ஏட்டுச் சுரைக்காய்
தமிழ்த்தேனீ
வாசிப்பு, அறிவியல், கணிதம் ஆகிய திறன்களில் மலேசியா முறையே 55, 52, 57ஆம் இடங்களில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்களில் சிங்கப்பூர், தென்கொரியா, ஹாங்காங், சங்காய் சீனா, பின்லாண்ட் ஆகிய நாடுகள் இருக்கின்றன.
ஜப்பானியக் கல்வி முறை 21 ஆம் நூற்றாண்டை நோக்கி பீடு நடை போடுகிறது. ஜப்பானில் அவர்கள் ஒரு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் . அதாவது ஒவ்வொரு மாணவருக்கும் அவர் வாங்க வேண்டிய மதிப்பெண் 100 என்றால் அதிலே 20 சதவிகிதம் எழுத்து வடிவமாகவும் .80 சதவிகிதம் நேரிடையான பயிற்சியும் என்பது அவர்களின் தாரக மந்திரமாக உள்ளது.
நேரிடையாக களத்தில் இறங்கி பரிசோதனைகளில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்தக் கருவியை எந்த நுணுக்கத்தை எங்கே உபயோகிக்கவேண்டும் என்று நேரிடை அனுபவம் கிடைக்கிறது.
அதனால் பொறியாளர்களுக்கும் முழு வேலையும் அந்தந்த வேலைகளின் நுணுக்கமும் தெரிகிறது யாருக்கு வேலையைப் பற்றி நன்றாகத் தெரியுமோ அவர்களால்தான் வேலை வாங்க முடியும் என்னும் சூக்ஷுமத்தை உணர்ந்திருக்கிறார்கள் அவர்கள் ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது என்பதை சற்றே மாற்றி ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்னும் பழமொழியை ஏற்படுத்திய நாம் இன்னமும் பாடங்களை மனப்பாடம் செய்து அப்படியே காகிதத்தில் மறக்காமல் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியவுடன் படித்த அத்தனையும் மறந்து போகும் படிப்பு முறையைக் கையாண்டு கொண்டிருக்கிறோம்.
நம் நாட்டு கல்வி முறையை மாற்ற வேண்டும் படித்துப் பட்டம் பெற்ற பல பொறியாளர்களுக்கு எந்தக் கருவிக்கு என்ன பெயர் அந்தக் கருவியை எங்கே எப்போது எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரியவில்லை எந்த நுணுக்கத்தை எங்கே எப்படி உபயோகிக்க வேண்டும் என்றே தெரியவில்லை
ஆகவே பல படித்த பொறியாளர்கள் கூட அவர்கள் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இன்னமும் கட்டிடம் கட்டும் மேஸ்திரி என்று சொல்லிக் கொள்பவர்களையும் தச்சர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் நம்பித்தான் செயல் படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.
முறையான களப்பயிற்சி இல்லாத காரணத்தால் பொறியாளர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி உபயோகப்படுவதில்லை .
குலக் கல்வி என்னும் முறையில் நேரிடையான பயிற்சிகள் அவர்களது முன்னோர்கள் செய்யும் போது பார்த்துப் பழக்கப்பட்டோ அல்லது அவர்களால் முறையாக கற்பிக்கப்பட்டோ வருகிறது.
ஒரு சிற்பி சிற்பம் செதுக்கும் போது அதை விளையாடிக்கொண்டே கவனித்துக் கொண்டிருக்கும் அவருடைய மகனும் அவனை அறியாமலே தொழில் நுணுக்கங்களைக் கற்கிறான் .
ஆகவே கணிணி உலகத்தில் காலடி வைத்தும் இன்னமும் கை வலிக்க எழுதி எழுதி களப்பயிற்சியே இல்லாமல் மனப்பாடம் செய்து ஒப்பித்து மறந்து போகும் கல்வி முறையை மாற்றி களப்பணியில் ஈடுபடுத்தி முறையாகக் கற்றுக் கொடுத்து அவர்களின் தொழில் நுணுக்க ஞானத்தை ஏற்படுத்தும் கல்வி முறைக்கு நம் நாடும் மாறவேண்டும்.
அப்படி முறையான கல்வி கற்றோர் அவர்களுக்குள் அவர்களை அறியாமலே மனப்பாடம் ஆகியிருக்கும் கருவிகளின் பெயர்களையும் நுணுக்கங்களையும் மிக எளிதாக எழுதுவார்கள்
ஆகவே தெளிவாக தட்டச்சு செய்தாலே முப்பது பக்கமாயினும் ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்து அதைப் பதிப்பித்து ஆசிரியரிடம் கொடுக்கும் திறமைகளை வளர்க்கவேண்டும் அதை விடுத்து யோசித்து யோசித்து கைவலிக்க இரண்டு மணி நேரம் எழுதியும் கையெழுத்து சரியில்லாத காரணத்தினாலும் தெளிவாக எழுத முடியாத காரணத்தினாலும் மதிப்பெண் பெற முடியாத அவல நிலையில் மாணவர்களை வைத்திருக்கும் கல்வி முறை அடியோடு மாற வேண்டும்.
வருங்காலத்தில் நேரத்தின் அருமை தெரிந்து குறுகிய காலத்திலே அதிகம் தெரிந்து கொள்ளும் நேரிடைப் பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களுடைய தொழில் ஞானத்தையும் தொழில் நுணுக்கங்களையும் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் நவீனத்தை உபயோகப்படுத்தி தொழில்களையும் பொறியாளர்களின் மேம்பாட்டையும் வளர்த்து நாட்டை நவீன இந்தியாவாக ஆக்கி வளர்க்கும் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்பது என் ஏக்கம் யோசிப்பார்களா கல்வியாளர்கள்.