படக்கவிதைப் போட்டி 62-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திருமிகு. வெண்மணி சிந்துஜாவின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.
நெஞ்சில் உரத்தோடும், நேர்மைத் திறத்தோடும் கரிப்புமணிகளான உப்பை உற்பத்திசெய்ய இந்தப் பெண்மணிகள் கொடும்வெயிலில், தம் கடும் உழைப்பையே மூலதனமாய் விதைக்கின்றனர். என்று மடியும் இவர்களின் மிடிமை?
இப்புகைப்படம் குறித்த நம் கவிஞர்களின் கருத்தாக்கங்களைக் கவனத்தோடு படித்துவருவோம்…வாருங்கள்!
பகலவன் ஒளியில் தகதகவென மின்னும் உப்பளத்தில் வெயிலால் வெந்த உடலோடும் நொந்த மனத்தோடும் உழைத்துப் பிழைக்கும் இந்த அரிவையரின் துயர் தீர்வதெக்காலம்? எனும் தன் வேதனையைப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹிஷாலி.
அலுப்பை போக்கும்
அதிகாலை
ஆண்டவன் அருளோடு
அவளின் பயணம்….
இறங்க மனமில்லை
இறங்கியது கால்கள்
சேலை வேட்டியானது
செஞ்சிலுவை சட்டை போட்டு
க ஞ்சிக் கலையம் தன் கண்மறைக்க
கடகடவென்று
கடல்நீரைத் தளங்களில் பாய்ச்சிக்
கதிரவன் துணைகொண்டு
மடமடவெனக்
கோடுபோட்ட வரப்பில்
மஞ்சள் வெயில் மணத்தோடு
தகதகவென மின்னும் உப்பளத்தில்
தாகம் மறந்து
தேகம் மெலிந்து
சோகம் குவியும்
சொப்பன வாழ்க்கையில்
உடலோடு உழற்றும்
உப்புக் காற்றில்
கருவாடெனக் காய்ந்து
திருவோடு அறியாத
பிள்ளைக்காக
தினம் தினம் வெந்து தணியும்
வேள்வியில்
உலகமே ருசித்திருக்க
உள்ளம் உருகுதே எங்கள்
உயிரும் கருகுதே
எள்ளும் தண்ணியும்
இறைப்பதற்குள்
இறைவா
எங்களை மீட்டெடுக்க வாராயோ
இல்லை மாற்று வழி தாராயோ!
***
வருத்தும் வறுமையை விரட்ட, உருக்கும் கோடையில் ஓய்வின்றி உழைக்கும் இதுபோன்ற உயர்ந்த பெண்களாலன்றோ வானம் பொய்யாது பெய்கின்றது என நெஞ்சம் நெகிழ்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
உருக்கும் கோடை வெயிலதிலே
உப்பு சுமந்து பிழைக்கின்றாள்,
வருத்தும் வறுமை போக்கிடவே
வழிகள் தவறாய் எடுக்கவில்லை,
தெருவில் தனியாய் இருந்தாலும்
தீவிர உழைப்பு பிள்ளைக்கே,
இருக்கும் இதுபோல் பெண்களால்தான்
இன்னும் பெய்யுது மழையிங்கே…!
***
இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திக்கும் நேரமிது!
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று குறள் வடித்தார் வள்ளுவப் பேராசான். ஆனால் காலணியின்றித் தம் மெல்லடிகளில் கொப்புளங்கள் வருமளவிற்கு உப்பளங்களில் உழைக்கும் இப்பாவையரின் துயர் நம் கண்களில் நீரை வடியவைக்கின்றது அல்லவா?
நல்குரவென்னும் இடும்பையால் பல்வகைத் துன்பங்களையும் அயராது அனுபவிக்கும் இப்பெண்மணிகளின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்; துன்பங்கள் அவர்தம் வாழ்வினின்றும் கடந்து போகவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் கவிதையொன்று…
ராமன் ஆண்டாலென்ன
ராவணன் ஆண்டாலென்ன
ராப்பகல் பாராமல் காலில்
கொப்பளம் வந்தாலும் பொருட்படுத்தாது
உப்பளத்திலிருந்து உப்பைச் சுமந்து சுமந்து
சுமைதாங்கியாய்ப் போனாலும்
அசரவில்லை என்றும் அதனால்
உசரவும் இல்லை வாழ்க்கைமுறை
இலவசமாய்க் கிடைக்கும் மிக்ஸியும்
இலவசமாய்க் கிடைக்கும் செல்போனும்
இன்னபிற சாமான்களும் வந்து
என்ன உபயோகம்?
அதை இயக்க காசு வேண்டாமா ?
வயிற்றில் ஈரத்துணியை க்கட்டிக்கொண்டு
ஓரமாய் அமர்ந்தால் பசி போகுமா?
பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு போடுமா இலவசங்கள்?
கற்ற (அரசியல்) வித்தை காட்டி
உற்றவர்களும், உறவுகளும்
உல்லாசத்தை அனுபவிக்க
உழைப்பாளிகள் வெயிலோடும் மழையோடும்
வறுமையோடும் என்று மாறுமோ இந்த நிலை என்று
பொறுமை காக்கின்றனர் இதுவும் கடந்து போகுமென்று!
அரசாங்கம் அளிக்கும் இலவசங்களான மிக்ஸியும், செல்போனும் ஏழைமக்களின் வயிற்றுப்பசிக்கு உணவாகா; உழைப்பு ஒன்றே அவர்களின் பசிப்பணி தீர்க்கும் அருமருந்து என்பதைத் தன் கவிதையில் இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!