க. பாலசுப்பிரமணியன்

கற்றலுக்கான சூழ்நிலைகள்

education-1-2
மூளையின் திறன்பட்ட வேலைக்கும் சிறப்புமிக்க கற்றலுக்கும் பலவிதமான தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளில் சில முக்கியமானவை. இந்த உள்ளீடுகள் அதன் வேலைத்திறனையும் திறனையும் கற்றல் திறனையும் வெகுவாக பாதிக்கின்றன.

1. உணவு
2. தூக்கம்
3. உடலில் உள்ள நீர் விழுக்காடு
4. உடல் பயிற்சி
5. மன நிலை

நம்முடைய உணவில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் உள்ளன.- கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின் சத்துகள், தாதுக்கள் அனைத்தும் சேர்ந்த உணர்வு மிக அவசியமானது. ஒருவருடைய கற்றலில் ஈடுபாடு கவனம், ஆர்வம் அறிதல் புரிதல் செயல்கள் ஆகியவற்றை நம்முடைய உணவுகள் அதிகரித்து மேம்படுத்துகின்றன. அதிக அளவில் உணவு உட்கொள்ளும் நேரங்களில் கற்றலில் ஏற்படும் தாமதங்கள் ஈடுபாடற்ற தன்மை ஆகியவை பற்றிய ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன.

காய்கறிகள், பழங்கள் இவற்றால் ஏற்படும் ஊட்ட நிலைகள் பற்றியும் கற்றலுக்கு ஏதுவான ஹார்மோன்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இதேபோல் தற்கால உணவு முறைகளால் கற்றலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக துரித உணவு முறைகளால் ஏற்படும் மறதி, சோர்வு, கவனமின்மை பற்றியும் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஆகவே உணவுக்கும் கற்றலுக்கும் உள்ள தாக்கங்களை நாம் அறிந்து கொள்ளுதல் மிக அவசியம். மற்றும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இதை பள்ளிகளிலும் மற்றும் மரபு சாரா முறைகளாலும் எடுத்துச் சொல்லுதல் அவசியம் என அறிய வேண்டும்.

உடலில் நீரின் விழுக்காடு எவ்வாறு கற்றலின் திறன்களையும் கவனம் ஈடுபாடு ஆகியவற்றையும் பாதிக்கிறது என்று கற்பியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரின் விழுக்காடு குறையும் பொழுதும் தாகம் அதிகமாக இருக்கும் பொழுதும் கற்றலில் ஈடுபாடு மிகவும் குறைகிறது. ஆகவே குழந்தைகளை தினம் போதுமான அளவு நீர் குடிக்க பழக்கவும் தூண்டவும் வேண்டும். பள்ளிகளிலும் குழந்தைகள் நீர் குடிக்க விரும்பும் பொழுது ஆசிரியர்கள் அவர்களை தடுக்காமல் அவர்களுக்கு உதவ வேண்டும். அதை மாணவர்களின் கட்டுப்பாடற்ற செயலாகவோ அல்லது ஒழுக்கமின்மையாகவோ கருதுதல் மிகத் தவறு.

உடலில் நீர் குறைவு (Dehydration ) ஏற்படும் பொழுது கற்றலின் தரம் மிகக் குறைவானதாகவும் வலுவிழந்ததாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே கோடைக் காலங்களில் இதனால் படிப்பில் பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக உஷ்ணம் மற்றும் அதிகக் குளிர் கற்றலின் தரத்தை பாதிக்கின்றது. மற்றும் இந்த நேரங்களில் ஏற்படும் கற்றல் வலுவுடையதாகவும் நினைவாற்றலை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைவதில்லை.

அது மட்டுமின்றி வெளிச்சம், காற்று போன்றவைகளும் கற்றலைப் பாதிக்கின்றன. எனவேதான் வீடுகளிலும் பள்ளிகளிலும் அறைகள் போதிய வெளிச்சம் உள்ளதாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருத்தல் அவசியம். பல நாடுகளில் இதனைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டு இவற்றின் தாக்கங்களைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளனர்.

தற்காலத்தில் சிறிய பெட்டகங்களைப் போல அடுக்குமாடிப் பள்ளிகள் நிச்சயமாக கற்றலுக்கும் மாணவர்களின் பொது மற்றும் மன நலன்களை பேணுவதற்கும் உகந்ததாக இருப்பதில்லை. வகுப்பறைகளில் அளவுக்கு அதிகமான மாணவர்களை அமர்த்தி அறையின் உஷ்ணம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது அது மாணவர்களின் உடல் மற்றும் உள நலத்திற்கு சரியானதாக அமைவதில்லை.

பொதுவாக ஆக்சிஜன் அதிகமாக உள்ள இடங்களில் கற்றலின் மேன்மை சிறப்பாக இருப்பதாகவும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் தூசிகள் அதிகமாக காற்றில் இருக்கும் இடங்களில் கற்றலின் தரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மரம், செடி கொடிகள், பசுமை மற்றும் நிழல் சார்ந்த இடங்களின் நடுவே கற்கும் பொழுது கற்றலின் திறமும் ஆழமும் வேகமும் வெகுவாக சிறப்புறுகின்றன. இப்படிப்பட்ட இடங்களில் கற்கும் கருத்துகள் நினைவினில் எளிதாகப் பதிவது மட்டுமின்றி நீண்ட கால நினைவாக மாறுவதற்கு வழி செய்கின்றன. (Long Term Memory). ஆகவே பள்ளிகளில் வகுப்பறைகளைச் சுற்றி மரம் செடி கொடிகள் வளர்த்தல் கற்றலின் சூழ்நிலையை மேம்படுத்த உதவியாக இருக்கும் . பள்ளிகளை கட்டும் பொழுதே “பசுமை பாராட்டும் கட்டிடங்களாகக்” (Green Schools ) கட்டுவதற்கான முயற்சிகள் சில இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

(தொடரும்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க