செண்பக ஜெகதீசன்

 

 

பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்

தீராமை யார்க்குங் கயிறு.

     -திருக்குறள் -482(காலமறிதல்)

 

புதுக் கவிதையில்…

 

காலமறிந்து

கடமையைச் செய்..

 

உரிய காலத்தில்

ஒன்றி முயல்வது,

செல்வம் நம்மை

விட்டுச் செல்லாதிருக்கக்

கட்டிவைக்கும் கயிறாமே…!

 

குறும்பாவில்…

 

காலமறிந்து கடமை செய்வது,

செல்வம் விட்டுச்சென்றிடாமல்

கட்டிடும் கயிறு போன்றதே…!

 

 மரபுக் கவிதையில்…

 

செல்வம் என்றும் நில்லாமலே

     சென்று கொண்டே யிருப்பதினால்

நில்லெனத் தடுத்துக் கட்டியேதான்

     நிறுத்திடும் கயிறது வேறில்லை,

நல்ல செயலது தொடங்குமுன்னே

     நாளும் நன்மை பெற்றுத்தரும்

வல்லமை மிக்க காலத்தினை

     வகையாய் அறிந்து செயல்படலே…!

 

லிமரைக்கூ…

 

காலமறிந்து செய்திடு கடமை,

அதுதான் கயிறாய் கட்டியே

செல்வமதை ஆக்கிடுமுன் உடமை…!

 

கிராமிய பாணியில்…

 

கடமயச்செய்யி கடமயச்செய்யி

காலமறிஞ்சி கடமயச்செய்யி,

காலத்த நல்லதாத் தெரிஞ்சிக்கிட்டே

கடமயநீயும் தொடங்குனாலே

கட்டாயம்வெற்றி வந்துசேரும்..

 

அது,

பாடுபட்டு சேத்தசெல்வம்

பறிபோவாம கெட்டிப்போடும்

பெலமாவுள்ள கயறேதான்

பொருத்தமான தொணயேதான்..

 

அதால,

கடமயச்செய்யி கடமயச்செய்யி

காலமறிஞ்சி கடமயச்செய்யி…!

 

-செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க