Year: 2018

  • தொல்தமிழரின் சகுன நம்பிக்கைச் சுவடுகள்

    முனைவர் ம. தமிழ்வாணன்

    முதுநிலை ஆய்வு வல்லுநர்

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

    தரமணி, சென்னை – 113

     

    பொதுவாகச் சகுனம் அல்லது நிமித்தம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாக விளங்குகிறது. பண்டைத் தமிழக மக்களிடையே மரபாகச் சில நம்பிக்கைகள் நிலவி வந்திருக்கின்றன. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. அவ்வகையில், தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானவையாகும். அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பிற்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை சார்ந்ததாகவோ இருப்பதாகப் பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான செவ்விலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. இவை பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

    சகுனம்(நிமித்தம்)

    சகுனம் அல்லது நிமித்தம் என்ற சொல்லுக்குக் காரணம், சகுனம், அடையாளம், பொருட்டு ஆகிய பொருள்கள் உள்ளன. சகுனம் என்பது இயற்கையின் மொழி! ஒரு வழிகாட்டலாக இயற்கை எவ்வாறு பேசுகிறது, தாவரங்கள், விலங்குகள் எவ்வாறு பேசுகின்றன என்பதைக் கொண்டு எதிர்வரும் பலன் அறிவதாகும். மனிதன் எவ்வளவோ நவீன  வாழ்க்கை முறைகளுக்கு போயிருந்தாலும் தவிர்க்க முடியாதவைகளாக சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் சகுனங்கள் மற்றும் நிமித்தங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. மூட நம்பிக்கை என்று பலவற்றையும் ஒதுக்குபவர்கள் கூடச் சகுனங்கள், நிமித்தங்கள் ஆகியவற்றில் தங்களை அறியாமலே நம்பிக்கை வைத்திருப்பார்கள். நிமித்தங்கள் என்பவை நாம் எதிர்பாராமல் சுற்றுப்புறத்தில் நடப்பவை, நம்மை எதிர் நோக்கி இருப்பவை, கேட்கக்கூடிய சப்தங்கள் ஆகியவையாகும். இவற்றை இரண்டாகப் பகுப்பர் அவை, 1. சுபசகுனங்கள் 2. அசுப சகுனங்கள் ஆகும்.

    சுபசகுனங்கள்

    மக்களால் சுபசகுனமாகக் கருதப்படுவது வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக்கேட்பதும் ஆகும்.  அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன், ஆலயமணி ஓசை, விளக்கு, தாமரைப்பூ, நாய் தன் உடலைச் சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் போன்றவைகளாகும்.

    அசுப சகுனங்கள்

    மக்களால் அசுபசகுனமாகக் கருதப்படுவது அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை,   ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது, விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது, எருமை மாடு ஆகியவையாகும்.

    சகுனங்களாகக் கருதப்படுபவை எப்படிப்பட்டதாக இருந்தாலும், சென்ற காரியத்தில் வெற்றி கிடைத்தால், அதை நாம் நினைப்பதில்லை. தோல்வியில் முடியும்போதுதான் இந்த ஆராய்ச்சியில் இறங்குகிறோம். சகுனங்களால் எந்தச் செயலும் கெடுவதில்லை. வெற்றியோ தோல்வியோ அவற்றின் அறிகுறிதான் சகுனம் என்கிறார்கள். நிமித்தம் என்ற சொல்லானது தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல்லாட்சி வழங்கப்படவில்லை. ஆனால் புள்(பறவை) என்ற சொல் நிமித்தம் என்ற பொருளில் பலவிடங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அக்காலத்தில் புள் பெரும்பான்மையும் நிமித்தத்திற்கு உரிய பொருளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். இதற்கேற்பவே பறவை புள் நிமித்தமாக தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது. [தொல்காப்பியம் பொருளதிகாரம் 88:16-17] சிலப்பதிகாரத்தில் நிமித்தம் என்ற தற்காலப் பொருளில் இச்சொல் பயின்று வந்துள்ளது.[ சிலப்பதிகாரம் 16-165-169]

    செவ்விலக்கியத்தில் சகுனச் செய்திகள்

    அங்கத்துடிப்புகள்

    தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

    ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும்.

    செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்” (தொல்.கற்பு.36:3-4)

     என்று தொல்காப்பியர் பதிவிட்டுள்ளார். தலைவன் வெளியூருக்குப் போக இருக்கிறான். அந்தச் செய்தி கிடைக்கும் நேரம் பசு ஒன்று பால் நிறைய(மிகுதியாக) கறந்திருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது. அதனால் தலைவனுக்கு நல்லது நடக்கும் என்று கருதி மகிழ்வுடன் விடை கொடுத்து தலைவி அனுப்பி வைத்தாள் என்பதை அடிகள் சுட்டக்காணலாம்.

    இரவு நேரங்களில் நிமித்தங்கள் (சகுனங்கள்) வெளிப்படத் தெரியாது. அதனால் பிறர் பேசும் வார்த்தைகள், பறவைகளின் ஒலி போன்றவற்றைக் கேட்டு சுபமா? அசுபமா? என அறிந்து பலனைக்  கண்டறிந்துள்ளனர். இதனை,

    படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி” (தொல்.புறத்.3:1)

    என்னும் தொல்காப்பிய அடி வெளிப்படுத்துகின்றன. ஆண்களுக்கு வலதுபுறமும் பெண்களுக்கு இடது புறமும் கண், புருவம், தோள் முதலியன துடித்தல் நல்ல சகுனமாகும்.

    பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,

    வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்

    கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள்.” (கம்ப,சுந்தரகாண்டம்.202:2-4)

    மற்றொரு பாட்டில் பெண்களுக்கு இடக்கண்ணும் ஆண்களுக்கு வலக்கண்ணும் துடித்தால் நன்மை என இன்றும் நம் தமிழர்களின் வழக்குகளில் இருப்பதைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது.

     “கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்

    கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

    உண்ணிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன

    எண்ணுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன

    விண்ணவர் கோமான் விழவுநா ளதன்” (சிலம்பு. இந்திரவிழா ஊரெடுத்த காதை 236-240)

    இதில், கண்ணகி கோவலனைப் பிரிந்து வருத்தமுற்றிருந்தபோது, இந்திர விழாவில் கோவலனும் மாதவியும் கலந்து இன்புற்றிருக்கின்ற அவ்வேளையில், கண்ணகிக்கு வலக்கண்ணும் அதே நேரத்தில் மாதவிக்கு இடக்கண்ணும் துடித்தன என இளங்காவடிகள் கூற்றின் மூலம் பழந்தமிழர் வாழ்வில் நீண்ட பழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனினும் ஏனைய செவ்வியல் நூல்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கச் செய்தியாகும்.

    கனவும் விளைவும்

    பொதுவாகக் கனவு என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வினை உணர்த்துவதாக இருக்கின்றன என இலக்கியங்களின் வாயிலாக நாம் பல்வேறு இடங்களில் காணலாம். புறநானூற்றிலும் கனவினால் ஏற்பட்ட ஓர் அச்சத்தைப் பற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்

    களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்

    வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்    

    கனவின் அரியன காணா நனவின்” (புறம்.41:8-11)

    இப்பாடலால் சோழன் கிள்ளிவளவனின் பகைவர்களுக்கு வற்றிய மரம் தீப்பிடித்து எரிவது போலவும் எரிகொல்லி விழுவது போலவும் யாரோ ஒருவர் தன் தலையில் எண்ணெய் வார்ப்பது போலவும் தன் படையானது முழுமையாக வீழ்ந்தன போலவும் கனவு கண்டதாக புலவர் கோவூர் கிழார் பதிவு செய்திருத்தலின் மூலம் கனவில் நிகழ்ந்த நிகழ்வு அவர்களது எதிர்கால வினைகளுக்குக் குறிப்புணர்வாக அமைந்திருப்பதனை இங்கே காணமுடிகிறது. மேலும் கனவு நிகழ்வின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது விளக்கப்பட்டுள்ளது.

    சிலப்பதிகாரத்தில் கோவலனின் கனவில் கட்டிய ஆடையை பறிக்கொடுத்தல் மற்றும் கோட்டுமா உண்தல் ஆகிய நிகழ்வல்லாத செயல்களும் (சிலம்பு.15:97-98) கோப்பெருந்தேவியின் கனவில் இயற்கைக்கு ஒவ்வாத செயல் நிகழ்வுகளும் (சிலம்பு.20:1-7) தீய நிமித்த குறிகளாக காட்டப்பட்டுள்ளன. இராமாயணத்தில் சீதைக்கு இடம் துடித்ததினால் ஏற்படப்போகும் நன்மையை திரிசடை வாயிலாகக் கூறும் பாடல்வரிகள் கொண்டும் அறியலாம். பொன்வண்டு ஒன்று செவியினிடத்தில் இன்னிசையைப் பாடிச் சென்றதன் வாயிலாகவும் சிங்கம் கூட்டத்தோடு வந்து சீதையை அழைத்துச் செல்வது போல் கண்ட கனவின் வாயிலாகவும் சீதைக்கு நன்மை ஏற்படப்போகிறது என்பதனைத் திரிசடை உணர்த்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. திரிசடையின் கனவில் தனது பத்துத்தலைகளிலும் இராவணன் எண்ணெய்த்தேய்த்துக் கொண்டு கழுதையும் பேயும் பூட்டியத் தேரின் மீதேறி இரத்த ஆடையுடன் தென் திசை நோக்கி செல்வது போல் கண்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறியாக சொல்லப்பட்டுள்ளது.

    கணியரும் கணித்தலும்

    தொல்தமிழ் மக்கள் நாள், கிழமைப் பார்த்து தங்களது செயலினைத் தொடங்கியுள்ளனர். செவ்வியல் நூலில் போர் தொடங்குவதற்குமுன் நல்ல நாள் பார்த்தனர் என்றும் அதற்கென அரண்மனை கணியர் என அழைக்கப்படும் கணியர் நாளைக் கணித்துக் கூறினர் என்றும் புறநானூற்றுப் பாடல் சொல்கின்றது.

    புலவர்களும் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறவேண்டி, நாளையும் கோளையும் பார்த்துச் சென்றனர் என புறநானூறு மூலம் நாம் அறியலாம்.

    நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்

    பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,” (புறம்.124:1-2)

    இதற்கு தொல்காப்பிய நூலிலும் சான்று உள்ளது. “குடையும் வாளும் நாள்கோள்”(தொல்.பொருள்.புறத்.11:1) என கூறுவதன் மூலம், போர் தொடுத்து செல்ல வேண்டிய திசையை நோக்கி, நல்ல நாளில் தன் வலிமையான வாளினை வலம் வரச் செய்தனர் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல வேளையை முழுத்தும் என அழைத்தனர். அதுவே தற்போது சுபமுகூர்த்தம் என அழைக்கப்படுவதைக் காணலாம்.

    குடைநாட் கோள்

    மறவர் எல்லாரும் நற்சகுனம் பார்த்துப் போர்க்கெனப் புறப்படுதல் என்பது இயலாதது. ஆதலின், குடை, வாள், முரசு ஆகியவற்றை நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் புறவீடு செய்வதென்ற வழக்கம் வந்தது. அவ்வழக்கம் பற்றிக் குடையைப் புறவீடு செய்த இந்நிகழ்வு குடைநாட் கோள் என்பதாயிற்று.

    சென்று அடையார் மதில் கருதிக்

    கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று.” (புற.வெண்பா.6:96)

    (அடையார் = பகைவர்)

    வாள்நாட் கோள்

    முன்பு கூறியது போலவே நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் வாளினைப் புறவீடு செய்தலின் வாள்நாட் கோள் எனப் பெற்றது.

    கலந்துஅடையார் மதில்கருதி

    வலம்தருவாள் நாட்கொண்டன்று” (புற.வெண்பா.6:97)

    (வலம் = வெற்றி)

    தொல்தமிழர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களைத் திங்களும் உரோகினியும் கூடிய நாளில் நடத்தி வைத்துள்ளனர்.

    கனையிருள் அகன்ற கவின்பெறு காலை

    கோல்களால் நீங்கிய கொடு வெண்டிங்கள்

    கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென” (அகம்.86:5-7)

    நல்லாவூர் கிழார் பாடிய இவ்வடிகளில்  “வெண்டிங்கள் (திங்கள்) மற்றும் கேடில் விழுப்புகழ் (உரோகினி) நாடலை” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளின் வழி அறிந்து கொள்ளலாம். மற்றொரு அகப்பாடலிலும் விற்றூற்று மூதெயினனார் பதிவு செய்துள்ளமை சுட்டத்தக்கது.

    இருவிசும்பு விளங்கத் திங்கள்

    சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்

    கடிநகர் புனைந்து கடவுட் பேணி

    படுமண முழவோடு பரூஉப்பணை இமிழ” (அகம்.136:4-7)

    மக்கள் திங்களும் உரோகினியும் கூடிய நாளை குற்றமற்ற நன்னாள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்றும் அத்தகைய நாளிலேயே பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. (திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் – திங்களை உரோகினி கூடிய நன்னாள்).

    வெள்ளியும் பிறவும்

    தூமகேது (கரந்துறை கோள் எனவும் கூறுவர்) என்னும் கோளின் தோற்றம் உலகிற்கு பெருந்தீங்கு என்பர். மைம்மீன் ஆனது சனிக்கோளைக் குறிப்பதாகும். புறநானூற்றில் பாரி மன்னனின் பண்புகளைப் பாடுகின்றபோது, ‘சனிமீன் புகையினும்’ – எல்லா திசையிலும் புகை தோன்றி, வெள்ளி தெற்கே நோக்கி ஓடினால் உன் நாட்டில் மழை தவறாது பொழியும் என்று புலவர் கபிலர் போற்றிக் கூறியுள்ளதன் மூலம் இத்தகைய நம்பிக்கை இருந்துள்ளது என அறிவிக்கின்றன.

                    “மைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும்

                    தென்திசை மறுங்கின் வெள்ளி ஓடினும்” (புறம்.117:1-2)

    செவ்விலக்கியத்தில் ஒன்றான முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் மேற்கூறிய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

    கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

    விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (சிலம்பு.நாடுகாண்.102-103)

    இதனால் இந்நம்பிக்கையானது வாழ்வியலில் தொடர்ந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

    புள்ளின ஒலிகள்

    ஓர் தனிமனிதப் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் மாற்றம் பெறலாம். ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் என்றும் மாற்றம் பெறாது. நற்றிணை முல்லைத்திணைப் பாடலொன்றில் பறவை நிமித்தத்தைக் கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறுத்தினவோ என்று கூறுவதாக அமைந்துள்ளது.

                “தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்

              புள்அறி வுறீஇயின கொல்லோ”  (நற்.161:8-9)

    அக்காலத்தில் தன்னுடைய இல்லத்தருகிலே காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது இதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாட்டில் காணலாம். இன்றும் கிராமப்புறங்களில் அந்த நம்பிக்கை நீங்கா இடம்பெற்று விளங்குவதைக் காணமுடியும்.

    பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு       

    விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”    (குறுந்.210:5-6)

    தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் வந்து சேருவான் என முன்னமையே தெரிவிக்கும் செயலாகக் குயில் கூவுதல் பார்க்கப்படுகிறது. இதில் குயில் கூவுதல் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. இதனை நற்றிணைப் பாடலில் காப்பியஞ்சேந்தனார் குறிப்பிடுகிறார்.

                    “மனைமா நொச்சி மீமிசை மாச்சினை

                    வினைமான் இருங்குயில்; பயிற்றலும் பயிற்றும்” (நற்.246:3-4)

    வீரர்கள் போருக்குச் செல்லும்போது சில பறவைகளின் ஒலியைக் கேட்டும் சகுனம் பார்த்தார்கள். அவை வீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளன. இதனைக் கபிலர் பாட்டிலும் கழைதின் யானையார் பாட்டிலும் காணலாம்.

                    “புள்ளிடைத் தட்ப” (புறம்.124:1)

                    “புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை” (புறம்.204:10)

    பதிற்றுப்பத்து பாடல் கரிக்குருவியின் ஒலி அழிவுக்கு அறிகுறியாகக் கருதப்பட்டதைக் காட்டுகின்றது. ஆந்தையின் அலறலை தீய சகுனம் என நம்பினர்.

                    “கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க

                    நேய்த்தோர் தூஉயநிறை மகிழ் இரும்பலி

                    எறும்பும் மூலசா இறும்பூது மரபின்

                    கருங்கண் காக்கையொடு பருந்து இருந்துஆர

                    ஓடாப் புட்கை ஒண்பொறிக் கழல்கால்” (பதிற்.30:36-40)

    முரசுக் கடவுளுக்கு பலிகொடுத்து அவற்றை காக்கையும் பருந்தும் உண்டால் பெரும் வெற்றி கிட்டும் எனவும், மேலும் பேய் பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் எனவும் “கருங்கண் பேய் மகள் கைபுடைய” எனும் வரியின் மூலம் நாம் அறியலாம்.

    குறிகூறும் கட்டுவிச்சி

    கட்டுவிச்சியிடம் குறி கேட்கும் வழக்கம் தொல்தமிழ்  மக்களிடம்  இருந்து இன்று வரை வழக்கில்  இருக்கின்றது. குறி சொல்கின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பினார்கள். குறி சொல்லும்போது  குலதெய்வத்தை வழிபட்டுக் சொல்கின்ற முறை  இருந்திருக்கிறது. குறுந்தொகைப் பாட்டில் குறி சொல்கின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று அழைத்தமையை ஒளவையார் விளக்குகிறார்.

    அகவன் மகளே! அகவன் மகளே!

    மனக் கோப்பு  அன்ன நல்நெடுங் கூந்தல்

    அகவன் மகளே! பாடுக பாட்டே”     (குறுந்.23:1-3)

    இப்பாட்டில் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்து அழகாகச் சுட்டப்பட்டுள்ளது.

    பல்லியின் ஒலிபலன்

    பல்லி எழுப்பும் ஒலியை நற்சகுனமாகக் கருதுவது வழக்கமான ஒன்றாகவே கருதப்படுகிறது. செவிலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும்போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை அறிவித்ததாம்.

         “முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்

         வருவம் என்னும் பருவரல் தீரப்

         படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி” (நற்.169:1-3)

    பன்றியும் பல்லி சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 ஆகிய பாடல்களும் நற்றிணையில் 98ஆம் பாடலும் 169, 246 ஆகிய பாடல்களும் சகுனத்தை உணர்த்தி நிற்கின்றன. ஆண் பல்லி ஒன்று தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியையும் குறிப்பிடப்படுகின்றது. இதனை,

         “உகிர்நுதி புரட்டும் ஓசை போல

         செங்காற் பல்லி தன்துணை பயிரும்

         அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே”  (குறுந்.16:3-5)

    என்று புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ளார். பல்லியின் ஒலியைக் கேட்டு சகுனம் பார்த்தல், இன்றும் நம்மிடையே தொடர்ந்து வருகிறது. தற்காலத்தில் அதற்கென பஞ்சாங்க நூல்கள் கூட விற்கப்படுகின்றன. அவற்றில் மேனியில் பல்லி விழுகின்ற இடத்தினைப் பொறுத்து பஞ்சாங்கத்தில் அதன் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. அகநானூற்றின் 389ஆம் பாடல் பல்லியின் சொல் கேட்டு தன் பயணத்தைச் சிறிது நிறுத்தி பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர் எனவும் தெரியவருகின்றது.

    விரிச்சியும் உன்னமும்

    ஒரு குறிக்கோளை அடையும் பொருட்டு ஒரு செயலை தொடங்குகின்ற பொழுது பிறர் கூறும் சொற்களையே சகுனமாகக் கொள்வதாகும். இவ்வழக்கம் தொல்தமிழரின் வாழ்வியலில் இருந்துள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது. விரிச்சி என்பதன் பொருள் நற்சொல் கூறுதல் என்பதே ஆகும்.

    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்

    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.280:6-7)

    மற்றொரு செவ்வியல் நூலான முல்லைப்பாட்டிலும் இதற்கான சான்று காணப்படுகின்றன.

                    “நாழி கொண்ட நறுவீ முல்லை

                    அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது

                    பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்.9-11)

    தற்காலத்திலும் தமிழர் இல்ல நிகழ்ச்சிகளில் முதலில் வாழ்த்துபவர்களாக முதுமை, வயதான பெண்களே ஆவர். ஒரு செயலைத் தொடங்கும் முன் பெரியோர்களிடம் ஆசிபெறுதல் இதனுடன் தொடர்புடையதாகும். இம்முறை இன்றும் வழக்கத்தில் இருந்துவருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    உன்னம் என்பது ஒருவகை மரம் ஆகும். இம்மரம் தழைத்து வளர்ந்திருக்குமாயின் தாங்கள் தொடங்க இருக்கின்ற செயல் வெற்றி பெறும் எனவும் வாடி இருக்குமாயின் தீய செயலில் முடியக்கூடும் எனவும் குறிப்பு உணர்த்துவதாக நம்பப்பட்டது.

                    “பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்

                    புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ” (பதிற்.61:5-6)

    மேற்குறிப்பிட்ட செய்திகளின் வாயிலாகத் தொல்தமிழ் மக்களிடத்தே சகுனம் பார்க்கும் வழக்கம் வாழ்வியலோடு இணைந்து பிரிக்க முடியாத அங்கமாக இருந்ததை நன்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் தொல்தமிழர்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்கள் வானியல் சார்ந்த அறிவியலிலும் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்குக் கோள்களைக் கொண்டு ஆராய்ந்தறியும் திறனையும் பெற்றிருந்தனர் என்பதையும் நம்மால் மறுத்துவிடமுடியாது. எனவே தொல்தமிழரின் நம்பிக்கைகள் பல நம்மையும் அறியாமலேயே நம்முடன் தற்போதும் தொடர்ந்து வருகின்றன. அவற்றிற்குச் சான்றாகச் செவ்வியல் நூல்களின் வாயிலாக நம்பத்தகுந்த சான்றுகளின் மூலம் நாம் அறிந்தும் அவற்றினை அனுபவ ரீதியிலும் காண்கிறோம். இப்பழக்கங்கள் பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்விலும் தொடர்ந்து வருபவை என இங்கே அறியவும் முடிகிறது. எனினும் எதற்கெடுத்தாலும் சகுனம் பார்த்து நேரத்தைக் கழிப்பதை விட தான் மேற்கொள்ளும் செயலில் ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே வெற்றிக்கனி கிட்டும். நல்ல குணத்துக்கு சகுனம் ஒரு பொருட்டல்ல. “தீதும் நன்றும் பிறர்தர வாரா”(புறம்.192:2), “இடரிலும் தளரினும்” (தேவாரம்.ஆவடுதுறைப் பதிகம்.10) சகுனமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது.

    துணைநூற்கள்

    1. வையாபுரிப்பிள்ளை, ச., சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940
    2. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு,. வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,. 2ஆம் பதிப்பு,. 1958
    3. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
    4. தட்சிணாமூர்த்தி, அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும். ஐந்திணைப் பதிப்பகம், சென்னை
    Share
  • சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் கு.நா. கவின் முருகுவின் சுவரெழுத்து

    முனைவர். சு. செல்வகுமாரன்

      தமிழ் உதவிப் பேராசிாியர்,

        அரசு கலைக்கல்லுாாி ,

    பரமக்குடி – 623701

         யாப்பின் “பா” வகைகளை அடியொற்றி எழுதப்பட்டு வந்த தமிழ்க்கவிதை பாரதிக்குப்பின் வசனக்கவிதை என்றும், புதுக்கவிதை என்றும் ஒருவித உரைநடைச் சாயலில் வெளிவரத் துவங்கின. இக்கவிதைகள் புதிய பாடு பொருட்களில் சமூக அவலங்களை எடுத்துரைப்பினும் தனது கவிதைத் தன்மையினை இழந்து விட்டன என்றே சொல்ல வேண்டும். “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல” எனும் பழமொழிக்கிணங்க இன்று நாம் எல்லோரும் கவிஞர்களாகி விட்டோம். ஆம் கவிதைக்கான அழகியலற்ற உரைநடைக் கவிதையின் கவிஞர்களாகி விட்டோம். காலம் மரபுக் கவிதைகள் /கவிதையினை மறுத்து இன்னொரு தளத்தில் வேகமாக ஓடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் கவிஞர் கு.நா. கவின் முருகு இன்றும் மாறவில்லை. தமிழ்க் கவிதையின் தடம் மாறாமல்  நின்று தமது கவிதைகளை பெரிதும் ஆசிரிய விருத்தப்பாவினால் யாத்து தந்துள்ளார்.  இயல்பாகவே மிக எளிய இசை வடிவத்தோடு எளிய மக்களையும் கவிதையை வாசிக்கத்தூண்டும் ஒரு வடிவமாகும் இது. இன்னும் சொல்லப் போனால் மொழியின் அழகியல் தன்மையினையும் இவரது கவிதைகள் நிரம்பக் கொண்டுள்ளன.

        “சொற்களிலும் சொற்றொடர்களிலும் மேலும் சற்று விரிவான பகர்வுகளிலும் செய்யப்படுகின்ற அல்லது நிகழ்கின்ற வித்தியாசப் படுத்தல்கள் மொழியை அழகுறுத்திக் கலையாக ஆக்கி விடுகின்றன. உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை. இலக்கியம் என்ற மொழிசார் கலை, மொழியின் பிரத்தியேகப் பண்புகளை இயன்ற மட்டும் தனக்குரியதாக்கிக் கொள்கின்றது. இலக்கியத்திற்கு இது ஒரு விசேடத் தன்மையைத் தந்து விடுகிறது. இத்தகைய தன்மைதான் கவிதைத்தனம் அல்லது இலக்கியத் தனம் (Poeticalness / Literariness) என்று பேசப்படுகிறது. இதனால் மொழி சார்ந்த பொருள், மொழி சார்ந்த கலையாகி விடுகின்றது” (தமிழ் அழகியல், பக் – 25,26)

    என்று தி.சு. நடராசன் சொல்வது போல ஒரு குறிப்பிட்ட நிலையில் கவின்முருகுவின் கவிதைகள் அழகியல்நிரம்பிய கவிதையாக மாற்றம் பெறுகின்றது. எல்லா படைப்புகளும் அழகியல்ரீதியில் முழுமை பெறுவதில்லை என்பதும் இங்கு கவனத்திற்குரியது.   தனது முதல் கவிதையிலேயே அம்மா, அப்பா, ஆசானை எப்படி மறப்பேன் என கேள்வி எழுப்பும் கவின்முருகு அவர்களை மறக்கப்படக் கூடியவர்கள் அல்ல என்பதை சுட்டுவதோடு, அவர் மறக்கவில்லை என்பதும் நாமும் இவர்களை மறக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் தருகின்றன. ஆக கவிதை முழுமையும் கலைத்துவத்தை அழகியலை மீறி சீர்கெட்டு போகும் இன்றைய சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யும் அரிய கருத்துக்களின் பெட்டகமாக விளங்குகின்றன.

        ‘தந்தை சொல்லை மந்திரமாய் கொள்வேன் யானே’ என்று தந்தைக்கு கட்டுப்படும் மகனின் கூற்றாகவும், ‘அழுக்காடை நானுடுத்த மனந்தாளாதாள்’ என்னும் அம்மாவின் பாசத்தை யதார்த்தப்படுத்தும் ஒரு பிள்ளையின் குரலாகவும்,

         “பொல்லாங்கும் அழுக்காறும் இல்லாக் கல்வி

              பூத்திடவெ கற்பிக்கும் ஆசான்…”   (சுவரெழுத்து, ப – 21)

    என்பதோடு

         “வல்லமையை நாட்டிடவே எழுதும் பாட்டில்

              வந்தமர்ந்து சொல்தருவார் புனைய நற்பா” (சுவரெழுத்து, ப – 21)

    என ஆசானின், ஆசிரியரின் பெருமையை ஆற்றலை எடுத்துரைக்கும் நல் மாணவனின் சொல்லாகவும் விளங்குகிறது சுவரெழுத்து. மேலும் அழியாத, அழியக் கூடாத கல்வெட்டெழுத்தாகவும், மக்கள் மனதில் பதிய வேண்டிய சுவரில் சித்திரப்படுத்தப்பட்ட விளம்பர எழுத்தாகவும் சுவரெழுத்து விளங்குகின்றது என்றால் மிகையல்ல.

         நூலில் தமிழ் வணக்கம் துவங்கி தமிழுக்கென்றே சில கவிதைகளை படைத்தளித்துள்ளார். இவை கவிஞரின் தமிழ்ப்பற்றை, தமிழ் ஈடுபாட்டை வெளிக்காட்டி நிற்கின்றன. மட்டுமல்லாது இறைத்துதியாய் சிவத்துதியை அமைத்திருப்பதும் அவர்தம் இறை நம்பிக்கையை அடையாளப்படுத்தும் இடமாய் அமைகின்றது. “தனித்தமிழ் வாழ்க” எனும் கவிதை தனித்தமிழின் தேவையை, தாய் மொழியின் முக்கியத்துவத்தை புலப்படுத்தும் முதன்மையான கவிதையாக உள்ளது.

         “தனித்தமிழின் ஆட்சியிங்கு வேண்டும், எல்லாம்

             தமிழென்ப தாகிடவே வேண்டும், இன்பம்!

         இனித்தமிழ்த்தாய் பேசிடவே தமிழும் ஓங்கும்

             இன்பமாகித் திளைத்திடவே இனிது காப்போம்!

         தனியாட்சி செய்திடவே மொழியும் உண்டு!

             தமிழின்றி நமக்கென்று என்ன உண்டு!

         கனியாகப் பகிர்ந்திடுவோம் அலைகள் தாண்டி

             கருநமக்கே அடையாளம் தமிழே என்போம்!”  (சுவரெழுத்து, ப – 72)

         மேலும் இக்கவிதையின் தொடர்ச்சியாய் நம் தேசம் தமிழ் தேசம் மறக்க வேண்டாம் என்பதும், தமிழ் மட்டுமே நம் சொத்து அதனை இழக்க வேண்டாம் என்பதாகவும் வலியுறுத்தி பேசுகின்றார். அத்தோடு “பைந்தமிழே”, “தமிழைக் காப்போம்” போன்ற கவிதைகளின் வழி தமிழை உயரத்தில் ஏற்றிவிடும் ஏணியாகவும், உலகத்தின் ஒளி நல்கும் பொருளாகவும் பார்ப்பதும், தமிழை தாய் போல காத்திடவே உயிரும் ஈவோம். தமிழ் மணக்கும் சாம்பலாவோம் உயிரையேயீந்து என்று குறிப்பிடுவதும், கு.நா. கவின் முருகுவின் அடர்த்தியான தமிழ்ப்பற்றை உணர்த்தி நிற்கிறது. இதன் நீட்சியாகவே “தனி மாநிலம் தமிழ் மாநிலம்” கவிதையும் ஒலிப்பதைக் காண முடிகிறது.

         “பேசிடவே  தமிழென்ற மொழியின் பாலே

               பெருமையுண்டாம் நாட்டிற்கும் தமிழ் நாடென்றால்

          தேசியத்தில் தனித்து நிற்கத் தமிழ் நாடென்று

               தீவிரமாய் தனி மாநிலமாகச் செய்ய

          மாசில்லாத் தலைவர்கள் ஈந்த நாளாம்

               மகிழ்கின்றோம் இந்நாளில் தமிழனென்று

          பேசிடவும் வாழ்ந்திடவும் தமிழேயென்போம்

               பிரிவினைகள் இல்லாத நிலையில் நின்று” (சுவரெழுத்து, ப -90)

    மட்டுமின்றி வணக்கம் தமிழே, இனிமைத் தமிழே, ஈடில்லாத் தமிழ் மொழி, தமிழுக்கு ஏற்றமுண்டு, தமிழே ஆளும், செந்தமிழால் வாழ்வு என்பதாய் பொருள்பட “தமிழே நம் ஆளுமை” என்பதாய் பதிவாகியுள்ள கவிதையும் தமிழ் மொழி – இனம் – நாடு என்ற நிலையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

         “எந்தாயின் தமிழ்ப்பாலால் வாழும் நாங்கள்

               ஈடில்லா எம்மொழியால் உலகாள்வோரும்”  (சுவரெழுத்து, ப -56)

         மேற்சுட்டிய நிலையில் தமிழ், தமிழனின் மேம்பாட்டிற்காய் அரண் அமைக்கும் சுவரெழுத்து அத்தோடு நின்று விடவில்லை. மாறாகத் தமிழ்ச்சமூகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ச்சிகாண சாதி மத வேறுபாட்டை களையவும், அகிம்சையை, அறத்தை நிலை நிறுத்தவும், தீது கண்டால் ரௌத்திரம் கொள்ளவும், நாளையப்பொழுதை நமதுபொழுதாய் மாற்றவும் கவிதைவழி முயற்சிக்கின்றது.

         கவிஞர் தமிழின் சிறப்பை கற்பிப்பது போலவே சாதியின் அவலங்களை எதிர்த்தும்  அயராது குரல் கொடுக்கின்றார். தம் சுயச்சிந்தனையை சாதி எதிர்ப்புக்காய் முன்னெடுப்பதோடு, பாரதி போன்ற போராளிகளின் செயலினையும், சொல்லையும் தம் துணைக்கு அழைக்கின்றார். இனியொரு பிறவி வேண்டாம் எனும் கவிதையில்

         “இழி குலத்தில் பிறப்பெடுக்கும் பிறவி வேண்டாம்

               இன்னல்கள் தேற்றிடும் சாதி வேண்டாம்

          அழிகின்ற உடல் தானே என்றும் ஈதாம்

               அதிலென்ன சாதியென்றும் மதங்களென்றும்

          பழிசொல்லக் கீழ்சாதி மட்டுமென்ன

               பரத்தையரை வன்புணர நீங்கள் யாரோ

          ஒழித்திடவே நினைக்கின்ற எண்ணம் உண்டேல்

               உறித்தெறிய ஆணவமும் உடைகள் தானே” (சுவரெழுத்து, ப – 31)

    என்று சாதிஒழிப்பு குறித்த கருத்தியலை முன்னெடுக்கின்றார். இங்கு ஒழித்திடவே நினைக்கின்ற எண்ணம் உண்டேல் உரித்தெறிய ஆணவமும் உடைகள்தானே என அடையாளப்படுத்துவதன் மூலம் மனமிருந்தால் மார்க்கம்உண்டு என்பதையும் நினைவுபடுத்துகின்றார். ஆனால் இங்கு துரதிருஷ்டவசமாய் சாதியை ஒழிக்கின்ற மனம்தான் யாரிடமும் இல்லை என்பதை கவிதை நிறுவுகிறது.

         “தீமையை எரித்திடு” எனும் கவிதையில் தீயோர்களை நாட்டுக்கு கிடைத்த சாபப் பொருளாகப் பார்ப்பதும், ஆயுதமில்லாத தேசம் காண அன்பு அடிப்படைத் தேவையாக இருப்பதையும் அதற்கு ஆலயங்கள் சென்று வழிபட்டால் போதுமென்பதும், அவரின் நம்பிக்கை, அனுபவங்கள் சார்ந்ததாக மிளிர்கிறது. மேலும் மரங்களின் சிறப்பை பேசும் கவிதை, சமூகத்தின் அவலங்களை எடுத்துரைக்கும் “முற்றுப்புள்ளி” உள்ளிட்ட பல கவிதைகள் கவிஞரின் சமூக ஈடுபாட்டை கவிதை வழி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

         இன்றைய நவீன வாழ்வில் மனிதனின் வாழிடம், வாழ்க்கை முறை, கலை, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, சடங்கு என எல்லாமே மாறிப் போயுள்ளன. குறிப்பாக மக்கள் இன்று பெரிய அளவில் பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக புதிய நுகர்வுப் பொருட்களின் மீது அசை உள்ளவர்களாக விளங்குகின்றனர். உண்மையான மனமகிழ்வை விட்டு போலிகளை நாடிச் சென்று தம் வாழ்வை தொலைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனை பதிவு செய்யும் கவிதை,

         “யாரிடந்தான் தேடுவதோ நேர்மை தன்னை

              யாரைத்தான் நம்புவதோ ஞாலந்தன்னில் ”

    என்பதும்

         “நீதி சொல்லும் நிலையுமற்றுப் போனாரிங்கே

              நியாயங்கள் சவக்கிடங்குகள் பிணமாய்த் தூங்க”

         “வன்புணர்வு களவு கொலை கொள்ளை யென்றே

              வகையற்றுப் போகின்றார் மனிதரிங்கே”  (சுவரெழுத்து, ப -54)

    என்பதாகக் கூறி மனம் வருந்துகின்றார். மேலும் நிலமழித்து நிலம் விற்று மனைகள் கட்டி. நேர்த்தியான மாளிகைகள் வானுயரக்கட்டி கலங்களின்றி குவித்து விட்ட நெல் மணிகளின்றி உழவுத் தொழில் அழிந்து போகும் அவலத்தை புலப்படுத்துகின்றார்.

         கவிதையில் சாதிமத பேதங்களை கடுமையாகச் சாடும் அவர் ஓதி வைத்த மதநெறிகள் மறந்ததேனோ என மதநெறிகளின் மீது நம்பிக்கை கொள்வதும், கடவுள் வாழ்த்திற்காக சிவத்துதியை அமைத்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மேலும் தன்மானம் அற்ற மக்கள் உலகையாள இவர்களுக்கென சரித்திரம் எழுத என்ன இருக்கிறது என்பதாக சிந்திப்பதும், நிகழும் தவறினை சுட்டி என்னவென்று கேட்க யாருமில்லாத நிலையில் ஏமாற்றும் பித்தர்களே நலமாக வாழ்வதனையும் பேசும் கவிதை தன்மானம் காத்திட இந்த சமூகம் முடிவெடுத்து தரணியில் இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது.

         ஆக மேற்சுட்டியவாறு மனிதம் அவலமாகிப் போயுள்ளதை பேசும் சூழலில் விதைக்க  மறந்த மனித நேயம் என்றே ஒரு கவிதையில் என் தேசம் எங்கே போகிறது என கேள்வி கேட்கும் அவர் இழிநிலை நோக்கி போகத்தான் மனிதம் போல என தனக்குத் தாமே பதிலை இயலாமையாகத் தருகின்றார். கல்வி சந்தையாக்கப்பட்டு திருட்டுக் கொள்ளைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உணாத்துகின்றார். மேலும் சாதி மதம் குறித்து விவாதிக்கின்ற போது இனி உதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி பார்த்துத் தான் தோன்றும் போல என ஐயுறுகின்றார். இறுதியாக அடுக்கடுக்காக மனித அவலங்களை வரிசைப்படுத்தும் கவி இறுதியாக மானமற்றுக் கேவலமாய் உலகில் வாழ மக்களாகிப் போனவர்கள் தான் இன்றைய மக்கள் என்பதாக உரைப்பது காலரீதியில் குறிப்பிடத்தக்கப் பதிவாகும்.

         வள்ளுவரின் அறத்துப்பாலை போதிக்கையில் கொன்றார்க்கும் உய்வில்லை செய்த நன்றி கோமகற்கும் அதுவேயாகும் மாற்றம் இல்லை என்பதும், அகிம்சையை கற்பிக்கையில்

         “வாய்மையது வீழ்வதில்லை என்றும் எங்கும்

              வந்தனையும் செய்வார்கள் யாரோ நம்மில்

          மாய்ந்திடினும் மறவாமல் காக்க வேண்டும்

              மனிதருக்குள் அகிம்சை என்றும் உயிராய் மேவும்” (சுவரெழுத்து, ப -69)

    என்றும், மேலும் வாழ்வில் நம்பிக்கை பயக்கும் விதமாகவும், சிந்தனையோடு வழங்கியிருப்பதையும் பார்க்கமுடிகிறது.

         “எட்டிவிடும் தூரம்தான் வானம் என்றால்

              இனியென்ன மிச்சங்கள் இருக்குதிங்கே!

          இட்டுவிடு உச்சத்தில் கனவை வான

              எல்லைக்கே அப்பாலும் இல்லை உலகு

          தொட்டுவிடு நினைவாகும் கனவை உன்னுள்

              தொடரட்டும் செயலாக்கம்  வெல்லும் நினைவு” (சுவரெழுத்து, ப -82)

         தொகுப்பின் இறுதியாக “அவளென்பா” எனும் அருமையான ஒரு சிறுகாதல் காவியத்தையும் தந்துள்ளார். பாரதிபோல், பாரதிதாசன் போல் அதில் பயின்று வரும் மொழியின் அழகோ அழகு. தமிழ்ப் பண்பாட்டு மரபுக்குள் நின்று அவர் கவிதையில் கொண்டு சேர்க்கும் சொற்கள் மிக இனிமை. ஒரு ஆண் காதலில் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போகும் இடத்தை சுட்டும் வரிகள் வாசிக்கின்ற போது ஒரு ஆண்மகனை திரும்பி பார்த்து அசை போட வைக்கின்ற இடமாகிறது.

         “விழி தொடுக்கும் அம்புகளே போர்வாள் என்றால்

               வீழ்ந்திடுவேன் உன் மடியில் தோற்ற பின்னே

          மொழி தொடுத்தே இனிதாக்கி செப்பியாங்கு

               மோசத்தை விளைத்திட்ட விந்தை யாது

           பழித்தாலும் என் செய்வேன் பருவச் சீற்றம்

                பந்தியிட்டு முன்வருதே காதல் சொல்ல

          அழித்தாலும் அழியாது எழுதி வைத்த

                அன்பிற்கினிய காதல் என்று மென்னுள்” (சுவரெழுத்து, ப – 93)

         தொடர்ந்து வாடையிலே வீசுதுங்க குளிர்ந்த காற்று வசமாக வந்து சேர்ந்தா மாமன் பொண்ணு. சாடையிலே பேசுறாளே சமஞ்சபொண்ணு. கொசுவத்த இடுப்போடு செருகிவச்சா. ஓடையிலே தப்பி வந்த மீன் போல ஓசையற்று துள்ளுறேனே என்ன செய்ய என காதல் தன்னை ஆட்கொண்டுள்ள இயல்பை விவரிக்கின்றார். மட்டுமின்றி காதலின் அன்பையும், அதற்கு எழும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் அவர் உரிய நேரத்தில் ஓலை வைச்சி ஊருக்கு சொல்லிவிடுவேன் பரிசம் போட என்கிறார்.

         “யாருக்குச் சொல்வாயோ கனிந்த அன்பை

              யார் யாரும் சுடுவாரே தீஞ்சொல் கொண்டு

          போருக்கு எழுவாரே கொன்று வீழ்த்த

              பூவுக்கும் வேரறுக்க அஞ்சிடாரே

          தேருக்கு வடங்கட்டி இழுக்க யாரோ

              தேவதைக்கே அத்தை மகள் நானே தானே

          ஊருக்குச் சொல்லி விட நேரம் வந்தா

              ஓலை வச்சி சொல்லி விடுவேன் பரிசம் போட” (சுவரெழுத்து, ப -94)

    இவ்வாறாக பல்வேறு வர்ணனைகளோடு தொடரும் காவியத்தில் இறுதியாக இடைவளைய செங்கமம் எய்த அம்பாய் இன்மனத்தில் இன்னல்கள் தந்த பெண்ணாய் குடை விரிந்த வானமென மழையாய் பெய்து குணவதியாய் பூத்தாளே மனதில் நின்று என்பதாய் நிறைவடையச் செய்கிறார்.

         ஆக சுவரெழுத்து முற்றிலும் சமூகமேம்பாடு சார்ந்தும் இயற்கை, காதல், தமிழ், இறை சார்ந்தும் போலித்தன்மையற்ற கோட்பாட்டு கொண்டாட்டங்களற்ற தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டு, வாழ்வியல் மரபுக்குட்பட்ட நல்ல பல கவிதைகளை ஆக்கித் தந்துள்ளார். இதனை அவரது தமிழ்ச்சமூக கரிசனத்தின் வெளிப்பாடு என கொண்டாடலாம்.

    துணை நூற்பட்டியல்

    1. கு.நா. கவின்முருகு – சுவரெழுத்து, பூவரசி, முதல் பதிப்பு – 2017
    2. தி.சு. நடராசன் – தமிழ் அழகியல், காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு – 2012
    3. சாந்தன் – இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம், மூன்றாவது மனிதன், முதல் பதிப்பு – 2015
    4. மிலிட்டரி பொன்னுசாமி (தமிழில்) – கலையின் அவசியம், பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு – 2014.
    5. தி.சு. நடராசன், க.பஞ்சாங்கம் – தமிழில் திறனாய்வு பனுவல்கள், முதல் பதிப்பு – 2014.

    Share
  • நீண்ட ஆயுளைப் பெறும் வழிகள்

        முனைவர்.த.பாலமுருன்

      உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

        ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய

        கலை அறிவியல் கல்லூரி

                            கோயம்புத்தூர்-20

                    மனித உடலில் இரத்தம் ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவ்வொட்டம் சீராகவும் மாறியும் ஓடும். இவ்வாறு ஓடும் ஓட்டத்தினை கருதல் அளவையால் ஆராய்ந்து கணக்கிடும் முறைக்கு நாடி எனலாம். நாடிகளின் செயலால் உடல் இயக்கம் நடைறுகிறது. மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் உள்ளன எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். மூலாதாரத்திலிருந்து எழுபத்து இரண்டாயிரம் நாடிகள் கிளம்பி உடல் முழுவதும் பரவி,பெருக்கின்றன.

                    நாடிகள் 72000 என்றும் அவற்றுள் முக்கியமானவை 500 என்றும் அவற்றுள் சிறந்தவை 10 என்றும்  அவற்றுள் மிகச் சிறந்தவை மூன்று எனத் திருமூலர் கூறுகிறார். இதனை,

                                    “கால்- அது ஐந்நூற்று ஒருபத்து மூன்றையும்

                                    கால்- அது எண்மடி கொண்ட இவ்வாறே1”

    என்னும் பாடலின் மூலம் அறியலாம்.

    சிவயோகச் சாரம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நாடிகள் எழுபத்திராயிரம் இருக்கின்றன என்று கூறுகிறது.2  அவற்றுள் முக்கியமானது இருப்பது நான்கு. இந்நாடிகள் எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருக்கின்றன. குண்டலி என்னும் சக்திக்கு நடுவில் பத்து நாடிகள் மேலாகவும், பத்து நாடிகள் கீழ்ழாகவும் இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும் இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன. இந்த இருபத்து நான்கு நாடிகளுள் பத்து  நாடிகளை முக்கியமானதாகக் கூறுகின்றது.

                    மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் இருப்பதாகவும் அவற்றில் பத்து நாடிகள் மட்டும் சிறந்தவை எனத் திருமூலர் கூறுகின்றனர். இதனை,

                                    “எற்றியே எண்ணிடில் எழுபத்து ஈராயிரம்

                                    மற்றதில் பத்து வளமான நாடியே.3”

    என்னும் பாடலால்அறியலாம்.

    அவை, 1. இடகலை  2. பிங்கலை  3. சுழுமுனை  4. புருடன்  5. காந்தாரி  6. அத்தி  7. அலம்புருடன்  8. சங்குனி 9. சிங்குவை  10. குரு  என்பனவாகும். இந்த பத்து நாடிகளுள் மூன்று நாடிகளைச் சியோகச்சாரம் முக்கியமானதாகவும் கருதுகின்றது.4  அவை, இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பனவாகும்.

    மூவகை நாடிகளின் தோற்றம்

                    திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600 என்னும் நூலில் மூவகை நாடிகள் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இதனை,

                    “பாரும் இடைகலை பின்கலை மாறியே

                    தாரும் பெருவிரல் காலொடு தானேறி

                    காரும் கழுத்தில் கபாலம் வரை நின்று

                    வாரும் இடமாய் வலக்கரம் சாருமே5”

    என்னும் பாடலால் அறியலாம்.

    • இடக்கலை நாடி வலது கால் பெருவிரலிலிருந்து மேல் எழுப்பி மூலாதாரம் வழியாய் இதயத்துக்கு இடப்பக்கமாய் ஓடிகத்திரிக்கோலைப் போல் மாறித் தலையின் இடது பக்கமாய் நின்று, பின் இடது கையில் நிற்கும்.
    • பிங்கலை நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் எழும்பி மூலாதாரத்தின் வழியாக இதயத்துக்கு வலப்பக்கமாய் ஓடிகத்தரிக்கோலைப் போல் மாறிக் தலையின் வலது பக்கமாய் நின்று, வலது கையில் நிற்கும்.
    • சுழுமுனை நாடியானது முதுகெலும்புத் தண்டுவடத்தின் வழியாக மூலாதாரத்திலிருந்து தலையின் உச்சி வரை பாய்ந்து நிற்கும். இதனை,

                    “வலக்கரம் தன்னில் வளமான பின்கலை

                    நிலைத்த இடக்கரம் நின்றது இடைகலை

                    துலக்க நடுமையச் சுழிமுனை ஓடிடும்

                    பிலக்க இவை மூன்றால் பிறந்தது தாதுவே6”

    என்னும் பாடலின் வாயிலாக அறியமுடிகிறது.

    மேற்கண்ட பாடலின் மூலம் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூவகை நாடிகளின் இருப்பிடத்தை அறியமுடிகிறது.

    மூன்று நாடிகள்

                    நாடிகள் இயக்கத்தினால் ஒருவனின் வாழ்நாள் அதிகமாகவும் குறையவும் செய்யும். அதனால் அந்நாடிகளின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு மூச்சை சீராக இயக்க வேண்டும். நாடிகளின் இயக்கம், வாயுக்களைப் பொறுத்தே அமையும் எனலாம்.

    • பத்து நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறந்த நாடிகள். இவற்றின் வழியாய் மூச்சு (சுவாசம்) ஓடுகிறது.
    • இடகலை என்பது இடது மூக்கு வழியாக ஓடும் மூச்சு ஆகும். இதனைச் சந்திரக்கலை என்பர்.
    • பிங்கலை என்பது வலது பக்க மூக்கில் வரும் மூச்சு ஆகும். இதனைச் சூரியக்கலை என்பர்.
    • சுழுமுனை என்பது நடுநாடியாகும். இதனை அக்கினிக் கலை எனக்கூறுவர். இது இரண்டு நாசியிலும் பரவியோடும்.

                    இடகலை என்னும் சந்திரக்கலையைப் பெண் எனக் குறிப்பிடுவர். இதன் நிறம் கருமையாகும். பிங்கலை என்று சொல்லப்படும் சூரியக்கலையை ஆணாகக் கூறுவர். இதன் நிறம் வெண்மை ஆகும். சுழுமுனை எனப்படும் நாடியை அலி நாடி எனவும் கூறுவர்.

    இடகலை

                    இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் இருக்கும். இடகலையில் சுவாசம் சரிவர நடந்தால் உடல் நலத்துடன் இருக்கலாம்; இடகலையில் சுவாசம் நடக்கும் பொழுது, தாகம் நீர்விருத்தி, தீர்மானம் செய்தல், வேலை செய்தல், நகை செய்தல், நகை அணிந்து கொள்ளுதல், கோயில் கட்டுதல், தருமம் செய்தல், புதிய வீட்டிற்குக் குடிப்போகுதல் போன்ற செயல்களைச் செய்யும் பொழுது பயன்களைப் பெறலாம்.

    பிங்கலை

                    பிங்கலை என்பது வலப்பக்க நாசி, இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் செய்யும். இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் இருக்கும் பொழுது செய்யத்தக்கவையாக ஞானச்சர நூல் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது.7

                    குருவின் உபதேசம் பெறல், ஒருவரை வணங்குதல், எதிரியின் படையைத் துரத்தல், பயிர் விளைவித்தல், வியாபாரம் செய்தல், திருடல், தோடல், சவாரிப் போதல், சங்கீதம் பாடல் போன்ற செயல்களைச் செய்தால் நன்மை விளையும். இடகலை அல்லது பிங்கலையில் செல்லும் மூச்சின் அளவைப் பொறுத்து ஒருவரின் ஆயுள் நீளவோ அல்லது குறையவோ செய்கிறது. திருமூலர் கூறும் இச்செய்தியினைத்  தெளிவாக அறியலாம்.8

               இடகலை அல்லது பிங்கலை

             வழி இயங்கும் மூச்சின் அளவு                                        ஆயுள்

    1. 4 விரல் கட்டை அளவு                                 உயிர் இறைவனாகும் (ஆயுளை

                                                                                                                       நிர்ணயிக்க இயலாது)

    1. 5 விரல் கட்டை அளவு    100 ஆண்டு
    2. 6 விரல் கட்டை அளவு   80 ஆண்டு
    3. 7 விரல் கட்டை அளவு   60 ஆண்டு
    4. 8 விரல் கட்டை அளவு   50 ஆண்டு
    5. 9 விரல் கட்டை அளவு 33 ஆண்டு
    6. 10 விரல் கட்டை அளவு 28 ஆண்டு
    7. 15 விரல் கட்டை அளவு 25 ஆண்டு

    சுழுமுனை

                    சுழுமுனை நாடி என்பது இரண்டு நாசியிலும் வரும் சுவாசம், இதனை அக்கினிக் கலை என்றும் குறிப்பிடுவர். இதனின் நிறம் சிவப்பு. இந்நாடியை அஃறிணைப்பால் அல்லது அலி எனக் குறிப்பிடுவர். இந்த நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது சுவாசத்தைக் கட்டினால் (அளவு குறைந்தால்) மனத்திற்கும் உடலுக்கும் இன்பம் உண்டாகும். இந்நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது சமாதி யோகம் செய்தால் நன்மை நடக்கும், எனச் ஞானச்சார நூல் குறிப்பிடுகின்றது.9

                    சிவவாக்கியர் நாடிகள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இடகலை, பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளுக்குள் இடகலை பிங்கலை என்னும் நாடிகள் மட்டும் நாகப் பிணையில் போலப் பின்னிக் கிடக்கும் என்றும் இவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லும் எனவும் கூறுகின்றார். இடகலை, பிங்கலை நாடிகள் சங்கின் ஒசைப் போலவும் சுழுமுனை நாடி தாரை போலவும் நீளமாக இருக்கும் எனவும் கூறுகின்றார். இதனை,

                                    “சங்கு இரண்டு தாரையென்று சன்ன பின்னல் ஆகையால்

                                    மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை

                                    சங்கு இரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்

                                    கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழ்லா குமே10”

    இடகலை, பிங்கலை நாடிகளைத் தவிர்த்து சுழுமுனை நாடி வழியாகச் சுவாசத்தை வரவும் போகவும் செய்தால் சிவனுடன் அதாவது இறைநிலையை அடையலாம் எனவும் கூறுகிறார்.  இடகலை, பிங்கலை என்றும் இரண்டு நாடிகளையும் தவிர்த்து சுழுமுனை நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது இறைவனைக் காணலாம் எனத் திருமூலரும்  குறிப்பிடுகிறார்.

    சுழுமுனை நாடியின் பயன்

                    சுழுமுனை நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது ஓர் ஒளித் தோன்றும். அந்த ஒளியை நான்கு நாழிகை நேரம் உள்ளே நிறுத்தினால் முதியவர்களும் இளையவர் ஆவர். அப்பொழுது இறைவனைக் காணலாம். இது உண்மை உண்மை எனச் சிவவாக்கியர் வலியுறுத்திக் கூறுகிறார். அதனை,

                                    “மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை

                                    நாலுநாழி உம்முளே நாடியே யிருந்தபின்

                                    பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்

    ஆலமுண்ட கண்டராணை யம்மை யாணை யுண்மையே11”

    என்னும் பாடலால் அறியலாம்.

    நீண்ட நாள் உயிர் வாழ பன்னிரு அங்குலக் கனம் உள்ள மூச்சுக்காற்றை அடக்கி இடகலை என்னும் சந்திரக்கலையின் அமுதத்தை உண்ணக் கூடியவர் உடல், அழியாமல் நீண்ட காலம் இருக்கும் எனத் திருமூலர் கூறுகின்றார்.  எனவே, அந்நாடிகளை அறிந்து அந்நாடிகள் வழியாக மூச்சுக் காற்றினைச் செலுத்தினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். ஆறு விரற்கடை அளவு மூச்சுக் காற்று வெளியேறினால் எண்பது ஆண்டு ஆயுள் அமையும். ஏழு விரற்கடை மூச்சுக் காற்று வெளியேறினால் அறுபதாண்டு வாழலாம். இதனை,

    “ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்

                                    தெறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்

                                    ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்

                                    தெறியே நின்று தெளி இவ்வகையே12”

    என்னும் பாடலின் வழி அறியலாம்.

    எனவே,  நாடிகளை அறிந்து அந்நாடிகள் வழியாகச் சுவாசத்தைச் செலுத்தினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். சுழுமுனை நாடி வழியாகச் சுவாசம் இயங்கினால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.

       சுழுமுனை இயங்கும்

       நாட்கள்                                                 பயன்கள்

    1. 2 நாள்                          அபானனும், சந்திரனும் உயிருக்கு உதவும்
    2. 3 நாள்                           விந்து செயம் உண்டாகி ஆயுள் நீளும்
    3. 4 நாள்                            நாதம், சிவம், விந்து, சக்தி, ஆகிய

         நான்கும் அருவமாக உடல் தோன்றும்

    1. 5 நாள்                            சதாசிவம், பரசிவம், பராசத்தி காணலாம்
    2. 10 நாள்                            பராசத்தியுடன்,பரசிவத்தையும்

                                                                         தரிசிக்கலாம்

    1. 15 நாள்                            ஏகசிவத்தைக் காணலாம்
    2. 20 நாள்                           சகஸ்காரத்தையும், ஆறு

               ஆதாரங்களையும் காணலாம்

    1. 25 நாள்                            மூலாதாரம், சுவாதிட்டானம் என்ற

         இரண்டையும் கடந்து  பிறவற்றில்

                                                                               அனுபவம் பெறலாம்

    1. 26 நாள்                            விசுத்தி, ஆக்ஞை என்ற இரண்டின்

                                                                         அனுபவம் எய்தும்.

    1. 27 நாள்                           சிவத்தைப் பிறருக்குக் காட்டலாம்
    2. 28 நாள்                            ஆன்மா, சிவத்தோடு கலந்திருக்கப்

               பிறருக்கு உணர்த்தலாம்.

    நாடியும் கிழமையும்

                    ஒருவனுக்குச் சுவாசத்தின் இயக்கத்தைப் பொருத்து ஆயுள் வரையறை செய்யப்படும். அதனால் சுவாசத்தை ஒழுங்குப்படுத்தி எந்நாளுக்கு எந்நாடியில் சுவாசத்தின் இயக்கம் இருக்க வேண்டும் என அறிந்து, அந்நாட்களுக்குத் தகுந்த சுவாசத்தின் இயக்கம் இருந்தால் ஆயுள் நீளுவதுடன் இறைவனையும் அடைய வழி கிடைக்கும்.

    • இடகலை நாடியின் சுவாசம் வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் இருக்க வேண்டும்.
    • பிங்கலை நாடியின் சுவாசம் சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் இருக்க வேண்டும்.
    • வளர்பிறை வியாழனில் இடகலையிலும் தேய்பிறை வியாழனில் பிங்கலையிலும் சுவாசத்தை இயக்க வேண்டும்.

    மேற்குறித்த நாட்களில்  நாடிகளின் சுவாச இயக்கம் இருந்தால் நன்மைகள் பெறலாம் என்பது வெளிப்படை.

      அடிக்குறிப்பு

    1. திருமந்திரம், பா. 687.
    2. பெரிய ஞானக் கோவை, சிவயோகச்சாரம், ப.267.
    3. திருமந்திரம், பா.890.
    4. பெரிய ஞானக் கோவை, சிவயோகச் சாரம், ப. 268.
    5. திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600, பா. 20.
    6. மேலது. பா. 21.
    7. பெரிய ஞானக் கோவை, ஞானச்சர நூல், ப. 36.
    8. திருமந்திரம், பா.658.
    9. பெரிய ஞானக் கோவை, ஞானச்சர நூல், ப. 369.
    10. சிவவாக்கியர், பா. 21.
    11. பெரிய ஞானக் கோவை, சிவவாக்கியர், பா. 70.
    12. மேலது. பா. 767.

    Share
  • பண்புப் பெயர்ச்சொற்களில் கலைச் சொல்லாக்கத்தின் பங்கு

    முனைவர். நா.ஜானகிராமன்,

    தமிழ்த்துறைத்தலைவர்,

    பாரதிதாசன் பல்கலைக்கழகக்கல்லூரி,

    பெரம்பலூர்

     

    முன்னுரை

    உலக மக்களுள், தமிழர் தலைசிறந்த நாகரிகமுடையவர் என்பதை அவருடைய மொழியமைப்பும் கருத்துமே காட்டும் என்று ஞா. தேவநேயப்பாவாணர் சுட்டுகிறார். இத்தகைய சிறப்புவாய்ந்த நம் மொழியில் கலைச்சொல் பல உள்ளன. மொழியும் இலக்கணமும் , ஒன்றுடன்ஒன்று தொடர்புடையவை. இக்கட்டுரை சில பண்புப்பெயர் சார்ந்த கலைச் சொற்களை விளக்குகின்றது.

    கலைச்சொல்

    கலைச்சொல் என்பது technical term எனும் ஆங்கிலச் சொல்லின் மொழிப்பெயர்ப்பாகும். Technic  என்னும் ஆங்கிலச் சொல் Technicus எனும் இலத்தின் மொழியிலிருந்து பிறந்ததாகும். இந்த இலத்தின் சொல்லுக்குக் கலை என்று பொருள்.

    குறிப்பிட்ட அறிவுத்துறையில் இடம்பெறும் கருத்தமைவுகளை விளக்கும் சொற்கள் கலைச் சொற்களாகும்,  அவை அத்துறைக்குரிய சொற்களாகக் கருதப்பெறும். அவற்றைச் சிறப்புச்சொற்கள் (specialized vocabulary)  என அழைப்பர்.

    கலைச்சொல் என்பது சாதாரணச் சொல்லாக மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தன்மையையோ, நிகழ்வையோ, கருத்தமைவையோ, செயல்பாட்டையோ குறித்து நிற்பது. மேலும் கலைச்சொல் சிறப்புப் பொருள் தாங்கித் துறைசார்ந்து அமையும்.

    ஒருதுறையில் குறிப்பிட்ட கருத்துச் செறிவினை விளக்கப் பயன்படும் சொல் கலைச்சொல் எனப்படும். இது ஒவ்வொரு துறையிலும் தனித்தன்மைகள் பெற்று விளங்கும்.

    கலைச்சொல்லின்அமைப்பு

    ஒரு கலைச் சொல்லுக்கு ஒரு பொருள் என்ற நிலை இருக்க வேண்டும். இச்சொல் தனிச்சொல்லாகவும், தொகைச்சொல்லாகவும் அமைவதுண்டு. சமயம், தத்துவம், அறிவியல் போன்ற பலதுறைக் கருத்துக்கள் பிறமொழி பேசும் சமுதாயத்திலிருந்து மற்றொன்றிற்குப் புகும்போது கலைச்சொற்கள் உருவாகின்றன. இக்கலைச்சொற்கள் துறைச்சொல் என்றும் வழங்கப்படுகின்றன.

    குறிப்பிட்ட கருத்தினை மட்டும் உணர்த்தும் குறிப்பிட்ட ஒரு துறையைச் சார்ந்த மொழிக் கூறாகக் கலைச்சொல் அமைந்திருக்கும். சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவல்லது செறிவுடன் விளங்குவது கலைச்சொல்லின் தேவை குறிக்கப்படும் ஒரு பத்தியிலோ, பக்கஅளவிலோஎழுதவேண்டிய கருத்தை ஒரே சொல்லில் கூறமுனையும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் அனைவருக்கும் புரியக்கூடிய வகையில்இருக்கும் புதியகருத்துக்கள் அறிய உறுதுணையாகிறது. புதிய தொழிநுட்பவியல் மற்றும் அறிவியல் சொற்களைமக்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்கள் அறிய உதவும். வெளிநாடுகளில் உள்ள தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள் பற்றித் தெரிந்து கொள்ளவும், அவற்றை நம் நாட்டில் செயல்படுத்தி நாடு வளர்ச்சி அடையவும் பயன்படுகிறது.

    பண்புப்பெயர்கள்

    தமிழ்மொழிபெயர்களைஆறுவகைகளாகப்பகுத்துக்கொண்டுள்ளது.

    1. பொருட்பெயர்
    2. இடப்பெயர்
    3. காலப்பெயர்
    4. சினைப்பெயர்
    5. பண்புப்பெயர்
    6. தொழிற்பெயர்

    ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயராகும். நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள் பண்புப்பெயர்களாகும். செம்மை, சிறுமை, சேய்மை, நன்மை, இளமை, புதுமை போல் வனவும் இவற்றிற்குரிய எதிர்ச்சொற்களும் இவை போன்ற பிறவும் மையீற்றுப் பண்புப்பெயர்கள் எனப்படும்.

    கருங்கண் = கண்ணேறு (திருஷ்டிதோஷம்)

    கருங்கந்து= நெற்களத்தில்பொலிக்குஅடுத்துவிழும்பதர்

    கருங்கறி = வளமானசதை

    கருங்காடு = சுடுகாடு

    கருங்காய் = இளம்பாக்கு, கொஞ்சங்குறையமுற்றியகாய்

    கருங்குணம் = தீக்குணம்

    கருங்கூத்து = இழிதரக்கூத்து, அநாகரிககூத்து

    கருங்கை = வேலையில்அடிபட்டுகருத்தகை, வலியகை, கொல்லுங்கை

    கருஞ்சருக்கு = கூலம், (தானியம்), சாறாயம்

    கருஞ்சார் = இடுப்புப்பொருத்து(Hip Joint)

    கருஞ்செய் = நன்செய்

    செங்களம் = போர்க்களம்

    செங்காய் = பழுக்கும்பருவக்காய்

    செங்காய்ப்புண் = பழுக்காதபுண்

    செங்குணக்கு = நேர்கிழக்கு

    செங்குத்து = நேர்க்குத்து

    செங்கை = கொடைக்கை

    செங்கோடு = செங்குத்தானமலை

    செங்கோல் = நேர்மையானஆட்சி, நேரானகோல்

    செஞ்ச, செஞ்சேவே = நேராகமுழுதும்,

    செஞ்சம், செஞ்சு = (நேர்மை), சரிமை (correctness) முழுமை

    செஞ்செல் = நேர்மையானசெயல்

    செஞ்செவியர் = செல்வர்

    செஞ்செழிப்பு = பெருஞ்செழிப்பு, ஏராளம்.

    செஞ்சொல் = திருந்தியசொல் , வெளிப்படைச்சொல்

    செஞ்சோறு = அரசன் தன் பொருட்டுப் போரில் இறக்க கருதிய வீரனுக்குக் காலமெல்லாம் அளிக்கும் சோறு

    செஞ்ஞானி = சிறந்தஞானி

    செந்தட்டு = அந்தரத்தட்டு, தன்மேல் விழும் அடியைத் தடுக்கை, ஏவின காரியத்தைத் தட்டுகை.

    செந்தமிழ் = இலக்கணத்தமிழ், தூயதமிழ்

    செந்தவிப்பு = செழிப்பு

    செந்தூக்கு = நேராகத்தூக்குகை.

    செந்தொடை = மோனையெதுகையில்லாதயாப்பு

    செந்நடை = செவ்வியநடை

    செந்நெறி = செவ்வியவழி , நன்னெறி

    செந்நிலம் = போக்களம்

    செந்நிறுவுதல் = நன்னெறியில்நிறுத்துதல்

    செம்பத்தி = உண்மையானஅன்பு

    செம்பாகம், செம்பாதி, செம்பால் = நேர்பாதி

    செம்புண் = ஆறும்நிலையிலுள்ளபுண்

    செம்பொருள் = நேர்பொருள், உண்மைப் பொருள், சிறந்த பொருள் , கடவுள் அறம்

    செம்மல் = தலைமை , வலிமை, தலைவன், இறைவன்

    செம்மாத்தல் = இறுமாத்தல், மிகமகிழ்தல்

    செம்மொழி = நற்சொல், திருந்தியமொழி.

    நீலம்

    நீலன் = கொடியன்

    நீலி = கொடியவள்

    பசுமை = இளமை,ஈரம், குளிர்ச்சி, அழகு, இனிமை, புதுமை

    பச்சுடம்புபச்சையுடம்பு = பிள்ளைப்பேற்றால்இளந்தவுடம்பு

    பச்சை = இடக்கர், வெளிப்படை

    பச்சைக்கள்ளன் = பெருந்திருடன்

    பச்சைக்குறவன் = பெரும்பாசாங்குக்காரன்

    பச்சைக்கொல்லண் = வேலைத்திறமையற்றகொல்லன்

    பச்சைப்பதம் = கூலத்தின்முற்றாப்பருவம், நன்றாய்வேகாதநிலை

    பச்சைப்புண்பசும்புண் = ஆறியிராதபுண், புதுப்புண்

    பச்சைப்புளுகன் = பெரும்பொய்யன்

    பச்சைப்பூ = பால்குடிக்கிறகுழந்தை

    பச்சைப்பேச்சு = இடக்கர்ப்பேச்சு, மறையாப்பேச்சு

    பச்சைப்பொய் = முழுப்பொய்

    பச்சைப்பசும்பொய் = பெருமுழுப்பொய்

    பச்சைமண் = இளங்குழந்தை

    பச்சைவெட்டு= பக்குவம்செய்யப்படாதநிலை, பழுக்காதநிலை

    பச்சைவெட்டுக்கல் = சுடாதகல்

    பசுங்குடி = யோக்கியமானகுடி, உழவன்

    பசுந்தமிழ், பைந்தமிழ் = இனியதமிழ்

    பசும்பை = வணிகர்தோளில்மாட்டிக்கொள்ளும்நீண்டபை

    பைங்கூழ் = இளம்பயிர்

    பைஞ்சோறு = சாணம்

    பொன்மை = பொலிவு, அழகு, விளக்கம்

    பொற்ப = பொலிவுபெற

    வெண்மை = வெறுமை, வெளிப்படை, அறிவின்மை, கள்ளமின்மை, உள்ளீடின்மை

    வெண்கடன் , வெண்ணிலைக்கடன் = ஈடுகாட்டாதுவாங்குங்கடன்

    வெண்காவல் =வெறுங்காவல்

    வெண்கை = தொழில்செய்துபழகாதகை

    வெண்சோரு = வெறுஞ்சோறு

    வெண்டேர் = கானல் (Mirage)

    வெண்ணிலம் = வெறுந்தரை, மணல்தரை

    வெண்ணோவு , வெண்ணோக்காடு = பிள்ளைப்பேற்றிற்குமுன்உண்டாகும்வெறுவேதனை.

    வெண்பதம்= இளஞ்சூட்டுப்பதம்

    வெண்பாட்டம் = முன்பணமின்றிவிடுங்குத்தகை

    வெண்புழுக்கல், வெண்புழுக்கு, வெண்புழுங்கல் = இளம்புழுக்கல், இளம்புழுங்கலரிசி

    வெண்மட்டக்கருத்து = மேலெழுதவாரித்தீர்மானம்

    வெண்மட்டம் = மேலெழுந்தவாரி , நுணுக்கமின்மை

    வெண்மட்டவேலை = நுணுக்கமில்லாத வேலை, மேலெழுந்தவாரியாகச்செய்யும்

    வேலை

    வெள்வீச்சு = ஆடம்பரப்பேச்சு

    வெள்வெடி = குண்டு இல்லாத தோட்டா

    வெள்ளந்தி = கள்ளங்கபடற்றவன்

    வெள்ளடி = சாதாரணம்

    வெள்ளடிவெருட்டு = பெட்டைமிரட்டு

    வெள்ளவெளி = பரவெளி

    வெள்ளறிவு = அவிவேகம்

    வெள்ளிடி = கோடையில் மழை பெய்யாது இடிக்கும் இடி எதிர்பாராது திடுமெனவரும் துன்பம்

    வெள்ளிடை , வெள்ளிடைமலை = மிகத்தெளிவாகயிருப்பது

    வெள்ளிது = வெளிப்படையானது

    வெள்ளிலை = வெற்றிலை

    வெள்ளுயிர் = தூயஆன்மா

    வெள்ளுருட்டு = வெற்றச்சுறுத்தம்
    வெள்ளுழவு = சிறிதுஈரமுள்ளநிலத்தில்உழும்உழவு

    வெள்ளெழுத்து = எழுத்து விளக்கமாய்த் தெரியாமைக்கான பார்வைக் குறை

    வெள்ளென = அதிகாலையில் , இருட்டுமுன், குறித்த காலத்திற்கு முன்பே

    வெள்ளேடு =வெற்றேடு

    வெள்ளேறன் = பழுதானஇரும்பு

    வெள்ளை = கள்ளமற்றவன்

    வெள்ளைக்கவி = பொருட்செறிவில்லாத பாட்டு

    வெள்ளைக்கோட்டி = பயனில் பேச்சு, பயனிலபேசும் அறிவிலார் கூட்டம்

    வெள்ளைச்சொல் = எளிய சொல், திருந்தாச்சொல்

    வெள்ளைத் தமிழ் = எளிய நடைத்தமிழ்

    வெள்ளைத்தனம் = கள்ளமின்மை

    வெள்ளைநோக்கு = கள்ளமற்றப் பார்வை

    வெள்ளைப்புண் = ஊன் வெளுத்து எளிதில் ஆறாத புண்

    வெள்ளைப் பூச்சு = தவற்றை மறைத்தல்

    வெள்ளைப் பேச்சு = வெளிப்படையானப் பேச்சு, கள்ளமற்ற பேச்சு

    வெள்ளைப் பூசுதல் = தவற்றை மறைத்தல்

    வெள்ளை மகன் = மூடன்

    வெள்ளை மதி = அறியாமை, அறிவுக் குறைவு

    வெள்ளை மழை = சிறுமழை

    வெள்ளை மனம் = கவடற்ற மனம்

    வெள்ளொக்கல் = குற்றமற்ற இனம், செல்வமுள்ள கிளைஞர்

    வெள்ளோக்காளம் = உமிழ்நீரை மட்டும் வெளியேற்றும் குமட்டல்.

    வெள்ளோட்டம் = புதுத்தேரை முதன்முதலாக ஓட்டிப் பார்த்தல், பயன்படுத்துவதற்கு

    முந்திய ஓட்டம். (பரீட்சை)

    வெள்ளோலை = எழுதப்படாதஓலை

    தொகைமொழியின் வகை

                           “வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே

                            வினையின் தொகையே பண்பின் தொகையே

                            உம்மைத் தொகையே அன்மொழித் தொகையென்று

                            அவ்வா றென்ப தொகைமொழி நிலையே” (தொல் சொல் நூ. 406)

    தொகை மொழிகள் ஆறு வகைப்படும் அவை,

    1. வேற்றுமைத்தொகை
    2. உவமத்தொகை
    3. வினைத்தொகை
    4. பண்பின் தொகை
    5. உம்மைத்தொகை

    6.அன்மொழித்தொகை

    பண்புத்தொகை

    வண்ணத்தின் வடிவின் அளவிற் சுவையினென்

                              நன்ன பிறவும் அதன்குணம் நுதலி

                              இன்ன திதுவென வரு உம் இயற்கை

                              என்ன கிளவியும் பண்பின் தொகையே (தொல் சொல் .நூ. 410)

    வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவற்றினும் , அத்தன்மைய பிறவினுமாகிய , ஒரு பொருளினது குணத்தைக் கருதி இன்னது இது என ஒன்றையொன்று விசேடித்து வரும் இயல்பினை உடைய எல்லாச் சொல்லும் பண்புத்தொகையாம்.

    பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து ) வரும் பெயர்ச்சொல். ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர்.

    1. நிறத்தைக் குறிக்கும் பண்புப் பெயர்ச் சொற்கள்

    செம்மை, பசுமை, வெண்மை, கருமை

    1. வடிவத்தைக் குறிக்கும் சொற்கள் – வட்டம் ,சதுரம்
    2. சுவையைக் குறிக்கும் சொற்கள் – இனிமை, கசப்பு
    3. குணத்தைக் குறிக்கும் சொற்கள் –நன்மை, தீமை
    4. எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்கள் – ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

    (எ.கா)

    வெண்கரடி  =வெண்மை+கரடி

    வட்டக்கோடு = வட்டமான கோடு

    புளிச்சோறு = புளிக்கும் சோறு

    பெருங்கடல் = பெருமை (பெரிய) +கடல்

    மூவேந்தர் = மூன்று + வேந்தர்

    இரு பெயரொட்டுப்பண்புத்தொகை

    பண்புப் பெயர்ச் சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்த்து வருமாயின் அவை பண்புத்தொகை எனப்படும். அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப்பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இரு பெயரொட்டுப்பண்புத்தொகை எனப்படும்.

    (எ.கா)

    கைத்தலம், பலாமரம், மடித்தலம், இந்தியநாடு, வெண்தயிர், கருஞ்சிலை,  ஒண்டொடி, விற்படை, நாற்படை.

    பண்புப்பகுதிகள்விகாரப்படுதல்:

    ஈறுபோதல்இடைஉகரம்இய்யாதல்

    ஆதிநீடல்அடிஅகரம்ஐயாதல்

    தன்னொற்றிரட்டல்முன்னின்றமெய்திரிதல்

    இனமிகல் , இனையவும்பண்பிற்கியல்பே(நன்னூல் 136)

    எடுத்துக்காட்டு :

    பண்புத்தொகை விரி விளக்கம் விதி
    நல்லன், சிறுபொருள் நன்மை+அன், சிறுமை+பொருள் மையிறுதிகெட்டது. ஈறு போதல்
    கரியன், சிறியிலை கருமை+ அன், சிறுமை+ இலை விகுதி போய் உகரம் இகரம் ஆயிற்று இடை உகரம் [இ] ஆதல்
    பாசி, மூதூர் பசுமை+ ஊர். முதுமை+ ஊர் விகுதி போய் ஆதி நீண்டது ஆதி நீடல்
    பைந்தார் பசுமை+ தார் மைவிகுதிகெட்டுபசு’ என நின்றதில் ‘சு’ என்பதில் உகரம் இகரம் ஆயிற்று. அடி அகரம் ஐ ஆதல்
    குற்றி, நட்டாறு குறுமை+ ஆறுநடுமை+ ஆறு விகுதி போய் இறுதி எழுத்தின் தன் ஒற்று இரட்டியது தன் ஒற்று இரட்டல்
    செய்யன், செம்மை + அன் விகுதி போய் முன் நின்ற மெய் திரிந்தது முன் நின்ற மெய் திரிதல்

    மேலும்சில (,கா)

    அருமை + உயிர்  = ஆருயிர்

    அருமை +வினை = அருவினை

    அருமை+பொருள் = அரும்பொருள்

    இளமை+ அரசு = இளவரசு

    இனிமை +நகை= இன்னகை

    இனிமை+ நிழல் = இந்நிழல்

    கடுமை+கதிர் = கடுங்கதிர்

    கடுமை+ தவம் = கடுந்தவம்

    சிறுமை+ இல் = சிற்றில்

    சிறுமை+ பொழுது = சிறுபொழுது

    சிறுமை + ஊர் = சிற்றூர்

    செம்மை+ கதிர்= செங்கதிர்

    செம்மை+கை = செங்கை

    செம்மை+ தாமரை =செந்தாமரை

    செம்மை + நெல் = செந்நெல்

    செம்மை+கோலம் = செக்கோலம்

    செழுமை + குரங்கு= செழுங்குரங்கு

    தண்மை+ தார் =தண்டார் (தார் – மாலை)

    தண்மை+ தாமரை= தண்டாமரை (தன்மை – குளிர்ச்சி)

    தண்மை +தேன் = தண்டேன்

    தீமை+ தண்டம் = தீத்தண்டம்

    தொன்மை+ நிறம் = தொன்னிறம்

    நன்மை + ஆசிரியர் = நல்லாசிரியர்

    நன்மை+ ஆறு =நல்லாறு

    நன்மை+ கருமம் = நற்கருமம்

    நன்மை+ மரம் =  நன்மரம்

    நன்மை+ மருந்து = நன்மருந்து

    நெடுமை + கிரி = நெடுங்கிரி

    நெடுமை + புயல் = நெடும்புயல்

    பசுமை + கிளி = பைங்கிளி

    பசுமை+ சோலை = பசுஞ்சோலை

    பசுமை+ தலை = பைந்தலை

    பசுமை + தமிழ் = பைந்தமிழ், பசுந்தமிழ்

    பசுமை+ கொடி= பைந்தொடி

    பசுமை + தரு = பழந்தரு (தரு – மரம்)

    பெருமை+ அறிவாளன் = பேரறிவாளன்

    பெருமை+ அழகு = பேரழகு

    பெருமை+ கடல் = பெருங்கடல்

    மூன்று+ நீர் = முந்நீர்

    மும்மை + தமிழ் = முத்தமிழ்

    வளமை+ அரசு = வளவரசு

    வன்மை+ திறன் = வன்றிறல்

    வெண்மை+ குடை = வெண்குடை

    வெறுமை +கை = வெறுங்கை

    வெறுமை+ தேர் = வெறுந்தேர்

    வெறுமை + இடம் = வெற்றிடம்

    வெறுமை+ இலை = வெற்றிலை

    மேலும்சிலபண்புப்பெயர்ப்பகுதிகள்:

    செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை, வெண்மை, கருமை, பசுமை, பொன்மை, பெருமை, அண்மை, நன்மை, பருமை, இளமை, முதுமை, எளிமை, அருமை, குறுமை, நெடுமை, மடமை, புலமை, வெறுமை, நடுமை,முதலியனபண்புப்பெயர்பகுதிகளாகும்.

    முடிவுரை

    தமிழ்கலைச் சொற்கள் எனப்படுபவை துறைசார் தகவல்களை துல்லியமாக பகிர்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிறப்புத் தமிழ் சொற்கள் ஆகும்.  கலைச் சொல் ஆக்கமும், பயன்பாடும் தமிழ் மொழியில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு செயற்பாடே எனினும் கடந்த சில நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தகவல் புரட்சிகளில் காரணமாக கலைச் சொற்களின் தேவையும் பயன்பாடும் பல வழிகளில் வளர்ச்சி பெற்றுள்ளன.

    துணைநூற்பட்டியல்

    1. தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)
    2. உயர்தரக்கட்டுரைஇலக்கணம் ( 2)

    மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் பதிப்பாசிரியர் புலவர் அ. நக்கீரன்

    பதிப்பாளர் கோ. இளவழகன்.

    1. அறிவியலும் தமிழும் (கட்டுரை தொகுப்பு)

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181124 Dialogue with Arjuna Icam Canson 200gsm A4 (Lord is present in every heart. The mind pays obeisance to him in the form of the cow) wm

    ‘கன்றது கைநெல்லி,நின்றனுமன் கும்பிட,
    வென்றிட வேறென்ன வேண்டுமோ! -இன்றுனது
    உள்ளத்தின் சோர்வதனை கிள்ளியெறி, கீதைகேள்
    உள்ளங்கை நெல்லி உனக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181123_Lotus leaf – DWA Canson 200gsm A4 icam wm

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    அஞ்சின் அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
    பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு(நெருப்பு)….கிரேசி மோகன்….!

    Share
  • கல்வியை  நவிலும் அறவிலக்கியங்கள்

      -முனைவர் இரா. இராமகுமார்                              

    அறிமுகம்

                “ மாற்றம் பெறச்செய்யும் விடையாய்
    ஏமாற்றம்
    இல்லாத கொடையாய்
    காலமறிந்து
    பயிர்செய்யின் உயிராய்
    காலனையும்
    உய்த்து உணர்வாய்
                 கண்ணிமைக்குள் கல்வி காதலியானால்
    காதலிப்பதும்
    முப்பொழுதும் சுகமே
    காலமெல்லாம்
    எப்பொழுதுமில்லை சோகமே……..! ”

    மனிதன்  வாழ்க்கை முழுவதும்கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. படிப்புக் கல்வி முதல் பட்டறிவுக் கல்வி வரை மானுட குலத்தின்  சமூகக் கற்றல் தொடர்கின்றது.  பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமையினை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது. நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குவதில் கல்விக்குத் தனிப்பங்குண்டு. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவாகும் போது கல்வியில் இன்பம் தோன்றுகிறது. இன்றைய உலகில் கல்வி இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது என்பதினை மறுப்பாரிலர். எந்தவொரு சமூகத்தினரும் கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்துச் சமூகங்களும் புரிந்துள்ளன. கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும். கல்வி கற்றவன் ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது என்பது மிகவும் சிரமமானதாகும். பண்டைய அறவிலக்கியங்கள் கல்வியின் மேன்மையினைச் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன.

    அறவிலக்கியங்கள்

    சங்க காலத்திற்குப் பின்னர் சங்கம் மருவிய காலம் சமணசமயச் செல்வாக்கு மிக்கிருந்த காலமாக இருந்துள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  இந்தக் காலப் பகுதியில் பாடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் இவ்வகை அறநூல்களை எண்வகை வனப்புகளில் ஒன்றான அம்மை என்பதாக வரையறை செய்துள்ளார்.

               “சின்மென் மொழியால் தாய பனுவலோடு
    அம்மை
    தானே அடிநிமிர்பின்றே” ( தொல்.செய்யுளியல். 235)

    தொல்காப்பியம் மற்றும் உரையாசிரியர்களின் விளக்கங்களினை முதன்மையாக வைத்துப் பிற்கால இலக்கண நூலார்,

                “அடிநிமிர் பில்லாச் செய்யுட் தொகுதி
    அறம்
    பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
                  திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்  (பன்னிரு பாட்டியல் 542)

    என்று இலக்கணம் வகுத்தனர். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவைகளைப் பதினெண் மேல்கணக்கு என்றும், பின்னர்த் தோன்றிய  பதினெட்டு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் குறிப்பிடும் மரபு இலக்கிய வரலாற்றில் உண்டு. சங்க காலத்திற்குப் பிறகு கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை அறத்தினை  வலியுறுத்தும் வகையில் நீதி நூல்கள் பல்கிப் பெருகின.  தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலம்  இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்டக் காதலும் வீரமும் பின் தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

                                 ” நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
                                   பால் கடுகம் கோவை பழமொழி மா மூலம்
                                   இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
                                   கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு.”

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள் , திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம்,  முதுமொழிக் காஞ்சி, ஏலாதி,   ஆகிய பதினொரு அற நூல்களிலும் கல்வியின் சிறப்புத் தன்மைகள்  எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    நாலடியார்

    உள்ளத்தால் நல்லவர்களால் வாழும் வாழ்க்கை வழி நெறி தவறாத வழிச் செலுத்தும் கல்வியே ஒருவருக்குச் சிறந்த அழகு சேர்க்கும் அணிகலனாகும். உடல், கூந்தல், ஆடை, ஒப்பனை, அணிகலன் போன்றவை ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகாது. கல்வியே அழகு தரும் என்பதனை நாலடியார் நவின்றுள்ளது.

                               “ குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
                                  மஞ்சள் அழகும் அழகல்லநெஞ்சத்து
                                 நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
                                 கல்வி அழகே அழகு”  (நாலடி – 131)

       நான்மணிக் கடிகை

    ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றால் அவன் அறியாமையானது குறையும், அறியாமை குறைந்தால் புல்லறிவு நீங்கி இவ்வுலக இயற்கையை அறிவான். இவ்வாறு அறிந்தால் மெய்ந்நெறியாகிய ஞானநெறியில் செல்வதற்குரிய நிலைபெறுவான். அவ்வாறு செல்லின் இவ்வுலகில் பெற வேண்டிய புகழை நிலைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான் என்று நான்மணிக் கடிகை விளம்பியுள்ளது.

                     கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
    புற்கந்தீர்ந்து
    இவ்வுலகின் கோளுணரும்
    கோளுணர்ந்தால்
    தத்துவ
    மான நெறிபடரும் அந்நெறி
    இப்பால்
    உலகின் இசைநிறீஇஉப்பால்
    உயர்ந்த
    உலகம் புகும்.” (கடிகை. 30 )

    இன்னா நாற்பது

    1.கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் தனி மதிப்பு உண்டு. கல்லாதவர் எத்துணைப் பெரிய செல்வராயிருந்தாலும் அவர்கள் கூறும் செயல்கள் நன்மை தராது. 2.நற்குடியிற் பிறந்தவன் கல்லாமல் இருப்பது துன்பம் தரும். 3.கல்வியால் நிறைந்து அடங்கிய பெரியோர் நடுவே அறிவில்லாதவன் துன்பம் படுவான். 4.அடக்கம் கல்வியுடையோரிடம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் அவர்கள் துன்பம் அடைவார்கள் என்பதினை   இன்னா நாற்பது எடுத்துரைத்துள்ளன.

          கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா(இன். நாற். – 15)
    குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா”  (இன்.நா.20:1)
    ஆன்றவிந்த சான்றோட் பேதை புகலின்னா”  (இன்.நா.18:1)
    ஆங்கின்னா அடக்க அடக்காதார் சொல்(இன்.நா.41)

    இன்னியவை நாற்பது

    1.பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. 2.குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். 3.சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. 4.கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. 5.அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. 6. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை என்று கல்வியின் மேன்மையினை இன்னியவை நாற்பது புலப்படுத்தியுள்ளன.

     “பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே(இனி. நா. 1)
    நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே (இனி. நா.3)
    கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே; “(இனி. நா.12)
    கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே( இனி. நா.16)
    புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே( இனி. நா. 20)
    கற்றலின் காழ் இனியது இல்( இனி. நா.40)


    திருக்குறள்

    குறள் நவிலும் கல்வி அதிகாரத்தில்  ஒருவருக்குத் தம் வாழ் நாளில் கல்வியானது எவ்வகையினில் எல்லாம் பெருமையினைத் தரும் என்பதினை வள்ளுவர் பத்துக் குறட்பாக்களில் நயம்படத் தெரிவித்துள்ளார். பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.எனவே எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

                 “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க
    அதற்குத் தக” (குறள் 391)

                  “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப
    வாழும் உயிர்க்கு” (குறள் 392)

    என்கிறார். கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஆகவேகல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.

                   “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர்
    கல்லா தவர்(குறள் 393)

                  “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே
    கல்லா தவர்(குறள் 395)

    மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவினில் சிறந்தோர் செயலாகும். தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிடவே விரும்புவார்கள். கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாகும்; எல்லா ஊரும் சொந்த ஊராகும். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன் என்னும் வினா சமுதாயத்தில் புரையோடி கிடந்த அறியாமை கருத்தில் கொண்டு தொடுக்கப்பட்டதாக உள்ளது.

                  “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே
    புலவர் தொழில்.(குறள் 394)

                   “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர்
    கற்றறிந் தார்(குறள் 399)

                  “யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங்
    கல்லாத வாறு(குறள் 397)

    கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்பதால் ,மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும் என்பதோடு,ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையப் பெற்றுவிடும்; இது தெய்வப்புலவரின் தெய்வீக வாக்காக உள்ளது.

                  ”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல
    மற்றை யவை(குறள் 400)

                 “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்
    தூறும் அறிவு(குறள் 396)

                  “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும்
    ஏமாப் புடைத்து(குறள் 398)

    திரிகடுகம்

    விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தரும். கல்விக் கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்தல் கூடாது என்பதினையும்,

        “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்( திரி.10)

    நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களைக் கொள்ளுதலும், நூல்களுக்கு ஒவ்வாத சொற்களை பலர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களைக் கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம்மூன்றும் கற்றறிந்தார் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும் என்பதினை,

              நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
                              வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல்
    மொழியைச்
                              சிற்றினம் அல்லார்கண் சொல்லலும்இம்
    மூன்றும்
                              கற்றறிந்தார் பூண்ட கடன். ”  ( திரி.32)

    என்னும் பாடல் விளக்கியுள்ளது.

    ஆசாரக்கோவை

    ஆசிரியர்க்குக் காணிக்கையைத் தருதல், யாகம் செய்தல், தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது விளங்குமாறு பாதுகாத்துச் செய்தல் வெண்டும். இல்லாவிடில் மாறுபட்டு விளங்கின எக்காலத்திலும் எவ்வுலகத்திலும் இவை  தனக்குப் பயன்படாமல் போகும் என்கிறது  ஆசாரக்கோவை.

             “ தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
                                      முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க
    உய்யாக்கால்
                                       எப்பாலும் ஆகா கெடும்.  ”(  ஆசா. 3 )

    பழமொழி

    கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு. அறிவுடையவரின் புகழ் நான்கு திசைகளிலும் சென்று பரவும். எனவே அறிவுடையவர்க்கு எந்த நாடும் அயல்நாடாகாது. அவர் சொந்த நாடேயாகும். தன் சொந்த ஊரில் இருப்பது போல இருக்க முடியும். ஆதலால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டு செல்ல வேண்டியதில்லை.

        ஆற்றுணா வேண்டுவது இல்“( பழ. 4)

    பல நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் அடக்கம் உடையவராய் இருப்பர். தம்மைப் புகழ்ந்து பேசமாட்டார்கள்.

          “நிறைகுடம் நீர்தளும்பல் இல் “(பழ.9)

    அறிவாகிய பெருமை ஒருவனுக்கு ஆடை போன்றது. அறிவாகிய பெருமை இல்லாதவன் செல்வத்தைப் பெற்றதனால் பெருமை அடையமாட்டான்.

          “அணியெல்லாம் ஆடையின் பின் “(பழ. 26)

    என்பன கல்வியைச் சிறப்பிக்க வந்த பழமொழிகளாகும்.

    சிறுபஞ்சமூலம்

    அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பாவர்.

            “தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்(சிறு.மூ. 20)

    எல்லாவற்றையும் அறிந்தவனும் யாதொன்றும் அழியாதவனும் நற்குணமே இல்லாதவனும், குற்றமே இல்லாதவனும், எல்லா நூல் தொகுதிகளையும் முழுமையாகக் கற்றவர் இவ்வுலகில் இல்லை என்கிறது   சிறுபஞ்சமூலம்

       “ சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே”  (சிறு.மூ. 86 )

    இலக்கண நூல், அறிவுநூல், அளவை நூல், சமய நூல், அறிவின் மிக்கோர் இயற்றிய வீடுபேறு பற்றிய நூல் என்ற இவ்வைந்தையும் அறிபவன் மக்களுன் மேலானவனாவான்.

          குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்”  (சிறு.மூ. 31 )

    முதுமொழிக்காஞ்சி

    கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று” – சிறந்த பத்து

    கற்றது உடைமை காட்சியின் அறிய” – அறிவுப் பத்து

    நேராமல் கற்றது கல்வி யன்று” – அல்ல பத்து

    அரிய உண்மைகளைக் கற்றலை விடக் கற்றறிந்த பெரியோரைப் போற்றியொழுதுதல் மேலானது. கற்ற கல்வியுடைமையை அறிவினால் அளந்தறிவர். கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. ஆகலின் ஆசிரியனுக்கு உற்றுழி உதவவேண்டும் என்பதுமுதுமொழிக்காஞ்சி எடுத்துரைக்கும் அறக் கல்வியாக உள்ளது .

     ஏலாதி

    எண்ணும் எழுத்துமாகிய  நூல்களை மாண்போடு கேட்டு எழுதி, படித்து, வாழ்வாருக்கு உணவு ,உடை,எழுத்தாணி, புத்தகம், புத்தகம் வைக்கும் பெட்டி ஆகியவற்றை இப்பிறவியில் கொடுத்து நூல்களை எழுதவைத்து வாழ்வாங்கு வாழும் சான்றோர் விரிந்த புகழினைப் பெறுவர்.

                  “ஊணொடு கூறை யெழுத்தாணி புத்தகம்
    பேணொடு
    மெண்ணு மெழுத்திவைமாணொடு
    கேட்டெழுதி
    யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான்
    வேட்டெழுத
    வாழ்வார் விரிந்து.”( ஏலா. 63 )

    நிறைவுரை

                         “முயற்சி செய்து பார்
    பயிற்சி
    பெற முயல்க
    தளர்ச்சியை
    நீக்கிப் பார்
    தாழ்வுமனப்பான்மையை
    ஒதுக்குக
    உன்னால்
    விடியல் மலரும்
    கல்வியால்
    மட்டுமே முடியும்……”

    கல்விக் கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் மட்டுமே கற்ற கல்வியால் பயன் உண்டு. கற்றதன்படி அறநெறிகளைப் பின்பற்றி வாழாதவர் பிறருக்கு அறநெறிகளை எடுத்துக் கூறும் தகுதியினை இழந்து விடுவர். ஆக்கல் மிகுந்த கல்வியில் அழிக்க முயல்வது அறிவியல் கண்டுபிடிப்புகள் அழிவினை நோக்கிச் செல்வதற்கு ஒப்பானதாகும். மறம் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் அறம் உரைக்க வேண்டிய தேவை எழுந்ததன் விளைவு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் மிகுதியாகத் தோற்றம் பெற்றுள்ளன. அக்காலம் முதல் இன்று வரை கல்வியின் மேன்மைத்தன்மைகளை எடுத்துரைக்கவும்,  வலியுறுத்தவும் அற நூல்கள் துணைபுரிந்துள்ளன. காகிதமாய்க் கல்வி கானகம் செல்லாமல் காவியமாய் கல்வி எந்நாளும் நல்லறமாகிடுதல் வேண்டும்.

    துணைநின்ற நூல்கள்

    1. அறவாணன், க.ப; (2008), ” அற இலக்கியக் களஞ்சியம் ” , தமிழ்க்கோட்டம், சென்னை- 29.
    2. சுப்பிரமணியன், ச.வே; (2008), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும்” மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 108.
    3. சிற்பி பால சுப்பிரமணியம், நீலபத்மநாபன்;( 2013), சாகித்திய அகாதெமி, புது தில்லி – 1

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர் & நெறியாளர்,
    தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்,   கன்னியாகுமரி மாவட்டம் – 629 701

     

    Share
  • குருவை நிந்தித்த இந்திரனின் துயரம்

    -முனைவர் த. ராதிகா லட்சுமி     

    பழங்காலத்தில் மாணவர்கள் குருவின் இல்லத்தில் தங்கி குருவிற்குப் பணிவிடை செய்து கல்வியை, வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தனர். தற்கால மாணவர்கள் குருவைக் கடமையைச் செய்பவராக கருதி கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவராக விளங்குகின்றனர்.

    ‘பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு:’

    என்ற வள்ளுவத்தின்படி பணிவின்மையால் குருவை நிந்தித்த இந்திரன் உயர்ந்த பதவியை இழந்து பிரமக்கொலை, பிரமகத்தி தோஷம் அடைந்து துன்புற்று ஓடி ஒளிந்தான். தேவருலகத் தலைவன் இந்திரன் தன் குருவான வியாழபகவானைப் பொருட்படுத்தாததன் விளைவைத் திருவிளையாடற்புராணத்தின் வழி அறியலாம்.

    அலட்சியப்போக்கு:

    முன்னர் கிருத யுகத்தில் தேவேந்திரன் தேவமகளிரின் அமுதம் போன்ற பாடலிலும், ஆடலிலும் மனம் திளைத்து மகிழ்ச்சி எனும் மதுக்கடலில் மூழ்கி இருந்தான். அப்போது இந்திரன் தன் குருவான சிவனையொத்த வியாழபகவானின் வருகையை உணராது, வழிபாடற்று வாளா இருந்தான். மகளிரின் மயக்கத்தில் வீழ்ந்தவர்களுக்கு நல்வாழ்வும் சாத்தியமோ? இதனை நன்குணர்ந்த  வியாழபகவான் அவ்விடம் விட்டு நீங்க, இந்திரனின் செல்வம் பொலிவில்லாமல் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. இது குருத்துரோகத்தால் ஏற்பட்ட கேடு என்பதைத் தெளிந்துணர்ந்த இந்திரன் தன் குருவைத் தேடிச் சென்றான். எங்குத் தேடியும் காணாதவனாய் அச்சத்துடன் நான்முகனை அடைந்து நடந்த நிகழ்வை எடுத்துரைத்தான். குருவை மதிக்காமல் நிந்தித்ததால் பாவம் கொழுந்துவிட்டு எரிவதையறிந்த நான்முகன் சூழ்ச்சியுடன் ‘உன் பழைய குருவைக் காணும் வரையில் துவட்டாவின் மகன் மூன்று தலைகளையுடைய அசுரர் குலத் தோன்றல் விச்சுவ உருவனைக் குருவாக கொள்க’ எனக் கூற  இந்திரனும் உடன்பட்டான்.

     இந்திரன் தேவர்களுக்கு நன்மை உண்டாக வேள்வி செய்யுமாறு புதிய குருவிடம் உரைக்க, விச்சுவனோ அசுரர்களுக்கு நன்மை புரியும்வகையில் வேள்வியைத் தொடங்கினான். இந்திரன் தன் ஞான திருஷ்டியால் விச்சுவனின் செயலில் வேறுபாட்டை அறிந்து வச்சிராயுதப் படையால் மோதி மூன்று தலைகளையும் தனித்தனியே பிளந்தான். அவை காடை, ஊர்க்குருவி, கிச்சிலியாக மாறிப் பறந்தன. அதன் ஊனுடன் கூடிய குருதியைப் பேய்களின் வாயில் புகட்ட இந்திரனுக்குப்  பிரமக்கொலை பாவம் வந்து சேர்ந்தது.

    பிரமக்கொலைப் பாவம்:

    தேவர்கள் இப்பாவத்தை நீர், மண், பெண்டிர், மரம் போன்றவற்றின் மேல் கூறு செய்து சுமத்தினார்கள். அவர்கள் இப்பாவம் நீங்க வழி யாது? என வினவினர். அதற்கு ‘நீரில் நுரையாகியும், நிலத்தில் உவர்ப்பாகியும், பெண்ணில் பூப்பாகியும், மரத்தில் பிசினாகியும் நீங்குக’ என்றுரைத்தனர். அதற்குப் பின்னும் ‘இப்பழி சுமந்ததற்கு உண்டான பயன் யாது?’ என வினவினர். நீர் இறைக்குந்தோறும் சுரந்து பொலிவடையும், மண்தோண்டிய குழியும் மண்ணினாலேயே வடுவொழிந்து நிரம்பும், சூலுற்ற பெண் கருவுயிர்க்கும் வரை கணவனுடன் வாழ்வர், மரம் வெட்டப்படினும் மீண்டும் தழைக்கும் என நீங்காத பலனை அளித்தார்கள். இதனால் இந்திரன் பிரமக்கொலை பாவத்தினின்று நீங்கினான். ஆனால் துவட்டா தன் மகன் விச்சுவனைக் கொன்ற இந்திரனைப் பழிவாங்குவதற்காக கொடும் வேள்வியினைச் செய்தான். இவ்வேள்விக் குண்டத்தினின்று ஆலகால விஷம் போன்ற தோற்றத்தைக் கொண்ட கையில் வெற்றிமிக்க வாட்படையினையுடைய விருத்திராசுரன் தோன்றினான். துவட்டா ‘தேவேந்திரனின் உயிரைப் போர் செய்து வாங்கி வா’ என  விருத்திராசுரனிடம் ஆணையிட்டான்.

    வலுவிழந்த வச்சிரப்படை:

    அறமும், பாவமும் போர் செய்தலைப் போன்ற யுத்தத்தில் இந்திரன் விருத்திராசுரனின் மேல் வச்சிரப்படையை வீசினான். விருத்திராசுரன் இரும்பு உலக்கையை எடுத்து இந்திரனின் புயத்தில் அடிக்க மூர்ச்சையுற்றான். சிறிதுநேரத்தில் தெளிந்த இந்திரன் ‘இப்பகைவனுக்கு எதிர்நின்று யான் போர்புரியும் வலிமைபெற்றவன் அல்லேன்’ எனக் கருதியவனாய் நான்முகனை அடைந்தான். பின்பு நான்முகனோடு சென்று திருமாலை வணங்க அவர் விருத்திராசுரனை அழிக்கும் வழியை எடுத்துரைத்தார். ‘உன் வச்சிரப்படை மிகவும் பழையதாகியதால் பகைவரின் உயிரை உண்ணும் வலிமையை இழந்துவிட்டது. அதனால் வேறு புதிய படைவேண்டும். நான் பாற்கடலைக் கடையும் நேரத்தில் அசுரர்களும், தேவர்களும் கொடிய படைக்கலன்கனோடு வருவது குற்றமென உரைத்து அவ்வாயுதங்களை ததீசி முனிவரிடம் சேர்ப்பித்தோம். பலவாண்டுகளாகியும் அசுரர்களும், தேவர்களும் ஆயுதங்களைக் கேட்காததால் ததீசி முனிவர் அவற்றை விழுங்கி விட்டார். அப்படைக்கலன்கள் அனைத்தும் திரண்டு முதுகெலும்பாய் பொருந்தி வச்சிரப்படையாயிற்று. நீ ததீசி முனிவரைக்கேட்டால் கருணைவடிவமான அவர் அதனை உனக்குத் தருவார் என்று கூறினார். ததீசி முனிவரிடம் சென்ற இந்திரன் நிகழ்ந்தவற்றைக் உரைத்து தேவர்களைக் காக்கவல்ல பொருள் நும் உடலில் உள்ள வச்சிரப்படையே’ என்று பகர்ந்தான்.

    என் உடலை வழங்கி அறமும், புகழும் பெறுவேன் எனில் இவ்வுடம்பினால் பெறும் பயனும் வேறுண்டோ? என்ற ததீசி முனிவர் சிவயோக சமாதியில் நின்று கபாலத்தைக் கிழித்து சிவவுலகை அடைந்தார். தேவதச்சன் அவ்வள்ளலின் முதுகெலும்பை வலிமைமிக்க வச்சிரப்படையாக்கி இந்திரனின் கையில் வழங்கப் போர் தொடங்கியது.

    பிரமகத்தி தோஷம்:

    தேவர், அசுரர்களுக்கிடையிலான இப்போரில் பூமியை மூடிய பிணக்குவியல் மலை போன்ற அண்டத்தைச் சிதைவுப்படுத்தியது.  இந்திரனின் கணைகளுக்கு எதிர்க் கணையை விடுக்கவியலாத விருத்திராசுரன் அஞ்சிக் கடலினுள் சென்று மறைந்தான். சினத்துடன் கடலினுள் சென்ற இந்திரனால் அசுரனைத் தேடிப்பிடிக்க இயலவில்லை. இந்திரன் மீண்டும் நான்முகனை நாட அவர் விந்தியமலையை அடக்கிய அகத்தியரைச் சென்று கண்டால் உபாயம் கிடைக்கும் என்று வழிப்படுத்தினார். அகத்தியரும் இந்திரனின் துயர் துடைக்க சிவனைத் தியானித்து விருத்திராசுரன் மறைந்திருந்த கடலை உளுந்தின் அளவாகக் குறுக்கி அதனைக் குடித்தார். நீரற்ற கடலில் தவம் புரியும் அசுரனைக் கண்ட இந்திரன் அவன் தலையை வெட்டியெறிந்தான். இந்திரனைப் பிரமகத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதனால் அச்சமுற்ற இந்திரன் ஒரு குளத்தில் இருந்த தாமரைத் தண்டின் நூலுள் மறைந்தான்.

    பெண்வேட்கை:

    தலைவன் இல்லாத இந்திரலோகம் பொலிவிழக்க தேவர்கள் அசுவமேதயாகம் புரிந்த நகுடனைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்திரப்பதவியேற்ற நகுடன் இந்திராணியை அழைத்து வருமாறு பணிக்க அவள் வியாழபகவானைப் பணிந்தாள். இந்திரனை விடுத்து வேறொருவனைத் துணையாகக் கொள்ளுதல் அறமோ? என வினவினாள்.  வியாழபகவானும், ‘அகத்தியன் முதலான ஏழுமுனிவரும் தாங்க மாமணிச் சிவிகையில் வருபவனே தேவர்களைக் காக்கும் தலைவன். அவனே உன் கணவன்’  என உரைக்க இந்திராணியும் உடன்பட்டாள். இந்திராணியின் தூதை அறிந்த நகுடன் பெண்வேட்கையால் பின்வரும் இடரினை நினையாது, சிவிகையைச்  சுமந்து வரும் முனிவர்களின் பெருமையை அறியாது விரைந்து செல்லுங்கள் எனும் பொருள் கொண்ட ‘சர்ப்ப’ என்று கூறினான். அகத்தியரும் அவன் சர்ப்பம் என்று கூறியதால் ‘சர்ப்பமாகவே மாறக் கடவாய்’ என சாபமிட்டார்.

    ஆற்றுப்படுத்திய குரு:

     பின்பு தேவர்கள் தங்கள் குருவான வியாழ பகவானைப் பணிந்து ‘மன்னன் இல்லாத இடரினைத் தீர்க்க வல்லீர்’ என வேண்டினார். குருவும் குளத்தில் மறைந்திருந்து இந்திரனை அழைத்து வந்தார். கொடிய பெரும்பாவத்தில் மூழ்கிய இந்திரன் வியாழபகவானைப் பணிந்து வணங்கி, ‘குருவே! என் பாவம் நீங்கும் வழி யாது?’ என வினவினான். வியாழபகவானும் கடம்பவன சிவனை வணங்கி பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை தன் மாணவனுக்கு எடுத்துரைத்தார்.

    இறைவனுக்குச் செய்த குற்றத்தை ஆசிரியரே ஆராய்ந்து தீர்க்கவல்லவர். ஆனால் ஆசிரியருக்குச் செய்த குற்றத்தை அவ்வாசிரியரே நீக்குதலின்றி வேறு எவராலும் நீக்கிடமுடியாது.

    ‘ ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
    தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்பதன்றிப்
    பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்த காரணத்தால் வந்த
    வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற ‘

    தன்னிடம் தவறு செய்தமையால் வந்த பழியை இந்திரன் தீர்ப்பதற்கு வியாழபகவானாகிய அக்குரவனே வழியையும் வகுத்துரைத்தான்.

    குருவிடம் செய்த தவற்றினால் இந்திரன் விச்சுவனை அழித்து துவட்டாவின் பகையை ஈட்டினான். துவட்டாவினால் விருத்திராசுரனுக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டது. ததீசி முனிவர், அகத்திய முனிவர்களின் உதவியால் விருத்திராசுரனை அழித்த நிலையிலும் நிம்மதி கிட்டாமல் பிரமகத்தி தோஷமே பிடித்தது. இப்பாவத்திற்கு அஞ்சிய இந்திரன் தாமரையில் ஒளிய  இந்திராணியை நகுடன் கைக்கொள்ள நினைக்கிறான். இவ்வாறு இந்திரன் பல்வேறு துன்பங்களை அடைய குருவான வியாழபகவானே பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை வகுத்துரைக்கிறார். இப்புராணத்தின் வாயிலாகக் குருவை நிந்திப்பவன் துன்பம் அடைவது உறுதி என்பது புலனாகின்றது.

    குறிப்புகள்

    1. திருவிளையாடற்புராணம்; (இந்திரன் பழி தீர்த்த படலம்) – உரையாசிரியர் பி.ரா.நடராஐன்
    2. தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்
    3. குறள்நெறி அறம் – புலவர் கே.ஏ.ராஜீ

    *****

      கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

     

    Share
  • அர்த்தமே இல்லையே !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா

    கோடி கோடியாய் பணம் இருந்தாலும்
    மாடி மாடியாய் மனை குவிந்தாலும்
    வாடி நிற்பவர் மனம் அறியாதவர்
    வாழும் வாழ்விலே அர்த்தமே இல்லையே

    கோவில் கோவிலாய் சென்றுமே வணங்கினும்
    குடம் குடமாய் பாலினைக் கொடுக்கினும்
    வாய் இல்லாத சீவனை வதைப்பவர்
    வாழும் வாழ்வினை மனதுதான் ஏற்குமா

    வாதம் வாதமாய் மன்றிலே நிகழ்த்தியே
    வழக்கை பணத்துக்காய் நீட்டியே நிற்பவர்
    நீதி தேவனின் நெஞ்சிலே மிதிப்பவர்
    நிம்மதி என்பது வாழ்வினில் நிலைக்குமா

    பட்டம் பட்டமாய் பெற்றுமே நிற்பவர்
    பதவி பெற்றுமே உயர்நிலை வகிப்பவர்
    பெற்ற தாய்தந்தை பேணிடா நின்றிடின்
    கற்ற கல்வியும் காறி உமுழுமே

    Share
  • “கன்னி”யும் “கஜா”வும்

     

    வாய் பேச வன்மத்தில்

    பெண் பொறுமைக்காரி!

    நிலம் இயங்கு தன்மையில்

    உழவுக் காரி…..

    நிலமும் பெண்ணும் போர் புரிந்தால்

    கன்னியும் கஜாவாகும்…….

     

    நான்கு நாட்களுக்கு முன்

    வேதாரண்யத்தில் வேசமிட்டு

    பட்டுக்கோட்டையில் கஜவாக மாறி

    காடு மேடுகளை புரட்டி

    கானகப் பயிர்களை வளைத்து

    வாழை,தென்னையை ஒடித்து,

    வானுயர கம்பங்களில்

    ஊஞ்சல் கட்டி மகிழ்ந்து

    இரவு நேரங்களில் கறுமை சூழ்ந்து

    காரணத்தோடு சுற்றித் திரிந்தேன்

    கஜா வெனும் பெயரோடு…..

     

     

    கன்னியின் சாபம் காதுகளுக்கு

    செவிமடுத்ததோ – இல்லை

    தீட்டுப்பட்ட கன்னியைத் திடுக்கிடச்செய்து

    திட்டத்தை நிறைவேற்றினேன்

    கண்ணியமான கஜவாக…..

     

    எனது தோற்றம் எது வென்றால்?

    அணைக்காடு கிராமத்தில்

    ஆறிரண்டு வயதில்

    ஏழாவது படிக்கையில் – எனது

    தீட்டு இனம் கண்டு

    வீட்டு வெளியே

    சாதியக் குடிசை அமைத்து

    தனிக் தெருவில்லா இடத்தில் அமா்த்தப் பட்டேன்

    தீட்டுக் கன்னியாக……..

     

    கன்னியின் சாபம்

    கருணை மறம் மாறாமல்

    கலகக் குறல் எழுப்பி

    கானகத்திற்கு எல்லாம் தூதனுப்பி

    இருள் சூழ்ந்த இரண்டு மணியில்

    பேயாட்டத்தைக் காட்டி கஜாவாகப் பறந்தேன்…..

     

    எனது பயம் பேரிடியாய்

    மரங்களுக்கும் மாசு கழிய மங்கைக்கும் கேட்டிட

    அவள் அலறல் அவளுக்கு மட்டுமே

    தீட்டு தீண்டாமைக்கு உட்பட்டது. இதனைக் கண்டு

    தென்னையும் பேசியது

    வாழையும் பேசியது

    வாய் பேச சீவராசிகளும் பேசியது

    தீட்டு எங்களுக்குப் பிடிக்கும்

    வா! கஜாவோடு கண்ணியமாகலாம்…..

     

    கன்னியும் கஜாவும் பிரியவில்லை

    தீட்டும் கன்னியும் பிரியவில்லை

    மரங்களும் கானகமும் பிரியவில்லை

    மனித இனம் பிரிக்கிறது.

    மரங்களுக்கு இடையே மாண்ட

    கன்னியும் கஜாவையும்

    மீண்டும் பேசுவேன்

    காடுகள் எல்லாம் வீடானபின்பு

    இந்த இடம் கன்னி மாண்டதென்று………

     

    முனைவா். இரா. மூர்த்தி,

    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

      ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய

         கலை அறிவியல் கல்லூரி,

      கோயம்புத்தூர் -20

        E-Mail: ramvini2009@gmail.com    

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181122 -DWA indian ink wcol- Canson A4 200gsm 100 dpi – (the tortoise /horse indicates the withdrawing of the senses) – lr
    ஆமையாச்சு அசுவம்,சதுரங்கம்(CHESS) ஆச்சு புதிர் ரங்கன் பாரதம்….!
    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
     கோபாலக் கண்ணனே
     ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
     உடல்சுமந்த ஆமையே
     ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ”வாட்டிடும் இன்பத்தைக், கூட்டிடும் பேதத்தை,
     போட்டிட நெஞ்சத் தராசினில், -காட்டிடும்,
     வேண்டியதைப் பார்த்திடும், வீரன் அவனழியான்
     காண்டீபம் தானுன் களிப்பு”….கிரேசி மோகன்….!
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    181121 -DWA -wcol Indian ink wm
    Canson A4 200 gsm 72dpi
    “Divyam dadami thaey Chakshuh” BG 11:8

    ‘’ஸ்ரீ பகவான் உவாச:….
    ——————————————-

    ஞானக்கண் தந்தேன்நான் நாற்புரமும் பார்பார்த்தா
    வானத்தில் ருத்திர(அனுமன் ருத்திராம்ஸம்) வானரம் -சேணத்தில்
    நானுள்ளேன்,கீதையாம் நூலினைத் தந்துவிட்டேன்
    வானுள்ள வெற்றியை வாங்கு….!

    ”ஆரத் தழுவி அருச்சுன காமத்தை(பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
    வேரறுத்துச் சொன்னார் , விஜயரே! , -பாருச்சி,
    தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளார்,
    நூறைச் சிதைக்க நிமிர்’’….!

    ”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
    மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுசேயே
    தர்கம் புரிதல் தவிர்”….கிரேசி மோகன்….!

    Share
  • கலந்துநிற்கும் காலத்தோடு அவளும்

     

    கவிஞா் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)

     

    வாசல் வகுப்பறையில்
    கரைதலின் பாடத்தில்
    மயங்கிய மனம்
    புரிதலற்று நான்!

    உணர்வுகள் பேசுகையில்
    மொழிகள் அர்த்தமிழக்கும்
    பறவைகளின் ஓசையில்
    தேடி அலையும் மனித மனமும்
    பேரமைதியில் உட்புதையும்
    சூழலும்!

    காலங்களைக் கரைத்துக்கொண்டு
    ஓடிய திசுக்களில்
    எதனைத் தேடி என்னை
    அடைய!

    முறைகள் ஆயிரம்
    அறிவின் புரிதல்கள்
    அவள் பொழுதுகளில்
    பொருளற்று விடுகின்றன!

    என்னுள் மறைந்திருக்கும்
    பெண் இருத்தலில்
    யாா் யாரோ வந்து சென்றாலும்
    இடம் இன்னும்
    இருக்கிறது காலியாகவே!

    மீதமிருக்கும் வாழ்க்கை
    புன்னகைக்கிறது பூனையைப் போல்!

    Share
  • சேக்கிழார்  பாநயம் – 12

     

    =======================

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

    ———————————————————–

     

    ஓரூரின் சிறப்பு அவ்வூர் மக்களின் நல்வாழ்வைப் பொறுத்தே அமையும்! ஒவ்வோர் ஊரிலும் அந்த ஊரில்  நெடுங்காலம் வாழ்வோரின் வரலாறு, எல்லா வகையிலும்  வெளிப்படும். தமிழ் நாட்டின் பழங்காலத்து நகரங்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும்! பூம்புகார் சோழ நாட்டின் பழங்காலத்  துறைமுக நகரம்! அந்த நகரின் சிறப்பினைப் பற்றி சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலேயே இளங்கோவடிகள் கூறுகிறார்!

    ’பொதியிலாயினும்  இமயமாயினும்

      பதியெழுவறியாப்  பழங்குடி  கெழீஇய

     பொதுவறு  சிறப்பின் புகாரே  யாயினும்

     நடுக்கின்றி  நிலைஇய என்பதல்லதை

     ஒடுக்கம் கூறார்  உயர்ந்தோர் உண்மையின் ‘’

    என்று பாடுகிறது. பொதியில், இமயம், புகார் என்ற மூன்று இடங்களையும்  கல்வியிற் சிறந்த பெரியோர் ‘’எக்குறையும் இல்லாமல் நிலைத்த  சிறப்பின, என்பார்களே அல்லாமல் எந்தக்  குறையையும் கூற மாட்டார்கள்! அதற்குக்  காரணம்  அங்கெல்லாம்  நீண்டகாலம்  உயர்ந்தோர் வாழ்வதே!’’ என்று புகழ்வர்!

    பொதியில் அகத்தியர் முதலான முனிவர்களும், இமயத்தில் சிவபிரானும், புகாரில் , எக்காரணத்தைக் கொண்டும் ஊரைவிட்டுச் செல்லாத சோழ நாட்டுப் பழங்குடிகள் நிறைந்து வாழ்வதாலும் , அவ்வாறு புகழ்வர்.  அவ்வகையில் ஓரூரின் சிறப்பு அங்கு நீண்டகாலம் வாழும் மக்களால் விளங்கும்!

    தமிழகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாகிய திருவாரூரின் சிறப்பைச்  சேக்கிழார் சுவாமிகள் பற்பலபாடல்களில் புகழ்கிறார்! ஓரூரின் சிறப்பு அங்குள்ள சிறந்த சான்றோர்களாலும் , அங்குள்ள நீர்வளம், நிலவளம், தொழில் வளம், கோயில் முதலானவற்றாலும் புலப்படும் என்பதைச் சிலம்பு கூறுவதை மேலே கண்டோம்! அவ்வகையில் ‘’திருவாரூர்  அங்குள்ள பறவைகளின் ஒலிகளால்,  சிறந்த ஊர் என்பதை அறிந்து கொள்ளலாம்! ‘’ என்கிறார் புலவர்.

    சங்க இலக்கியமாகிய பெரும்பாணாற்றுப் படையில் , பாணர்களை அந்தணர் வாழும் இல்லத்துக்குச்சென்றால், அங்கு எவ்வகை உணவைப் பெறலாம் என்பதைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார்கள். அப்போது, ‘’அந்தணர் இல்லத்தில் பசுமாட்டின் கன்றைக் கட்டிவைத்த பந்தலின் உள்ளே,பசுஞ்சாணத்தை இட்டு  மெழுகிய யாகசாலை உடைய வீட்டில், கோழியும்,அதனை விரட்டும்  ஆடும் உள்ளே நுழைய மாட்டா! அங்கே வளைந்த வாயினை உடைய கிளிகள்   வேளைதோறும் இடைவிடாது அந்தணர்கள் கூறும் அறிய வேதங்களைக் கேட்டு, மீண்டும் சொல்லிப்  பயிலும் ‘’  என்பதை,

    ‘’செழுங்கன்று  யாத்த  சிறுதாள் பந்தல்

     பைஞ்சேறு  மெழுகிய படிவ நன்னகர்

     மனையுறை  கோழி, அடு ஞமலி துன்னாது

     வளைவாய்க்  கிள்ளை  மறைவிளி  பயிற்றும்

     மறைகாப்பாளர்  உறைபதி’’

    என்று பாடுகிறது.  வேதங்களைக் கிளிகள் பயிலும் அடையாளம் சிறந்த வேதியர் வாழும் இடத்தைக் குறிக்கிறது!திருவெண்காடு சிறந்த சிவத்தலம்! அங்கே வாழும் அந்தணர்கள் ஸ்ரீருத்திரம் போன்ற வேத மந்திரங்களை வேளைதோறும் விடாமல் ஒதுகின்றனர்! அதைக்கேட்ட அவ்வூரில் உள்ள  கிளிகள் அவ்வேத மந்திரங்களைக்   கொண்டே  பேசப்   பழகுகின்றனவாம்! இதனைத் திருஞானசம்பந்தர் ,

    “நாதன்  நமையாள்வான்   என்று  நவின்றேத்தி

     பாதம்  பன்னாள்  பணியும் அடியார்கள் தங்கள்மேல்

     ஏதம்தீர   இருந்தான்   வாழும்    ஊர்போலும்

    வேதத்து  ஒலியால்  கிளிசொல்  பயிலும்  வெண்காடே!’’ என்று பாடுகிறார்!

     மேலும் அவர் ‘’திருவீழி மிழலை என்ற திருத்தலத்தில், இடமகன்ற திருமடங்களில்  அந்தணச் சிறுவர்கள் ‘பதம்’ என்ற வகையில்   படித்த நால்வேதங்களைக் கேட்டு, மகிழ்ந்து இருந்த பசுங்கிளிகள் , அவ்வாறே ஓதக்கேட்டு , அத்திருக்கோயில் வாயிலில் படுத்துக் கிடந்த பசுக்குலங்கள்,வேத ஒலியைத் தாமும் பயின்று முழங்குகின்றன. இத்தலத்தின் இறைவனின்  திருவைந்தெழுத்தை  நாமும் ஓதினால் நம் வினைகள் கெடும்!’’ என்கிறார்! அவர் பாடல்,

    ’அஞ்செழுத்துரைக்க அருளினன்   தடமிகு  நெடுவாள்

    படித்த  நான்மறைகேட்    டிருந்த பைங்கிளிகள்  பதம்ஓத, பாடுஇருந்த

    விடைக்குலம்  பயிற்றும்  விரிபொழில்வீழி  மிழலையான்  எனவினை  கெடுமே!’’

    என்று பாடுகிறார்.  மேலும் விடமுண்ட கண்டராகிய சிவபிரான் என்றும் வாழும் நகராகிய  சீர்காழியை, ‘’மிகவும் நல்லவர்களாகிய வேதியர் கற்றுப்  பயில்கின்ற வேதங்களைக் கேட்டு, அவ்வூர்ச் சோலைகளில் பறந்து திரியும் கிளிகள், தாமே அப்பதங்களைச்  சொல்லி மகிழும் திருப்புகலி!’’ என்று பாடுகிறார்! இதனைத் திருமுறை,

    “ சால  நல்லார் பயிலும்  மறைகேட்டுப் பதங்களை

     சோலை மேவும் கிளித்தான்  சொல்பயிலும் புகலியே!’’    

    என்று பாடுகின்றது!

    இவையனைத்தையும்  பயின்ற   சேக்கிழார்   பெருந்தகை,   திருவாரூரில் உள்ள  இல்லங்களில், சிறந்த திருமுறைகளை  அனைவரும் வேளைதொறும் பயில்வர்! அதனை அங்கே  வாழும் கிளிகள் கேட்டு மீண்டும் கூறுமாம். அதனை நாகணவாய்ப் பறவைகளும் கேட்டு மகிழும் என்று பாடுகிறார்.

    ‘’உள்ளம்  ஆர் உரு  காதவர்?  ஊர்விடை

     வள்ள   லார்திரு  வாரூர்  மருங்கெலாம் 

     தெள்ளும்  ஓசைத்  திருப்பதி  கங்கள் பைங்

     கிள்ளை  பாடுவ  கேட்பன  பூவைகள்!’’

    என்பது அவர் அருளிய திருப்பாடல். இப்பாடலில் வேதப்  பதங்களைக் கிளிகளும், பசுக்களும் பயிலும் என்று, சங்க இலக்கியமும், சம்பந்தர் தேவாரமும் கூறியதைச் சற்றே மாற்றம் செய்து பாடுகிறார்! திருவாரூரில் இல்லங்களிலும் , வீதிகளிலும், திருக்கோயிலிலும் , புறநகர்ப் பகுதிகளிலும் அடியார்கள் இடைவிடாமல்  சைவத்  திருமுறைப் பதிகங்களைப்    பயில்கிறார்கள், என்று மாற்றி, வேதமும்  திருமுறையும் ஒன்றே என்ற கருத்தை நிலை நாட்டுகிறார்!

    மேலும் ‘வள்ளலார்’ என்று திருவாரூர்த் தியாகேசரைக் குறிப்பது, அவர் தம்மையே தமர்க்கு நல்கும் தியாகத்தைச் செய்தருளுபவர் என்பதை நமக்குத் புலப்படுத்தும். அவ்வூரில் தம்மைக் காதல் தூதுவராக்கிக் கொண்டு இரண்டு முறை திருவாரூர் வீதியிகள் நடந்தருளியவர்! அவர் திருவருட் சிறப்பைப் பாடும் பாடல்கள் நால்வரும், காரைக்காலம்மையாரும்  நல்கிய பத்துப் பத்துப் பாடல்களால் ஆகிய பதிகங்களே, என்கிறார்! முன்னோர் மொழிந்த  கருத்துக்களைக்  காலத்துக்கும்  இடத்துக்கும் ஏற்பச்  சற்றே  மாற்றிப்  பாடிய சேக்கிழாரின் திருமுறைப் பற்றினை இப்பாடல் குறிக்கின்றது!

    =====================================================================13

    ——— சே.பா.ந. – 12 —- sent  on   15/11/’18.

    Share
  • மலையாளம் தமிழ் அகராதி

         தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்ட திராவிட மொழிகளில் ஒன்றே மலையாளம்.  இன்று இலக்கியச் செல்வங்களுடன் புதுப் பொலிவு பெற்றுத் திகழும் மலையாள மொழி பண்டைய தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியான சேர நாட்டில் பேசப்பட்டு வருகிறது.  இதற்குப் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூற்களே சான்றாகும்.  மலையாள மொழியின் தொடக்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் தமிழின் ஆதிக்கமே மிகுந்துள்ளது.  இம்மொழி தனித்தனியாகப் பிரிந்தாலும் இன்றும் அம்மொழி பேசுவோர் இலக்கணமோ அகராதியோ இன்றி தமிழர் மலையாளத்தையும் மலையாளி தமிழையும் புரிந்துகொள்ளத்தான் செய்கின்றனர்.   இருப்பினும் மொழியின் உள்ளமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களும் பிறதொடர்புகளும் வேறுபடுவதால் செப்பமாக மொழியைப்பயில்வதற்கு இலக்கண நூல்களும் அகராதிகளும் ஏழவேண்டிய தேவை எழுகிறது.  இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மலையாளம் தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கி 2016 – ஆம் ஆண்டில் வெளியிட்டது.

          மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்திற்கு வித்திட்டவர்கள் இத்துறையின் மேனாள் பேராசிரியர் பெருமக்களாவார்.  அவர்கள் இத்துறையில் பணியாற்றிய காலத்தில் ஆய்வு மாணவர்களைக்கொண்டு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான அனைத்து இலக்கியதங்களுக்கும் சொல்லடைவு உருவாக்கி அகராதி தொகுப்பிற்கு வித்திட்டனர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரா. மா . இளையபெருமாள் ஆவார்.  அவர் மலையாள இலக்கண நூல்களைத் தமிழுக்கும்  தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அவர் மலையாளம் –  தமிழ் , தமிழ் – மலையாளம் அகராதியையும் தயாரித்து வைத்திருந்தார். அது அச்சில் வராமல் போனது. அவரைத் தொடந்து தற்போது பணியாற்றும் பேரா. ப. . ஜெயகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நான் உள்ளிட்ட துறையின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் போன்றொரின்  அரிய முயற்சியால் உருவானதே இவ்வகராதி. இதனை கேரளப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

    அகராதி அமைப்பு

          மலையாளம் – தமிழ் அகராதி வரலாற்றில் இது முதன்மையானது.  மலையாளம் தலைச்சொல்லாக அமைகிறது.  தொடர்ந்து அச்சொல்லுக்காண இலக்கண விளக்கம் , ஆங்கில ஒலிபெயர்ப்பு , தமிழ் விளக்கம் என்ற அமைப்பில் இவ்வகராதி அமைந்துள்ளது. தலைச்சொல் மலையாள சொல்லாக இருப்பதால் மலையாளம் அறியாத அனைவரும் எளிதில் வாசிக்கும் வகையில் ஆங்கில் ஒலிபெயர்ப்பு ( Translitration)  கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிலையில் இவ்வகராதி அமைந்துள்ளது.

    இவ்வகராதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைச்சொற்கள் தற்கால மொழிப்பயன்பாட்டிற்கு ஏற்ற முறையிலான இருபதாயிரம் மலையாளச் சொற்கள் தேர்வுசெய்யப்பட்டன. இச்சொற்கள் சப்ததாராவலியில் இருந்தும், மலையளப்பேரகராதியில் இருந்தும் மலையாளச் சொல்தரவகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும்.

    இருமொழி அகராதி உருவாக்கச் சிக்கல்களும் தீர்வுகளும்

         ஒருமொழி அகராதி உருவாக்குவதை விட பணிச்சுமையும் குழப்பங்களும் கொண்டதே இருமொழி அகராதி உருவாக்கம்.  இருமொழி அகராதியின் தலையாய நோக்கம் ஒருமொழியிலுள்ள சொற்களைப் பிரிதொரு மொழிச்சொல்லோடு ஒப்புமைப்படுத்திக்க காட்டுவதாகும்.தமிழும் மலையாளமும் ஒரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றாலும் அம்மொழிகள் பேசுவோர் இருவேறு சமூகத்தைச் சார்ந்தவர் ஆவர்.  அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழிக்கூறுகள், போன்றவை பல நேரங்களில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.    உலகமொழிகள் அனைத்திலும் அவ்வவ் மொழிக்குரிய தனித்தன்மைகள் காணப்படத்தான் செய்கின்றன.  பிஞ்சு, காய் போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் இல்லாதது போல கணினி, பேருந்து போன்ற சொற்கள் மலையாளத்தில் இல்லை. எனினும் மலையாலத்திற்கே உரிய  தனிப்பட்ட சொற்கள் அம்மொழியில் காணப்படத்தான் செய்கின்றன.  சான்றாக,

         மாப்பு சாக்ஷி – என்ற சொல்லிற்கு இணையான  தமிழ் சொல் இல்லை. அதற்கு அகராதியில் ஒரு தொடராகத்தான் விளக்கம் கொடுக்க முடிந்தது. அதாவது ”குற்றங்களைச் செய்து விட்டு கூட இருப்பவரைக் காட்டிக்கொடுத்து சாட்சி கூறுபவன்”. எனபொருள் விளக்கம் கொடுக்கப்பட்டது.

         கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சில பண்பாட்டுச் சொற்களுக்கு விளக்கம் தரும்போதும் சிக்கல்கள் ஏற்பட்டது.  சான்றாக,

    கை நீட்டம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லை. அதற்கு “ விசுப்பண்டிகையின் போது கொடுக்கப்படும் பரிசுப்பொருள் ‘ என் விரிவான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

    அஞ்சாம்புரை – நம்பூதிரிப் பெண்ணை விசாரணைக்காக வைக்கப்படும் அறை

    படிப்புர-  வெளிப்புறக் கதவுள்ள வீடு.  இச்சொற்கள் கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சொற்களாகும்.

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின்போது தமிழ் மலையாள ஒலியொற்றுமையுடைய சொற்களுக்கு பொருள் எழுதும்போதும் சிக்கல்கள் தோன்றின.

    கழி- மலையாளத்தில் சாப்பிடுதல் என்னும் பொருளில் வரும். தமிழில் வெளியேற்றுதல், மலம் கழித்தல் என்னும் பொருளில் வரும். அதேபோன்று  அவசரம்- என்ற சொல் மலையாளத்தில் சந்தர்ப்பம் வாய்ப்பு என்ற பொருளில் வருகிறது. தமிழில் சீக்கிரம் என்ற பொருளில் வருவதைக்காணலாம்.

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்  – என்ற குறளுக்கேற்ப

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றினும் இன்று இருமொழியாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சியே.

    ஆசிரியர்:-

    முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ

    உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்

    Share