சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (4)
பவள சங்கரி
பழைமை நினைவுகளுக்குள் ஊடுறுவிப் பார்ப்போம்!
அவரவர் வாழ்க்கையில் இளமைக்காலங்களில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அவற்றை நினைவுப்பெட்டகத்திலிருந்து வெளிக்கொணர்ந்து அழகிய கதை வடிக்க இயலும். எனக்கும் ஒரு இளமைக்காலச் சம்பவம் எண்ணப்பெட்டகத்தில் வீற்றிருந்து பக்குவமாய் வெளிவந்த தருணமும் உண்டு. என் பள்ளிக்கால டிசம்பர் மாத மாலை நேர சிறப்பு வகுப்பு ஒன்றில் சக மாணவி, பென்சில் மொக்கின் முனை கூராக இருக்கவேண்டும் என்பதற்காக சீவிக்கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க சட்டென்று திரும்பியவளின் வலது கண்ணில் பென்சில் முனை நறுக்கென்று குத்தி செருகிக்கொள்ள வீச்சென்ற அலறலுடன் மயங்கி சரிந்ததை நேரில் கண்ட காட்சியை இன்று நினைத்தாலும் குலை நடுங்குகிறது. கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடாதவர்கள் இருக்க முடியாது. கொஞ்ச நேரம் கண்கள் கட்டப்பட்டிருந்தாலே நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம். இந்த உலகமே இருண்டதுபோல் எல்லாம் கருமையாக… அப்பப்பா.. இப்படியே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்றால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை இல்லையா? இப்படித்தான் நம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 இலட்சம் பேர் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் எழுந்த கதைதான் கண் தானம், மாற்று கண் சிகிச்சை, கண்ணப்ப நாயனார் வரலாறு என்று, ‘தானத்திலே சிறந்தது கண் தானம்’ என்ற நல்ல விழிப்புணர்வு கதையாக வடிவம் பெற்றது. இதுபோன்ற விழிப்புணர்வு கதைகள் குழந்தைகளை ஈர்க்குமா என்ற கேள்வி எழலாம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட சூழல்களையும், உணர்வுப்பூர்வமான வசனங்களும், எளிமையான தொழில்நுட்பச் செய்திகளையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்கும்போது அவர்களுக்கு தாங்கள் புதுமையாக எதையும் கற்றுக்கொண்ட மனநிறைவும், தாங்களும் அது போன்று நன்மை செய்யும் நாயகனாக வேண்டும் என்ற உந்துசக்தியும் ஏற்படக்கூடும்.
இப்படி ஒவ்வொருவருக்கும் அவரவர் குழந்தைப்பருவ நினைவுகூரல்கள் – நகைச்சுவையோ, சோகமோ, வீரதீர சாகசங்களோ, எதுவாயினும் அவை பலப்பல கதைகளுக்கு சாளரங்களாக சவாலாகி நின்றுவிடும்.
மந்திர சக்தி மலரும் தருணம்:
படைப்பாற்றலைப் பெருக்கும் மந்திர சக்தி மலர்வதற்குரிய உன்னதமான பொழுதுகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. மிகப்பெரிய எழுத்தாளர்கள், திரைப்பட கதாசிரியர்கள், இயக்குநர்கள் போன்ற பலரும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கும் சில குறிப்பிட்ட காலங்கள் உண்டு. ஆம் உறக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் ஒரு அரை மயக்க நிலையில் தங்கு தடையின்றி எண்ண அலைகள் கொப்பளித்துக்கொண்டு மேலெழும்பும். என்னைப்பொறுத்தவரை அப்படியொரு சுகமான படைப்புப்பொழுது என்றால் அது விடியாத இளங்காலைப்பொழுதான 3மணி முதல் 5 மணி வரையிலான அந்த இனிய பொழுதையே சொல்வேன். கதை, கட்டுரை, கவிதை என்ற படைப்புகள் மட்டுமன்றி, முக்கியமாக எடுக்கவேண்டிய சில முடிவுகளைக்கூட சரியாகக் கணிக்க வைக்கும் உன்னதமான பொழுது அது. பகல் பொழுதுகளில் கலைந்த மேகங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் சில கருத்துகள் ஒன்றிணைந்து பரந்த சூல்கொண்ட மேகங்களாக மழைபொழியத் தயாராகிவிடும். அதனைப் பொறுமையாக சேகரித்து செம்மையாக்கிக் கொள்வது அவரவர் திறமையைப் பொறுத்தது. மதியவேளை உண்ட களைப்பின் சிறுதூக்கம், இரவு நேர அரைத்தூக்கம் இப்படி எதுவாயினும் அவரவர் தனித்தன்மையின் அடிப்படையில் அமைவது அது. அவ்வேளையில் ஊற்றெடுக்கும் கற்பனைகளை நினைவில் இருத்தி, அதன் பயனை முழுமையாக கிரகித்து வெற்றிகரமான படைப்பாக வடிவமைப்பதில்தான் ஒரு எழுத்தாளரின் வல்லமை பொதிந்துள்ளது. நம் மனதை நெறிப்படுத்தும்விதமாக சில சிறிய முயற்சிகள் மேற்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். யோகக்கலை பயின்றவர்களுக்கு இது மிக எளிதாகக் கைகூடும். கற்பனை விதையை கனிவாக ஊன்றி வளமாக முளைவிடச் செய்யும் சாகசத்தை அது தானாகவே நிறைவேற்றிவிடும். இதுவே அந்த மந்திர சக்தி.
படுக்கையறையில் தலைமாட்டின் அருகில் சிறிய குறிப்பேடு வைத்துக்கொள்வதை வழமையாக்கிக்கொள்வது நலம். விழிப்பு நிலை ஆரம்பித்தவுடன் கனவில் தோன்றிய கற்பனைகளை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தமில்லாத கிறுக்கல்களாகத் தோன்றினாலும் அதையும் முழுமையாக குறித்துக்கொள்வது நலம். அன்றைய பொழுது முழுவதும் அது நம்மையறியாமல் அசை போட்டுக்கொண்டிருக்கும். ஓரிரு நாட்களில் ஒரு நிலைக்கு வந்துவிடும் அந்த கற்பனை மலர்கள், அழகிய மாலையாக உருப்பெற்றுவிடும். ஆனால் இவையனைத்திற்கும் அடிப்படை மன அமைதி, குழப்பமற்ற தெளிவான சிந்தனை , தேவையான ஓய்வு போன்றவை. மதிய வேளை குட்டித்தூக்கம் கூட படைப்பாளர்களுக்கு தம் திறனை ஊக்குவிக்கக்கூடியது என்பதை வின்ஸ்டன் சர்ச்சில், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்களின் நம்பிக்கைகளும் உறுதி செய்கின்றன. கிடைக்கும் ஓய்வு நேரங்கள் அனைத்தையும், படைப்புகளை செப்பனிடும் அல்லது செம்மையாக்கும் உன்னத நேரங்களாகக் கொள்ளும் வழமை ஏற்படுத்திக்கொள்வது ஒரு எழுத்தாளருக்கு தேவையான ஒன்று. யோகக்கலை, தியானம் பயின்றவர்களுக்கு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்வது மிகவும் எளிது. தியானம் செய்யும் காலங்களில் பெரும்பாலும் ஏதோ ஒரு கற்பனை மின்னல் வெட்டும் சில நேரங்களில். அது அங்கேயே மொட்டாகி மலரவும் கூடும். சில நாட்களில் அது நல்ல படைப்பாக உருமாற்றமும் பெறும்.
கனவும் கற்பனையும்:
கனவு என்பது ஒவ்வொரு மனிதனும் கடந்துவரும் ஒரு மெய்யுணர்வு எனலாம். சிறு குழந்தைகள், வளர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள், முதியவர்கள் என அனைத்து பருவத்தினரும் கனவு காண்கிறார்கள். கருவறையில் இருக்கும் குழந்தைகூட கனவு காண்கின்றன என்கிறார்கள். மனிதர்கள்மட்டுமின்றி எலி, நாய், டால்பின், சிங்கம், சிறுத்தை, திமிங்கலம் போன்ற பல்வேறு மிருகங்களும் கனவு காண்கின்றனவாம்.
கனவுகள், “மயக்க நிலையின் பட்டுப்பாதை” என்கிறார் சிக்மண்ட் ஃபிராய்ட். இதற்கு வெகு காலம் முன்பே உரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் கனவுகளுக்கு ஒரு விசித்திரமான ஆற்றல் உள்ளது என்பதை ஆணித்தரமாக நம்பினார்கள். வரலாறுகளில் இதுபோன்று கனவுகள் நிஜ வாழ்வில் முக்கிய பங்காற்றும் பல சம்பவங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கப்பெறாதபோதும், கனவுகள் நீண்டகால நினைவுகளை வெளிக்கொணர பெரிதும் உதவி வருவதை வாய்மொழிக் கதைகள், உண்மைச் சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது. என் அனுபவத்திலும் ஒரு சில சிறுகதைகளின் கரு மற்றும் குழப்பமேற்படுத்தும் முடிவுகளுக்கான தீர்வுகளும் கனவுகளின் மூலம் பெற்றிருக்கிறேன் என்பதை மறுக்கவியலாது. பகல் முழுவதும் உள்ளத்தோடு உறவாடும் சில நிகழ்வுகள் இரவின் மடியில் கனவின் வடிவில் ஏதோ ஒரு உருவம் பெற்று காவியமாகக்கூட உருவாகிவிடுவதுண்டு! படைப்புலக வாழ்க்கைக்கு இதுபோன்ற சில உள்ளுணர்வுகளின் பாதிப்புகள் பலனுள்ள வகையிலேயே அமைந்து விடுகின்றன. ஓரிரு நொடிகளில் காற்றில் கரைந்துவிடும் பல கனவுகளில் ஒரு சில மட்டுமே நினைவில் நின்று பயனளிக்கவல்லது. எது எப்படியாகினும் கனவு கண்டு விழித்த நொடியில் அதுபற்றி குறிப்பெடுக்காவிட்டால் அவை நிரந்தரமாக மறைந்து விடுவதுண்டு. ஆக தலைமாட்டில் அல்லது கையருகில் சிறு குறிப்பேடு வைத்திருப்பது நல்லது.
பாலும் தண்ணீரும்:
அன்னப்பறவை பாலையும், தண்ணீரையும் அழகாகப்பிரித்து பாலை மட்டும் அருந்திவிடும். ஒரு நல்ல எழுத்தாளரும்கூட அன்னப்பறவை போல இருக்கவேண்டியவர்கள். அன்றாடம் நம்மைச்சுற்றி ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிலிருந்து நல்லவைகளை மட்டும் பிரித்தெடுத்து அதனுடன் கற்பனையை சரிவிகிதத்தில் கலந்து அதனை சிறார்களுக்கான அழகிய கதையாகவோ, பாடலாகவோ, நாடகமாகவோ நெய்து, குழந்தைகளுக்கும் கற்பனை வளத்தை தூண்டும்விதமாக அளிக்கவேண்டியது எழுத்தாளரின் கடமை.
எங்கள் வீடு இருப்பது தமிழ்நாட்டில், ஈரோடு நகரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள நகர்புறப்பகுதியில். கோடைக்கால விடுமுறை சமயத்தில் எங்கள் குழந்தைகளுடன், தங்கை, நாத்தனார் குழந்தைகள் என வீடே அமர்க்களமாக இருந்தது. இரவு நேரம் உணவு உண்டு முடித்துவிட்டு வெளியே சற்று ஆசுவாசம் கொள்வதற்காக வந்தோம். கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்பதால் புழுக்கம் வேறு. குழந்தைகள் அவ்வளவு எளிதாக குளிரூட்டப்பட்ட அறையினுள்கூட அடைய விரும்பவில்லை. மொட்டை மாடி, வாசல் என்று மாறி மாறி அலைந்துகொண்டிருந்தவர்களை அருகில் இருக்கும் எங்கள் குடியிருப்புக்கான பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். காவலாளி கதவை நீக்கிவிட்டு தனது அறையில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். நெடிதுயர்ந்த மரங்களும் எங்கோ ஓரிரு கிரீச்சொலிகளும் பௌர்ணமி நிலவும், பச்சைப் புல்வெளியும் அதனதன் இயல்பில் இனிமை காத்திருந்தன. குழந்தைகளின் தலையீடு அவைகளுக்கு எந்தவிதமான அசௌகரியங்களையும் ஏற்படுத்தவில்லை. பொமரேனியன் சிட்டுவும் குழந்தைகளுக்குச் சரியாக ஈடுகொடுத்து துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. இரவு மணி 10 ஆகியிருந்தது. சுவர் எல்லையில் இருந்த புங்க மரத்தை நோக்கி சிட்டு திடீரென குரைக்க ஆரம்பித்தது. மரத்தை அண்ணாந்து பார்த்தவாறு சுற்றிச் சுற்றி வந்தது. விசுக்கென்று பறந்து வெளியே வந்த அந்த மிகப்பெரிய பறவை ஒரு முறை வட்டமடித்துவிட்டு வலப்புறம் திரும்பி சிறகு விரித்தது.
“அட, என்ன பறவையிது?” என்றேன் நான்.
“கழுகாக இருக்குமோ” என்றான் 8ஆம் வகுப்பு படிக்கும் மகிழன்.
“கழுகு இந்த நேரத்தில், அதுவும் இந்த இடத்தில் வருவதற்கு வாய்ப்பில்லையே” என்றேன்.
“புறா, காகம், செம்போத்து” போன்ற எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வௌவால் கூட இவ்வளவு பெரிதாக இருக்காதே?”
அனைவரின் கண்களும் மெல்லிய அந்த ஒளியில் மெதுவாக வட்டமடித்து சிறகசைத்த அந்த பறவையைத் தொடர்ந்தன. சற்று தொலைவு பறந்து சென்று மீண்டும் திரும்பி வந்த அது விளக்கு கம்பத்தின் உச்சியில் சென்று அமர்ந்தது. நானும் மெல்ல அருகில் சென்று பார்த்தேன். ஆனாலும் அது அசையவில்லை. சற்று நெருங்கியபோதும் அதனிடம் எந்த அசைவும் இல்லை. மகிழனைத் தொடர்ந்து குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து வரிசை கட்டி நின்று உச்சியில் அசையாது உட்கார்ந்திருக்கும் அந்த பெரிய பறவையை வெறித்தவாறு அமைதியாக இருந்தனர். பத்து நிமிடங்கள் அதுவும் அசையாது அப்படியே உட்கார்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. பின் தன் பெரிய சிறகை விரித்தவாறு விருட்டென்று பறந்துவிட்டது.
அது இராட்சச ஆந்தை . அந்த நேரத்தில் இப்படியொரு நெருக்கமான குடியிருப்பு வளாகத்தில் இத்தனைப்பெரிய ஆந்தை வருவது அதிசயம்தான் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், மங்கலான வெளிச்சத்தில் கூட அவற்றின் பார்வை கூர்மையானது. ஊனுண்ணியான ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. மனிதர்கள் வாழும் இடங்களில் இவற்றைக் காண்பது அரிது. படங்களிலும், சரணாலயங்களிலும் மட்டுமே பார்த்திருந்த ஆந்தையை முதன் முதலில் நேரடியாகக் கண்டது அப்போதுதான்.
இதுபோன்று அதிசய நிகழ்வுகள் மனதில் உறுதியான இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. பல நேரங்களில் நம் வாழ்க்கையில் அரிதாக கிடைக்கின்ற பல அதிசயக் காட்சிகளை நாம் சரியாக பயன்படுத்த தவறிவிடுகிறோம். ஆனாலும் அடி மனதில் தங்கிவிடும் இது போன்ற அதிசய நிகழ்வுகள் என்றேனும் ஓர் நாள் படைப்பிலக்கியத்தில் பாதம் பதிக்கத்தான் செய்கின்றன.
ஒரு நல்ல படைப்பாளிக்கு இந்த நிகழ்வு கற்பனையின் சிகரமேறி பல கதைகளை உருவாக்க வழியமைக்கலாம். சிறகு முறிந்து பறக்க முடியாமல் தவிக்கும் பறவையை பத்திரமாக பாதுகாத்து, மருந்து போட்டு காயம் ஆற்றி, இறுதியில் அதை அதன் குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் சிறுவர்கள், மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் வழமையில்லாத இப்பறவையின் துன்பம் போக்கி அதனுடன் உறவாடி, உணவூட்டிய சிறார்களின் உற்ற தோழனாகி அவர்களை ஒரு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி தன் நன்றிக்கடனைச் செலுத்துவதாகவும், உடல் பூரண குணமடைந்த பின்பும் தன் குடும்பத்தாருடன் சென்று சேர விரும்பாமல் சிறுவர்களுடேனேயே தங்கிவிடும் ஆந்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி அல்லது மனித நேயப் பண்புகளை மையப்படுத்தி, என பலப்பல கோணங்களில் கதை உருவாக்கலாம். இது போன்ற களங்களில் அமைக்கப்பட்ட ஹாரி பாட்டர் கதைகள் இன்றளவும் உலகம் முழுவதும் சுற்றி வருவதே இதற்கான ஆதாரம்.
தொடருவோம்