    ஜிந்தாவுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது…

    “சொல்லுடா.. எப்டிடா கண்டு பிடிச்ச….?”என்றான் மிகவும் அதிர்ந்தவனாக….. தான் தோற்று விட்ட வலி கோபமாய் வார்த்தையில் சத்தமாக வெளிப்பட்டது…

    ரத்னம் உள்பட அனைவருக்குமே காவல் நிலையத்தில் அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான்….

    “ஹ ஹஹா….. டேய்… ஜிந்தா…. நீ இங்கிலீஷ்ல எவ்ளோ பெரிய பருப்புன்னு எனக்கு தெரியுண்டா….. ஆனா ஒண்டிபுதூர்க்கு ஸ்பெல்லிங் ஏண்டா தப்பா எழுதின… அவ்ளோ நடுக்கமா… dக்கு பதிலா t…போட்ருக்க….”என்றபடியே நடந்து சென்று மீண்டும் ஒரு மிதி வைத்தான்…. மித்ரன்….

    “போலிஸ்டா… பொறுக்கி இல்ல….”

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 56

    டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம்(3), பாயார்ன், ஜெர்மனி.

    முனைவர்.சுபாஷிணி

     

    ஒரு சக மனிதரைத் தாக்கி வதைத்தல் என்பது வன்மம் நிறைந்த மனதிற்கு மட்டுமே கைகூடும். அப்படி அமைந்தவர்களில் சிலர் இந்த டாஹாவ் மனித சித்ரவதை முகாம்களில் அதிகாரிகளாகப் பணியாற்றியிருக்கின்றார்கள். அவர்களில் யோஹான் கான்ஸூஸ்டர் என்பவர் ஒருவர். இவர் டாஹாவ் முகாமில் 1933 முதல் 1939 வரை பணியில் இருந்தார். பங்கரில் வார்டனாகப் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். சிறைக்கதிகள் இவரின் மேல் மிகுந்த பயம் கொண்டிருந்தனர் எனக் குறிப்புக்கள் சொல்வதிலிருந்து கொடுமையான நடைமுறைகளை நிகழ்த்தியவராக இவர் இருந்திருப்பார் என்பதை அறியமுடிகின்றது. சிறைக்கைதிகளில் சிலரையும் இவர் கொன்றிருக்கின்றார் என்ற கூடுதல் தகவலும் இவர் பெயருடன் இணைந்திருக்கின்றது. இவர் அமெரிக்க ராணுவத்தினர் முகாம் பகுதிக்கு 1945ம் ஆண்டில் வருவதற்கு முன்னரே முகாமிலிருந்து வெளியேறிவிட்டார் என்பதோடு அவர் காணாமல் போய்விட்டார் என பெர்லின் ஆர்க்கைவின் குறிப்பு தெரிவிக்கின்றது.

    as

    இவரைப் போன்ற இன்னொருவர் ஜோசப் ஷோய்ஸ். இவரும் இந்த முகாமில் ஒரு சிறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். 1938 முதல் 1942 வரை இங்கே முகாமில் பணியில் இருந்திருக்கின்றார். இவரும் கொடுமையான வகையில் சிறைக்கைதிகளைச் சித்ரவதைச் செய்து கொன்றவர். இவர் அமெரிக்க ராணுவத்தினரால் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு 1946ம் ஆண்டு கொலைக்குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தூக்குத்தண்டனை வழங்கி கொல்லப்பட்டார்.

    யோஹான் கிக் என்பவர் 1937 முதல் 1945 வரை இந்த முகாமில் அரசியல் அமைப்பின் தலைவராக (Gestapo) பணியாற்றியவர். இவர் சிறைக்கைதிகளை மிக மோசமாக நடத்தியவர் என்ற குறிப்பு உள்ளது. அது மட்டுமன்று. சிறைக்கைதிகளில் பலரைக் கொன்றவர் என்ற தகவலும் கிடைக்கின்றது. மிகக் கொடூரமான நாஸி அதிகாரியாகச் செயலாற்றியிருக்கின்றார். இவர்களைப் போல இந்த முகாமில் இருந்தவர்கள் பலரது குறிப்புக்களை இந்த பங்கர் பகுதி அருங்காட்சியகத்தில் காண முடிகின்றது.

    அமெரிக்க ராணுவம் இப்பகுதியைக் கைப்பற்றி சிறைக்கைதிகளை விடுவித்த பின்னர் இந்த டாஹாவ் மனித சித்ரவதை முகாம் அமெரிக்க ராணுவ மையமாக மாற்றப்பட்டது. இங்கே தான் நாஸி குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்கள். இது ராணுவ சிறையாக சில ஆண்டுகள் செயல்பட்டது என்பதை இங்குள்ள குறிப்புக்கள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. இங்கே அரசியல் கைதிகளைத் துன்புறுத்தி கொலை செய்த இடத்திலேயே அங்கு பணியாற்றிய சில அதிகாரிகள் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு இங்கே காவலில் வைக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டனர். ” வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்” என்பதற்கு ஏற்றார் போன்ற நிலை தான் இவர்களுக்கு ஏற்பட்டது.

    ஜெர்மனியில் நாடு முழுமைக்கும் நாஸி போர்குற்றங்களில் ஈடுபட்டோர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிலர் தூக்கு தண்டனை வழங்கி கொல்லப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் சிறைவாசம் மேர்கொண்டனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தப்பி ஓடி விட்டனர். எங்கே இருக்கின்றார்கள் என்ற விபரமே அறியாத வகையில் சில கேஸ்கள் இன்னமும் முடியாமலேயே இருக்கின்றன.

    as1

    கைதிகள் தங்கியிருந்த அறையில்

    1942ம் ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் மட்டும், அதாவது 5 மாதங்களில், சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு வரப்பட்ட அரசியல் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 109,861. இவர்களில் 70,610 பேர் இறந்து போனவர்கள். விடுவிக்கப்பட்டவர்கள் 4711 பேர். கொல்லப்பட்டவர்கல்ள் 9267. இதில் இறந்து போனவர்கள் என்போர் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தவர் என்றும் கொல்லப்பட்டவர்கள் தண்டனை கொடுக்கப்பட்டு உடன் உயிர் பறிக்கப்பட்டவர்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மிக அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் கொல்லப்பட்டதால் அவர்களை எறிக்க பயன்படுத்தும் வகையில் முகாம்களின் அருகிலேயே பிண எரிப்பு ஆலைகளையும் நாஸி அரசு கட்டியது.

    as2

    பிண எரிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சவக்கிடங்கு

    1942 முதல் நாஸி அரசு மிக அதிகமான அளவில் அரசியல் கைதிகளைப் பிடித்து சிரை வைத்து சித்ரவதைச் செய்யும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தது. நாஸி அரசு என்பது இப்போதைய ஜெர்மனி என்பதைக் கடந்து பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா, லித்துவானியா, போலந்து, நெதர்லாந்து என்ற வகையில் விரிந்த ஒரு நிலப்பகுதியாக மாறி இருந்தத காலகட்டம் அது. ஆக டாஹாவ் சித்ரவதை முகாம் போல இந்த ஏனைய நாடுகளிலும் சித்ரவதை முகாம்கள் உருவாக்கப்பட்டு யூதர்களும் நாஸி அரசை விமர்சிக்கும் மக்களும் பிடித்து சிறைவைக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டனர்.

    இந்தக் கொடுமைகளோடு மேலும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது 1944ம் ஆண்டு நவம்பர் மாதம் பரவிய தொற்றுநோய். கொத்து கொத்தாக சிறைக்கைதிகளில் பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அவர்களின் சடலங்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போய் சுடலையில் எரித்து முடித்தனர் முகாம் பணியாளர்கள். அது போல பல சிறைக்கைதிகள் காசநோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களை 20 பேர் ஒரு குழு என்ற வகையில் பாதிக்கப்பட்டோரை விஷ மருந்து ஊசி போட்டு கொன்றிருக்கின்றனர்.

    as3

    இறந்த கைதிகளின் சடலங்கள்

    சித்ரவதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள் பல்வகை தொழில்களைச் செய்ய ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களில் உடல் நிலை மிக மோசமாக ஆனவர்களை மருந்து கொடுத்து பாதுகாத்து காப்பாற்ற கண்காணிப்பாளர்கள் விரும்புவதில்லை. அவர்களைக் கொடுமையான வகைகளில் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்துவது போன்ற பயங்கரவாத செயல்களிலும் நாஸி அரசு ஈடுபட்டது. எப்படி முயல், எலி, நாய், குரங்கு போன்ற விலங்குகளுக்கு பல வகை மருந்துகளைக் கொடுத்து சோதனைச் செய்தார்களோ அதே போல இந்த கால கட்டத்தில் அரசியல் கைதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இவ்வகைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதை அறியும் போது மனம் அதிர்ச்சியில் உறைந்து போகின்றது. இந்த முகாம் இப்படி நிகழ்த்தப்பட்ட சோதனைகளைப் பற்றியும் எல்லா தகவல்களையும் வழங்கியிருப்பதை நினைக்கும் போது வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

    இப்படி கொடூரங்களின் இருப்பிடமாக 12 ஆண்டுகாலம் இந்த சித்ரவதைமுகாம் செயல்பட்டிருக்கின்றது. நாஸி ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் எல்லா முகாம்களிலும் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    ஜெர்மனி படிப்படியாக பல அரசியல் மாற்றங்களை 109ம் நூற்றாண்டில் சந்தித்தது. நாஸி அரசு மறைந்தாலும் இன்றளவும் நாஸி கொள்கை முற்றிலுமாக ஜெர்மனி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும் இது இயங்குகின்றது என்பதை பொது மக்கள் அறிவர். அரசு மிகக் கடுமையான சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு தீவிரவாதிகளைக் கைது செய்வதும் நடக்கின்றது.

    எனது அனுபவத்தில் கடந்த 18 ஆண்டுகளில் கிழக்கு ஜெர்மனியில் இயங்கும் சில நாஸி கொள்கை சார்பு அமைப்புக்கள் மேற்கொண்ட சில வன்முறை சம்பவங்களைப் பற்றி ஊடகங்களின் வழி கேள்விப்பட்டிருக்கின்றேன். அரசின் தீவிரக் கண்காணிப்பில் இந்த அமைப்புக்கள் இருக்கின்றன.

    இன்று டாஹாவ் சித்ரவதை முகாம் சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமல்லாது உள்ளூர் மக்களுக்கும் வரலாற்றை அவர்களுக்கு பாடமாகப் புகட்டும் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கின்றது. தாம் யூதர்களுக்கு இழைத்த கொடுமையை சான்றுகளோடும் அறிக்கைகளோடும், புகைப்படங்களோடும் ஜெர்மானிய அரசு இங்கே விரிவாக வெளியிட்டுள்ளது.

    as4

    நினைவகத்தின் வாசலில்

    ஜெர்மனிக்கு வருபவர்கள் தவறாது பார்க்க வேண்டிய அருங்காட்சியகங்களில் இதனையே முதன்மை இடத்தில் வைக்க வேண்டும் என தயங்காது பரிந்துரைப்பேன்.

    அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அனேகமாக நாம் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் நாடு ஒன்றிற்குத்தான் செல்லவிருக்கின்றோம். எதுவாக இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள்!!

    தொடருவோம்

    Share