“விலைவாசி ஏற்றத்தில் வாத்ஸல்யம் விற்றல்:
அலைவாசிக் கண்ணனவர் ஆவின் -தலைசாய்த்து,
தன்மடியில் வைத்ததற்கு தாலாட்டாய் ஊட்டுகிறான்:
கண்மூடி சொக்குது கன்று”….கிரேசி மோகன்….
Month: May 2016
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
மக்கள் கேள்வி மேடை!
பவள சங்கரி
தமிழ்நாடு சட்டப் பேரவையின் 15-ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது. மிகப் பிரம்மாண்டமாக, 5.50 கோடி வாக்காளர்கள், 234 சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அதில் பெரும்பான்மை கொண்ட கட்சித் தலைவரையோ அல்லது கூட்டணித் தலைவரையோ ஆளுநர் ஆட்சியமைக்க உரிமை வழங்குவார். அவர்தான் மாநில முதல்வராக அறிவிக்கப்படுவார்.
அரசியலுக்கு வருவது என்பது மக்களுக்கு சேவை செய்வது, தன்னலம் கருதாத முழுமையான மக்கள் தொண்டு என்ற எண்ணமே துளியுமின்றி, அரசியல்வாதியாவது என்பது சிரமமின்றி பணம் சம்பாதிக்கவும், அதிகாரம் செலுத்தவும் வழிவகுப்பது என்ற எண்ணமே அரசியல்வாதிகளுக்கு மேலோங்கியிருப்பது வருந்தத்தக்கது. அதிகாரமும் பண வசதியும் தேவைப்படுகிறது என்பதற்காகவே பலரும் அரசியலுக்கு வருகிறார்கள்.
வாக்காளர்களிடம் இருக்கும் வாக்கு அதிகமான சக்தி பெற்றது. அதிகாரம் கொடுக்கக் கூடியது போன்றவற்றைப் பல வாக்காளர்கள் அறியவில்லை என்பதே சிறு இலவசங்கள் மூலம் மக்களை எளிதாக விலைக்கு வாங்க வழியமைத்துவிடுகிறது. அப்பட்டிப்பட்ட அற்பமான பொருட்களுக்கு விலைபோய் வாக்களித்து விடுவதால் அது ஐந்தாண்டு காலத்திற்கான பாதிப்பு மட்டுமல்ல; பல ஆண்டுகளுக்கான பாதிப்பாகிவிடுகிறது என்ற விழிப்புணர்வே சிறிதும் இல்லாமல் செயல்படும் மக்களாலேயே இதுபோன்ற பாதிப்புகள் நேர்ந்துவிடுகின்றன. தேர்தல் என்பது மகிழ்ச்சியாகக் கொண்டாடும் திருவிழா அல்ல. அங்கு கேளிக்கைகளுக்கோ கொண்டாட்டங்களுக்கோ இடம் இல்லை என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும். தன்னலத்துடன் சமூக நலமும் சார்ந்து சிந்தித்து செயல்படவேண்டிய விசயம். மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே செய்வது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மக்களாட்சியை நலமிக்க நல்லாட்சியாக நிலைபெறச் செய்வதும் குடிமக்களாகிய நம் கையில்தான் உள்ளது.
சனநாயகத்தில் தேர்தல் என்பதுதான் உச்ச நிலை. அரசியல் அதிகாரம் என்பது தேர்தல் வழியாக மட்டுமே வருகிறது. அதனால் பொதுமக்களின் பொறுப்பான பங்களிப்பு இதில் அவசியம் இருக்க வேண்டும். நூறு சதவிகிதம் வாக்களிப்பு மட்டுமே மக்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதோடு அதுவே சனநாயகத்தின் வெற்றி என்பதுமாகும். வாக்களிப்பது அரசியல் கடமை அல்ல, அரசு மக்களுக்கு வழங்கும் உரிமை என்பதை உணராதவர்களுக்கு உணரச்செய்ய வேண்டியதும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை ஊழியர்களின் அத்தியாவசியக் கடமை. உண்மையான அரசியல் கட்சிகள், நேர்மையான வேட்பாளர்கள் என்று நம்பிக்கை ஏற்பட்டால் மட்டும் வாக்களிக்கவேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தொகுதியில் தலை காட்டும் வேட்பாளர்களையும், சுயநலத்திற்காக மட்டும் அரசியலுக்கு வரும் வேட்பாளர்களை இனம்கண்டு ஒதுக்கும் வல்லமையும் பெறவேண்டும். பேரணிகள், மாநாடுகள் வெற்று அறிக்கைகள் கொண்டு மக்கள் மனம் கவர்ந்துவிட முடியாது என்பதையே தேர்தல் சொல்லிக் கொண்டிருக்கிறது.பேரணிகள், மாநாடுகள் நம்பகமற்ற அறிக்கைகள் போன்றவைகள் மட்டும் மக்கள் மனம் கவர்ந்துவிட முடியாது என்பதையும் வேட்பாளர்களும் உணரவேண்டும். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே புதியதொரு முயற்சியாக வேட்பாளர்களும், வாக்களர்களும் நேரிடையாகச் சந்திக்கும், ‘மக்கள் கேள்வி மேடை!’ என்ற நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கறிஞர், கவிமாமணி திரு கே.இரவி அவர்களின் இடைவிடா முயற்சியின் பயனாக இத்திட்டம் உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் நடந்த இந்த அரிய நிகழ்ச்சியின் தொகுப்பைக் காண்போம்….
We The People Of India
——————————————————————–
No.1.A Stone Link Avenue, Off Canal bank Road, R.A.Puram, Chennai 600028
‘We The People of India’ is a Non political, Non Profit Organisation, functioning all over Tamilnadu. The main aim is to create National Spirit. During Elections we have been organizing events to promote Voters’ Awareness with the broad network that we have all over Tamil Nadu. We have created an Audio and Video program exclusively for this election. Tamilnadu State Election Commission has approved the program and it has gone viral in YouTube.
வணக்கம். வாக்காளர்களும், வேட்பாளர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்களும், வேட்பாளர்களும், சந்திக்கக்கூடிய மக்கள் கேள்வி மேடை எனும் இனிய நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை 7.5.2016 அன்று ஈரோடு யாளி ரெசிடெண்சி எனும் விடுதியில் நடைபெற்றது. அது சமயம் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் திரளாக கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். பல பொது தொண்டு நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
We The People Of India
நுகர்வோர் பாதுகாப்பு மையம்
தேசிய நல விழிப்புணர்வு இயக்கம்
வரி செலுத்துவோர் சங்கம், ஈரோடு
ரோட்டரி சங்கங்கள், ஈரோடு
ரவுண்ட் டேபிள், ஈரோடு
அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு
ஒளிரும் ஈரோடு
அக்கறை, ஈரோடு
சித்தார்த்தா பள்ளி, ஈரோடு.
ஈரோடு கேட்கிறது!
வாக்காளர்கள் கேட்கிறோம்!
வேட்பாளர்களே பதிலளியுங்கள்!
- எங்கள் தொகுதியின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும் உங்கள் திட்டம், வாக்குறுதி என்ன?
- பதவிக்கு வந்த பின்னும் மாதம் ஒருமுறை மக்களைச் சந்திப்பீர்களா?
- உங்கள் கட்சியைவிட இந்தத் தொகுதி முன்னேற்றம்தான் உங்களுக்கு முக்கியம். இந்தத் தொகுதி மக்கள்தான் உங்கள் முதல் தலைவர்கள் என்று அறிவிப்பீர்களா?
- அனைத்து மருத்துவச் சேவைப் பிரிவுகள்கொண்ட 1000 படுக்கை வசதி உள்ள மருத்துவக் கல்லூரி இணைந்த மருத்துவமனை தக்க சிறப்புத்திறன் மருத்துவர்களுடன் ஈரோட்டில் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித் தருவீர்களா?
- ஊராட்சிக் கோட்டையிலிருந்து ஈரோடு நகருக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டம் விரைவில் நடைபெற நடவடிக்கை எடுப்பீர்களா?
- தொழிற்சாலைக் கழிவுகளாலும், நகராட்சி, ஊராட்சிக் கழிவுகளாலும் நகரின் நீரோட்டம் மாசுபடும் கவலை ஒருபுறம் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் நகரின் தொழில் ஆதாரமே பாதிக்கப்படுமோ என்ற கவலை மறுபுறம் அச்சுறுத்தும் சூழலில் அக்கவலைகளைப்போக்க நடவடிக்கை எடுப்பீர்களா?
- ஈரோட்டு சாலைப்போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலை சீரமைத்தல், மேம்பாலம் கட்டுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற செயல்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
- திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம், உரம் போன்ற பயனுள்ள மாற்று சக்திகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
-
படக்கவிதைப் போட்டி .. (63)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
-
இந்த வார வல்லமையாளர்
செ. இரா.செல்வக்குமார்
இந்தக் கிழமையின் வல்லமையாளர், தமிழ்விக்கிப்பீடியாவில் சூலை 2004-ஆம் ஆண்டுமுதல் அயராது தனிச்சிறப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் இளைஞர் திரு. சுந்தர் என அழைக்கப்படும் இல. பாலசுந்தரராமன் அவர்கள்.
இன்று தமிழ் விக்கிப்பீடியா 86,000 கட்டுரைகளைத் தாண்டியுள்ளது என்றால் அதற்கு அருமைமிகு அடித்தளம் நாட்டிய மிகமுக்கியமானவர்களுள் ஒருவர் இவர்.
ஆங்கிலமொழியின் வளர்ச்சியிலும் ஆங்கிலத்தின் அறிவிலக்கிய வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிய படிநிலைகளாகக் கருதப்படுவடுவனவற்றில், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மிக முக்கியமானது என்பார்கள். இப்பொழுது நடக்கும் 21 ஆம் நூற்றாண்டில், கடந்த 15 ஆண்டுகளில் ஆங்கிலவிக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியம், அறிவுப்பரவலாக்கத்தில் மிக முக்கியமான ஒன்று. ஆங்கில விக்கிப்பீடியா 2001 இல் தொடங்கியது. அதுபோலவே 2003 இல் தொடங்கிய தமிழ்விக்கிப்பீடியாவும் தமிழில் நடக்கும் அறிவுப்பரவலாக்கத்தில் மிகமுக்கியமான ஒன்று. இந்த அரிய பணியில் வல்லமையாளர் திரு இ. மயூரநாதனுடன் 2004-இலேயே இணைந்து பணியாற்றத்தொடங்கி இன்றளவும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர் சுந்தர். கடந்த 12 ஆண்டுகளாக சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவுக்கும் அதன்வழி தமிழுலத்துக்கும் நல்கிய நல்லாக்கங்கள் மிகவும் பாராட்டப்படவேண்டியவை.
சுந்தர் என அழைக்கப்படும் இல. பாலசுந்தரராமன் [9]
விக்கிப்பீடியாவின் துணைத்திட்டமான விக்சனரி என்னும் திட்டத்தில் முதன்முதலாக ஏறத்தாழ 100,000 சொற்களும் சொற்பொருள்களையும் தானியங்கிமுறையில் இரவி முதலானோருடன் சேர்ந்து ஏற்றி நிறுவினார் [2]. இன்று தமிழ் விக்சனரியில் 3,50,000 சொற்களுக்கும் மேல் உள்ளன. தமிழிணையக் கல்விக்கழகம் இலட்சக்கணக்கான கலைச்சொற்களையும் நல்கியது இத்திட்டத்தை மேலும் முன்னணிக்குக் கொண்டுவர உதவியது. சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவுக்கும் அதன் துணைத்திட்டங்களுக்கும் தொழினுட்ப வசதிகளை நிறைய செய்திருந்தாலும் அவரின் விக்கிப்பீடியாவின் கொள்கை வழிகாட்டல்களும் வழிமுறைகளும் மிகப்பெரிய துணையாக இருந்தது. ஆங்கிலவிக்கிப்பீடியாவிலும் சுந்தர் நிருவாகப் பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்ததினால் கொள்கை, வழிமுறைகள் போன்றவற்றில் நல்ல துய்ப்பறிவு இருந்தது தமிழ்விக்கிப்பீடியாவின் சீரான வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
சுந்தர் விக்கிப்பீடியாவின் விக்கிமேனியா என்னும் கருத்தரங்கில் 2009 இல் தமிழ்விக்கிப்பீடியா பற்றி ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். இதுவே அனைத்துலக அரங்கில் தமிழ்விக்கிப்பிடியாவைப்பற்றிய முதல் ஆய்வுக்கட்டுரை [3].
விக்கிப்பீடியாவின் நிறுவனர் சிம்போ வேல்சு எனப்படும் சிம்மி வேல்சுடன் (Jimmy Wales) திரு. சுந்தர் [1]
சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவில் எழுதிய கட்டுரைகள் எண்ணிக்கையளவில் 144 என்றாலும் அவற்றில் பலவும் தமிழுலகுக்குப் புதியனவும் ஆழமானவயும் ஆகும். அவர் எழுதிய மௌடம் [4], கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை [5], கிப்பன் பண்டம் [6], தேரி [7] போன்ற பற்பல கட்டுரைகள் தனித்தன்மை வாய்ந்தவை.
சுந்தர் மிகச்சிறப்பாக யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவியுள்ளார் [8]
தமிழ்விக்கிப்பீடியாவின் அடித்தளத்தை அமைத்த முதன்மையானவர்களுள் ஒருவர், தனிச்சிறப்பான பங்களிப்புகள் செய்தவர் என்பதோடு இவர் நல்ல தமிழ்ப்பற்றுடையவர், இயற்கைநேயம் மிக்கவர், பறவை பூச்சி, செடிகொடிகள் என்று அனைத்திலும் மிகவும் ஆர்வம்மிக்கவர். மொழியியலிலும் கணிதத்திலும் ஆராக் காதல் கொண்டவர். பெங்களூரில் இந்திய தகவல் தொழினுட்பக் கழகத்தில் (IIIT Banglore) முதுகலைப் பட்டம் பெற்றவர் முகநூல் நிறுவனத்தில் இப்பொழுது பணியாற்றுகின்றார். இதற்குமுன்பு, யாகூ நிறுத்திலும் பணியாற்றியவர். கோரா (Quora) போன்ற தளங்களில் எழுதுபவர். தொழில்முனைவோராகவும் இயங்கி வெற்றிகள் சமைத்தவர்.
சுந்தர் தன் மனைவி தமிழரசி, மகன் முகில் ஆகியோருடன் சிங்கப்பூரில் வாழ்கின்றார்.
சுந்தரும் அவருடைய மனைவி தமிழரசி, மகன் முகிலும்.[10]
தமிழ்விக்கிப்பீடியாவின் அடித்தளத்தை அமைத்ததிலிருந்து பற்பல நல்ல தமிழாக்கங்களைச் செய்த, சிறந்த ஆளுமை கொண்ட பண்பாளர் திரு சுந்தர் அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.
அடிக்குறிப்புகள்
[1] படம், தமிழ்விக்கிப்பீடியா, படக்கலைஞர் Kalyan Varma, விக்கிப்பீடியாவில் ஏற்றியவர் நற்கீரன் (Natkeeran).
[2] விக்சனரி தானியங்கித்திட்டம் [https://ta.wikipedia.org/s/b1r]
[3] https://wikimania2009.wikimedia.org/wiki/Portal , https://ta.wikipedia.org/s/bs8
[4] https://ta.wikipedia.org/s/7vu
[5] https://ta.wikipedia.org/s/p3x
[6] https://ta.wikipedia.org/s/fxh
[7] https://ta.wikipedia.org/s/4c1f
[8] இல.பாலசுந்தரராமன், எஸ்.ஈஷ்வர், சஞ்சீத்குமார் ரவீந்திரநாத்(22-24). “இயல்மொழிப் பகுதிகளுக்கான இடம் சாரா இலக்கணம் – வெண்பா இலக்கணத்திற்கான ஒரு செயலி”. ‘, உத்தமம் (INFITT). 2007-05-16 அன்று அணுகப்பட்டது.. (ஆங்கிலத்தில்); [https://ta.wikipedia.org/s/isx]
[9] சுந்தரின் முகநூலில் உள்ள படம்.
[10] சுந்தரின் முகநூலில் உள்ள படம். -
அட்சயமே….அட்சயமே….!!
க. பாலசுப்பிரமணியன்
போதுமென்ற மனமிருந்தால்
பொழுதெல்லாம் அட்சயமே..!
புன்சிரிப்பு புலர்ந்திருந்தால்
போகுமிடமெல்லாம் அட்சயமே !!கண்ணிரண்டும் கருணைவளையம்
அணிந்திருந்தால் அட்சயமே !
காப்பியங்கள் காதணியாய்
காதருகில் கிசுகிசுக்க
காலமெல்லாம் அட்சயமே !கசடுபடா குரலிருந்து
முத்தான பாடல்கள்
முணுமுணுக்க முழங்கிவிட
முப்பொழுதும் அட்சயமே…!கைகளிரண்டும் வலிமையுடன்
கடமைகள் செய்திருக்க
கங்கணமாய் பண்பிருந்தால்
காலமெல்லாம் அட்சயமே…!!பசித்தவயிற்றை பக்கம்வைத்து
பருப்போடு சோறுகலந்து
பசியாறப் பார்க்கையிலே
பார்வைகொள்ளும் சுகமென்றும்
அட்சயமே… ..அட்சயமே. !! -
தேர்தலும் வாக்குறுதிகளும்!
-மேகலா இராமமூர்த்தி
வந்துவிட்டது மற்றுமொரு சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்துக்கு! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்தத் தேர்தல், மக்கள்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துமா? அல்லது தளர்ச்சியை ஏற்படுத்துமா? என்பது தேர்தலில் வெல்லும் கட்சியின் கையில்தான் இருக்கின்றது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
உலகில் முடியாட்சியின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுக் குடியாட்சி குதூகலத்தோடு எழுந்தபோது மக்கள் மனம் மகிழ்ந்தனர். எதேச்சாதிகாரமும், வாரிசுரிமையும் ஒழியும்; ஆண்டான் அடிமை எனுங்கொடுமை அழியும், மானுடம் வெல்லும் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தனர். என்ன ஏமாற்றம்? குடியாட்சி அத்தகைய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்த்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை.
ஆட்சியுரிமை யார் கைக்குப் போகின்றதோ அவருடைய வாரிசுகளே அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு உரியவராயினர் குடியாட்சியிலும்! குடும்ப ஆட்சிமுறையே குடியாட்சி என்ற பெயரிலும் கோலோச்சியதுகண்டு மனம் வெதும்பினர் மாந்தர். அம்மட்டோ? குடியாட்சி என்பது குடிகளின் ஆட்சி என்ற பொருள்மாறி அது குடி(அரக்கனின்)ஆட்சியாகவும் மாறிப்போன பேரவலத்தையும் சமீபகாலங்களில் காணக்கூடிய இழிநிலை நமக்கு வாய்த்திருக்கின்றது. பள்ளிக்குச் சென்று ’பாஸ்மார்க்’ வாங்கி வாழ்வில் முன்னேறவேண்டிய இளைய சமுதாயம், ‘டாஸ்மாக்’ முன்னால் கால்கடுக்கத் தவங்கிடப்பதும், தவத்தின் பலனாய்க் கையிலும் பையிலும் மதுப்புட்டிகளோடு மதிமயங்கி அலைவதும் நல்லோரை நடுங்கவைக்கின்றது; நாணவைக்கின்றது!
இந்நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாகைசூடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதில் கட்சிகளிடையே கடும்போட்டி நிலவிவருகின்றது. அதற்கு அவை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவது ’தேர்தல் வாக்குறுதிகளையே.’ ’மலை அகழ்க்குவம்; கடல் தூர்க்குவம்; வான் வீழ்க்குவம்; வளி மாற்றுவம்’ என்று கட்சித்தலைமைகள் தம் தகுதிக்குச் சற்றும் பொருத்தமிலா வகையில், தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டும், வாக்காளப் ’பெருங்குடி’ மக்களுக்குத் தாம் அன்னையைப் போல, தந்தையைப் போல என்றெல்லாம், நகைக்கத்தக்க வகையில், உறவுமுறை கொண்டாடிக்கொண்டும் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றன. வாக்களித்தோரின் ஆட்காட்டிவிரல் ’மை’ காய்வதற்குள் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும் என்பதே உண்’மை’!இந்த வேடிக்கையை எண்ணும்போது, அரசியலார் வாக்குறுதியளிக்கும் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்த ஆவூர் மூலங்கிழாரின் புறப்பாட்டொன்று நம் நினைவுக்கு வருகின்றது.
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் இன்றியும் புரப்போர்
புகழ்குறை படூம் வாயில்… (புறம் – 196)”தம்மால் இயலக்கூடியதை இயலுமென்றும், இயலாததை இயலாதென்றும் சொல்வதே தாளாண்மையுடையோர்க்கு நன்மை பயப்பதாகும்; அதைவிடுத்து இயலாததை இயலுமென்றும், இயலுவதை இயலாதென்றும் மாற்றிப்பேசுவது இரப்போரை ஏமாற்றுவதோடு, புரப்போரின் புகழையும் கெடுக்கும் செயல்கள் என்கிறார் புலவர். ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் பாண்டிய மன்னனுக்குச் சொல்லப்பட்ட இவ்வறிவுரை, இன்றைய அரசியல்வாதிகளுக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தும் அதிசயத்தை என்னென்பது!
மக்கள்தொண்டினை அடிப்படையாகக் கொண்டதே அரசியல். ஆனால் பொதுமக்களுக்குத் தொண்டுசெய்து சிறப்பதினும், தம் மக்களுக்குத் (பிள்ளைகளுக்கு) ’துட்டு’ சேர்த்துச் செழிப்பதிலேயே அரசியல் தலைவர்களின் உள்ளம் ஈடுபாடு காட்டுவது கொடுமையன்றோ?
அதனினும் கொடுமை, கட்சித்தலைவர்கள் தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை. ஆம், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தச் சாதியின் கை ஓங்கியிருக்கின்றதோ அல்லது எந்தச் சாதியின் எண்ணிக்கை அதிகமோ அந்தச் சாதியைச் சேர்ந்த, பணம்படைத்த பெரும்புள்ளிதான் அங்கே வேட்பாளராய் நிறுத்தப்படுவார். இது நடைமுறையில் (பல காலமாயுள்ள) எழுதப்படாத சட்டம்! இங்கே கல்வித் தகுதிக்கோ, தனிமனித ஒழுக்கத்துக்கோ, மக்கள் முன்னேற்றச் சிந்தனைகளுக்கோ இடமேயில்லை.
அரசியல்களத்தில் ஒருகாலத்தில் இருந்து, இன்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காததாய்க் காணமற்போய்விட்ட நற்பண்புகளில் ஒன்று ’அவை நாகரிகம்’. அன்றைய அரசியல்தலைவர்கள் பொதுமேடைகளில் ஒருவரையொருவர் தரக்குறைவாக ஏசுவதற்குக் கூசினர். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர், வெவ்வேறு சித்தாந்தங்களைக் கைக்கொண்டிருந்தோர் நட்புபாராட்டிய காலமும் இருந்ததுண்டு!! இவையெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன இன்று!
ஒவ்வொரு கட்சியும் தம் ’எதிர்’க்கட்சியைக் ’எதிரி’க்கட்சியாகவே பாவித்து, ஒருவரை ஒருவர் அருவருக்கத்தக்க மொழிகளிலும், வழிகளிலும் விமரிசித்துக் கொள்(ல்)வதும், வசைமாரிப் பொழிவதும், ஒருவர்செய்த ஊழலை மற்றவர் புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்துவதும், பெரியதிரையில் ’மார்க்கெட்’ போன நடிக, நடிகையரை அழைத்துவந்து தத்தம் கட்சிக்காகக் குரல்கொடுக்க வைப்பதும், தேர்தல் காலங்களில் வீதிதோறும் அரங்கேறும் விநோதங்கள்!!
நன்னடத்தையாலும் நல்லாட்சியாலும் மக்கள் மனங்களை வெல்ல முயலாது, விலையில்லா வீட்டு உபயோகப்பொருட்களைத் தந்து மக்களை விலைக்குவாங்க முயலும் மலிவான வியாபாரமும் இன்றைய அரசியலில் சகஜம்!
இந்தக் கேலிக்கூத்துக்களையெல்லாம் கண்டு நொந்துநூலாகிப்போன பொதுஜனமோ, ’கறை’படியாத இந்த உத்தமர்களில்(!) யாருக்கு வாக்களிப்பது? யாரை ஆட்சிபீடத்தில் அமர்த்துவது? என்று ’திருதிரு’வென விழிக்கின்றது!
மாண்புமிகு அரசியல்வாதிகளே! சொல்வதைச் செய்வதோடு சொல்லாததையும் சேர்த்தே செய்யக் காத்திருக்கும் கனவான்களே! இத்தருணத்தில் (பாவப்பட்ட) பொதுஜனத்தின் சார்பாக உங்களோடு சில வார்த்தைகள்…
நீங்கள் தேர்தலில் நில்லுங்கள்; வெல்லுங்கள்…வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் மக்களை அவர்களின் பொருள்சார்ந்த பலவீனங்களைப் பயன்படுத்தி முட்டாளாக்க முயலாதீர்கள். விலையில்லா வீட்டுசாதனப் பொருட்களைத் தருவதை/தந்ததையெல்லாம் உங்கள் சாதனைகளாகப் பட்டியல் போடாதீர்கள். அவையெல்லாம் மக்களின் உழைக்கும்திறனை உறிஞ்சி, அவர்களைச் சோம்பேறிகளாக்குவதைத் தவிர வேறெதெற்கும் பயன்படப்போவதில்லை. அதைவிடுத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை அதிக அளவில் உருவாக்கி, அவர்களைச் சொந்த உழைப்பில் முன்னேறவிடுங்கள்!
சாதிசார் வோட்டுக்களை இழந்துவிடக்கூடாது என்ற ‘நல்லெண்ணத்தில்’(!) நாட்டில் பற்றியெரியும் சா’தீ’ வன்முறைகளைக் கண்டும் காணாமலிருக்கும் கயமையை ஒழியுங்கள்! ’இளைதாக முள்மரம் கொல்க’ என்ற பொதுமறை ஆசிரியரின் வாக்கிற்கிணங்க, வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்! சாதிப்பகையற்ற சமூகத்தை உருவாக்குவதே உங்கள் சாதனையாகட்டும்!
சாராயக்கடைகளை திறந்து தமிழ்க்குடிமக்களை முதலில் ’தண்ணீரில்’ மிதக்கவிட்டது யார்? என்று பட்டிமன்றம் நடாத்துவதில் காலங்கடத்தாமல், அவற்றைமூடி, காலனிடமிருந்து தமிழ்க்குடிகளை முதலில் மீட்கப்போவது யார்? என்பதை மக்களுக்கு அறியத்தாருங்கள்! பேச்சோடு நில்லாமல் செயலிலும் அதனை முழுவீச்சில் காட்டுங்கள்!
மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை ஒழித்தால் மட்டும் போதாது! அவர்களுக்கு எதிராக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பெருகிவரும் வன்கொடுமைகளுக்கும் வாய்க்கரிசி போடவேண்டிய கடமை அரசியலார்க்கு உண்டு என்பதை மறவாதீர்கள்!
’தமிழ்நாட்டில் தமிழ்தானில்லை’ என்று குமுறினார் பாவேந்தர். அந்த அவலம் இன்றும் வலம்வரும் நிலையை முற்றாய் நீக்கித் தமிழ்க்குழந்தைகள் தாய்த்தமிழ் கற்கவும், மெல்லத்தமிழ் நம் கண்ணெதிரிலேயே சாகாதிருக்கவும் வகைசெய்யுங்கள்!
ஈதொப்ப, நீங்கள் ஆற்றவேண்டிய அருஞ்செயல்கள் ஏராளம்! ஏராளம்!
ஆட்சிக்கட்டிலில் ஏறும் ஆசைக்கனவில் மிதப்போரே…!
மேற்கண்டவற்றில் சிலவற்றையேனும் (உங்களில் ஆட்சியமைப்போர்) நிறைவேற்றுவீர்களேயானால் தமிழகம் வளம் பெறும்; தமிழர் நலம் பெறுவர்!
-
நலம் … நலமறிய ஆவல் ..! (3)
நிர்மலா ராகவன்
பழைய மாமியார்-மருமகள் கதைதான்!
‘என் மருமகள் கல்யாணமான புதிதில் எப்படி இருந்தாள்! இப்போது மகன் வீட்டுக்குப் போனால், நான் சொல்வது எதையும் கேட்பது கிடையாது!’ அரற்றிய பெண்மணிக்கு மகள் கிடையாது. மருமகள் `அம்மா’ என்று தன்னை அழைத்ததும் பூரித்துப்போய், அவள் பின்னாலேயே போய், ஒவ்வொரு காரியத்தையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஓயாது நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள்.
`அம்மா’ என்று அழைப்பவர்களெல்லாம் நாம் பெற்ற குழந்தைகளாகிவிட முடியுமா?
அவர்கள் கேளாமலேயே அறிவுரைகளைத் தாராளமாக வழங்கிக்கொண்டிருக்க முடியுமா?அம்மா என்றால் சிறு வயதில் குளிப்பாட்டி, இரவெல்லாம் கண்விழித்து மருந்து புகட்டி, உடன் விளையாடுகிறவர்கள் கேலி செய்து அழவிட்டபோது அணைத்துச் சமாதானப்படுத்தி, `அசக்காதேடி!’ என்று முதுகில் ஓர் அறைவிட்டபடி தலைவாரிப் பின்னிவிட்டு.. இப்படி என்னென்னவோ செய்திருக்க வேண்டும்.
பெற்ற மகனுடன் இவளைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறதே என்று தனக்கே புரியாத குழப்பத்துடன், மருமகளிடம் அன்பைப் பொழிவதுபோல் பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக அவள் தான் செய்வதுபோலவே, தான் விரும்புவதுபோலவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.
`மாமியார்தான் இனிமேல் உனக்கு அம்மா. அவர்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கணும்!’ கல்யாணமானதும், இளம்பெண்களுக்குப் பிறந்த வீட்டினர் வழங்கும் அறிவுரை.
தன் கணவனுடன் தனிக்குடித்தனம் செய்யும் பெண்ணுக்கோ, `இது என் வீடு. என் விருப்பப்படி செய்யலாம்!’ என்ற உணர்வு உண்டாகும். இதில் மாமியார் குறுக்கிட்டால் ஆத்திரம் வராது என்ன செய்யும்? சிலருக்கு ஏமாற்றம் பெருகி, அது கோபமாக மாற, அப்பாவிக் கணவன்மேல் அது திரும்பலாம். மாமியாரைத் தட்டிக்கேட்க முடியுமா?
பெற்ற மகளாக இருந்தால், இப்படி `நச்சு நச்சு’ என்று பிடுங்கும் தாயிடம் உரிமையுடன், `சும்மா போரடிக்காதேம்மா!’ என்று சிரித்தபடி சொல்லலாம்.
மகனிடம் அவன் மனைவியைக் குறை கூறினால், அவன் எந்தப் பக்கம் சாய்வான், பாவம்!`அம்மா ஓரிரு மாதங்கள் வந்து தங்கிவிட்டுப் போய்விடுவாள். நான்தானே இவளுடன் ஆயுள் பூராவும் கழிக்கவேண்டும்!’ என்று மகன் மனைவிக்குப் பரிந்தால் போயிற்று. `மகன் பெண்டாட்டிதாசனாக ஆகிவிட்டானே!’ என்று புலம்புவாள் தாய்.
எப்படியோ அவர்கள் தாம்பத்தியம் மகிழ்ச்சிகரமாக நடப்பதைக் கண்டு திருப்தி அடைந்தால்தான் இருதரப்பினருக்கும் நிம்மதி. அனாவசிய குறுக்கீடு எதற்கு?
தொடருவோம்
-
வெயிலின் ஜனநாயகம்
எஸ் வி வேணுகோபாலன்

வெயிலால் வெயிலுக்காக
வெயிலே நடத்துகிறது
கோடையின் ஆட்சியைஎந்த உடை அணிந்தாலும்
வெயில் போர்த்தி
வழியனுப்பி வைக்கிறது வீடுஎந்தப் பொருள் வாங்கப் போனாலும்
மறவாது
வெயில் வாங்கித் திரும்புகிறாள் இல்லத்தரசிஎங்கிருந்து புறப்பட்டு எங்கெங்கோ அலைந்து
எங்காவது நிறைவு செய்யப்படும்
எல்லாப் பயணங்களுக்கும்
இலவச பாதுகாப்பு அளிக்கிறது வெயில்தனக்கு எதிராக
விரியும் குடைகளிடம்
மான அவமானம் எல்லாம் பாராது
வாய்க்கிற பகுதிக்கெல்லாம்
சூடு போட்டுக் கடமை ஆற்றுகிறது வெயில்ஓட்டமாய்ப் பறக்கும் குழந்தையோடு
ஓடோடிச் சென்று
நழுவாது உடலைப் பற்றிக் கொள்ளும் வெயில்
விழுந்தாலும் ஏந்தி
விரைந்து நிமிர்த்தியும் கொடுக்கிறதுதகதகக்கும் சாலையில்
சேலைத் தலைப்பால் குழந்தைகளைத்
தற்காத்துக் கொண்டே தவித்தபடி செல்லும்
தாயின் பாதங்களை
முத்தமிட்டுக் கொண்டே போகிறது வெயில்வறண்டு போகும் நாவிலும்
இடுங்கும் கண்களிலும்
பதுங்க இடம் கிடைக்காது
நடுங்கி நகரும் உடல்களிலும்
நனைந்து ஒட்டிக் கொள்ளும் மேலுடையிலும்
வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்கிறது வெயில்செடி கொடிகளைக் களைந்து
மரங்களை அழித்து
நிழல்களைத் தொலைத்து
எழுப்பிய வளர்ச்சி மாநகரங்களை
உளமார வாழ்த்தி அருள்கிறது வெயில்பெருமழை நாளில்
நனைந்தும் மிதந்தும் மூழ்கியும் போன நகரத்தைப்
பிழிந்து உலர்த்திக்
காயப் போட்டுக் கொண்டிருக்கிறது வெயில்வெயிலை வரவேற்று
வெயிலின் முன்னிலையில்
வெயிலைக் கொண்டாடும்
வாய்ப்புக்கு நன்றி பாராட்டி
விடை பெறவைக்கிறது வெயில்*****************
நன்றி : தீக்கதிர்
-
நாணுடைமை சான்றோர்க்கணி!
-முனைவர் இராம. இராமமூர்த்தி
”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது”, என்பார் ஔவையார். இறைவன் படைப்புக்களுள் மனிதப்பிறவியே சிறப்புடையது. மனிதன் மட்டுமே நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவன். இத்திறனையே பகுத்தறிவென்றும், ஆறாமறிவென்றுங் கூறுவர். ஏனைய உயிரினங்களினின்றும் மனிதனை வேறுபடுத்துவது இவ்வாறாம் அறிவேயாகும். இதனாலேயே தொல்காப்பியரும், “மக்கள் தாமே ஆறறி வுயிரே”, எனக் கூறுவாராயினர். இப்பகுத்தறிவின் பயனால் அமைவதுவே நற்பண்புகள், நற்செயல்கள் எல்லாம். நற்பண்புகளையே மனிதப் பண்புகளெனப் புகழ்ந்துகூறுவர்.
திருக்குறள் பல நற்பண்புகளைப் பட்டியலிடுகின்றது. ஒட்டுமொத்தமாகப் ’பண்புடைமை’ என்ற பெயரானேயே நற்பண்பு சுட்டப்பெறுகின்றது. நற்பண்புகளுள் ஒன்றாக நாணம் சுட்டப்பெறுகின்றது. அதுவே ’நாணுடைமை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. நாணமென்றால் என்ன? மகளிரின் இயல்பாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பென நாற்குணங்களைச் சுட்டுவர். மகளிரின் குணமாகிய நாண் என்பதற்குக் “காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக்கம்” என்பர் நச்சினார்க்கினியர்.
ஆனால் நாம் இங்குக் கூறவந்த நாணம் மகளிர்க்கு மட்டும் உரியதன்று; ஆடவர் பெண்டிர் இருவர்தம் நல்வாழ்விற்கும் தேவைப்படுமொன்றாம். நாணம் என்ற சொல்லிற்குத் ’தமக்குப் பழிவருஞ் செயல்களைச் செய்யாமை’ என்பர் இளம்பூரணர். இதனையே திருவள்ளுவர் ஈண்டுக் கையாளுகின்றார். நல்லமனிதர் பழிச்செயல்களைச் செய்யப் பெரிதும் அஞ்சுவர். பழிபாவங்கட்கு நாணுவதே – செய்ய விரும்பாமையே பெரியோர் செயலாகும். மிகப்பெரிய செல்வமே கிடைப்பதாயினும் – ஏன் இவ்வுலகமே தமக்குப் பரிசாகக் கிடைப்பதாயினும் – பழிவருவதற்குக் காரணமான இழிசெயல்களைச் சான்றோர் ஒருநாளும் செய்யமாட்டார். புறநானூற்று அரசப்புலவரான கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி, சான்றோரின் இக்குணத்தையே, “புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்” எனக் கூறுவார். ”கழியக் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” என்பது ஆவூர் கிழாரின் அமுதமொழி.
பழிச்செயலை மேற்கொள்ளவோ செய்யவோ பெரியோர் நாணுவர். இத்தகைய நாணமே, வள்ளுவர் கூறும் நாணுடைமையில் இடம்பெறுவதாகும். மனிதர்க்குச் சிறப்புத் தருவது அவரணியும் ஆடம்பரமான உடைகளோ, அறுசுவை உணவோ அல்ல. இதனையே நாலடியார்,
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல என அழுந்தக் கூறும். புறத்தில் மேற்கொள்ளப்படும் ஆடம்பரத்தால் ஒருவர் சிறப்பெய்துவதில்லை. அவரது நற்பண்பே அவருக்குப் பெருமை தரும். அண்ணல் காந்தியடிகளுக்கு அவரது ஆடை அணிகலன்களாப் புகழைத் தந்தன? அவரை அரைநிர்வாணப் பக்கிரி (half naked fakir) எனக் கேலிமொழி பேசியவர்கள் உண்டு. அண்ணல் காந்தியடிகளின் நயத்தக்க நாகரிகப் பண்பே அவரை மகாத்மாவாக மாற்றியது; உலக உத்தமர் என்ற பாராட்டைப் பெற்றுத்தந்தது.சாதாரண மனிதனை நாடுபாராட்டும் சான்றோனாக்க நாணுடைமையே – பழியஞ்சும் மனப்பான்மையே – மிகப்பெரிய காரணம் எனத் திருக்குறள் கூறுவது இயல்புதானே?
அதனாற்றான்,
“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
டைந்துசால் பூன்றிய தூண்”, எனக் கூறுமாற்றான் சான்றாண்மைக்குத் தேவைப்படும் நற்பண்புகளுள் நாணுடைமையும் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றது. இதனாலேயே, பண்டைநாளை மன்னர்களும் தவறாது அறச்செயல்களைச் செய்துவந்தனர். மனுநீதிச்சோழன் வரலாறும், பொற்கைப்பாண்டியன் வரலாறும் அம்மன்னர் பெருமக்கள் பழிக்கு அஞ்சித் தன்மகனைத் தேரூர்ந்தமையும், தன்கை குறைத்த செயலையும் எடுத்தியம்புகின்றன அல்லவா? நெடுங்கிள்ளி, போருக்கும் வாராமல் கோட்டையையும் திறவாமல் இருந்த செயலைக்கண்ட புலவர் கோவூர் கிழார், இச்செயல் நாணுத் தகவுடைத்து – நாணத்திற்குரிய செயல் – எனக்கூறி யிடித்துரைக்கவில்லையா?அது மட்டுமா? திருவிளையாடற் புராணத்தில் “பழியஞ்சின படலம்” என்ற தலைப்பில் ஒரு திருவிளையாடலமைந்துள்ளது. அப்படலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு வரவிருந்த பழியை இறைவன் காத்தருளிய அருட்செயலே எடுத்துரைக்கப்படுகின்றது. அற்றைநாளில், செய்யத்தகாத செயல்களென, பழிதரூஉஞ் செயல்களென ஒருபட்டியலே தரப்பட்டுள்ளது. அவற்றுள், மது உண்ணுதல், புறங்கூறுதல், பொய்ச்சாட்சி கூறல், பிறனில் விழைதல், போரிற் புறமுதுகிட்டோடல் போல்வன சிலவாம். சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியாகிய வரந்தரு காதையில் கொள்ளவேண்டியவை, தள்ளவேண்டியவை குறித்து இளங்கோவடிகள் ஒரு நெடிய பட்டியலை யமைத்துள்ளார். ”பொய்யுரை யஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்; ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தீநட்பு இகழ்மின்; பொய்க்கரி போகன்மின்” என நீளுகின்றது அப்பட்டியல்!
இதனை நோக்க, செய்யத்தக்க செயல்கள், செய்யத்தகாத செயல்களென அவர்கள் பிரித்திருந்த தன்மையை யறியலாம். “செய்தக்க அல்ல செயக் கெடும்” எனத் திருவள்ளுவர் மொழிவதும் இஃதே!
ஆகவே, நல்வாழ்வு வாழ, நற்செயல்களைச் செய்யும் பண்பு வேண்டும்; பழிச்செயல்களைத் தவிர்க்கும் பண்பு அதனினும் வேண்டும் என்பதனைத் தமிழ்ப்பெருமக்கள் நன்கறிந்திருந்தனர். அறிந்ததோடமையாமல், அச் செயல்களைத் தம் வாழ்விற் பின்பற்றியும் வாழ்ந்தமையால் வசையின்றி இசையோடு இலங்கியது அவர்தம் வாழ்வு!
எனவே நண்பர்களே! வாழ்வு சிறக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலம் நாணுடைமை எனும் நற்பண்பாகும். அப் பண்பின் பெற்றியை விளக்கும் குறள்மணிகள் சில…
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை. (1014)நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று. (1020)குறள்காட்டும் இச்சீரிய கருத்துக்கள் ஞானச்சுடரை நம்முள் ஏற்றட்டும்! ஞாலம் போற்றும் நல்வாழ்வை நமக்கு நல்கட்டும்!
-
நான் அறிந்த சிலம்பு – 208
மதுரைக் காண்டம் – 09. ஊர் சூழ் வரி
கண்ணகியின் சிந்தனை
இங்ஙனம் உரையாடியது
வஞ்சம்தானோ மாயம்தானோ
இல்லை என்னை மயக்கிய
ஒரு தெய்வமோ
இல்லை வேறு எதுவோ…இனி எங்கே சென்று
என் கணவனை நான் தேடுவேன்..
இது மெய்யுரை அன்று..
என் கணவனுடன் சேர்வது
எனக்கு மிகவும் எளிது
எனினும்
என் கோபம் தீராது
அவனுடன் கூடேன்..தீய வேந்தனைக் கண்டு
இக்கொலை பாதகத்துக்குரிய
காரணம் யாதெனக் கேட்பேன்.கண்ணகி சினத்துடன் பாண்டியன் கோவில் முன் செல்லுதல்
இங்ஙனம் கூறியவள்
அவன் அரண்மனைக்குப் போவதற்கு எழுந்தாள்.
தன் துன்பம் தீய கனவுதானோ என்று
எண்ணினாள் நின்றாள்..கயல் போன்ற கண்களில்
நீர் சொரிய நின்றாள்.
எண்ணினாள்.
கண்களில் வழிந்த நீரைத்
துடைக்காமல் எண்ணினாள்.பின் எழுந்து சென்று
பாண்டியனின் வளம்மிக்க
கோவிலின் வாசலை அடைந்தாள்.ஊர்சூழ் வரி முற்றியது. அடுத்து வருவது வழக்குரை காதை
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html–படத்துக்கு நன்றி:
கூகுள் -
கோடைமழை
-மீ.விசுவநாதன்
காலைமுதல் வெயில்தான் கொளுத்திடும்
–கருமேகம் கணப்போதில் சூழும்!
சாலையெல்லாம் மழைநீ ரோடிடும்
–சாக்கடையின் குப்பைகளும் நீங்கும்!கோடையினை ரசிக்கும் வேளையில்

–குற்றால அருவிக்குள் கொஞ்சம்
ஆடையின்றிக் குளிக்கும் ஆசையே
–அதுவாக வந்துமெல்ல மறையும்!சுட்டெரிக்கும் மதியப் போதிலே
–சுள்ளெனவே தெருவெல்லாம் கொதிக்கும்!
கட்டெறும்பு கூடக் கண்ணிலே
–காணாத தரையாகக் கிடக்கும்!சட்டென்றே இடிமின் னலுடனே
–சடசடென மாமழையும் கொட்டும்!
சொட்டுகின்ற வான்நீர் அமுதமாய்ச்
–சுகமாக நனைவேன்நான் மட்டும்! -
படக்கவிதைப் போட்டி 62-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திருமிகு. வெண்மணி சிந்துஜாவின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.
நெஞ்சில் உரத்தோடும், நேர்மைத் திறத்தோடும் கரிப்புமணிகளான உப்பை உற்பத்திசெய்ய இந்தப் பெண்மணிகள் கொடும்வெயிலில், தம் கடும் உழைப்பையே மூலதனமாய் விதைக்கின்றனர். என்று மடியும் இவர்களின் மிடிமை?
இப்புகைப்படம் குறித்த நம் கவிஞர்களின் கருத்தாக்கங்களைக் கவனத்தோடு படித்துவருவோம்…வாருங்கள்!
பகலவன் ஒளியில் தகதகவென மின்னும் உப்பளத்தில் வெயிலால் வெந்த உடலோடும் நொந்த மனத்தோடும் உழைத்துப் பிழைக்கும் இந்த அரிவையரின் துயர் தீர்வதெக்காலம்? எனும் தன் வேதனையைப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹிஷாலி.
அலுப்பை போக்கும்
அதிகாலை
ஆண்டவன் அருளோடு
அவளின் பயணம்….இறங்க மனமில்லை
இறங்கியது கால்கள்
சேலை வேட்டியானது
செஞ்சிலுவை சட்டை போட்டு
க ஞ்சிக் கலையம் தன் கண்மறைக்ககடகடவென்று
கடல்நீரைத் தளங்களில் பாய்ச்சிக்
கதிரவன் துணைகொண்டு
மடமடவெனக்
கோடுபோட்ட வரப்பில்
மஞ்சள் வெயில் மணத்தோடு
தகதகவென மின்னும் உப்பளத்தில்தாகம் மறந்து
தேகம் மெலிந்து
சோகம் குவியும்
சொப்பன வாழ்க்கையில்உடலோடு உழற்றும்
உப்புக் காற்றில்
கருவாடெனக் காய்ந்து
திருவோடு அறியாத
பிள்ளைக்காக
தினம் தினம் வெந்து தணியும்
வேள்வியில்உலகமே ருசித்திருக்க
உள்ளம் உருகுதே எங்கள்
உயிரும் கருகுதே
எள்ளும் தண்ணியும்
இறைப்பதற்குள்இறைவா
எங்களை மீட்டெடுக்க வாராயோ
இல்லை மாற்று வழி தாராயோ!***
வருத்தும் வறுமையை விரட்ட, உருக்கும் கோடையில் ஓய்வின்றி உழைக்கும் இதுபோன்ற உயர்ந்த பெண்களாலன்றோ வானம் பொய்யாது பெய்கின்றது என நெஞ்சம் நெகிழ்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
உருக்கும் கோடை வெயிலதிலே
உப்பு சுமந்து பிழைக்கின்றாள்,
வருத்தும் வறுமை போக்கிடவே
வழிகள் தவறாய் எடுக்கவில்லை,
தெருவில் தனியாய் இருந்தாலும்
தீவிர உழைப்பு பிள்ளைக்கே,
இருக்கும் இதுபோல் பெண்களால்தான்
இன்னும் பெய்யுது மழையிங்கே…!***
இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திக்கும் நேரமிது!
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று குறள் வடித்தார் வள்ளுவப் பேராசான். ஆனால் காலணியின்றித் தம் மெல்லடிகளில் கொப்புளங்கள் வருமளவிற்கு உப்பளங்களில் உழைக்கும் இப்பாவையரின் துயர் நம் கண்களில் நீரை வடியவைக்கின்றது அல்லவா?நல்குரவென்னும் இடும்பையால் பல்வகைத் துன்பங்களையும் அயராது அனுபவிக்கும் இப்பெண்மணிகளின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்; துன்பங்கள் அவர்தம் வாழ்வினின்றும் கடந்து போகவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் கவிதையொன்று…
ராமன் ஆண்டாலென்ன
ராவணன் ஆண்டாலென்ன
ராப்பகல் பாராமல் காலில்
கொப்பளம் வந்தாலும் பொருட்படுத்தாது
உப்பளத்திலிருந்து உப்பைச் சுமந்து சுமந்து
சுமைதாங்கியாய்ப் போனாலும்
அசரவில்லை என்றும் அதனால்
உசரவும் இல்லை வாழ்க்கைமுறை
இலவசமாய்க் கிடைக்கும் மிக்ஸியும்
இலவசமாய்க் கிடைக்கும் செல்போனும்
இன்னபிற சாமான்களும் வந்து
என்ன உபயோகம்?
அதை இயக்க காசு வேண்டாமா ?
வயிற்றில் ஈரத்துணியை க்கட்டிக்கொண்டு
ஓரமாய் அமர்ந்தால் பசி போகுமா?
பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு போடுமா இலவசங்கள்?
கற்ற (அரசியல்) வித்தை காட்டி
உற்றவர்களும், உறவுகளும்
உல்லாசத்தை அனுபவிக்க
உழைப்பாளிகள் வெயிலோடும் மழையோடும்
வறுமையோடும் என்று மாறுமோ இந்த நிலை என்று
பொறுமை காக்கின்றனர் இதுவும் கடந்து போகுமென்று!அரசாங்கம் அளிக்கும் இலவசங்களான மிக்ஸியும், செல்போனும் ஏழைமக்களின் வயிற்றுப்பசிக்கு உணவாகா; உழைப்பு ஒன்றே அவர்களின் பசிப்பணி தீர்க்கும் அருமருந்து என்பதைத் தன் கவிதையில் இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!
-
நினைவு நல்லது வேண்டும் .. (6)
வாழ்வைக் கொண்டாடுவோம்

Man on top of mountain. Conceptual design. காலையில் எழும்போது மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும்
இரவிலே உறங்குகையில் மனச்சிக்கல் இல்லாமல் உறங்குவதிலிருந்தே வசப்பட்டு விடுகிறது வாழ்க்கை
வைரமுத்து
மிகப்பெரிய வாழ்க்கை எல்லாம் சாதாரண எளிய சந்தோசங்களால் ஆனது எனலாம் . ஒவ்வொருவருடைய லட்சியமும் அவரவர்க்கு மனமும் சூழலும் பொறுத்தே அமைந்துவிடுகிறது. வாழ்வதை லட்சியமாக கொண்டவர்களுக்கு மத்தியிலே சிலர் லட்சியத்தை அடைவதையே வாழ்வாக கொண்டு எல்லா நிலையிலும் அதை நோக்கிய பயணத்தையே செலுத்திவிடுகிறார்கள்
” உனக்கு எப்படி இப்படி நேரம் கிடைக்கிறது “
” சினிமாலாம் பாப்பீங்களா சார் “
” இத்தனை நண்பர்களை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பீர்கள் “
” நீங்கள் எழுதி இந்த சமூகத்தை மாற்ற இயலுமா “
என்ற பல்வேறு கேள்விகளை நாம் தினமும் எதிர்கொள்கிறோம் . பலநேரங்களில் நாம் செய்யும் செயல்களில் பிறருடைய கவனித்திற்காகவோ பாராட்டுதலுக்காகவோ மட்டுமே செய்துவிட்டு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் புலம்ப ஆரம்பித்துவிடுகிறோம் . இதுதான் நம்மிலும் பலருக்கு இயல்பு கூட . இதில் தவறும் இல்லை . புதிதாக வாங்கிய ஆடையைக்கூட யாராவது கவனிக்கவில்லை எனில் நமக்கு ஏதோ ஒரு வெறுமையான உணர்வு வந்துவிடுகிறது . இது நீடித்துவிடக்கூடாது என்பது எனது வாதம் . என்னுடைய விருப்பமும் கூட . நேரம் என்பதெல்லாம் நாம் வகுத்துக்கொள்வதுதானே. நமக்கு பிடித்த விசயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கிவிடுகிறோம். செய்யும் வேலை அனைத்தையும் நமக்கு பிடித்தமான வேலையாக நம்முடைய ரசனைக்கு ஏற்ற வகையிலே செய்ய ஆரம்பித்தால் நமக்கு நேரமும் ஒரு பொருட்டாக இருக்காது . லட்சியத்தை அடைவது நம்முடைய வாழ்வாக இருக்கலாம். அதற்காக நம்மைச் சுற்றி நிகழும் நல்ல விசயங்களை கவனிக்காமல் கடிவாளம் போடப்பட்ட குதிரை மாதிரியான வாழ்க்கை என்பது சரியில்லாமல் போய்விடும்
எனக்குப் பிடித்த செயல்களை மிக நேர்த்தியாக நல்ல புரிதலோடு செய்ய முடிகிறது என்பதே மிகச்சிறந்த வரம் போன்றது . நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் அனைவருமே நம்மைப்போல அமைய வேண்டும் என்பதெல்லாம் பேராசை . அவ்வாறு அமைந்துவிட்டால் அதில் எவ்வித சுவாரசியமும் இருந்துவிடாது . நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஆசிரியரே. அவர்கள் ஏதாவது ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறார்கள் என்ற ஒரு வரி எங்கோ படித்த ஞாபகம் எனக்கு . உண்மையும் அதுதான் . இயற்கையும் வித்தியாசமான மனநிலை கொண்ட மனிதர்களும் சூழல்களுமே நம்மை வாழ்வதற்கான நம்பிக்கையை தருகிறது . சில சிக்கல்கள்தான் நமக்குள் இருக்கும் நாம் அறியாத பல திறமைகளை உந்தித்தள்ளுகிறது . எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம் . உண்மையில் அதுபோலானதொரு குணம் நம்மிடமே இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம் . இல்லையெனில் அதை அப்படியே புறம்தள்ளிவிட்டு மீண்டும் அதே போன்ற விமர்சனம் எழாமல் வாழ பழகிக்கொள்ளலாம் .
உலக வாழ்விலே எதிலும் கலந்துகொள்ளாமல் இலட்சியம் என்ற ஒரு மாயையை நாமாக உருவாக்கிக் கொண்டு அதை நோக்கியே நாம் பயணப்பட்டு திரும்பிப் பார்க்கையில் நாம் பல சந்தோச தருணங்களை இழந்திருப்போம் . நமது நல்ல நண்பர்கள் நம்மை விட்டு வெகுதூரத்தில் நின்றிருப்பார்கள் . நமக்காக பணி செய்ய பலபேர் காத்திருப்பார்கள். ஆனால் ஆறுதல் சொல்ல ஆளில்லாத ஆளாக மாறி நிற்போம். இத்தனை பெரிய வாழ்க்கையில் வரும் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு பகைமை என்பதை மறந்து நம்மோடு அவர்களையும் அரவணைத்துச் செல்லும் வாழ்வுதான் அனைவருக்குமான வாழ்வு. அந்த அழகிய வாழ்வு அனைவருக்கும் கிடைக்கிறது . வெகுசிலரே அதை வாழ்கிறார்கள். பலரும் அதைக் கடந்து விடுகிறார்கள் ஏதோ ஒரு கடிவாளத்தோடு …
ஒவ்வொரு நாளுமே திருநாள்தான்
அதைக் கொண்டாடி வாழ்வோம் ….
சதா பாரதி










