வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர்

செ. இரா.செல்வக்குமார்

இந்தக் கிழமையின் வல்லமையாளர், தமிழ்விக்கிப்பீடியாவில் சூலை 2004-ஆம் ஆண்டுமுதல் அயராது தனிச்சிறப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் இளைஞர் திரு. சுந்தர் என அழைக்கப்படும் இல. பாலசுந்தரராமன் அவர்கள்.

இன்று தமிழ் விக்கிப்பீடியா 86,000 கட்டுரைகளைத் தாண்டியுள்ளது என்றால் அதற்கு அருமைமிகு அடித்தளம் நாட்டிய மிகமுக்கியமானவர்களுள் ஒருவர் இவர்.

ஆங்கிலமொழியின் வளர்ச்சியிலும் ஆங்கிலத்தின் அறிவிலக்கிய வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிய படிநிலைகளாகக் கருதப்படுவடுவனவற்றில், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மிக முக்கியமானது என்பார்கள். இப்பொழுது நடக்கும் 21 ஆம் நூற்றாண்டில், கடந்த 15 ஆண்டுகளில் ஆங்கிலவிக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியம், அறிவுப்பரவலாக்கத்தில் மிக முக்கியமான ஒன்று. ஆங்கில விக்கிப்பீடியா 2001 இல் தொடங்கியது. அதுபோலவே 2003 இல் தொடங்கிய தமிழ்விக்கிப்பீடியாவும் தமிழில் நடக்கும் அறிவுப்பரவலாக்கத்தில் மிகமுக்கியமான ஒன்று. இந்த அரிய பணியில் வல்லமையாளர் திரு இ. மயூரநாதனுடன் 2004-இலேயே இணைந்து பணியாற்றத்தொடங்கி இன்றளவும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர் சுந்தர். கடந்த 12 ஆண்டுகளாக சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவுக்கும் அதன்வழி தமிழுலத்துக்கும் நல்கிய நல்லாக்கங்கள் மிகவும் பாராட்டப்படவேண்டியவை.


சுந்தர் என அழைக்கப்படும் இல. பாலசுந்தரராமன் [9]

விக்கிப்பீடியாவின் துணைத்திட்டமான விக்சனரி என்னும் திட்டத்தில் முதன்முதலாக ஏறத்தாழ 100,000 சொற்களும் சொற்பொருள்களையும் தானியங்கிமுறையில் இரவி முதலானோருடன் சேர்ந்து ஏற்றி நிறுவினார் [2]. இன்று தமிழ் விக்சனரியில் 3,50,000 சொற்களுக்கும் மேல் உள்ளன. தமிழிணையக் கல்விக்கழகம் இலட்சக்கணக்கான கலைச்சொற்களையும் நல்கியது இத்திட்டத்தை மேலும் முன்னணிக்குக் கொண்டுவர உதவியது. சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவுக்கும் அதன் துணைத்திட்டங்களுக்கும் தொழினுட்ப வசதிகளை நிறைய செய்திருந்தாலும் அவரின் விக்கிப்பீடியாவின் கொள்கை வழிகாட்டல்களும் வழிமுறைகளும் மிகப்பெரிய துணையாக இருந்தது. ஆங்கிலவிக்கிப்பீடியாவிலும் சுந்தர் நிருவாகப் பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்ததினால் கொள்கை, வழிமுறைகள் போன்றவற்றில் நல்ல துய்ப்பறிவு இருந்தது தமிழ்விக்கிப்பீடியாவின் சீரான வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

சுந்தர் விக்கிப்பீடியாவின் விக்கிமேனியா என்னும் கருத்தரங்கில் 2009 இல் தமிழ்விக்கிப்பீடியா பற்றி ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். இதுவே அனைத்துலக அரங்கில் தமிழ்விக்கிப்பிடியாவைப்பற்றிய முதல் ஆய்வுக்கட்டுரை [3].


விக்கிப்பீடியாவின் நிறுவனர் சிம்போ வேல்சு எனப்படும் சிம்மி வேல்சுடன் (Jimmy Wales) திரு. சுந்தர் [1]

சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவில் எழுதிய கட்டுரைகள் எண்ணிக்கையளவில் 144 என்றாலும் அவற்றில் பலவும் தமிழுலகுக்குப் புதியனவும் ஆழமானவயும் ஆகும். அவர் எழுதிய மௌடம் [4], கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை [5], கிப்பன் பண்டம் [6], தேரி [7] போன்ற பற்பல கட்டுரைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

சுந்தர் மிகச்சிறப்பாக யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவியுள்ளார் [8]

தமிழ்விக்கிப்பீடியாவின் அடித்தளத்தை அமைத்த முதன்மையானவர்களுள் ஒருவர், தனிச்சிறப்பான பங்களிப்புகள் செய்தவர் என்பதோடு இவர் நல்ல தமிழ்ப்பற்றுடையவர், இயற்கைநேயம் மிக்கவர், பறவை பூச்சி, செடிகொடிகள் என்று அனைத்திலும் மிகவும் ஆர்வம்மிக்கவர். மொழியியலிலும் கணிதத்திலும் ஆராக் காதல் கொண்டவர். பெங்களூரில் இந்திய தகவல் தொழினுட்பக் கழகத்தில் (IIIT Banglore) முதுகலைப் பட்டம் பெற்றவர் முகநூல் நிறுவனத்தில் இப்பொழுது பணியாற்றுகின்றார். இதற்குமுன்பு, யாகூ நிறுத்திலும் பணியாற்றியவர். கோரா (Quora) போன்ற தளங்களில் எழுதுபவர். தொழில்முனைவோராகவும் இயங்கி வெற்றிகள் சமைத்தவர்.

சுந்தர் தன் மனைவி தமிழரசி, மகன் முகில் ஆகியோருடன் சிங்கப்பூரில் வாழ்கின்றார்.


சுந்தரும் அவருடைய மனைவி தமிழரசி, மகன் முகிலும்.[10]

தமிழ்விக்கிப்பீடியாவின் அடித்தளத்தை அமைத்ததிலிருந்து பற்பல நல்ல தமிழாக்கங்களைச் செய்த, சிறந்த ஆளுமை கொண்ட பண்பாளர் திரு சுந்தர் அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

அடிக்குறிப்புகள்

[1] படம், தமிழ்விக்கிப்பீடியா, படக்கலைஞர் Kalyan Varma, விக்கிப்பீடியாவில் ஏற்றியவர் நற்கீரன் (Natkeeran).
[2] விக்சனரி தானியங்கித்திட்டம் [https://ta.wikipedia.org/s/b1r]
[3] https://wikimania2009.wikimedia.org/wiki/Portal , https://ta.wikipedia.org/s/bs8
[4] https://ta.wikipedia.org/s/7vu
[5] https://ta.wikipedia.org/s/p3x
[6] https://ta.wikipedia.org/s/fxh
[7] https://ta.wikipedia.org/s/4c1f
[8] இல.பாலசுந்தரராமன், எஸ்.ஈஷ்வர், சஞ்சீத்குமார் ரவீந்திரநாத்(22-24). “இயல்மொழிப் பகுதிகளுக்கான இடம் சாரா இலக்கணம் – வெண்பா இலக்கணத்திற்கான ஒரு செயலி”. ‘, உத்தமம் (INFITT). 2007-05-16 அன்று அணுகப்பட்டது.. (ஆங்கிலத்தில்); [https://ta.wikipedia.org/s/isx]
[9] சுந்தரின் முகநூலில் உள்ள படம்.
[10] சுந்தரின் முகநூலில் உள்ள படம்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (4)

 1. Avatar

  சுந்தர் இந்தவார வல்லமையாளராகத் தெரிவானதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் விக்கிப்பீடியா கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி வளர்ந்து வருவதற்கு சுந்தரின் பங்களிப்பு மிக மிக இன்றியமையாதது. அவரது தகவல் தொழில்நுட்பப் பின்னணி, விக்கித் திட்டங்கள் குறித்து அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, எல்லோரையும் மதிப்புடன் நடத்தி அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பு, தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே லாவகமாகக் கையாளக்கூடிய வல்லமை என்பன தமிழ் விக்கியின் வளர்ச்சியில் முக்கியமான பங்களிப்பை வழங்கின. தமிழ் விக்கிப்பீடியாவின் பல்வேறு அம்சங்களையும் தழுவியவையாக அமைந்திருந்த அவரது செயற்பாடுகள் புதிய பயனர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்திருந்தன. விக்கிப்பீடியாவுக்கும் அப்பால், ஒரு நல்ல மனிதராகவும், நண்பராகவும், சமூக அக்கறையோடு கூடிய செயற்பாடுகளில் தூய்மையான நோக்கங்களோடு ஈடுபடுபவராகவும் உள்ள சுந்ததருக்கு எனது வாழ்த்துக்கள்.

 2. Avatar

  விருதுவழங்கி சிறப்பித்தமைக்கும் விரிவான வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி, செல்வா. வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளர் பகுதியைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். இத்தனை வல்லமையாளர்களுக்கு நடுவே என்னையும் இணைத்ததைக்கண்டு என்ன சொல்வதென்றுதெரியவில்லை.

  மயூரநாதன், உங்கள் அன்புக்கும் தொடரூக்கத்துக்கும் மீண்டும் நன்றிகள். 🙂

 3. Avatar

  வல்லமையாளர், நண்பர் சுந்தர் தன்னார்வலராக, பயிற்றுநராக, தொழில்நுட்ப வழிகாட்டியாக விக்கித் திட்டங்களுக்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். அவரது திறனும் தொண்டும் சிறக்கட்டும். 

 4. Avatar

  திரு, இ,மயூரநாதன், திரு.சுந்தாரின் தன்னார்வப்பணியின் தொய்வின்மை பற்றி பாராட்டுகிறார். சுந்தருக்கு உகந்த பாராட்டுக்கு, இந்த ஒரு சொல் போதும். திரு. சிறீதரனின் உந்துததால் என்னையும் இந்தப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள நினைத்தேன். ஆனால், முதிய வயதின் தள்ளாமையால் அதை ஏற்றுக்கொள்ளா முடியவில்லை. அதை நினைக்கும்போது செல்வா சுந்தரை வல்லமையளாராக தேர்ந்தெடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க