அன்பே தெய்வம்

 04ae7493-c5f6-469a-b182-8711c1d60836

திவாகர்

 

உயிர்களிடத்தே அன்புசெய்ய வேணுமாய்

ஆயிரம் முறைசொன்னாலும் கேளாமல்

உந்தன் நலமொன்றையே கருத்தில்கொண்டு

எந்தநாளும் உன்காரியம் செய்கின்றாய்

பயன்பிறர்க்கும் அதன்பலனில் உண்டெனில்;

சுயநலம் பேணுவதால் குறையில்லைதான்

அறியவேணும் தம்பி நன்றாய்புரியவேணும்

குறுகியயெண்ணங்கள் என்றும் துணைவாரா;

உன்மீதே உனக்கன்பு என்றல்லாமல்

அனைவர்மீதும் செலுத்துமன்பே உத்தமாம்

உள்ளம்சிறிது உயிர்பெரிது என்றிருப்போர்

கள்ளத்தன வாழ்க்கையே வாழ்வார்களாம்

சற்றேகவனம் கொடுத்து சொல்வதைக்கேள்

பற்றுமிகக் கொள்வாய் அன்பின்மீதே!

 

 

அனாதையென்றே வந்தவனாம் அவனை

ஆனந்தமாய் அருட்தந்தை ஆதரித்தார்

சோறுண்டு சுகவாழ்க்கை வாழ்ந்தாலுமேனோ

ஊறுவிளைப்பதிலேயே சுகம்கண்டான் அவன்

தன்னலம்பார்த்தான் பிறர்நலம் கண்டானில்லை

பின்னால் யாரும்குறைசொன்னால் அவர்க்கும்

இன்னல்தந்தான் ஊரார்பலரை அவமதித்தான்

இன்னும்பல தொல்லைதந்தான் கெடுதிசெய்தான்

பெரும்வேதனையைத் தாங்காது ஊராரும்

அருட்தந்தையிடன் சென்றார் ஊரிலே

இவனொருவன் இருந்தால் இன்னும்பலர்

இவனைப்போலவே திரிவர் என்றார்

அருட்தந்தை அவரிடத்தே சமாதானஞ்செய்து

பொருட்படுத்தாதீர் இவன்செயலை இனியும்

யார்க்கும் தீங்குசெய்யாது வீட்டினிலே

ஊரினிலே நல்லபெயர் வாங்கித்தருவேன்

இவனுக்கென யாருண்டு என்னைத்தவிர

அவப்பெயர்நீக்கி நல்லவனாக்கி காட்டுவேன்

நம்பிக்கைதான் வைத்தார் அவருமிவனிடம்

நம்பினார் கெடுவதில்லை வேதத்தின்தீர்ப்பு

’தம்பி, இனிநல்லதையே நினைக்கப்பழகு

வம்புதனை விட்டுவிடு நல்லவனாயிரு

நல்லதையே நினைத்து உனைவளர்த்தேனென

நல்லபலவார்த்தை சொன்ன அருட்தந்தையை

வன்கொடுமையாய் தன்கத்தியால் குத்திஅவர்தம்

பொன்செல்வத்தை களவாடி ஊரைவிட்டோடினான்

வழியில் காவலர்கள் பிடித்தனர்கட்டுப்போட்டு

கழிகொண்டடித்தனர் கொள்ளை விவரம்கேட்டனர்

பாரறிந்த நல்லவராம் அருட்தந்தைபெயர்சொன்னால்

ஊர்க்காவலர் தம்மைவிட்டு விடுவரென்றெண்ணி

அருட்தந்தை அவர்பிள்ளை தனக்காககொடுத்ததென

பெரும்பொய்யொன்றைக் கூசாமல் சொன்னானே

வல்லவராம்காவலரும் அவன்சொன்ன வார்த்தையால்

நல்லவராம் அருட்தந்தை இல்லத்தில்சேர்த்தாரே

அங்கேதரைதனில் குருதிவெள்ளத்தில் அருட்தந்தை

அங்கம்துடிப்போடு படுத்துக்கிடக்க நிலையறிந்த

காவலர்மருத்துவருக்கு ஆளனுப்பி காயம்பட்ட

விவரத்தைக் கூறக்கேட்க அருட்தந்தையோ

தன்மகனாம் இவனுக்கு மறுவாழ்க்கைக்கொடுக்க

என்செல்வங்களாம் தங்கநகைகளைத் தந்தேனே

இன்னும்ஏதேனும் தருவதற்கு பரண்மீதேறுகையில்

தன்தவறால்கத்தி தடுமாறி தன்மீதுவிழுந்ததென

தயக்கமின்றி அவர்பேச தடுமாறிபோனான்கள்வன்

மயக்கம்வந்தது மனதும் தெளிந்ததுமாறிப்போனான்

’எந்தையே எனைக்காக்கும்தெய்வமே மன்னியும்

சிந்தைதெளிந்தேன் உமதன்பினாலே மாற்றினீர்!

காசுபணம்செல்வம் இவையே நம்பினேன்ஆனால்

மாசற்றஅன்பே தெய்வம் என்போர்பெரியோர்

நீவிர்காட்டிய அன்பால் எமையாட்கொண்டீர்

நீவிர்தெய்வம்.. எனைமன்னியுமென கால்பற்றினான்

 

 

தம்பி! கேட்டாயா இந்தக்கதையை

நம்பிக்கை வைத்திரு அன்பின்மேலே

அன்பால் கொடியவரை வெல்லலாம்

அன்பைப் பிறர்மீது திருப்பினால்

அன்பால் எதையும் வாங்கலாம்

அன்பை மற்றவரிடம் காட்டினால்

அன்பொன்றே நாமறிந்த ஆயுதமாய்

அன்பொன்றே நாமறிந்த மந்திரமாய்

அன்பொன்றே நாமறிந்த தெய்வமாய்

என்றைக்கும் சிந்தித்துச் செயல்படுவாய்!!

 

 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு. (திருக்குறள் – 72)

 

அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உடமையாகக் கொண்டு வாழ்பவர். அன்பு உள்ளவரோ தன் உடல் பொருள் அனைத்தையும் பிறருக்காக என்றே கருதி உதவி அருளுபவர்.

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தித்திக்குதே திருக்குறள் – 8

  1. எனக்கு மிகவும் பிடித்த தன்மை; அதை பற்றிய அருமையான கவிதை. வாழ்த்துக்கள் திவாகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.