திருத்தி எழுதப்படும் சாசனங்கள்
பவள சங்கரி
தலையங்கம்
ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் தலைவர்கள் தங்களுடைய மக்களுக்கு இந்த வகையான வாழ்க்கை முறை தம் நாட்டு மக்களுக்கு ஏற்புடையது என்று வழி நடத்தி செல்கின்றனர். இசுடாலின், காரல் மார்க்சு போன்றோர் தமது மக்களுக்கு கம்யூனிச சித்தாந்தமே சரியானது என்று முடிவெடுத்தனர். காந்தியடிகள் அகிம்சையே நம் நாட்டிற்கு ஏற்புடையது என்று முடிவெடுத்தார். இங்கிலாந்து, சப்பான் போன்ற சில நாடுகளில் இன்றளவும் மன்னராட்சி நடைபெற்று வருகின்றது. அண்டை நாடான நேபாளத்தில் துப்பாக்கி முனையில் மன்னராட்சி அழிக்கப்பட்டு மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. முசோலினி, நெப்போலியன் போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியும் தூக்கி எறியப்பட்டு மக்களாலே மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. நமது நாட்டிலும் இலவசங்கள் எனும் கையூட்டு கொடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரங்கள் பெறப்படுகின்றன என்பதும் நிதர்சனமாக உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக உலக அரங்கில் அதிசயித்து நோக்கத்தக்க வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
ஆம், உலக அளவில் பொருளாதாரத்தில் மிகச்சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தமது மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் சில கொள்கைகளை வெளியிட்டது. அதன்படி அந்நாட்டின் மக்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றிற்கு 1,700 பிராங்க் அதாவது நமது உரூபாய் மதிப்பில் ஒரு நபருக்கு மாதம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 1/4 இலட்சம் ரூபாய் வாழ்வுரிமைப் பணமாக அளிப்பதாக அறிவித்தது. இச்சட்டத்தின்படி அந்த நாட்டில் இரண்டாண்டுகளுக்கும் மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்று அறிவித்தனர். ஆனால் இச்சட்டம் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டு மக்களுக்கு அரசு கொள்கை அறிவிப்பதுபோக அந்நாட்டு மக்கள் தங்களுக்கு இதுதான் கொள்கை என்று உணர்த்தும் வகையில் இச்சட்டத்திற்கு நூற்றுக்கு 80 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தங்களுக்கு இலவசமாக பணம் வேண்டாம் என்றும், மற்ற நாட்டினர் அங்கு சென்று குடியேறுவதற்கு இந்த இலவசங்கள் ஒரு காரணமாகிவிடக்கூடாது என்பதாலும் இதுபோன்ற இலவசங்கள் தேவையில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இன்று தங்கள் வியாபார யுக்தியாக ஒரு புடவைக்கு இரு புடவைகள் இலவசம், ஒன்றிற்கு ஒன்று இலவசம், ஒன்றின் விலையில் 50% தள்ளுபடி என்றும் பல விளம்பரங்களைப் பார்க்கிறோம். இவர்கள் எவரும் தங்களுடைய கொள்முதல் விலையிலோ, உற்பத்தி விலையிலோ இதுபோன்ற தள்ளுபடிகளை வழங்குவதில்லை என்பதே சாத்தியம். மக்களுடைய ஆசையைத் தூண்டிவிட்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதே உண்மையான நிலை. அரசு எவ்வழி குடிகள் அவ்வழி என்று மக்கள் உணர்த்துகிறார்களோ?
அரசு ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் 500 யூனிட்டுகள் இலவசம் என்றும், கைத்தறிக் கூடங்களுக்கு 100 யூனிட் இலவசமும் ஒவ்வொரு இல்லங்களுக்கும் 100 யூனிட் இலவசம் என்றும் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மத்திய ஜவுளித்துறை அமைச்சர், சோலார் பேனல் திட்டத்தைச் செயல்படுத்தினால் 50 சதவிகிதம் மான்யம் அளிப்பதாக அறிவித்துள்ளார். நமது தமிழ்நாடு அரசும் இந்த 500 யூனிட் இலவசம் தருவதற்குப் பதிலாக, சோலார் பேனல் வாங்குவதற்கு அதன் விலையில் 20 சதவிகிதம் மான்யம் அளித்தால் மின்சாரம் உற்பத்தி பெருகுவதோடு இலவசத்தால் ஒரு நிறுவனத்திற்கு ஆண்டொன்றிற்கு இருபதினாயிரம் உரூபாய் செலவு என்ற வகையில் ஆண்டொன்றிற்கு பல கோடிகளை மீதப்படுத்தி அதனை மற்றைய ஆக்கப்பூர்வமான செயல்களுக்குச் செலவிடலாம்.