-தமிழ்த்தேனீ

ஒரு எழுத்தாளர் வருகிறார்; ஒரு எழுத்தாளர் அவரை வரவேற்கிறார்.

உக்காருங்க  நண்பரே  என்ன  சாப்படறீங்க?

ஒண்ணும் வேண்டாம் சார்;  இப்போதான் காப்பி குடிச்சிட்டு வந்தேன்.

(மனதுக்குள் ஏதாவது குடுத்தா  நல்லாத்தான் இருக்கும்.)

முதல்லே இந்தத் தண்ணீரைக் குடிங்க வெய்யில்லே வந்திருக்கீங்க.

உள்ளே இருந்து எழுத்தாளர்  மனைவி வருகிறார்.

அடேடே  வாங்க வீட்டுலே எல்லாரும்  சௌக்கியமா?

நல்லா இருக்காங்கம்மா; நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க வீட்டுக்காரர்  ஜமாய்க்கறார்!

எப்பிடித்தான் இவருக்கு இவ்ளோ கற்பனை வருதோ  ரொம்ப நல்லா   எழுதறாரு.

(மனதுக்குள் ஒரு காட்சி நிழலாடுகிறது போனமுறை சந்தித்தபோது இவர் கொடுத்த புத்தகத்தை  வீட்டிலே கொண்டு போயி  சோபாவிலே வெச்சேன் இன்னும் படிக்கலே.)

சார் நீங்க  குடுத்தீங்களே… அந்தப் புத்தகத்தை  இதுவரைக்கும்  நான் அஞ்சு தடவை  படிச்சிட்டேன்;  அலுக்கவே இல்லே.

சார் அப்பிடியெல்லாம் ஓவரா  புகழாதீங்க;  ஏதோ  எழுதறேன்.

நீங்க  அடக்கமா சொல்லிக்கிறீங்க.  படிக்கற  எங்களுக்குத்தானே உங்க அருமை தெரியும். (மனதுக்குள் எப்பிடி நடிக்கறான் பாரு அடக்கமா!)

இப்போ சமீபத்திலே  நான் ஒரு புத்தகம் எழுதறேன். ரெண்டு மூணு பதிப்பாளர் கேட்டுகிட்டே  இருக்காங்க; நமக்கு இருக்கற வேலைக்கு நடுவே  எழுதறோம்; அவங்க அவசரத்துக்கு நாம் எழுதமுடியுமா?

(மனதுக்குள் அடப்பாவி; கூசாம எப்பிடிய்யா பொய் சொல்றே.)

எந்தப் பதிப்பகத்தார் யா உன்னை இவ்ளோ  தொந்தரவு  செய்யறாங்க  எந்தப் புத்தகமும் விக்கலேன்னு அவங்களே அல்லாடிக்கிட்டு இருக்காங்க.)

எனக்கும் அதே நெலமைதான். ஆனாப் போனதடவை பப்ளிஷ் பண்னாங்களே அவங்களே கேக்கறாங்க;  இன்னும் ஒரு புஸ்தகம் வெளியிடலாம்னு   நானும் எழுதித் தரேன்னு சொல்லி இருக்கேன்.

சார் நீங்க ஜமாயுங்க!  நானும் எனக்குத் தெரிஞ்ச  பப்ளிஷர்கிட்டே போகும் போதெல்லாம்  உங்களைப் பத்திதான்  சொல்லிகிட்டே இருப்பேன்.

ஆனா ஒண்ணு  யார்கிட்டே  பேசினாலும் எங்களுக்கு அவரை நல்லாத் தெரியுமே அப்பிடீங்கறாங்க; உங்க புகழ் உங்களுக்குத்தான் தெரியலே!

( மனதுக்குள்  யோவ்  யாராவது  பப்ளிஷர் இருந்தாச் சொல்லேன்யா;  நானும்தான் ஒரு புஸ்தகம் வெளியிடறேன்; மனதுக்குள் அதெல்லாம் செய்யாத உன்னைப் பத்தியே நெனைச்சுகிட்டு உன் புத்தகத்தை மட்டுமே வெளியிட்டுக்கோ.)

உங்களுக்குச் செய்யாமே வேற யாருக்கு நான் உதவப் போறேன்; நீங்க அந்த புஸ்தகத்தை எழுதிமுடிங்க. நான்… நானே உங்களை  அழைச்சிகிட்டு போறேன்  பப்ளிஷர்கிட்டே.

உள்ளே இருந்து  காப்பி கொண்டுவந்து கொடுக்கிறார் எழுத்தாளர்  மனைவி.

அதை வாங்கி குடிச்சிட்டு  உங்களுக்கு  எதுக்கும்மா  வீண் ஸ்ரமம்;  நாந்தான் ஒண்ணும் வேண்டாம்னு சொன்னேனே. ஆனா அருமையான காப்பி.

சரி…அப்போ நான் கிளம்பறேன்.

சரி போயிட்டு வாங்க… அடிக்கடி வாங்க!

நீங்களும் உங்க  மனைவியைக் கூட்டிகிட்டு  வாங்க சார் நம்ம  வீட்டுக்கு.  நான் அக்கம்பக்கத்திலே  பெருமையா  சொல்லிக்குவேன் நீங்க  என் நண்பர்ன்னு.

அப்பொ நான் வரேம்மா; வரேன் நண்பரே. நானு அந்தப் புஸ்தகத்தை  எழுதி முடிச்சு எடுத்துகிட்டு வரேன்.

சரி நண்பரே… நானும் அதுக்குள்ளே இப்போ எழுதிகிட்டு இருக்கற  நாவலை முடிச்சிருவேன் ரெண்டு பேருமா போயி பாக்கலாம் பப்ளிஷரை.

நன்றி! சந்திப்போம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *