உலக சுகாதார நிறுவன அறிவிப்பு
பவள சங்கரி
உலகிலுள்ள மொத்த குழந்தைகளில் இந்தியாவில் மட்டும் சுமாராக 31% குழந்தைகள் (1,21,000 ஆயிரம்) ஊட்டச்சத்து குறைபாடுகளாலும், கல்வி கற்பதற்குரிய வசதியின்றியும், சரியான வாழ்வாதாரங்களின்றியும் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் முதலாவது இடத்திலுள்ள நம்மைவிட நைஜீரியா, பாகிஸ்தான், யுகாண்டா போன்றவைகள் முறையே 7, 6, 5 சதவிகிதங்களில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளான யுகாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகளில் 95% பேர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் அவதியுறுகின்றனர். வளரும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் நம் இந்தியா ஒரே ராக்கெட்டில் 109 சாட்டிலைட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. விரைவில் மேலும் 45 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இருக்கிறோம். செவ்வாய் கிரகத்திற்கும் ராக்கெட் அனுப்பிவிட்டோம். நமக்காக தனி ஜி.பி.எஸ் கூட உருவாக்கிவிட்டோம். இப்படி எத்தனையோ முன்னேற்றங்களுடன் பெருமைகள் கொண்டிருந்தாலும், மிக முக்கியமான பிரச்சனையான, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள் விசயத்தில் மிகவும் பின் தங்கி, நலிவுற்ற குழந்தைகள் உள்ள நாடுகளில் முதலாவது இடத்தில் இருப்பது வேதனை. பல்வேறு துறைகளுக்காக பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசு குழந்தைகளின் நல்வாழ்விற்காக கவனம் செலுத்தி நாளைய நமது சந்ததியினரை வாழ வைப்பார்கள் என்று நம்புவோம். குழந்தைகள் நலனில் எப்போதும் அதிக அக்கறை செலுத்தும் நமது பிரதமர் மோடி அவர்கள் இந்தப் பிரச்சனைகளில் தனி கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் மனதில் நிலையான இடம் பிடிப்பார் என்பதும் உறுதி.