படக்கவிதைப் போட்டி .. (64)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
திரும்பப் பெறும் இடம்
அன்பின் கோப்பையை
ஏந்தும் முகமும்
அன்பின் பகிர்வை
ஏற்கும் முகமும்
எத்தனை கூடுதல் அழகு…
விரியும் கைகளைக்
காணும்
கண்களும் விரிய
எல்லையற்று விரிகிறது
அன்பின் பசும்புல் வெளி
கொட்டிவிடக் கூடாதென்ற
கவனமும் எச்சரிக்கையும்
கைகளில் ஏந்தும் தின்பண்டத்திற்கு மட்டும்தான்
நட்புறவில் தழைக்கும் இன்பத்தில்
கொட்டோ கொட்டென்று
கொட்டிக் கொண்டிருக்கிறது அன்பு
ஏனெனில்
செலுத்தினால் மேலதிகம்
திரும்பப் பெறும் இடம்
அன்பின் அகம்.
– எஸ் வி வேணுகோபாலன்
சென்னை 24
94452 59691
பசியொன்றை கண்டெடுத்து
புசிப்பதனால் என்ன பயன் ?
என் பசியை உணவாக்கி
உன் குருதி மெருகேற,
காத்திருக்கிறேன் !
குளிர்ந்து என் மனம் அன்றி,
இச்சமூகம் செழித்தோங்கவே!
என் அன்புச்சகோதரனே!
–நாமக்கல் முருகேசன்.
தகப்பனாட்டம்
உதவாக்கரையாக
வளர்ந்து விடாதே
என்றால் அம்மா
தாத்தாவாட்டம்
தண்டமாக
வாழ்ந்து விடதே
என்றால் பாட்டி
தாயும் தந்தையும் தவிர்த்து
தாய் மாமனாட்டம்
சோம்பேறியாக
இருந்து விடாதே
என்றார்கள்
அக்கம் பக்கத்தினர்
கடைசி பெஞ்சாட்டம்
அறிவை இழந்து
முட்டாலாகி விடாதே
என்றார் ஆசிரியர்
ஆனால் …
யாருமே சொல்லாமல்
எனக்குள் எப்படி
வந்தது இந்த ஈகை திறன்
ஒருவேளை
இந்த உலகமே
நம்
கைக்குள் இருப்பதற்கு
பெயர் தான்
நட்பின் சுவாசமோ !
ஹிஷாலி, சென்னை
பெரியவர்களுக்குப் பாடம்…
இருப்பதைக் கொடுத்திடும் பழக்கமது
இளமை முதலே வரவேண்டும்,
உருப்படும் வழியிதை உணர்ந்தேதான்
உள்ளதைப் பகிர்ந்தே உண்ணுவதின்
பெருமை தெரிந்தோ தெரியாமலோ
பிள்ளைகள் பிறர்க்குக் கொடுக்குமிந்த
அருமை யான பாடமதை
அறிந்து கொள்வீர் பெரியோர்களே…!
-செண்பக ஜெகதீசன்…
பாசமும் அன்பும்
பகிர்ந்துண்ணும்
பழக்கமும்
பத்து பதினந்துவயதுவரை
அண்ணனுக்கும் தம்பிக்கும்
இருபது வயதானால்
இருப்பதை இருகூறாக
உருக்குலைக்க போராட்டம்
பங்காளிகளுக்குள்
ஒருவனை ஒருவன்
கருவறுக்க கத்தித்தேடுவதும்
புத்தியைத்தீட்டுவதும் வாடிக்கைதான்
ஒற்றுமையே உயர்வு தரும்
பெற்றோர் சொல் கேட்பீரோ ?
உற்ற உறவையும்
கற்ற கல்வியையும் காற்றில் பறக்க விடுவீரோ? யாரறிவார்?