-மேகலா இராமமூர்த்தி

twowheeler driving

ஈருருளியில் பறக்கும் ஒரு குடும்பத்தைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. முத்துக்குமார். இப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

மழலையொன்று இடையினில் நசுங்க, அன்னையோ இடமின்றிக் கசங்க, குடும்பத்தலைவன் அதிவேகத்தில் ஊர்தியைச் செலுத்துவது அச்சத்தைத் தருகிறது. வேகத்தினும் விவேகமே சிறந்தது என்பதை வாகன ஓட்டிகள் உணர்ந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்!

*****

இனி கவிஞர்கள் கவிபாடும் நேரம்…

ஈருருளியும் இயற்கையும் இயங்கு நிலையில் இயங்கா நிலையைக் காட்டுவது தோற்றப் பிழையே என வியக்கும் திரு. நக்கினம் சிவம் பயணத்தில் வேகத்தைக் குறைப்போம், குடும்பத்தைக் காப்போம் எனும் நல்லுரையோடு கவிதையை நிறைவுசெய்திருக்கின்றார்.

பூமி சுழல்வதும்
சூரிய சந்திரர் வருவதும் போவதும்
இருளும் ஒளியும் தோன்றி மறைவதும்
இயற்கையின் வினையாகும்.

தன்னுடை குடும்பமாம்
மனையுடன்குழவியும்
ஈருருளியில் செல்வதில்
அகமதும் சுகமதாகும்.

தோற்றம் மறைவதும்
மறைந்தது பிறப்பதும்
இயற்கையின் செயலாகும்
இங்கோ

ஈருருளியும் இயற்கையும்
இயங்கு நிலையில்
இயங்கா நிலையை
காட்சி பிழையாகும்.

அதுவே
தோற்ற முடிவாகும்.

தோன்றா நிலையே
முற்றும் நிலையென
பற்றுகள் நீங்கிய
பரமர்கள் பகர்ந்தார்.

தோன்றும் வரை
தோற்றத்தில் வாழ்வோம்
தோற்ற மறைவை
போற்றி புகழ்வோம்.

பயணத்தில் நாளும்
வேகத்தை குறைத்து
குடும்பத்தை காப்போம்
நலமுடன் வாழ்வோம்.

*****

’குடும்பத்தை உடனேற்றிக் காற்றினும் கடுகிச் செல்வது பேராபத்து! வேகத்தைக் குறைத்தால் உறவுகள் நலம் கூடுமே’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.  

வேண்டாம் வேகம்…

குடும்ப மெல்லாம் கூடயேற்றி
காற்றைப் போல பறப்பவரே,
குடும்பம் காத்திடும் முறையிதுவா
கூடுதல் வேகம் முறையாமோ,
தடுக்கும் கவச மணிந்தாலும்
தாண்டும் வேகம் இடர்தானே,
அடுக்கும் உறவுகள் நலங்காக்க
அதிக வேகம் வேண்டாமே…!

*****

”தம்பி! உன் தாரமே உன் வாழ்வின் ஆதாரம்; வண்டியின் இடையில் அமர்ந்திருக்கும் பிள்ளைக்கு(ம்) ஆகிவிடக்கூடாது சேதாரம். எனவே வாகனத்தைச் செலுத்துவாய் நிதானமாய்” என்று அன்போடு வாகனவோட்டிக்கு அறிவுறுத்துகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

வேகம் என்றும் சோகம் வேகம் விவேகம் அல்ல தம்பி!
உன் குடும்பம் வாழ்வது உனை நம்பி!
உன் தாரம் பின்னால் அமர்ந்திருப்பதை
மறந்தனையோ தம்பி !
அழகுப் பிள்ளை உங்கள் நடுவில் அஞ்சி
அமர்ந்திருப்பதை பார் தம்பி !
அவள் வாழ்வின் ஆதாரம் நீ என்பதை
ஒரு கணம் நினைத்தால் தம்பி!
வேகம் மாறி, நிதானம் வந்திடும் தம்பி!
தலைக்கவசம் அணிந்திருப்பது !
நீ மட்டும் தான் தம்பி !
ஆண்டவனின் அற்புதப் படைப்பு!
மனித குலம் தம்பி!
அதை விபத்தால் விபரீதமாய்
மாற்றி விடாதே தம்பி!
வாகனத்தை என்றும் நிதானமாய் !
செலுத்திடுவாய் தம்பி!

*****

இருசக்கர வானத்தில் செல்லும்போது கைக்கொள்ள வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் தன் கவிதையில் பட்டியலிடுகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

நேரத்திற்கு செல்ல இரு சக்ர ஊர்தியில் ஓர் அவசரப் பயணம்
அவசரமாக இரு சக்ர ஊர்தியில் அதி வேகமான பயணம்
அதிலும் தன் மனைவி, மகன் இருப்பதை உணராத பயணம்,
இறப்பைப் பற்றி கவலை கொள்ளாத ஓர் பயணம்!
இரு சக்ர ஊர்திகளின் விபத்துக்கள் அன்றாடம் நிகழ்கிறதே!
மனிதனின் உயிர் இன்று மலிவாய்ப் போனதே!
விழிப்புணர்வு ஏற்பட்டும் கவலை கொள்ளாமல் போனதே!
வேகத்திலும், விவேகம் இல்லாமல் போனதே!

இருசக்ர ஊர்திகளின் முன்னேற்றத்தால் அதி வேகமும்,
விபத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் துர்மரணமும்,
கவனமாய்ச் சென்றாலும், எமனாக வந்து இடிப்பான்
கேட்டால் அதுவே அவன் தலை விதி என்பான்!
இருசக்ர ஊர்தியில், வேகமா ய் செல்வது விவேகம் அல்ல
அதிக பாரம், அதிக நபர்களுடன்,செல்வதும் நல்லதல்ல
சிக்கனல்களை மதிக்காமல் செல்வதும் நல்லதல்ல!ஓட்டும்போது கைப்பேசியுடன் பேசுவதும் நல்லதல்ல!வண்டியில் செல்லும்போது சாலை விதிகளை மதியுங்கள்!
தலை பாதுகாப்பிற்கு தலைக் கவசம் அணிந்து செல்லுங்கள்!
மனைவி, மகனுடன், கவனமாக வண்டியில் செல்லுங்கள்,
விபத்தின்றி இருசக்ர ஊர்தியில் பயணம் செய்ய நினையுங்கள்!

*****

வீதிகளில் விதிகளை மதித்தால் எதிர்பாரா விதிமுடிவை விலக்கலாம்; காலனிடம் அநியாயமாய்ச் சிக்கி அகால மரணமடைவதை அகற்றலாம் என்று பாதுகாப்பாய் வாகனம் ஓட்டுவதன் அவசியத்தைப் பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

வாகனத்தில் வேகம் வாழ்வில் துன்பம்!

வானில் எழுமேவு கணைபோல் வரையறையிலா
—-வாகன மெலாம் சாலையிலே பறக்குதங்கே
அவசரமாய்ப் போட்ட தார்ச்சாலை வழுக்கியதால்
—அதிவேகமாய்க் கூட்டுதிங்கே விபத்துக் கணக்கை!

வாகன வேகமதைச் சாலையில் காட்டாதேயுன்
—விவேக புத்தியைச் செய்யும் செயலில் காட்டுவாய்!
ஒடிந்தமூட்டும் உடலிலி லழியாத் தழும்புடனே
—-நொண்டிவாழும் வாழ்வு தேவைதானா சொல்லு!

வீதிகளில் காட்டும் வாகன வேகமதுவுன்
—-வாழ்வில் இருளைத் தந்து விடுமிதை
அறியாமல் செல்கின்ற வேகம் ஆபத்தாகும்
—-அறியவைக்க முயற்சி செய்தும் பலனில்லை

கணவனை இழந்த காரிகைகள் தன்னருமைக்
—-குழந்தை இழந்த தாய்மார்கள் பலவென
உயிரில்லா வாகன மொன்றால் முடியுமொரு
—-உன்னுயிரை யரை நொடியில் பறித்துவிட!

வீதிகளில் விதிகளின் மேல் வழிநடந்தால்
—விதி முடிந்ததென்று புகலுவதை விடுக்கலாம்
ஆடி அடங்கிய அருமுடம்பை எரித்து
—-அரை நொடியில் சாம்பலாவதைத் தவிர்க்கலாம்!

சுழலுவதே சக்கரத்தின் செயலானால்…வாழ்க்கைச்
—-சுழற்சியிலோயாமல் உழலுவதும் மோர் நியதியன்றோ?
பங்கமிலாப் பெற்றபெரு வாழ்வு நிலைபெறவுன்
—-அங்கமதில் குறையிலா வாழ்வு வேண்டும்!

உனக்கென்று உதித்ததைத் பறிக்க இங்கு
—-உலகில் யாருக்கும் உரிமையில்லை யென்பதை
உணர…உன்வாழ்வில் வேகமே வேண்டாமென
—-நிதானமாய் வாழ்வில் நின்று நட!

*****

வாகன ஓட்டிகளுக்கு நல்ல அறிவுரைகளை அள்ளி வழங்கியிருக்கும் நம் கவிஞர்கள் தாம் பொறுப்புள்ள குடிமக்களுங்கூட என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். பாராட்டுக்கள்!

*****

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தெரிவுசெய்திருப்பது…

உந்துவிசைச் சைக்கிள் எங்கு போகுது?

மந்தை மாட்டு வண்டியில்
சந்தைக்குப் போன
முந்தைய சாணி யுகம்
பிந்திப் போனது!
ஜல் ஜல்லென்று
சதி தாள மிட்டோடும்
குதிரை வண்டிகள் காலமும்
விதி மாறி மறைந்தன!
நிதிச் சிக்கன இரு சக்கர
மிதி வண்டிகள்
புதிராக வேகமாய் ஓடின!
மனிதர்
குதிவலி குறைக்கப்
புதியதாய்ப்
பெட்ரோல் எஞ்சின் பூட்டிய
விந்தை வேக வண்டி
இப்போது
உந்துவிசை ஸ்கூட்டி வாகனமாய்
வந்து விட்டது!
வேகத்தில் பன்மடங்கு விரைந்தாலும்
விபத்துகள் நேர்வதும்,
சோகமும், துக்கமும், உயிர்கள்
துறப்பதும் அனுதினம்
தொடர்ந்தன!
எதற்கும் நாம்
விலை தர வேண்டும்!
விஞ்ஞானம்
இருதலைத் தெய்வம்!
ஆக்க பூர்வமாய்
அள்ளிக் கொடுக்கவும் செய்யும் !
துள்ளிக்
கொல்லவும் செய்யும்!
உந்து சைக்கிளில்
செல்லும் குடும்பத்தைப் பார்!
எமனை நோக்கிப் போகும்
அன்னை!
அருந்தவப் பிள்ளை!
ஏனில்லை,
அவரது தலைகளில் மட்டும்
பேணும் கவசம்?

வாழ்வில் எதற்கும் நாம் விலைதர வேண்டும். அறிவியல் இருதலையுடைய தெய்வம். அதன் ஒருதலை ஆக்கத்தைத் தந்தாலும் மற்றொரு தலை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்வதையும் மறுக்கவியலாது. சாலையில் அதிவேகமாய்ச் செல்லும் இந்த உந்துவண்டி எமனூருக்கு முந்திச் சென்றிடுமோ என்ற தன் அச்சத்தை இக்கவிதையில் அழுத்தமாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருக்கின்றார். அவருக்கு என் பாராட்டு!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்

  1. என் கவிதையை இவ்வாரச் சிறப்புக் கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் திருமிகு மேகலா இராமமூர்த்திக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *