சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற நோக்குடன் துடிப்புடன் நடைபோடும் வல்லமை மின்னிதழ், ஆறு ஆண்டுகளை நிறைவு செய்து, 2016 மே 16 அன்று, ஏழாம் ஆண்டில் நுழைந்துள்ளது.

Vallamai_7th_year

வல்லமையில் கடந்த ஓராண்டில் சுமார் 2500 இடுகைகளும் (மொத்தம் 10,459) 1500 பின்னூட்டங்களும் (மொத்தம் 11,161) வெளியாகியுள்ளன. இவை அனைத்தையும் குறிப்பிடுவது இயலாது எனினும் சிலவற்றைக் குறிக்கலாம்.

ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகள், எகிப்திய பிரமிடுகள் உள்ளிட்ட உலக அதிசயங்கள் பற்றிய கட்டுரைகள், நாகேஸ்வரி அண்ணாமலையின் சமூகவியல் கட்டுரைகள், இராம. இராமமூர்த்தியின் இலக்கியக் கட்டுரைகள், எஸ் வி வேணுகோபாலனின் உணர்ச்சிகரமான கட்டுரைகள், பல்வேறு தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள்… எனப் பலவும் கருத்துச் செறிவுடன் கவனத்தை ஈர்ப்பவை.

வல்லமையில் வெளியாகும் தொடர்கள் பற்பலவும் முக்கியமானவை. மலர் சபாவின் நான் அறிந்த சிலம்பு, செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்கள், சக்தி சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், க.பாலசுப்பிரமணியனின் கற்றல் ஒரு ஆற்றல், கிரேசி மோகனின் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம், இன்னம்பூரானின் கனம் கோர்ட்டார் அவர்களே, நிர்மலா ராகவனின் குறுந்தொடர்கள் உள்ளிட்ட பலவும் கனம் பொருந்தியவை.

என்னதான் இருக்கிறது வேதத்தில் என்ற அரிய தொடரையும் வளவன் கனவு என்ற வரலாற்றுப் புதினத்தையும் வளமான பல்வேறு கட்டுரைகளையும் எழுதிய சு.கோதண்டராமன் அவர்கள், இந்த ஆண்டில் மறைந்தது, நமக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அதே போன்று, மேகலாவின் தந்தையாரும் தமிழறிஞருமான முனைவர் இராம. இராமமூர்த்தியின் மறைவும் பேரிழப்பாகும். இவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக.

கவிதைகளில் மீ.விசுவநாதனின் இதுதான் வாழ்க்கை! என்ற பாடலைப் படித்தீர்களா? இது போல், மரபிலும் புதுக் கவிதையிலும் பற்பல அழகிய கவிதைகளை வெளியிட்டுள்ளோம். சில மொழிபெயர்ப்புகளும் இந்த வகையில் அணி சேர்க்கின்றன.

கடலோடி நரசய்யாவுடனான பவளசங்கரியின் நேர்காணலும் ஔவை நடராசன் உடனான எனது அலைபேசி உரையாடலும் நேர்காணல் பிரிவில் குறிப்பிடத்தக்கவை.

இந்த 2016 சட்டமன்றத் தேர்தல் திருவிழாவில் வழக்கறிஞர் க.இரவி அவர்கள் வித்திட்ட வாக்காளர் விழிப்புணர்வுத் திட்டத்தில் வல்லமையும் இணைந்துகொண்டது. இதன் தொடர்ச்சியாக வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் ஒருங்கிணைப்பில் ஈரோட்டில் மக்கள் கேள்வி மேடை, சிறப்புற நடைபெற்றது.

வல்லமையாளர் விருதினைத் தொடர்ச்சியாக 212 வாரங்களாக வழங்கி வருகிறோம். விசாகப்பட்டினம் திவாகர், இன்னம்பூரான், பேரா.நாகராஜன் வடிவேல் ஆகியோர் முதல் 100 வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்தனர், தேமொழி அடுத்த 100 வல்லமையாளர்களைத் தெரிவு செய்தார், பேரா.செ.இரா.செல்வக்குமார், இப்போது இந்தப் பொறுப்பினை ஏற்று, அருந்திறம் படைத்த பேராளர்களை அடையாளம் காட்டி வருகிறார்.

கடந்த ஆண்டில் நாம் தொடங்கிய படக் கவிதைப் போட்டி, 64 வாரங்களாகத் தொடர்கிறது. வாசகர்களின் படைப்பாக்கத் திறனை வளர்க்கும் அதே நேரம், சிறந்த படக் கலைஞர்களையும் இந்தப் போட்டி ஊக்குவிக்கிறது. வல்லமையின் ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுக்கும் படங்களில் அன்றாட வாழ்வில் நாம் கவனிக்கத் தவறும் பல காட்சிகள் எட்டிப் பார்க்கின்றன. இந்தப் போட்டிக்கு வந்த படைப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்து, நயம் பாராட்டி எழுதும் மேகலாவின் நடையழகு, ஒரு தனியழகு.

இந்த ஆண்டில் பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற கருப்பொருளில், எழுத்தாளர் வையவன் அவர்களின் ஆதரவுடன் கட்டுரைப் போட்டி ஒன்றையும் மாதந்தோறும் நடத்தினோம். ஆயினும் எதிர்பார்த்த அளவு பங்கேற்பு இல்லாததால் இதனைத் தொடர இயலவில்லை.

தமிழில் அயற்சொற்கள் வெகுவாகப் பரவியுள்ள நிலையில், அவற்றைத் தமிழ் வழக்கில் எழுதுவது எப்படி என்ற ஐயம் பலருக்கும் உண்டு. இதற்கு ஒரு தீர்வாக, அயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவதற்கு ஒரு கூகுள் பக்கத்தை உருவாக்கியுள்ளோம். செ.இரா.செல்வக்குமார், ஸ்ரீ ஸ்ரீதரன், ஜெயபாரதன், தேமொழி உள்ளிட்ட பலரும் இதில் பங்களித்து வருகிறார்கள்.

ஈழத் தமிழ்ச் சொற்களைப் புரிந்துகொள்ள ஏதுவாக, அவற்றுக்கு இணையான தமிழக வழக்கை ஆவணப்படுத்தவும் ஒரு கூகுள் பக்கத்தை உருவாக்கியுள்ளோம். சகோதரி சுவாதி தொடங்கிய இந்த முயற்சியில் மறவன்புலவு சச்சிதானந்தன், ஷைலஜா, செம்பூர் நீலு, தேமொழி, ஸ்ரீரங்கன் மோகனரங்கன் உள்ளிட்ட பலரும் பங்களித்து வருகிறார்கள். இந்த இரண்டு பக்கங்களும் திரள் தரவு வகையிலானவை. கூகுள் கணக்கு உள்ள எவரும் இவற்றில் பங்களிக்கலாம்.

இந்த ஏழாம் ஆண்டில் மேலும் பல முத்திரைகளைப் பதிப்போம். இணைய இதழியல் குறித்த பயிற்சிகளை வழங்க உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள், மின்னஞ்சல் அனுப்பிப் பதிந்துகொள்ள அழைக்கிறோம். மேலும், வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதிவோம். பள்ளி – கல்லூரிகளில் இணையப் பயிலரங்குகளையும் திறன் வளர்ப்புத் திட்டங்களையும் முன்னெடுக்க உள்ளோம். இதற்கு உறுதுணை புரிய, அன்பர்கள், தன்னார்வலர்கள், பயிற்சியாளர்கள், கலைஞர்கள், விளம்பரதாரர்கள், கொடையாளர்கள் உள்ளிட்ட பலரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்தப் பயணத்தில் துணைநிற்கும் சகோதரி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், ஆலோசகர்கள், படைப்பாளர்கள், வாசகர்கள், படக் கலைஞர்கள், ஓவியர்கள், நண்பர்கள், தொழில்நுட்ப ஆதரவு நல்குவோர் உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆதரவுடன் நமது பயணம் இனிதே தொடர்கிறது. இன்னும் சிறப்புறப் பணியாற்ற, அன்பர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் வரவேற்கிறோம். வாருங்கள், நம் திறம் மிளிர, மதி குளிர, உயிர் வளர, மனம் செழிக்க, மாநிலம் பயனுறச் செய்வோம்.

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “ஏழாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  1. வாழ்க! ஆல்போல் தழைத்து வளர்க!!

  2. வல்லமை வாழ்த்து.
    சி. ஜெயபாரதன்.

    ஏழாண்டு வயதுப் பதிவு
    நூலான வல்லமை வலை இதழ்
    நூறாண்டு வாழ்க,
    சீராக வளர்க.
    இலக்கியப் படைப்பு,
    வரலாற்றுப் படைப்பு,
    கலை ஓவிய ஆக்கங்கள்,
    விஞ்ஞானக் கட்டுரைகள்,
    மேதைகள் வாழ்க்கை,
    சிந்தை கவர் காவியங்கள்,
    மந்தையாய் ஏந்தி வரும் 
    வல்லமை இதழ் வாழ்க,
    பல்லாண்டு வாழிய,
    எல்லாரும் வாழ்த்துவோம்.

    ++++++++
     

  3. ஆறாண்டுகளை  வெற்றிகரமாகக் கடந்து ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வல்லமையை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  
    வல்லமை  இணைய இதழ் தொடர்ந்து பல எழுத்தாளர்களை உருவாக்குவதில் பங்களித்து தமிழ்த் தொண்டாற்றவும் வாழ்த்துகள்.  
    எழுதுவதில் எனக்குள்ள ஆர்வத்தை, அதில் வளர்ச்சியை அளித்த வல்லமையின் பங்கும், நிறுவனர் அண்ணா கண்ணன், ஆசிரியர் பவளசங்கரி ஆகியோரின் ஆதரவும் என்றென்றும் நன்றியுடன் மறக்கமுடியாத அளவில் என் வாழ்வில் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பது மறக்கவும், மறுக்கவும் முடியாத ஓர் உண்மை.  
    வல்லமை தனது ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொழுது அதனை  நினைவு கூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இதில் பாதிக்கும் மேலாக (மூன்றரை ஆண்டுகள்) வல்லமையுடன் மிக நெருக்கமாக எனது தொடர்பு இருந்து வந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 
    வல்லமை பீடு நடை போட்டு தமிழ்ப்பணியாற்ற மனம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க…வாழ்க… வல்லமையின் நிர்வாகக் குழுவிற்கு மனம் கனிந்த பாராட்டுகள். 
    அன்புடனும், நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும்,
    ….. தேமொழி 

  4. ஏழாமாண்டில் எழிலாய் நடைபயிலத் தொடங்கியிருக்கும் வல்லமை மின்னிதழ், மேலும் பல்லாண்டுகளைக் கடந்து வெற்றியோடும் பெற்றியோடும் வீறுநடைபோட்டு இணைய இதழ் வரலாற்றில் ஓர் சாதனை இதழாய் மின்னிட, மிளிர்ந்திட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

    புதிய படைப்பாளிகள் பலர் உருவாகக் களம் அமைத்துக்கொடுப்பதோடு அவர்களின் ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு அவர்களுக்கு ஊக்கமூட்டி வருவதிலும் வல்லமை இதழ் இணையற்றது.

    புதிய சிந்தனைகள், முற்போக்கு எண்ணங்கள், தனித்தமிழ் நாட்டம், எழுத்தார்வம் போன்றவற்றைக் கொண்டிலங்கும் முனைவர் அண்ணாகண்ணன், திருமிகு. பவளசங்கரி, முனைவர் தேமொழி, முனைவர் செல்வகுமார் போன்றோர் வல்லமையைக் கட்டிக்காக்கும் புலத்துறை முற்றிய சான்றோர் பெருமக்கள்!

    இவர்களல்லாது, முதுமையிலும் மாறா இளமையோடு  தன் பங்களிப்பைத் தங்குதடையின்றி வழங்கிவரும் மூதறிஞர் இன்னம்பூரான் ஐயா, தமிழறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா, சிறந்த எழுத்தாளரும், நாடகாசிரியருமான திவாகர் ஐயா,  பல்துறை வித்தகியர் திருமிகு. மதுமிதா, திருமிகு. சாந்தி மாரியப்பன் முதலியோர் வல்லமைக்கு வளமும் உரமும் சேர்த்து அதனை வளர்த்து வருவோர்.

    தொழில்நுட்ப உதவிகளை வரையாது வழங்கிவரும் இளைஞர் படையும் வல்லமையின் வெற்றிக்குப் பக்கபலமாய்த் திகழ்கின்றது.

    இத்தனை அறிஞர் பெருமக்களின் துணையோடு இயங்கிவரும் வல்லமை மேன்மேலும் பல சிகரங்களைத் தொடும்; சாதனைக் கற்களை நடும் என்பதில் ஏது ஐயம்?

    வாழ்க வல்லமை! வளர்க அதன் தமிழ்த்தொண்டு!

    அன்புடன்,
    மேகலா 

  5. ஏழாம் ஆண்டில் இனிதே காலெடுத்து வைக்கும் “வல்லமை”க்கு என் பாராட்டுக்கள். இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, சட்டம், பொதுநலம் மற்றும் பல்வேறு கருத்து வண்ணங்களை சுவையாகவும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் நடுநிலையுடன் வெளியிடும்  சிறப்பான மின்னிதழ்  என்ற பெயர் பல்லாண்டு நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள்..

  6. ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வல்லமை இதழுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.  வல்லமை மின்னிதழ் மிகுசிறப்பாக பலகோணங்களில் வளர்ந்து வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது. முனைவர் அண்ணா கண்ணன் ஆறாண்டில் வளர்ந்து வந்ததை அழகாகத் தொகுத்துக்கூறியுள்ளார். பவளசங்கரி அவர்களின் முன்னாண்மையுடன் ஆசிரியர் குழு செயற்படுவதும், பங்களிப்பாளர்கள் வல்லமையுடன் பட்டைதீட்டுவதும் மிகவும் பாராட்டுக்குரியது. 10,459 இடுகைகள் என்பது வரலாற்றுப்பதிவு. எண்ணிக்கையைத் தாண்டி அருமையான படைப்புகளின் நற்களஞ்சியம் என இப்பொழுதே பெயர் பெற்றிருப்பதாகவே உணரமுடிகின்றது. மேன்மேலும் சிறக்க  நல்வாழ்த்துகள்.  இந்தப் பயணத்தில் அண்மையில் நானும் கலந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றிபல. 

  7. ஏழாம் ஆண்டில் எழிலாக அடியெடுத்து வைத்த வல்லமை மின்னதழுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    நன்றி வணக்கம்

  8. வல்லமை – ஏழாம் ஆண்டு

    ஏழு ஸ்வரன்களை போல் எழில்மிகு மின்னிதழே !

    ஏழாம் ஆன்/டில் அடி எடுத்து வைக்கும் வல்லமை இதழே !

    எல்லைஇல்லா இலக்கிய சுவை,கவிதைகள்கொண்ட இதழே!

    படிப்போர்க்கும் மன நிறைவு அளித்திடும் தமிழ் மின்னிதழே !

    ரா.பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.