Year: 2017

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
    அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
    பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
    இறந்தில்லை யாவதேன் இங்கு….!

    எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
    உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத்
    துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
    நதிக்கரை நாணல்நீர் நட்பு….!
    அமுதா, அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
    சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….கிரேசி மோகன்….!

    Share
  • இந்தவார வல்லமையாளர்: (225)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளர்: உம்முல் கர்

    (29/05/2017 – 05/06/2017 )

    1

    எட்டாம் வகுப்பு படித்ததற்காக குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், சுயமுயற்சியால் இன்று ஐ.ஏ.எஸுக்கு தகுதி பெற்றுள்ளார்

    உம்முல் கர். சிறுவயது முதல் இவருக்கு உடல் ஊனம் உண்டு. சிறு காயம் பட்டாலும் எலும்புகள் உடைந்துவிடும். இவரது பெற்றோர் மிக வறிய பின்புலத்தை சார்ந்தவர்கள். தந்தை டெல்லியில் பிளாட்பாரத்தில் துணி விற்கும் வியாபாரியாக இருந்தார். அவர்கள் குடும்பம் டெல்லியில் குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு சிறுகுடிசை.

    மகளின் வியாதிக்கு செலவு செய்யவே அவர்களால் முடியாத சூழல். 25 முறை மகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் மகளை தீனதயாள் உபாத்யாயாவின் உடல் ஊனமுற்றோருக்கான இலவச பள்ளியில் சேர்த்தார்கள். எட்டாம் வகுப்பு படித்தவுடன் படிப்பை நிறுத்தச் சொன்னார்கள்.

    ஆனால் அமர்ஜோதி எனும் சேவை நிறுவனம் உம்முல் கரின் படிப்புச் செலவை ஏற்க முன்வந்தது. ஆனால் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மகளை கண்டபடி திட்டித் தீர்த்தார்கள். “ஒரு பெண் எட்டாவது வரை படித்தால் போதும்” என்றார்கள்.

    அதனால் அவர்களுடன் சண்டைபிடித்து வெளியேறினார் உம்முல்கர். டெல்லியில் இருந்த குடிசைப்பகுதி ஒன்றில் தனியே ஒரு குடிசையை வாடகைக்கு பிடித்தார். தினம் மாலை 3 மணிமுதல் இரவு 11 வரை குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு பேட்ச், பேட்சாக டியூஷன் எடுத்து தன் செலவுகளை சமாளித்தார். நூறு ருபாய் மட்டுமே கட்டணம். ஏனெனில் அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ரிக்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலிகள் போன்றோரின் பிள்ளைகளே.

    12வது வகுப்பில் 91% எடுத்துத் தேறிய உம்முல் கர், அதன்பின் கார்கி கல்லூரியில் சேர்ந்தார்.

    இந்த சூழலில் வியாதி முற்றி, எலும்புகள் உடைந்து நடக்கமுடியாமல் சக்கரநாற்காலியில் ஒரு வருடம் இருக்கும் சூழல் உருவானது. ஆனாலும் சளைக்காமல் கல்லூரிக் கட்டணத்தை தன் டியூஷன் சம்பளத்தைக்கொண்டே கட்டினார். அதன்பின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்காலர்ஷிப் பெற்று முதுகலை பட்டமும் பெற்றார். அவருக்கு அங்கே மாதம் 3500 உதவித்தொகையும் கிடைத்தது.

    அதன்பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 420வது ரேங்க் பெற்று தேறினார். ஐ.ஏ.எஸ் ஆகும் வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார்

    சமூகமும், குடும்பமும், தன் உடல்நிலையும் தன் மேல் வீசி எறிந்த தடைகற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி சிகரம் தொட்ட உம்முல் கரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கற்றல்  ஒரு ஆற்றல் – 81

    க. பாலசுப்பிரமணியன்

    படிக்கும் முறைகளால் ஏற்படும் தாக்கங்கள்

    education-1-1-1

    “அம்மா, ரொம்ப சத்தம் போட்டு பேசாதீங்கம்மா .. இப்படி  எல்லோரும் சத்தம் போட்டு பேசினா நான்  எப்படிப் படிக்கிறது” என்று உங்கள் மகன் எப்பொழுதாவது சொல்லியதுண்டா?

    “டேய் .. இவ்வளவு கத்திப் படிக்காதேடா.. கொஞ்சம் மெதுவாகப் படி… மத்தவங்க எல்லாம் வீட்டிலே  இருப்பது  தெரியவில்லையா உனக்கு?” என்று வீட்டிலே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொன்னதைக் கேட்டதுண்டா?

    “என்னடா இப்படி சோபாவிலே படுத்துக்கொண்டு.. தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம், புத்தகம் ஒருபக்கம்.. நீ  படிக்கிறாயா இல்லை ஏதாவது ஆசனம் செய்கிறாயா?” என்று வீட்டிலே குழந்தைகளைப் பார்த்து பெரியவர்கள் சொன்னதைக் கேட்டதுண்டா?

    இதெல்லாம் குழந்தைகள் படிப்பதில் சில வகைகள்.. பொதுவாகப் பார்வைகள் சார்புடைய கற்றலின் ஆதிக்கம் அதிகமாக  உள்ளவர்கள் (visual learners) படிக்கும்போது

    1. புத்தகங்களின் மேல் வைத்த விழி வாங்காமல் பார்ததுக்கொண்டிருப்பார்கள்.
    2. அதிகமாக சத்தம் போட்டுப் படிக்க மாட்டார்கள்,
    3. ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் திரும்பப் படிக்கும் பழக்கமுடையவர்கள்.
    4. முக்கியமான கருத்துக்களை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு அடிக்கோடு வைக்கும்  பழக்கமுடையவர்கள்.
    5. படிக்கும் நேரங்களில் இவர்களுக்கு கவனச் சிதைவு அதிகமாக ஏற்படுவதில்லை
    6. ஒரு புத்தகத்தைப் படிக்கும்பொழுது அதனுடன் சார்ந்த படங்கள் வரைவுகள் மற்றும் இணைந்த கருத்துக்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் உடையவர்கள்.
    7. ஏதாவது ஒன்றைப் படித்ததும் அதை உடன் எழுதி பார்க்கும் பழக்கம் உடையவர்கள்
    8. வகுப்பறைகளில் மற்றும் படிக்கும் இடங்களில் யாரவது வந்து போனாலோ அல்லது ஏதாவது நிகழ்வுகள் மாற்றங்கள் நேர்ந்தாலோ அவைகளை உடன் கவனிக்கக் கூடியவர்கள்.
    9. பொதுவாக இவர்களுடைய புத்தகங்கள் மற்றும் இதர பொருள்கள் சுத்தமாகவும் ஒழுங்காகவும், பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய வகையிலும் வைத்திருப்பார்கள்.
    10. தாங்கள் படிக்கும் இடத்தையும் ஓரளவு சுத்தமாக வைத்திருக்கக்கூடிய பண்பு உடையவர்கள். படிக்கும் இடங்களில் உள்ள சித்திரங்கள் போட்டோக்கள் மற்றும் அலாகாரங்கள் இவர்களை மிகவும் கவருவதுண்டு.
    11. அதிகமான வண்ணப் பொருட்களை எழுதுவதற்கும் வரைவுகளுக்கும் உபயோகப்படுத்தும் ஆர்வம் உடையவர்கள்
    12. தங்களுடைய குறிப்புக்களை சிறிய படங்கள் அல்லது குறுக்கெழுத்துக்கள் மூலமாக எழுதி தக்க வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள்
    13. இவர்கள் படிக்கும் வேகம் நிதானமாக  இருக்கும்.
    14. மொழி மற்றும் கலை சம்பந்தப்பட்ட பாடங்களில் விருப்பம் அதிகமாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.
    15. பள்ளிகளில் chart மற்றும் படங்கள் வரைந்து தங்கள் வகுப்பறைகளை அலங்கரிப்பதில் ஆர்வம் உடையவர்கள் .
    16. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் சொல்வதை விட கரும்பலகைகளில் எழுதப்பட்டிருப்பதில் அதிக கவனத்தைச் செலுத்தக்கூடியவர்கள் .
    17. பாடங்களை கவனிக்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் மற்றவர்களின் இடைச்செருகல்களையோ அல்லது கேள்விகளையோ அதிகம் விரும்பாதவர்கள்
    18. பொதுவாக எழுதத்துப்பிழைகளின் (spelling) மீது கவனம் வைத்து அவற்றைத் தவிர்க்கும் ஆர்வம் உடையவர்கள்

    இதே போன்று செவியால் கிடைக்கும் உந்துதல்களால் கற்றுக்கொள்ளுபவர்கள் (Auditory Learners) படிக்கும்   முறைகளிலும்  சில தனித்தன்மைகள் இருக்கின்றதாக  அறியப்பட்டுள்ளது.

    1. பொதுவாக இவர்கள் அதிக சத்தம் இருக்கும் இடங்களிலோ அல்லது மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடங்களின் நடுவிலோ அமர்ந்து படிக்கும் பழக்கம் உடையவர்கள்.
    2. இவர்கள் படிக்கும் பொழுது வெளியிலிருந்து வரும் சத்தங்களில் ஒலிகளில் தங்களை அடிக்கடி இழக்க வாய்ப்புக்கள் உண்டு.
    3. இவர்கள் வாய்விட்டு சத்தமாக படிக்கும் பழக்கம் உடையவர்கள்.
    4. இவர்கள் படிக்கும் பொழுது கவனச்சிதைவிற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அதனால் நினைவாற்றலிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டு மறக்கக்கூடிய சந்தர்பங்கள் அதிகம் ஏற்படும்.
    5. பொதுவாக ஓரிடத்தில் அமர்ந்து படிக்க மாட்டார்கள்
    6. தாங்கள் படிப்பதை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற ஆர்வமும் அதிகம் இருக்கும்
    7. இவர்கள் தங்களுடைய புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை அழகாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்ளுதல் அரிது.
    8. சில நேரங்களில் காதில் பாட்டு கேட்டுக்கொண்டே படிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவர்.
    9. பார்த்துபே படிப்பதை விட மற்றவர்களிடம் பேசி கலந்தாய்ந்து படிக்கும் பழக்கம் இருக்கும்.
    10. அலைபேசிகளில் மற்றவர்களுடன் அடிக்கடி பேசி தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்     பழக்கம் இருக்கும்
    11. படிக்கும் பொழுது இவர்கள் படங்கள், வரைவுகள் மற்றும் அதனைச் சார்ந்த குறிப்பேடுகளை அதிகமாக கவனிக்க மாட்டார்கள் .
    12. விடைத்தாள்களில் கேள்விகளுக்கான சரியான எண்களை தவற விடக்கூடியவர்கள்
    13. விடைகளை எழுதபொழுது அதை கோர்வையாக எழுத்தும் பழக்கம் குறைவாக இருக்கும்.
    14. வண்ணங்களைக் குறைவாக பயன்படுத்துவார்கள்.
    15. 15 கவனச்சிதைவின் காரணமாக முக்கிய குறிக்கோளிலிருந்து அதிகமாக விலகிப் போகும் வாய்ப்புடையவர்கள்.
    16. சில நேரங்களில் தங்களுக்கே புரியாத வண்ணம் வேகமாகப் படிக்கும் உள்ளுணர்வுக்கு அடிமையாகி விடுவார்கள்.
    17. இதில் பெரும்பாலானவர்கள் கணக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக ஆர்வம் இல்லாதவர்கள்.
    18. பாட்டு, கதைகள், நாடகங்கள் ஆகியவற்றை அதிகமாகபே படிக்கவும் அவை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்றுக்கொள்வதிலும் ஆர்வம் உடையவர்கள்.

    தொடர்ந்து மற்ற முறைகலில்  படிப்பவர்களின் ஆற்றல்களைப் பற்றி கவனிப்போம்

    (தொடரும்)

    Share
  • இரு எழுத்தாளர்களின் சந்திப்பு!

    -தமிழ்த்தேனீ

    ஒரு எழுத்தாளர் வருகிறார்; ஒரு எழுத்தாளர் அவரை வரவேற்கிறார்.

    உக்காருங்க  நண்பரே  என்ன  சாப்படறீங்க?

    ஒண்ணும் வேண்டாம் சார்;  இப்போதான் காப்பி குடிச்சிட்டு வந்தேன்.

    (மனதுக்குள் ஏதாவது குடுத்தா  நல்லாத்தான் இருக்கும்.)

    முதல்லே இந்தத் தண்ணீரைக் குடிங்க வெய்யில்லே வந்திருக்கீங்க.

    உள்ளே இருந்து எழுத்தாளர்  மனைவி வருகிறார்.

    அடேடே  வாங்க வீட்டுலே எல்லாரும்  சௌக்கியமா?

    நல்லா இருக்காங்கம்மா; நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க வீட்டுக்காரர்  ஜமாய்க்கறார்!

    எப்பிடித்தான் இவருக்கு இவ்ளோ கற்பனை வருதோ  ரொம்ப நல்லா   எழுதறாரு.

    (மனதுக்குள் ஒரு காட்சி நிழலாடுகிறது போனமுறை சந்தித்தபோது இவர் கொடுத்த புத்தகத்தை  வீட்டிலே கொண்டு போயி  சோபாவிலே வெச்சேன் இன்னும் படிக்கலே.)

    சார் நீங்க  குடுத்தீங்களே… அந்தப் புத்தகத்தை  இதுவரைக்கும்  நான் அஞ்சு தடவை  படிச்சிட்டேன்;  அலுக்கவே இல்லே.

    சார் அப்பிடியெல்லாம் ஓவரா  புகழாதீங்க;  ஏதோ  எழுதறேன்.

    நீங்க  அடக்கமா சொல்லிக்கிறீங்க.  படிக்கற  எங்களுக்குத்தானே உங்க அருமை தெரியும். (மனதுக்குள் எப்பிடி நடிக்கறான் பாரு அடக்கமா!)

    இப்போ சமீபத்திலே  நான் ஒரு புத்தகம் எழுதறேன். ரெண்டு மூணு பதிப்பாளர் கேட்டுகிட்டே  இருக்காங்க; நமக்கு இருக்கற வேலைக்கு நடுவே  எழுதறோம்; அவங்க அவசரத்துக்கு நாம் எழுதமுடியுமா?

    (மனதுக்குள் அடப்பாவி; கூசாம எப்பிடிய்யா பொய் சொல்றே.)

    எந்தப் பதிப்பகத்தார் யா உன்னை இவ்ளோ  தொந்தரவு  செய்யறாங்க  எந்தப் புத்தகமும் விக்கலேன்னு அவங்களே அல்லாடிக்கிட்டு இருக்காங்க.)

    எனக்கும் அதே நெலமைதான். ஆனாப் போனதடவை பப்ளிஷ் பண்னாங்களே அவங்களே கேக்கறாங்க;  இன்னும் ஒரு புஸ்தகம் வெளியிடலாம்னு   நானும் எழுதித் தரேன்னு சொல்லி இருக்கேன்.

    சார் நீங்க ஜமாயுங்க!  நானும் எனக்குத் தெரிஞ்ச  பப்ளிஷர்கிட்டே போகும் போதெல்லாம்  உங்களைப் பத்திதான்  சொல்லிகிட்டே இருப்பேன்.

    ஆனா ஒண்ணு  யார்கிட்டே  பேசினாலும் எங்களுக்கு அவரை நல்லாத் தெரியுமே அப்பிடீங்கறாங்க; உங்க புகழ் உங்களுக்குத்தான் தெரியலே!

    ( மனதுக்குள்  யோவ்  யாராவது  பப்ளிஷர் இருந்தாச் சொல்லேன்யா;  நானும்தான் ஒரு புஸ்தகம் வெளியிடறேன்; மனதுக்குள் அதெல்லாம் செய்யாத உன்னைப் பத்தியே நெனைச்சுகிட்டு உன் புத்தகத்தை மட்டுமே வெளியிட்டுக்கோ.)

    உங்களுக்குச் செய்யாமே வேற யாருக்கு நான் உதவப் போறேன்; நீங்க அந்த புஸ்தகத்தை எழுதிமுடிங்க. நான்… நானே உங்களை  அழைச்சிகிட்டு போறேன்  பப்ளிஷர்கிட்டே.

    உள்ளே இருந்து  காப்பி கொண்டுவந்து கொடுக்கிறார் எழுத்தாளர்  மனைவி.

    அதை வாங்கி குடிச்சிட்டு  உங்களுக்கு  எதுக்கும்மா  வீண் ஸ்ரமம்;  நாந்தான் ஒண்ணும் வேண்டாம்னு சொன்னேனே. ஆனா அருமையான காப்பி.

    சரி…அப்போ நான் கிளம்பறேன்.

    சரி போயிட்டு வாங்க… அடிக்கடி வாங்க!

    நீங்களும் உங்க  மனைவியைக் கூட்டிகிட்டு  வாங்க சார் நம்ம  வீட்டுக்கு.  நான் அக்கம்பக்கத்திலே  பெருமையா  சொல்லிக்குவேன் நீங்க  என் நண்பர்ன்னு.

    அப்பொ நான் வரேம்மா; வரேன் நண்பரே. நானு அந்தப் புஸ்தகத்தை  எழுதி முடிச்சு எடுத்துகிட்டு வரேன்.

    சரி நண்பரே… நானும் அதுக்குள்ளே இப்போ எழுதிகிட்டு இருக்கற  நாவலை முடிச்சிருவேன் ரெண்டு பேருமா போயி பாக்கலாம் பப்ளிஷரை.

    நன்றி! சந்திப்போம்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்

     

    -மேகலா இராமமூர்த்தி

    twowheeler driving

    ஈருருளியில் பறக்கும் ஒரு குடும்பத்தைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. முத்துக்குமார். இப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

    மழலையொன்று இடையினில் நசுங்க, அன்னையோ இடமின்றிக் கசங்க, குடும்பத்தலைவன் அதிவேகத்தில் ஊர்தியைச் செலுத்துவது அச்சத்தைத் தருகிறது. வேகத்தினும் விவேகமே சிறந்தது என்பதை வாகன ஓட்டிகள் உணர்ந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்!

    *****

    இனி கவிஞர்கள் கவிபாடும் நேரம்…

    ஈருருளியும் இயற்கையும் இயங்கு நிலையில் இயங்கா நிலையைக் காட்டுவது தோற்றப் பிழையே என வியக்கும் திரு. நக்கினம் சிவம் பயணத்தில் வேகத்தைக் குறைப்போம், குடும்பத்தைக் காப்போம் எனும் நல்லுரையோடு கவிதையை நிறைவுசெய்திருக்கின்றார்.

    பூமி சுழல்வதும்
    சூரிய சந்திரர் வருவதும் போவதும்
    இருளும் ஒளியும் தோன்றி மறைவதும்
    இயற்கையின் வினையாகும்.

    தன்னுடை குடும்பமாம்
    மனையுடன்குழவியும்
    ஈருருளியில் செல்வதில்
    அகமதும் சுகமதாகும்.

    தோற்றம் மறைவதும்
    மறைந்தது பிறப்பதும்
    இயற்கையின் செயலாகும்
    இங்கோ

    ஈருருளியும் இயற்கையும்
    இயங்கு நிலையில்
    இயங்கா நிலையை
    காட்சி பிழையாகும்.

    அதுவே
    தோற்ற முடிவாகும்.

    தோன்றா நிலையே
    முற்றும் நிலையென
    பற்றுகள் நீங்கிய
    பரமர்கள் பகர்ந்தார்.

    தோன்றும் வரை
    தோற்றத்தில் வாழ்வோம்
    தோற்ற மறைவை
    போற்றி புகழ்வோம்.

    பயணத்தில் நாளும்
    வேகத்தை குறைத்து
    குடும்பத்தை காப்போம்
    நலமுடன் வாழ்வோம்.

    *****

    ’குடும்பத்தை உடனேற்றிக் காற்றினும் கடுகிச் செல்வது பேராபத்து! வேகத்தைக் குறைத்தால் உறவுகள் நலம் கூடுமே’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.  

    வேண்டாம் வேகம்…

    குடும்ப மெல்லாம் கூடயேற்றி
    காற்றைப் போல பறப்பவரே,
    குடும்பம் காத்திடும் முறையிதுவா
    கூடுதல் வேகம் முறையாமோ,
    தடுக்கும் கவச மணிந்தாலும்
    தாண்டும் வேகம் இடர்தானே,
    அடுக்கும் உறவுகள் நலங்காக்க
    அதிக வேகம் வேண்டாமே…!

    *****

    ”தம்பி! உன் தாரமே உன் வாழ்வின் ஆதாரம்; வண்டியின் இடையில் அமர்ந்திருக்கும் பிள்ளைக்கு(ம்) ஆகிவிடக்கூடாது சேதாரம். எனவே வாகனத்தைச் செலுத்துவாய் நிதானமாய்” என்று அன்போடு வாகனவோட்டிக்கு அறிவுறுத்துகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    வேகம் என்றும் சோகம் வேகம் விவேகம் அல்ல தம்பி!
    உன் குடும்பம் வாழ்வது உனை நம்பி!
    உன் தாரம் பின்னால் அமர்ந்திருப்பதை
    மறந்தனையோ தம்பி !
    அழகுப் பிள்ளை உங்கள் நடுவில் அஞ்சி
    அமர்ந்திருப்பதை பார் தம்பி !
    அவள் வாழ்வின் ஆதாரம் நீ என்பதை
    ஒரு கணம் நினைத்தால் தம்பி!
    வேகம் மாறி, நிதானம் வந்திடும் தம்பி!
    தலைக்கவசம் அணிந்திருப்பது !
    நீ மட்டும் தான் தம்பி !
    ஆண்டவனின் அற்புதப் படைப்பு!
    மனித குலம் தம்பி!
    அதை விபத்தால் விபரீதமாய்
    மாற்றி விடாதே தம்பி!
    வாகனத்தை என்றும் நிதானமாய் !
    செலுத்திடுவாய் தம்பி!

    *****

    இருசக்கர வானத்தில் செல்லும்போது கைக்கொள்ள வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் தன் கவிதையில் பட்டியலிடுகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    நேரத்திற்கு செல்ல இரு சக்ர ஊர்தியில் ஓர் அவசரப் பயணம்
    அவசரமாக இரு சக்ர ஊர்தியில் அதி வேகமான பயணம்
    அதிலும் தன் மனைவி, மகன் இருப்பதை உணராத பயணம்,
    இறப்பைப் பற்றி கவலை கொள்ளாத ஓர் பயணம்!
    இரு சக்ர ஊர்திகளின் விபத்துக்கள் அன்றாடம் நிகழ்கிறதே!
    மனிதனின் உயிர் இன்று மலிவாய்ப் போனதே!
    விழிப்புணர்வு ஏற்பட்டும் கவலை கொள்ளாமல் போனதே!
    வேகத்திலும், விவேகம் இல்லாமல் போனதே!

    இருசக்ர ஊர்திகளின் முன்னேற்றத்தால் அதி வேகமும்,
    விபத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் துர்மரணமும்,
    கவனமாய்ச் சென்றாலும், எமனாக வந்து இடிப்பான்
    கேட்டால் அதுவே அவன் தலை விதி என்பான்!
    இருசக்ர ஊர்தியில், வேகமா ய் செல்வது விவேகம் அல்ல
    அதிக பாரம், அதிக நபர்களுடன்,செல்வதும் நல்லதல்ல
    சிக்கனல்களை மதிக்காமல் செல்வதும் நல்லதல்ல!ஓட்டும்போது கைப்பேசியுடன் பேசுவதும் நல்லதல்ல!வண்டியில் செல்லும்போது சாலை விதிகளை மதியுங்கள்!
    தலை பாதுகாப்பிற்கு தலைக் கவசம் அணிந்து செல்லுங்கள்!
    மனைவி, மகனுடன், கவனமாக வண்டியில் செல்லுங்கள்,
    விபத்தின்றி இருசக்ர ஊர்தியில் பயணம் செய்ய நினையுங்கள்!

    *****

    வீதிகளில் விதிகளை மதித்தால் எதிர்பாரா விதிமுடிவை விலக்கலாம்; காலனிடம் அநியாயமாய்ச் சிக்கி அகால மரணமடைவதை அகற்றலாம் என்று பாதுகாப்பாய் வாகனம் ஓட்டுவதன் அவசியத்தைப் பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வாகனத்தில் வேகம் வாழ்வில் துன்பம்!

    வானில் எழுமேவு கணைபோல் வரையறையிலா
    —-வாகன மெலாம் சாலையிலே பறக்குதங்கே
    அவசரமாய்ப் போட்ட தார்ச்சாலை வழுக்கியதால்
    —அதிவேகமாய்க் கூட்டுதிங்கே விபத்துக் கணக்கை!

    வாகன வேகமதைச் சாலையில் காட்டாதேயுன்
    —விவேக புத்தியைச் செய்யும் செயலில் காட்டுவாய்!
    ஒடிந்தமூட்டும் உடலிலி லழியாத் தழும்புடனே
    —-நொண்டிவாழும் வாழ்வு தேவைதானா சொல்லு!

    வீதிகளில் காட்டும் வாகன வேகமதுவுன்
    —-வாழ்வில் இருளைத் தந்து விடுமிதை
    அறியாமல் செல்கின்ற வேகம் ஆபத்தாகும்
    —-அறியவைக்க முயற்சி செய்தும் பலனில்லை

    கணவனை இழந்த காரிகைகள் தன்னருமைக்
    —-குழந்தை இழந்த தாய்மார்கள் பலவென
    உயிரில்லா வாகன மொன்றால் முடியுமொரு
    —-உன்னுயிரை யரை நொடியில் பறித்துவிட!

    வீதிகளில் விதிகளின் மேல் வழிநடந்தால்
    —விதி முடிந்ததென்று புகலுவதை விடுக்கலாம்
    ஆடி அடங்கிய அருமுடம்பை எரித்து
    —-அரை நொடியில் சாம்பலாவதைத் தவிர்க்கலாம்!

    சுழலுவதே சக்கரத்தின் செயலானால்…வாழ்க்கைச்
    —-சுழற்சியிலோயாமல் உழலுவதும் மோர் நியதியன்றோ?
    பங்கமிலாப் பெற்றபெரு வாழ்வு நிலைபெறவுன்
    —-அங்கமதில் குறையிலா வாழ்வு வேண்டும்!

    உனக்கென்று உதித்ததைத் பறிக்க இங்கு
    —-உலகில் யாருக்கும் உரிமையில்லை யென்பதை
    உணர…உன்வாழ்வில் வேகமே வேண்டாமென
    —-நிதானமாய் வாழ்வில் நின்று நட!

    *****

    வாகன ஓட்டிகளுக்கு நல்ல அறிவுரைகளை அள்ளி வழங்கியிருக்கும் நம் கவிஞர்கள் தாம் பொறுப்புள்ள குடிமக்களுங்கூட என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். பாராட்டுக்கள்!

    *****

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தெரிவுசெய்திருப்பது…

    உந்துவிசைச் சைக்கிள் எங்கு போகுது?

    மந்தை மாட்டு வண்டியில்
    சந்தைக்குப் போன
    முந்தைய சாணி யுகம்
    பிந்திப் போனது!
    ஜல் ஜல்லென்று
    சதி தாள மிட்டோடும்
    குதிரை வண்டிகள் காலமும்
    விதி மாறி மறைந்தன!
    நிதிச் சிக்கன இரு சக்கர
    மிதி வண்டிகள்
    புதிராக வேகமாய் ஓடின!
    மனிதர்
    குதிவலி குறைக்கப்
    புதியதாய்ப்
    பெட்ரோல் எஞ்சின் பூட்டிய
    விந்தை வேக வண்டி
    இப்போது
    உந்துவிசை ஸ்கூட்டி வாகனமாய்
    வந்து விட்டது!
    வேகத்தில் பன்மடங்கு விரைந்தாலும்
    விபத்துகள் நேர்வதும்,
    சோகமும், துக்கமும், உயிர்கள்
    துறப்பதும் அனுதினம்
    தொடர்ந்தன!
    எதற்கும் நாம்
    விலை தர வேண்டும்!
    விஞ்ஞானம்
    இருதலைத் தெய்வம்!
    ஆக்க பூர்வமாய்
    அள்ளிக் கொடுக்கவும் செய்யும் !
    துள்ளிக்
    கொல்லவும் செய்யும்!
    உந்து சைக்கிளில்
    செல்லும் குடும்பத்தைப் பார்!
    எமனை நோக்கிப் போகும்
    அன்னை!
    அருந்தவப் பிள்ளை!
    ஏனில்லை,
    அவரது தலைகளில் மட்டும்
    பேணும் கவசம்?

    வாழ்வில் எதற்கும் நாம் விலைதர வேண்டும். அறிவியல் இருதலையுடைய தெய்வம். அதன் ஒருதலை ஆக்கத்தைத் தந்தாலும் மற்றொரு தலை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்வதையும் மறுக்கவியலாது. சாலையில் அதிவேகமாய்ச் செல்லும் இந்த உந்துவண்டி எமனூருக்கு முந்திச் சென்றிடுமோ என்ற தன் அச்சத்தை இக்கவிதையில் அழுத்தமாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருக்கின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • உலக சுகாதார நிறுவன அறிவிப்பு

    பவள சங்கரி

    உலகிலுள்ள மொத்த குழந்தைகளில் இந்தியாவில் மட்டும் சுமாராக 31% குழந்தைகள் (1,21,000 ஆயிரம்) ஊட்டச்சத்து குறைபாடுகளாலும், கல்வி கற்பதற்குரிய வசதியின்றியும், சரியான வாழ்வாதாரங்களின்றியும் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் முதலாவது இடத்திலுள்ள நம்மைவிட நைஜீரியா, பாகிஸ்தான், யுகாண்டா போன்றவைகள் முறையே 7, 6, 5 சதவிகிதங்களில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளான யுகாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகளில் 95% பேர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் அவதியுறுகின்றனர். வளரும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் நம் இந்தியா ஒரே ராக்கெட்டில் 109 சாட்டிலைட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. விரைவில் மேலும் 45 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இருக்கிறோம். செவ்வாய் கிரகத்திற்கும் ராக்கெட் அனுப்பிவிட்டோம். நமக்காக தனி ஜி.பி.எஸ் கூட உருவாக்கிவிட்டோம். இப்படி எத்தனையோ முன்னேற்றங்களுடன் பெருமைகள் கொண்டிருந்தாலும், மிக முக்கியமான பிரச்சனையான, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள் விசயத்தில் மிகவும் பின் தங்கி, நலிவுற்ற குழந்தைகள் உள்ள நாடுகளில் முதலாவது இடத்தில் இருப்பது வேதனை. பல்வேறு துறைகளுக்காக பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசு குழந்தைகளின் நல்வாழ்விற்காக கவனம் செலுத்தி நாளைய நமது சந்ததியினரை வாழ வைப்பார்கள் என்று நம்புவோம். குழந்தைகள் நலனில் எப்போதும் அதிக அக்கறை செலுத்தும் நமது பிரதமர் மோடி அவர்கள் இந்தப் பிரச்சனைகளில் தனி கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் மனதில் நிலையான இடம் பிடிப்பார் என்பதும் உறுதி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
    வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் -நீநெகிழ்ந்து
    அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
    கண்ணனை நெஞ்சே கருது”….!

    ’’உந்த எதுகை, உருவாக மோனைகள்,
    வந்ததே வெண்பா விதவிதமாய், -அந்தக்,
    குழலினிது யாழினிது என்போர்கள், கண்ணன்,
    மழலைச்சொல் கேளாத மண்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது

    aj
    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++

    http://www.dailygalaxy.com/my_weblog/2017/05/apeman-to-spaceman-changes-in-earths-orbit-and-climate-ago-made-us-intelligent-watch-todays-galaxy-s.html?cid=6a00d8341bf7f753ef01bb09a0374e970d

    ++++++++++++++

    வக்கிரக் கோள் வழி தவறி
    வையத்தில் மோதிச்
    சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி
    பிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும்  !
    பரிதிக்கு அப்பால் பெயர்ந்து
    பூமி சூடு தணியும் !
    டைனசார்ஸ் மரித்தன,
    நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் !
    வானர மூளை உன்னத மாகி
    மேனிலை மானிடம் உதிக்கும் !
    மீண்டும் டைனசார்ஸ் தோன்ற வில்லை !
    பிழைத்தவை பறவை இனம் !
    பூமியின் ஆட்டத்தில்
    பொங்கி எழுந்தன எரிமலைகள் !
    புவியும் தீக்குளிப்பில்
    புத்துயிர் பெற்று மீண்டது !
    புதிய பயிரினம் பல தோன்றின !
    புரட்சி யுகம் பிறந்து, 
    ஒரே தருணத்தில்
    ஐந்தறிவு வானரம்  உயர்ந்து
    ஆறறிவு மானிடர் 
    உன்னத  மூளையும் மேனியும் 
    பெற்றுத்  தடம் வைத்தார் !
    வையத்தை மேன்மையுறச் செய்வார் !
    கடவுளின் வாரிசாய்ப்  
    படைக்கும் மனிதருக்கு நிகராய்ப்  
    பிறக்க வில்லை எவரும்  !

    +++++++++++++++++

    Earth's Axial Tilt

    பூகோளச் சுற்றுப்பாதை & சுழலச்சு சாய்வுக் காலநிலை மாற்றங்கள்  

    பூமியின் சுற்றுப்பாதை முழுவட்டம் போல் தோன்றினாலும், மெய்யாக அது சிறிது நீண்ட நீள்வட்டப் பாதை [Elliptical Orbit] ஆகும்.  மிகச்சிறு திரிபு : [Low Eccentricity] 0.0034 & மிகப்பெரும் திரிபு : [High Eccentricity] 0.058. பூமியின் சுற்றுப் பாதை நீட்சி / தாழ்ச்சி ஒருமுறை முழுவதும் நிகழந்து மீளச் சுமார் 100,000 ஆண்டுகள் ஆகும்.  அதாவது சூரியனைச் சுற்றிவரும் பூமி அதை நெருங்கியும், அப்பால் சென்றும் மாறி மாறிச் சூரிய வெப்பக் கதிர்வீச்சுப் பொழிவுகள் பூமிமேல் கூடியும், குன்றியும் தாக்கும்.  தற்போதைய திரிபு [2017] : 0.0167.  அதாவது வட்டப்பாதை மையத்தை விடப் பூமி இப்போது சூரியனுக்கு அருகே உள்ளது.

    பூமியின் பருவக் காலநிலை மாறுதலுக்குக் காரணம் அதன் சுழலச்சுக் கோணத் திரிபு [Earth’s Axis Tilt] என்று நாம் அறிவோம்.  பூமியின் வடகோளப் பகுதியில் வேனிற்காலமும், தென்கோளப் பகுதியில் குளிர்காலமும் இருந்தால், வடதுருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்துள்ளது என்பது தெளிவாகிறது.  ஆனால் பூமியின் சுழலச்சுக் கோணம், 41,000 ஆண்டுக்கு ஒருமுறை மாறுகிறது என்று பலருக்குத் தெரியாது.  சுழலச்சுக் கோணம் 22.1 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை மாறி வருகிறது.  தற்போதைய சாய்வு : [2017] 23.5 டிகிரி.

    எல்லாவற்றிலும் சிக்கலான சுற்றுப்பாதை மாறுபாடு, பம்பரம் போன்று ஆடும் அதன் தலையாட்டமே  [Precession].   அதுவே பருவக் காலநிலை உக்கிரத்துக்கும், தணிவுக்கும் காரணம்.  பூமியின் தலையாட்டம் [21,000 – 26,000] ஆண்டுக்கு ஒருமுறை உச்ச- நீச்சத் தவிப்பு நிலை அடைகிறது. அதாவது பூமியின் சுற்றுப்பாதை, சுழலச்சுத் திரிபு, தலையாட்டம் ஆகிய இம்மூன்றும் சூரிய ஒளிக்கதிர்ப் பொழிவைக் கூட்டியோ, குறைத்தோ பூகோளச் சூடேற்றத்தை நீட்டியோ, சுருக்கியோ சீர்கேடாக்குகிறது.

    பூமியின் சுற்றுப்பாதை மாற்றம், காலநிலை வேறுபாடு, மானிட மூளை உன்னதம் பெற வசதி செய்கிறது.

    அந்தறிவுள்ள ஸிம்பான்சி படிப்படியாக உயர்நிலை அடைந்து, மனிதன் படிப்படியாக உருவானான் என்று டார்வின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு கூறுகிறது. அதாவது மனிதனின் ஆறறிவு மூளை, உடற் பாகங்கள், அங்கங்கள் தனித்தனியாய்ப் படிப்படியாய் வளர்ச்சியுற்றன என்பது டார்வின் கோட்பாடு.  அப்படியானால் கால் மனிதன், அரை மனிதன் எங்காவது இருந்தானா என்னும் விடை இல்லாத ஒரு பெரும் வினா எழுந்து கொண்டிருக்கும்.  உண்மையில் ஸிம்பான்சிக்குப் பிறகு மானிடர் ஒரே சமயத்தில் மூளையும், உடலும் உன்னதம் பெற்று, முழுமையாகத் தோன்றினர் என்பதே மெய்ப்பாடு. அதற்கு இயற்கையே வசதி அளித்தது என்கிறது 2017 மே மாதம் 29 ஆம் தேதி வந்த செய்தி.  சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப் பாதை நகர்ச்சியால் கொந்தளிப்பு, சுழலச்சுக்த் கோணத் திரிபால் ஏற்படும் காலநிலைப் பருவ மாறுபாடுகள், இரண்டு மில்லியன் ஆண்டுகட்கு முன்பு,  கிரேட் ரிஃப்ட் வால்லி, கிழக்கு ஆஃபிரிக்காவில் [Great Rift Valley in East Africa]  பல மகத்தான உயிரின மலர்ச்சியை உண்டாக்கின  என்பது தெரிய வருகிறது. ஸிம்ப்பான்சி மனிதக் குரங்குகள் வானரத்திலிருந்து உன்னத மூளை பெற்று உயர்நிலை அடைந்து முடிவில் பேசும் மானிடாராக, ஈட்டி முதல் ராக்கெட் போன்ற நூதனச் சாதனங்கள், மின்னியல் கருவிகள் பற்பல பயன்படுத்தும் ஞானியாக உதயமானார்.  சமீபத்திய விஞ்ஞானச் சான்றுகள், இத்தகைய புதிய பரிணாம மலர்ச்சிக்குக் காரணமாக, கிழக்கு ஆஃபிரிக்காவின் கிரேட் ரிஃப் வால்லியில் நிகழ்ந்த காலநிலை மாறுதலைக் காட்டுகிறார்கள்.

     ++++++++++++

    https://youtu.be/fHS042a-Nb0

    https://youtu.be/-lLgA9C1G4c

    https://youtu.be/WLRA87TKXLM

    https://youtu.be/hvjTicipAwo

    https://youtu.be/xQSHxY5ZR6w

    https://youtu.be/dfiT3Zh5q3c

    https://youtu.be/ZD8THEz18gc

    https://youtu.be/OqsRD4HPtH0

    https://youtu.be/xVQnPytgwQ0

    https://youtu.be/B4Q271UaNPo

    https://youtu.be/3Uua_OEW2QY

    ++++++++

    கடந்த 282,000 ஆண்டு கணிப்புத் தகவல் இலக்கங்களை [Data] ஆராய்ந்ததில், முதன் முறையாக பூகோள அச்சின் சாய்வுக்கும், பூமியின் பேரளவு நீர்மை, உஷ்ணப் பாதிப்புக்கும் பூமத்திய ரேகை உட்புறத் தளங்களில் [Inter-tropical Convergence Zone -ITCZ] ஓர் தொடர்பு உள்ளதைக் கண்டுபிடித்தோம்.  தகவல் இலக்கங்களை நாங்கள் கணித முப்பட்டை [Mathematical Prism] வழியாக அணித்துவத்தைப் [Pattern] பார்த்ததில் 41,000 ஆண்டு சுழற்சியில் மாறும் பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்குத் தொடர்பு உள்ளதை அறிந்தோம்.

    கிரிஸ்டீன் திலாங், பூதளக் காலநிலை விஞ்ஞானி [University of Science & Technology of China & National Taiwan University Research Collaborators]

    What we can do

    பூகோளம் மின்வலை யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது !
    ஓகோ வென்றிருந்த உலக மின்று
    உருமாறிப் போனது !
    பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆனது !
    மூச்சடைத்து விழி பிதுக்க
    சூட்டு யுக வெடிப் போர் மூளுது !
    தொத்து நோய் குணமாக்க
    தூயநீர் வளம், காற்று வளம் தேவை !
    காலநிலை மாறுத லுக்குக்
    காரணிகள் வேறு வேறு !
    கரங் கோத்து பூமி காக்க, அனைவரும்
    வருவீ ர் எனக் கூறு கூறு !
    ஓரிடத்தில் எரிமலை வெடித்து
    உலகெலாம் பரவும்
    கரும்புகை மூட்டம் !
    துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
    உருகி, உருகி
    உப்பு  நீர்க்கடல் மட்டம் உயரும் !
    உஷ்ணம் மெதுவாய் ஏறும் !
    தாளம் தடுமாறி
    வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
    கோடை காலம் நீடிக்கும்,
    குளிர் காலம் குறுகிப் போகும்,
    பனி மலைகள் வளராமல்
    குள்ள மாகும்
    நில வளம் செழிப்பிழக்கும் !
    நிலப் பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப் பகுதி நிலமாகிப் போகும் !
    உணவுப் பயிர்கள் சேத மாகும் !
    மனித நாகரீகம் நாசமாகி
    புனித வாழ்வு மோசமாகி
    வெறிபிடித் தாளும்
    வெப்ப யுகப் பிரளயம் !

    +++++++++++++++++++++++++

    பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்கும், பூமியின் நீர்மை / உஷ்ணப் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது.

    பூகோளச் சுற்று அச்சின் சாய்வு 41,000 ஆண்டுச் சுழற்சி மீட்சியில் மாறி வருகிறது.  உச்ச அளவுச் சாய்வு : 24.5 டிகிரி.  அதம அளவு : 21.5 டிகிரி. தற்போதைய அளவு : 23.5 டிகிரி.  பூமியின் சுற்றச்சு சாய்வுத் திரிபு 23,000 ஆண்டு சுழற்சியில் பூமியில் பனித்தட்டு உருவாக்கத்தைப் பாதிக்கிறது.  சுமார் 100,000 ஆண்டுக்கு ஒருமுறை சுற்று வீதி மாறும் அந்த நிகழ்ச்சி“சுற்றச்சுத் திரிபாட்டம்”  [Precession] என்று குறிப்பிடப் படுகிறது. அதனால் பூமத்தியப் பகுதிகளும் [Tropics] பரிதியைப் பூமி சுற்றும் சுற்று வீதியும் [Earth’s Orbit] பாதிப்படைகின்றன.  பூமியின் சுற்று வீதி மாறுதல் பூகோளத்தில் காலநிலைப் பாதிப்பை உண்டாக்கும். அந்த பூகோள சுழற்சி நிகழ்ச்சி “மிலன்கோவிச் சுழற்சி” [Milankovitch Cycle] என்று குறிப்பிடப் படுகிறது.

    சமீபத்தில் இந்த ஆய்வு முடிவை வெளியிட்ட குழுவினர் சைனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவியல் காலநிலை  விஞ்ஞானி  கிரிஸ்டீன் திலாங்க் [Kristine DeLong] தலைமையில் பணியாற்றியவர். அவர்கள் கடந்த 282,000 ஆண்டுகளாய்க் கிடைத்த தகவல் இலக்கத்தை வைத்து ஆய்வுகள் செய்து, முதன்முறையாக பூமியின் சுற்றச்சு சாய்வு திரிபுக்கும், பூமத்தியப் பகுதி நீர்மை, உஷ்ண மாறுதலுக்கும் தொடர்பு உள்ளதென அறிவித்தார்.  அந்த முடிவறிக்கை 2015 நவம்பர் 25 தேதி   “இயற்கை வெளியீட்டு” [Nature Communications] இதழில் வெளி வந்துள்ளது.       

    Seasonal variations

    பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை  விளைவிப்பதால்,  அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது.   அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது.   உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி,  அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.

    ஜான்  கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]

    Global ocean mean temperature

    2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million]  என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டுள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள்.   அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது.  அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன.   கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !

    ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder’s Institute of Arctic and Alpine Research]  

    அடிப்படை விதிப்படி ஆர்க்டிக் பனித் தளங்கள் உருகும் போது, ஆர்க்டிக் கடல் ஒரு பெரும் நீர்மை ஆவிப் போர்வை, முகிலை [Blanket of water vapour and clouds]  உண்டாக்கி, ஆர்க்டிக் துருவப் பகுதியைச் சூடாக வைத்துக் கொண்டு வருகிறது.

    ஜேம்ஸ் ஒயிட்.

    World sharing of gas emiissions

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Arctic Ice Retreat

    Antarctica

    “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது.  சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”

    ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]

    “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும்.  கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”

    கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

    Pollution groups

    “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”

    ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]

    “மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”

    டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

    Global Warming Effects

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

    Impacts of Global Warming

    What Global Warming does

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்

    Global warming family tree

    பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?

    பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.  அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் !  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.

     

    Deaths due to Natural DisastersFig 3 Gore's Presentation

    அல் கோர்

    சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

    Earth's Orbit change

    சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !

    பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தன மாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !

    1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.

    2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.

    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    Fig 2 Milankovitch Cycles

    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.

    1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.

    2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.

    3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.

    Earth'a Axis wobbles

    Earth’s Axis Wobbles

    4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.

    5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.

    6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

    சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !

    Impacts

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it”   By Al Core (2006)

    2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
    7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

    8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

    9. http://www.terradaily.com/reports/Ice_free_Arctic_winters_could_explain_amplified_warming_during_Pliocene_999.html  [July 31, 2013]

    10.  http://www.livescience.com/topics/global-warming/  [August 6, 2013]

    11. http://www.nrdc.org/globalwarming/  [August 14, 2013]

    12.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [August 15, 2013]

    13.  http://www.answers.com/topic/global-warming

    14.   http://en.wikipedia.org/wiki/Effects_of_global_warming   [August 9, 2013]

    15. http://www.terradaily.com/reports/Seasonal_CO2_range_expanding_as_more_is_added_to_Earths_atmosphere_999.html  [August 14, 2013]

    16. http://www.terradaily.com/reports/Greenland_ice_is_melting_also_from_below_999.html  [August 14, 2013]

    17. http://www.planetseed.com/relatedarticle/sun-and-earth-and-temperature-change

    18. https://en.wikipedia.org/wiki/Solar_activity_and_climate  [October 1, 2015]

    19. http://www.bgs.ac.uk/discoveringGeology/climateChange/general/causes.html?src=topNav

    20. http://www.spacedaily.com/reports/New_research_shows_Earths_tilt_influences_climate_change_999.html  [December 16, 2015]

    21.  https://www.mnn.com/earth-matters/climate-weather/stories/everything-you-need-to-know-about-earths-orbit-and-climate-cha  [May 25, 2012]

    22. http://aa.usno.navy.mil/faq/docs/seasons_orbit.php  [June 3, 2014]

    23. https://en.wikipedia.org/wiki/Axial_tilt  [May 10, 2017]

    24.  https://en.wikipedia.org/wiki/Earth%27s_rotation  [June 3, 2017]

    25. http://aa.usno.navy.mil/faq/docs/seasons_orbit.php  [May 30, 2017]

    26.  http://www.astrobio.net/also-in-news/rna-formed-origins-life/  [May 24, 2017]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (June 3, 2017)  [R-1]

    https://jayabarathan.wordpress.com/

    …

    Preview YouTube video Earth HAS shiften on it’s Axis – PROOF!!! (Edited)

    Earth HAS shiften on it’s Axis – PROOF!!! (Edited)

    Preview YouTube video Global Warming and Global Seismic Activity

    Global Warming and Global Seismic Activity

    Preview YouTube video Mechanism of The Seasons

    Mechanism of The Seasons

    Preview YouTube video Effect of Earth’s Tilt on Weather

    Effect of Earth’s Tilt on Weather

    Preview YouTube video 5 – 4 Milankovitch Cycle

    5 – 4 Milankovitch Cycle

    Preview YouTube video FIDO BOXING WEEK Preroll 15s ENG

    FIDO BOXING WEEK Preroll 15s ENG

    Preview YouTube video Milankovitch cycles precession and obliquity | Cosmology & Astronomy | Khan Academy

    Milankovitch cycles precession and obliquity | Cosmology & Astronomy | Khan Academy

    Preview YouTube video Global Warming or a New Ice Age: Documentary Film

    Global Warming or a New Ice Age: Documentary Film

    Preview YouTube video PBS Global Warming The Signs and the Science

    PBS Global Warming The Signs and the Science

    Preview YouTube video The Scientific Case for Urgent Action to Limit Climate Change

    The Scientific Case for Urgent Action to Limit Climate Change

    Preview YouTube video Climate Change Politics and the Economy: Rhetoric v. Reality

    Climate Change Politics and the Economy: Rhetoric v. Reality
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
    சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோய் -மோர்குடத்தை
    கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்
    குள்ளான கண்ணனே காப்பு….!

    ‘’கண்ணன் தலைமுடியால் பசு பார்க்க அசுவமானது….அடியேன் பார்வைக் கோளாறால் மனதில் தோன்றிய வெண்பாவை எழுதுகிறேன் கேசவ்…. தவறானால் மன்னிக்கவும்…. கண் கெட்ட பின்பு கண்ணனைக் கும்பிடுகிறேன்’’….!

    ‘’நதித்தலையர்(சொக்கநாதர்) நரியைக் குதிரையாய் விற்றார்,(திருவிளையாடல் புராணம்),

    நதிதீரர் (யமுனைத் தலைவர்) கன்றை குதிரை -ரதமேறப்-
    போவது முன்பே புரிந்ததால் , பூமங்கை – (பூபாரம்)
    நோவதால் பாரத நோன்பு’’…. கிரேசி மோகன்….!

    Share
  • Tamizh Archakar Course – மாணவர் சேர்க்கை அறிவிப்பு

    செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும்,

    தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு
    (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR)

    விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    7-ஆம் ஆண்டு (2017-2018) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 2017-ல் வகுப்புகள் தொடக்கம்

    aaa
    பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்
    தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி. ஆண், பெண் இருபாலாரும் சேரலாம். வயது வரம்பில்லை.
    விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15-06-2017
    பட்டயப் படிப்பு இருபருவங்கட்கும் சேர்த்து கட்டணம் ரூ.3500/- மட்டுமே
    விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form

    ஏற்கெனவே 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டயம் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும், கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள். கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு! இப்பயிற்சியைப் பயன்கொள்ள விரையுங்கள்!

    திருச்சி பகுதி மாணவர்களுக்கென இந்த ஆண்டு எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் SKYPE மூலம் வகுப்புகள் தொடங்கப் படுகின்றன. திருச்சி மையத்தில் மாணவர்கள் படிக்க முன் வந்தால் மேற்படி விண்ணப்பத்தில்”T.A DIPLOMA / TRICHY“ என்று குறிப்பிடவும்.

    தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
    9/1, மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர்,
    ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600032.
    தொலைபேசி: 9444079926 / 9500045865 (மா.கருப்புசாமி) / 9445103775 (பா.கந்தசாமி)
    www.dheivamurasu.org

    Copyright © 2017 Dheivamurasu, All rights reserved.
    தமிழ் ஆர்வலர்கள்

    Our mailing address is:
    Dheivamurasu
    Ekkaduthangal
    Chennai 600032
    India

    Add us to your address book

    Want to change how you receive these emails?
    You can update your preferences or unsubscribe from this list

    Email Marketing Powered by MailChimp

    Share
  • அழவிட்டுப் போனதெங்கே !

     

     

     எம்.ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    aj

    அப்துல் ரகுமானே அழகுதமிழ் பாவலரே
    செப்பமுடன் கவிதைதந்த சிந்தனையின் கோமானே
    முப்பொழுதும் தமிழ்பற்றி மூச்சாக நின்றவரே
    எப்பொழுது உன்தமிழை இனிக்கேட்போம் இவ்வுலகில் !

    தமிழ்க்கவிதைப் பரப்பினிலே தனியாக ஆட்சிசெய்தாய்
    உரத்தகுரல் கொண்டுநீ உயர்கருத்தை ஈந்தளித்தாய்
    கவிதை அரங்குகளை களியாட்டம் ஆக்காமல்
    புதுமை தனைப்புகுத்தி புத்தூக்கம் கொடுத்துநின்றாய்
    அப்துல் ரகுமானை அனைவருமே பார்க்கவைத்தாய்
    அருமருந்தாய் கவிதைகளை அனைவருக்கும் கொடுத்துநின்றாய்
    இப்போது உன்கவிதை கேட்பதற்குத் துடிக்கின்றோம்
    எங்குசென்றாய் ரகுமானே என்றுதேடி அழுகின்றோம் !
    பேராசிரியார் பெரும் பதவி வகித்தாலும்
    ஆராத காதலுடன் அருந்தமிழை அணைத்தாயே
    ஊராரின் மனமெல்லாம் உட்கார்ந்த ரகுமானே
    உன்பிரிவால் அழுகின்றோம் ஒருகவிதை சொல்லுவாயா !

    ஆராய்ச்சி யாளனே அருந்தமிழ் வல்லோனோ
    ஆசிரியாய் இருந்து அருநூல்கள் தந்தவனே
    ஆட்சியாளர் அருகிருந்து அருங்கருந்து உரைத்தவனே
    அப்துல் ரகுமானே அழவிட்டுப் போனதெங்கே !

     

    Share
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானம் (ஜிடிபி) 6.1 சதவிகிதமாக சரிந்துவிட்டதாக நேற்றைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் அவரவர் நிலைக்கேற்ப இதைப்பற்றி விமர்சனம் செய்கின்றனர். உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பிறகு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை விட்டுவிட்டு யதார்த்தமாக வியாபார உலகத்தையும் பொது மக்களின் பொருளாதார நிலையையும் பார்க்கும்போது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. செழுமையான வணிகம் இல்லை. மக்களிடம் தாராளப் பணப்புழக்கமும் இல்லை. இந்த நிலையில் ஜிஎஸ்டி ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது இப்பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பற்றிய தெளிவான விளக்கங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது குறித்த முழுமையான விவரங்களும் இதுவரை வெளியிடவில்லை. சாதாரணமாக சாப்பிடும் உணவகங்களுக்கு வரியை அதிகரித்தும், நட்சத்திர உணவு விடுதிகளுக்கான வரிவிதிப்பு குறைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நடத்திய போராட்டத்தில் அனைத்து உணவு விடுதிகளும் மூடப்பட்டிருந்தது. பொருளாதாரப் பிரச்சனைகள் இருக்கும் சமயத்தில் இதற்கான தீர்வை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்த பின்பே சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமலாக்கப்படுவது சரியாக இருக்கும். ஜிஎஸ்டி என்பதை மத்திய , மாநில அரசுகள் தங்கள் அரசு சார்ந்த நலத்திட்டங்களாகக் கருதாமல், வணிகர்கள், பொது மக்கள் நலம் சார்ந்ததாக கருதும் வகையில் சிறப்பாக அமல் படுத்தினால் இத்திட்டம் முழுமையாக வெற்றி பெறலாம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”நிறத்துக்கு நீலம், நினைப்புக்கு லீலை,
    கருத்துக்கு கொள்மனமே கீதை,! -சிரத்துக்குள்
    சீர்மல்கும் சீதரனை, சிந்திக்க ஜீவன்கண்,
    ணீர்மல்க ஆன்மாவா கும்’’….கிரேசி மோகன்….!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 90

    அக்வின்க்கும் பண்டைய ரோமானிய நகரம், அதன் அருங்காட்சியகம் – பூடாபெஷ்ட், ஹங்கேரி

    முனைவர் சுபாஷிணி

    பண்டைய ரோமானிய பேரரசு தெற்கே மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஐரோப்பா முழுமைக்கும், இங்கிலாந்து, அயர்லாந்து என விரிந்த மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்தது. தன் ஆட்சி காலத்தில் ரோமானியப் பேரரசு தனது எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகளில் நகரங்களை நிர்மானித்தது. பண்டைய ரோமானிய நகரங்களின் எச்சங்களை ஐரோப்பாவின் நாடுகளில் இன்றும் ஆங்காங்கே காணலாம். அத்தகைய சிதலமடைந்த ஒரு பண்டைய நகரமே ஹங்கேரியின் தலைநகரமான பூடாபெஷ்ட் நகரிலிருக்கும் அக்வின்க்கும் (Aquincum).

    as

    அக்வின்க்கும் ரோமானியப் பேரரசின் போர்த்தளவாடங்கள் நிறைந்திருந்த ஒரு பகுதி. இங்கே வீரர்களின் குடியிருப்புப்பகுதியோடு மக்களின் வாழ்விடங்களும் இணைந்த வகையில் இந்த நகரில் அமைக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டே செல்லும் போது எல்லைப்பகுதி நகரங்களாக அமைந்த நகரங்களில் ஒன்று என்றும் அக்வின்க்கும் நகரைக் குறிப்பிடலாம். ரோமானியப் படை வருவதற்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் கெல்ட்டிக் இனக்குழுவின் ஏராவாசி (Eravisci) சமூக மக்கள். கி.பி.41 வாக்கில் இங்கு 6000 பேர் கொண்ட ரோமானியப் படைகள் இங்கு வந்து, நகரை அமைத்து, கி.பி.89 முதல் இங்கு ரோமானியப் படைவீரர்களின் குடும்பங்கள் தங்கும் நகரமாக இது உருவெடுத்தது. சிறு நகரமாக இருந்த இந்த ஊர் பனோனியா வெற்றிக்குப் பிறகு பனோனியா நிலப்பகுதியின் தலைநகராமக உருவெடுத்தது. இது நிகழ்ந்தது கி.பி 106ம் ஆண்டில். அச்சமயத்தில் இந்த நகரில் 30,000லிருந்து 40,000 மக்கள் வாழ்ந்ததாக குறிப்புக்கள் சொல்கின்றன.

    அக்வின்க்கும் அருங்காட்சியகம் 1894ம் ஆண்டில் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. இதனை முதன் முதலில் 1778ம் ஆண்டில் பூடாபெஷ்ட் நகரில் திராட்சை தோட்டம் போடுவதற்காக நிலத்தை சீர்செய்யத் தொடங்கிய ஒரு விவசாயிதான், இப்பகுதியில் நிலத்துக்குக்கீழே தோண்டும் போது, ஒரு கட்டுமானப் பகுதி இருப்பதைக் கண்டுபிடித்து அரசுக்கு அறிவித்தார். பின்னர் இந்த நகரத்தின் ஏனைய பகுதிகள் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும் இவை எதைச் சார்ந்தவை என அறியப்படாமலேயே இருந்தது. 1820ல் தான் இப்பகுதியில் முறையான தொல்லியல் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது. 1860 வாக்கில் ரோமானிய குளிக்கும் குளங்கள், நீர்த்தொட்டிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. 1876ல் அப்போதைய இளவரசர் இந்த அகழ்வாய்வுப் பகுதிக்கு வந்து இதனை பார்வையிட்டுச் சென்றிருக்கின்றார். 1881ல் இங்குள்ள அம்பிதியேட்டர் பகுதி முழுமையாக அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்டது. 1889ல் அக்வின்க்கும் அகழ்வாய்வு அறிக்கை முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டு உலகுக்கு இந்த நகர் பற்றிய செய்தி விரிவாக அறிமுகமானது. 1936ம் ஆண்டு ஒரு அருங்காட்சியகமும் இணைக்கப்பட்டு இங்கு கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

    as1

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த பின்னர் வலது புறத்தில் காணப்படுவது ஒரு ஓவியனின் வீடு. இன்று காணப்படும் வடிவிலேயே கி.பி.2லும் பின்னர் மேலும் கி.பி.3லும் கட்டப்பட்ட வீடு இது. வீட்டின் வெளிப்புறம் தற்சமயம் புதுப்பிக்கப்பட்டு அக்காலத்தில் வீடு எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் காட்டப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே இது கட்டப்பட்ட, அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தரைப்பகுதி, அறைகள், தரையில் அமைக்கப்பட்டுள்ள மொசைக் கல்வடிவம் ஆகியன இன்றும் அதன் நிலை கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஓவியனின் வீட்டில் வாசலில் நிலைப்பகுதி, உட்காரும் திண்ணை, உள்ளே நுழைந்ததும் வரவேற்பரை, வெவ்வேறு அறைகள், சமயலறை, உணவருந்தும் அறை, வெளிப்பகுதி என பிரித்து பிரித்துக் கட்டியிருக்கின்றார்கள். இன்று எப்படி ஒரு வீடு அமைந்திருக்கின்றதோ அதே வடிவில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாத வீட்டின் கட்டுமானத்தை இந்த கி.பி.2ம் நூற்றாண்டு ஓவியனின் வீடு காட்டுகின்றது.

    ரோமானிய வரலாற்றை பின் நோக்கிப் பார்க்கும் போது இந்த நாகரிகம் ஏராளமான தெய்வ வடிவங்களையும் புராணங்களையும் தன்னுள்ளே கொண்டிருப்பதை விலக்கிப் பார்க்க முடியாது. வீனஸ், மார்ஸ், நெப்டியூன், டயானா, அப்போலொ, வோல்கானூஸ் என பல தெய்வங்கள் பண்டைய ரோமானிய பண்பாட்டை அலங்கரித்தன. அரக்கர்களும், தேவர்களும், தேவதைகளும் குட்டி பூதங்களும் கொடிய விலங்குகளும் நிறைந்தவையே ரோமானியப் புராணக் கதைகள். கற்பனைக்கு எல்லையே ஏற்படுத்திக் கொள்ளாத ஏராளமான புராணக் கதைகள் மக்களின் வழிபாட்டிலும் அங்கம் வகித்தன எனக் குறிப்பிடும் அதே வேளையில் மன்னனையும் ஒரு கடவுளாக ஏற்றி வைத்துப் புகழ்பாடி வழிபடும் வழக்கமும் ரோமானிய பண்பாட்டில் இருந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ரோமானிய பண்டைய புராணக்கதைகளை நினைவு படுத்தும் வகையில் ஒரு விளையாட்டு மைதானமும், புராணக்கதைமாந்தர்களின் நினைவினை ஏற்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியக வளாகத்திற்கு வரும் குழந்தைகள் மட்டுமன்றி பெரியோரும் இந்த விளையாட்டு மைதானத்தில் சற்று ஓய்வெடுக்கலாம்.

    as2

    இந்த ரோமானிய குடியிருப்புப் பகுதியில் ஒரு பகுதியில் கசாப்புக் கடைக்காரரின் வீட்டின் அடித்தளம் அமைந்திருக்கின்றது. அதன் மறுபுறத்தில் மளிகைக்கடைக்காரரின் இல்லப்பகுதி இருக்கின்றது. ஒரு வீடு போன்ற வடிவமைப்பின் அடித்தளம் தான் இங்கு நாம் காண்பது. இந்த அடித்தளத்தைக் காணும் போது இந்த கடையின் முன்வாசல் பகுதி தெற்குப்புறமாகவும், மேற்குப் பகுதியில் சிறு கூடம் ஒன்று இருப்பது போலவும் அமைக்கப்பட்டதைக் காணமுடிகின்றது. வருகையாளர்களும் வாடிக்கையாளர்களும் சாலையிலிருந்து வரும் போது தெற்குப்புற வாசலின் வழியாக வந்து உள்ளே உள்ள பெரிய பகுதியில் தான் பொருட்களை வாங்கிச் சென்றிருக்க வேண்டும். கடையும் வீடும் ஒரே கட்டிடத்திற்குள் இருப்பது போல அமைந்திருக்கின்றார்கள். இம்மாதிரியான தொழில் செய்யும் இடமும் இல்லமும் ஒரே இடத்தில் இருப்பது பண்டைய நாகரிகங்களில் பொதுவாகக் காணப்படக் கூடிய ஒரு அம்சம் தான். ஆக, முன்புறம் உள்ள கடைப்பகுதியை அடுத்து தொடர்ந்தார்போல வருவது இல்லப்பகுதி. இங்கே சிறிய சிறிய அறைகள், சமயலறை போன்றவற்றைக் காணலாம். உடைந்தும் மிஞ்சி இருக்கும் சுவர்களில் இன்னமும் கூட ஆங்காங்கே சுவர் ஓவியங்களின் சில பகுதிகள் காணக்கிடைக்கின்றன.

    as3

    ரோமானிய பண்டைய நகரங்களில் நாம் காணக்கூடிய ஒரு பொது அம்சமாகத் திகழ்வது அம்பிதியேட்டர். கிரேக்கர்களைப் போலவே ரோமானிய பண்பாட்டிலும் கலையும் இசையும் பிரிக்கப்பட முடியாத அம்சங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. இதனைப் பிரதிபலிக்கும் சான்றுதான் அம்பிதியேட்டர் என்பது. அம்பிதியேட்டர் என்பது திறந்த வெளி மைதானத்தில் அடுக்கடுக்காக மேலே எழும்பும் வகையில் பார்வையாளர்கள் அமர செய்விக்கப்பட்ட அடுக்குகள் கொண்ட அறைவட்ட வடிவிலான மேடை. இந்த அறைவட்ட வடிவு இருக்கும் பகுதியில் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்னால் மேடையில் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோ, நாடகமோ, நடனமோ, மல்யுத்தமோ ஏதாகினும் ஒன்று நடைபெறும் . இன்று நாம் பார்க்கும் காற்பந்து வளாகங்களின் முன்னோடிதான் அம்பிதியேட்டர் என்பது. அக்வின்க்கும் நகரிலும் ஒரு அம்பிதியேட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அது இன்றும் நன்றாகப் பயன்படுத்தகூடிய வகையில் வெள்ளை நிறப்பளிங்கினால் வடிக்கப்பட்ட தளங்களுடன் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. ஆகா.. என்ன கலைப்பாடு.. என பார்ப்போரை வியக்க வைக்கின்றது இதன் அமைப்பு.

    as4

    பண்டைய ரோமானிய நகரங்களின் மற்றுமொரு சிறப்பு அம்சம் பொதுக்குளியல் இடங்கள் எனலாம். சற்றே பெரிய நகரங்களில் மிகப்பெரிய குளங்களைக் காணமுடியும். அக்வின்க்கும் நகரிலும் இரண்டு குளியல் குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நீர் இல்லாத நிலையில் இக்குளங்கள் இருந்தாலும், எவ்வாறு நீர் உள்ளே விடப்பட்டும் என்றும், எவ்வாறு நீர் வெளியே செல்லும், என்பதையும் நன்கு காணமுடிகின்றது. குளிர் நீருக்கு ஒரு குளமும் வெந்நீருக்கு ஒரு குளமும் என இரண்டு குளங்கள் இங்குள்ளன.

    இவை மட்டுமன்றி இந்த பண்டைய ரோமானிய நகரில் வீரவிளையாட்டுக்கான மைதானம், இசைப்பள்ளி, பயிற்சிக்கூடங்கள் பூங்காக்கள் போன்றவையும் இருக்கின்றன. இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையான ஒரு நகரை நேரில் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பினை அக்வின்க்கும் அருங்காட்சியகமும் இந்த நகரின் வளாகமும் நமக்கு அளிக்கின்றன.

    Share
  • சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (4)

    பவள சங்கரி

    சிறுவர் இலக்கியம்

    பழைமை நினைவுகளுக்குள் ஊடுறுவிப் பார்ப்போம்!

    அவரவர் வாழ்க்கையில் இளமைக்காலங்களில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அவற்றை நினைவுப்பெட்டகத்திலிருந்து வெளிக்கொணர்ந்து அழகிய கதை வடிக்க இயலும். எனக்கும் ஒரு இளமைக்காலச் சம்பவம் எண்ணப்பெட்டகத்தில் வீற்றிருந்து பக்குவமாய் வெளிவந்த தருணமும் உண்டு. என் பள்ளிக்கால டிசம்பர் மாத மாலை நேர சிறப்பு வகுப்பு ஒன்றில் சக மாணவி, பென்சில் மொக்கின் முனை கூராக இருக்கவேண்டும் என்பதற்காக சீவிக்கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க சட்டென்று திரும்பியவளின் வலது கண்ணில் பென்சில் முனை நறுக்கென்று குத்தி செருகிக்கொள்ள வீச்சென்ற அலறலுடன் மயங்கி சரிந்ததை நேரில் கண்ட காட்சியை இன்று நினைத்தாலும் குலை நடுங்குகிறது. கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடாதவர்கள் இருக்க முடியாது. கொஞ்ச நேரம் கண்கள் கட்டப்பட்டிருந்தாலே நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம். இந்த உலகமே இருண்டதுபோல் எல்லாம் கருமையாக… அப்பப்பா.. இப்படியே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்றால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை இல்லையா? இப்படித்தான் நம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 இலட்சம் பேர் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் எழுந்த கதைதான் கண் தானம், மாற்று கண் சிகிச்சை, கண்ணப்ப நாயனார் வரலாறு என்று, ‘தானத்திலே சிறந்தது கண் தானம்’ என்ற நல்ல விழிப்புணர்வு கதையாக வடிவம் பெற்றது. இதுபோன்ற விழிப்புணர்வு கதைகள் குழந்தைகளை ஈர்க்குமா என்ற கேள்வி எழலாம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட சூழல்களையும், உணர்வுப்பூர்வமான வசனங்களும், எளிமையான தொழில்நுட்பச் செய்திகளையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்கும்போது அவர்களுக்கு தாங்கள் புதுமையாக எதையும் கற்றுக்கொண்ட மனநிறைவும், தாங்களும் அது போன்று நன்மை செய்யும் நாயகனாக வேண்டும் என்ற உந்துசக்தியும் ஏற்படக்கூடும்.

    இப்படி ஒவ்வொருவருக்கும் அவரவர் குழந்தைப்பருவ நினைவுகூரல்கள் – நகைச்சுவையோ, சோகமோ, வீரதீர சாகசங்களோ, எதுவாயினும் அவை பலப்பல கதைகளுக்கு சாளரங்களாக சவாலாகி நின்றுவிடும்.

    மந்திர சக்தி மலரும் தருணம்:

    படைப்பாற்றலைப் பெருக்கும் மந்திர சக்தி மலர்வதற்குரிய உன்னதமான பொழுதுகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. மிகப்பெரிய எழுத்தாளர்கள், திரைப்பட கதாசிரியர்கள், இயக்குநர்கள் போன்ற பலரும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கும் சில குறிப்பிட்ட காலங்கள் உண்டு. ஆம் உறக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் ஒரு அரை மயக்க நிலையில் தங்கு தடையின்றி எண்ண அலைகள் கொப்பளித்துக்கொண்டு மேலெழும்பும். என்னைப்பொறுத்தவரை அப்படியொரு சுகமான படைப்புப்பொழுது என்றால் அது விடியாத இளங்காலைப்பொழுதான 3மணி முதல் 5 மணி வரையிலான அந்த இனிய பொழுதையே சொல்வேன். கதை, கட்டுரை, கவிதை என்ற படைப்புகள் மட்டுமன்றி, முக்கியமாக எடுக்கவேண்டிய சில முடிவுகளைக்கூட சரியாகக் கணிக்க வைக்கும் உன்னதமான பொழுது அது. பகல் பொழுதுகளில் கலைந்த மேகங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் சில கருத்துகள் ஒன்றிணைந்து பரந்த சூல்கொண்ட மேகங்களாக மழைபொழியத் தயாராகிவிடும். அதனைப் பொறுமையாக சேகரித்து செம்மையாக்கிக் கொள்வது அவரவர் திறமையைப் பொறுத்தது. மதியவேளை உண்ட களைப்பின் சிறுதூக்கம், இரவு நேர அரைத்தூக்கம் இப்படி எதுவாயினும் அவரவர் தனித்தன்மையின் அடிப்படையில் அமைவது அது. அவ்வேளையில் ஊற்றெடுக்கும் கற்பனைகளை நினைவில் இருத்தி, அதன் பயனை முழுமையாக கிரகித்து வெற்றிகரமான படைப்பாக வடிவமைப்பதில்தான் ஒரு எழுத்தாளரின் வல்லமை பொதிந்துள்ளது. நம் மனதை நெறிப்படுத்தும்விதமாக சில சிறிய முயற்சிகள் மேற்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். யோகக்கலை பயின்றவர்களுக்கு இது மிக எளிதாகக் கைகூடும். கற்பனை விதையை கனிவாக ஊன்றி வளமாக முளைவிடச் செய்யும் சாகசத்தை அது தானாகவே நிறைவேற்றிவிடும். இதுவே அந்த மந்திர சக்தி.

    படுக்கையறையில் தலைமாட்டின் அருகில் சிறிய குறிப்பேடு வைத்துக்கொள்வதை வழமையாக்கிக்கொள்வது நலம். விழிப்பு நிலை ஆரம்பித்தவுடன் கனவில் தோன்றிய கற்பனைகளை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தமில்லாத கிறுக்கல்களாகத் தோன்றினாலும் அதையும் முழுமையாக குறித்துக்கொள்வது நலம். அன்றைய பொழுது முழுவதும் அது நம்மையறியாமல் அசை போட்டுக்கொண்டிருக்கும். ஓரிரு நாட்களில் ஒரு நிலைக்கு வந்துவிடும் அந்த கற்பனை மலர்கள், அழகிய மாலையாக உருப்பெற்றுவிடும். ஆனால் இவையனைத்திற்கும் அடிப்படை மன அமைதி, குழப்பமற்ற தெளிவான சிந்தனை , தேவையான ஓய்வு போன்றவை. மதிய வேளை குட்டித்தூக்கம் கூட படைப்பாளர்களுக்கு தம் திறனை ஊக்குவிக்கக்கூடியது என்பதை வின்ஸ்டன் சர்ச்சில், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்களின் நம்பிக்கைகளும் உறுதி செய்கின்றன. கிடைக்கும் ஓய்வு நேரங்கள் அனைத்தையும், படைப்புகளை செப்பனிடும் அல்லது செம்மையாக்கும் உன்னத நேரங்களாகக் கொள்ளும் வழமை ஏற்படுத்திக்கொள்வது ஒரு எழுத்தாளருக்கு தேவையான ஒன்று. யோகக்கலை, தியானம் பயின்றவர்களுக்கு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்வது மிகவும் எளிது. தியானம் செய்யும் காலங்களில் பெரும்பாலும் ஏதோ ஒரு கற்பனை மின்னல் வெட்டும் சில நேரங்களில். அது அங்கேயே மொட்டாகி மலரவும் கூடும். சில நாட்களில் அது நல்ல படைப்பாக உருமாற்றமும் பெறும்.

    கனவும் கற்பனையும்:

    கனவு என்பது ஒவ்வொரு மனிதனும் கடந்துவரும் ஒரு மெய்யுணர்வு எனலாம். சிறு குழந்தைகள், வளர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள், முதியவர்கள் என அனைத்து பருவத்தினரும் கனவு காண்கிறார்கள். கருவறையில் இருக்கும் குழந்தைகூட கனவு காண்கின்றன என்கிறார்கள். மனிதர்கள்மட்டுமின்றி எலி, நாய், டால்பின், சிங்கம், சிறுத்தை, திமிங்கலம் போன்ற பல்வேறு மிருகங்களும் கனவு காண்கின்றனவாம்.

    கனவுகள், “மயக்க நிலையின் பட்டுப்பாதை” என்கிறார் சிக்மண்ட் ஃபிராய்ட். இதற்கு வெகு காலம் முன்பே உரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் கனவுகளுக்கு ஒரு விசித்திரமான ஆற்றல் உள்ளது என்பதை ஆணித்தரமாக நம்பினார்கள். வரலாறுகளில் இதுபோன்று கனவுகள் நிஜ வாழ்வில் முக்கிய பங்காற்றும் பல சம்பவங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கப்பெறாதபோதும், கனவுகள் நீண்டகால நினைவுகளை வெளிக்கொணர பெரிதும் உதவி வருவதை வாய்மொழிக் கதைகள், உண்மைச் சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது. என் அனுபவத்திலும் ஒரு சில சிறுகதைகளின் கரு மற்றும் குழப்பமேற்படுத்தும் முடிவுகளுக்கான தீர்வுகளும் கனவுகளின் மூலம் பெற்றிருக்கிறேன் என்பதை மறுக்கவியலாது. பகல் முழுவதும் உள்ளத்தோடு உறவாடும் சில நிகழ்வுகள் இரவின் மடியில் கனவின் வடிவில் ஏதோ ஒரு உருவம் பெற்று காவியமாகக்கூட உருவாகிவிடுவதுண்டு! படைப்புலக வாழ்க்கைக்கு இதுபோன்ற சில உள்ளுணர்வுகளின் பாதிப்புகள் பலனுள்ள வகையிலேயே அமைந்து விடுகின்றன. ஓரிரு நொடிகளில் காற்றில் கரைந்துவிடும் பல கனவுகளில் ஒரு சில மட்டுமே நினைவில் நின்று பயனளிக்கவல்லது. எது எப்படியாகினும் கனவு கண்டு விழித்த நொடியில் அதுபற்றி குறிப்பெடுக்காவிட்டால் அவை நிரந்தரமாக மறைந்து விடுவதுண்டு. ஆக தலைமாட்டில் அல்லது கையருகில் சிறு குறிப்பேடு வைத்திருப்பது நல்லது.

    பாலும் தண்ணீரும்:

    அன்னப்பறவை பாலையும், தண்ணீரையும் அழகாகப்பிரித்து பாலை மட்டும் அருந்திவிடும். ஒரு நல்ல எழுத்தாளரும்கூட அன்னப்பறவை போல இருக்கவேண்டியவர்கள். அன்றாடம் நம்மைச்சுற்றி ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிலிருந்து நல்லவைகளை மட்டும் பிரித்தெடுத்து அதனுடன் கற்பனையை சரிவிகிதத்தில் கலந்து அதனை சிறார்களுக்கான அழகிய கதையாகவோ, பாடலாகவோ, நாடகமாகவோ நெய்து, குழந்தைகளுக்கும் கற்பனை வளத்தை தூண்டும்விதமாக அளிக்கவேண்டியது எழுத்தாளரின் கடமை.

    எங்கள் வீடு இருப்பது தமிழ்நாட்டில், ஈரோடு நகரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள நகர்புறப்பகுதியில். கோடைக்கால விடுமுறை சமயத்தில் எங்கள் குழந்தைகளுடன், தங்கை, நாத்தனார் குழந்தைகள் என வீடே அமர்க்களமாக இருந்தது. இரவு நேரம் உணவு உண்டு முடித்துவிட்டு வெளியே சற்று ஆசுவாசம் கொள்வதற்காக வந்தோம். கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்பதால் புழுக்கம் வேறு. குழந்தைகள் அவ்வளவு எளிதாக குளிரூட்டப்பட்ட அறையினுள்கூட அடைய விரும்பவில்லை. மொட்டை மாடி, வாசல் என்று மாறி மாறி அலைந்துகொண்டிருந்தவர்களை அருகில் இருக்கும் எங்கள் குடியிருப்புக்கான பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். காவலாளி கதவை நீக்கிவிட்டு தனது அறையில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். நெடிதுயர்ந்த மரங்களும் எங்கோ ஓரிரு கிரீச்சொலிகளும் பௌர்ணமி நிலவும், பச்சைப் புல்வெளியும் அதனதன் இயல்பில் இனிமை காத்திருந்தன. குழந்தைகளின் தலையீடு அவைகளுக்கு எந்தவிதமான அசௌகரியங்களையும் ஏற்படுத்தவில்லை. பொமரேனியன் சிட்டுவும் குழந்தைகளுக்குச் சரியாக ஈடுகொடுத்து துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. இரவு மணி 10 ஆகியிருந்தது. சுவர் எல்லையில் இருந்த புங்க மரத்தை நோக்கி சிட்டு திடீரென குரைக்க ஆரம்பித்தது. மரத்தை அண்ணாந்து பார்த்தவாறு சுற்றிச் சுற்றி வந்தது. விசுக்கென்று பறந்து வெளியே வந்த அந்த மிகப்பெரிய பறவை ஒரு முறை வட்டமடித்துவிட்டு வலப்புறம் திரும்பி சிறகு விரித்தது.

    “அட, என்ன பறவையிது?” என்றேன் நான்.

    “கழுகாக இருக்குமோ” என்றான் 8ஆம் வகுப்பு படிக்கும் மகிழன்.

    “கழுகு இந்த நேரத்தில், அதுவும் இந்த இடத்தில் வருவதற்கு வாய்ப்பில்லையே” என்றேன்.

    “புறா, காகம், செம்போத்து” போன்ற எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வௌவால் கூட இவ்வளவு பெரிதாக இருக்காதே?”

    அனைவரின் கண்களும் மெல்லிய அந்த ஒளியில் மெதுவாக வட்டமடித்து சிறகசைத்த அந்த பறவையைத் தொடர்ந்தன. சற்று தொலைவு பறந்து சென்று மீண்டும் திரும்பி வந்த அது விளக்கு கம்பத்தின் உச்சியில் சென்று அமர்ந்தது. நானும் மெல்ல அருகில் சென்று பார்த்தேன். ஆனாலும் அது அசையவில்லை. சற்று நெருங்கியபோதும் அதனிடம் எந்த அசைவும் இல்லை. மகிழனைத் தொடர்ந்து குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து வரிசை கட்டி நின்று உச்சியில் அசையாது உட்கார்ந்திருக்கும் அந்த பெரிய பறவையை வெறித்தவாறு அமைதியாக இருந்தனர். பத்து நிமிடங்கள் அதுவும் அசையாது அப்படியே உட்கார்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. பின் தன் பெரிய சிறகை விரித்தவாறு விருட்டென்று பறந்துவிட்டது.

    அது இராட்சச ஆந்தை . அந்த நேரத்தில் இப்படியொரு நெருக்கமான குடியிருப்பு வளாகத்தில் இத்தனைப்பெரிய ஆந்தை வருவது அதிசயம்தான் என்று சொல்ல வேண்டியதில்லை.

    ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், மங்கலான வெளிச்சத்தில் கூட அவற்றின் பார்வை கூர்மையானது. ஊனுண்ணியான ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. மனிதர்கள் வாழும் இடங்களில் இவற்றைக் காண்பது அரிது. படங்களிலும், சரணாலயங்களிலும் மட்டுமே பார்த்திருந்த ஆந்தையை முதன் முதலில் நேரடியாகக் கண்டது அப்போதுதான்.

    இதுபோன்று அதிசய நிகழ்வுகள் மனதில் உறுதியான இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. பல நேரங்களில் நம் வாழ்க்கையில் அரிதாக கிடைக்கின்ற பல அதிசயக் காட்சிகளை நாம் சரியாக பயன்படுத்த தவறிவிடுகிறோம். ஆனாலும் அடி மனதில் தங்கிவிடும் இது போன்ற அதிசய நிகழ்வுகள் என்றேனும் ஓர் நாள் படைப்பிலக்கியத்தில் பாதம் பதிக்கத்தான் செய்கின்றன.

    ஒரு நல்ல படைப்பாளிக்கு இந்த நிகழ்வு கற்பனையின் சிகரமேறி பல கதைகளை உருவாக்க வழியமைக்கலாம். சிறகு முறிந்து பறக்க முடியாமல் தவிக்கும் பறவையை பத்திரமாக பாதுகாத்து, மருந்து போட்டு காயம் ஆற்றி, இறுதியில் அதை அதன் குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் சிறுவர்கள், மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் வழமையில்லாத இப்பறவையின் துன்பம் போக்கி அதனுடன் உறவாடி, உணவூட்டிய சிறார்களின் உற்ற தோழனாகி அவர்களை ஒரு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி தன் நன்றிக்கடனைச் செலுத்துவதாகவும், உடல் பூரண குணமடைந்த பின்பும் தன் குடும்பத்தாருடன் சென்று சேர விரும்பாமல் சிறுவர்களுடேனேயே தங்கிவிடும் ஆந்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி அல்லது மனித நேயப் பண்புகளை மையப்படுத்தி, என பலப்பல கோணங்களில் கதை உருவாக்கலாம். இது போன்ற களங்களில் அமைக்கப்பட்ட ஹாரி பாட்டர் கதைகள் இன்றளவும் உலகம் முழுவதும் சுற்றி வருவதே இதற்கான ஆதாரம்.

    தொடருவோம்

    Share