Month: June 2016

  • தித்திக்குதே திருக்குறள் – 8

     

    அன்பே தெய்வம்

     04ae7493-c5f6-469a-b182-8711c1d60836

    திவாகர்

     

    உயிர்களிடத்தே அன்புசெய்ய வேணுமாய்

    ஆயிரம் முறைசொன்னாலும் கேளாமல்

    உந்தன் நலமொன்றையே கருத்தில்கொண்டு

    எந்தநாளும் உன்காரியம் செய்கின்றாய்

    பயன்பிறர்க்கும் அதன்பலனில் உண்டெனில்;

    சுயநலம் பேணுவதால் குறையில்லைதான்

    அறியவேணும் தம்பி நன்றாய்புரியவேணும்

    குறுகியயெண்ணங்கள் என்றும் துணைவாரா;

    உன்மீதே உனக்கன்பு என்றல்லாமல்

    அனைவர்மீதும் செலுத்துமன்பே உத்தமாம்

    உள்ளம்சிறிது உயிர்பெரிது என்றிருப்போர்

    கள்ளத்தன வாழ்க்கையே வாழ்வார்களாம்

    சற்றேகவனம் கொடுத்து சொல்வதைக்கேள்

    பற்றுமிகக் கொள்வாய் அன்பின்மீதே!

     

     

    அனாதையென்றே வந்தவனாம் அவனை

    ஆனந்தமாய் அருட்தந்தை ஆதரித்தார்

    சோறுண்டு சுகவாழ்க்கை வாழ்ந்தாலுமேனோ

    ஊறுவிளைப்பதிலேயே சுகம்கண்டான் அவன்

    தன்னலம்பார்த்தான் பிறர்நலம் கண்டானில்லை

    பின்னால் யாரும்குறைசொன்னால் அவர்க்கும்

    இன்னல்தந்தான் ஊரார்பலரை அவமதித்தான்

    இன்னும்பல தொல்லைதந்தான் கெடுதிசெய்தான்

    பெரும்வேதனையைத் தாங்காது ஊராரும்

    அருட்தந்தையிடன் சென்றார் ஊரிலே

    இவனொருவன் இருந்தால் இன்னும்பலர்

    இவனைப்போலவே திரிவர் என்றார்

    அருட்தந்தை அவரிடத்தே சமாதானஞ்செய்து

    பொருட்படுத்தாதீர் இவன்செயலை இனியும்

    யார்க்கும் தீங்குசெய்யாது வீட்டினிலே

    ஊரினிலே நல்லபெயர் வாங்கித்தருவேன்

    இவனுக்கென யாருண்டு என்னைத்தவிர

    அவப்பெயர்நீக்கி நல்லவனாக்கி காட்டுவேன்

    நம்பிக்கைதான் வைத்தார் அவருமிவனிடம்

    நம்பினார் கெடுவதில்லை வேதத்தின்தீர்ப்பு

    ’தம்பி, இனிநல்லதையே நினைக்கப்பழகு

    வம்புதனை விட்டுவிடு நல்லவனாயிரு

    நல்லதையே நினைத்து உனைவளர்த்தேனென

    நல்லபலவார்த்தை சொன்ன அருட்தந்தையை

    வன்கொடுமையாய் தன்கத்தியால் குத்திஅவர்தம்

    பொன்செல்வத்தை களவாடி ஊரைவிட்டோடினான்

    வழியில் காவலர்கள் பிடித்தனர்கட்டுப்போட்டு

    கழிகொண்டடித்தனர் கொள்ளை விவரம்கேட்டனர்

    பாரறிந்த நல்லவராம் அருட்தந்தைபெயர்சொன்னால்

    ஊர்க்காவலர் தம்மைவிட்டு விடுவரென்றெண்ணி

    அருட்தந்தை அவர்பிள்ளை தனக்காககொடுத்ததென

    பெரும்பொய்யொன்றைக் கூசாமல் சொன்னானே

    வல்லவராம்காவலரும் அவன்சொன்ன வார்த்தையால்

    நல்லவராம் அருட்தந்தை இல்லத்தில்சேர்த்தாரே

    அங்கேதரைதனில் குருதிவெள்ளத்தில் அருட்தந்தை

    அங்கம்துடிப்போடு படுத்துக்கிடக்க நிலையறிந்த

    காவலர்மருத்துவருக்கு ஆளனுப்பி காயம்பட்ட

    விவரத்தைக் கூறக்கேட்க அருட்தந்தையோ

    தன்மகனாம் இவனுக்கு மறுவாழ்க்கைக்கொடுக்க

    என்செல்வங்களாம் தங்கநகைகளைத் தந்தேனே

    இன்னும்ஏதேனும் தருவதற்கு பரண்மீதேறுகையில்

    தன்தவறால்கத்தி தடுமாறி தன்மீதுவிழுந்ததென

    தயக்கமின்றி அவர்பேச தடுமாறிபோனான்கள்வன்

    மயக்கம்வந்தது மனதும் தெளிந்ததுமாறிப்போனான்

    ’எந்தையே எனைக்காக்கும்தெய்வமே மன்னியும்

    சிந்தைதெளிந்தேன் உமதன்பினாலே மாற்றினீர்!

    காசுபணம்செல்வம் இவையே நம்பினேன்ஆனால்

    மாசற்றஅன்பே தெய்வம் என்போர்பெரியோர்

    நீவிர்காட்டிய அன்பால் எமையாட்கொண்டீர்

    நீவிர்தெய்வம்.. எனைமன்னியுமென கால்பற்றினான்

     

     

    தம்பி! கேட்டாயா இந்தக்கதையை

    நம்பிக்கை வைத்திரு அன்பின்மேலே

    அன்பால் கொடியவரை வெல்லலாம்

    அன்பைப் பிறர்மீது திருப்பினால்

    அன்பால் எதையும் வாங்கலாம்

    அன்பை மற்றவரிடம் காட்டினால்

    அன்பொன்றே நாமறிந்த ஆயுதமாய்

    அன்பொன்றே நாமறிந்த மந்திரமாய்

    அன்பொன்றே நாமறிந்த தெய்வமாய்

    என்றைக்கும் சிந்தித்துச் செயல்படுவாய்!!

     

     

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

    என்பும் உரியர் பிறர்க்கு. (திருக்குறள் – 72)

     

    அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உடமையாகக் கொண்டு வாழ்பவர். அன்பு உள்ளவரோ தன் உடல் பொருள் அனைத்தையும் பிறருக்காக என்றே கருதி உதவி அருளுபவர்.

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • வேடனும் ஒரு குயிலும்

    க.பிரகாஷ்

                ஓர் அடர்ந்த காடு, அக்காட்டினுள் ஒரு பெரிய வீடு, அவ்வீட்டினுள் ஒரு வேடன். அவ்வேடனுக்கு மக்களோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் காட்டிற்குள் வாழ வந்துவிட்டான். அப்படி வந்த அவனுக்கு அக்காட்டில் வேட்டையாட ரொம்ப நாளா ஆசை.

    என்ன ?

    தனியாக இருக்க வேண்டும்.

    ஏன்?

    காட்டில் இருக்கும் விலங்குகளைக் கண்டு ரசிக்கவேண்டும், அதனோடு, பேச வேண்டும் அதனை வேட்டையாடவேண்டும்.

     சரி!

    இருந்தாலும் அவனுக்கு கொஞ்சம் பயம், அதனால் அவன் வீட்டைச் சுற்றி வேலியமைச்சு. விலங்குகள் இடம் இருந்து பாதுகாப்பாக இருந்தான்.

    முதல் நாள் – வேட்டையாடுவதற்காக காட்டிற்குள் சென்றான் அன்று முழுவதும் சுற்றி திரிந்து எந்த விலங்குகளையும் பார்க்காமல் ஏமாந்தான் வேடன்.

    இரண்டாவது நாள் – ஆயூதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் புகுந்தான். புகுந்தவுடனே அவன் கண்ணுக்கு பாம்பு தென்பட்டது. பாம்பைப் பார்த்து வேடன் கூறினான் போகும் போது முதலில் உன்ன தான் பாக்கணுமா, டே முட்டாள் என்ன பாக்குரது இருக்கட்டும், இப்படி ஒவ்வொரு நாள் காட்டுக்குப் போராயே யார பாக்க, தெரியலையே, முதல்ல அத முடிவு செய்யடா,

    மூன்றாவது நாள் – தன்னிடம் இருந்த ஆயூதங்களை குறைத்து விட்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.  வெகு தூரம் நடந்து விட்டான், எதையும் பார்க்க முடியலயே என்று வருத்தம் ஒருபக்கம், தண்ணீர் தவிப்பு ஒருபக்கம் என்ன பன்றதுன தெரியாமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டான். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில மயங்கிவிட்டான். அந்த மரத்தில் இருந்து ஒரு குரங்கு கிழே இரங்கி அவனை எழுப்பிப் பார்த்தது எந்திரிக்கவேயில்ல, பாவம் என்ன பண்ரதுனே தெரியல, அவன் அருகில் ஒரு காகிதப் பை  இருந்தது, அதை எடுத்து அருகாமையில் ஒரு ஆறு ஓடி கொண்டு இருக்கின்றது. அந்த ஆற்று தண்ணீரை காகித பையில் எடுத்துக் கொண்டு வந்து அவன் மேல் தெளித்தது. அவன் மெல்ல மயக்கம் தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்தான். வேடனைக் கண்டு குரங்கு கூறியது, ஏன் இவ்வளவு கஷ்டப்படுற.

    நான்காவது நாள் – ஆயூதங்களே இல்லாமல் தண்ணீர் குடவையுடன் மீண்டும் காட்டிற்குச் சென்றான். இன்றாவது வேறு திசை மாறி போவும் என்று நினைத்து திசை தெரியாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான். இனி என்னால் நடக்க முடியாது கால் வலி அதிகமாயிடுச்சி, பசியொருப்பக்கம் என்ன செய்வது என்று தெரியல பொழுதாயிட்டே இருக்கு, சரி! நடப்போம், கொஞ்ச தூரம் நடந்தவுடன் ஆற்றை பார்த்துவிடுவான். பசியை போக்குவதற்க்கு மீன் பிடித்து சுட்டு சாப்பிட்டு பசியை போக்கினான். பொழுதாயிடுச்சி, மழ வேர வரமாதிரி இருக்கு சரி! போவோம் மழ வந்தா பாக்கலாம், இரவுமாகிவிட்டது. ஒரு பாரை குகையைக் கண்டதும் அங்கே ஒதுங்கிடுவான். மழைவந்ததும் அந்த இடத்தில் வாழும் நரி ஒன்று வந்ததது. வேடனை கண்டதும் பரிதாபப்பட்டது. சரி! இருக்கட்டும் விடு என்று நினைத்துவிட்டு வேடனை பாதுகாக்க வெளியே காத்து கொண்டு இருந்தது. வேடன் ஆச்சரியப்பட்டான். நரி கூறியது திசை தெரியாமல் வந்தால் திசை தெரியாமல் போயிடுவ மகனே!

    ஐந்தாவது நாள் – நடு காட்டில் இருந்து மீண்டும் அவனது வேட்டையை தொடர்கிறான். அதிசயமாக ஒரு மானைப்  பார்த்தான், அம்மானை எப்படியாவது கொன்று விடவேண்டும் என்று துடித்தான். பின்னாடி ஒரு மான் இருப்பதைப் பார்த்துவிட்டு அம்மான் மீது வைத்த குறியை தப்பிவிடுகிறான். டே வேடா! அது இரண்டும் உறவாடுகிறது அதைப் போய் கொல்ல நினைக்கிறயேடா.

    சரி! சரி!

    ஆறாவது நாள் – அக்காட்டில் இருந்து வேறு காட்டிற்குச் சென்று விட்டான். அக்காட்டில் வழி தெரியாமல் முள் புதரில் மாட்டிக் கொண்டான். அவன் சத்தமிட்டதைக் கண்டு யானை ஓடி வந்தது, பரிதாபத்துடன் வேடனுக்கு யானை உதவியாக இருந்தது. வழி சேர்த்த யானைக் கூறியது முடியாத வேலைய ஏன்டா முயற்சிக்கிற.

    ஏழாவது நாள் – வேடன் அவன் வீட்டை நோக்கி பயணம் செய்தான். இந்த ஆறு நாட்கள் விலங்குகளை வேட்டையாடி நான் ஏமாந்து விட்டேன். இன்று ஒருநாளாவது பறவைகளை வேட்டையாடுவோம். என்று மனதில் நினைத்துவிட்டு வேட்டையைத் தொடர்கிறான்.

    ஓர் உயர்ந்த தென்னை மரத்தைக் கண்டு கிளிகள் ஓடியது, அவனும் ஓடினான் கிளிகள் அம்மரத்தின் பொந்தில் நுழைந்தது சிறிது நேரம் கழித்து சத்தமிட்டது. வேடன் மரத்தின் அடியில் உட்கார்ந்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தான்.

    கிளி வேடனைப் பார்த்துக் கூறியது, டே முட்டாள் நீ ஓடி வந்து பிடிப்பதற்கு உன்னை போல் நான் வேடன் அல்ல. வேடிக்கையாளர் டா என்ன வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும் என்று.

    மீண்டும் வேடன் ஏமாந்தான். தொடர்ந்து வழியில் கூட்டம் கூட்டமாக புறாக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். இன்று தான் நான் நினைத்த அளவிற்கு வேட்டையாடப்போகிறேன் என்று மகிழ்ச்சியாக புறாக்கள் உட்கார்ந்த இடத்தில் ஒரு வலையை வீசிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ரொம்ப நேரமா ஒரு புறாவ கூட காணம், பொழுதுவேற ஆயிடுச்சு என்ன பன்னரது தெரியல, இதுங்கெல்லாம் எங்கடா போயிருக்கும், சரி! சரி! வருட்டும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம். பொழுதுவேற சாஞ்சிறுச்சி ஒரு புறா மட்டும் வருது, அந்த புறாவை பாத்துட்டு எங்க போவுது, அதைப் பாக்கலாம். அந்தப் புறா போயும் ரொம்ப நேரமாச்சி கூடுல அடங்கியிருக்குமா என்று நினைத்து விட்டு சென்று அந்த இடத்தைப் பார்க்கிறான். பெரிய கிணறா இருக்கு எல்லா புறாவும் இங்கதா அடங்கியிருக்கா சரி! சரி! பொழுது சாஞ்சிடுச்சி இங்கே இருக்கலாம். காலையில எழுந்து எல்லா புறாவையும் பிடிச்சிட்டு போயிடலாம்.

    காலையில எழுந்து பார்த்தான் ஒரு புறாகூட இல்ல. வேடனைப் பார்த்து ஒரு புறாக் கூறியது டே!  ஒரு விலங்கவே உன்னால பிடிக்கமுடியல எங்கள எப்படி பிடிக்கமுடியும் உன்னால,

    எட்டாவது நாள் – ஒரு வாரம் சுற்றி திரிந்து எதுவும் பிடிக்கவில்லை இன்று எதையாவது பிடிச்சிட்டு போலாம். தொடர்கிறான், மீண்டும் அந்தப் பாம்பைச் சந்திக்கின்றான். அதை பார்த்து மறுபடியும் உன்னையே பார்குரன், இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான்.

    சரி! சரி! நீ எங்க போரனு பாக்குரன்.

    பெரிய மரத்தில் குயில் கூவுது, காகம் கரைந்து கொண்டு இருந்தது. வேடன் பார்கிறான் குயிலும் கூவுகிறது, காகமும் கரைகிறது என்னவா இருக்கும் சரி இருக்கட்டும். இந்தப் பாம்பைப் பார்ப்போம், அட அதுக்குள்ள எங்கடா போச்சி, மீண்டும் காகமும், குயிலும் சத்தமிட்டது. அம்மரத்தை மீண்டும் பார்க்கிறான். பார்த்ததும் ஆச்சிரியப்படுகின்றான். இரண்டுக்கும் இடையில் இருக்கின்றாயே யாருக்கு இறையாகப்போரயோ ?

    வேடன் குயிலைப் பார்க்கின்றான், குயிலும் வேடனைப் பார்க்கின்றது. காகம் குயிலை பார்க்க, குயில் பாம்பைப் பார்க்கின்றது , குயில் காகத்தை பார்க்க, காகம் வேடனைப் பார்க்கின்றது. இப்படி பார்க்க எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டது பாம்பு.

    வேடனைப் பார்த்து குயில் கூறியது. நீ கெட்டு என்ன பார்க்க, நான் கெட்டு காகத்தைப் பார்க்க, அதுவும் கெட்டு உன்ன பார்க்க – இப்படி எல்லாத்தையும் கெடுத்து நீயும் கெட்டு போரயே! இது உனக்கே ஞாயமா?

    பாம்பு  – வேடனைப் பார்த்து சொன்னது. முதலில் நீ நினைத்து வந்த காரியம்  உறுதியாக இருக்கவேண்டும். உன் மீது நம்பிக்கை வை அப்பதான் வாழ்க்கையில உருப்படியாவருவ. என்ன நம்பிக்கை – ம் – இதுவே தெரியல நீ எல்லாம் எங்க உறுப்பட போர “தன்னம்பிக்கை”

    Share
  • ஏட்டுச் சுரைக்காய்

    தமிழ்த்தேனீ

    வாசிப்பு, அறிவியல், கணிதம் ஆகிய திறன்களில் மலேசியா முறையே 55, 52, 57ஆம் இடங்களில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்களில் சிங்கப்பூர், தென்கொரியா, ஹாங்காங், சங்காய் சீனா, பின்லாண்ட் ஆகிய நாடுகள் இருக்கின்றன.

    ஜப்பானியக் கல்வி முறை 21 ஆம் நூற்றாண்டை நோக்கி பீடு நடை போடுகிறது. ஜப்பானில் அவர்கள் ஒரு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் . அதாவது ஒவ்வொரு மாணவருக்கும் அவர் வாங்க வேண்டிய மதிப்பெண் 100 என்றால் அதிலே 20 சதவிகிதம் எழுத்து வடிவமாகவும் .80 சதவிகிதம் நேரிடையான பயிற்சியும் என்பது அவர்களின் தாரக மந்திரமாக உள்ளது.

    நேரிடையாக களத்தில் இறங்கி பரிசோதனைகளில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்தக் கருவியை எந்த நுணுக்கத்தை எங்கே உபயோகிக்கவேண்டும் என்று நேரிடை அனுபவம் கிடைக்கிறது.

    அதனால் பொறியாளர்களுக்கும் முழு வேலையும் அந்தந்த வேலைகளின் நுணுக்கமும் தெரிகிறது யாருக்கு வேலையைப் பற்றி நன்றாகத் தெரியுமோ அவர்களால்தான் வேலை வாங்க முடியும் என்னும் சூக்ஷுமத்தை உணர்ந்திருக்கிறார்கள் அவர்கள் ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது என்பதை சற்றே மாற்றி ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்னும் பழமொழியை ஏற்படுத்திய நாம் இன்னமும் பாடங்களை மனப்பாடம் செய்து அப்படியே காகிதத்தில் மறக்காமல் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியவுடன் படித்த அத்தனையும் மறந்து போகும் படிப்பு முறையைக் கையாண்டு கொண்டிருக்கிறோம்.

    நம் நாட்டு கல்வி முறையை மாற்ற வேண்டும் படித்துப் பட்டம் பெற்ற பல பொறியாளர்களுக்கு எந்தக் கருவிக்கு என்ன பெயர் அந்தக் கருவியை எங்கே எப்போது எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரியவில்லை எந்த நுணுக்கத்தை எங்கே எப்படி உபயோகிக்க வேண்டும் என்றே தெரியவில்லை

    ஆகவே பல படித்த பொறியாளர்கள் கூட அவர்கள் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இன்னமும் கட்டிடம் கட்டும் மேஸ்திரி என்று சொல்லிக் கொள்பவர்களையும் தச்சர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் நம்பித்தான் செயல் படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.

    முறையான களப்பயிற்சி இல்லாத காரணத்தால் பொறியாளர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி உபயோகப்படுவதில்லை .

    குலக் கல்வி என்னும் முறையில் நேரிடையான பயிற்சிகள் அவர்களது முன்னோர்கள் செய்யும் போது பார்த்துப் பழக்கப்பட்டோ அல்லது அவர்களால் முறையாக கற்பிக்கப்பட்டோ வருகிறது.

    ஒரு சிற்பி சிற்பம் செதுக்கும் போது அதை விளையாடிக்கொண்டே கவனித்துக் கொண்டிருக்கும் அவருடைய மகனும் அவனை அறியாமலே தொழில் நுணுக்கங்களைக் கற்கிறான் .

    ஆகவே கணிணி உலகத்தில் காலடி வைத்தும் இன்னமும் கை வலிக்க எழுதி எழுதி களப்பயிற்சியே இல்லாமல் மனப்பாடம் செய்து ஒப்பித்து மறந்து போகும் கல்வி முறையை மாற்றி களப்பணியில் ஈடுபடுத்தி முறையாகக் கற்றுக் கொடுத்து அவர்களின் தொழில் நுணுக்க ஞானத்தை ஏற்படுத்தும் கல்வி முறைக்கு நம் நாடும் மாறவேண்டும்.

    அப்படி முறையான கல்வி கற்றோர் அவர்களுக்குள் அவர்களை அறியாமலே மனப்பாடம் ஆகியிருக்கும் கருவிகளின் பெயர்களையும் நுணுக்கங்களையும் மிக எளிதாக எழுதுவார்கள்

    ஆகவே தெளிவாக தட்டச்சு செய்தாலே முப்பது பக்கமாயினும் ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்து அதைப் பதிப்பித்து ஆசிரியரிடம் கொடுக்கும் திறமைகளை வளர்க்கவேண்டும் அதை விடுத்து யோசித்து யோசித்து கைவலிக்க இரண்டு மணி நேரம் எழுதியும் கையெழுத்து சரியில்லாத காரணத்தினாலும் தெளிவாக எழுத முடியாத காரணத்தினாலும் மதிப்பெண் பெற முடியாத அவல நிலையில் மாணவர்களை வைத்திருக்கும் கல்வி முறை அடியோடு மாற வேண்டும்.

    வருங்காலத்தில் நேரத்தின் அருமை தெரிந்து குறுகிய காலத்திலே அதிகம் தெரிந்து  கொள்ளும் நேரிடைப் பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களுடைய தொழில் ஞானத்தையும் தொழில் நுணுக்கங்களையும் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் நவீனத்தை உபயோகப்படுத்தி தொழில்களையும் பொறியாளர்களின் மேம்பாட்டையும் வளர்த்து நாட்டை நவீன இந்தியாவாக ஆக்கி வளர்க்கும் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்பது என் ஏக்கம் யோசிப்பார்களா கல்வியாளர்கள்.

    Share
  • இன்றைய குடிமகன்

      கிருத்திகா கீர்த்தனா

    ‘காலேஜ் விட்டதும் முதலில் யாழினியைப் பார்க்க வேண்டும்’ மனதுக்குள் எண்ணியவனாக அரைகுரையாக பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். கல்லூரி முடிந்ததும் யாழினியே கௌதமை பார்க்க வந்துவிட்டாள்.

    மாலை வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்காற்றை வாரி வழங்கி கொண்டிருந்தது, வேப்பமரம். அதன் கீழ் அமர்ந்து இருவரும் மாற்றி மாற்றி யோசித்து கொண்டிருந்தனர்.

    “கௌதம், நாம கண்டிப்பா வீட்டை விட்டுப் போகனும….? இன்னொரு முறை யோசிச்சுப் பாரேன்”

    “இல்லை, யாழினி. நான் பலதடவை யோசிச்சுப் பார்த்துட்டேன்…… இதைத் தவிர வேற வழி இல்ல……”

    “இருந்தாலும்… அப்பாகிட்ட நாம பேசி புரிய வைக்க முடியாதா?.. நாம போனபிறகு அவர் இதே மாதிரி மனசை மாத்திக்காமல் இருந்தா என்ன செய்றது…… அம்மாவுக்கும் இதனால பிரச்சனை வரலாம்….”

    “நீ இனிமே இதப் பத்தி பேசாத….. நான் முடிவு பண்ணிட்டேன்….நாளைக்கு நாம கிளம்பறோம்….உனக்கு தேவையானதெல்லாம் எடுத்திட்டு தயாரா இரு…….”

    “ம்ம்ம்……….. நீயும் அப்பாவப்போலவே பிடிவாதமா இருக்க….. நாளைக்கு சாயந்திரம்   5 மணி ட்ரெய்னுக்கு கிளம்பிடலாம்….”

    ”இதுதான் சரி…..இப்ப வா வீட்டுக்குப் போகலாம்…”

     மறுநாள்…  யாழினி வீட்டில்…..

    யாழினியின் அப்பா, முருகானந்தம் கண்களில் வருத்தம் நிரம்ப எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, சிவகாமி செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தாள். எதிர்பாராதவிதமாக யாழினியின் அறையில் ஏதோ எடுக்கச் சென்றவரின் கைகளில் அந்தக் கடிதம் கிடைத்தது.

    “அப்பா, நான் உங்களை ஏமாற்றிவிட்டுச் செல்வதாக நினைக்க வேண்டாம். உங்களின் பிடிவாதத்தை மாற்ற நான் எடுத்துக் கொண்ட சிறிய முயற்சியே இது.. கௌதமும், நானும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். உங்களிடம் இருந்து நல்ல முடிவு வரும் வரை காத்திருப்போம். ஆனால் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் திரும்பி வர மாட்டோம்…. இது உறுதி. எங்களைத் தேட வேண்டாம். உங்கள் முடிவே, எங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்”

                                                          இப்படிக்கு,

    உங்கள் பாசத்திற்குரிய மகள்

             யாழினி….

             கடிதத்தைப் பார்த்ததில் இருந்து,  “இனியும் உங்களை புரிஞ்சிக்கலைனா, நான் ஒரு நல்ல அப்பாவா இருக்க முடியாது. இனி எந்தக்காலத்திலும் குடிக்க மாட்டேன்… இது சத்தியம்.. நீயும், கௌதமும் திரும்பி வந்துடுங்கம்மா….குடிப்பழக்கத்தால என் குடும்பம் சீரழியறத நான் இனி அனுமதிக்க மாட்டேன்”, எனக் கதறிக் கொண்டிருந்தார்.

    சிவகாமியும் கண்களில் நீர் அரும்பியவளாக, “நீங்கள் எடுத்த முடிவு அவங்களை நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்கும்….. நீங்க மனசை தளர விடாதிங்க…..அவங்க நிச்சயம் வந்துடுவாங்க…..” என ஆறுதல் கூறினாள்.

    அவர் உண்மையாகவே திருந்திவிட்டார் எனப் புரிந்து கொண்டாள். அவருக்கு தெரியாமல் ரூமுக்குள் சென்று கதவைத் தாளிட்டாள். கௌதமுக்கு போன் செய்தாள்.

    “ஹலோ…… கௌதம் நான் அம்மா பேசறேன்…….நீயும் உன் அக்கா யாழினியும் உங்க பெரியப்பா வீட்லருந்து கிளம்பி காலைல வந்துடுங்க……..உங்கப்பா உண்மையிலே மனசு மாறிட்டார்…..’இனி நான் குடிக்கவே மாட்டேன்’னு சத்தியம் பண்ணுனார்……நீ போட்ட ப்ளான் நல்லா வேலை செய்யுது…..”

    ”அம்மா… என்ன சொல்றீங்க….. நீங்க சொல்றது உண்மையா….. இதுக்காகத்தான நானும் அக்காவும் இவ்வளவு சிரமப்பட்டோம்.. நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்துடுவோம். இங்க பெரியப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டோம்…

    அப்பாவை குடியை நிறுத்தச் சொல்லி எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்தாச்சு…. கேட்கவே இல்லை. அவர் எங்க பேச்சைக் கேட்கலைனாலும் எங்க மேல அவருக்கு பிரியம் ஜாஸ்தி…. அதனாலதான் நாங்க இந்த மாதிரி ப்ளான் பண்ணுனோம்… அதாவது அவரை விட்டுட்டு போயிடுவோம்னு ஒரு பயத்தை ஏற்படுத்துனோம். இப்ப அதனாலதான் அவர் மனசு மாறியிருக்கார்…

    இத விட சந்தோசம் நமக்கு வேற என்ன வேணும்….

    இருந்தாலும்… நாங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க அம்மா……”

    “அதெல்லாம் ஒண்ணும் இல்ல…. என் பிள்ளைங்க எப்பவும் தப்பு பண்ண மாட்டாங்கனு தெரியும்…. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி இது உங்க ப்ளான்னு என்கிட்ட சொல்லாம இருந்திருந்தா…. நான் என்ன ஆகிருப்பேன்னு எனக்குத் தெரியல….”

    “உங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா…… அப்புறம் இந்த ப்ளானப் பத்தி அப்பாவுக்குத் தெரிய வேண்டாம்…..”

    “நான் எதுவும் சொல்லல…..நீங்க சீக்கிரம் வந்துடுங்க….”

    “சரிமா…. நான் போனை வைக்கிறேன்…”

    இன்றைய குடிமகன்களை திருத்த இன்றைய குடிமகனின் திட்டம்…!!!!!!!!

    Share
  • முதல் வணக்கம்

    தி.விஜயராணி

    6940

    எங்கே தலைநிமிர்ந்து சென்றாலும்

    உன் அருகில் தலை வணங்குகிறேன்

    “உன் மகளாக’’

    தலைநிமிர்த்தியது நீ என்பதால்.

     

    உயிர் ஜனிப்பு

     

    பாலைவன நிலத்தினுள்

    பதுங்கியிருந்த “பனிக்குடத்தில்”,

    நீந்தி விளையாடிய “மீன்” (குழந்தை)

    உலகைக் காணவே, அதை

    உதைத்து விட்டு வந்தது,

    “பிறந்தநாளான” இன்று.

     

     படத்திற்கு நன்றி- கூகிள்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    862c3c7e-cae5-4ba2-aaa4-7353339a1947

    “பூனைக்கும் தோழனவன் பாலுக்கும் காவலவன்,
    ஆனை முதலைக்(கு) அதுபோல:-மோனை
    எதுகை அளித்திடும் யாதவக் கண்ணா,
    மதுகை டபமனத்தை மாற்று’’….கிரேசி மோகன்….

    மதுகைடப மனம் -அஸுர குணம்….

    Share
  • ’’கண்டேன் அனுமனை’’….

    கிரேசி மோகன்
    —————————————————–
    வாடா மலரன்னை சூடா மணிபெற்று
    ஓடோடி அண்ணலிடம் ஓதிய, -நாடகம்,
    சுந்தர காண்டத்தை எந்திரமாய்ச் செப்பினும்
    மந்திரம் ஆகிடும் மெய்….(37)

    கைத்தலம் பற்றிய கூடலாள் கூறிட
    மைத்துனர் கால்பிடிக்க மாருதியாய் -வைத்திய
    நாதரே வந்தீரோ நானிலத்தில் நாரணர்
    தூதரான தேவா துணை….(38)

    காமம் உலோபம் குரோதம் அகங்காரம்
    நாமம் அனுமனென நாவுறைக்க -போமாம்காண்
    தோளால் சிரஞ்சீவி தூக்கிவந்த மாருதியின்
    வாளாம் அவனுடைய வால்….(39)

    ஆதவனோ(டு) ஏகிவான் வீதியிலே மெய்ப்பொருளை
    பேதமறக் கற்ற பவுருஷத்தை -மேதினியில்
    கால்முடியும் நாள்முன்பே கால்பிடித்துக் கும்பிடுவீர்
    கால்மடி புத்திரன் காப்பு….(40)

    கணையாழி வெல்லும், மனையாள் துறக்கும்
    அணையா நெருப்பில் தோன்றும் -இணைபிரியா
    சொல்லும் பொருளுமாம் ராமனும் தோழனும்
    வில்லை நிகர்த்தது வால்….(41)

    நிலையாமை நீங்கும் நிரந்தரம் கூடும்
    அலைபாயும் நெஞ்சம் அடங்கும் -சிலைராமன்
    தூதன் அனுமானின் பாத கமலத்தைப்
    போதும் பணிவோர் தமக்கு….(42)….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    பகவான் உவாச….
    ————————

    ab823a40-036e-44d6-9505-17a5ef5dd9fb
    “சரணா கதிசெய்து சும்மா இருப்பாய்,
    கரணா திகள்கருவி கர்த்தா-முரணாகும்;
    தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்சொல்கேள்
    நூறை ஒழிக்க நிமிர்”….
    “கைவல்யம் கேட்டாய் களத்தில் களைப்புற்று –
    மைவண்ணன் சொன்னான் மறுமொழி -கைவல்யம் –
    கைவில்யம் தானுனக்கு ,பொய்இப் புவிவாழ்வு –
    செய்வனபார்த் தாதிருந்தச் செய் “….கிரேசி மோகன்….

    ”ஊதும்வெண் சங்கினால் ஊட்டிட கீதையை
    போதுமென்று பார்த்தன் பணிந்துரைத்தான் -தீதொடு
    நன்மை வாரா நமக்கு பிறர்தர,
    தொன்மை கடைச்சங்கத் தீர்ப்பு’’….கிரேசி மோகன்

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுபெறும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள்

    மிகவும் புகழ்பெற்றவர் என்றாலும், இவருடைய பெயர் அண்மையில் அதிகமாக எடுத்துரைக்கப்படாமையால் அதிகம் அறியப்படாத பேரறிஞர். இவர் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்திலுள்ள, உடையார்பாளையம் வட்டத்தில் செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் திசம்பர் 15, 1936 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் திரு சோ.நடராசனார், திருவாட்டி மீனாம்பாள் அம்மாள் ஆகியோர் ஆவர். கந்தசாமியார் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார் பாளையத்திலும் தொடர்ந்தார். அதன்பின் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு இளங்கலை பொருளாதாரம் (1958) எம்.லிட்டு (1963), முனைவர்ப்பட்டம் (1971) ஆகியவற்றைப் பெற்றார். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் ஆகியவற்றையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் நேரடியாகக் கற்றார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.[1]


    மூதறிஞர் சோ.ந. கந்தசாமியார். படம் [1]

    இவர் தாக்கம் ஏற்படுத்திய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். அவற்றுல் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன [1]:

    இலக்கிய நூல்கள்:
    சங்க இலக்கியத்தில் மதுரை
    திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
    இலக்கியமும் இலக்கிய வகையும்
    தமிழிலக்கியச் செல்வம் (ஐந்து தொகுதிகள்)
    திருமுறை இலக்கியம்
    திருமுறையில் இலக்கிய வகை
    உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
    மணிமேகலையின் காலம்
    பரிபாடலின் காலம்
    இலக்கியச்சோலையிலே

    இவை தவிர இவர் எழுதிய திறனாய்வு நூல்கள்:
    Bharathidasan As a Romantic Poet
    Anthology of Book Reviews
    தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

    எழுதிய மொழிபெயர்ப்பு நூல்கள்:
    English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
    Volume II(patikam 51-100) (Tota 1026 verses)
    Tirumantiram(Total 527 verses)

    இலக்கணம் பற்றிய நூல்கள்:
    தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
    தொல்காப்பியம் – எழுத்ததிகாரத் தெளிவு
    புறத்திணை வாழ்வியல்
    தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
    கலித்தொகை யாப்பியல்

    மொழியியல்:
    A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
    A Linguistics of Manimekalai

    தத்துவம்:
    தமிழும் தத்துவமும்
    தமிழிலக்கியத்தில் பௌத்தம்
    தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
    இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)
    பௌத்தம்
    Buddhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
    Indian Epistemology as Expounded in the Tamil Classics
    Tamil Literature and Indian Philosophy
    The Yoga of Siddha Avvai(Published in Canada)
    Advaitic Works and Thought in Tamil
    The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

    இவர் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்தார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும் (1979-85), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர் [1].

    80 அகவை நிறையவிருக்கும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள் இந்தியக் குடியரசுத்தலைவரிடமிருந்து புகழ்மிக்க தொல்காப்பியர் விருது பெறவிருக்கின்றார் [2]. இவ்விருதோடு 5 இலட்சம் இந்திய உருபாய் பரிசும் உண்டு. தமிழாசானை வணங்கி இக்கிழமையின் வல்லமையாளராக அறிவிவித்துப் பாராட்டுகின்றோம். .

    அடிக்குறிப்புகள்

    [1] தமிழ் விக்கிப்பீடியாவில் பேராசிரியர் சோ.ந. கந்தசாமியார் அவர்களைப்பற்றிய கட்டுரை ( https://ta.wikipedia.org/s/57x ). முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவு -http://muelangovan.blogspot.ca/2008/08/15121936.html
    [2] தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது அறிவிப்பு. இந்து தமிழ் நாளிதழ் சூன் 8, 2016

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (68)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13444181_1029839340403598_905366858_n

    95494202@N04_rபுதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • திருத்தி எழுதப்படும் சாசனங்கள்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் தலைவர்கள் தங்களுடைய மக்களுக்கு இந்த வகையான வாழ்க்கை முறை தம் நாட்டு மக்களுக்கு ஏற்புடையது என்று வழி நடத்தி செல்கின்றனர். இசுடாலின், காரல் மார்க்சு போன்றோர் தமது மக்களுக்கு கம்யூனிச சித்தாந்தமே சரியானது என்று முடிவெடுத்தனர். காந்தியடிகள் அகிம்சையே நம் நாட்டிற்கு ஏற்புடையது என்று முடிவெடுத்தார். இங்கிலாந்து, சப்பான் போன்ற சில நாடுகளில் இன்றளவும் மன்னராட்சி நடைபெற்று வருகின்றது. அண்டை நாடான நேபாளத்தில் துப்பாக்கி முனையில் மன்னராட்சி அழிக்கப்பட்டு மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. முசோலினி, நெப்போலியன் போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியும் தூக்கி எறியப்பட்டு மக்களாலே மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. நமது நாட்டிலும் இலவசங்கள் எனும் கையூட்டு கொடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரங்கள் பெறப்படுகின்றன என்பதும் நிதர்சனமாக உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக உலக அரங்கில் அதிசயித்து நோக்கத்தக்க வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

    ஆம், உலக அளவில் பொருளாதாரத்தில் மிகச்சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தமது மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் சில கொள்கைகளை வெளியிட்டது. அதன்படி அந்நாட்டின் மக்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றிற்கு 1,700 பிராங்க் அதாவது நமது உரூபாய் மதிப்பில் ஒரு நபருக்கு மாதம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 1/4 இலட்சம் ரூபாய் வாழ்வுரிமைப் பணமாக அளிப்பதாக அறிவித்தது. இச்சட்டத்தின்படி அந்த நாட்டில் இரண்டாண்டுகளுக்கும் மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்று அறிவித்தனர். ஆனால் இச்சட்டம் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டு மக்களுக்கு அரசு கொள்கை அறிவிப்பதுபோக அந்நாட்டு மக்கள் தங்களுக்கு இதுதான் கொள்கை என்று உணர்த்தும் வகையில் இச்சட்டத்திற்கு நூற்றுக்கு 80 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தங்களுக்கு இலவசமாக பணம் வேண்டாம் என்றும், மற்ற நாட்டினர் அங்கு சென்று குடியேறுவதற்கு இந்த இலவசங்கள் ஒரு காரணமாகிவிடக்கூடாது என்பதாலும் இதுபோன்ற இலவசங்கள் தேவையில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

    இன்று தங்கள் வியாபார யுக்தியாக ஒரு புடவைக்கு இரு புடவைகள் இலவசம், ஒன்றிற்கு ஒன்று இலவசம், ஒன்றின் விலையில் 50% தள்ளுபடி என்றும் பல விளம்பரங்களைப் பார்க்கிறோம். இவர்கள் எவரும் தங்களுடைய கொள்முதல் விலையிலோ, உற்பத்தி விலையிலோ இதுபோன்ற தள்ளுபடிகளை வழங்குவதில்லை என்பதே சாத்தியம். மக்களுடைய ஆசையைத் தூண்டிவிட்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதே உண்மையான நிலை. அரசு எவ்வழி குடிகள் அவ்வழி என்று மக்கள் உணர்த்துகிறார்களோ?

    அரசு ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் 500 யூனிட்டுகள் இலவசம் என்றும், கைத்தறிக் கூடங்களுக்கு 100 யூனிட் இலவசமும் ஒவ்வொரு இல்லங்களுக்கும் 100 யூனிட் இலவசம் என்றும் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மத்திய ஜவுளித்துறை அமைச்சர், சோலார் பேனல் திட்டத்தைச் செயல்படுத்தினால் 50 சதவிகிதம் மான்யம் அளிப்பதாக அறிவித்துள்ளார். நமது தமிழ்நாடு அரசும் இந்த 500 யூனிட் இலவசம் தருவதற்குப் பதிலாக, சோலார் பேனல் வாங்குவதற்கு அதன் விலையில் 20 சதவிகிதம் மான்யம் அளித்தால் மின்சாரம் உற்பத்தி பெருகுவதோடு இலவசத்தால் ஒரு நிறுவனத்திற்கு ஆண்டொன்றிற்கு இருபதினாயிரம் உரூபாய் செலவு என்ற வகையில் ஆண்டொன்றிற்கு பல கோடிகளை மீதப்படுத்தி அதனை மற்றைய ஆக்கப்பூர்வமான செயல்களுக்குச் செலவிடலாம்.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்- 31

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலுக்கான சூழ்நிலைகள்

    education-1-2
    மூளையின் திறன்பட்ட வேலைக்கும் சிறப்புமிக்க கற்றலுக்கும் பலவிதமான தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளில் சில முக்கியமானவை. இந்த உள்ளீடுகள் அதன் வேலைத்திறனையும் திறனையும் கற்றல் திறனையும் வெகுவாக பாதிக்கின்றன.

    1. உணவு
    2. தூக்கம்
    3. உடலில் உள்ள நீர் விழுக்காடு
    4. உடல் பயிற்சி
    5. மன நிலை

    நம்முடைய உணவில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் உள்ளன.- கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின் சத்துகள், தாதுக்கள் அனைத்தும் சேர்ந்த உணர்வு மிக அவசியமானது. ஒருவருடைய கற்றலில் ஈடுபாடு கவனம், ஆர்வம் அறிதல் புரிதல் செயல்கள் ஆகியவற்றை நம்முடைய உணவுகள் அதிகரித்து மேம்படுத்துகின்றன. அதிக அளவில் உணவு உட்கொள்ளும் நேரங்களில் கற்றலில் ஏற்படும் தாமதங்கள் ஈடுபாடற்ற தன்மை ஆகியவை பற்றிய ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன.

    காய்கறிகள், பழங்கள் இவற்றால் ஏற்படும் ஊட்ட நிலைகள் பற்றியும் கற்றலுக்கு ஏதுவான ஹார்மோன்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இதேபோல் தற்கால உணவு முறைகளால் கற்றலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக துரித உணவு முறைகளால் ஏற்படும் மறதி, சோர்வு, கவனமின்மை பற்றியும் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஆகவே உணவுக்கும் கற்றலுக்கும் உள்ள தாக்கங்களை நாம் அறிந்து கொள்ளுதல் மிக அவசியம். மற்றும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இதை பள்ளிகளிலும் மற்றும் மரபு சாரா முறைகளாலும் எடுத்துச் சொல்லுதல் அவசியம் என அறிய வேண்டும்.

    உடலில் நீரின் விழுக்காடு எவ்வாறு கற்றலின் திறன்களையும் கவனம் ஈடுபாடு ஆகியவற்றையும் பாதிக்கிறது என்று கற்பியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரின் விழுக்காடு குறையும் பொழுதும் தாகம் அதிகமாக இருக்கும் பொழுதும் கற்றலில் ஈடுபாடு மிகவும் குறைகிறது. ஆகவே குழந்தைகளை தினம் போதுமான அளவு நீர் குடிக்க பழக்கவும் தூண்டவும் வேண்டும். பள்ளிகளிலும் குழந்தைகள் நீர் குடிக்க விரும்பும் பொழுது ஆசிரியர்கள் அவர்களை தடுக்காமல் அவர்களுக்கு உதவ வேண்டும். அதை மாணவர்களின் கட்டுப்பாடற்ற செயலாகவோ அல்லது ஒழுக்கமின்மையாகவோ கருதுதல் மிகத் தவறு.

    உடலில் நீர் குறைவு (Dehydration ) ஏற்படும் பொழுது கற்றலின் தரம் மிகக் குறைவானதாகவும் வலுவிழந்ததாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே கோடைக் காலங்களில் இதனால் படிப்பில் பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக உஷ்ணம் மற்றும் அதிகக் குளிர் கற்றலின் தரத்தை பாதிக்கின்றது. மற்றும் இந்த நேரங்களில் ஏற்படும் கற்றல் வலுவுடையதாகவும் நினைவாற்றலை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைவதில்லை.

    அது மட்டுமின்றி வெளிச்சம், காற்று போன்றவைகளும் கற்றலைப் பாதிக்கின்றன. எனவேதான் வீடுகளிலும் பள்ளிகளிலும் அறைகள் போதிய வெளிச்சம் உள்ளதாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருத்தல் அவசியம். பல நாடுகளில் இதனைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டு இவற்றின் தாக்கங்களைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளனர்.

    தற்காலத்தில் சிறிய பெட்டகங்களைப் போல அடுக்குமாடிப் பள்ளிகள் நிச்சயமாக கற்றலுக்கும் மாணவர்களின் பொது மற்றும் மன நலன்களை பேணுவதற்கும் உகந்ததாக இருப்பதில்லை. வகுப்பறைகளில் அளவுக்கு அதிகமான மாணவர்களை அமர்த்தி அறையின் உஷ்ணம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது அது மாணவர்களின் உடல் மற்றும் உள நலத்திற்கு சரியானதாக அமைவதில்லை.

    பொதுவாக ஆக்சிஜன் அதிகமாக உள்ள இடங்களில் கற்றலின் மேன்மை சிறப்பாக இருப்பதாகவும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் தூசிகள் அதிகமாக காற்றில் இருக்கும் இடங்களில் கற்றலின் தரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மரம், செடி கொடிகள், பசுமை மற்றும் நிழல் சார்ந்த இடங்களின் நடுவே கற்கும் பொழுது கற்றலின் திறமும் ஆழமும் வேகமும் வெகுவாக சிறப்புறுகின்றன. இப்படிப்பட்ட இடங்களில் கற்கும் கருத்துகள் நினைவினில் எளிதாகப் பதிவது மட்டுமின்றி நீண்ட கால நினைவாக மாறுவதற்கு வழி செய்கின்றன. (Long Term Memory). ஆகவே பள்ளிகளில் வகுப்பறைகளைச் சுற்றி மரம் செடி கொடிகள் வளர்த்தல் கற்றலின் சூழ்நிலையை மேம்படுத்த உதவியாக இருக்கும் . பள்ளிகளை கட்டும் பொழுதே “பசுமை பாராட்டும் கட்டிடங்களாகக்” (Green Schools ) கட்டுவதற்கான முயற்சிகள் சில இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    (தொடரும்)

    Share
  • “இறைவாசல்”

     

    மீ.விசுவநாதன்

    வெள்ளையாய் ஒருநேரம் -கரு

    நீலமாய் ஒருநேரம் – மேக

    வெள்ளமாய் ஒருநேரம் -செந்

    தீயென ஒருநேரம் -இடி

    மின்னலாய் ஒருநேரம் – சுடும்

    வெய்யிலாய் ஒருநேரம் -ஒளிப்

    பின்னலாய் ஒருநேரம் – வான்

    பெற்றதே அவதாரம்.

    கறுப்பென ஒருநேரம் – நிலாக்

    கடலென ஒருநேரம் – புள்

    பறக்கிற ஒருநேரம் – தூள்

    பறக்கிற ஒருநேரம் – விண்

    மீன்களால் ஒருநேரம் – வண்ண

    வில்லென ஒருநேரம் – பால்

    வான்வெளி அலங்காரம் -இறை

    வாசலின் புதுக்கோலம்.

    (10.06.2016)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (8)

    நிர்மலா ராகவன் 

    அப்பா, அம்மா, அடி

    நலம்-

    `எங்கப்பா என்னைத் தினமும் அடிக்கிறார்! எதற்கென்றே புரியவில்லை!’

    `எங்கப்பா மட்டும்? நான் எவ்வளவு நல்லது செய்யப் பார்த்தாலும், என்னை ஓயாமல் திட்டுகிறார்!’

    பத்து வயதுப் பையன்கள் இருவரின் உரையாடல் இது. தந்தைக்கு ஏன் தன்னைப் பிடிக்கவில்லை என்ற பரிதவிப்பு இருவருக்கும்.

    இதே ஏக்கத்தை நாற்பது வயதான ஓர் சகஆசிரியரும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்: `நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். என் அப்பாவின் அன்பைப் பெற முடியவில்லை!’

    `அவருக்கு உங்கள் தங்கைமேல்தான் பாசமோ?’ என்று ஊகித்தேன்.

    ஒரு தாய் மகன்மேல் பாசம் வைப்பதும், தந்தை மகள்மேல் அன்பைப் பொழிவதும் இயற்கை. அதற்காக, தான் பெற்ற பிற பிள்ளைகளை வெறுப்பதுபோல் அடக்கி ஆள்வது என்ன நியாயம்?

    காரணமின்றி அடித்தும், பயமுறுத்தியும் வளர்க்கப்பட்டிருந்த தந்தைக்குப் பிறந்தது இரண்டும் பெண்களாக இருந்துவிட்டால், தன்னைப்போல் இருக்கின்ற மகளின்மேல் வன்முறை செலுத்துவார்.

    இந்த தந்தைமார்கள் சிறு வயதில் அடி வாங்கியிருப்பார்கள். `அடி வாங்கியதனால்தான் நான் உருப்பட்டேன்!’ என்று நியாயம் கற்பித்துக்கொள்வார்கள். அடி வாங்காது, செய்த தவறுகளுக்குக் கனிவுடன் திருத்தப்பட்டிருந்தால் இன்னும்கூட முன்னேறி இருக்கலாமோ என்று இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

    (நகைச்சுவையால் குழந்தைகளின் மனம் நோகாமல் கண்டிக்க முடியும் என்று படித்திருந்தேன். அந்த அறிவுரையைப் பின்பற்றி, நான் என் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் சிறு வயதில் கூறியது: `நான் சொல்ற நல்லதையெல்லாம் கேட்டுடாதீங்கோ! அப்புறம் உருப்பட்டுட்டா என்ன பண்றது!’ சிரிப்பார்கள். ஆனால் அறிவுரை மனதில் பதிந்திருக்கும்).

    தம்மைப் பாதுகாக்க வேண்டிய பெரியவர்கள் — என்னதான் காரணங்களை விளக்கினாலும் — அடிப்பதால் சிறுவர்களுக்குக் குழப்பம்தான் உண்டாகிறது. அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள்: அவமானம், தாழ்மை உணர்ச்சி, மனத்துடன் உடல் நலமும் கெடல்.

    சிறு வயதில் இந்த அப்பாக்களும் இதே உணர்ச்சிகளுக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனால் தம்மிடமிருந்தே அதை மறைத்துக்கொண்டு விட்டதுதான் பரிதாபம்.

    `என் மகன் பிசாசு மாதிரி பேரனை அடிக்கிறான்!’ என்று என்னிடம் வருந்திக் கூறினார் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர்.

    தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருந்த அவருக்கு நான் என்ன ஆறுதல் சொல்வது! `சிறு வயதில் உங்கள் பிள்ளையை ரொம்ப அடித்து வளர்த்தீர்களா?’ என்றேன் மெள்ள.

    பதிலாக, அவருடைய உடலும், முகமும் இறுகின.

    `எவ்வளவு அடித்தாலும், உருப்படுவதில்லை! ஊர் சுற்றுகிறான், எதிர்த்துப் பேசுகிறான்!’ என்று பிரலாபிப்பவர்களுக்கு ஒன்று புரிவதேயில்லை. ஓயாமல் குறை கண்டுபிடித்து, அடி வாங்கினால், எதிர்ப்புக்குணம்தான் வரும். நீங்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராக ஒரு காரியம் செய்துவிட்டு, அதன் விளைவாக நீங்கள் கொள்ளும் ஆத்திரமே அவர்களது நொந்த மனதிற்கு உற்ற மருந்தாகிறது.

    `உங்கள் அப்பா உங்களுக்குச் செய்ததையே நீங்கள் உங்கள் மகனுக்குச் செய்கிறீர்களே! பெரியவன் ஆனதும், அவன் உங்களை மதிப்பானா?’ என்று ஒருவரைக் கேட்டேன். அந்த மனிதர் வயது முதிர்ந்த தந்தையுடன் பேசுவதையே விட்டு விட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    `என்னை மதிக்காவிட்டால் போகிறது! அவன் முன்னுக்கு வந்தால் போதும்!’ என்று விட்டேற்றியாக பதில் வந்தது.

    இங்குதான் குழப்பமே. பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டுவர வேறு வழி தெரியவில்லை அவரைப் போன்றவர்களுக்கு.

    வெகு சிலர், `என் மகனும் நான் சிறு வயதில் அடிபட்டு நொந்தமாதிரி ஆகிவிடக்கூடாது!’ என்று, மகன் என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இப்படி வளர்க்கப்பட்ட பிள்ளை உருப்படுவானா என்பதும் சந்தேகம்தான். தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டாமா?

    சில தாய்மார்களும் மகளை அடிக்கிறார்கள்.

    வசுமதி ஒரு பதின்ம வயதுப் பெண். அவளுடைய தலையின் வடிவம் கோணல்மாணலாக உருமாற ஆரம்பித்தபோது எனக்கு அவளுடைய அவல நிலை புரிந்தது. அவளிடம் கேட்டபோது, வருத்தத்துடன் ஒப்புக்கொண்டாள்.

    அவள் தாயைச் சந்தித்து, `உங்கள் பெண்ணை சும்மாச் சும்மா அடிக்காதீர்கள்!’ என்று கூறினேன்.

    ஆச்சரியத்துடன், `அடிக்கக் கூடாதா?’ என்று திருப்பிக் கேட்டாள், நாற்பது வயது நிரம்பாத அப்பெண்மணி.

    `எதுக்கு அடிக்கறது?’ என்றேன், பொறுமையிழந்து.

    `வீட்டிலே ராங்கி பண்ணுது!’

    மேலும் விசாரித்தபோது, புத்திசாலியான, முன்னுக்கு வரத் துடிக்கும் மகளுக்கு அம்மாவின் அடக்குமுறை சரியெனப் படாததால் எதிர்த்திருக்கிறாள் என்று புரிந்தது.
    மகளைத் தனியாக அழைத்து, அவளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கிடைக்க தாய் கொடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினேன்.

    `உன் அம்மா உலக அனுபவம் இல்லாதவள். அப்பா அடிப்பதை எதிர்ப்புக் காட்டாமல் ஏற்று, `எல்லாப் பெண்களுமே அப்படித்தான் இருக்க வேண்டும்போல இருக்கிறது,’ என்று நினைத்துவிட்டாள். நீ வித்தியாசமாக இருக்கிறாய். அது தவறென்று அம்மாவுக்குப் படுகிறது,’ என்று மேலும் விளக்கினேன்.

    நிலவரம் புரிந்தபோது, தாய்மீது பரிதாபம்தான் எழுந்தது வசுமதிக்கு. தாய் மகளுக்குள் நல்லுறவும் உண்டாகியது.

    தொடருவோம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 67 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13315611_1025713060816226_4364786465585856721_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஆதித்ய நாகராஜ். இதனைப் போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள். இங்கு படக்கவிதைப் போட்டிக்கான படத்தில் இருப்பவர் குரங்காட்டி. கோல் கொண்டு குரங்கை ஆட்டுவிக்கும் இவருக்கு, எழுதுகோலால் கவிஞர்கள் ஆக்கிய கவிதைகளைப் பார்ப்போம் இனி,

    வயிற்றுப் பசிக்காக குரங்கை வைத்து வித்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் குரங்காட்டி தன் பசியை மறந்து மக்களின் கவலையை மறக்கச் செய்வதாகப் பாடியுள்ளார நாமக்கல் முருகேசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    குரங்காய் குனிந்தே வாழாமல் வாய்ப்புக் கிடைத்ததும் மனிதன் தோள்மீதமர்ந்து தன் வித்தையைக் காட்டும் குரங்கின் திறம் கூட மனிதனுக்கு இல்லையே என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் செண்பக ஜெகதீசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    குரங்கின் உழைப்பே

    குரங்காட்டியின் பிழைப்பு

    குரங்கை விட்டால்

    அவனுக்குபிழைப்பில்லை

    அவனை விட்டால்

    குரங்கிற்கிற்கும் கதியில்லை

    அடிக்குப்பயந்தும்

    ஆகாரத்திற்காகவும்

    அவன்

    ஆணைப்படி ஆடும்

    அந்தரத்திலும் தொங்கும்

    வித்தைகாட்டியின் விரலசைவுக்கு

    இன்றைய பெற்றோர்களுமே

    வித்தை காட்டிகள்தான்

    பிள்ளைகளை

    அதைப்படி இதைப்படி

    டான்ஸ் ஆடு பாட்டுப்பாடுன்னு

    கோலில்லாமல்

    ஆட்டி வைக்கின்றனர்

    குரங்கு எப்படி குரங்காட்டியின்

    சொல்லுக்கு உடன் படுகிறதோ

    அதேபோல் பிள்ளைகளும்

    பெற்றோரின் செயலாக

    வெளிப்படுமேயன்றி

    தானாக எதுவும் செய்வதில்லை

    என்பதே தெளிவு

    சூழ் நிலையும் சந்தர்ப்பங்களும்

    மக்களையும் குரங்காட்டியாகத்தான்

    காட்டுகின்றன இன்றைய

    அரசியலுக்கும் இது பொருந்தும்

    எல்லாமே வயத்து பாட்டுக்குத்தான்

    எல்லாருமே குரங்காட்டித்தான் – சரஸ்வதி இராசேந்திரன்

    குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதால் என்னவோ குரங்கின் செயலுடன் மனிதன் செயலை ஒப்பிட்டுக் கூறும் மரபு உள்ளது. மரம் விட்டு மரம் தாவும் குரங்கின் செயல், எதிலிலும் நிலையில்லாத மனமுடைய மனிதனுக்கு உவமையாக வந்துள்ளது. மனம் ஒரு குரங்கு என்று கூறும் வழக்கமும் உண்டு. இங்கு குச்சியை எடுத்து குரங்கை ஆட்டுவிக்கும் குரங்காட்டியை, பிள்ளையைத் தன் விருப்பத்திற்கேற்ப கோலில்லாமல் ஆட்டிவைக்கும் பெற்றோர்களுக்கு உவமையாக சுட்டிக் காட்டியுள்ளார் கவிஞர். `கோலில்லாமல்’ என்று கூறுவதன் மூலம் பெற்றோர் குறிக்கோளில்லாமல் செயல்படுவதையும் எளிய வரிகளில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ள சரஸ்வதி இராசேந்திரனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு என்  பாராட்டுகள்.

    Share