செ. இரா.செல்வக்குமார்

இந்தக் கிழமையின் வல்லமையாளர், ஒப்பரிய தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்கள்.

இவர் உலகத்தொல்காப்பியமன்றத்தின் தொடர்சொற்பொழிவு வரிசையின் 5-ஆவது சொற்பொழிவைப் புதுச்சேரியில் மே மாதம் 4 ஆம் நாள் நல்க இருக்கின்றார். புதுச்சேரியில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆம் ஆண்டின் பிறந்தநாள் ஏப்பிரல் 29 ஆம் நாள் ஆகையால் அவர் நினைவாகவும் அங்கே வாழும் சொல்லாய்வாளரை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

திரு அருளி அவர்கள் மொழிஞாயிறு என்று போற்றப்பட்ட தேவநேயப்பாவாணர் அவர்களின் வழி தமிழில் மிகச்சிறப்பாக வேர்ச்சொல் ஆய்வு செய்பவர். புதுச்சேரியில் பிறந்த இவர் வணிகவியல், சட்டவியல் துறைகளில் பட்டம் பெற்றவர். ஆனால் இவருடைய ஒப்பரிய சொல்லாய்வே இவரின் புகழுக்கு அடிப்படை. இவருடைய ஏறத்தாழ 30 நூல்களும், 250 உக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளும் இவருடைய ஆழ் புலமையைப் பறைசாற்றுவன. இவர் ஆக்கிய 1216 பக்க அருங்கலைச்சொல் அகரமுதலியும் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு) (2002), நான்கு தொகுதிகளாக வெளிவந்த இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதியும் குறிப்பிடத்தக்கன. இதே போல தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் திரு. அருளி அவர் ஆற்றிய மொழியியல் உரைகளின் 5 தொகுதிகளும் மிகுசிறப்பானவை. இவற்றில் இவர் செய்திருக்கும் வேர்ச்சொல் ஆய்வு மறுக்கொணாத நிறுவல் சிறப்பு மிக்கது. 2007 ஆம் ஆண்டு மரம்-செடி-கொடி-வேர் என்னும் தலைப்பில் வெளியிட்ட இரு தொகுதிகளும் தமிழுக்குப் புதிய வரவு. உலக அறிஞர்கள் பலர் இவருடைய ஆய்வையும் அறிவையும் மிகவும் போற்றியுள்ளனர், ஆனால் பரவலாலா இவை அறியப்படாமல் இருக்கின்றன. ‘Colporul: A History of Tamil Dictionaries‘ [2] என்னும் விரிவான 928 பக்க நூலை எழுதிய, இங்கிலாந்தைச் சேர்ந்த, கிரிகோரி சேம்சு (Gregory James) என்பார் இவரைப் போற்றி மடல்கள் வரைந்துள்ளார்[3].


திரு. ப. அருளி அவர்கள் ”தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருந்து தகைமையாளராக 1980 முதல் 1984 வரையிலும் (Honorary – Fellow) ஆய்வறிஞராக 1995 முதல் 2007 வரையிலும் (Scholastic Researcher) பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்துள்ளார்”[1].

1950 ஆம் ஆண்டு பிறந்த திரு அருளி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகள் தேன்மொழி அவர்களை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவர். இவர்களுக்கு அறிவன், தெள்ளியன் என இரு மகன்கள் உள்ளனர்.


வேர்ச்சொல் ஆய்வில் பாவாணர்வழி ஆய்வு செய்வதில் தலையாய அறிஞர் இவர் எனில் மிகையாகாது. வேர்ச்சொல்லாய்வில் இவர் உலக அளவில் வெகுவாகப் போற்றப்படவேண்டியவர். தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

அடிக்குறிப்புகள்

[1] ப. அருளி, தமிழ் விக்கிப்பீடியா [ https://ta.wikipedia.org/s/pe4 ], பார்த்த நாள் மே 1, 2016.
[2] Gregory James, ‘colporul: A History of Tamil Dictionaries‘, Cre-A publication [http://www.crea.in/publicationsdetails.php?id=3&customer=inr&page=4&category= ]
[3] செ.இரா. செல்வக்குமார், முனைவர் இராமகிருட்டிணன், பாவலர் இராச தியாகராசன், பேரா. தமிழ்ப்பரிதி மாரி ஆகியோர் திரு ப. அருளி அவர்களை 2014 இல் புதுச்சேரியில் சந்தித்தபொழுது நேரில் பார்த்துப் படித்தறிந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. இது படித்து மிகவும் மகிழ்வு எய்தினேன். பெருமை வல்லமைக்கே. புகழ் அருளி அவர்களுக்கே. தகுதி செல்வாவுக்கே.

  2. மிகச் சிக்கலான, பேருழைப்பை வேண்டுகிற வேர்ச்சொல் ஆய்வில் கூர்மை பெற்று, பெரும்பணி ஆற்றும் வல்லமையாளர் அருளி அவர்கள், தமிழுக்கு அரிய தொண்டாற்றும் அறிஞர். அவரது தமிழ் வாழ்வு செழிக்கட்டும்.

  3. அன்புள்ள

            வணக்கம். பேரறிஞர் ப.அருளி அய்யா அவர்கள் பணியாற்றும்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரின்கீழும் பின்னரும் பணியாற்றியவன். அவரின் தமிழ்த் தொண்டு எழுத தாள்கள் போதா. அவரின் வல்லமைக்கு இவ்விருதே தாமதம்தான். இன்னும் உலகின் பல விருதுகளைப் பெறும் வல்லமையாளர். அவர் பேசக் கேட்டால் புல்லும் தமிழ் கற்கும் ஊமையும் பேசுவான் தமிழில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *