வாக்காளர்கள் அல்ல நாம் நியமிப்பாளர்கள்!
-தமிழ்த்தேனீ
நேரத்தை வீணடிக்கும் போது கவனி! வீணடிப்பது நேரத்தை அல்ல! உன் வாழ்க்கையை!
—-விவேகானந்தர்
60 x 60 x 24 x 30 x 12 x 5 = 155520000 x 13 = 2,021,760,000
—————————————————————————————————-
60 வினாடிகள் ஒரு நிமிடத்துக்கு; 60 நிமிடங்கள் ஒரு மணிக்கு; 3600 வினாடிகள் ஒரு மணிக்கு; ஒரு நாளைக்கு 24 மணி நேரம்; 24 மணி நேரத்துக்கு 86400 வினாடிகள்; ஒரு மாதத்துக்கு 30 நாட்கள்; 30 நாட்களுக்கு 2,592,000 வினாடிகள்; ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள்; 31,104,000 வினாடிகள்; ஐந்து வருடத்துக்கு 366 நாட்கள்; ஐந்து வருடத்துக்கு 1830 நாட்கள்; 1,55,520,000 வினாடிகள். ஆக மொத்தம் ஒரு தேர்தல் கழிந்து மறு தேர்தல் வரை 1,55,520,000 வினாடிகள் நாம் வீணடிக்கிறோம் தவறான ஆளுவோரை நியமித்து!
ஒன்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்! ஐந்து வருடங்களை நாம் வீணடித்தால் 1,55,520,000 வினாடிகள் வீணடிக்கிறோம். அது மட்டுமல்ல நாட்டையும் கெடுத்து நாட்டு மக்களின் நல்வாழ்வையும் கெடுத்து நாட்டின் பொருளாதாரத்தையும் இயற்கை வளங்களையும் கெடுத்து மொத்தத்தில் நாமே நம்மை ஒவ்வொரு வினாடியிலும் வீழ்ச்சியை நோக்கி நகர்த்திச் செல்கிறோம்.
ஒரு வினாடி என்பது செலவழித்துவிட்டால் மீண்டும் பெற முடியாத எப்படிப்பட்ட பொன்னான வினாடி என்பதைப் புரிந்து கொண்டால் நாம் இனி வினாடியை வீணடிப்போமா? வினாடியை வீணடிப்போமா? என்னும் வினா நமக்குள் எப்படிப்பட்ட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள்!
சரி… இப்படி மாற்றிச் சிந்தனை செய்து பார்ப்போம்.
இறைவனைத் தரிசனம் செய்ய வரிசையில் மூன்று நாட்கள் நின்று இறைவன் அருகே சென்றவுடன் அந்த இறைவனைக் காண நமக்கு ஒதுக்கப்படும் நேரம்தான் ஒரு வினாடி என்பது.
அந்த ஒரு வினாடிக்குள் நம்மால் இறைவனை முழுவதுமாக தரிசிக்க முடிகிறதா? இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது.
ஏனென்றால் அப்படி முழுமையான தரிசனம் கிடைத்தால் மீண்டும் மீண்டும் ஏன் நாம் அந்த தரிசனத்துக்காக ஏங்குகிறோம்?
ஏன் மீண்டும் தரிசனம் செய்ய முயல்கிறோம்? ஏன் ஆசைப்படுகிறோம்? இப்போது புரிகிறதா அந்த ஒரு வினாடி எப்படிப்பட்ட அருமையான வினாடி என்று.
ஆனால் எத்தனை வினாடிகள் தரிசனம் கிடைத்தாலும் நம்மால் ஒரு வினாடிக்கு மேல் இறைவன் மேல் மனத்தைச் செலுத்த முடிவதில்லை என்பதே உண்மை.
ஏனென்றால் மனித மனம் இடையறாது வினாடிக்கு வினாடி மரத்துக்கு மரம் தாவும் குரங்கின் இயல்பை ஒத்திருப்பதால் நம்மால் ஒரு வினாடிக்குமேல் இறைவனுடன் ஒன்றிப்போக முடிவதில்லை என்பதே உண்மை அல்லவா?
அப்படிப்பட்ட ஆழமான, ஒன்றிப்போக முடியாத அந்தப் பொன்னான வினாடியை மீண்டும் மீண்டும் நம் வாழ்விலே பெறவே முடியாது. ஆம், கழிந்து போன வினாடியை மீண்டும் நம்மால் பெற முடியாது.
அப்படிப்பட்ட தவம் போன்ற வினாடியை நாம் வீணடிக்கிறோம்; அதுவும் ஒவ்வொரு வினாடியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமாராக 1,55,520,000 வினாடிகள் வீணடிக்கிறோம்.
ஒரு வினாடியை வீணடித்தாலே மீண்டும் பெற முடியாத நாம் 1,55,520,000 வினாடிகளை வீணடிக்கிறோம் தவறான ஒருவருக்கு ஆட்சியை… பதவியை அளித்து!
ஆனால் இப்படி நாம் தவறான, தகுதி இல்லாத ஒருவரை நியமிக்க ஆட்சியை அளிக்க, பதவியை அளிக்க நாம் எடுத்துக் கொள்ளும் நேரமே வினாடி நேரம்தான்!
ஆமாம் நாம் வரிசையிலே பல மணி நேரம் நின்றாலும் வாக்களிக்க நாம் எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரு வினாடியே!
அந்த வினாடியை எப்படிப் பயனுள்ளதாக, ஆக்க பூர்வமாக, நம் முன்னேற்றத்துக்காக, நம் தாய் நாட்டின் முன்னேற்றத்துக்காக எவ்வளவு யோசித்துத் திறம்படச் செலவழிக்க வேண்டும்.
அப்படித் திறம்படச் செலவழித்துத் தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் பொறுப்பை நாம் அனைவரும் உணர்ந்தால் அந்த ஒரு வினாடியை, நாம் வாக்களிக்க இருக்கும் அந்த ஒரு வினாடியை, மிகவும் கவனத்தோடு, கண்ணியத்தோடு, பொறுப்போடு உணர்ந்து பயன் படுத்துங்கள் வாக்காளர்களே!
ஒரு விபத்து ஒரு வினாடியில் பல உயிரைப் பறித்துவிடுகிறது! புயல் ஒரு வினாடியிலே ஒரு நாட்டையே சீரழித்துவிடுகிறது!
ஒரு சுனாமி ஒரு வினாடியிலே பல நாடுகளைக் கபளீகரம் செய்துவிடுகிறது. ஆனால், விபத்திலிருந்தோ, புயலிலிருந்தோ, சுனாமியிலிருந்தோ, நில நடுக்கத்திலிருந்தோ தப்பித்த ஒருவரைக் கேளுங்கள், அந்த ஒரு வினாடியின் அருமை அவருக்கு தெரியும்.
அப்படி வினாடியின் அருமை புரிந்த ஒருவரைப் போல் திறமையாக யோசித்துப் பொறுப்பாக இந்தத் தேர்தலில் மிகச் சரியான ஆளுவோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நாம்.
உண்மையைச் சொல்லப்போனால் சுதந்திரம் வாங்கி இந்த வருடத்தோடு நாம் 13 ஐந்து வருடங்களைக் கோட்டை விட்டிருக்கிறோம்.
ஐந்து வருடத்துக்கே 1,55,520,000 வினாடிகள் என்றால் 13 ஐந்து வருடங்களுக்கு அதாவது 65 வருடங்களில் 20,21,760,000 வினாடிகளைத் தவற விட்டிருக்கிறோம். இனியும் ஒரு வினாடியைத் தவற விடலாமா?
வாக்காளர்களே! உண்மையில் நாம் வாக்காளர்கள் அல்ல; நியமிப்பாளர்கள்! ஆமாம், நாம்தான் நியமிக்கிறோம். நம்மை ஆள, நம் தேசத்தை ஆள, மந்திரிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சட்டசபை உறுப்பினர்களையும் நாம் வாக்களித்து அவர்களை நியமிக்காமல் அவர்களால் ஆளவே முடியாது.
நமக்கு வேலைதரும் முதலாளிகள் நம்மைப் பணிக்கு நியமிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அவர்கள் வியாபாரத்துக்கோ, ஆலைக்கோ, லாபம் வராமல் நஷ்டம் வந்தால் நம்மைப் பணியிலிருந்து நீக்குகிறார்கள். அவர்களுக்கு நம்மைப் பணியிலிருந்து நீக்க எப்படி உரிமை உள்ளதோ அதுபோல நாம் நியமிக்கும் ஆளுவோரால் நமக்கு நஷ்டம். நம் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அவர்களை நீக்கவும் தண்டிக்கவும் நீதிமன்றங்களை நாடுவது நம் உரிமை நாமே நியமிக்கிறோம்; அதை நன்றாக உணருங்கள்.
ஆகவே, நாம்தான் முதலாளிகள்; மந்திரிகள் நம்மால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள். இதை நன்றாக யோசித்து இனி நம்மை வாக்காளர்கள் என்று அழைப்பதை நிறுத்தி, நியமிப்பாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்னும் மாற்றத்துடன் நம் உரிமையைப் பாதுகாக்க ஏற்கெனவே வீணடித்த 2,021,760, 000 பொன்னான வினாடிகளையே இனி திரும்பப் பெறமுடியாது என்பதை உணர்ந்து இந்த முறை ஒரு வினாடியையும் வீணாக்காமல் அந்த வாக்களிக்கும் வினாடியை – நியமிக்கும் வினாடியை வீணடிக்காமல் அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக உபயயோகியுங்கள்; வீணடிக்காதீர்கள்!
நாம்தான் நியமிப்பாளர்கள் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!