இறையியல் சிந்தனைகள்: 1 ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்
அவ்வைமகள்
இரேணுகா இராசசேகரன்
அன்று அங்கு விடுபட்டது மதமா? மடைமையா?
ஸ்டீவ் ஜாப்ஸின் இறையியல் சிந்தனைகள் அவர் மறைவுக்குப் பின்பு நிறையவே பேசப்படுகின்றன. நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு, 2011ல் இறைசோதியுடன் ஐக்கியமாகி இருக்கிற ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்நாள் பயணம் ஒப்பற்றதொரு சரித்திரமே எனும்படியான புரிந்துகொள்ளல் இவ்வுலகில் உண்டாகியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தைப் பற்றி ஒன்றைச் சொல்வார்கள் – இது நவீனப் பறைசார் ஊடகப் பரவல் காலம். சாதாரண விஷயங்கள் கூட இன்று வெகுப் பிரசித்தி அடைந்துவிடும். சாதாரண மனிதர்களைக் கூட இன்றையகாலம் மகானாக்கி விடும். அதுவும் பெரிய ஆளாக ஒருவர் ஆன பின்பு அவரது சரித்திரத்தை வெகு சாதுரியமாக வடிவமைத்து விடுவது என்பது இங்கே வாடிக்கை. ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை அந்த நிர்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலக்கானதாகத் தோன்றவில்லை. யதார்த்த உண்மைகள் உண்மையிலேயே அவரது வரலாற்றில் – வாழ்க்கைத் தடயங்களில் – தரவுகளில் நிரம்பிக் கிடக்கின்றன என்பது தனிமனித சரித்திரத்தில் மிகப்பெரிய பலம்.
வாழ்வின் எந்த காலகட்டத்தில் – எந்த பருவத்தில் எவர் இருந்தாலும் அவருக்கு எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது உத்வேகத்தை வழங்குகின்ற தன்மையதாய் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவரது நடைமுறை வாழ்க்கை எவ்வகையான வாழ்வில் இருப்பவர்க்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைவது என்று சொன்னால் அது பொருத்தமாய் இராது. அவர் வாழ்வில் தன் வாழ்வை ஒரு முழு நிலைக் கண்ணாடியில் பார்ப்பதைப் போன்று பாரத்துக்கொள்ளும் இலகுவை எவருக்கும் கொடுக்கும் திறந்த வாழ்க்கை அவருடையது என்பதே சரியாக இருக்கும்..
பிறவியால், ஒரு சர்வ சாதாரண மனிதர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ். மனிதனாய்ப் பிறப்பெடுக்கும் மனிதருக்கு என்னென்ன கஷ்டங்கள் வருமோ எத்தனைத் துன்பங்கள் வருமோ அத்தனையும் அவருக்கு வந்தது. சொல்லப்போனால் இந்தத் துன்பங்களும் கஷ்டங்களும் அவருக்கு மற்றவரைக் காட்டிலும் கூடுதலாய் இருந்தனவே தவிரக் குறைவாய் அல்ல. அவருக்கு நேர்ந்த அவமானங்களும் பெருத்தவையே. தவறுகள் என்று நாம் சொல்லக்கூடியவற்றையும் அவர் ஏராளமாய்ச் செய்திருக்கிறார் என்பர். ஆனால் இன்றோ ஆண் -பெண், ஏழை – பணக்காரர், மூத்தவர்-இளையவர் என்ற பாகுபாடின்றி எவரொருவக்கும் ஒரு முன்மாதிரியான பிரஜையாக, எண்ணத்தில் அழைத்தும், மனத்தில் இருத்தியும் பின்பற்றும் செம்மலாக அவர் உயர்ந்திருக்கிறார்.
இவ்வாறான உயர்நிலையினை அவர் எவ்வாறு அடைந்தார் என்பதை அலசி ஆராய்ந்தவர்களும் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருப்பவர்களும் பலபேர் உண்டு. அவர்கள் யாவரும் கண்டுள்ள பேருண்மை யாதெனில் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது வாழ்வை யதார்த்தமாய், உள்ளது உள்ளவாறு அணுகி, உறுதியான இலக்குகொண்டு வாழ்ந்து சென்றிருக்கிறார் என்பதே. அலங்காரங்களும் படாடோபமும் இன்றி எதனையும் எதிர்நோக்கும் மனத் திண்மையோடு இயல்பாய், தனது இலக்கை நோக்கித் தன் வாழ்வை நெறிப்படுத்தி இயக்கிச்செல்கிற ஒரு சீர்மையும் எளிமையான வாழ்வணுகுமுறையும் அவரிடத்திலே நித்தமும் காணப்பட்டதாகவே அறிகிறோம். சாதனை என்பதற்கு திடசிந்தனையும், தீர்க்க தரிசனமும், அசைவிலாக் கட்டுப்பாடும் தேவை என்பர். இம்மூன்று சாதகங்களையும் தனது வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு ஒரு கர்மயோகசித்தி மனோன்மணியாக வாழ்ந்து போந்திருக்கிறவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இன்று உலகின் ஒட்டுமொத்தப் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அளப்பரிய அவரது சாதனைகள் அவருடைய கடுமையான உழைப்பு, விவேகம், நுண்ணிய திட்டமிடல், தீர்க்கதரிசனம் ஆகிய பண்புகளால் விளைந்தவை என்பதையும் இவ்வுலகம் பறைசாற்றுகிறது. கணினித் தொழுல்நுட்பத் தந்தையெனப் போற்றப்படும் அளவுக்கு அறிவியலை – தொழுல்நுட்பத்தை – உயிர்மூச்சாகக் கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதுவும் வர்த்தகமே குறி. அவ்வாறான சூழலில் அவர் ஒரு நாத்திகராக விளங்க இயல்பான சாத்தியக் கூறுகள் அவரைச் சுற்றி நிறையவே கிடந்தன. இருப்பினும், அவரது வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக அமையப் பெற்றது இறை தேடல். அதுமட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸின் இறையியல் சிந்தனைகளில் மதம் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது என்பது மிகுந்த சிந்தனைக்குரியது.
மத மாச்சரியங்களில் வெறுமனே குதித்து விடுவதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் அற்ப சொற்ப மனிதர் அல்லர். வாழ்வின் அம்சங்களை ஆழமாக அணுகும் கடுமையான பழக்கம் உள்ளவர் அவர். அவருடைய உள்மனம், சுலபமாக எதிலும் தொலைந்து போகாது – திருப்தி அடையாது. அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிநுணுக்கங்களை அறிந்தொழுகியவர் என்ற வகையில் சான்றும் ஆதாரமும் இன்றி எதனையும் ஏற்க ஒண்ணாத முறைமை கொண்ட மனப்பாங்கு அவருக்கு நிச்சயம் உண்டு. அத்தகைய ஒரு நபர் இறையுணர்வு கொண்டொழுகினார் என்பது மட்டுமல்ல – இறையுணர்வின் வழியேகி ஆத்மத் தேடலில் ஈடுபட்டார் என்பதும் உண்மை. இவ்வுண்மை, வாழ்வின் பரிபூரணத்துவத்திற்கு இறையுணர்வு எத்தனை அவசியமாகிறது என்பதனை அவர் உணர்ந்திருந்த பாங்கை உணர்த்துவதோடல்லாமல் – இறையுணர்வு என்பது எவ்வித அச்சமுமின்றி – எவரின் நிர்ப்பந்தமுமின்றி சுய மூளையின் அனுமதியுடன் சுயவேட்கையின் விளைப்பாடாய் தங்குதடையற்ற விசையுடன் அனைத்து வரையறைகளையும் தாண்டிச்செல்வதான அசைவிலா உறுதியுடன் உருவாகி விரிவது எனக் காண்கிறோம்.
நாம் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தனது இறை தேடலுக்கு மிகச் சரியானதொரு புலனாக, கருவியாக, களமாக, மதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதே. இது ஆழ்ந்து நோக்கத்தக்கது. ஆன்மா என்கிற அழிவில்லா – மரணமிலாக் கூறு ஒன்று உள்ளது என்பதை எல்லா மதங்களுமே மொழிகின்றன. ஆனால், அறிவியலின் வாயிலாக மட்டுமல்ல மதங்களின் வாயிலாகவும் கூட ஆன்மாவின் எடை, பொருண்மை, மற்றும் பரிமாணங்களை எவரே அறிவார்? அது மிருதுவானதா – கடினமானதா – அது எந்த நிறம் – என்ன சுவை என்று எவரால் சொல்லமுடியும்? ஆன்மா என்பதை விளக்குவது புவி ஈர்ப்பு விதியா? இயக்க விதியா? தொக்கல் விதியா? அதன் வடிவென்ன? அது ஒலியா – ஒளியா? திடமா? திரவமா? வாயுவா? பளாஸ்மாவா? அண்டமா? பிண்டமா? வெளியா? பிரபஞ்சமா? வினாக்கள் ஆயிரம் தான் – ஆனால் உண்மையாதெனில் அது என்னவென்று சொல்லவொணாத ஒன்று -ஆதாரமில்லாத ஒன்று – சாட்சியும் சான்றும் காட்டமுடியாத ஒன்று.
ஆன்மா என்பது இவ்வாறே இருப்பினும் அத்தகைய ஒன்றை நான் அறிய வேண்டும் – அவ்வாறு நான் அதனை அறிய அறிவியலை விட மதமே சிலாக்கியம் என்ற உணர்வும் திறமையும் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு உண்டாயிற்று என்றே காண்கிறோம்.. இந்த முயற்சியில் மத்தைக்கூட ஒரு அறிவியல் தொழில் நுட்பக் கருவியாக ஒருவேளை ஸ்டீவ் எண்ணியிருக்கலாமோ என்றுகூட நாம் எண்ணக்கூடும்.
மதம் எனும்போது உலகில், பல்வேறு மத மார்க்கங்கள் இருக்கின்றன என்பது உண்மை. எனினும் ஏற்கனவே கையில் இருப்பதை, தெரிந்ததை அணுகுவது தானே எவருக்கும் இயல்பு? அதைத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் செய்கிறார்.
கிறித்துவ மதம் பிரசித்தி பெற்றதாகவும் வெகுவானப் புழக்கத்தில் இருப்பதுமாகவும் உள்ள அமெரிக்காவில் பிறந்து ஒரு கிறித்துவக் குடும்பத்தில் வளர்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். எனவே, வெகு இயல்பாக, அவரது சமீபத்தில் உள்ளதான அவரது மதத்தை அவர் தனது ஆன்மத் தேடலுக்காய் முதலில் அணுகுகிறார். இதற்கு ஏதுவாய் சிறுவனாய் இருக்கும்போதே தேவாலயத்திற்குச் செல்லும் பழக்கமும் அவருக்கு இருந்தது. நிலைநிறுத்தப்பட்ட இறைசாத்திரங்களும் வழிபாட்டு முறைமைகளும், சாங்கியங்களும், அவற்றை உடும்புப் பிடியாய்ப் பிடித்துக்கொள்ளும் மனோபாவமும் ஆச்சாரமும் நிறைந்த குடும்பம் மற்றும் சமூக அமைப்பும் உள்ள சூழல் அது.
மதப்பற்று நிரம்பிய வளர்ப்புப் பெற்றோர்களுடன் அன்று தேவாலயம் வந்தவன் பதிமூன்றே வயதான ஸ்டீவ். பிரார்த்தனைக் கூட்டமது – இறைநம்பிக்கையோடு, இறை பணிவும், இறை அச்சமும் மிகுந்த திருச்சபைக் கூட்டம் – அக்கூட்டத்தில், தேவாலயத் தந்தையைப் பார்த்து அவன் அன்று கேட்ட கேள்வி – கடவுளுக்கு இவை தெரியுமா? என்பது – விஷயங்களை எடுத்துக் காட்டி இவையெல்லாம் கடவுளுக்குத் தெரியுமா எனக் கேட்கிறான் பாலகன் – கூட்டமும் அதிர்ச்சிமீதுறக் காண்கிறது அவனது கேள்வித் துளைப்பை. தனது கேள்விக்கு இறைதந்தை தந்த விடைகளையும் வியாக்கியானத்தையும் அவன் ஏற்றிலன். எதைக் கேட்கக்கூடாதோ அதைக்கேட்கிறான் என்பதாக அவனைக் கண்டனர் இறைமாட்சிமை புரிந்தவர்கள். அவனோ வெளி நடந்தான் தாகம் தணியாது – அன்று அங்கு விடுபட்டது மதமா? மடைமையா?
தொடருவோம்