நிர்மலா ராகவன் 

அப்பா, அம்மா, அடி

நலம்-

`எங்கப்பா என்னைத் தினமும் அடிக்கிறார்! எதற்கென்றே புரியவில்லை!’

`எங்கப்பா மட்டும்? நான் எவ்வளவு நல்லது செய்யப் பார்த்தாலும், என்னை ஓயாமல் திட்டுகிறார்!’

பத்து வயதுப் பையன்கள் இருவரின் உரையாடல் இது. தந்தைக்கு ஏன் தன்னைப் பிடிக்கவில்லை என்ற பரிதவிப்பு இருவருக்கும்.

இதே ஏக்கத்தை நாற்பது வயதான ஓர் சகஆசிரியரும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்: `நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். என் அப்பாவின் அன்பைப் பெற முடியவில்லை!’

`அவருக்கு உங்கள் தங்கைமேல்தான் பாசமோ?’ என்று ஊகித்தேன்.

ஒரு தாய் மகன்மேல் பாசம் வைப்பதும், தந்தை மகள்மேல் அன்பைப் பொழிவதும் இயற்கை. அதற்காக, தான் பெற்ற பிற பிள்ளைகளை வெறுப்பதுபோல் அடக்கி ஆள்வது என்ன நியாயம்?

காரணமின்றி அடித்தும், பயமுறுத்தியும் வளர்க்கப்பட்டிருந்த தந்தைக்குப் பிறந்தது இரண்டும் பெண்களாக இருந்துவிட்டால், தன்னைப்போல் இருக்கின்ற மகளின்மேல் வன்முறை செலுத்துவார்.

இந்த தந்தைமார்கள் சிறு வயதில் அடி வாங்கியிருப்பார்கள். `அடி வாங்கியதனால்தான் நான் உருப்பட்டேன்!’ என்று நியாயம் கற்பித்துக்கொள்வார்கள். அடி வாங்காது, செய்த தவறுகளுக்குக் கனிவுடன் திருத்தப்பட்டிருந்தால் இன்னும்கூட முன்னேறி இருக்கலாமோ என்று இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

(நகைச்சுவையால் குழந்தைகளின் மனம் நோகாமல் கண்டிக்க முடியும் என்று படித்திருந்தேன். அந்த அறிவுரையைப் பின்பற்றி, நான் என் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் சிறு வயதில் கூறியது: `நான் சொல்ற நல்லதையெல்லாம் கேட்டுடாதீங்கோ! அப்புறம் உருப்பட்டுட்டா என்ன பண்றது!’ சிரிப்பார்கள். ஆனால் அறிவுரை மனதில் பதிந்திருக்கும்).

தம்மைப் பாதுகாக்க வேண்டிய பெரியவர்கள் — என்னதான் காரணங்களை விளக்கினாலும் — அடிப்பதால் சிறுவர்களுக்குக் குழப்பம்தான் உண்டாகிறது. அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள்: அவமானம், தாழ்மை உணர்ச்சி, மனத்துடன் உடல் நலமும் கெடல்.

சிறு வயதில் இந்த அப்பாக்களும் இதே உணர்ச்சிகளுக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனால் தம்மிடமிருந்தே அதை மறைத்துக்கொண்டு விட்டதுதான் பரிதாபம்.

`என் மகன் பிசாசு மாதிரி பேரனை அடிக்கிறான்!’ என்று என்னிடம் வருந்திக் கூறினார் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர்.

தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருந்த அவருக்கு நான் என்ன ஆறுதல் சொல்வது! `சிறு வயதில் உங்கள் பிள்ளையை ரொம்ப அடித்து வளர்த்தீர்களா?’ என்றேன் மெள்ள.

பதிலாக, அவருடைய உடலும், முகமும் இறுகின.

`எவ்வளவு அடித்தாலும், உருப்படுவதில்லை! ஊர் சுற்றுகிறான், எதிர்த்துப் பேசுகிறான்!’ என்று பிரலாபிப்பவர்களுக்கு ஒன்று புரிவதேயில்லை. ஓயாமல் குறை கண்டுபிடித்து, அடி வாங்கினால், எதிர்ப்புக்குணம்தான் வரும். நீங்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராக ஒரு காரியம் செய்துவிட்டு, அதன் விளைவாக நீங்கள் கொள்ளும் ஆத்திரமே அவர்களது நொந்த மனதிற்கு உற்ற மருந்தாகிறது.

`உங்கள் அப்பா உங்களுக்குச் செய்ததையே நீங்கள் உங்கள் மகனுக்குச் செய்கிறீர்களே! பெரியவன் ஆனதும், அவன் உங்களை மதிப்பானா?’ என்று ஒருவரைக் கேட்டேன். அந்த மனிதர் வயது முதிர்ந்த தந்தையுடன் பேசுவதையே விட்டு விட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

`என்னை மதிக்காவிட்டால் போகிறது! அவன் முன்னுக்கு வந்தால் போதும்!’ என்று விட்டேற்றியாக பதில் வந்தது.

இங்குதான் குழப்பமே. பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டுவர வேறு வழி தெரியவில்லை அவரைப் போன்றவர்களுக்கு.

வெகு சிலர், `என் மகனும் நான் சிறு வயதில் அடிபட்டு நொந்தமாதிரி ஆகிவிடக்கூடாது!’ என்று, மகன் என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இப்படி வளர்க்கப்பட்ட பிள்ளை உருப்படுவானா என்பதும் சந்தேகம்தான். தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டாமா?

சில தாய்மார்களும் மகளை அடிக்கிறார்கள்.

வசுமதி ஒரு பதின்ம வயதுப் பெண். அவளுடைய தலையின் வடிவம் கோணல்மாணலாக உருமாற ஆரம்பித்தபோது எனக்கு அவளுடைய அவல நிலை புரிந்தது. அவளிடம் கேட்டபோது, வருத்தத்துடன் ஒப்புக்கொண்டாள்.

அவள் தாயைச் சந்தித்து, `உங்கள் பெண்ணை சும்மாச் சும்மா அடிக்காதீர்கள்!’ என்று கூறினேன்.

ஆச்சரியத்துடன், `அடிக்கக் கூடாதா?’ என்று திருப்பிக் கேட்டாள், நாற்பது வயது நிரம்பாத அப்பெண்மணி.

`எதுக்கு அடிக்கறது?’ என்றேன், பொறுமையிழந்து.

`வீட்டிலே ராங்கி பண்ணுது!’

மேலும் விசாரித்தபோது, புத்திசாலியான, முன்னுக்கு வரத் துடிக்கும் மகளுக்கு அம்மாவின் அடக்குமுறை சரியெனப் படாததால் எதிர்த்திருக்கிறாள் என்று புரிந்தது.
மகளைத் தனியாக அழைத்து, அவளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கிடைக்க தாய் கொடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினேன்.

`உன் அம்மா உலக அனுபவம் இல்லாதவள். அப்பா அடிப்பதை எதிர்ப்புக் காட்டாமல் ஏற்று, `எல்லாப் பெண்களுமே அப்படித்தான் இருக்க வேண்டும்போல இருக்கிறது,’ என்று நினைத்துவிட்டாள். நீ வித்தியாசமாக இருக்கிறாய். அது தவறென்று அம்மாவுக்குப் படுகிறது,’ என்று மேலும் விளக்கினேன்.

நிலவரம் புரிந்தபோது, தாய்மீது பரிதாபம்தான் எழுந்தது வசுமதிக்கு. தாய் மகளுக்குள் நல்லுறவும் உண்டாகியது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *