Month: May 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    அற்புதம் கேசவ்….பஞ்ச புலன்கள் பஞ்சாய்ப் பறக்க ஈருடல் ஓருயிராய் கறவை-கிருஷ்ணர் இணைந்து புரியும் கெளரவமான குரு ஷேத்திரம்….சபாஷ் கேசவ்….

    KRISHNA FOR TODAY….
    —————————————-

    1d4edbbb-5472-4e9a-9f03-5772ed6dd1f5

    “ஆள்பாதி ஆனதால் ‘ஆ’ பாதி ஆனது,
    தோள்வழி தேடல் திருவடி : -வாள்விழி
    ராதையாய் மாறியது, ரங்கன்தோள் ஏறியது
    கீதைவாத் ஸல்யம் கறப்பு”….

    “”காரிருள், வெண்நிலவாய் கண்ணன் பசுவோடு
    ஈருடல் ஓருயிராய் இன்பமாய், -வேறுலகில்
    மானஸஸஞ் சாரம் மனதை மயக்குது
    நானசைவு இல்லாத நட்பு”….

    “பசுவுக்கும் கண்ணன் பகவான், பறக்கும்
    கொசுவுக்கும் கண்ணன் கடவுள், -விசுவத்தில்
    நாம்பசு ஆனாலும், நாம்கொசு ஆனாலும்
    CALMசிசு வாயவன்கை குந்து”….கிரேசி மோகன்….

    “இருக்கானால் இல்லை இறையும் ,இரையும்
    கருப்பிலே வெள்ளை கலப்பு: -இருப்பதன்(Delight of Existence)
    தாத்பர்யம் என்னவென்றால் தானாய் இருத்தலென்றான்
    வாத்சல்ய பாக வதன்” …. கிரேசி மோகன்….

    Share
  • ஹேமலேகையின் ஐயன் வழி

     

    திவாகர்

    6517a4a5-5557-49c9-b648-65f578c3fffd
    புராணக்கதைதான் இருந்தாலும்
    புனிதவதியின் கதையாம் கேளீர்
    ஹேமலேகை அவள் பெயர்
    வாய்த்தவன் பெயரோ ஹேமரூபன்
    பெயர்ப்பொருத்தம் மட்டுமா
    பிரேமப்பொருத்தம் கூட
    அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்?
    அவளன்பிலே கரைந்து போனான்
    மானேயென்றான் தேனேயென்றான்
    மடியில் புரண்டான் மதுவுண்ட
    வண்டுபோல சுற்றிச்சுற்றி வந்தான்
    வான்வழிமறந்து கீழே விழுந்த
    மங்கையே நானுனடிமை என்றான்
    பிரிவில்லை நமக்கென்றான் சற்றே
    பிரிந்தாலும் நீரகன்ற மீனாகி
    துள்ளித் தவித்து மீண்டான்
    நாளாக நாளாக நாட்கள்
    கழிந்தாலும் நாயகியோடு இமைப்
    பொழுதும் எல்லையில்லா இன்பம்தான்

    அவளோ அவனளவு போகத்தை
    விரும்பினாளில்லை.. கேட்டான்
    ஏனிந்த சோகம் பெண்ணே
    ஏனிந்த போகத்தில் மோகமில்லை
    இளமையில் இன்பமும் காதலும்
    கலவியும் காலத்தின் வரம்
    காலம் கரைந்து போனால்
    புலம்புவோம் கலங்குவோமே
    திரும்பவருமோ இந்தசுகம்
    திகட்டிப்போகுமா பேரின்பம்
    எனக்கெனப் பிறந்தவளே
    எனையாளும் தேவதையே
    உன்னழகை என்னால் வர்ணிக்க
    என்நாவில் வாத்தையில்லையே
    சாத்திரத்தில் சொன்னபடி பிரமன்
    பாத்திரத்தில் அமுதெடுத்து முறையாய்
    அளவெடுத்து அழகாய் அங்கமெலாம்
    பளபளவென பாங்காய்ப் படைத்திட்டான்
    எண்ணியெண்ணி ஏங்குகின்றேனென்
    எண்ணத்தில் நிறைந்தவளே ஏனிப்படி
    சோகத்தை சொந்தம் சேர்க்கிறாய்
    சுகத்தைவெறுக்கும் சுந்தரியே
    திருவாய் திறந்து பதில்சொல்வாய்
    திருவாய் உருவாய் வந்தவளே!

    ஹேமை புன்னகைத்தாள் மின்னலே
    இம்மண்ணில் வந்ததாய் மயங்கினான்
    என்னன்புக்குகந்தவரே..அன்பால்
    எனையாளும் பண்பாளரே
    ஏனிந்த பெருமோகம் என்மீது
    என்னதான் என்னிடத்தில் கண்டீரோ
    இதழ்விரிந்த கமலத்தில் இனிப்பான
    மதுவை இடைவிடாதருந்தும் தேனீ
    நிலைமறந்து உண்டு இரவானதும்
    நிலைதெரிந்து கூம்பிய மலருக்குள்
    சிக்கி வெளிவராமல் தவிக்குமாம்
    இடைவிடா யின்பம் நிலைக்குமா
    விடையறிந்தும் அறியா பேதையாய்
    நாளும் என்நினைப்பு இவ்வண்ணம்
    நாளாகநாளாக வலுக்கின்றதே

    மனத்துக்கண் மாசிலா மனையாளே
    முன்வினைப் பயன் அதுவும்
    நல்வினைப்பயனென்று ஒன்றுண்டு
    பல்லாண்டாய் செய்த தவப்பயனும்
    சேர்ந்துமாய் நாமிருவரும் ஒருவரானோம்
    இனி யோசனையேதுக்கடி கண்ணே
    மனக்கிலேசம் வேண்டாமடி பெண்ணே
    நல்லவரே வினைப் பயனைச் சொன்னீர்
    நல்வினையும் தீவினையும் நானும்
    நன்றாகத்தான் அறிவேன் ஆனாலும்
    சென்றுபோன சன்மத்தில் நாம்
    செய்தது எல்லாமும்நாம் அறியோமே
    பாம்பின்கால் பாம்பறியும் என்பதுபோல்
    நாம்யார், நம்வினைகள் எவை
    என்பதுநாம் அறிவோமோ சொல்வீர்
    முன்பிறவி வினையெல்லாம்
    முடிந்தவரை அறிந்துகொள்ள
    படித்தபுத்தகங்கள் ஏதுமுண்டோ
    நல்வினையால் நீர்கிடைத்தீர் நானும்
    பொல்லாவினையை ஏதும் முற்பிறவியில்
    செய்யாதிருந்தேன் என்பது நிச்சயமோ
    நல்வினையால் எனைக்கொண்டீரென்றால்
    சொல்வீரென் தீவினைக்கேற்ற பயனை

    ஆச்சரியமுற்றான் அவனும்
    பேச்சில்லாமல் போனான் கூட
    கற்சிலைபோல் இருப்பவள்மனதில்
    கற்றவரும் அறியா கேள்விகளா
    பேதைபோல இல்லாமல் பெரும்
    மேதைபோல கேட்கிறாளே
    முற்பிறவியில் செய்த வினைகள்
    முற்றும் அறிந்தவர் எவரோ
    நன்மைச்செயலையும் நாம்செய்திருந்த
    இன்மைச்செயலையும் பொறுப்பாய்
    தெரிந்து பொறுமையாய்ச் சொல்வார்
    ஊரில் யாரேனுமுண்டோ
    இருளும் ஒளியும், சோகமும் சுகமும்
    பெருமழையும் கொடும்வெய்யிலும்
    பேரும் பகையும் நல்லதுந்தீயதும்
    சேர்ந்தே வரும் இரட்டையரன்றோ

    நாயகனே..ஏனிந்த மௌனம்
    வாய்திறந்து சொல்லச்சொன்னீர்
    சொல்லிலேதும் தவறுண்டோ
    சொல்லக்கூடாதது சொன்னேனோ
    இன்றுவரும் இன்பமே நாளை
    கொன்றுபோடும் துன்பமாகாதோ
    பிரம்மன் அளவெடுத்த அங்கமெலாம்
    வெறும் பார்வைக்கே விருந்தன்றோ
    நாளை நரையோடிப் போகும்
    வேளைவந்தால் என் தேகமெலாம்
    வெறும் காற்றடைத்த மேனியாய்
    சிரமதசையில் காலத்தின் கோலமாய்
    அலங்கோலமாய் மாறாதோ சொல்வீர்
    காலம்வந்து நம்நிலை காண்பிக்குமுன்னே
    காட்சிகளை கண்டுகொளும் மன
    மாட்சிமை வேண்டாமோ நமக்கு
    காதலாய் இருக்கவேண்டிய காலத்தில்
    ஏதேதோ பேசிவிட்டேன் மன்னியுங்கள்

    கண்ணான கண்மணியே என்னேயுன்
    பெண்ணறிவின் வெளிச்சம்.. அடடா..
    மறுபடியும் சொல்கின்றேன் எந்தன்
    முற்பிறவியின் நல்வினைப்பயனாய்
    இப்பிறவியில் என்னவளாய் வாய்த்தநீ
    செப்பிய மொழியாவும் கேட்டேனே
    அதீதவிருப்பம் அழிவின் எல்லையென
    பதமாய் சொல்லிப் புரியவைத்தாய்
    புத்தியைக் கூர்செய்து பண்படுத்தி
    புதியவனாய் ஆக்கிய புண்ணியவதியே
    இருவினையை உணர்ந்தேனில்லை
    இருந்தாலும் இன்றென் ஆசானாய்
    உன்னிடம் நானுபதேசம் கேட்கின்றேன்
    முன்வினை முற்றும்தீர வழிசொல்வாயே

    எழில்நாயக என்ன வார்த்தையிது
    வழிசொல்ல நானொன்றுமறியேன்
    இருந்தும் நம்பெரியோன் ஐயன்
    பெருவார்த்தையொன்று உள்ளதே
    எல்லாவினையும் நில்லா ஓடுமாம்
    பொல்லாவினையைப் பொடியாக்குமாம்
    இருவினைதானே இளைத்துப்போகுமாம்
    பெருமையாய்ச் சொன்னான் பெரியோன்

    எத்தனைபிறவி எத்தனை எடுப்பினும்
    எத்தனை வினைகள் எத்தனைசெய்யினும்
    நல்லதே நடக்க ஓர்வழியுண்டு
    நல்லோர் நினைவில் என்றுமுறையும்
    இறைவன் என்பவன் ஒருவனுண்டாம்
    இறையை நினைத்து அன்புசெய்தோர்க்கு
    என்றும் குறைவில்லை என்றும்நன்றாம்
    என்றான் ஐயன் அவன்பேர்சொல்வோமே..

    ************************************************

    இருள்சேர் இருவினையும்சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (திருக்குறள்-5)

    இறைவனது மெய்ம்மை பொருந்திய புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவோரிடத்தில் நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘’யத் பாவயதி தத் பவதி’’ போல ‘’கேசவ் எண்ணறார் கண்ணன் ஏளறார்’’(ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்யறான்)….ஷேக்ஸ்பியரின் ”AsYou Like It”போல கேசவ் விருப்பப்படி கண்ணன் அமைகிறார்….

    ‘’For Every Successful Man thaere is A Woman Behind” …..கண்ணன் வெற்றிக்குக் காரணமான பெண்மணி கோமாதா இன்று Behind Kannan….super keeshav
    3575219c-4d13-4daf-b63c-cbe39ac5bf57
     

    ”வண்ணத்தைக்  கொட்டினாலும்,  வாரி இறைத்தாலும்

     கண்ணத்தன்  ஓவியன்  கேசவ்தன் -எண்ணத்தைப்

     போலிங்கு நிற்கின்றான், பாவம் வருடிடக்

    காலில்லாக்  பூர்ணம்பின் கோ(மாதா)’’…..

    “ஸஞ்சிதம் போய்நாம சங்கீர் தனமாச்சு,
      கிஞ்சித்தும் ஆகாமி கர்மமில்லை, -எஞ்சிடும்,
      ப்ராரப்தம் போக்கிட, பாகவத நாயகன் 
      ஷீராப்தி கண்ணன் சரண்”….கிரேசி மோகன்….
     

     

    Share
  • ஹிட்லர் – எங்கிருந்தோ வந்தான்-

    மனோ சந்த்ரா

    c1efbc64-7620-41d8-9732-6e091dce32fe
    இயக்குனர் திரு சுரேஷ் கிருஷ்ணா- சத்யா, அண்ணாமலை, பாட்சா, ஆஹா, சங்கமம், மற்றும் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அவர் முதல்முறையாக பிரத்யேகமாக தொலைக்காட்சிக்காக ஹிட்லர்- எங்கிருந்தோ வந்தான் என்ற டெலிபிலிம் வழங்க உள்ளார்.

    1c0b6302-ceae-4d47-b132-c85551138b1f

    ZEE தமிழ் தயாரிக்கும் இப்புதிய படம் மே 29 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ZEE தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது.

    வெறும் 9 நாளில் படமாக்கப்பட்ட இது குடும்பத்துடன் கண்டுகளிக்க தக்க பொழுதுபோக்கு சித்திரம்… 140 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் 2 இனிய பாடல்களும் உள்ளது.

    dc7904df-5573-4adc-a912-5cc544bfdc9d
    தேவயானி, டில்லி கணேஷ், பரத் கல்யாண், மற்றும் புதுமுகங்களான அர்ஜுன்(துயாய்) மற்றும் பவித்ரா ஆகியோர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர்.

    பாடல்கள் பா. விஜய், இசை – தேவா, நடன அமைப்பு – அசோக் ராஜா, ஒளிப்பதிவு – கணேஷ் குமார், வசனம் – சித்ராலயா ஸ்ரீராம், எடிட்டிங் – ரிச்சர்டு மற்றும் ஆர்ட் டைரக்கடர் – ஆனந்த்..

    சுரேஷ் கிருஷ்ணா இந்த முயற்சி பற்றி பேசும் போது – இந்த மாதிரி குறைந்த பட்ஜெட்டில் தொலைக்காட்சி படம் எடுக்கும் அடிப்படை நோக்கம் என்னவென்றால், பல புதிய எழுத்தாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்புக்கு வழி வகுக்கிறது. சேனல்களுக்குகாக உருவாகும் இப்படங்கள் கலை உலகில் உள்ள பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு தரும் புதிய களமாக அமையும். நச்சுனு சொல்லனும்னா – கிரிக்கெட்டில் IPL போல இதுவும் புதிய திறமைசாலிகளுக்கும், தடம் பதித்த திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் ஒரு திறவுகோல்.

    Share
  • சிவபிரதோஷம்

    “ஓம் நமச்சிவாய”

    மீ.விசுவநாதன்

    images

    பெரிய கடவுள் நீயென்றேன் – உன்னை
    பிச்சாண்டி என்றே அழைக்கின்றார் !
    எரியும் நெருப்பு நீயென்றேன் – மங்கை
    இடத்தில் வைத்த குளிரென்றார் !

    மாயை இல்லா சிவனென்றேன் – உன்னை
    மாயா சக்தி துணையென்றார் !
    சேயை மதித்த அப்பனென்றேன் – உண்ண
    சேயைக் கேட்ட பக்தனென்றார் !

    மீனாள் விரும்பும் நீரென்றேன் – திரு
    நீரைப் பூசும் சித்தனென்றார் !
    வானாள் கங்கை வரனென்றேன் – ஒரு
    வகையில் பெண்ணின் பித்தனென்றார் !

    சுடலை யாண்டி நீயென்றேன் – இமய
    சொத்து முழுதும் உனதென்றார் !
    உடலை வெறுத்த துறவியென்றேன் – உலக
    உயிர்க ளனைத்தும் நீயென்றார் !

    எதற்கும் கலங்கா தவனென்றேன் – பக்திக்
    கெளிதாய் உருகும் மெழுகென்றார் !
    முதற்கும் கடைக்கும் முதலென்றேன்- அட
    மொத்த இருப்பே சிவமென்றார் !
    (பிரதோஷ தினம் : 04.05.2016)

    Share
  • பரம்பரை வீடு

    மீ.விசுவநாதன்

     
    இந்த வீட்டிற் குள்ளேதான்
    என்தாத்தா பாட்டியும் வாழ்ந்தார்கள் !
    வந்த இன்ப துன்பத்தை
    வரவேற்றுச் சிறப்புடன் வென்றார்கள் !
    எந்த வேளை ஆனாலும்
    இருக்கின்ற உணவினைப் பகிர்ந்தார்கள் !
    கந்த வேளை எப்போதும்
    கருத்தினில் வைத்தே கடந்தார்கள் !

    சும்மாப் போக வரும்போதும்
    சுவைப்பதற்கு தட்டை, முறுக்குகளை
    அம்மா செய்து எங்களுக்காய்
    அன்பாக அள்ளியே தந்தார்கள் !
    எம்மாம் பெரிய மனத்துள்ளே
    எப்போதும் கருணை கொண்டார்கள் !
    பம்மாத் தெல்லாம் இல்லாமல்
    பச்சைவயல் போலி ருந்தார்கள் !

    இன்னார் என்று இல்லாமல்
    இரக்கத்தில் உதவிடக் கரம்நீட்டும்
    பொன்னார் குணத்துப் பெரியோர்கள்
    புழக்கத்தில் பொலிகிற இல்லமிது !
    முன்னோர் பாதம் பட்டதனால்
    முத்தாக ஒளிர்கிற இவ்வீட்டில்
    பன்னீர்ப் பூவின் வாசனையை
    பரம்பரையாய் நுகர்ந்திட முடிகிறது !

    (03.05.2016)

    Share
  • இருளும் ஒளியும்!

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    மனிதகுலம் தோன்றிய நாள்தொட்டு இடைவிடாமல் ஒரு போர் நடந்துகொண்டே யிருக்கின்றது. அப்போர் எது? தேவாசுர யுத்தமா? இராம இராவண யுத்தமா? அல்லது பாரதப் போரா? அன்றெனில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தது போன்ற உலகப் போர்களா? இவ்விடைகளை உண்டெனவும் கூறலாம்; இல்லை யில்லை யெனவும் மறுப்புரைக்கலாம். அப்படியானால் அப்போர்தான் யாது? அப்போர் எங்கு நிகழ்கின்றது? ஏன் நிகழ்கின்றது? அப்போரைச் செய்வோர் யார்? நமக்கும் அப்போருக்கும் என்ன தொடர்பு? இவ்வினாக்கட்கெல்லாம் விடைதான் என்ன? அதனை இப்போது காண்போம்.

    வாழ்வின் முதற்பொருளாகத் தமிழர்கள் நிலத்தையும் காலத்தையும் வகுத்தனர். “முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே”, என்பது தொல்காப்பியம். நிலமோ காட்சிப்பொருள்; யாவருங் காணலாம்.  அஃது மலையாகவும் மண்ணாகவும், காடாகவும் கடலாகவும் காட்சியளிப்பதனைக் கண்டுள்ளோம். ஆனால், காலத்தைக் காணமுடியுமா? காலம் கருத்துப்பொருள்; நுண்பொருள்; அருவப்பொருள். அதனால் காணவியலாது; உண்மையே! எனினும் உணரமுடியுமே! கதிரெழுங் காலையும், கடும்பகற்பொழுதும், மயங்கும் மாலையும், மறைக்கும் இருளும் நாளும் நாளும் வந்துபோவதை அறியமாட்டாமோ நாம்? அறிவோமன்றோ? அதற்கென்ன என்பீர்!

    மாலை மறைகின்றது. பகலொளி தந்த கதிரோன் மெல்ல மெல்ல மேற்றிசையில் மறைகின்றான். இருட்பகைவன் மெதுவாகத் தன் ஆட்சியை இந்நிலவுலகிற் பரப்புகின்றான். எங்கும் இருள்; இருட்படலம் பார்வையை மறைக்கின்றது. மீண்டும் வைகறை விடியல்; வெள்ளி முளைக்கின்றது; பின்னர்ப் பகலவன் தோன்றக் காலையும் மாலையும் வருகின்றன. இவ்வொளிக்கும் இரவிற்கும் இன்று நேற்றா யுத்தம் தொடங்கியது? பகலாட்சி நடைபெறுவதும் அதனை விரட்டிவிட்டு இருளாட்சி தொடர்வதுவும் தொடர்கதையாகவே உள்ளது. இவ்வுருவக நிகழ்ச்சி நமக்கு – மக்களினத்திற்குத் தரூஉஞ் செய்திதான் யாது? அதனை எண்ணுவோம்; அறிவொளி பெறுவோம்.

    இவ்வுருவகப் போர், அறிவிற்கும் அறியாமைக்கும், நன்மைக்கும் தீமைக்கும், அடக்கத்திற்கும் அடங்காமைக்கும் நிகழ்கின்ற போரேயாகும். ஒவ்வொரு நிலையில் ஒவ்வொன்று வெற்றிபெறுவதுபோல் தெரிகின்றது. இறுதிப் போரில் வெற்றிபெறுவது யார்?

    மனிதகுலம் அன்பையும் அறிவையும் அருளையும் நற்பண்புகளையும் போற்றி நற்செயல்களைச் செய்யும்போது ஒளி – பகல் – உண்மை வெல்லுகின்றது. அதே மனிதகுலம் ஆணவங்கொண்டு அருளைத் துறந்து, தீமையை – பொய்ம்மையை மேற்கொள்ளும்போது இருட்பகைவன் – இருளரக்கன் ஆட்சி நிலவுகின்றது. உண்மைக்கும் பொய்ம்மைக்கும் நடக்கும்போரை நிறுத்துவது எவ்வாறு? அல்லது வாய்மை நிரந்தரவெற்றிபெற என்ன செய்யவேண்டும்?

    இப்போரில் வெற்றிபெற மார்க்கங்கள் உள்ளனவா? மனிதகுலம் சிந்தித்தது; பல மார்க்கங்களை – நெறிகளைக் கண்டறிந்தது. அக்கண்டுபிடிப்பில் மலர்ந்ததுவே – முகிழ்த்ததுவே சமயங்கள். இச்சமயங்கள் மனிதர்களிடம் காணப்படும் ஆணவத்தை நீக்கி அடக்கத்தை விதைக்கவும், அச்சத்தை நீக்கி அன்பைப் பயிரிடவும், அறியாமையை விரட்டி அறிவொளி பரவிடவும் வழிகாணலாயின. “அன்பே கடவுள்” என அன்புநெறியை அனைத்துச் சமயங்களும் பரப்பின; உண்மையைப் போற்றின; ஆணவம் கூடாதென அறைந்தன.

    ஆனால், காலப்போக்கில் சமயங்கட்குள்ளேயே சச்சரவுகள் – சண்டைகள் தோன்றின. போர்களுக்குச் சமயங்களும் காரணமாயின, வேலியே பயிரின் அழிவிற்குக் காரணமானாற் போல. சமயப் பூசல்கள், சமயங்களிடையே பிணக்கை ஏற்படுத்தின; உயர்வு தாழ்வுகளை உண்டாக்கின. சமயவாதிகள் ஆணவங்கொண்டவராயினர். சமயங்கள் பிளவுபட்டன. வேற்றுமைகள் உருவாயின. என் செய்வது?

    சான்றோர்கள், அருளாளர்கள் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினர். ஆணவமற்ற அன்புநெறியைப் பரப்புவது எவ்வாறு? மனிதர்களைச் சகோதரவுணர்வொடு வாழச்செய்வது எவ்வாறு? பலகாலம் சிந்தித்தனர்; பலர் சிந்தித்தனர். பல்வேறு வழிகளைக் கண்டனர். அங்ஙனம் சிந்தித்த சிந்தனையாளர்களுள் வள்ளலார், காந்தியார், திரு.வி.க. போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனரல்லர்; மாறாகப் பழைய சமயங்கட்குப் புதுப்பார்வை தந்தனர்; பொதுமைநெறி காட்டினர். சமயங்களெல்லாம் ஒரே கருத்தினையே வலியுறுத்துகின்றன.

    இறைவன் எல்லாவுயிர்களையும் நேசிப்பவன். அவனது தூயஅன்பில் வேறுபாடில்லை; அவன் உயிர்களுள் வேறுபாடு காண்பதுமில்லை; காட்டுவதுமில்லை. எல்லாச் சமயங்களும் ஆறுகளைப் போன்றவை. இறைவனோ அவ்வாறுகள் சென்று சங்கமிக்கும் – கலந்திடும் – பேராழியாகப் – பெருங்கடலாக விளங்குகின்றான் என்றனர் அருளாளர்கள். எனவே, சமயங்கள் மனிதர்களிடம் ஒருமையுணர்வை, நல்லிணக்கத்தையே ஏற்படுத்தவேண்டும். அதற்கு முரணாக மனிதர்கட்குள் பிளவையும் பேதத்தையும் ஏற்படுத்தலாகா என அறிவுறுத்தினர். இப்பொதுமைக் கருத்தை – பொதுமைச் சமயக்கோட்பாட்டை வடலூர் வள்ளலார் தம் திருவருட்பாவில் கூறாத இடமில்லை. சான்றாக ஒரு பாடலைக் காணலாம்.

    மருளொடு மாயைப்போய்த் தொலைந்தது மதங்கள்
    –வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
    அருளொளி விளங்கிய தொருதிருச் சபையும்
    –அலங்கரிக் கின்றனர் துலங்குவீற் றிருக்கத்
    தெருளோடு பொருளும்மேன் மேலெனக் களித்துச்
    –சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
    இருளறுத் தெனையாண்ட அருட்பெரும் ஜோதி
    –என்வள்ள லேபள்ளி யெழுந்தருள் வாயே!

    இப்பாடலில் இருள் விலகுதலும் அருளொளி பரவுதலும் உட்கருத்தாதலை உணர்க. மதச் சண்டைகள் ஒழிந்தன என்பார் வள்ளலார். அவர் காட்டும் இறைவனே அருட்கடலாக விளங்கிடும் பேரொளிப் பிழம்பாம்.

    இதனாலேயே வள்ளற்பெருமான், பிறிதோரிடத்தில், “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”, என வேண்டுகின்றார்.  அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையாக இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார். “அன்பே சிவமென்பது” திருமந்திரம்.

    அண்ணல் காந்தியடிகள் நமக்குத் தந்த நன்முத்துக்கள், வாய்மை, இன்னாசெய்யாமை, அன்புடைமையாம். பகைவனையும் நேசிப்பதே காந்தியாரின் சமயம். “இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்”, என்பது வான்புகழ் வள்ளுவம். பாரதி, “அறிவொன்றே தெய்வமென,” முழங்குகின்றான். அப்பர் பெருமான்,

    ”கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
    கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
    ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்
    எங்கு மீச னெனாவதர்க் கில்லையே” எனச் சுட்டுவார். இறைவன் எங்குமுளான்.

    இக்கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு செயற்பட்டால், “இருட்பகைவன் தானே மாய்வன், அருட்பகலோன் யாண்டும் ஒளிபரப்புவன்.” நல்லோர் ஆட்சி நடைபெறும். தீமைகள் விலகும். குருக்ஷேத்திரம் நாள்தோறும் நடைபெறாது. ஞானச் சுடரொளி பரவும். ஆணவ இருள் விலகும். ஞாலம் அன்பினில் தழைக்கும். போரும் பூசலும் ஒழியும். உலகெலாம் இன்புறும். அந்நன்னாளைக் காண இன்றே புறப்படுவோமா?

     

     

     

    Share
  • வாக்காளர்கள் அல்ல நாம் நியமிப்பாளர்கள்!

    -தமிழ்த்தேனீ

    நேரத்தை வீணடிக்கும் போது கவனி! வீணடிப்பது நேரத்தை அல்ல!  உன் வாழ்க்கையை!

    —-விவேகானந்தர்

    60 x 60 x 24 x 30 x 12 x 5 = 155520000 x 13 = 2,021,760,000

    —————————————————————————————————-

    60 வினாடிகள் ஒரு நிமிடத்துக்கு; 60 நிமிடங்கள் ஒரு மணிக்கு;  3600 வினாடிகள்   ஒரு  மணிக்கு;   ஒரு நாளைக்கு  24  மணி நேரம்; 24  மணி நேரத்துக்கு  86400 வினாடிகள்; ஒரு மாதத்துக்கு 30 நாட்கள்; 30 நாட்களுக்கு  2,592,000 வினாடிகள்; ஒரு வருடத்துக்கு 12  மாதங்கள்;  31,104,000 வினாடிகள்;  ஐந்து வருடத்துக்கு  366 நாட்கள்;  ஐந்து வருடத்துக்கு  1830 நாட்கள்; 1,55,520,000  வினாடிகள்.  ஆக மொத்தம் ஒரு தேர்தல் கழிந்து மறு தேர்தல் வரை    1,55,520,000  வினாடிகள்  நாம் வீணடிக்கிறோம்   தவறான ஆளுவோரை நியமித்து!

    ஒன்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்! ஐந்து வருடங்களை நாம் வீணடித்தால் 1,55,520,000  வினாடிகள் வீணடிக்கிறோம்.  அது மட்டுமல்ல  நாட்டையும் கெடுத்து நாட்டு மக்களின் நல்வாழ்வையும் கெடுத்து நாட்டின் பொருளாதாரத்தையும் இயற்கை வளங்களையும் கெடுத்து மொத்தத்தில் நாமே நம்மை ஒவ்வொரு வினாடியிலும் வீழ்ச்சியை நோக்கி நகர்த்திச் செல்கிறோம்.

    ஒரு வினாடி என்பது  செலவழித்துவிட்டால் மீண்டும்  பெற முடியாத எப்படிப்பட்ட பொன்னான வினாடி என்பதைப் புரிந்து கொண்டால் நாம் இனி வினாடியை வீணடிப்போமா?  வினாடியை வீணடிப்போமா?  என்னும்  வினா   நமக்குள்  எப்படிப்பட்ட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்  என்பதை எண்ணிப் பாருங்கள்!

    சரி… இப்படி மாற்றிச் சிந்தனை செய்து பார்ப்போம்.

    இறைவனைத் தரிசனம் செய்ய  வரிசையில்  மூன்று நாட்கள் நின்று  இறைவன் அருகே சென்றவுடன் அந்த இறைவனைக் காண நமக்கு ஒதுக்கப்படும் நேரம்தான் ஒரு வினாடி என்பது.

    அந்த ஒரு வினாடிக்குள்  நம்மால் இறைவனை முழுவதுமாக தரிசிக்க முடிகிறதா?  இல்லை என்பதே  பதிலாகக் கிடைக்கிறது.

    ஏனென்றால் அப்படி  முழுமையான தரிசனம் கிடைத்தால்  மீண்டும் மீண்டும் ஏன்  நாம் அந்த தரிசனத்துக்காக  ஏங்குகிறோம்?

    ஏன் மீண்டும் தரிசனம் செய்ய முயல்கிறோம்?  ஏன் ஆசைப்படுகிறோம்?  இப்போது புரிகிறதா  அந்த  ஒரு வினாடி எப்படிப்பட்ட  அருமையான வினாடி  என்று.

    ஆனால் எத்தனை வினாடிகள் தரிசனம் கிடைத்தாலும் நம்மால் ஒரு வினாடிக்கு மேல் இறைவன் மேல் மனத்தைச் செலுத்த முடிவதில்லை  என்பதே உண்மை.

    ஏனென்றால்  மனித  மனம் இடையறாது  வினாடிக்கு வினாடி மரத்துக்கு மரம் தாவும் குரங்கின் இயல்பை ஒத்திருப்பதால்  நம்மால் ஒரு வினாடிக்குமேல் இறைவனுடன் ஒன்றிப்போக முடிவதில்லை என்பதே உண்மை அல்லவா?

    அப்படிப்பட்ட  ஆழமான, ஒன்றிப்போக முடியாத  அந்தப் பொன்னான வினாடியை மீண்டும் மீண்டும்  நம் வாழ்விலே பெறவே முடியாது. ஆம், கழிந்து போன வினாடியை மீண்டும் நம்மால் பெற முடியாது.

    அப்படிப்பட்ட  தவம் போன்ற  வினாடியை நாம் வீணடிக்கிறோம்; அதுவும் ஒவ்வொரு வினாடியாக  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமாராக  1,55,520,000  வினாடிகள் வீணடிக்கிறோம்.

    ஒரு வினாடியை வீணடித்தாலே மீண்டும் பெற முடியாத நாம் 1,55,520,000 வினாடிகளை வீணடிக்கிறோம்  தவறான ஒருவருக்கு ஆட்சியை…  பதவியை  அளித்து!

    ஆனால் இப்படி  நாம் தவறான, தகுதி இல்லாத  ஒருவரை நியமிக்க ஆட்சியை அளிக்க, பதவியை அளிக்க  நாம் எடுத்துக் கொள்ளும் நேரமே வினாடி நேரம்தான்!

    ஆமாம் நாம் வரிசையிலே பல மணி நேரம் நின்றாலும் வாக்களிக்க நாம் எடுத்துக் கொள்ளும்  நேரம் ஒரு வினாடியே!

    அந்த வினாடியை எப்படிப் பயனுள்ளதாக, ஆக்க பூர்வமாக, நம் முன்னேற்றத்துக்காக,  நம் தாய் நாட்டின் முன்னேற்றத்துக்காக எவ்வளவு யோசித்துத்  திறம்படச் செலவழிக்க வேண்டும்.

    அப்படித் திறம்படச் செலவழித்துத் தகுதியான  நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் பொறுப்பை நாம் அனைவரும் உணர்ந்தால் அந்த ஒரு வினாடியை, நாம் வாக்களிக்க இருக்கும் அந்த ஒரு வினாடியை, மிகவும் கவனத்தோடு,  கண்ணியத்தோடு,  பொறுப்போடு உணர்ந்து பயன் படுத்துங்கள் வாக்காளர்களே!

    ஒரு விபத்து ஒரு வினாடியில் பல உயிரைப் பறித்துவிடுகிறது! புயல் ஒரு வினாடியிலே  ஒரு நாட்டையே  சீரழித்துவிடுகிறது!

    ஒரு சுனாமி ஒரு வினாடியிலே பல நாடுகளைக் கபளீகரம் செய்துவிடுகிறது. ஆனால், விபத்திலிருந்தோ,  புயலிலிருந்தோ,  சுனாமியிலிருந்தோ,  நில நடுக்கத்திலிருந்தோ  தப்பித்த  ஒருவரைக் கேளுங்கள்,  அந்த  ஒரு வினாடியின் அருமை அவருக்கு தெரியும்.

    அப்படி வினாடியின் அருமை புரிந்த  ஒருவரைப் போல் திறமையாக யோசித்துப் பொறுப்பாக இந்தத் தேர்தலில்  மிகச் சரியான ஆளுவோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நாம்.

    உண்மையைச் சொல்லப்போனால் சுதந்திரம் வாங்கி  இந்த வருடத்தோடு   நாம் 13  ஐந்து வருடங்களைக் கோட்டை விட்டிருக்கிறோம்.

    ஐந்து வருடத்துக்கே  1,55,520,000  வினாடிகள் என்றால் 13  ஐந்து வருடங்களுக்கு அதாவது 65  வருடங்களில்   20,21,760,000   வினாடிகளைத் தவற விட்டிருக்கிறோம். இனியும் ஒரு வினாடியைத் தவற விடலாமா?

    வாக்காளர்களே! உண்மையில் நாம் வாக்காளர்கள்  அல்ல;  நியமிப்பாளர்கள்! ஆமாம், நாம்தான் நியமிக்கிறோம். நம்மை ஆள, நம் தேசத்தை ஆள,   மந்திரிகளையும்  பாராளுமன்ற உறுப்பினர்களையும்  சட்டசபை உறுப்பினர்களையும் நாம் வாக்களித்து   அவர்களை நியமிக்காமல் அவர்களால் ஆளவே முடியாது.

    நமக்கு வேலைதரும் முதலாளிகள் நம்மைப் பணிக்கு நியமிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அவர்கள் வியாபாரத்துக்கோ, ஆலைக்கோ, லாபம் வராமல் நஷ்டம் வந்தால்  நம்மைப் பணியிலிருந்து நீக்குகிறார்கள்.  அவர்களுக்கு நம்மைப் பணியிலிருந்து நீக்க எப்படி உரிமை உள்ளதோ அதுபோல நாம் நியமிக்கும்  ஆளுவோரால் நமக்கு நஷ்டம். நம் நாட்டுக்கு  நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அவர்களை நீக்கவும் தண்டிக்கவும் நீதிமன்றங்களை நாடுவது நம் உரிமை நாமே நியமிக்கிறோம்; அதை நன்றாக உணருங்கள்.

    ஆகவே, நாம்தான் முதலாளிகள்; மந்திரிகள்  நம்மால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள். இதை நன்றாக யோசித்து இனி நம்மை வாக்காளர்கள் என்று அழைப்பதை நிறுத்தி, நியமிப்பாளர்கள்  என்று அழைக்க வேண்டும் என்னும் மாற்றத்துடன்  நம் உரிமையைப் பாதுகாக்க ஏற்கெனவே வீணடித்த   2,021,760, 000  பொன்னான வினாடிகளையே இனி திரும்பப் பெறமுடியாது என்பதை உணர்ந்து இந்த  முறை ஒரு வினாடியையும் வீணாக்காமல் அந்த  வாக்களிக்கும் வினாடியை – நியமிக்கும் வினாடியை  வீணடிக்காமல் அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக உபயயோகியுங்கள்; வீணடிக்காதீர்கள்!

    நாம்தான் நியமிப்பாளர்கள் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!

     

    Share
  • பயாஸ்கோப்

    க. பாலசுப்பிரமணியன்

     

    பாரு.. பாரு… நல்லாப் பாரு ..

    பயாஸ்கோப்பில் படத்தைப் பாரு…

    பாம்பே ..டெல்லி.. கல்கத்தா ..

    பாபர்… அக்பர்…. சமாதி பாரு..

    உலகம் போற்றும் தாஜ் பாரு..

    காலம் மாறும் வேகம் பாரு,,

    பார்க்கும் படமும் மாறுது பாரு !

     

    கையைக் கிழித்து உள்ளே போகும்

    ஊசி பாரு.. நல்லாப் பாரு.. உள்ளே பாரு..

    ஓடும் குருதி வேகம் பாரு…

    ஓடி ஓய்ந்த இதயம் பாரு..

    கறைபடிந்த நாளம் பாரு..

    கசங்கிப் போன பூவைப் போல

    வாசம் இழந்த நெஞ்சம் பாரு..

     

    ஈயம் பூசும் தொழிலாளி

    இசைவாய் காற்றை அழுத்தித் தள்ள

    அசையும் உறையைப் போல

    அசைந்து ஆடும் இதயம் பாரு..

     

    கூடி நிற்கும் டாக்டர் பாரு ..

    குருதி தேடும் உடலைப் பாரு..

    வாழ விரும்பும் மனிதன் பாரு..

    வாழ்ந்து தீர்த்த நாளைப் பாரு…

     

    காதல் தோற்ற வலி கொஞ்சம்

    கருணை மறந்த வலி கொஞ்சம்

    கடமை தவறிய வலி கொஞ்சம்

    காலன் கையில் தவிக்கும் நெஞ்சம்…

     

    இயற்கை எடுத்த படத்தைப் பாரு..

    அதில் நடித்த ஹீரோ யாரு …..

    சாயம் நிறைந்த முகத்தைக் கழுவி

    கண்ணாடி முன்னால் முகத்தைப் பாரு..

     

    பாரு.. பாரு..நல்லாப்  பாரு

    பயாஸ்கோப்பில் படத்தைப் பாரு…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ea6ad603-1cb1-480f-84dd-4ed8298322bc

     

    ‘ஆழ்மன மந்தியை ஆசீர் வதித்தைப்
    பாழ்வரும் முன்னே பலப்படுத்து: -கூழ்வரம்(உண்ண உணர்வு)
    கேட்டுக்கை கூப்பும் குரங்கு புலன்வாலை
    மாட்டிக்கும் ஆப்பில் முனைந்து’….

    ”மந்திக்(கு) ஒருகையும், மாட்டுக்(கு) ஒருகாலும்
    குந்தி மகனுக்கு கீதையும், -தென்திக்கைப்
    பார்த்தவர்க்கு பார்யாளாய், பார்வதியை தாரையாய்
    வார்த்தவர் வள்ளல் வணங்கு’….கிரேசி மோகன்….

    Share
  • ஔவை நடராசன் – 81

    Avvai Natarajan and Annakannan

    புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில்,  செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    46081db5-54c2-41a8-b5e1-93b4edcb8ba8

    “ஹரிஹரி என்று அகலாய் அகத்தில்,
    திரிதிரி தீபத் திரியாய், -சரிசரி ,
    என்றுனை ஏற்றவன் ஏகாந்த மாய்வருடும்,
    கன்றினைப் போலாக் குவான்”….

    (OR)

    —————————– -HURRYBURY
    இல்லாத வாழ்வை இருக்கும் இடத்திலப்,
    பொல்லா தவன்அன் பளிப்பு”….(1)

    “உதாசீன உள்ளம் உடையோர்கள் வாழ்வின் –
    கதாசிரியன் போல்வாழ்வர் கர்த்தா -வதாவதில்லை :-
    ஏதுமெதிர் பாராதே, கீதோப தேசமிது –
    வாதபுரி யாதவனின் வாக்கு “….(2)
    ’’வேறெதையும் எண்ணாது நாரணின் நாமத்தைக்
    கூறுதலைக் கொள்கையாய்க் கொண்டவரின், -நாரத,
    பக்திக்(கு) அளிப்பான், பிறவிப் பிணிபோக்கும்,
    முக்தியாம் மோக்‌ஷ மருந்து’’….(3)….கிரேசி மோகன்….

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான அணுக்கூறு மர்மங்கள் : மூலக்கூறுகளில் அணுக்களின் நர்த்தனம் .. !

     

    Skyhook Effect

    [வான்தூக்கு  விளைவு]

    சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canada

    +++++++

    http://phys.org/news/2013-06-atoms.html

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cx75I5gUm-Q

    https://www.youtube.com/watch?v=oSCX78-8-q0&feature=player_embedded

    https://www.youtube.com/watch?v=rNf-A3m6HVo&feature=player_embedded

    ++++++++++++++++++

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
    ஒரு பொரி உருண்டை 
    பரமாணுக் களாகிஅணுவாகி
    அணுக்கள் நர்த்தனம் ஆடி
    மூலக்கூறாகி நேராகி
    சீரான நகர்ச்சியில் திரண்டு
    அண்டமாகி,
    அண்டத்தில் கண்டமாகிக்
    கண்டத்தில்
    துண்டமாகிப் பிண்டமாகி,
    பிண்டத்தில் பின்னமாகிப்
    பிளந்து தொடரியக்கப் பிளவில்
    பேரளவுச் சக்தி யாகி
    சீராகிச் சேர்ந்து
    சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
    பிணைந்துபேரொளி யாகிப்
    பிரம்மாண்டப் பிழம்பாகி,
    பிணைவு சக்தியாகிப்
    பரிதியாகி,
    பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
    பாச பந்த ஈர்ப்பில்
    ஊசலாடி
    அகில வெளியில்
    மகத்தான தோரணமாய்
    அம்மானை ஆடுகிறாள்என்
    அன்னை !

    +++++++++++++

    The Dance of Palladium Atoms

    [வான்தூக்கு விளைவு]

    தங்கம், பல்லேடியம் போன்ற உலோகங்கள் சில இரசாயன இயக்கங்களைத் தூண்டும் வினை ஊக்கியாகப்  [Catalyst]பயன்படுகின்றன.  அணுக்கள் ஜோடியாய் ஆடும்போது, பெரும்பான்மையான அணுக்கள் சுற்றியுள்ள வாயுடன் சேராது, வினை ஊக்கும் தன்மை பேரளவில் குறைகிறது.  இந்தக் காரணத்துக்காக எமது குழுவினர் ஒரேவித அணுக்கள் எப்படி ஒரு தளத்தில் கொத்துக்களாய் [Clusters] உருவாகின்றன என்றும்,  எப்படி இயக்கங்களை முற்றிலும் தடுப்பது என்றும் ஆய்வுகள் செய்கிறோம்.  பல ஆண்டுகளாக இந்த விளைவின் கோட்பாடைப் பற்றி உரையாடிக் கொண்டு வருகிறோம்.  ஆனால் வியன்னா பொறித்துறைப்  பல்கலைக் கழக ஆய்வு நிபுணர்கள் அணுக்கள் கொத்தை நேரடியா நோக்கி வருகிறார்.  அதி உச்ச சூனியப் பேழையில் மிகத் தூய இரும்பு ஆக்ஸைடு தளத்தில் பல்லேடியம் அணுக்களைச் சோதிக்கப் பயன்படுத்தி வருகிறோம்.

    பேராசிரியர் உல்ரிக் டைபோல்டு [Institute of Applied Physics, Vienna University of Technology]

    Prof Mo Li

    அணுக்கள் அதிரத் தொடங்கி தன்னைப் போல் ஒரே அதிர்வும், ஒரே திசைப் போக்கும், ஒரே பண்பும் கொண்ட வேறோர் துணையைத் தேடிப் பிடித்து ஒன்றாகி ஒரு புழுபோல் நேர்கோட்டில் நகர்கின்றன.  ஒரு பளிங்குப் படிமத்தில் [Crystalline System]  பேரளவு எண்ணிக்கைப் புழுக்கள் ஒரு கால வரையறைக்குள் உற்பத்தி யாகும் போது, நிலைகுழம்பி, ஓரினத்துவ உருக்கல்[Homogeneous Melting] துவங்கிறது.”

    பேராசிரியர்  மோ லி  [Professor Mo Li, Georgia Tech School of  Materials Science and Engg]

    படிமங்கள் [Crystals] எந்த உள்ளமைப்பு கொண்டிருந்தாலும், அணுக்களும், மூலக்கூறுகளும் இசைவான நகர்ச்சியைக் கொண்டுள்ளன என்னும் பொது உருக்கல் கோட்பாடை[General Principle of Melting]  நான் நம்புகிறேன்.  அணுக்களும்,மூலக்கூறுகளும் குறிப்பிட்ட ஒரு திசைப்போக்கில்  உலவக் கட்டுப்பட்டு  நகர்கின்றன.   அதன் விளைவாக அவை இரண்டும் ஜோடியாய் நடனமாட வேண்டியுள்ளது

    பேராசிரியர் மோ லி  

    Molecular Dynamics

    தனித்த பல்லேடியம் அணுக்களை இணைக்கத்  தூண்டி, கார்பன் மொனாக்ஸைடு வாயு மூலக்கூறுகள் மேற்தளத்தில் உண்டாக்கும்  விரைவான அணுக்கள் நடனத்தை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்தார்.   இவ்வாறு ஏற்பட்ட உடனே பல்லேடிய அணுக்கள் தளத்தை விட்டு, கார்பன் மொனாக்ஸைடு வாயுவால் மேல் எழும்பிச் சுதந்திரமாய் உலவுகின்றன.  இதுதான் வான்தூக்கு விளைவு [Skyhook Effect] என்று அறியப் படுகிறது.” 

    ஸ்பிநெக் நோவாட்னி  [Zbynek Novotny, Vienna Univesity of Technology]

    மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் கண்டுபிடிப்பு

    மேற்குச் கலாச்சார ஆண் /பெண் ஆட்ட நடன மாளிகைகளில் தனிப்பட்ட நபர் ஒருவர் மட்டும் தனியாகச் சரிவர நடன  ஆட்டங்கள் செய்ய முடியாது.   அவருக்கு இணைந்த அசைவில் கூட ஆடும் துணை கிடைத்த பிறகு அவரது கூட்டு நர்த்தனம் பொருந்தி காணப்படுகிறது.   இரும்பு ஆக்ஸைடு தளத்தில் அணுக்கள் அவ்வித நடனத்தில் கார்பன் மொனாக்ஸைடுடன் கலந்து கொள்ளும்.  

    The Dance of Atoms in Molecules

    பொருத்தமான நடனத் துணை அமைந்த பிறகு விரைவாக அணுக்களால் நர்த்தனம் செய்ய முடிகிறது.    வியன்னா பொறிநுணுக்க நிபுணர்கள் அவ்விதம் நடனமிடும் சில அணுக்கள் கார்பன் மனாக்ஸைடு மூலக்கூறில்  ஆடுவதைப் படிப்படியாய்ப் படமெடுத்துள்ளனர்.   அவர்கள் எடுத்த திரைப்படம் தனித்த அணுக்கள் கொத்துக்கள் ஆவதைக் காட்டுகின்றன.  

    தங்கம்பல்லேடியம் போன்ற உலோகங்கள் சில இரசாயன இயக்கங்களைத் தூண்டும்வினைஊக்கியாகப்  [Catalyst] பயன்படுகின்றன.  அணுக்கள் ஜோடியாய் ஆடும்போது,பெரும்பான்மையான அணுக்கள் சுற்றி யுள்ள வாயுடன் சேராது,வினை ஊக்கும் தன்மை பேரளவில் குறைகிறது.   இந்தக் காரணத்துக் காக எமது குழுவினர் ஒரேவித அணுக்கள் எப்படி ஒரு தளத்தில் கொத்துக்களாய் [Clusters] உருவாகின்றன என்றும்எப்படி இயக்கங்களை முற்றிலும் தடுப்பது என்றும் ஆய்வுகள் செய்கிறோம்.  பல ஆண்டுகளாக இந்த விளைவின் கோட்பாடைப்பற்றி உரையாடிக் கொண்டு வருகிறோம்.  ஆனால் வியன்னாபொறித்துறைப்  பல்கலைக் கழக ஆய்வு நிபுணர்கள் அணுக்கள்கொத்தை நேரடியா நோக்கி வருகிறார்.  அதி உச்ச சூனியப் பேழையில் மிகத் தூய இரும்பு ஆக்ஸைடுதளத்தில் பல்லேடியம் அணுக்களைச் சோதிக்கப்  பயன் படுத்தி  வருகிறோம் என்று பேராசிரியர் உல்ரிக்டைபோல்டு [Institute of Applied Physics, Vienna University of Technology]கூறுகிறார்.

     

    (1885-1962)

    குவாண்ட யந்திரவியல் கோட்பாடு பூர்வீகப் பௌதிகத்தின் ஏற்புடைய பொதுவிதி என்று நீல்ஸ் போஹ்ர் கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது விஞ்ஞானப் பணி சிந்தனா முறையில் ஓர் உன்னத இன்னிசை வடிவம் என்பது என் எண்ணம்.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    அணுவின் உள்ளமைப்பை விளக்கிய நீல்ஸ் போஹ்ர்

    டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr] என்பவர் பிரிட்டீஷ் விஞ்ஞான மேதைகளான ஜே.ஜே. தாம்ஸன், ஏர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு ஆகியோருடன் விஞ்ஞான ஆய்வுகள் செய்து, புதிய முறையில் அணுவின் உள்ளமைப்பைப் பற்றி எளிதாக,ஏற்றதாக, ஏனையோர் ஒப்புக் கொள்ளும் படி  அறிவித்தவர். 1913 ஆம் ஆண்டில் நீல்ஸ் போஹ்ர் ரூதர்ஃபோர்டு விளக்கிய அணு மாடலையும், விஞ்ஞானி பிளான்க் குவாண்டம் நியதியையும் [Planck’s Quantum Theory] ஒருங்கிணைத்து, ஓர்  ஒப்பற்ற அணு உள்ளமைப்புக் கருத்தை முதன்முதல் தெளிவாக வெளியிட்டார்.

    Atomic Structure

    நீல்ஸ் போஹ்ர்தான் துணிச்சலுடன் குவாண்டம் நியதியை இணைத்து அணுவின் உள்ளமைப்புக்கும், மூலக்கூறுகளின் அமைப்புக்கும் விஞ்ஞான விளக்கத்துக்கு எடுத்தாண்டார்மேலும் போஹ்ர்தான் முதன்முதல் மூலகம் ஒவ்வொன்றும் தன் அணுக்கருவில் கொண்டுள்ள அணுவியல் இலக்கத்தின் [Element’s Atomic Number (Total Number of Protons in the Nucleus)]முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். அவரது கோட்பாடு: “எந்த ஓர் அணுவும் தனிப்பட்ட நிலைகளில் குறிப்பிட்ட ஓரளவு சக்தியைக் கொண்டு தான் நிலவி வருகிறது.”  அவரது அரிய அந்த அணுவியல் நியதியே, பின்னால் அணுப்பிளவு இயக்கத்துக்கு [Nuclear Fission] அடிகோலிப் பேரளவு  அணுசக்தியை வெளியே கொண்டுவர உதவியது. 1922 ஆம் ஆண்டு நீல்ஸ் போஹ்ர் அவரது ஒப்பற்ற அந்த அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசைப் பெற்றார்.

    அணுவைப் பற்றி நாம் இதுவரை அறிந்தவை

    பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் பொருட்களின் உள்ளே அணுக்களின் இருக்கையை இரசாயன நிபுணர்கள் கோட்பாடு மூலமாக நிரூபித்துக் காட்டினார்கள். ஆனால் 1909 ஆம் ஆண்டில் சோதனை மூலம் காட்டி முதன் முதலில் அணுக்களின் நுட்ப அளவை மதிப்பிட்டவர் பிரெஞ்ச் விஞ்ஞானி ஜீன் பெர்ரின் [Jean Perrin (1870-1942)]. அவர் எக்ஸ்ரே கதிர்களையும், எதிர்முனைக் கதிர்களையும் [Cathode Rays] ஆராய்ச்சி செய்தவர். 1895 ஆம் ஆண்டில் பெர்ரின் எதிர்முனைக் கதிர்களில் எதிர்மின் கொடையுள்ள துகள்கள் [Negatively Charged Corpuscles] இருப்பதாகக்  காட்டினார். அவையே பின்னால் எலெக்டிரான்கள் என அழைக்கப் பட்டன.அவர்தான் அவொகேட்ரோ இலக்கத்தைப் [Avogadro’s Number (6×10^23)] பலமுறைகளில் கணித்துத் தெளிவு படுத்தியவர்.

    இத்தாலிய விஞ்ஞானி அமெடியோ அவகேட்ரோ [Amedeo Avogadro] கணித்த கோட்பாடு சொல்வ தென்ன? “ஒரே உஷ்ணத்திலும்,ஒரே அழுத்தத்திலும் நிலைத்துச் சமக் கொள்ளளவு கொண்ட வாயுக்கள் மூலக்கூறுகளின் [Molecules] ஒரே எண்ணக்கை அளவைக் கொண்டுள்ளன.” ஆனால் அந்தக் கோட்பாடு தூய வாயுக்களுக்கு [Ideal Gases] மட்டுமே உடன்பாடானது.இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகளின் முக்கிய கண்ணோட்டம் அணுவின் உள்ளமைப்பை அறிந்து கொள்ளக் குறிவைத்துத் திசை திரும்பியது. அந்த தேடல் பயணம் 1897 இல் ஜே.ஜே. தாம்ஸன் (1856-1940) முதன்முதல் கண்டுபிடித்த எலெக்டிரான் பரமாணுக்களுடன் துவங்கியதுஎதிர்முனைக் கதிர்களில் பிரிக்க முடியாத நுட்பத் துகள்கள் இருப்பதாகத் தாம்ஸன் கூறினார்பிறகு எலெக்டிரான்கள் எதிர் மின்கொடை கொண்டவை என்றும் எலெக்டிரான் துகளின் நிறை இத்தனை அளவென்றும் கணித்தவர்கள் இருவர்: ஜான் டௌன்செண்டு [John Townsend (1868-1937)], ராபர்ட் மிக்கில்லிக்கன் [Robert Millikan (1868-1953)].

    அணு யுகத்தின் பலகணியும் வாயிற் கதவும் திறந்தன !

    1895 ஆம் ஆண்டில் ஜெர்மென் விஞ்ஞானி ராஞ்ஜென் [Wilhelm Roentgen (1845-1923)] எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்து 1901இல் நோபெல் பரிசு பெற்று முதன்முதல் அணுவியல் யுகத்தின் பலகணியைத் திறந்து வைத்தார். அதற்குப் பின் 1896 ஆம் ஆண்டில் பிரெஞ்ச் விஞ்ஞானி ஹென்றி  பெக்குவரல் [Henri Becquerel (1852-1908)] யுரேனியத் தாது பிட்ச் பிளண்டியில் [Uranium Ore  Pitch-Blende] பொதிந்துள்ள கதிரியக்கத்தைக் [Radioactivity] கண்டுபிடித்து அணுயுகத்தின் வாயிலைத் திறந்து வைத்தார்.பெக்குவரலைப்  பின்பற்றி (1898) மேடம் கியூரி, அவரது கணவர் பியரி கியூரி இருவரும் [Madame Marie (1867-1934) & Pierre Curie (1859-1906)] பிட்ச் பிளண்டியில் யுரேனியத்தை போல், கதிரியக்கம் உள்ள ரேடியம், பொலோனியம் என்னும் புது மூலங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

    அணுக்கள் உடைந்து கதிரியக்கம் வெளியாவதற்கு விளக்கம் அளித்த பெக்குவரல், மேரி & பியரிக் கியூரி ஆகிய மூவருக்கும் ஒன்றாக 1903 இல் நோபெல் கிடைத்தது. யுரேனியத் தாதுவில் வெளியான மூன்று வித நூதனக் கதிர்களுக்கு ஆல்ஃபா, பீட்டா,காமா [Alpha, Beta & Gamma Rays] என்று  பிரிட்டீஷ் விஞ்ஞானி ஏர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)] முதன் முதல் பெயரிட்டார். 1900 ஆம் ஆண்டில் விஞ்ஞானி பெக்குவரல் பீட்டா கதிர்கள் எதிர்க்கொடை உள்ள “எலெக்டிரான்” [Negatively Charged Electron] என்பதைக் கண்டார். 1903 இல் ரூதர்ஃபோர்டு யுரேனியம் போன்ற உலோகங்களில் கதிரியக்க வெளியேற்றத்துக்குக் காரணம், அணு  முறிவு தான் (அணுக்கருத் தேய்வு) என்று விளக்கம் தந்தார். அடுத்து ஆல்ஃபா துகள் ஒரு ஹீலிய அணுக்கரு [Helium Nuclei] வென்றும் அவரே முதலில் கண்டுபிடித்தார்.

    1911 ஆம் ஆண்டில், ரூதர்ஃபோர்டு ஜெர்மென் விஞ்ஞானி ஹான்ஸ் கைகருடன் [Hans Geiger (1882-1945] சேர்ந்து ஆராய்ச்சிகள் செய்து அணுவின் உள்ளமைப்பை முதலில் விளக்கினார். அதாவது அணுக்கருவை எப்போதும் சுற்றிவரும் எலெக்டிரான்கள் கொண்ட வடிவே அணுவின் உள்ளமைப்பு என்பது அவர் முதன்முதலில் அறிவித்த மாடல். அதற்குப் பிறகு ரூதர்ஃபோர்டு 1914இல் அணுக்கருவில் நேர்கொடை யுள்ள புரோட்டான் [Positively Charged Proton] இருக்கையை எடுத்துக் கூறினார். அடுத்து 1919இல் ரூதர்ஃபோர்டு நைடிரஜன் மூலகத்தை ஆஃல்பா துகளால் தாக்கி, முதன்முதல் செயற்கை அணுக்கருத் தேய்வை [Artificial Atomic Disintegration] ஏற்படுத்திக் காட்டினார். அதே போல் பின்னால் மேரி கியூரியின் மகள் ஐரீன் கியூரி, அவளது கணவர் ஃபிரெடெரிக் ஜோலியட் இருவரும் செயற்கை மூலக மாற்றத்தைச் [Artificial Transmutation of  Elements] செய்து காட்டிப் புதியதோர் வரலாற்றை உருவாக்கினர். அணுயுகப் பொற்காலத்துக்குப் பெக்குவரலும், கியூரி குடும்பத்தாரும், ரூதர்ஃபோர்டும் ஆரம்ப விழா நடத்தியவர்கள் என்பதை 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.

    அணுவியல் அமைப்பில் நீல்ஸ் போஹ்ரின் புதிய ஆராய்ச்சிகள்

    நீல்ஸ் போஹ்ர்தான் முதன்முதலில் துணிச்சலுடன் குவாண்டம் நியதியை [Quantum Theory] இணைத்து அணுவின் உள்ளமைப்புக்கும், மூலக்கூறுகளின் அமைப்புக்கும் விஞ்ஞான விளக்கத்துக்கு எடுத்தாண்டார். மேலும் போஹ்ர்தான் முதன்முதல் மூலகம் ஒவ்வொன்றும்  கொண்டுள்ள அணுவியல் இலக்கத்தின் [Element’s Atomic Number (Total Number of Protons in  the Nucleus)] முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். அவரது கோட்பாடு: “எந்த ஓர் அணுவும்  தனிப்பட்ட நிலைகளில் குறிப்பிட்ட ஓரளவு சக்தியை கொண்டுதான் நிலவி வருகிறது.” அவரது  அரிய அந்த அணுவியல் நியதியே, பின்னால் அணுப்பிளவு இயக்கத்துக்கு [Nuclear Fission]  அடிகோலிப் பேரளவு அணுசக்தியை வெளியே கொண்டுவர உதவியது. 1922 ஆம் ஆண்டு நீல்ஸ்  போஹ்ர் அவரது ஒப்பற்ற அந்த அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசைப் பெற்றார்.

    நீல்ஸ் போஹ்ர் 1885 ஆம் ஆண்டில் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் ஒரு செல்வாக்கான விஞ்ஞானக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் கிறிஸ்டியன் போஹ்ர் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பேராசிரியர் [Professor of  Physiology]. தந்தையார் உயிரினச் சுவாசத்தின் பௌதிக, இரசாயன பண்பாடுகளைப் [Physical &  Chemical Aspects of Respiration] பற்றி முதன்முதல் விளக்கியவர். தாயார் டேனிஷ் யூதச் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நீல்ஸ் போஹ்ரின் இளைய சகோதரன் மாபெரும் கணித மேதை.

    பல்கலைக் கழகத்தில் நீல்ஸ் போஹ்ர் தனது இள வயதிலேயே அபார விஞ்ஞானத் திறமையைக் காட்டினார். முதன்முதலாக “நீர்த்தள முறுக்கேற்றத்தைத்” [Surface Tension of Water] தீர்மானிக்க, நீர்வீச்சுகளின் அதிர்வுகளைத் [Vibrations of Water Jets]துள்ளியமாகச் சோதனை மூலம்  கணித்து நியதி முறைகளில் பதிவு செய்து, டேனிஷ் விஞ்ஞானக் கழகத்தின் [Royal Danish Academy of Sciences & Letters] தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

    அவரது பட்டப் படைப்பாய்வு  இதுதான்: அணுசார்ந்த நிலையில் பிண்டங்களின் இயக்கத்தைப் பற்றிப் பூர்வீகப் பௌதிகம் விளக்க முடியாதைச் சொல்லும், உலோகங்களின் எலெக்டிரான் கோட்பாடு [Thesis on the Electron  Theory of Metals that stressed the inadequacies of Classical Physics for treating the  Behaviour of Matter at the Atomic Level] 1911 இல் தான் எழுதிய அந்த ஆய்வுக் கருத்துரைக்கு டாக்டர் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்துக்குச் சென்று புகழ்பெற்ற விஞ்ஞானி  ஜே.ஜே.தாம்ஸனிடம் பணியாற்றித் தன் எலெக்டிரான் கோட்பாடு ஆய்வுகளை மேற்கொண்டு தொடர ஆரம்பித்தார்.

    உலோகத்தில் எழுந்த எலெக்டிரான் மீதிருந்த ஆர்வத்திற்கு தாம்ஸன் ஊக்கம் அளிக்காததால்நீல்ஸ் போஹ்ர் 1912 ஆம் ஆண்டில் மான்செஸ்டரிலிருந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி ஏர்னெஸ்ட்  ரூதர்ஃபோர்டை அணுகினார். அப்போது ரூதர்ஃபோர்டு குழுவினர் அணுவின் உள்ளமைப்பு பற்றி  பல்வேறு ஆய்வுகள் நடத்திக் கொண்டிருந்தனர். ரூதர்ஃபோர்டு சமீபத்தில் நிர்மாணித்த அணு  உள்ளமைப்பு மாடல் நியதிப்பாடை விளக்கும் [Theoretical Implications] விஞ்ஞான  முறைப் பாடுகளில் அவரும் மூழ்கினார்.அணுக்கருவின் புரோட்டான் எண்ணிக்கையைக் கூறும் அணு எண்ணின் [Atomic Number] முக்கியத்தை உணர்ந்தவர்களில் நீல்ஸ் போஹ்ரும் ஒருவர்.

    அதுவே அணுக்கருவின் மின்கொடை [Electric Charge] எண்ணிக்கையும் ஆகும். பின்னாளில் அமைக்கப்பட்ட மூலகங்களின் சீரணி அட்டவணை (Periodic Table of Elements) புரோட்டான் எண்ணிக்கை கூறும் அணு எண்ணை வைத்தே உருவானது.

    நீல்ஸ் போஹ்ர் கூறியது: மூலங்களின் இரசாயனப் பௌதிகப் பண்பாடுகள் அணுக்கருவைச் சுற்றிவரும் எலெக்டிரான்களைப் பொருத்தவை; அணுவின் திணிவு அல்லது நிறை [Atomic Mass] அணுக்கருவின் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் நிறையைச் சார்ந்தது; மூலகத்தின் கதிரியக்கத்துக் காரணமும் அணுக்கரு தாங்க முடியாமல் உள்ள ஏராளமான பரமாணுக்கள் தான். ரூதர்ஃபோர்டின் அணு உள்ளமைப்பு மாடல் எந்திரவியல் முறைப்படியும், மின்காந்த முறைப்படியும் நிலையற்றது[Mechanically & Electro-magnetically Unstable]. ஆனால் மாக்ஸ் பிளான்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மற்ற விஞ்ஞானி களும் விருத்தி செய்த “குவாண்டம்  நியதியை” நீல்ஸ் போஹ்ர் உட்புகுத்தி அணுக்கருவின் “நிலைப்பாடை” வடித்துக் காண்பித்தார்.

     

    பூர்வீகப் பௌதிக [Classical Physics] விதிப்பாட்டிலிருந்து விலகி, நீல்ஸ் போஹ்ர் ஒரு புதிய கோட்பாடை ஆக்கினார்: “எந்த ஓர் அணுவும் குறிப்பிட்ட ஓரளவு சக்தியை கொண்டுதான், தனிப்பட்ட நிலைப் பாடுகளில் நிலவி வருகிறது.” [Any atom could exist only in a discrete set of  stable or stationary states by a definite value of its energy]. இதுவே போஹ்ர் அணு  உள்ளமைப்பு மாடல் என்றும் கூறப்படுவது.   போஹ்ர் விளக்கிய அணுவின் குவாண்டம் நியதி இதுதான். ஹைடிரஜன் அணு வெளிவிடும்  ஒளிப்பட்டைக் கோடுகளுக்கு [Series of Lines observed in the Spectrum of Light emitted by  Atomic Hydrogen] அந்த நியதி விளக்கம் கூறியது. அந்த ஒளிப்பட்டைக் கோடுகளின் அதிர்வுகளை [Frequencies] வெகு துல்லியமாக அந்த நியதி மூலம் கணித்துக் காட்டினார். அந்த அதிர்வுகளை அணுவின் எலெக்டிரான் மின்கொடை, திணிவு மூலமாகக் கணித்தார் [In terms of the charge & mass of the Electron].அவற்றை எடுத்துக் காட்ட போஹ்ர் கூறியது: அணு தனது நிலைப் பாடில் உள்ளபோது எலெக்டிரான் கதிர்வீச்சு வெளியாக்கு வதில்லை. எலெக்டிரான் பரமாணு ஒரு  நிலைப்பாடி லிருந்து அடுத்த நிலைக்கு மாறும் போதுதான், கதிர்வீச்சை உமிழ்கிறது.

    CO induced mobility in Palladium Atom

    ++++++++++++++++++++++

    Attachments area
    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர், ஒப்பரிய தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்கள்.

    இவர் உலகத்தொல்காப்பியமன்றத்தின் தொடர்சொற்பொழிவு வரிசையின் 5-ஆவது சொற்பொழிவைப் புதுச்சேரியில் மே மாதம் 4 ஆம் நாள் நல்க இருக்கின்றார். புதுச்சேரியில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆம் ஆண்டின் பிறந்தநாள் ஏப்பிரல் 29 ஆம் நாள் ஆகையால் அவர் நினைவாகவும் அங்கே வாழும் சொல்லாய்வாளரை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

    திரு அருளி அவர்கள் மொழிஞாயிறு என்று போற்றப்பட்ட தேவநேயப்பாவாணர் அவர்களின் வழி தமிழில் மிகச்சிறப்பாக வேர்ச்சொல் ஆய்வு செய்பவர். புதுச்சேரியில் பிறந்த இவர் வணிகவியல், சட்டவியல் துறைகளில் பட்டம் பெற்றவர். ஆனால் இவருடைய ஒப்பரிய சொல்லாய்வே இவரின் புகழுக்கு அடிப்படை. இவருடைய ஏறத்தாழ 30 நூல்களும், 250 உக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளும் இவருடைய ஆழ் புலமையைப் பறைசாற்றுவன. இவர் ஆக்கிய 1216 பக்க அருங்கலைச்சொல் அகரமுதலியும் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு) (2002), நான்கு தொகுதிகளாக வெளிவந்த இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதியும் குறிப்பிடத்தக்கன. இதே போல தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் திரு. அருளி அவர் ஆற்றிய மொழியியல் உரைகளின் 5 தொகுதிகளும் மிகுசிறப்பானவை. இவற்றில் இவர் செய்திருக்கும் வேர்ச்சொல் ஆய்வு மறுக்கொணாத நிறுவல் சிறப்பு மிக்கது. 2007 ஆம் ஆண்டு மரம்-செடி-கொடி-வேர் என்னும் தலைப்பில் வெளியிட்ட இரு தொகுதிகளும் தமிழுக்குப் புதிய வரவு. உலக அறிஞர்கள் பலர் இவருடைய ஆய்வையும் அறிவையும் மிகவும் போற்றியுள்ளனர், ஆனால் பரவலாலா இவை அறியப்படாமல் இருக்கின்றன. ‘Colporul: A History of Tamil Dictionaries‘ [2] என்னும் விரிவான 928 பக்க நூலை எழுதிய, இங்கிலாந்தைச் சேர்ந்த, கிரிகோரி சேம்சு (Gregory James) என்பார் இவரைப் போற்றி மடல்கள் வரைந்துள்ளார்[3].


    திரு. ப. அருளி அவர்கள் ”தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருந்து தகைமையாளராக 1980 முதல் 1984 வரையிலும் (Honorary – Fellow) ஆய்வறிஞராக 1995 முதல் 2007 வரையிலும் (Scholastic Researcher) பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்துள்ளார்”[1].

    1950 ஆம் ஆண்டு பிறந்த திரு அருளி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகள் தேன்மொழி அவர்களை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவர். இவர்களுக்கு அறிவன், தெள்ளியன் என இரு மகன்கள் உள்ளனர்.


    வேர்ச்சொல் ஆய்வில் பாவாணர்வழி ஆய்வு செய்வதில் தலையாய அறிஞர் இவர் எனில் மிகையாகாது. வேர்ச்சொல்லாய்வில் இவர் உலக அளவில் வெகுவாகப் போற்றப்படவேண்டியவர். தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] ப. அருளி, தமிழ் விக்கிப்பீடியா [ https://ta.wikipedia.org/s/pe4 ], பார்த்த நாள் மே 1, 2016.
    [2] Gregory James, ‘colporul: A History of Tamil Dictionaries‘, Cre-A publication [http://www.crea.in/publicationsdetails.php?id=3&customer=inr&page=4&category= ]
    [3] செ.இரா. செல்வக்குமார், முனைவர் இராமகிருட்டிணன், பாவலர் இராச தியாகராசன், பேரா. தமிழ்ப்பரிதி மாரி ஆகியோர் திரு ப. அருளி அவர்களை 2014 இல் புதுச்சேரியில் சந்தித்தபொழுது நேரில் பார்த்துப் படித்தறிந்தது.

    Share
  • படக்கவிதைப் போட்டி (62)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13077391_1006164376104428_1216165247_n
    127289602@N03_rவெண்மணி சிந்துஜா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share