செ. இரா.செல்வக்குமார்

இந்தக் கிழமையின் வல்லமையாளர், தமிழ்க்கணிமை உலகில் தனிச்சிறப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் (A.G. Ramakrishnan) அவர்கள்.

பேராசிரியர் இராமகிருட்டிணன் உத்தமம் (INFITT) என்னும் உலகத் தகவல் தொழினுட்ப மன்றம், 2016 இல் நடத்தவிருக்கும் 15-ஆவது தமிழிணையக் கருத்தரங்கின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். இது திண்டுக்கல்லில் காந்திகிராமத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருக்கின்றது [4]. தமிழ்க்கணிமைக்கு சிறப்பான ஆக்கங்கள் செய்துள்ள இவர் இக்கருத்தரங்கிற்குத் தலைவராக இருப்பதைப்பாராட்டியும் இதையொட்டி தமிழர்கள் இவரைப்பற்றி அறிந்துகொள்ளும்பொருட்டும் இவர் இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழில் வரிவடிவில் எழுதியுள்ள ஓர் எழுத்துரையைத் தமிழில் ஒலிவடிவப் பேச்சுரையாக கணினிவழி மாற்றும் செயலியை இவர் மிகச்சிறப்பான முறையில் செய்திருக்கின்றார். இதனை செய்துபார்க்கக் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்:

எழுத்துரையை ஒலிவடிவப் பேச்சுரையாக மாற்றி.

இதே போல கன்னட எழுத்துரையையும் ஒலியுரையாக மாற்றம் செய்யும் இந்தச் செயலி. பேராசிரியர் இராமகிருட்டிணனின் ஆய்வானது கண்பார்வை இல்லாதவர்களோ கண்பார்வை மங்கியவர்களோ ஓர் எழுத்துரையைக் காதால் எளிதாகக் கேட்டுணரும் வகையில் இருப்பது மிகவும் பயனுடையதாகும். இதே போல ஒருவர் கையால் தமிழிலோ கன்னடத்திலோ எழுதிய உரையைக் கணினி எழுத்துருக்களாக மாற்றவும் ஒரு செயலி செய்திருக்கின்றார். இதனை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுள்ளதும் குறிப்பிடத்தங்குந்தது [2].

பேராசிரியர் இராமகிருட்டிணன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலைப் பட்டத்தை (BE) 1980 இல் பெற்றார். மின்னணுவியல் தொடர்பாடலியல் (communications) துறையில் அவருடைய பட்டம் இருந்தது. இவர் பல்கலைக்கழகத்தின் தேர்வில் வரிசைப்படி எட்டாவது மாணவராகத் தேர்ச்சிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சென்னையில் உள்ள இந்திய தொழினுட்பக் கழகத்தில் (IIT Madras) முதுநிலை தொழினுட்பப் பட்டத்தை (M.Tech) 1982-இலும், அதே நிறுவனத்தில் பொறியியலில் முனைவர்ப்பட்டத்தை (Ph.D) 1989 இலும் பெற்றார். தற்பொழுது இந்திய அறிவியற்கழகத்தில் (Indian Institute of Science) பேராசிரியராகவும் மின்னியல் துறையின் தலைவராகவும் இருக்கின்றார்.

மொழியியல்சார் கணிமைகள் போக, இவர் மருத்துவத்துறையில் படவுருவ அலசல்கள் செய்வதிலும் சிறப்பான ஆய்வுகள் செய்திருக்கின்றார். குறிப்பாக காந்த ஒத்ததிர்வு படவுரு (Magnetic Resonance Imaging) உருவாக்கும் நுட்பத்தில் புதிய வளர்ச்சிகளுக்கு வழி வகுத்துள்ளார். விரைவாகவும் துல்லியமாகவும் காந்த ஒத்ததிர்வுப்படங்களை உருவாக்க இவை உதவுகின்றன. மருத்துவத்துறையில் இவர் செய்துள்ள ஆய்வுகளைக் கீழ்க்காணும் பக்கத்தில் காணலாம்:

மருத்துவத்துறையில் செய்துள்ள ஆய்வுகள் [3]


பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன், இந்திய அறிவியற்கழகம் (Indian Institute of Science) பெங்களூர் [1]

பேராசிரியர் இராமகிருட்டிணன் அவர்களின் பொறுப்பில் நடக்கும் மைல் (MILE- Medical Intelligence and Language engineering Lab) (மருத்துவ நுண்ணறிதிறனுக்கும் மொழிசார் பொறியியலுக்குமான ஆய்வகம்) என்னும் ஆய்வகத்தின் வழி இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன [5]. பேராசிரியர் இராமகிருட்டிணன் பல விருதுகளையும் பெருமைகளையும் வென்றவர். 1992 இல் பெற்ற சர் ஆண்டுரு வாட்டு கே யங்கு ஆய்வாளர் விருதையும் (Sir Andrew Watt Kay Young Researcher’s Award), 1985 இல் இந்திய உயிரியமருத்துவத்துறையில் சிறந்த ஆய்வுக்கட்டுரைக்காகப் பெற்ற தங்கம் வாசுதேவன் விருது போன்றவையும், இந்திய உயிரிய மருத்துவப்பொறியியல் குமுகத்தின் (Biomedical Engineering Society) தலைவராக 2002 முதல் 2008 வரை இருந்ததையும் குறிப்பிடவேண்டும். இந்தியாவின் பொறியியலாளர் கழகத்தின் சிறப்பாளராகவும் (Fellow, Institution of Engineers (India)),
இந்தியாவின் மின்னணுவியல் தொலைதொடர்பியல் பொறியாளர் கழகத்தின் சிறப்பாளராகவும் (Fellow, Institution of Electronics and Telecommunication Engineers, India.) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிறபல குறிப்பிடத்தகுந்த பெருமைகளைக் கீழ்க்காணும் பக்கத்தில் காணலாம் [6].

தமிழ்க்கணிமை உலகில் பற்பல நல்ல பயனுடைய ஆய்வாக்காங்கள் செய்த, சிறந்த ஆளுமை கொண்ட பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

அடிக்குறிப்புகள்

[1] படம்: பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் அவர்களின் அலுவலக வலைத்தளம். படத்தை எடுத்தவர் ஏ.வாணி (2007). http://mile.ee.iisc.ernet.in/AGR/index.htm
[2] http://mile.ee.iisc.ernet.in/mile/OnlineHandWriting_Recognition.html#OHR
[3] http://mile.ee.iisc.ernet.in/mile/publications/MedicalImageProcessing.html
[4] http://home.infitt.org/event/15th-tamil-internet-conference/
[5] http://mile.ee.iisc.ernet.in/mile/
[6] http://mile.ee.iisc.ernet.in/AGR/profile.htm

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. செல்வாவின் தேர்வுகள் மிகவும் உயர்ந்தனவையாக அமைந்துள்ளன. பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். அவரால் நாட்டுக்கும் உலகுக்கும் பல நன்மைகள் ஏற்படும் என்று என் கணிப்பு. 
    அன்புடன்,
    இன்னம்பூரான்

  2. பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் அவர்களின் எழுத்திலிருந்து பேச்சுரு மாற்றி, தனிச் சிறப்பு வாய்ந்தது. கணித் தமிழுக்குப் பெரும் மதிப்பினை அளித்த இவரது ஆராய்ச்சி, தமிழுக்கு நவீன முகத்தைத் தந்தது. தமிழுக்கு மட்டுமின்றி, கன்னடத்திற்கும் இந்தியாவின் இதர மொழிகளுக்கும் இது பயன்படுகிறது. அந்த வகையில் இந்திய மொழிகளின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பினை இவர் நிகழ்த்தியுள்ளார். பார்வையற்றவர்களுக்கும் இதர பயனர்களுக்கும் இது பயனளிக்க உள்ளது, பெருமகிழ்வு அளிக்கிறது.

    மொழியியல்சார் கணிமைகளுடன், மருத்துவத் துறையில் படவுருவ அலசல்கள் செய்வதிலும் இவர் முனைந்திருப்பது, இவரது தொடர்ச்சியான தேடலைக் காட்டுவதோடு, இவரது பல்வகை ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

    வல்லமையாளர் ஆ.க. இராமகிருட்டிணன், உலகிற்கு ஒளியாக விளங்கும் புத்தாக்கங்கள் பலவற்றை இன்னும் படைப்பார். இவரது முயற்சிகள் சிறக்க, வெற்றிகள் குவிக்க, சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *