“ஓம் நமச்சிவாய”

மீ.விசுவநாதன்

images

பெரிய கடவுள் நீயென்றேன் – உன்னை
பிச்சாண்டி என்றே அழைக்கின்றார் !
எரியும் நெருப்பு நீயென்றேன் – மங்கை
இடத்தில் வைத்த குளிரென்றார் !

மாயை இல்லா சிவனென்றேன் – உன்னை
மாயா சக்தி துணையென்றார் !
சேயை மதித்த அப்பனென்றேன் – உண்ண
சேயைக் கேட்ட பக்தனென்றார் !

மீனாள் விரும்பும் நீரென்றேன் – திரு
நீரைப் பூசும் சித்தனென்றார் !
வானாள் கங்கை வரனென்றேன் – ஒரு
வகையில் பெண்ணின் பித்தனென்றார் !

சுடலை யாண்டி நீயென்றேன் – இமய
சொத்து முழுதும் உனதென்றார் !
உடலை வெறுத்த துறவியென்றேன் – உலக
உயிர்க ளனைத்தும் நீயென்றார் !

எதற்கும் கலங்கா தவனென்றேன் – பக்திக்
கெளிதாய் உருகும் மெழுகென்றார் !
முதற்கும் கடைக்கும் முதலென்றேன்- அட
மொத்த இருப்பே சிவமென்றார் !
(பிரதோஷ தினம் : 04.05.2016)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிவபிரதோஷம்

  1. மிகவும் அருமை விசு. முரண்பாடுகளுக்கிடையில் முக்கண் இறைவனை முழுதும் காட்டி விட்டீர். வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *