சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)
பவள சங்கரி
தலையங்கம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானம் (ஜிடிபி) 6.1 சதவிகிதமாக சரிந்துவிட்டதாக நேற்றைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் அவரவர் நிலைக்கேற்ப இதைப்பற்றி விமர்சனம் செய்கின்றனர். உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பிறகு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை விட்டுவிட்டு யதார்த்தமாக வியாபார உலகத்தையும் பொது மக்களின் பொருளாதார நிலையையும் பார்க்கும்போது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. செழுமையான வணிகம் இல்லை. மக்களிடம் தாராளப் பணப்புழக்கமும் இல்லை. இந்த நிலையில் ஜிஎஸ்டி ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது இப்பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பற்றிய தெளிவான விளக்கங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது குறித்த முழுமையான விவரங்களும் இதுவரை வெளியிடவில்லை. சாதாரணமாக சாப்பிடும் உணவகங்களுக்கு வரியை அதிகரித்தும், நட்சத்திர உணவு விடுதிகளுக்கான வரிவிதிப்பு குறைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நடத்திய போராட்டத்தில் அனைத்து உணவு விடுதிகளும் மூடப்பட்டிருந்தது. பொருளாதாரப் பிரச்சனைகள் இருக்கும் சமயத்தில் இதற்கான தீர்வை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்த பின்பே சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமலாக்கப்படுவது சரியாக இருக்கும். ஜிஎஸ்டி என்பதை மத்திய , மாநில அரசுகள் தங்கள் அரசு சார்ந்த நலத்திட்டங்களாகக் கருதாமல், வணிகர்கள், பொது மக்கள் நலம் சார்ந்ததாக கருதும் வகையில் சிறப்பாக அமல் படுத்தினால் இத்திட்டம் முழுமையாக வெற்றி பெறலாம்.