இந்தவார வல்லமையாளர்: (225)
செல்வன்
இவ்வார வல்லமையாளர்: உம்முல் கர்
(29/05/2017 – 05/06/2017 )
எட்டாம் வகுப்பு படித்ததற்காக குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், சுயமுயற்சியால் இன்று ஐ.ஏ.எஸுக்கு தகுதி பெற்றுள்ளார்
உம்முல் கர். சிறுவயது முதல் இவருக்கு உடல் ஊனம் உண்டு. சிறு காயம் பட்டாலும் எலும்புகள் உடைந்துவிடும். இவரது பெற்றோர் மிக வறிய பின்புலத்தை சார்ந்தவர்கள். தந்தை டெல்லியில் பிளாட்பாரத்தில் துணி விற்கும் வியாபாரியாக இருந்தார். அவர்கள் குடும்பம் டெல்லியில் குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு சிறுகுடிசை.
மகளின் வியாதிக்கு செலவு செய்யவே அவர்களால் முடியாத சூழல். 25 முறை மகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் மகளை தீனதயாள் உபாத்யாயாவின் உடல் ஊனமுற்றோருக்கான இலவச பள்ளியில் சேர்த்தார்கள். எட்டாம் வகுப்பு படித்தவுடன் படிப்பை நிறுத்தச் சொன்னார்கள்.
ஆனால் அமர்ஜோதி எனும் சேவை நிறுவனம் உம்முல் கரின் படிப்புச் செலவை ஏற்க முன்வந்தது. ஆனால் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மகளை கண்டபடி திட்டித் தீர்த்தார்கள். “ஒரு பெண் எட்டாவது வரை படித்தால் போதும்” என்றார்கள்.
அதனால் அவர்களுடன் சண்டைபிடித்து வெளியேறினார் உம்முல்கர். டெல்லியில் இருந்த குடிசைப்பகுதி ஒன்றில் தனியே ஒரு குடிசையை வாடகைக்கு பிடித்தார். தினம் மாலை 3 மணிமுதல் இரவு 11 வரை குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு பேட்ச், பேட்சாக டியூஷன் எடுத்து தன் செலவுகளை சமாளித்தார். நூறு ருபாய் மட்டுமே கட்டணம். ஏனெனில் அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ரிக்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலிகள் போன்றோரின் பிள்ளைகளே.
12வது வகுப்பில் 91% எடுத்துத் தேறிய உம்முல் கர், அதன்பின் கார்கி கல்லூரியில் சேர்ந்தார்.
இந்த சூழலில் வியாதி முற்றி, எலும்புகள் உடைந்து நடக்கமுடியாமல் சக்கரநாற்காலியில் ஒரு வருடம் இருக்கும் சூழல் உருவானது. ஆனாலும் சளைக்காமல் கல்லூரிக் கட்டணத்தை தன் டியூஷன் சம்பளத்தைக்கொண்டே கட்டினார். அதன்பின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்காலர்ஷிப் பெற்று முதுகலை பட்டமும் பெற்றார். அவருக்கு அங்கே மாதம் 3500 உதவித்தொகையும் கிடைத்தது.
அதன்பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 420வது ரேங்க் பெற்று தேறினார். ஐ.ஏ.எஸ் ஆகும் வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார்
சமூகமும், குடும்பமும், தன் உடல்நிலையும் தன் மேல் வீசி எறிந்த தடைகற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி சிகரம் தொட்ட உம்முல் கரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது.
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
செல்வன் குறி தப்புவதில்லை. வல்லமையாளர் உம்முல் கர் அவரகளுக்கும், செல்வனுக்கும் என் வாழ்த்துக்கள். ஆம். நான் சமீபத்தில் ஒரு ஏழைகள் பள்ளிக்கு சென்றிருந்தேன். எல்லாமே நன்முத்துக்கள். ஐஏஎஸ் விழிப்புணர்ச்சி பாடங்கள் நடத்தப்படும். ஐஏஎஸ் நேர் காணலில் பல உம்முல் கர் களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் தான் நம் நாட்டின் நம்பிக்கை நக்ஷத்திரங்கள்
இன்னம்பூரான்