Featuredஇலக்கியம்பத்திகள்

கற்றல் ஒரு ஆற்றல்  (17)

க. பாலசுப்பிரமணியன்

விளையாட்டு முறையில் கல்வி

education1

விளையாட்டு முறையில் கல்வி கற்கும் பொழுது அது மனதிற்கு இனியதாகவும் ஏற்புடையதாகவும் மன அழுத்தங்களிலிருந்தும் வேறு எதிர்பார்ப்புகளிலிருந்தும் விடுபட்டதாகவும் அமைகின்றது .உலகில் உள்ள பல நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்த உண்மையை உறுதி செய்கின்றன.

ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பின் பற்றிய பொழுது வீட்டில் உள்ள முதியவர்கள் – தாத்தா பாட்டி, அத்தை, மாமா போன்றவர்களும் தாய் தந்தையரும் குழந்தைகளுக்கு  விளையாட்டாக பல உண்மைகளை விளக்கி வந்தனர். சிறிய கதைகள் பாடல்கள் விடுகதைகள் மூலம் அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை, உறவு பேணுதல், நல்லொழுக்கம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இவைகள் நித்தம் விளையாட்டான எளிதான முறையில் வந்ததால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்க்கை கலைகளோடு இணைந்து நின்றன.

தாய் உணவு ஊட்டும் குழந்தைக்கு ” நிலா, நிலா ஓடி வா ” என்ற பாடலை பாடிக் காட்டும் பொழுது அந்த நிலவைப் பார்க்கின்ற குழந்தைக்கு கவனம், வியப்பு, ஆர்வம் மற்றும் அன்றாட இயற்கையை புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது “Twinkle Twinkle Little Star ” என்று நட்சத்திரங்களை காட்டிப் பாடிய பொழுது நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மறைமுகமாக அறிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பாடலில் உள்ள “Wonder” என்ற வார்த்தை வியப்பை ஊக்குவிப்பதாக இருந்தது. “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,’ என்ற கவிஞரின் பாடல் மனிதனின் வியப்பின் உண்மையை விளக்குகிறது . பேரறிஞர் அரிஸ்டாடில் மனிதனின் வளர்ச்சிக்கும் அவனுடைய படைப்புத் திறனுக்கும் இந்த வியப்பை அடிப்படையாகக்  கருதுகின்றார். ( Sense of wonder of  wander ).

“நட்சத்திரங்களைப்  பார்க்கின்ற குழந்தை அதனுடைய மின்னும் செயலைக் கண்ட பின்  இங்கே ஒன்று, அங்கே ஒன்று மற்றும் அங்கே ஒன்று என்று தொடர்ந்து கண்களை அலைய விட்டு தேடலில் ஈடுபடுகின்றது. மூளையின் வளர்ச்சிக்கு வியப்பும் தேடலும் மிகவும் ஊட்டத்தை அளிப்பதாகவும் வளர்ச்சிக்கு படிகளாகவும் அமைகின்றன.

“தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு ” என்று ஆரம்பித்து பாடிய பொழுது எண்ணிக்கை, கணிதத்தின் அடிப்படை கருத்துக்கள், உறவு பாராட்டல், பகிர்ந்து கொள்ளும் உணர்வு ( caring and sharing ) போன்ற பல வித கருத்துகள் விளக்கப்பட்டு உணர்வுகளோடு ஒன்றி வளர்ந்தன. தற்போதைய நிலையில் இந்த பல அருமையான உணர்வு சார்ந்த கருத்துகள் குடும்பங்களிலிருந்து குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. மற்றும் தாய் மொழி அற்ற மற்ற மொழிகளில் கற்றுக்கொள்ளும் பொழுது அவைகள் அதிகமான அளவில் உணர்வுகளோடு ஒன்றுவதில்லை.

கற்றல் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான செயல் அதற்கு மனம், மூளை மற்றும் உடல் அனைத்தும் சேர்ந்து ஈடுபடுதல் அவசியம்

கற்கப்படும் கருத்துக்களோடு கற்பவர்களின் ஈடுபாடும் ஈர்ப்பும் ( Effective engagement  of the learner) கற்றலின் அளவையும் திறனையும் அதிகரிக்கின்றன.

விடுகதைகள் சிந்தனையைத் தூண்டும் சிறு கேள்விகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது மற்றுமின்றி அவர்களுக்கு வெவ்வேறு விதமான சிந்தனைத் திறன்களைத் தூண்டுகின்றன. பொதுவாக பெரியவர்கள் குழந்தைகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தையும் சில கேள்விகள் அவர்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றும் கருதுகின்றனர். ஆனால் மூளை வளர்ச்சியை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்களோ மூளை எப்பொழுதும் புதிய சாதனைகளுக்காகவும் சந்தர்பங்களுக்காகவும் காத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

ஒரு பள்ளியில் ஆரம்ப வகுப்பிற்குச் சென்ற ஒரு பேராசிரியர்  ஒரு மாணவனிடம் உனக்குத் தெரிந்த கதை ஒன்று சொல் என்று வினவ அந்தச் சிறுவன் ‘காக்கையின் தாகம் என்ற கதையைச் சொல்லி எவ்வாறு அந்தக் காகம் அருகிலிருந்த சிறிய கற்களை உபயோகித்து தண்ணீரை மேலே கொணர்ந்து தாகத்தை தணித்துக் கொண்டது என்று விளக்கினான். அந்தப் பேராசிரியரோ அந்த இடத்தில் கற்கள் இல்லாமலிருந்தால் அந்தக் காகம் என்ன செய்யும் என்று கேட்க ஒரு மாணவன் ” அந்தக் காகம் சற்றே பறந்து தன இறக்கைகளால் அந்தப் பானையைத் தள்ளிவிட்டு வழிந்து வரும் நீரைக் குடிக்கும் என பதில் சொன்னான். மற்றொருவனோ அந்தக் காக்கை தன அலகுகளால் அந்தப் பாண்டத்தை குத்தி ஓட்டை ஒன்றை உண்டாக்கி அதிலிருந்து வரும் நீரை குடிக்கும் என்று சொன்னான்  இன்னொரு மாணவனோ காகம் அருகிலிருந்த குப்பைத்தொட்டியிலிருந்து ஒரு குழலை (Straw)வைக் கொண்டுவந்து தண்ணீர் கடிக்கும் என்று சொன்னான். கேள்வி  ஒன்றுதான்……சிந்தனைகள் பலவிதம். விளையாட்டு முறையிலும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் பள்ளிகள் பாடங்களை நடத்தினால் கற்றல் தற்காலிக நினைவிலிருந்து நிரந்தர நினைவாக மாற வாய்ப்புண்டு

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க