Featuredஇலக்கியம்கட்டுரைகள்

இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 17

–மீனாட்சி பாலகணேஷ்

பேரண்ட கடாகப் பரப்பே சிற்றில்!

sambandar - meenakshi1ஒரு அற்புதக் காட்சி! மூன்றுவயதுக் குழந்தை ஒன்று தன் தந்தையுடன் அவர் நீராடச் சென்றபோது தானும் உடன்சென்றது. குழந்தையைக் குளக்கரையில் இருத்தித் தந்தை நீரில் மூழ்கி நீராடினார். தந்தையைக் காணாத சிறுவன், ‘அம்மையே அப்பா!’ எனவழைத்து வருந்தி அழுதபோது, உலகுக்கே அம்மையும் அப்பனும் ஆகிய இருவரும் – சிவபிரானும் பார்வதி அன்னையும்- அவன்முன்பு தோன்றினர். குழந்தை பசியால் அழுதானோ எனவெண்ணிப் பார்வதியன்னை, தன் முலைப்பாலைத் தங்கக்கிண்ணத்தில் நிறைத்து, அச்சிறுவனுக்குப் புகட்டினாளாம். இக்குழந்தைதான் பிற்காலத்தில் ‘காழிப்பிள்ளையார்’ எனப் புகழ்பெற்ற திருஞானசம்பந்தப்பெருமானாவார். முருகப்பெருமானின் அவதாரம் எனவும் கூறப்படுவார்.

இந்தக்குழந்தைக்கு தன் முலைப்பால் மூலம் அன்னை பார்வதி அருள்ஞானமாகிய வேதங்களின் உட்பொருளைப் புகட்டினாள். வேதங்கள் ’எழுதாமறை’ என்று அறியப்படுவன. இதனையே ‘சுருதி’ எனக் குறிப்பிடுகிறார் புலவர். இந்த எழுதாமறையாகிய வேதங்களை இச்சிறு பாலகனின் வாய்மொழியாக உலகிற்கு அறிவிக்க வேண்டி, அவனுக்கு ஞானப்பால் புகட்டினாள் பார்வதிதேவி. நேராக முலையிலிருந்து ஊட்டாது கிண்ணத்தில் சுரந்து ஊட்டியது எதனால்? இதற்கு அன்னையின் சகிமார் – பணிப்பெண்கள்- கூறும் விளக்கம் பார்வதிக்கே புன்னகையை வரவழைக்கிறது. அவ்வாறு என்னதான் அவர்கள் கூறினராம் தெரியுமா?

“பார்வதி அம்மையே! உனது மலைபோலும் பெரிய முலைகள் சிவபெருமானையே அணைத்துக் குழைத்தSambandar- Umai_meenakshi2 வலிமையுடையவை; அவற்றிலிருந்து நேரடியாக இச்சிறுவனுக்குப் பாலருந்துவித்தால் அவனுடைய சிறியவாய் உறுத்தி நோகுமல்லவா? மேலும் உன்கையில் இலங்கும் நகக்குறியானது இப்பாலகனுக்குப் பாலருத்துவிக்கும்போது அவனுடைய சிறுபல்லில்பட்டு குழந்தைக்கு நோகும் என்று எண்ணினாய் போலும். ஆதலினால் தானே உனது இனிய முலைப்பாலைக் கிண்ணத்தில் கறந்து அவனுக்குக் கொடுத்தாய்?” எனக் கனிவுடன் கேட்கின்றனர். அன்னை இச்சொற்களைக் கேட்டுப் புன்னகை புரிகிறாளாம்.

பிஞ்சுக்குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் அன்புநிறைந்த உள்ளத்தை அழகாக விளக்கும் இனிய பாடல் இது.

‘இவ்வாறான சொற்களைக்கேட்டுப்  புன்னகை புரியும் அம்மையே!  மகிழ்ச்சிநிறைந்ததும் கூர்மையான அழகிய வேல் போன்றவையுமான விழிகளை உடையவளே! அடியார்களின் பெருவாழ்வாக விளங்குபவளே, நீ எம்மிடம் ஓடோடி வருவாயாக! வளங்கள் கொழிக்கும் குளத்தூர் எனும் பதியில் வளரும் அமுதவல்லியே விரைவில் வருகவே!’ எனத் தாய் அழைப்பதாகக் கற்பனைசெய்து பாடியுள்ளார் புலவர்.

தாயாகிப் பாலகனுக்கு ஞானப்பால் ஊட்டியவளைச் சேயாக்கி அழைத்து பிள்ளைத்தமிழால் பாடி ஏத்துகிறார். பக்தியின் பேரானந்தம் கலந்த ஓர் வெளிப்பாடு இதுவன்றோ?

தெய்வச் சுருதி தமிழ்க்கன்றித் தீட்டா நிலைமைத் தெனவுலகிற்
றெரிக்குங் காழித் திருஞானச் செம்மற் குழவிக் கருண்ஞானம்,
பெய்து குழைக்க வோமுலையாம் பெரிய மலைவா யுறுத்துமென்றோ-
பெருமான் றனையுங் குழைத்தவலிப் பெற்றி யறிந்து தடுத்தோபூங்
கையி லிலகு நகக்குறிபற் கதுவ நோமென் றோதீம்பால்-
கறந்து கொடுத்தா யெனச்சகிமார் கனிந்து பாட நகைமுகிழ்க்கும்
வைவைத் தமைந்த மதர்வேற்கண் வாழ்வே வருக வருகவே –
வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே.

(குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சிவஞான சுவாமிகள்)

(சுருதி- எழுதாமறை, வேதம்; )

*****

இமயப்பொருப்பில் ஐயன் சிவபிரான் அமர்ந்திருக்கிறார். அவர் சடையில் அணிந்திருக்கும் கொன்றைமலர் மிக்க நறுமணத்தை அள்ளி வீசுகின்றது. அவர்மகிழும் வண்ணம் அன்னை பார்வதி ‘ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு’ முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி ‘விளையாடிக் கொண்டிருக்கிறாள்’.

அதென்ன அன்னையின் விளையாட்டு?


‘லீலா க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா’
 என லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் பார்வதிதேவி அன்னைக்கு உண்டு. அதன்பொருள்: விளையாட்டாகவே- அனாயாசமாகவே- மிக எளிதாக இவ்வுலகங்கள்SiRRil_meenakshi3 அனைத்தையும் படைப்பவள் என்பதுதான் அது. பேரண்டமாகிய இந்த உலகினையே சிற்றில் இழைப்பதாக அவள் பாவனை செய்துகொண்டு இழைத்து, மிக அருமையாக, ஆசையாக, விதம்விதமாக, அழகாகப் படைக்கின்றாள்; பின் படைத்த உலகங்களில் வாழும் உயிர்களுக்கு உணவளிக்க சிறுசோறாக்குகிறாள்- எதனைக்கொண்டு? இருவினைப்பயன்கள்தாம் சிறுசோறெனச் சமைக்கப்படுகின்றன! யாருக்கு இவற்றை அளிக்கிறாள் அன்னையெனும் சிறுமி? இல்லையில்லை – சிறுமியாகிய நம்மன்னை? இவ்வுலகில் உள்ள எண்பத்துநாலாயிரம் கோடிவகை உயிர்களும் அவள் தான்விளையாடச் செய்துவைத்த பாவைகள் தாம். ஆயினும் உயிருள்ள பாவைகள். அவற்றை மலங்கள் எனப்படும் பாவங்கள் (கருமவினைப்பயன்கள்) நாள்தோறும் வாட்டி வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தியவண்ணம் உள்ளன. அவள் சமைத்து வைத்துள்ள சிறுசோற்றினை அந்தப் பாவைகளுக்கு உண்ணக்கொடுத்து அவற்றின் பசியைப்போக்கி அருளுகிறாள் அவள். இது ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பொறுமையாகச் சலிப்பின்றி, கற்பகோடி காலங்களாகப் பாராசக்தி அன்னை எனும் சிறுமி செய்துவரும் விளையாட்டு; இவ்வாறு செய்யும் அவள், பராசக்தி- இங்கு குளத்தூர் அமுதாம்பிகை எனக் குறிப்பிடப்படுபவள்- விளையாடுமிடம் பரமானந்தப் பெருவீடு எனப்படும் உயர்ந்த ஞானப்பெருவெளியாகும். (அதாவது அவளை உணர்ந்து கொண்டவர்களுக்கே அவளுடைய இவ்விளையாடலையும் இக்கண்ணோட்டத்தில் உணர்ந்து போற்றவியலும்).

இவ்வாறெல்லாம் அன்னையை, சிற்றிலிழைக்கும் சிறுமியாகக் கண்டு கொண்டாடியவர், அன்பின் மிகுதியில் தன்னையிழந்து அவளை, “உண்ண உண்ணத் தெவிட்டாத இனிய அமுதமே! உயர்ந்த குன்றின்மேல் விளைகின்ற நறுங்கனி போன்றவளே! பெருக்கெடுத்துக் கொழிக்கும் ஆறுபோலும் கருணை பொழிபவளே! சிறிதும் சலிப்பின்றி எம்மை (இங்கு புலவர் கூறுவது தம்மை மட்டுமல்ல; உயிர்க்குலங்கள் அனைத்தையுமே தான்) என்றென்றும் காத்து எங்கள் வாழ்வாகவே இருப்பவளே! நீ ஓடோடி வருக அம்மையே! குளந்தைப்பதியில் வாழும் அமுதாம்பிகையே, வருக,” எனத் தாயாகமாறி பாசம்மீதூர விளிக்கிறார்.

அனைத்தையுமே இறைவடிவமாகத் தொழும் அடியவர்களுக்குக் குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான்; ஒன்றில் மற்றொன்றைக் காண்கின்றனர். இரண்டையும் ஒருவடிவாக்கிப் பாடுகின்றனர். பரவசத்தில் ஆடுகின்றனர்; களிப்பெய்தி நிற்கின்றனர். சைவசித்தாந்த நூலுக்கு உரைகண்ட பெரும் தெய்வமுனிவராயிற்றே இதனைப் புனைந்த புலவனார். சித்தாந்த வேதாந்தக் கருத்துக்கள் பாடல்கள்தோறும் பொங்கிப் பிரவகிக்கின்றன. நாமும் பொருளுணர்ந்து பயின்று களிப்போம்.

கடிகொண் டலரு நறுங்கடுக்கைக் கடவுண் மகிழப் பேரண்ட –
கடாகப் பரப்பே சிற்றிலெனக் கருமப் பகுப்பே சிறுசோறாம்,
படிகொண் டுயிராம் பாவைகட்குப் பைதன்மலநோய்ப் பசியிரியப்-
பல்கா லயிற்றி விளையாடிப் பரமானந்தப் பெருவீட்டிற்
குடிகொண் டிருக்குந் தீங்கொம்பே கொள்ளத் தெவிட்டா சுவையமுதே –
குன்றம் பயந்த நறுங்கனியே கொழிக்குங் கருணைப் பெருக்காறே –
மடிகொண் டயரா தெமைப்புரக்கும் வாழ்வே வருக வருகவே –
வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே.

(குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சிவஞான சுவாமிகள்)

(கடுக்கை- கொன்றை; பேரண்ட கடாகப்பரப்பு- உருண்டையான இவ்வுலகு; கருமப்பகுப்பு- இருவினைப்பயன்கள்)

தமக்கு விருப்பமான தெய்வங்களின்மீது பிள்ளைத்தமிழ் பாடிவைத்த புலவர் பெருமக்கள் அவர்களை மானிடக் குழந்தைகளாக உருவகித்துக் கொண்டாலும், நம்மையும், நமது வாழ்வையும், வழிநடத்தும் தெய்வங்கள் எனும் பேருண்மை தம் மனதில் நிலைபெற்றமையால், தத்துவ வேதாந்தக் கருத்துக்களையும் ஊடே இழைத்துப் பாடல்களைப் புனைந்தளித்தனர். அந்த வகையில் இலக்கியநயமும் தத்துவக்கருத்துக்களும் கொண்டு மிளிரும் இவ்விரு பாடல்களையும் சிவஞான சுவாமிகள் இயற்றியருளிய  குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணலாம். சிவஞான சுவாமிகள் அம்பிகையின் திருவிளையாடல்களில் மனத்தைப் பறிகொடுத்தவர் எனவும், அவளுடைய பிள்ளை விளையாட்டையும் உலகில் உயிர்கள் அனுபவிக்கும் கருமப்பயன்களாகக் கண்டுணர்கிறார் எனவும் அறியலாம். திருவாவடுதுறை ஆதீனத்தின் ஒரு புலவரான இவர் சைவசித்தாந்தத்துக்கு அடிப்படை நூலான சிவஞானபோதத்துக்கு ’மாபாடியம்’ எனும் விரிவுரை எழுதியுள்ளார். கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலினையும் இயற்றியருளியுள்ளார்.

இன்னும் தொடர்ந்து இதுபோலும் பாடல்களைப் படித்து மகிழலாம்.

***

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்}

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    நான் மிகுந்த ஆர்வத்துடன் படித்த கட்டுரை, இது. பக்தி இலக்கியங்களின் தனித்தன்மையை கட்டுரையாசிரியர் நேர்த்தியாக விளக்கியுள்ளார். வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க